Print Version|Feedback
Trump’s frosty phone call with Chinese President Xi
சீன ஜனாதிபதி ஜி உடனான ட்ரம்பின் கடுமையான தொலைபேசி அழைப்பு
By Peter Symonds
4 July 2017
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ஞாயிறன்று இரவு (அமெரிக்க நேரம்) மேற்கொண்ட ஒரு தொலைபேசி அழைப்பு, ஏப்ரல் மாதத்தில் புளோரிடாவில் மார்-அ-லாகோவில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு பின்னர் அவர்களது உறவுகளில் குறிப்பிடத்தக்க சீர்குலைவு ஏற்பட்டுள்ளதையே உறுதிசெய்கின்றது. வட கொரியாவை அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கைவிடுமாறு நிர்பந்திக்க சீனாவிற்கு மீண்டும் அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் முயன்றார், ஆனால் அதற்காக சிறிதும் கூட எதுவும்செய்ய முடியவில்லை.
வட கொரியாவால் முன்வைக்கப்பட்டு “வளர்ந்துவரும் அச்சுறுத்தல்” பற்றி ட்ரம்ப் கருத்து எழுப்பியதுடன், “ஒரு அணுகுண்டு அபாயமற்ற ஒரு கொரிய தீபகற்பத்திற்கு” இரு தலைவர்களும் இரு தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும் தங்களது அர்ப்பணிப்பை மறுபடி உறுதிசெய்வதாக மட்டும் அவர் மேலும் சேர்த்துக் கூறியதாக வெள்ளை மாளிகை தொலைபேசி அழைப்பு பற்றி வழங்கப்பட்ட ஒரு சுருக்கமான குறிப்பு தெரிவித்தது. வட கொரியா மீது நெருக்கும் பொருளாதாரத் தடைகளை சீனா திணிக்கவேண்டுமென்று ட்ரம்ப் கோருவதோடு, பெய்ஜிங் நுழைவாயிலில் ஒரு பெரிய போருக்கு வழிவகுக்கக்கூடிய இராணுவ நடவடிக்கையை எடுக்குமாறு அச்சுறுத்தவும் செய்கிறார்.
மூத்த நிர்வாக அதிகாரிகளை மேற்கோளிட்டு, New York Times பத்திரிகை நேற்று, வட கொரியாவை அடிபணியுமாறு நிர்பந்திக்க சீனா தவறிவிட்டால், அமெரிக்கா தனது சொந்த நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளதாக, ட்ரம்ப், ஜி க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று அறிவித்தது.
ட்ரம்ப், “அமெரிக்காவின் வர்த்தக பங்காளிகளுடன் மிகுந்த சமநிலையுடனான வர்த்தக உறவுகளை தேடும் அவரது உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்” என்று அதிகாரபூர்வ குறிப்பு தெரிவித்தது. இது சீனாவிற்கு எதிரான வர்த்தக யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு மறைமுக அச்சுறுத்தலாகவே உள்ளது.
ஜி உடனான அவரது ஏப்ரல் மாத கூட்டத்திற்கு பின்னர், ட்ரம்ப் அவரது ஆத்திரமூட்டுகின்ற சீன எதிர்ப்பு பகட்டாரவார வார்த்தையாடல்களை குறைத்து கொண்டதுடன், சீனா வட கொரியாவை கட்டுப்படுத்துமானால், அதற்கு பொருளாதார சலுகைகளை அவர் வழங்குவார் என்றும் பரிந்துரைத்தார். கடந்த மாத இறுதியில், ட்ரம்ப் ஒரு மாற்றத்திற்கு சமிக்ஞை செய்ததோடு, வட கொரியாவை முறையாக நடப்பதற்கு நிர்பந்திக்கும் சீனாவின் முயற்சிகள் “பிரயோசனமளிக்கவில்லை” என்றும் ஒரு ட்வீட்டில் அறிவித்தார்.
ஞாயிறன்று முன்னதாக ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயை ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்ததன் மூலம் சீனா மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்தினார். இரு தலைவர்களும் “வட கொரியாவின் வளர்ந்துவரும் அச்சுறுத்தல்” குறித்து பேசியதுடன், “அதன் ஆட்சி மீது அழுத்தத்தை அதிகரிக்க” அவர்களது ஆதரவையும் தெரிவித்தனர், மேலும் அமெரிக்கா-ஜப்பான் இராணுவ கூட்டணியை மீள்உறுதிப்படுத்திகொண்டனர். அபே, பியோங்யாங்கினால் முன்வைக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை, ஜப்பானிய மீள்இராணுவமயமாக்கத்தை முடுக்கிவிடுவதற்கு சுரண்டிக்கொண்டுள்ளார், இது வட கொரியாவிற்கு எதிராக மட்டுமல்லாமல், சீனாவையும் இலக்காகக் கொண்டது.
சீனாவின் அரசுக்கு சொந்தமான செய்தி ஊடகமானது, ட்ரம்ப் உடனான ஜி இன் தொலைபேசி அழைப்பின் போது இருந்த வெளிப்படையான அழுத்தங்களை சுட்டிக்காட்டியது. ஏப்ரல் கூட்டத்திலிருந்து “எதிர்மறையான காரணிகளால்” உறவுகள் பாதிப்படைந்துள்ளதாக சீன ஜனாதிபதி தனது கவலைகளை வெளிப்படுத்தியதாகவும், மேலும், “மார்-அ-லாகோவில் அவர்கள் அடைந்த ஒருமித்த கருத்தை” உறுதியாக பின்பற்றுமாறு ட்ரம்பை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அறிக்கைகள் இந்த காரணிகளை விரிவாக விளக்கவில்லை என்றாலும், சீனா “ஒரே சீனக் கொள்கை மீதான அமெரிக்க அரசாங்கத்தின் மீள்உறுதிப்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம்” அளிப்பதாகவும், மேலும், அமெரிக்கா “ஒரே சீனக் கொள்கைக்கு ஒத்துப்போவதன் மூலம் தாய்வான் பிரச்சனையை முறையாக கையாளும்” என நம்புவதாகவும் ஜி தெளிவாக அழுத்தம் கொடுத்தார். கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக, தாய்வான் உட்பட ஒட்டுமொத்த சீனாவிற்கான ஒரே சட்டப்பூர்வமான அரசாங்கமாக பெய்ஜிங்கை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
கடந்த வாரம் தாய்வானுக்கு 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு முக்கிய ஆயுத விற்பனைக்கு ட்ரம்ப் நிர்வாகம் அனுமதியளித்தபோதே, சீனாவுடனான உறவுகளை வேண்டுமென்றே அது எரியூட்டியது. முந்தைய அமெரிக்க நிர்வாகங்கள் தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததும் சீனத் தாக்குதலுக்கு எதிராக உறுதி செய்யும் பாவனையாகவே இருந்தது. ஆயினும், கடந்த டிசம்பரில், ஒரே சீனக் கொள்கையை கேள்விக் குறியாக்க ட்ரம்ப் அழைப்பு விடுத்ததனால், சமீபத்திய ஆயுத ஒப்பந்தங்கள் குறிப்பாக பெய்ஜிங்கில் ஆத்திரமூட்டியிருக்கிறது. ஏப்ரலில் ஜி ஐ சந்திப்பதற்கு முன்பு அவர் அச்சுறுத்தலைத் திரும்பப் பெற்றார், ஆனாலும், அமெரிக்க-சீன உறவுகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ள ஒரு கொள்கை குறித்து அவரது உடன்பாடு பற்றி சீனாவில் இன்னும் கேள்விகளே உள்ளன.
தாய்வானிய துறைமுகத்திற்கு அமெரிக்க போர்க்கப்பல்களின் வழமையான விஜயங்களை அங்கீகரிக்கவும், தாய்வானிய கடற்படை கப்பல்கள் பசிபிக் பகுதியில் அமெரிக்க தளங்களுக்கு விஜயம் செய்ய அனுமதிக்கவும், தாய்வானை நோக்கிய அமெரிக்க கொள்கையில் ஒரு மாற்றத்திற்கு செனட் ஆயுத சேவைகள் குழு ஒப்புதலளித்தமையானது பெய்ஜிங்கின் கவலைக்கு மற்றொரு காரணத்தை வழங்கியது. தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தின்படி இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்குமானால், அது அமெரிக்க-தாய்வானிய இராணுவ உறவுகளை கணிசமாக ஊக்குவிப்பதாக இருக்கும். தாய்வானின் “கடலடி போர் நடவடிக்கைத் திறன்களை” அபிவிருத்தி செய்வதற்கும், தாய்வான் உடனான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அமெரிக்காவும் இந்த சட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
தாய்வானிய ஆயுத ஒப்பந்தத்துடன், பொருளாதாரம் மற்றும் இராணுவம் தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய பிற ஆத்திரமூட்டும் நகர்வுகளையும் ஜி இன் “எதிர்மறைக் காரணிகள்” தெளிவாக குறிப்பிடுகின்றது:
* கடந்த வாரம், அமெரிக்க கருவூல செயலரான ஸ்டீவன் மெனுசின், Bank of Dandong மற்றும் Dalian Global Unity Shipping ஆகிய இரண்டு சீன நிறுவனங்கள் மீதும் அத்துடன், வட கொரியாவுடனான அவர்களது சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு சீன வணிக நிர்வாகிகள் மீதான பொருளாதாரத் தடைகளை அறிவித்தார். அமெரிக்க பிரஜைகள் மற்றும் வணிகங்களும் அந்த நிறுவனங்களுடனும், தனிநபர்களுடனும் வியாபாரம் செய்வதிலிருந்து தடை செய்யப்படும்.
* ஞாயிறன்று, தென் சீனக் கடலில் சீன இறையாண்மைக்கு சவால் விடும் விதமாக ஆறு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் அமெரிக்க கடற்படை அதன் இரண்டாவது கடற் போக்குவரத்து சுதந்திரம் எனும் நடவடிக்கையை நடத்தியது. பாராசெல் தீவுக் குழுவிலுள்ள டிரைடன் தீவைச் சுற்றிலும் சீனா உரிமை கோருகின்ற 12 கடல்வழி மைல் பிராந்திய வரம்பிற்குள் வழிகாட்டி ஏவுகணையுடன் கூடிய அழிப்புக் கப்பலான USS Stethem ஊடுருவியது. சீன வெளியுறவு அமைச்சகம், அமெரிக்க ஊடுருவல் “ஒரு தீவிர அரசியல் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்” என்று முத்திரை குத்தியது, மேலும் அமெரிக்க அழிப்புக் கப்பல்களை எச்சரிக்கும் விதமாக சீன போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
* சீனா மற்றும் இதர பெரும் வர்த்தக பங்காளிகளுடன் “மிகவும் சமநிலைப்படுத்தப்பட்ட வர்த்தக உறவுகள்” வைத்திருக்க வேண்டும் என்ற ட்ரம்பின் வெளிப்படையான தீர்மானம், வெளிநாட்டு உருக்கிற்கு எதிரான அமெரிக்க தடைகளுக்கான அச்சுறுத்தலில் உறுதியான வடிவத்தை எடுத்துள்ளது. உருக்கு இறக்குமதிகள் “தேசிய பாதுகாப்பிற்கு” ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனவா என்ற வகையிலான ஒரு விசாரணையை வர்த்தகத் துறை நடத்தியுள்ளதானது, ட்ரம்ப் அபராதங்களை சுமத்த சிறிய அளவிலான சட்ட பயன்பாட்டின் கீழ் சுரண்டமுடியும் என்பதற்கான சாக்குப்போக்காகவே உள்ளது. இந்த அச்சுறுத்தல் குறிப்பாக, சீனாவிற்குள் அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதி மீதான தடையை தற்போது முற்றாக நீக்கியுள்ள பெய்ஜிங்கை ஆத்திரமூட்டுவதாக உள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் விரைவில் சீனாவுக்கு எதிராக இன்னும் கூடுதலான மோதல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள உள்ளது. தற்போது, பியோங்யாங்கிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பெய்ஜிங்கிற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு நெம்புகோலாக இந்த அச்சுறுத்தல்களை ட்ரம்ப் பயன்படுத்துவது போல் தோன்றுகிறது. எனினும், வட கொரியாவிற்கு எதிராக, அதன் ஆட்சியின் பொறிவை தூண்டிவிடக்கூடியதும் மற்றும் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் சுரண்டுவதற்கான ஒரு தொடக்கத்தை வழங்குகின்றதுமான இன்னும் மேலதிக பொருளாதாரத் தடைகளை திணிக்க சீன அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது.
இந்த வாரத்திற்கு பின்னர், ஜேர்மனியில் G20 உச்சிமாநாட்டிற்கு ஒருபுறம் அவர்கள் சந்திக்க வேண்டுமென ட்ரம்பும், ஜியும் தங்களது தொலைபேசி அழைப்பில் மீள்உறுதிப்படுத்தினர். பதட்டங்களை குறைக்கவும், இக்கட்டுநிலையை தடுக்க பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில் இன்னும் செயலாற்றவும் அமெரிக்காவை சீன அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தி இருப்பினும், வட கொரியா மீதான எந்தவொரு உடன்பாடும் சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. “சரியான சூழ்நிலைகளின்” கீழ், வேறுவிதமாக கூறுவதானால், அமெரிக்க கோரிக்கைகளுக்கு பியோங்யாங் வளைந்து கொடுத்தாலன்றி, வட கொரியாவுடனான பேச்சுவார்த்தைளுக்கு வாய்ப்பில்லை என்று ட்ரம்ப் நிர்வாகம் நிராகரித்துவிட்டது.
இன்று காலை வட கொரியா இன்னுமொரு இடைநிலை தூர ஏவுகணை சோதனையை நடத்திமுடித்த பின்னர், ட்ரம்ப் ஒரு ட்வீட்டில் மீண்டும் பெய்ஜிங்கை கடுமையாக கண்டித்து, பின்வருமாறு கூறினார்: “ஒருவேளை சீனா வட கொரியா மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இந்த முட்டாள்தனத்தை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டுவரும்.”
பொருளாதாரத் தடைகள் பியோங்யாங்கை அடிபணியச் செய்ய தவறுமானால், இராணுவம் உட்பட, “அனைத்து தேர்வுகளையும்” பிரயோகிக்குமென அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. வட கிழக்கு ஆசியாவில் பென்டகன் ஒரு பெரும் இராணுவ கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வட கொரியாவை தாக்குவதற்கான திட்டங்களையும் அபிவிருத்தி செய்துள்ளதானது, சீனா மற்றும் ரஷ்யா உட்பட, ஏனைய முக்கிய சக்திகளையும் இழுக்கக்கூடிய ஒரு பேரழிவுகரமான மோதலைத் தூண்டிவிடும்.