Print Version|Feedback
Revelation of meeting with Russian lawyer intensifies political crisis in Washington
ரஷ்ய வழக்கறிஞர் உடனான சந்திப்பு குறித்த தகவல், வாஷிங்டனில் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்துகிறது
Joseph Kishore and David North
13 July 2017
புட்டின் அரசாங்கம் மற்றும் ரஷ்ய செல்வந்த தட்டுக்களுடன் தொடர்பு வைத்துள்ள ஒரு மாஸ்கோ வழக்கறிஞரை டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் ஜூன் 2016 இல் சந்தித்தார் என்ற தகவல், வாஷிங்டனில் தீவிரமடைந்து வரும் அரசியல் மோதல்களின் குவிமையமாக ஆகியுள்ளது.
ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊடகங்களின் பிரதிபலிப்பை-விடையிறுப்பைக்- கொண்டு பார்த்தால், கிரெம்ளின் மீதான அமெரிக்க அணுசக்தி குறியீடுகளை கையளிப்பதற்காகவே ட்ரம்ப் மகன் அவரை சந்தித்தார் என்றொருவர் நினைக்கக்கூடும். அவரது தந்தைக்கு அப்போதைய பிரச்சார ஆலோசகராக செயல்பட்ட ட்ரம்ப் ஜூனியர், உண்மையில் ஹிலாரி கிளிண்டனை பலவீனப்படுத்தும் தகவல்களை பெறுவதற்காகவே Natalia Veselnitskaya ஐ சந்தித்தார் என்று தெரிகிறது.
இந்த வகையான “குப்பையைக் கிளறும்" நடவடிக்கைகள், துல்லியமாக அமெரிக்க அரசியலில் வழமைக்கு மாறானது அல்ல. ட்ரம்ப் பிரச்சார தலைவர் போல் மனாஃபோர்டை மதிப்பிழக்கச் செய்யும் ஆவணங்களைத் தேடி, கிளிண்டன் பிரச்சாரத்துடன் தொடர்புபட்டவர்கள் மார்ச் 2016 இல் உக்ரேனிய அரசு அதிகாரிகளைச் சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிளிண்டனுக்கே கூட உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் உளவுத்துறை முகமைகளுடன் தொடர்புகள் உள்ளன, ஐயத்திற்கிடமின்றி இதை கொண்டு அவர் ட்ரம்ப் உடனான போட்டியில் பலனடைய முனைந்திருந்தார்.
ரஷ்ய வழக்கறிஞர் ஒருவருடனான ட்ரம்ப் ஜூனியரின் இந்த இழிவார்ந்த தொடர்பை, எந்தவிதத்திலும், 1968 நிக்சனின் ஜனாதிபதி பிரச்சார சமயத்தில் வியட்நாம் போரைத் திடீரென நிறுத்தினால், அவர் வாக்குகளை விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், பாரீஸ் சமாதான பேச்சுவார்த்தைகளை வீணடிப்பதற்கான நிக்சனின் முயற்சிகளுடனோ; அல்லது 1980 தேர்தல் நாளுக்கு முன்னதாக ஈரானிய ஆட்சி அமெரிக்க பிணைக்கைதிகளை விடுவிக்காமல் இருக்க அதை இணங்கச்செய்ய முயன்ற ரீகனின் முயற்சிகளோடு அளவிட முடியாது.
எவ்வாறிருப்பினும் ட்ரம்ப் டவர் இல் நிகழ்ந்த சந்திப்பானது, வாஷிங்டனில் நடந்து வரும் கடுமையான அரசியல் சண்டையின் உள்ளடக்கத்தில் வெடிப்பார்ந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ரஷ்ய வழக்கறிஞர் உடனான சந்திப்பானது ட்ரம்ப்-ரஷ்ய விசாரணைகளில் "புகைந்து கொண்டிருக்கும் துப்பாக்கிக்கு" நிகரானதாக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்பினருமே கூறுகின்றனர். கிளிண்டனின் முன்னாள் துணைத் தேர்தல் வேட்பாளரான செனட்டர் டிம் கெய்ன் கூறுகையில், அந்த சந்திப்பைக் கொண்டு "நாங்கள் இப்போது நீதி விசாரணையிலிருந்த தடைகளைக் கடந்து,” “பொய் சாட்சியம், பொய் அறிக்கைகள் மற்றும் சாத்தியமானளவிற்கு தேசத்துரோகம் பற்றி குற்றம்சாட்டக்கூடியதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.
அமெரிக்காவிற்கு எதிராக போருக்கு படைதிரட்டுவது அல்லது அதன் "எதிரிகளுக்கு" “உதவி மற்றும் ஒத்துழைப்பு" வழங்குவது மற்றும் ஆதரவளிப்பது தேசதுரோகமாகும் என்று அமெரிக்க சட்டம் வரையறுக்கும் இது, ஒரு தலையாய குற்றமாகும். கெய்னின் வார்த்தைகளை உள்ளபடியே எடுத்துக் கொண்டால், இப்போதைய ஜனாதிபதியின் மகன் —உள்நோக்கத்தைக் கொண்டு பார்த்தால், ஜனாதிபதியே கூட— சாத்தியமானளவிற்கு மரண தண்டனைக்குரிய ஒரு குற்றம் செய்த குற்றவாளியாகிறார் என்று ஜனநாயகக் கட்சியின் 2016 துணை-ஜனாதிபதி வேட்பாளர் அறிவுறுத்துகிறார்.
மலைப்பூட்டும் மட்டத்திற்கு அரசியல் உள்சண்டையை உருவாக்கியுள்ள இந்த பிரச்சினையை பரிசீலிப்பது மதிப்புடையாக இருக்கும். ஜனநாயகக் கட்சியினரும் சரி அவர்களது ஊடக கூட்டாளிகளும் சரி, ஈராக்கிய நகரமான மொசூலில் உயிரிழப்புகள் மற்றும் படுபயங்கரமான அழிப்பின் மீது, அல்லது மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவ பராமரிப்பு திட்டங்களை மறுப்பதற்காக நடந்து வரும் திட்டங்கள் மீது, அல்லது ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்தோரை சுற்றி வளைத்து நாட்டை விட்டு வெளியேற்றுவதன் மீது, அல்லது அமெரிக்காவில் செல்வவள திரட்சி மற்றும் சமூக சமத்துவமின்மையின் மலைப்பூட்டும் மட்டங்கள் மீது வெறித்தனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த மோதல் முற்றிலுமாக வெளியுறவு கொள்கை பிரச்சினைகளை மையத்தில் கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சியில் உள்ள ட்ரம்ப் எதிர்ப்பாளர்களும் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் சிஎன்என் போன்ற முதலாளித்துவ ஊடகங்களது மிகவும் செல்வாக்கான பிரிவுகளும், இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் பெரும் பிரிவுகளால் ஆதரிக்கப்பட்டுள்ளனர் என்பதால் அவர்கள் அசாதாரணமான முறையில் ஆக்ரோஷமாக உள்ளனர்.
பாசிச சிந்தனை கொண்ட இந்த ஜனாதிபதி, ரஷ்யாவின் அல்லது வேறொரு வெளிநாட்டு சக்தியின் ஒரு முகவர் என்பதை ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் ஒரு நிமிடம் கூட நம்ப மாட்டார்கள். ஆனால் ட்ரம்பின் வணிக சாம்ராஜ்ஜியம் மற்றும் தனிப்பட்ட சொத்துக்கள் மீதான ட்ரம்பின் திடமான முன்னீடுபாடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தவிர்க்கவியலாத நலன்களை பின்னே தள்ளுகின்றது என்றவர்கள் அஞ்சுகின்றனர், ஓரளவிற்கு இதில் நியாயம் இல்லாமலும் இல்லை.
அமெரிக்கா, நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டுக்களால் ஆளப்படுகிறது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகமோ அரசை கொள்ளையடிக்கும் (kleptocratic) மற்றும் தன்னை சார்ந்தவர்களுக்கு சலுகை காட்டும் (nepotistic) தன்மைகளுடன் ஒரு செல்வந்த அடுக்கின் அரசாங்கமாக உள்ளது. ட்ரம்ப் மற்றும் ஏனைய பில்லியனிய மந்திரிசபை உறுப்பினர்களின் வணிக நலன்களுக்கும் மற்றும் நிர்வாகத்தின் கொள்கைக்கும் இடையிலான ஆழ்ந்த ஊடுருவ முடியாத ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த தொடர்புகளானது, அடிப்படை ஏகாதிபத்திய மூலோபாய நலன்களை இந்த செல்வந்த அடுக்குகளது கூட்டம் அவர்களின் தனிப்பட்ட பணம் சம்பாதிக்கும் திட்டங்களுக்கு அடிபணிய வைக்கிறது என்ற சந்தேகங்களால் எரியூட்டப்பட்டுள்ளன.
இதனால் தான் ரஷ்யாவுடனான ட்ரம்பின் தொடர்புகள் மீதான பிரச்சினையும் மற்றும் அதனுடனான வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களின் பாத்திரமும் இந்த மோதலில் இந்தளவிற்கு பெரிதாக உயர்கிறது. அமெரிக்காவின் பல்வேறு புவிசார்மூலோபாய நலன்களில் குறுக்கிடும் ஒரு விரோத நாடாக ரஷ்யா பார்க்கப்படுகிறது என்ற உண்மைக்கு இடையே, "புட்டின் மீது" ட்ரம்ப் "மென்மையாக" இருப்பதற்கான சகல அறிகுறிகளும், பெரும் அபாய ஒலிக்கு காரணமாகி விடுகின்றன.
ஆனாலும் கூட ரஷ்யாவை நோக்கிய கொள்கை மீதான பிளவுகள், ஆளும் உயரடுக்கிற்குள் நிலவும் அதிர்ச்சியூட்டும் மட்டத்திலான அரசியல் மோதல்கள் முழுவதையும் விவரித்துவிடாது. இது, கொள்கை மீதான பிரச்சினையை விட பெரியது. இது, அமெரிக்க ஏகாதிபத்தியம் முகங்கொடுக்கும் எளிதில் கையாள முடியாத பொருளாதார, அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளில் வேரூன்றிய வர்க்க ஆட்சியின் ஒரு நெருக்கடியாகும்.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போது, “வரலாற்றின் முடிவு" என்றும் சவாலுக்கிடமற்ற அமெரிக்க மேலாதிக்கத்தின் "ஒற்றை துருவ தருணம்" என்றும் வெற்றி பிரவாக பிரகடனங்களுடன் சேர்ந்து, தசாப்த காலத்திற்கு முன்னரே அரித்துப் போன அமெரிக்காவின் மேலாதிக்க அந்தஸ்து தற்காலிகமாக மூடிமறைக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை மையமிட்டு முடிவில்லா மற்றும் விரிவாக்கப்பட்ட ஒரு கால் நூற்றாண்டு போர், புதிய போட்டியாளர்கள் உருவாவதைத் தடுத்துவிடவில்லை. உலகின் முக்கிய புவிசார் மூலோபாய பிராந்தியங்கள் மீதான அதன் கட்டுப்பாட்டைத் தக்க வைப்பதற்கான போராட்டம், அமெரிக்காவை அதன் மிகப்பெரிய போட்டியாளர்களுடன் முன்பினும் அதிகமாக நேரடியாக மோதலுக்குள் இழுத்து வந்துள்ளது.
அமெரிக்கா நேரடியாகவும் பகிரங்கமாகவும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்பதை கடந்த வாரம் ஜேர்மனியின் ஹம்பேர்க்கில் நடந்த ஜி20 நாடுகளின் கூட்டம் தெளிவுபடுத்தியது. சீன ஜனாதிபதி ஜி உடனான ஜேர்மன் சான்சிலர் மேர்க்கெலின் சந்திப்பும், மற்றும் ஜேர்மனி ஒரு சுதந்திர வெளியுறவு கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற மேர்க்கெலின் வலியுறுத்தலும், சர்வதேச அளவில் அமெரிக்க செல்வாக்கை நலிய செய்யும் யதார்த்தத்தை அடிகோடிட்டது.
ட்ரம்பின் நடவடிக்கைகள், அமெரிக்க கொள்கையின் நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வருவதாக ட்ரம்பின் ஆளும் வர்க்க விமர்சகர்கள் கவலை கொண்டுள்ளனர். பில் கிளிண்டனின் கீழ் கருவூலத்துறை செயலராக இருந்தவரும் ஒபாமாவுக்கு பொருளாதார ஆலோசகரமாக இருந்தவருமான லாரன்ஸ் சம்மர்ஸ், வாரயிறுதியில் பிரசுரமான ஒரு கட்டுரையில் இந்த கவலைகளுக்கு குரல் கொடுத்தார். "இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இருந்து அமெரிக்க வெளியுறவு கொள்கையின் மையத்தில் சரியென்று ஏற்றுக் கொள்ளப்பட்டு” வந்த, “சர்வதேச சமூகத்தின் அபிவிருத்தியில் அமெரிக்கா முன்னிலை வகிக்க வேண்டுமென்ற கருத்தை” ட்ரம்ப் பலவீனப்படுத்தி வருகிறார். “இப்போது அவர் நடத்தை அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதுபவர்களின் அச்சங்களை" அவரது "முன்னுக்குப்பின் முரணான" நடவடிக்கைகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
ஆளும் வர்க்கம் அதன் நெருக்கடியிலிருந்து வெளி வருவதற்கு எளிமையான வழிகள் எதுவுமில்லை. ட்ரம்பை பதவியிலிருந்து நீக்கி விட்டு, துணை ஜனாதிபதி மைக் பென்ஸைப் பதவியில் அமர்த்தும் சூழல்கள் குறித்தும் அல்லது வேறு ஏதேனும் சூழல்களை ஒழுங்கமைப்பது மீதும் பல விவாதங்கள் திரைக்குப் பின்னால் நடந்து வருகின்றன என்பதில் ஐயமில்லை. மைக் பென்ஸ் சமீபத்திய வாரங்களில் உயர்மட்ட குடியரசு கட்சி நன்கொடையாளர்களை இடைவிடாது சந்தித்து வந்துள்ளார். ஆனால் ஏதோவொரு வகையான அரண்மனை சதி மூலமாக ட்ரம்பை பதவியிலிருந்து நீக்குவதில் அவரது ஆளும் வர்க்க விமர்சகர்கள் வெற்றி பெற்றாலும் கூட, அது வீழ்ச்சி மற்றும் சீரழிவின் அடிப்படை இயக்கவியலை மாற்றிவிடப் போவதில்லை. அனைத்திற்கும் மேலாக, அவர்கள் எதை இயக்கத்திற்கு கொண்டு வந்தார்களோ அதற்காக அவர்களே வருத்தப்படுவதில் தான் போய் முடியக்கூடும்.
மக்களில் உயர்மட்ட 10 சதவீதத்தினரைக் கடந்து, விரிந்து, பரந்த ஆதரவை ஈர்க்கும் தகைமை கொண்ட ஓர் அரசியல் வேலைத்திட்டம் இல்லாதிருப்பதே மிக அடிப்படையான பிரச்சினையாகும். தற்போதைய செல்வவள பங்கீட்டை சிக்கலுக்கு உள்ளாக்கும் எதுவொன்றுக்கும் இரு கட்சிகளுமே கடும் விரோதமாக உள்ளன. அரை-நூற்றாண்டு கால சமூக எதிர்புரட்சியானது, அரசு அமைப்புகள் மீதான மக்களின் சட்டபூர்வத்தன்மையை முற்றிலுமாக அரித்துவிட்டது. அரசின் வெவ்வேறு கன்னைகள் ஒன்றின் மீது ஒன்று சேற்றை வாரி இறைத்து கொண்டு, மிகவும் அருவருக்கத்தக்க மற்றும் மோசடி சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்ற உண்மையானது, மக்கள் கோபத்தை மட்டுமே ஆழப்படுத்துகிறது.
ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் இந்த வகையான மோதல் எப்போதுமே ஒரு புரட்சிகர நெருக்கடியுடன் பிணைந்துள்ளதை வரலாறு கற்றுக்கொடுக்கிறது. எவ்வாறிருப்பினும் பாரிய பெருந்திரளான தொழிலாளர்களின் நிஜமான கவலைகள், ஆளும் உயரடுக்கை பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் வேறு விதமாகவும், எதிர்விதமாகவும் உள்ளன. போர், மருத்துவ கவனிப்பு மீதான தாக்குதல், ஓய்வூதியங்கள் அழிப்படுவது, கூலிகள் தேக்கமடைந்திருப்பது, ஆயுள்காலம் குறைந்து வருவது மற்றும் பொலிஸ் வன்முறை என இவற்றின் மீது மில்லியன் கணக்கானவர்கள் கோபம் கொண்டுள்ளனர். இந்த பிரச்சினைகள் தான் மில்லியன் கணக்கானவர்களை போராட்டத்திற்குள் இழுத்து வரும்.
தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டத்துடன் தலையீடு செய்வது அவசரமானதாகும். அது ஆளும் வர்க்கத்தினுள் நிகழும் மோதலின் முடிவிற்காக இயக்கமின்றி காத்திருக்க கூடாது. அது அதன் சொந்த நலன்கள் மற்றும் அதன் சொந்த தீர்வை முன்னெடுக்க வேண்டும். “அரண்மனை சதியா, வர்க்க போராட்டமா: வாஷிங்டனில் அரசியல் நெருக்கடியும், தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்,” என்பதில் நாம் எழுதினோம்:
அமெரிக்காவில் பரந்த மக்கள் போராட்டங்கள் திட்டநிரலில் இருக்கின்றன. ஆர்ப்பாட்ட பேரணிகளும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், மற்றும் வேலைநிறுத்தங்களும் பொதுவான ஒரு தேசிய-அளவிலான தன்மையை பெறுவதற்கு முனையும். ட்ரம்புக்கும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற அத்தனைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது, முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் அதன் அரசுக்கும் எதிரான ஒரு அரசியல்மயமான வெகுஜன இயக்கத்தை, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டிலிருந்தும் சுயாதீனப்பட்டும் மற்றும் அவற்றுக்கு எதிராகவும், கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை முன்னினும் அவசரமான பணியாக முன்வைக்கும் என்பதே இந்த பகுப்பாய்வில் இருந்து பிறக்கக்கூடிய அரசியல் முடிவாகும். இந்த புறநிலையான சமூகப் போக்கானது தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு நனவான மூலோபாயமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். முதலாளித்துவத்தின் கீழான வாழ்க்கையின் பரிதாபத்துக்குரிய சமூக நிலைமைகள் அத்தனைக்கும் எதிரான போராட்டங்களை, ட்ரம்ப்புக்கும் இரண்டு பெருவணிகக் கட்சிகளுக்கும் எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான அரசியல் போராட்டத்துடன் இணைக்கின்ற பணியானது தொழிற்சாலைகளிலும், வேலையிடங்களிலும், உழைக்கும் வர்க்க சமூகங்களிலும், மற்றும் நாடெங்கிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் எழுப்பப்பட வேண்டும், அங்கு விவாதப் பொருளாக்கப்பட வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பிரிவினர் மத்தியில் ஓர் அரசியல் தலைமையைக் கட்டமைப்பதற்கான, ஒரு புரட்சிகர முன்னணிபடையைக் கட்டமைப்பதற்கான தயாரிப்பு குறித்த கேள்வியே தீர்க்கமான பிரச்சினையாகும். இந்த போராட்டத்திற்காக உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களை நாம் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு வலியுறுத்துகிறோம்.