Print Version|Feedback
US Congress overwhelmingly passes sanctions bill targeting Russia
அமெரிக்க காங்கிரஸ் ரஷ்யாவை இலக்கில் வைத்து பெரும்பான்மையுடன் தடையாணைகள் சட்டமசோதாவை நிறைவேற்றுகிறது
Joseph Kishore
26 July 2017
ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா மீது புதிய தடையாணைகளை நிலைநிறுத்துகின்றதும் மற்றும் அவற்றை திருத்தி எழுதுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் தகைமையை மட்டுப்படுத்துகின்றதுமான சட்டமசோதா ஒன்றை அமெரிக்க பிரதிநிதிகள் சபை செவ்வாயன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது. அமெரிக்காவிற்கும் மற்றும் அதன் பிரதான போட்டியாளர்கள், அதாவது ரஷ்யா மட்டுமல்ல, மாறாக ஐரோப்பாவில் உள்ள ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையிலான, புவிசார் அரசியல் மோதல்களைக் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரிக்கும் இந்த நடவடிக்கை மீது, 419-3 வாக்குகள் பதிவாயின.
இந்த சட்டமசோதா இனி செனட் க்கு அனுப்பப்படும், அங்கே (வட கொரியா மீதான தடையாணைகள் இல்லாமல்) இதன் முந்தைய வடிவம் இதேயளவிற்கான வித்தியாசத்துடன், 97-2 வாக்குகளுடன், ஜூனில் ஒப்புதல் பெற்றிருந்தது. இந்த சட்டமசோதாவில் அவர் கையெழுத்திடுவாரா மாட்டாரா என்பதற்கு ட்ரம்ப் வெவ்வேறு விதமான சமிக்ஞைகளைக் காட்டியிருந்தார், காங்கிரஸின் இரு அவைகளிலும் ஜனாதிபதியின் தடுப்பதிகாரத்தையே (veto) தோற்கடிக்கக்கூடிய பெரும்பான்மை இருப்பதால், இது ஏறத்தாழ நிச்சயமாக சட்டமாக்கப்படும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது.
ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட ரஷ்ய-விரோத கொள்கையிலிருந்து எந்தவித மாற்றத்தையும் எதிர்க்கின்ற உளவுத்துறை முகமைகள் தாக்குமுகப்பாக நிற்க, அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் "தேர்தல் ஊடுருவல்" பிரச்சாரத்திற்குப் பின்னால் இருக்கும் இன்றியமையா பிரச்சினைகளை இந்த புதிய தடையாணைகள் அம்பலப்படுத்துகின்றன. அவையில் "வேண்டாம்" வாக்குகள் அனைத்தும் குடியரசு கட்சியினரிடம் இருந்தே வந்திருந்த நிலையில், காங்கிரஸின் இரண்டு அவைகளிலும் கிடைக்கும் அண்மித்து-ஒருமனதான வாக்குகளானது, அரசு அமைப்புகள் மற்றும் அவற்றில் உள்ளடங்கியுள்ள நிர்வாகிகளை சிஐஏ, என்எஸ்ஏ மற்றும் ஏனைய உளவுத்துறை முகமைகள் எந்தளவிற்கு நேரடியாக கட்டுப்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் இந்த கடுமையான உள்பூசலில் பணயத்தில் உள்ள நிஜமான பிரச்சினைகளை, "ட்ரம்புக்கு காங்கிரஸின் கடுமையான—ஆனால் அவசியமான—கண்டனம்” என்று தலைப்பிட்டு திங்கட்கிழமை வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் ஒன்று குறிப்பிட்டிருந்தது. ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்கு முதன்மை ஊடக குரலாக இருந்துள்ள நியூ யோர்க் டைம்ஸ் உடன் சேர்ந்து, போஸ்ட் அந்த சட்டமசோதாவை அமெரிக்காவின் "அத்தியாவசிய நலன்களைப்" பாதுகாப்பதற்கு அவசியமானதாக பாராட்டியது.
இந்த தடையாணைகள் உடன்படிக்கை, “காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் தடையாணைகளை நீக்குவதிலிருந்து அவரை தடுத்து, விளாடிமீர் புட்டின் ஆட்சியை நோக்கிய ட்ரம்ப் கொள்கையை கட்டுப்பாட்டில்" நிறுத்துவதாக போஸ்ட் எழுதியது. ட்ரம்ப் ரஷ்யாவை நோக்கி "விளக்கவியலாத நல்லுறவை" காட்டியுள்ளார் என்பதோடு, அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யாவின் குறுக்கீடு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் என்று அப்பத்திரிகை எழுதியது.
“அமெரிக்க உளவுத்துறை சமூகத்தை பொறுத்த வரையில்,” “அங்கே அதுபோன்ற எந்த ஐயமும் இல்லை... அந்த தீர்மானங்களை திரு. ட்ரம்ப் ஏற்க மறுக்கிறார் என்பதும், ரஷ்யாவின் குறுக்கீடு மற்றும் உக்ரேனில் அதன் இராணுவ படையெடுப்புக்காக அதன் மீது திணிக்கப்பட்ட தடையாணைகளுக்கு அவர் ஆட்சேபணைகளைக் கொண்டிருக்கலாம் என்பதும், வேறுவிதத்தில், துருவமுனைப்பட்ட காங்கிரஸில் அசாதாரண கருத்தொற்றுமையை உருவாக்கி உள்ளது,” என்று போஸ்ட் வலியுறுத்தியது.
இத்தேர்தலில் ரஷ்யா சம்பந்தப்பட்டிருந்ததாக போஸ்ட் கூறிய குற்றச்சாட்டுக்களில் எதுவுமே நிரூபிக்கப்பட்டதில்லை என்பதோடு, சதாம் ஹூசைன் அரசாங்கம் "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களைக்" கொண்டிருந்தது என்று 2003 ஈராக் படையெடுப்புக்கு முன்னதாக கூறப்பட்ட கூற்றுக்களை விட “அமெரிக்க உளவுத்துறை சமூகத்தின்" பிரகடனங்கள் நம்பக்கூடியதாக இல்லை. இந்த தீர்மானங்களை ஒருவர் உண்மையென்று ஏற்றுக் கொண்டாலும் கூட, கிளிண்டன் அவரது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க அனைத்து விதமான அரசாங்கங்களுடனும் வேலை செய்து வந்தார் என்பதில் அங்கே எந்த ஐயப்பாடும் கிடையாது.
நிஜமான பிரச்சினை ரஷ்ய "ஊடுருவல்" அல்ல, மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் புவிசார்மூலோபாய நலன்களாகும். போஸ்ட் தெளிவுபடுத்துவதைப் போல, ரஷ்யா உக்ரேனிலும் சிரியாவிலும் அமெரிக்க உளவுத்துறை முகமைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்கிறது என்பது தான் அதன் பிரதான கவலையாகும். “உக்ரேனில் இராணுவ படையெடுப்பு" குறித்த குறிப்புகள், உக்ரேனிய ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்தைக் கவிழ்க்க, பாசிசவாத அமைப்புகளைத் தாக்குமுகப்பாக கொண்டு அமெரிக்கா ஒழுங்கமைத்த 2014 ஆட்சி-மாற்ற நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் ரஷ்யாவுடன் கிரிமியா இணைந்ததைக் குறித்த குறிப்புகளாகும்.
“சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கான அமெரிக்க ஆதரவைத் திரும்ப பெற்றமை" உட்பட, "ஒன்றும் பெறாமல்" ட்ரம்பின் நடவடிக்கைகள் ரஷ்யாவிற்கு "பெரும் விட்டுக்கொடுப்புகளை" வழங்கி வருவதாக அந்த தலையங்கம் பின்னர் குறைகூறுகிறது. இது, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை கீழிறக்க அமெரிக்க ஆதரவில் உள்நாட்டு போர் நடத்தி வரும், அல் கொய்தா செல்வாக்கு மேலோங்கிய, சிரிய எதிர்ப்பு படைகளுக்கு சிஐஏ இன் ஆதரவை நிறுத்துவதென ட்ரம்ப் தீர்மானித்ததைக் குறித்த குறிப்பாகும்.
இந்த தடையாணைகளின் சட்டமசோதா, “ரஷ்யா மீதான அமெரிக்க-ஐரோப்பிய ஒருங்கிணைவு" உட்பட “சில உத்தேசிக்காத விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று அத்தலையங்கம் ஒப்புக் கொள்கிறது. “தொடர்ச்சியாக வலிந்து தாக்கும் ரஷ்யாவுக்கு எதிராக இன்றியமையா அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்கு ட்ரம்ப் ஐ நம்ப முடியாது” என்பதால், “எவ்வாறெனினும்" இது "இன்றியமையாததாகும்.”
இந்த "இன்றியமையா அமெரிக்க நலன்கள்" தான் என்ன? மருத்துவ கவனிப்பு மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதலோ, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான அதன் மூர்க்கமான தாக்குதலோ அல்லது அதன் இராணுவவாத திட்டநிரலோ அவற்றில் சம்பந்தப்படவில்லை. அதற்கு பதிலாக அவை மத்திய கிழக்கு மற்றும் அதன் பரந்த எரிசக்தி ஆதாரவளங்களை மேலாதிக்கம் செய்வதிலும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க அதிகாரத்தை விரிவாக்குவதிலும் ஆளும் வர்க்கத்தின் நலன்களைக் குறிப்பிடுகின்றன. அனைத்திற்கும் மேலாக போஸ்ட் யாருக்காக பேசுகிறதோ அந்த ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளை பொறுத்த வரையில், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க ஆக்ரோஷம் ஐரோப்பிய சக்திகளை வரிசையில் நிறுத்துவதற்கும் மற்றும் சீனாவை கவனத்தில் எடுப்பதற்கும் இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சட்டமசோதா, அணுஆயுத சக்திகள் ஈடுபடும் ஒரு இராணுவ மோதலுக்குள் துரிதமாக தீவிரமடையக்கூடிய வெடிப்பார்ந்த புவிசார்அரசியல் பதட்ட நிலைமைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள், அமெரிக்கா ஈரானிய கப்பலின் மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடுகளை நடத்தியது; சீன இராணுவம் ஓர் அமெரிக்க போர்விமானத்தை இடைமறித்து திருப்பியனுப்பியது; வட கொரியாவுக்கு எதிரான ஒரு அமெரிக்க போருக்கு சீனாவின் தயாரிப்புகள் குறித்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டது; பால்டிக் கடலில் சீனா ரஷ்யாவுடன் கூட்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த சட்டமசோதாவினால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா கூர்மையாக அதன் பொருளாதார மற்றும் இராணுவ மோதலைப் பின்தொடர உத்தேசிக்கிறது என்பதற்கு இதுவொரு தெளிவான அறிகுறியாகும். இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு "ஒருசில நாட்களுக்குள்" ஐரோப்பிய ஒன்றியம் "நடவடிக்கை எடுக்க தயாராக இருக்க வேண்டும்" என்றும், இந்த தடையாணைகள் "ரஷ்ய நிறுவனங்களுடனான ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகளின் கீழ் சட்டபூர்வமாக வியாபாரம் செய்யும் பெரும் எண்ணிக்கையிலான ஐரோப்பிய நிறுவனங்களை சாத்தியமானளவிற்கு பாதிக்கக்கூடும்,” என்று ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் இன் கருத்துக்களை, கசியவிடப்பட்ட ஒரு ஐரோப்பிய ஒன்றிய குறிப்பு வெளிப்படுத்தியது.
அதிகரித்தளவில் தனிமைப்பட்டு தாக்குதலில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம், ஒரு போரைத் தொடங்குவது தான் —அனேகமாக ஈரான் உடனோ அல்லது வட கொரியாவுடனோ இருக்கலாம்— அதன் உள்நெருக்கடியை தீர்ப்பதற்கான சிறந்த வழியாக என்று முடிவெடுக்கக்கூடும். அவர் கொள்கையை மாற்ற நிர்பந்திப்பதில் அல்லது அவரை பதவியிலிருந்து நீக்குவதில் ட்ரம்பின் எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்றாலும் கூட, அது மத்திய கிழக்கில், அனைத்திற்கும் மேலாக, ரஷ்யாவுக்கு எதிராக முன்பினும் அதிக ஆக்ரோஷமான கொள்கையை நோக்கிய திருப்பமாக இருக்கும்.
அரசுக்குள் கடுமையான பிளவுகள் எந்தளவிற்கு இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கம் ஓர் இடைவிடாத தர்க்கத்தால் உந்தப்பட்டுள்ளது. 1991 இல் சோவியத் ஒன்றிய கலைப்பானது "வரலாற்றின் முடிவை" கொண்டு வரவில்லை, மாறாக முடிவில்லாத மற்றும் விரிவாக்கும் போரின் ஒரு கால் நூற்றாண்டைக் கொண்டு வந்தது, இதில் ஆளும் வர்க்கம் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை மாற்றுவதற்கும் அதன் உலகளாவிய பொருளாதார இடத்தைப் பேணுவதற்கும் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதைக் கொண்டு முனைந்திருந்தது. இந்த பைத்தியக்காரத்தனமான மற்றும் பொறுப்பற்ற கொள்கை இப்போது ஒட்டுமொத்த உலகையும் மூன்றாம் உலக போரின் விளிம்பில் கொண்டு வந்துள்ளது.