Print Version|Feedback
Xi’s visit to Berlin highlights growing US-EU conflicts before G20 summit
ஜி20 மாநாடுக்கு முன்னதாக பேர்லினுக்கான ஜி விஜயம் அதிகரித்து வரும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய மோதல்களை உயர்த்திக் காட்டுகிறது
By Alex Lantier
6 July 2017
வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அதன் பாரம்பரிய கூட்டாளிகளுக்கும் இடையே ஆழமடைந்து வரும் பதட்டங்களுக்கு இடையே, ஜேர்மனியின் ஹம்பேர்க்கில் ஜூலை 7-8 இல் நடக்கவுள்ள ஜி20 மாநாட்டுக்கு முன்னதாக புதனன்று இரவு டொனால்ட் ட்ரம்ப் போலந்தை வந்தடைந்தார். ஒரு பொருளாதார கூட்டமாக கருதப்படும் இந்த மாநாடு, வட கொரியா விவகாரத்தில் அமெரிக்கா-சீனாவின் விட்டுக்கொடுப்பற்ற நிலை மற்றும் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரித்து வரும் ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க புவிசார் அரசியல் மோதல் போன்ற உலக இராணுவ நெருக்கடிகள் மீது ஒருங்குவிந்திருக்கும். பாரீஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து ட்ரம்ப் விலகியது மற்றொரு பிரச்சினையாக இருக்கும்.
செவ்வாயன்று பியொங்யாங் ஆட்சி, ஒரு கண்டம் விட்டு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியதும், வட கொரியாவை பொருளாதார ரீதியில் குரல்வளையை நெரிக்க சீன மறுப்பதைக் குற்றஞ்சாட்டி, அமெரிக்க அதிகாரிகள், போலந்தில் ட்ரம்ப் வந்திறங்குவதற்கு முன்னதாக, சரமாரியான அறிக்கைகளை வெளியிட்டனர். இவ்வாறிருக்கையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதனன்று அரச விஜயமாக பேர்லின் வந்த போது ஒரு சிறப்பு வரவேற்பை பெற்றார், இந்த விஜயம் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார சக்தி மையங்களான அவ்விரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகள் மீது ஒருங்குவிந்திருந்தது. ஜி மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் இருவருமே அமெரிக்க கொள்கை மீது கூர்மையான விமர்சனங்களை வெளியிட்டதுடன், உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் இதயத்தானத்தில் பிரதான சக்திகளுக்கு இடையே மோதல் தவறுக்கிடமின்றி தீவிரமடைந்து வருகிறது என்பதே ஜி விஜயத்தில் பிரதான விவகாரமாக இருந்தது.
ஐரோப்பா சர்வசாதாரணமாக வாஷிங்டனுடன் அதன் கூட்டணியைக் கொண்டிருக்க முடியாது என்று மே மாதத்திலிருந்து இப்போது வரையில் அவரது பிரபலமான கருத்தை மேர்க்கெல் மீண்டும் வலியுறுத்துவாரா என்று Die Zeit வினவிய போது, “ஆம், துல்லியமாக அவ்விதத்தில் தான்,” என்றவர் பதிலளித்தார்.
ஜி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடன் மாஸ்கோவில் அவர் சந்திப்பிலிருந்து நேராக ஜேர்மனிக்கு வந்திருந்தார், அங்கே மாஸ்கோவில் அவ்விரு தலைவர்களும் வாஷிங்டனுக்கு முரண்பாடான வகையில் வட கொரியாவை நோக்கி ஒரு பொதுவான கொள்கையில் அவ்விரு தலைவர்களும் உடன்பட்டிருந்தார்கள். “உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு" என்று தலைப்பிட்டு ஜேர்மன் ஊடகத்தில் ஜி ஒரு கருத்துரை வெளியிட்டார், அது ஜேர்மன்-சீன மூலோபாய உறவுகளை நெருக்கமாக ஆக்குவதற்கு அழைப்புவிடுத்ததுடன் ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" கொள்கையை மறைமுகமாக விமர்சித்திருந்தது.
ஜேர்மனியும் சீனாவும் "இருதரப்பு உறவுகள் மற்றும் பிரதான சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் மீது விரிவான மூலோபாய உரையாடல்கள் நடத்தி, ஒரு முன்னணி பாத்திரம் வகிக்க" வேண்டும், “... ஜி20 நாடுகள், வெளிப்படையான வளர்ச்சிக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டியதும், அதன் இதயத்தானத்தில் உலக வர்த்தக அமைப்புடனான (WTO) பன்முக வர்த்தக முறையை ஆதரிக்க வேண்டியதும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தொடர்ந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு உதவ வேண்டியதும் அவசியமாகும்,” என்று சீன ஜனாதிபதி எழுதினார்.
மேர்க்கெல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சீனா, ரஷ்யா, மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் யுரேஷிய உள்கட்டமைப்பு வலையமைப்பை அபிவிருத்தி செய்யும் சீனாவின் பட்டுச்சாலை/ஒரே இணைப்பு-ஒரே பாதை திட்டத்தை ஆமோதித்தார். “இதுபோன்ற திட்டங்களில் பங்கெடுப்பது நமக்கு மகிழ்ச்சிக்குரியதாக நாங்கள் கருதுகிறோம், நிதி கையாளும் நிகழ்முறை வெளிப்படையாக இருக்குமென நம்புகிறோம்,” என்றார். ஐரோப்பிய ஒன்றிய-சீன சுதந்திர வர்த்தக மண்டலம் குறித்து பேரம்பேசுவதற்கு இட்டுச் செல்லும் ஒரு முதலீட்டு உடன்படிக்கான தயாரிப்புகளையும், அத்துடன் அரசுசாரா அமைப்புகள் மீது ஒரு புதிய சீனச் சட்டம் நிறைவேற்றியதும் ஜேர்மன் அமைப்புகளுக்கு சீனாவில் வேலை செய்ய கிடைக்கும் மிகப்பெரும் வாய்ப்புகளையும் மேர்க்கெல் உயர்த்திக் காட்டினார்.
ஏர்பஸ் விமானங்களை சீனா விலைக்கு வாங்கும் 22 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றிலும் ஜேர்மன்-சீன அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
எவ்வாறிருப்பினும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே அதிகரித்து வரும் போட்டிக்கு இடையே, சீனாவில் ஜேர்மன் நிறுவனங்களுக்கு அதிக மற்றும் இன்னும் அனுகூலமான வர்க்க இடங்களை வழங்குமாறு மேர்க்கெல் கோரினார். “சந்தைகளை அணுகுவதில் நியாயமாக கையாளப்பட வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்,” என்றவர் தெரிவித்தார். “அது எங்கள் நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியம்,” என்றார்.
சமூக ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் தோமஸ் ஓப்பர்மான் கூறுகையில், ஐரோப்பிய சக்திகள் ஜி20 நாடுகள் மாநாட்டில் அமெரிக்க நலன்களை நோக்கி முன்பினும் அதிகமாக வெளிப்படையாகவே விரோத போக்கை ஏற்க வேண்டுமென கோரினார். “நீங்கள் நிரந்தர சமரசத்துடன் ட்ரம்புக்கு எதிர்வினையாற்ற முயன்றால், அது இறுதியில் மேற்கத்திய மதிப்புகள் அழிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும். இங்கே ஏற்கனவே போலாந்திலும் ஹங்கேரியிலும் சிறிய ட்ரம்புகள் இருக்கிறார்கள்,” என்றார்.
ஜி20 நாடுகள் மாநாட்டில், அமெரிக்காவை தனிமைப்படுத்தி ஏனைய 19 நாடுகளுடன் ட்ரம்புக்கு எதிராக அணிதிரளுமாறும் ஓப்பர்மான் மேர்க்கெலுக்கு அழைப்புவிடுத்தார்: “அதை அடைவதற்கு அங்கே நல்ல வாய்ப்பும் கிடைக்கக்கூடும்,” என்றார்.
ஜி20 நாடுகள் மாநாட்டிற்கு முன்னதாக பேர்லினுக்கு ஜி விஜயம் செய்தமை, 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் உலக முதலாளித்துவ விவகாரங்களில் மேலாதிக்கம் கொண்டிருந்த சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டணிகளின் உடைவை அடிக்கோடிடுகிறது. சீனா மற்றும் ரஷ்யாவுடன் போரைக் கட்டவிழ்த்து விடக்கூடும் என்றாலும் கூட வாஷிங்டன் வட கொரியாவை இராணுவ நடவடிக்கையைக் கொண்டு அச்சுறுத்துகின்ற நிலையில், நேட்டோ சக்திகளோ ஜி20 மாநாட்டில் ஆழ்ந்த உடைவுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. ஒரு புதிய, பயங்கர உலகளாவிய மோதலுக்கான சாத்தியக்கூறு அதிகரித்து கொண்டிருக்கின்ற நிலையில், எல்லா நாடுகளும் யார் யாருடன் அணி சேர்வதென்று முடிவெடுக்க முண்டியடித்துக் கொண்டிருக்கையில், இந்த மாநாடு ஒரு பொருளாதார மாநாடாக அல்ல பெரும்பாலும் எதிர்விராத சக்திகளின் ஒரு கூட்டமாக இருக்கப் போகிறது.
போலாந்திற்கான ட்ரம்பின் விஜயமே கூட, சோவியத்துக்கு-பிந்தைய காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் முதல் மிகப்பெரிய விட்டுக்கொடுப்பற்ற நிலையின் போதிருந்த அமெரிக்க மூலோபாயத்தின் மறுதொடக்கமாக உள்ளது. 2002 இல், பேர்லின் மற்றும் பாரீஸின் ஆட்சேபணைகளை மீறி புஷ் நிர்வாகம் ஈராக் மீதான அதன் சட்டவிரோத படையெடுப்புக்கு தயாரான நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், “புதிய ஐரோப்பாவை", அதாவது கிழக்கு ஐரோப்பிய நாடுகளை, படையெடுப்பை எதிர்த்த “பழைய ஐரோப்பிய" நாடுகளுக்கு எதிர்நிலையில் நிறுத்தினார்.
உலகின் பிரதான பொருளாதாரங்களுக்கு இடையே அதிகரித்து வரும் இந்த மோதல்கள் சர்வதேசரீதியில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். நேற்று பேர்லினுக்கு ஜி விஜயமும் மற்றும் இன்று போலாந்திற்கு ட்ரம்ப் விஜயமும், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வாஷிங்டன் மற்றும் பேர்லின்-பாரீஸ் அச்சுக்கு இடையே ஈராக் விவகாரத்தில் எழுந்த மோதல், ஒரு தனித்த அபிவிருத்தி அல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அதற்கு பதிலாக, அது, கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை உலக போர்களாக வெடித்த பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியிடும் பெருநிறுவன நலன்களில் வேரூன்றிய ஆழ்ந்த, நீடித்த எதிர்விரோதங்களின் விளைவாகும்.
ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக போலாந்து விஜயத்தில், ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பை, குறிப்பாக அதன் மேலாளுமை சக்தியாக விளங்கும் ஜேர்மனி மீதான எதிர்ப்பை ஊக்குவிக்க முயன்றார், அதன் வர்த்தக கொள்கைகளை ட்ரம்ப் பகிரங்கமாக "நிஜமாகவே மோசமானது" என்று அழைத்ததுடன், அமெரிக்காவிற்கான அதன் வாகன ஏற்றுமதிகளை வெட்டவும் அவர் அச்சுறுத்தி உள்ளார்.
ஜேர்மன் இராணுவத்தால் மூர்க்கமாக ஒடுக்கப்பட்டு, சுமார் 200,000 பேர் உயிரிழந்த, போலாந்து மீதான நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராக 1944 வார்சோ எழுச்சி நினைவிடத்தில் ட்ரம்ப் இன்று பேசவிருக்கிறார்.
போலந்தில் ஆட்சியில் உள்ள தீவிர வலது சட்டம் மற்றும் ஐக்கியம் கட்சியின் (PiS) அதிகாரிகள், ட்ரம்புக்கு ஓர் ஆதரவு கூட்டத்தை வழங்க வார்சோவுக்கு பெரும் எண்ணிக்கையிலான PiS ஆதரவாளர்களை பேருந்தில் கொண்டு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். “நாம் ஒரு புதிய வெற்றி பெற்றுள்ளோம், ட்ரம்பின் விஜயம்… [ஏனையவர்கள்] அதற்காக பொறாமைப்படுகிறார்கள்; அதற்காக பிரிட்டிஷ் நம்மை தாக்குகிறார்கள்,” என்று சனியன்று ஒரு கட்சி கூட்டத்தில் கூறியதன் மூலம், PiS தலைவர் Jarosław Kaczyński, ஜி20 நாடுகள் மாநாட்டிற்கு முன்னதாக வார்சோவில் பேசுவதென்ற ட்ரம்பின் முடிவை பாராட்டுகிறார்.
இந்த அழைப்பு போலாந்தில் ட்ரம்புக்கான பரந்த மக்கள் செல்வாக்கை பிரதிபலிக்கவில்லை. மக்களில் வெறும் 23 சதவீதத்தினர் மட்டுமே சர்வதேச அரசியலில் ட்ரம்ப் "சரியானதை செய்வதாக" நம்புகிறார்கள், என ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. ஒப்பீட்டளவில் பிரிட்டனில் 23 சதவீதத்தினர் நம்புகிறார்கள். அதற்கு பதிலாக போலந்து நீதித்துறையின் அதிகாரங்களைக் குறைக்க, போலந்திற்குள் புலம்பெயர்வோரைத் தடுக்க, தீவிர-வலது போராளிகள் குழுக்களை அமைக்க மற்றும் ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைக்க போலந்து ஆட்சியின் நகர்வுகளை விமர்சித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடனான போலந்தின் கடுமையான மோதல்களில் அது பலமான கூட்டாளிகளைக் கொண்டுள்ளது என்பதை சமிக்ஞை காட்ட, PiS ட்ரம்பின் விஜயத்தைப் பயன்படுத்த கருதுகிறது.
ஐரோப்பாவிற்குள்ளும் மற்றும் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையே நேட்டோ கூட்டணிகளுக்குள் அதிகரித்து வரும் மோதல்களில் அவர் நிலைப்பாட்டை வரையறுக்க, ட்ரம்ப் போலந்தில் அவர் உரையைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளார் என்பதை அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
“அவர் வரலாற்றின் இருண்ட மணித்தியாலங்கள் முழுவதிலும் போலந்தின் ஊக்கத்தை பாராட்டுவார், மற்றும் ஓர் ஐரோப்பிய சக்தியாக போலாந்தின் எழுச்சியைப் புகழ்வார்,” என்று கடந்த வாரம் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்பின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசிகர் ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டர் தெரிவித்தார். “அவர் ஐரோப்பாவுடனான அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து மட்டுமல்ல, மாறாக அட்லாண்டிக் நாடுகள் கடந்த நமது கூட்டணியின் எதிர்காலம் குறித்தும் மற்றும் அது அமெரிக்க பாதுகாப்பு மற்றும் அமெரிக்க செல்வவளத்திற்கு என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதன் மீதும் ஒரு தொலைநோக்கு பார்வையை வழங்குவார்,” என்றார்.