Print Version|Feedback
The oligarchs assemble in Hamburg
செல்வந்த அடுக்குகள் ஹம்பேர்க்கில் கூடுகின்றன
Alex Lantier
8 July 2017
இவ்வாரம் ஜேர்மனியின் ஹம்பேர்க்கில் நடக்கும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டு நிகழ்வுகள், சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தைக் கிழித்துக் கொண்டிருக்கும் இரண்டு அடிப்படை மோதல்களை அம்பலப்படுத்துகின்றன. அங்கே வங்கியாளர்கள் மற்றும் பில்லியனர்களின் போட்டி தேசிய குழுக்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதுடன், அவர்கள் அனைவருக்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் போராட்டமும் உள்ளது.
உலகின் 20 முன்னணி பொருளாதாரங்களின் ஆட்சியாளர்கள், தொழிலாளர்களிடம் இருந்து கொள்ளையடித்ததைப் பங்கு போடுவதில் அவர்களுக்கிடையே சண்டையிடுவதற்காக ஹம்பேர்க்கில் ஒன்றுகூடி இருந்தாலும், வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவர்களது தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதில் அவர்கள் பூரணமாக ஒன்றிணைந்திருந்தனர்.
வியாழனன்று, "முதலாளித்துவத்தை நிறுத்து" போராட்டத்தில் 100,000 பேர் ஒன்றுகூடத் தொடங்கியதும், பொலிஸ் 12,000 பேர் இருந்த ஒரு மத்திய அணிவகுப்பு மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதுடன், பலரைக் கைது செய்தது மற்றும் மற்றவர்களைக் கண்ணீர் புகைகுண்டு, மிளகுப்பொடி தெளிப்பான், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் நீர்பீய்ச்சிகளைக் கொண்டு தாக்கியது.
குறைந்தபட்சம் 11 போராட்டக்காரர்கள் பலமான காயங்களுடன் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர், அதேவேளையில் தானியங்கி ஆயுதங்களுடன் SWAT குழு ரோந்து செல்ல பத்தாயிரக் கணக்கான பொலிஸ் ஹம்பேர்க்கை யுத்தக்களமாக மாற்றியது. சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரான்சில் இருந்தெல்லாம் பயணித்து வந்திருந்த போராட்டக்காரர்களை "இடது தீவிரவாதிகள்" என்று முத்திரை குத்தி, ஜேர்மன் எல்லையிலேயே அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறை வெள்ளியன்று தீவிரப்படுத்தப்பட்டது.
பொலிஸ் அதிகாரிகள், கலகக்காரர்களின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி பொலிஸ் அரசு நடவடிக்கைகளை நியாயப்படுத்தினர். ஆனால் அரசியல் அமைப்புகள் மீதான ஜேர்மன் பொலிஸ் முகமைகளின் ஊடுருவல்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டவை என்பதால், அங்கே ஏற்பட்ட எந்தவொரு கலகமும், ஒரு பாரிய படைபலத்தைக் காட்டுவதற்கான ஒரு போலிக்காரணத்தை உருவாக்கப் பணிக்கப்பட்ட பொலிஸ் தூண்டுதல்தாரிகளால் உண்டாக்கப்பட்டது என்று ஒருவரால் நியாயமாக சிந்திக்க முடியும். போராட்டக்காரர்களில் பெரும் பெரும்பான்மையினர் அமைதியாகவே இருந்தனர்.
ஜேர்மனியிலும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலுமான அதிகாரிகள் சமூக கோபத்தின் அதிகரிப்பு மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் புரட்சிகர மனோபாவத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அவர்கள் அரசியல் அமைப்புமுறைக்கு எதிரான "மிகப் பரந்த எழுச்சிகளில்" இணைய இருப்பதாக இந்தாண்டு ஐரோப்பிய-ஒன்றியம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்தனர். ஹம்பேர்க்கில் இப்போது ஒன்றுகூடும் போராட்டக்காரர்களை பீதியூட்டுவது மட்டும் ஜேர்மன் அதிகாரிகளின் நோக்கமல்ல, முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்த்து உலகெங்கிலும் விரிவடைந்து வரும் சாமானிய மக்களைப் பீதியூட்டுவதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
ஹம்பேர்க்கில் பொலிஸ் நடவடிக்கையானது, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியம், பேர்லின் மற்றும் பாரீஸின் எதிர்ப்பில் உள்ள அரசியல் மற்றும் வர்க்க உள்ளடக்கத்தை அம்பலப்படுத்துகிறது. ஐரோப்பிய தலைவர்கள் ஜனநாயகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அறிவொளி சார்ந்த தேசியவாத-எதிர்ப்பு ஆதரவாளர்களாக காட்டிக் கொள்கின்ற போதினும், சமூக சமத்துவமின்மையை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஒரு கடுமையான தாக்குதலை அவர்கள் மேற்பார்வையிடுகின்றனர். அடிமட்டத்திலிருந்து எழும் எதிர்ப்பை ஒடுக்குவதே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க சவாலை எதிர்கொள்வதற்கான அவர்களது முயற்சியின் மையத்தில் உள்ளது.
சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமை கட்சியினர் ஆட்சி செய்யும் ஒரு நகரில் தான் ஹம்பேர்க் ஒடுக்குமுறை நடந்துள்ளது என்ற உண்மையானது, இது ஆளும் உயரடுக்கின் ஒரு கன்னையின் கொள்கை அல்ல, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசியல் சேவர்கள் அனைவரது கொள்கையும் இதுவே என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
ஜி20 நாடுகள் மாநாட்டில் ஒன்றுகூடிய அரசு தலைவர்கள், உலகை பேரழிவுக்குள் கொண்டு சென்று கொண்டிருக்கும் ஒரு பலமான முதலாளித்துவ செல்வந்த தட்டின் ஆளுருவாக உள்ளனர். ரோத்ஸ்சைல்ட் வங்கியாளராக இருந்து பிரெஞ்சு ஜனாதிபதியாக மாறிய இமானுவல் மக்ரோன்; ரஷ்யா மற்றும் சீனாவில் முதலாளித்துவ மீட்சியிலிருந்து வளர்ந்த செல்வந்த தட்டின் பிரதிநிதிகளான விளாடிமீர் புட்டின் மற்றும் ஜி ஜின்பிங்; சவூதி எண்ணெய் ஷேக் ஆட்சியாளர்கள்; பல பில்லியன் டாலர் செல்வந்தரான அமெரிக்க ஜனாதிபதி என இவர்கள் அனைவருமே வோல் ஸ்ட்ரீட், இலண்டன் நகரம், பிராங்க்பேர்ட் மற்றும் பாரீஸின் பங்குச்சந்தைகளுக்கு ஆமாம் போடும் ஆசாமிகளாவர்.
அமெரிக்க வீட்டு சந்தையில் பில்லியனிய நிதிய உயரடுக்கின் குற்றகரமான ஊகவணிகம், உலக பொருளாதாரத்தையே வீழ்ச்சிக்கு உள்ளாக்கி, 1930 களின் பெருமந்த நிலைமைக்குப் பிந்தைய மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் அதை தள்ளிய போதும், 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இந்த பில்லியனிய நிதிய உயரடுக்கு தன்னைத்தானே பரந்தளவில் செல்வ செழிப்பாக்கிக் கொண்டுள்ளது. அதிகரித்து வரும் சமூக அழுத்தம் மற்றும் மக்கள் கோபத்தை அவமதித்து, அவர்கள், பொதுமக்களின் கஜானாக்களில் இருந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் யூரோக்களை எடுத்து வங்கிகள், பங்குச்சந்தைகள் மற்றும் அவர்களின் சொந்த பைகளுக்குள் பாய்ச்சினார்கள்.
இத்தகைய வங்கி பிணையெடுப்புகள் மூலமாக பொறிவைக் கையாள்வதில் அவர்களின் வெற்றியைக் கொண்டாடவும் மற்றும் அவர்கள் ஒற்றுமையாக இருப்பதாக காட்டுவதற்கும் இந்த பிரதான சக்திகள் 2009 இல் முதன்முதலில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டைத் தொடங்கின. அதன் 2009 பீட்டர்ஸ்பேர்க் உச்சிமாநாட்டு கூட்டறிக்கையில், பெரும் செல்வந்தர்களுக்கு பாரிய தொகைகள் கைமாற்றியதைப் புகழ்ந்து ஜி20 அறிவிக்கையில், “நமது பலமான விடையிறுப்பு அபாயத்தைத் தடுக்கவும், பூகோளமயப்பட்ட நடவடிக்கையின் கூர்மையான வீழ்ச்சியைத் தடுக்கவும் மற்றும் நிதியியல் சந்தைகளை ஸ்திரப்படுத்தவும் … சரியாக வேலை செய்துள்ளது,” என்று குறிப்பிட்டது.
உலகளவில் பில்லியன் கணக்கான மக்களை வறுமைக்கு உட்படுத்திய பெருநிறுவன குற்றவியல்தனம் அம்பலமானதை முகங்கொடுத்திருந்த போதும், முதலாளித்துவ அரசியல்வாதிகள் அத்தகைய பிணையெடுப்புகளுக்கு உதவியதோடு, முதலாளித்துவத்தின் வரலாற்று நிலைப்புத்தன்மைக்கு ஆதாரமாக ஜி20 ஐ ஸ்தாபித்தனர். “நிதியியல் முதலாளித்துவத்தின் நெருக்கடி முதலாளித்துவத்தின் நெருக்கடி அல்ல… முதலாளித்துவ நெருக்கடி, அதை நெறிப்படுத்த அழைப்புவிடுக்குமே அன்றி, அதன் அழிவுக்கு அழைப்புவிடுக்காது,” என்று அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அறிவித்தார், அதேவேளையில் முன்னாள் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி மிஷேல் ரொக்கார் முதலாளித்துவத்தை மிகவும் "ஜனநாயகத்திற்கு பொருத்தமான" சமூக அமைப்புமுறையாக புகழ்ந்துரைத்தார்.
கடந்த தசாப்தத்தின் போர்கள் மற்றும் நிதியியல் வெடிப்புகள் முதலாளித்துவ பாதுகாவர்களின் பொய்களை மறுக்கின்றன. இந்த பிணையெடுப்புகள் தொழில்துறை பொறிவைத் தடுத்துவிடவில்லை அல்லது எதிர்கால நிதியியல் நெருக்கடிகளைத் தடுத்துவிடப் போவதும் இல்லை. அதற்கு பதிலாக அவை சமூக சமத்துவமின்மையின் மலைப்பூட்டும் மட்டங்கள் மீது தங்களின் தனிச்சலுகைகளை அமைத்துக் கொண்டுள்ள ஒரு சர்வதேச நிதியியல் தன்னலக்குழுவை ஒருங்கிணைத்து பலப்படுத்தி உள்ளது. 2017 இல், உலகின் எட்டு மிகப்பெரிய பணக்கார பில்லியனர்களின் செல்வவளம் உலகின் மொத்த மக்கள்தொகையில் பாதி பேரின் செல்வவளத்திற்கும் அதிகமாக உள்ளது.
இதே காலகட்டத்தில், உலகின் செல்வவளத்தை பங்குபோடுவதன் மீது ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான பிளவு, முற்றும் முழுமையான உலகளாவிய மோதல் புள்ளிக்குத் தீவிரமடைந்துள்ளது. அரசியல் மற்றும் புவிசார்-மூலோபாய மோதல்கள் பகிரங்கமாக பிரதான சக்திகளை —அவை எதிரிகளாக இருந்தாலும் அல்லது "கூட்டாளிகளாக" இருந்தாலும்— ஒன்றுக்கு எதிராக ஒன்றை நிறுத்துகின்ற நிலையில், ஹம்பேர்க் உச்சிமாநாடு ஓர் இறுதி கூட்டறிக்கை மீது உடன்பாடு எட்டப்படாமல் முடிவுறும் விளிம்பில் உள்ளது. இப்போதைய இந்த நெருக்கடி இதுபோன்ற ஒன்றுகூடலின் கடைசி ஒன்றாக கூட இருக்கலாம்.
இம்மாநாட்டிற்கு முன்னதாக, ஐரோப்பிய மற்றும் ஆசிய அதிகாரிகளின் எதிர்ப்புக்கு முன்னால், வாஷிங்டன், பாரீஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையை நிராகரித்து அதிலிருந்து வெளியேறியது, அதேவேளை ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஐரோப்பாவில் நேருக்குநேர் சண்டையிடும் வகையில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டனர். அதிகரித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய-சீன பொருளாதார உறவுகளை திட்டவட்டமாக்க ஜி பேர்லினில் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த போதே, ட்ரம்ப் போலாந்தின் தீவிர வலது, ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு ஆட்சியை ஆதரித்து வார்சோவில் ஓர் உரை நிகழ்த்தினார்.
வெள்ளியன்று ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினும் ஒரு தீர்மானத்தை எட்டாத சந்திப்பை நடத்தியதுடன், நேட்டோவும் ரஷ்ய படைகளும் பல சந்தர்ப்பங்களில் மோதலுக்கு அருகாமையில் வந்திருந்த தென் சிரியாவில் மற்றொரு ஸ்திரமற்ற போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். ஆனால் ரஷ்யா மற்றும் சீனாவின் எல்லையில் அமைந்துள்ள அணுஆயுத வட கொரியாவுடன் அமெரிக்க இராணுவ விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாடு மீது அவர்கள் எந்த உடன்பாடும் எட்டவில்லை. அவர்கள் இருவரது சந்திப்புக்குப் பின்னர், விரைவிலேயே அமெரிக்க பத்திரிகை கருத்துரைகள், அமெரிக்க தேர்தல்களில் ரஷ்ய ஊடுருவல் குறித்த கலகமூட்டும் குற்றச்சாட்டுக்களில் ஒருமுகப்பட்டிருந்தன.
ஜி20 சக்திகளுக்கு இடையிலான வெடிப்பார்ந்த மோதல்கள், நடைமுறையளவில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் நிலவுகின்றன. சீனா மற்றும் பூட்டான் அரசாட்சி இரண்டும் உரிமைகோரும் இமாலய எல்லைப்பகுதியில் இந்திய மற்றும் சீனத் துருப்புகளுக்கு இடையே நடந்து வரும் இப்போதைய சச்சரவும் இதில் உள்ளடங்கும். ஆனால் உலக நிதியியல் அமைப்புமுறையின் இதயதானத்தில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் வர்த்தக போர் அச்சுறுத்தல்களே அனேகமாக மிகவும் நிலைகுலைக்கும் மோதல்களாக இருக்கின்றன.
அமெரிக்காவிற்கான ஐரோப்பிய ஒன்றிய எஃகு ஏற்றுமதிகள் மீது வரிவிதிக்க அதை ட்ரம்ப் அச்சுறுத்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக தாங்கள் அமெரிக்க பண்டங்களின் ஒரு பட்டியலை தயாரித்து வருவதாக சுட்டிக்காட்டினர். ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர், “ஆயுதங்கள் அவசியப்பட்டால் அதையும் எடுக்க நாங்கள் தயார்,” என்று கருத்துரைத்தார்.
ஹம்பேர்க் போராட்டங்கள் போன்ற கடுமையான அனுபவங்கள், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை உலக சோசலிச புரட்சி பாதைக்கு இழுத்து வருகிறது. நிதியியல் தன்னலக் குழுவை சீர்திருத்த முடியாது. முதலாளித்துவ வர்க்கம் ஏமாற்றி பறித்த அசாதாரண செல்வத்தை பறிமுதல் செய்து, மிகப்பெரும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மீது கட்டுப்பாட்டை எடுத்து, அவற்றை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில், முதலாளித்துவ வர்க்கம் மீதான ஒரு நேரடி தாக்குதலுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் ஒரு நிஜமான புரட்சிகர கொள்கை ஒன்று மட்டுமே ஒரே முன்செல்லக்கூடிய பாதையாகும்.