Print Version|Feedback
The “liberation” of Mosul: Washington’s latest war crime in the Middle East
மொசூல் "விடுதலை": மத்திய கிழக்கில் வாஷிங்டனின் சமீபத்திய போர் குற்றம்
Bill Van Auken
12 July 2017
மொசூல் "விடுதலையை, "எல்லா நாகரீக மக்களுக்கும் எதிரிகளாக உள்ள பயங்கரவாதிகள் மீதான வெற்றியாக" கொண்டாடி, ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் திங்களன்று ஓர் அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய அந்த நகரத்தின் மற்றும் ஒட்டுமொத்தமாக அந்நாட்டின் கதியானது, மனிதயினத்தின் எதிரிகள் என்று கருதுகையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிட்டால் ISIS மிகச் சிறிய பங்களிப்பாளராகவே இருக்கமுடியும் என்பதை நிரூபிக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் அண்ணளவாக இரண்டு மில்லியன் மக்களைக் கொண்டிருந்த அந்நகரம், அண்மைய ஒன்பது மாதங்களாக மரணகதியிலான முற்றுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மொசூலின் சீரழிந்த காட்சிகளை, இரண்டாம் உலக போரில் ஐரோப்பிய நகரங்களுக்கு நேர்ந்த அதே மாதிரியான சீரழிவுடன் மட்டுமே ஒப்பிட முடியும். ஒரேயொரு வீடோ அல்லது வர்த்தக கட்டிடமோ கூட முழுமையாக விட்டுவைக்கப்படாமல், அமெரிக்க ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் மேற்கு மொசூலின் இந்த பண்டைய சிற்றூர், இந்த பண்டைய நகரத்தின் இதயதானம், பெரிதும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த குற்றங்கள், ஹிட்லரால் செய்யப்பட்ட அளவிற்கு உள்ளன. சுமார் ஒரு மில்லியன் ஜனங்கள் அவர்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். இந்நகரில் சிக்கியவர்கள் அமெரிக்க போர் விமானங்களில் இருந்தும், தாக்கும் ஹெலிகாப்டர்கள் மற்றும் கனரக பீரங்களில் இருந்தும் தொடர்ச்சியாக வீசப்படும் குண்டுவீச்சுக்கு ஆளானார்கள். இந்த முற்றுகையின் ஆரம்பத்தில், அடிப்படை உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டு சகல வினியோக பாதைகளும் மூடப்பட்டதால், நூறாயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளால் மின்சாரம், சுத்தமான குடிநீர், போதிய உணவு மற்றும் மருத்துவ கவனிப்பைப் பெற முடியாமல் போனது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாமல் போகலாம். அடையாளம்தெரியாத அழுகிய சடலங்களின் நாற்றங்களுக்கு இடையே அமெரிக்க-ஆதரவிலான ஈராக்கிய படைகள் இடிபாடுகளின் மேல் கூத்தாடி கொண்டிருந்தனர் என்ற கொடூர உண்மை, அவர்களது வெற்றி கொண்டாட்டங்களைக் குறிப்பிடும் செய்திகளில் மறைக்கப்படுகின்றன.
அமெரிக்க தலைமையிலான "கூட்டணி" பெப்ரவரி மற்றும் ஜூன் 2017 க்கு இடையே தொடங்கிய தாக்குதல்களின் விளைவாக 5,805 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஏர்வார்ஸ் கண்காணிப்பு குழு ஆவணப்படுத்தி உள்ளது. அந்த முற்றுகையின் முதல் நான்கு மாதங்களில் காயமடைந்தவர்களையும் அத்துடன் கடந்த மூன்று வாரங்கள் நடந்த பயங்கர குண்டுவீச்சுக்களில் காயமடைந்தவர்களையும் உள்ளடக்காத இந்த புள்ளிவிபரம், மிகப்பெரிய குறைமதிப்பீடாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பத்தாயிரக் கணக்கானவர்களுக்கு அதிகமானவர்கள் காயமடைந்திருக்கலாம்.
சுற்றிவளைக்கப்பட்ட அந்நகரில் இருந்து தப்பித்த சிறுவர்களும் ஆண்களும் ISIS நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கையாளப்பட்டனர், பலர் கடும் விசாரணைக்கும், கொடூரமான சித்திரவதை மற்றும் நீதிவிசாரணையற்ற படுகொலைக்கும் உட்படுத்தப்பட்டனர், இவை அனைத்தும் அமெரிக்க சிறப்புப்படை "ஆலோசகர்களின்" கண்களுக்கு முன்னாலேயே நடந்துள்ளது.
“என்ன விலை கொடுத்தாவது: மேற்கு மொசூலில் அப்பாவி மக்களின் பாரிய படுகொலை,” என்று தலைப்பிட்டு சர்வஜன பொதுமன்னிப்பு சபை (Amnesty International) செவ்வாயன்று ஓர் அறிக்கை வெளியிட்டது, "மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் பயன்படுத்தக்கூடாத ஆயுதகளைக் கொண்டு கொடூரமான குண்டுவீச்சு தாக்குதலுக்கு" அப்பாவி மக்கள் உள்ளாக்கப்பட்டதை அது நினைவூட்டியது.
அமெரிக்க அரசாங்கத்தை ஏறத்தாழ கவனமாக கையாளும் அதன் பாணியில், சர்வஜன பொதுமன்னிப்பு சபை அறிக்கை குறிப்பிட்டது, “அமெரிக்க தலைமையிலான கூட்டணி படைகள் சர்வதேச சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறியுள்ளதாக தெரிகிறது, அவற்றில் சில போர் குற்றங்களுக்கு நிகரானதாகும்.” “போர் குற்றங்களுக்கு பொறுப்பாக சரியான காரணங்களுடன் சந்தேகிக்கப்படுபவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்காக", “சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறிப்பட்டிருப்பதைக் காட்டும் நம்பகமான தகவல் மீது சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள்" நடத்த அந்த அமைப்பு அழைப்புவிடுத்தது.
சர்வஜன பொதுமன்னிப்பு சபை அமெரிக்க இராணுவத்தைக் காட்டிலும் ISIS ஐ அதிகமாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், முதலில் ISIS உருவாவதற்கு யார் பொறுப்பு என்பதன் மீதோ, மொசூல் மீது நடத்தப்பட்ட இந்த மனித பேரழிவின் வரலாற்று வேர்களைக் குறித்தோ அது குறைந்தளவிலும் கூட எந்த கேள்விகளும் எழுப்புவதில்லை.
ஏறத்தாழ ஈராக் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியான மொசூலை சுற்றி வளைத்து, அமெரிக்கா பயிற்சியளித்த ஈராக்கிய பாதுகாப்பு படைகளின் அழுகிய அடித்தளங்களை அம்பலப்படுத்தி, ISIS மூன்றாண்டுகளுக்கு முன்னர் அந்நாடு எங்கிலும் வேகமாக பரவிய போது, சிஐஏ மற்றும் வாஷிங்டனின் பிராந்திய கூட்டாளிகளால் முதலில் லிபியாவிலும் பின்னர் சிரியாவிலும் முடுக்கிவிடப்பட்ட ஆட்சி மாற்ற போர்களில் ஒரு பினாமி படையாக பயன்படுத்துவதற்காக அது நன்கு பயிற்றுவிக்கப்பட்டு, நிதியுதவிகள் வழங்கப்பட்டு, நவீன ஆயுதங்களை பெற்றிருந்தது.
எவ்வாறிருப்பினும் ஈராக்கில் அல் கொய்தா தொடர்பு கொண்ட சுன்னி போராளிகள் குழுக்களது வளர்ச்சியின் வேர்கள், எண்ணெய் வளம் மிக்க அந்நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த கால் நூற்றாண்டு போர், தடையாணைகள், படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பில் தங்கியுள்ளன, இது இறுதியில் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் சீரழிவு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை, மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் வீடற்ற அகதிகளாக மாற்றப்பட்டதில் போய் முடிந்துள்ளது.
பிரித்தாளும் மூலோபாயத்தை பின்பற்றுவதற்காக அமெரிக்க ஆக்கிரமிப்பு, ஒன்றோடொன்று பரந்தரீதியில் கலந்திருந்த இன மற்றும் மத குழுக்களைக் கொண்டிருந்த ஈராக்கில், குறிப்பாக இரத்தந்தோய்ந்த விளைவுகளோடு மொசூலில், வகுப்புவாத பிரிவுகளை உருவாக்கியது. அதற்கடுத்து பாக்தாத்தில் நிறுவப்பட்ட ஷியா-மேலாதிக்க அரசாங்கம் சுன்னி பெரும்பான்மையினரை கொண்ட மொசூல் மற்றும் அன்பார் மாகாணங்களை பாரபட்டமாக கையாண்டமை, இது ISIS க்கு வளர்ச்சியடைவதற்கான அடித்தளத்தை வழங்கியது.
2003 இல் பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள் குறித்த பொய்களின் அடிப்படையில் அமெரிக்கா தொடங்கிய தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு போரே, மொசூல், ஈராக் மற்றும் பரந்த மத்தியக் கிழக்கு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பேரழிவுகளுக்கு மேலோங்கிய மூலக்காரணமாகும். அந்நேரத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்கியவர்கள், “சதாம் ஹூசைன் அவர் சொந்த மக்களைக் கொல்வதாக" குற்றஞ்சாட்டி போரை ஆதரித்தனர். ஆனால் கடந்த 14 ஆண்டுகளின் போக்கில் அந்நாட்டின் மீது வாஷிங்டன் நடத்தியுள்ள கொலைகள் மற்றும் சீரழிவுகளின் அளவைக் குறித்து மறைந்த அந்த ஈராக்கிய ஆட்சியாளரே கூட திகைத்து போவார்.
நூரெம்பேர்க் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மீது பயன்படுத்தப்பட்ட சட்ட கோட்பாடுகள் மற்றும் வகைமுறைகள் இன்றும் பயன்படுத்தப்பட்டால், வாஷிங்டனில் பலர் தூக்கு தண்டனை இல்லையென்றாலும், ஆயுள் தண்டனையாவது முகங்கொடுப்பார்கள். வழக்கிற்கு உள்ளாக்கப்பட்ட மூன்றாம் குடியரசின் உயிர்பிழைத்திருக்கும் தலைவர்கள் மீதுள்ள பிரதான குற்றச்சாட்டான தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு போரைத் தொடங்கினார் என்ற அதே குற்றச்சாட்டிற்கு, ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், டிக் சீனெ, டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் ஏனையவர்களும் உள்ளடங்குவார்கள்.
இத்துடன் சேர்ந்து, அங்கே பராக் ஒபாமா மற்றும் அவர் நிர்வாகத்தின் முன்னணி பிரமுகர்கள் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரமும் உள்ளது. அமெரிக்க போர்களை அவர் முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் தவறான நம்பிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, அவற்றை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு இடங்களிலும் தொடர்ந்ததுடன், லிபியா மற்றும் சிரியாவிற்குள்ளும் அமெரிக்க தலையீடுகளை விரிவாக்கிறார். அவர் நிர்வாகத்தின் கீழ் தான் மொசூல் முற்றுகை தொடங்கப்பட்டது.
இறுதியில் ட்ரம்ப் நிர்வாகத்திற்குள், ஜனாதிபதியில் இருந்து தொடங்கி ஈராக் மற்றும் சிரியாவில் "நிர்மூலமாக்கும்" கொள்கையைப் பிரகடனப்படுத்திய அவர் பாதுகாப்புத்துறை செயலர் "போர் வெறியர்" ஜெனரல் ஜேம்ஸ் மாட்டீஸ் வரையில், மற்றும் அந்த பாரிய படுகொலை கொள்கையை நடைமுறைப்படுத்தி உள்ள தளபதிகள் மற்றும் சிஐஏ தலைவர்கள் வரையில், குற்றவாளிகளாக உள்ளனர்.
இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும், போர் பிரச்சாரத்தின் வெட்கம் கெட்ட கருவியாக மாறியுள்ள ஊடகம், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை இராணுவவாதம் மற்றும் போர் வழிவகைகளைக் கொண்டு ஈடுசெய்ய கோரி வருகின்றன, மொசூல் போர் குற்றங்களுக்கும் மற்றும் கடந்த ஒன்றரை தசாப்தமாக ஈராக் எங்கிலும் மற்றும் அப்பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கும் ஏனைய ஒவ்வொரு பிரதான அமெரிக்க அமைப்புமே பொறுப்பாகின்றன.
இத்துடன் அமெரிக்க கல்வியாளர்களும் உடந்தையாய் உள்ளனர், இவர்கள் அமெரிக்க கொள்கையில் மேலோங்கிய குற்றங்கள் மற்றும் பொய்கள் குறித்து காலமறிந்து மவுனமாகி உள்ளனர், பல்வேறு போலி-இடது அமைப்புகளைக் குறித்தோ கூற வேண்டியதே இல்லை, இவை "மனித உரிமைகள்" என்ற மதிப்பிழந்த பதாகையின் கீழ் ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதில் தங்களைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளன.
“போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களென உரிய காரணத்துடன் சந்தேகத்திற்குரியவர்களை வழக்கில் இழுப்பதற்கான" சர்வஜன பொதுமன்னிப்பு சபையின் முன்மொழிவின்படி நடவடிக்கை எடுத்தால், உண்மையில் வாஷிங்டனில் பிரதிவாதிகளது கூண்டு நிரம்பி வழியும். ஆனால் இந்த குற்றங்களுக்காக யாரும் கணக்கில் கொண்டு வரப்படமாட்டார்கள்.
ஈராக், மத்திய கிழக்கின் ஏனைய பகுதிகள் மற்றும் ஒட்டுமொத்த உலகின் உழைக்கும் மக்களது போராட்டத்தின் ஐக்கியத்துடன், வாஷிங்டனின் போர் குற்றங்களுக்கு கணக்கு தீர்க்கும் வேலையானது, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வேலையாகும். மத்திய கிழக்கிலும் மற்றும் உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் இராணுவவாதம் மற்றொரு உலக போராக ஒன்றுதிரள அச்சுறுத்துகின்ற நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் அடிப்படையில் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஒரு புதிய பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான போராட்டம் முன்பினும் அதிக அவசரமானதாக மாறியுள்ளது.