Print Version|Feedback
Trump and Modi trumpet Indo-US “strategic convergence”
இந்திய அமெரிக்க “மூலோபாய சங்கமம்” பற்றி ட்ரம்ப் மற்றும் மோடியின் எக்காள முழக்கம்
By Deepal Jayasekera
28 June 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியும், திங்களன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அவர்களது முதல் இருதரப்பு சந்திப்பின்போது இந்திய அமெரிக்க “உலகளாவிய மூலோபாய கூட்டணியை” பலப்படுத்துவதற்கு உறுதியளித்தனர்.
அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான “மூலோபாய சங்கமம்” குறித்து வலியுறுத்துகையில், ஒரு மோசமான வகுப்புவாதியும், பெருவணிகத்திற்கு விசுவாசமாக சேவகம் செய்பவருமான மோடியும் மற்றும் பெரும் கோடீஸ்வரரான ட்ரம்ப்பும் ஒருவரையொருவர் பாராட்டினர்.
மோடியின் மூன்று வருட கால பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா ஒரு முன்னணி நாடாக அதிகரித்தளவில் செயலாற்றிவருகிறது. வாஷிங்டனுடனும், மற்றும் அதன் முக்கிய ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனும், இந்தியா தனது இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ மூலோபாய உறவுகளை வியத்தகு விரிவாக்கம் செய்துள்ளது, மேலும் அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு அதன் இராணுவத் தளங்களை தொடர்ச்சியான மறுவிநியோகம் மற்றும் பழுதுபார்க்கும் சேவைக்கு திறந்து வைத்துள்ளது.
வட கொரியா மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினை மீதான வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டிற்கும், இந்தியாவிற்கு பலவேறு மூலோபாய “உதவிகளை” ட்ரம்ப் விரிவுபடுத்துவதற்குமான மோடியின் ஒப்புதலுடன், இந்திய அமெரிக்க கூட்டணியை “விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும்” ட்ரம்ப்பும், மோடியும் சபதம் எடுத்துக்கொண்டதாக ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் விடுத்த ஒரு அறிக்கையில் அவர்களது பேச்சுவார்த்தைகளின் சுருக்கத்தை வெளியிட்டனர்.
“இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு ஒருபோதும் வலுவாக இருந்ததில்லை, ஒருபோதும் சிறப்பாகவும் இருந்ததில்லை,” என்று பத்திரிகையாளர் மாநாட்டில் ட்ரம்ப் கூறினார். “அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு பங்காண்மையை,” “நம்பமுடியாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக” குணாம்சப்படுத்தி, அமெரிக்க ஜனாதிபதி பின்வருமாறு சேர்த்துக் கூறினார்: “எங்கள் இராணுவப் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் எங்களது இராணுவத்தினர் வேலை செய்கின்றனர். அடுத்த மாதம், பரந்த இந்திய பெருங்கடலில் இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகப்பெரிய கடல்சார் பயிற்சியில் பங்கேற்பதற்கு ஜப்பானிய கடற்படையினருடன் அவர்களும் இணைந்து கொள்வார்கள்.”
ஆண்டுதோறும் இந்தியா நடத்தும் கடற்படை போர்ப் பயிற்சியான மலபார் பயிற்சி பற்றிய ஒரு குறிப்பாக பிந்தையது உள்ளது. 2015 இல் அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான ஒரு மூன்றாவது நிரந்தர பங்கேற்பாளராக ஜப்பானையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு இது ஒரு முத்தரப்பு விவகாரமாக மாற்றப்பட்டது.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதியில் பெரும்பகுதியையும், சீனப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பெரும்பகுதி எண்ணெய் மற்றும் இதர வளங்களையும் கொண்டுள்ள நீர்நிலையான இந்திய பெருங்கடலில் தனது மேலாதிக்கத்தை அதிகரிக்க இந்தியாவை பயன்படுத்துவதே அமெரிக்காவின் ஒரு முக்கிய மூலோபாய நோக்கமாகவுள்ளது.
மோடி அவரது பங்கிற்கு, “நமது மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காக” இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவும், “நமது மூலோபாய பங்காண்மையை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்ல வகைசெய்யும் ஒரு இருதரப்பு கட்டமைப்பை” வளர்த்துக் கொள்ளவும் இந்தியா கடமைப்பட்டுள்ளதாக கூறினார். பென்டகன் அதன் மிக நெருங்கிய கூட்டாளி நாடுகளை மட்டுமே கொள்முதல் செய்ய அனுமதிப்பதான மேம்பட்ட அமெரிக்க ஆயுத அமைப்புவகைகளை இந்தியா அணுகுவதற்கு அனுமதிக்கும் வகையிலும், மற்றும் போர்த்தளவாடங்களின் இணை அபிவிருத்திக்கும், இணை தயாரிப்புக்கும் புது தில்லியும், வாஷிங்டனும் இணைந்து பணியாற்றும் இந்திய அமெரிக்க பாதுகாப்பு வர்த்தக மற்றும் தொழில்நுட்ப முன்னெடுப்புக்கும் (India-US Defense Trade and Technology Initiative), அமெரிக்காவின் ஒரு முக்கிய பாதுகாப்பு பங்காளராக இந்தியாவை குறிப்பிடுவதற்காக வாஷிங்டனை அவர் பெரிதும் பாராட்டினார்.
“அமெரிக்க உதவியுடன் இந்திய பாதுகாப்புத் திறன்கள் பலப்படுத்தப்படுவது குறித்து நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம்” என்று மோடி கூறினார். ஆனால், கூட்டறிக்கை மற்றும் பத்திரிகையாளர் மாநாட்டில் மோடியின் உரை இரண்டின் கருத்துக்களும், இந்திய அமெரிக்க “கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை” மேம்படுத்தும் திட்டங்களைக் குறிக்கின்றபோதிலும், அவை பற்றிய எந்தவொரு விவரங்களையும் வழங்கவில்லை.
இந்த ஆண்டுக்கு முன்னதாக, அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவரான அட்மிரல் ஹாரி ஹாரிஸ், இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் கப்பல் இயக்கங்கள் தொடர்பான புலனாய்வுகளை அமெரிக்காவும் இந்தியாவும் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார். தென் சீனக் கடல் உட்பட, இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் இரண்டிலும் கூட்டு கடற்படை ரோந்துகளை நடத்த ஒப்புக்கொள்வதற்கு புது தில்லியை வாஷிங்டன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் இராணுவத் திறன்களை அதிகரிக்கவும், மற்றும் அமெரிக்க பங்காண்மையை கூட்டணியை இந்தியாவுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கவும் நோக்கம்கொண்டு, மோடியின் வாஷிங்டன் விஜயத்தின்போது, 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான 22 அழிக்கும் கடற்படை கண்காணிப்பு ட்ரோன்களை புது தில்லிக்கு விற்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதலளித்தது.
சீனாவை எதிர்கொள்வதில் ட்ரோன்களின் சாத்தியமான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், New York Times பத்திரிகை, “நேட்டோ அல்லாத ஒரு நாட்டிற்கு முன்னர் ஒருபோதும் விற்பனை செய்யப்படாத இந்த ட்ரோன்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் எனும் இந்த நீரிணைப்பிற்கு மேலாகப் பறந்தால், சீனாவின் மிகப்பெரியளவிலான கடல் சார்ந்த பாதிப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் நெருக்குப் புள்ளி (மலாக்கா ஜலசந்தியின் மேற்கு முடிவுக்கு அருகில் உள்ளது) என்று அழைக்கப்படுவதை இந்தியா கட்டுப்படுத்துவதை வழங்கும், குறிப்பாக மதிப்புமிக்கதாக இருக்கமுடியும்” என்பதையும் கண்காணித்துள்ளது.
இந்தியாவிற்கு மேலதிக மூலோபாய “ஆதரவை” அளிப்பதாக, கூட்டறிக்கையில் பாகிஸ்தானை வலுவான மொழியில் விமர்சிப்பதை சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. “மற்ற நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அதன் எல்லைப்பகுதி பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யவும்,” 26/11 மும்பை, பதான்கோட்டைச் சார்ந்த குற்றவாளிகளுக்கும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட குழுக்களின் மூலம் நடத்தப்பட்ட ஏனைய எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களுக்கும் விரைவில் நியாயம் கிடைக்கச்செய்யவும் இரு தலைவர்களும் பாகிஸ்தானுக்கு அழைப்புவிடுத்ததாக இது தெரிவித்தது.
பாகிஸ்தானை உலக பயங்கரவாதத்தின் “தாய்க்கப்பல்” என்று முத்திரையிட்டும், பாகிஸ்தானுக்குள் இருந்து இந்திய எதிர்ப்பு காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து தளவாட உதவிகளையும் இது நிறுத்தும் வரையிலும், பாகிஸ்தானுக்குள் சட்டவிரோத எல்லை தாண்டிய திடீர்ச்சோதனைகளை நடத்துவது குறித்த இந்தியாவின் உரிமையை உறுதிப்படுத்தியும், அதற்கு எதிராக ஒரு போரை நாடும் பிரச்சாரத்தை கடந்த ஆண்டு முழுவதிலும் மோடி அதிகமாக மேற்கொண்டார். ஞாயிறன்று அமெரிக்கா சென்று சேர்ந்ததுடன், கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானுக்குள் இந்தியா நடத்திய “நுட்பமான தாக்குதல்களை” தம்பட்டம் அடிப்பதற்கான ஒரு முக்கிய செய்தியாக உருவாக்கிய மோடி, அதன் விளைவாக “இந்த உலகம் எங்களது சக்தியை அறிந்துகொண்டதுடன், இந்தியா கட்டுப்பாட்டுடன் இருக்கிறது ஆனால் தேவைப்படும் போது அதனால் அதிகாரத்தைக் காட்டமுடியும் என்பதையும் உணர்ந்துகொண்டது” என்றும் கூறுகிறார்.
ட்ரம்ப் மற்றும் மோடியின் சந்திப்பிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், நீண்ட கால இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அமெரிக்க அரசுத்துறையானது, பாகிஸ்தான் சார்புள்ள காஷ்மீர் பிரிவினைவாத குடிப்படையான, ஹிஸ்புல் முஜாஹிதீன் (Hizbul Mujahideen) இன் தலைவரான சையத் சலாஹூதீனை “உலக பயங்கரவாதி” என பெயரிட்டது.
இந்த நடவடிக்கையை வரவேற்று, பாகிஸ்தானிய ஆதரவிலான பயங்கரவாதத்தின் விளைவாக காஷ்மீரில் கடும் அமைதியின்மை ஏற்ப்பட்டுள்ளது தொடர்பான புது தில்லியின் நிலைப்பாட்டை அது “நிரூபித்தது” என்று இந்திய அதிகாரிகள் கூறினர்.
தென் சீனக் கடல், வட கொரியா மற்றும் ஆப்கானிஸ்தான்
ஜனவரி 2015 ல் ஒபாமாவுடன் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் தென் சீனக் கடல் பிரச்சினை மீதான அமெரிக்க கதையாக்கத்தில் மோடி கையெழுத்திட்ட போது பென்டகனும், அமெரிக்க அரசுத்துறையும் பரவசமடைந்தன. அதிலிருந்து, சீன கடற்கரைப் பகுதியில் அதன் இராணுவத்தை நிலைநிறுத்தும் உரிமையை உறுதிசெய்யும் விதமாக, “கடல்வழி மற்றும் வான்வழி சுதந்திரம்” “கடல்வழி சுதந்திரம்” மற்றும் “வான்வழி” என்ற பெயரில் பெய்ஜிங்கை ஒரு ஆக்கிரமிப்பாளராக சித்தரிப்பது போன்ற அமெரிக்க நிலைப்பாட்டை இந்தியா உண்மையிலேயே பின்பற்றிவிட்டது.
இந்திய அமெரிக்க தலைவர்களின் ஒரு உச்சிமாநாட்டில் இருந்து வெளிவரும் மிக சமீபத்திய அறிக்கைகளில், வட கொரியா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு புதி தில்லியின் உறுதியான ஆதரவு பற்றிய செய்தியே இருக்கிறது. சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், அச்சுறுத்துவதற்கும் கொரிய தீபகற்பத்தின் மீது ஒரு நெருக்கடியைத் தூண்டுவதற்கான வெளிப்படையான நோக்கத்துடன், பியோங்யாங் உடனான “மூலோபாய பொறுமையை” முடிவுக்கு கொண்டுவருவதாக வாஷிங்டன் அறிவித்தாலும், அதற்கு இந்தியா முழுமையான ஆதரவை அளித்துவருகிறது.
கூட்டு அறிக்கையின்படி, மோடியும், ட்ரம்ப்பும் வட கொரியாவின் “தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு” “கடுமையாக கண்டனம்” தெரிவித்தனர், மேலும் “இந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய அனைத்துத் தரப்பினரையும் கணக்கில் வைத்திருப்பது உட்பட, அதன் பேரழிவு ஆயுத திட்டங்களை” “எதிர்கொள்ள ஒன்றாக வேலை செய்யவும் உறுதிபூண்டனர்.”
பியோங்யாங் உடனான வாஷிங்டனின் அதிகரித்துவரும் பதட்டங்களை பராமரிப்பதில், இந்தியா சமீபத்தில் உணவு மற்றும் மருந்து தவிர வட கொரியா உடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது. அந்தத் தடையை விதிக்கும் வரை, சீனாவுக்கு அடுத்து வட கொரியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக இந்தியா இருந்தது.
வெள்ளை மாளிகை புல்வெளி பத்திரிகையாளர் மாநாட்டில், வட கொரியாவிற்கு எதிராக “புதிய தடைகளை விதிப்பதில் அவர்களுடன் இணைந்ததற்கு” ட்ரம்ப் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததுடன், “வட கொரிய ஆட்சி பயங்கரமான பிரச்சினைகளை விளைவிக்கின்ற நிலையில், ஏதோவொன்று தீர்க்கப்பட வேண்டியதாக இருப்பின், அது அநேகமாக விரைவாக தீர்க்கப்படவேண்டும்” என்றும் சேர்த்துக் கூறினார்.
அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் இப்போது பதினேழாம் ஆண்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்படவிருப்பதாக கூட்டு அறிக்கை மேலும் தெரிவித்தது. “இந்தியாவும் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டமைப்பதிலும், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருப்பதாக” கூறி, செய்தியாளர் மாநாட்டின்போது இந்த விடயத்தை மோடி மீண்டும் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தான் குறித்து வாஷிங்டனுடன் “நெருக்கமான ஆலோசனை மற்றும் தகவல் தொடர்புகளை பராமரிக்கவும்” அவர் உறுதியளித்தார்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற H1-B விசாக்களின் புதிய வரம்புகள் உட்பட, ட்ரம்பின் பொருளாதார தேசியவாத “அமெரிக்காவின் முதல்” கொள்கைகளின் தாக்கத்தின் மீதான தங்களது கவலைகளை மோடி எழுப்பவேண்டுமென இந்திய உயரடுக்கின் முக்கிய பிரிவுகள் விரும்பினர். ஆனால், இந்திய முதலாளித்துவம் அதன் சொந்த வல்லரசாகும் இலட்சியங்களை புரிந்துகொள்ள மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்ற இந்திய அமெரிக்க மூலோபாய கூட்டணி மேலும் வலுப்படுவதை எந்தவொரு வகையிலும் தடை செய்யாமலிருக்க வாஷிங்டனுடனான கருத்து வேறுபாடுகளை குறைப்பதற்கு இந்திய பிரதம மந்திரி சிரமப்பட்டார்.
“அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக உருவாக்குவது” என்ற ட்ரம்ப்பின் “பார்வை” ஒரு “புதிய இந்தியாவை” உருவாக்குவதற்கான அவரது திட்டங்களுடன் ஒருங்கிணைவதாகக் கூறி, “இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நமது முதன்மை பங்காளியாக” அமெரிக்காவை மோடி புகழ்ந்தார், மேலும் “என்னுடன் மிக அதிகமான நேரம் செலவழித்தமைக்கு” என்ற விதமாக மிகுந்த பணிவான மொழியில் மீண்டும் மீண்டும் மோடி ட்ரம்ப்புக்கு அவரது நன்றியை வெளிப்படுத்தினார்.
மோடியின் பெரு வணிக சார்பு கொள்கைகளுக்காக அவரை ட்ரம்ப் பாராட்டியபோதிலும், அமெரிக்க முதலீட்டிற்கும், ஏற்றுமதிக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை ஏற்றதாக வைப்பதற்கு மோடி அரசாங்கம் அதிகளவில் செயலாற்றுமென அவர் எதிர்பார்ப்பதை தெளிவுபடுத்தினார்.
திங்களன்று நடந்த உச்சி மாநாட்டிற்கு முன்னர், ட்ரம்ப் பற்றியும், மேலும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் ஒபாமா இருவரும் அளித்த அளவுக்கு அவரது நிர்வாகமும் இந்தியாவுடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்குமா என்பது பற்றியும் இந்திய பத்திரிகைகளில் பெருமளவு ஆர்வம் நிறைந்த வர்ணனைகள் இருந்தன. ஆயினும், அதன் பின்னர், இந்தியாவின் பெருநிறுவன செய்தி ஊடகத்திடமிருந்து ஒரு கூட்டு நிம்மதிப் பெருமூச்சு இருந்தது.
இதற்கிடையில், வாஷிங்டனுடன் இந்தியா அதனை சீரமைத்திருக்கும் அளவிற்கு அதிகரித்தளவில் சீனாவும் வளர்ந்துள்ளது. திங்களன்று வெளியான ஒரு கருத்தில், சமீபத்திய ஆண்டுகளில், “இந்தியா மீதான புவிசார் அரசியல் அழுத்தத்தை முடுக்கிவிடுவதற்காக,” “அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்திருக்கிறது” என்று அரசுக்கு சொந்தமான Global Times பத்திரிகை குறிப்பிட்டது.
ஒரு அப்பட்டமான பின்வரும் எச்சரிக்கையுடன் இது தொடர்கிறது: “சீனாவைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க மூலோபாயத்தில் ஒரு புறகாவல் நாடு எனும் ஒரு பாத்திரத்தை வகிப்பதாக கருதுவது இந்திய நலன்களுக்கு இணக்கமானதாக இல்லை. இது பேரழிவு தரும் விளைவுகளுக்கு கூட வழிவகுக்கும்.”