Print Version|Feedback
Indian-US-Japanese naval exercises in Indian Ocean target China
இந்திய பெருங்கடலில் நடத்தப்படும் இந்திய-அமெரிக்க-ஜப்பானிய கூட்டு கடற்படை பயிற்சிகள் சீனாவை இலக்கு வைக்கின்றன
By Wasantha Rupasinghe
18 July 2017
வங்காள விரிகுடாவில், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளினால் நேற்று முடிவடைந்த 10 நாள் மலபார் கடற்படை பயிற்சிகள், அமெரிக்க தலைமையிலான மூலோபாயக் கூட்டணி சீனாவிற்கு எதிராக இந்தியாவையும், ஜப்பானையும் எந்தளவுக்கு அதிகவில் ஈடுபடுத்தியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. வருடாந்திர போர் பயிற்சிகளில் மூன்றாவது வருடமாக ஜப்பான் தொடர்ந்து ஒரு நிரந்தர பங்குதாரராக இணைந்துள்ளது.
1992 இல் இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டு பயிற்சிகளை தொடங்கியதிலிருந்து இந்திய பெருங்கடலில் நடத்தப்படும் மாபெரும் யுத்த பயிற்சியான மலபார் 2017 இல் இந்திய கடற்படை மற்றும் ஜப்பானின் கடல்சார்ந்த சுயபாதுகாப்பு படைகளுடன், USS நிமிட்ஸ் விமானந்தாங்கி கப்பலிலிருந்து மாலுமிகளும், கடற்படையினரும் மற்றும் அதன் தாக்குதல் குழுவும் இணைந்தனர். இதில், நிமிட்ஸ் மற்றும் இந்தியாவிலிருந்து INS விக்ரமாதித்யா ஆகிய இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள், அத்துடன் 16 மற்ற போர்க்கப்பல்கள், 95 விமானங்கள் மற்றும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களுடன் ஜப்பானிலிருந்து JS Izumo என்ற மாபெரும் ஹெலிகாப்டர் தாங்கி இவை அனைத்தும் இடம்பெற்றன.
இந்த கடற்படை பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், இமையத்தின் உச்சியில், சீனா மற்றும் பூட்டான் இரு நாடுகளும் உரிமை கோரும் டோக்ளாம் அல்லது டோங்லாங் பீடபூமி பகுதியில், இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் மோதிக்கொண்டனர். அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு விடையிறுப்பாக சீனா அதன் கடற்படை பிரசன்னத்தை தீவிரப்படுத்தியுள்ள தென் சீனக் கடலிலும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
ஜூலை 6 அன்று அமெரிக்க கடற்படை வலைத்தளமும், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை, மலபார் 2017 இன் பிரதான நோக்கம், “இந்திய-ஆசிய பசிபிக்கில் கடல்வழி பாதுகாப்பு குறித்து தம்மிடையே பகிரப்பட்ட பலதரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதாகும்” என்று தெரிவித்தது.
அமெரிக்க தாக்குதல் குழு 11 இன் தளபதி ரியர் அட்மிரல் வில்லியம் டி பிரைன், நீர்மூழ்கிக் கப்பல் கண்காணிப்பில் கவனம் செலுத்தும் இந்தப் பயிற்சிகள், “தப்புகணிப்பீடுகளுக்கான சாத்தியக்கூறுகளை அகற்றக்கூடும்,” என்பதோடு “அனைத்து கடற்படையினரும் சேர்ந்து நாங்கள் திறமையுடன் இருக்கின்றோம் என்று” ஒரு தகவலையும் அனுப்பும் என்று கூறினார்.
இந்த அறிக்கைகள் “அச்சுறுத்தல்களை” குறிப்பிடவில்லை. எனினும், சீன கடற்படை அதிகரிப்பு, முக்கியமாக இந்திய பெருங்கடலில் சீனா நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகரித்துவருவது பற்றி அமெரிக்காவும், இந்தியாவும் கவலைகளை எழுப்பியுள்ள நிலைமைகளின் கீழ், இந்த பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்துவரும் இராணுவத் தலையீட்டை எதிர்கொள்வதையே இந்த பயிற்சிகள் வெளிப்படையாக நோக்கம் கொண்டுள்ளன.
ஜூலை 11 அன்று Times of India பத்திரிகைக்கு ஒரு பெயர் குறிப்பிடாத அமெரிக்க தளபதி, இந்த பயிற்சிகள் “சீனா மீது குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை கொண்டிருக்கும்” என்று கூறினார். மேலும் அவர் பின்வருமாறு சேர்த்து கூறினார்: “அவர்களுக்கு (சீனா) நாம் ஒன்றாக நிற்கின்றோம் என்று தெரியும், மேலும் ஒன்றாக நிற்பதுதான் நன்றாக இருக்கும்.”
அமெரிக்க அதிகாரிகள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பரந்த அமெரிக்க புவிசார் மூலோபாய நோக்கங்களை சுட்டிக்காட்டினர். அமெரிக்க பசிபிக் கட்டளை வலைத் தளத்தில், நிமிட்ஸ் தாக்குதல் குழுவின் செயல்பாட்டு அதிகாரியான தளபதி வெர்னான் ஸ்டான்ஃபீல்ட் பின்வருமாறு கூறினார்: “இந்த பயிற்சிகள் தொடர்ந்து அதிகரிக்கும், ஏனெனில் நாங்கள் இன்னும் அதிக கப்பல்களைக் கொண்டு வருகிறோம், மேலும் நாங்கள் மூன்று நாடுகளையும் ஒருங்கிணைக்கிறோம்.”
ஜூலை 11 அன்று Times of India பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதர் மேரி கீ கார்ல்சன், அமெரிக்கா இந்தியாவின் “வளர்ந்துவரும் பாதுகாப்பு திறன்களையும்,” மேலும் “இறையாண்மையையும், சர்வதேச சட்டத்தையும் மதிப்பதன் அடிப்படையில், பிராந்தியத்திற்கான ஒரு பொதுக் கோட்பாடுகள் குறித்த அதன் அர்ப்பணிப்பையும்,” அமெரிக்கா “வரவேற்பதாக” கூறினார்.
கார்ல்சன், வாஷிங்டனில் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியுடனான ட்ரம்பின் சமீபத்திய சந்திப்பை குறிப்பிட்டு, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பிராந்தியக் கோரிக்கைகள் குறித்து சீனாவிற்கு எதிரான ஒரு தெளிவான செய்தியாக “கடற் போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து மற்றும் வணிகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை” இது உயர்த்திக் காட்டுவதாக தெரிவித்தார்.
மோடி அரசாங்கத்தின் கீழ் சீனாவிற்கு எதிரான அமெரிக்க மூலோபாய தாக்குதலில் இந்தியாவின் வளர்ந்துவரும் ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக இந்த மலபார் பயிற்சிகள் உள்ளன. ஜூன் 26 அன்று, ட்ரம்பும், மோடியும் முதல் முறையாக வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது, இந்திய-அமெரிக்க “பூகோளமய மூலோபாய பங்காண்மையை” வலுவூட்டுவதற்கு உறுதியளித்தனர்.
ஒரு முத்தரப்பு சீன எதிர்ப்பு கூட்டணிக்கான வாஷிங்டனின் அழுத்தத்துடன் ஒத்ததாகவே, இரண்டு வருடத்திற்கு முன்னர் ஒரு நிரந்தர மலபார் பங்காளராக இணைந்த ஜப்பானுக்கு மோடி அரசாங்கத்தின் ஆதரவும் இருந்தது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அதன் சொந்த புவிசார்-அரசியல் நலன்களுக்காக டோக்கியோவுடனான உறவுகளை வளர்த்துக் கொள்ளும் இந்திய உயரடுக்கின் ஆசைக்கு இதுவும் உதவியது. ஹம்பேர்கில் கடந்த வாரம் G20 உச்சி மாநாட்டில், மோடியும் ஜப்பானிய பிரதமரான ஷின்ஜோ அபேவும் இருதரப்பு உறவுகளை “வலுப்படுத்த” நோக்கம் கொண்டு சந்தித்தனர். கடந்த டிசம்பரில், டோக்கியோவில் ஒரு வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டின் போது ஜப்பானுடன் ஒரு “வரலாற்றுரீதியான” இராணுவசார்பற்ற அணுசக்தி உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது.
கடற்படை பயிற்சிகளின் இலக்காக சீனா இருந்தது என்பதை இந்திய அதிகாரிகள் மறுக்க முயற்சித்தனர். “கப்பல்கள் தேர்வும் மற்றும் பயிற்சிக்கான இடமும், சீனக் கப்பல்களின் பிரசன்னத்துடனோ அல்லது வங்காள விரிகுடாவிலும் இந்திய பெருங்கடலிலும் இந்திய அச்சுறுத்லாக பார்க்கும் தன்மையுடனும் தொடர்புபட்டது” என்பதை கிழக்கு கடற்படை கட்டளையிலிருந்து, துணை கட்டளை தலைமை அதிகாரி அட்மிரல் எச்.சி.எஸ். பிஷ்ட் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். டோக்லாமில் சீனாவுடனான இந்திய இராணுவ நிலைப்பாட்டின் மீது மலபார் 2017 பயிற்சிகள் எந்தவித தாக்கமும் கொண்டிருக்கவில்லை என்றும் பிஷ்ட் கூறினார்.
ஜூலை 7 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மலபார் பயிற்சிகள் பற்றி கேட்கப்பட்டபோது, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷூவாங், “நாடுகளுக்கு இடையில் சாதாரண உறவுகளையும், ஒத்துழைப்பையும் அபிவிருத்தி செய்து கொள்வதில் சீனாவுக்கு எந்தவித ஆட்சேபணையையும் இல்லை” என்று தெரிவித்தார். எனினும், ஒரு மெல்லிய-மறைக்கப்பட்ட எச்சரிக்கையாக அவர் பின்வருமாறு சேர்த்துக் கூறினார்: “இத்தகைய உறவுகளும், ஒத்துழைப்பும் ஒரு மூன்றாவது நாட்டை இலக்காக கொண்டவை இல்லை எனவும், பிராந்திய சமாதானத்திற்கும், உறுதிப்பாட்டிற்கும் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் நாங்கள் நம்புகின்றோம்.”
சீன அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமின்றி மலபார் பயிற்சிகளை நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். இந்து பத்திரிகையின் ஒரு அறிக்கையின்படி, வலைத் தள பதிவீடான Pengpai பிரசுரித்த ஒரு கட்டுரை, இந்த போர் பயிற்சிகள் “சீன நீர்மூழ்கிக் கப்பல்களை இலக்கு” வைத்திருந்தனவா என்பது சிலரை சிந்திக்க வைத்துள்ளது என குறிப்பிடுகின்றது. ஒரு சீன கடற்படை நிபுணரான லி ஜீ, “விமான பாதுகாப்பு, கப்பல் எதிர்ப்பு கூறுகள் உட்பட, இந்த மலபார் பயிற்சிகள் ஒரு விரிவான பயிற்சியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது இந்த போர் பயிற்சிகள், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கை மீது அதிக கவனம் செலுத்துவதைக் காட்டத் தொடங்குகின்றன. அவர்களின் இலக்காக யாரோ இருப்பதையே இது காட்டுகின்றது” என்று தெரிவித்தார்.
மலபார் பயிற்சிகளுக்கு முன்னர், ஒரு உளவுத்துறை-சேகரிப்பு கப்பலான Haiwaingxing உட்பட இந்திய பெருங்கடலில், சீனா அதன் கடற்படை பிரசன்னத்தை “அதிகரித்தது” என்று ஜூன் 5 அன்று Hindustan Times பத்திரிகை அறிக்கை வெளியிட்டது. பயிற்சிக்கான இரண்டு மாதங்களுக்கு முன்னர், இந்திய கடற்படையும், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அழிப்புக் கப்பல்கள் உட்பட, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை கண்டது என்பதாக இந்திய அரசாங்க ஆதாரங்களை மேற்கோளிட்டு செய்தித்தாள் தெரிவித்தது.
இந்திய பெருங்கடலில் மிகப்பெரிய அளவிலான போர் பயிற்சிகளை நடத்துவதன் மூலம், சீனாவுடனான வெளிப்படையான இலக்குடன், இந்த பிராந்தியத்தில் பில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியமுள்ள பூகோள அரசியல் அழுத்தங்களை அபாயகரமான வகையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எப்படி அதிகரித்து வருகின்றன என்பதை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளன.