Print Version|Feedback
Macron invites Trump for Bastille Day parade in Paris
பாரீஸ் பாஸ்டி தின அணிவகுப்பிற்கு மக்ரோன் ட்ரம்பை அழைக்கிறார்
By Alex Lantier
14 July 2017
பாரீசின் சாம்ப்ஸ் எலிசே பெருஞ்சாலையில் இன்று நடக்கும் பாஸ்டி தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, ஒரு சந்திப்புக்கும் மற்றும் ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்திற்குமான பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அழைப்பின் பேரில் டொனால்ட் ட்ரம்ப் நேற்று பாரீஸ் வந்தடைந்தார். மக்ரோன் குழப்பத்திற்கிடமின்றி ஒரு சமிக்ஞை அனுப்பினார்: ட்ரம்புடன் அவருக்கு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், அவர் இன்னமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான உறவுகளை அவரது இராஜாங்கரீதியிலான மூலோபாயத்தின் மையத்தில் கொண்டுள்ளார்.
பிரான்சில் தொழிலாளர்களால் வெறுக்கப்படும் ட்ரம்பின் "அடையாள மற்றும் அதிமுக்கிய" பயணத்தைப் புகழ்ந்துரைத்தும், ஜேர்மனிக்கு எதிராக முதலாம் உலக போருக்குள் அமெரிக்கா நுழைந்த நூற்றாண்டை வாழ்த்தியும், மக்ரோன் கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் அறிவித்தார், "நமது தேசிய விடுமுறை மட்டுமல்ல, மாறாக பிரான்சுடன் சேர்ந்து அமெரிக்க துருப்புகள் தலையீடு செய்த நூற்றாண்டையும்" ட்ரம்பின் விஜயம் "கொண்டாட்டத்திற்குரியதாக ஆக்கும்… டொனால்ட் ட்ரம்பின் பிரசன்னம் இயல்பானது மட்டுமல்ல, மாறாக நம் இரு நாடுகளின் வரலாற்றுக்கும் நல்ல விடயமும் கூட,” என்றார்.
சந்தைக் குவிப்புக்கு எதிரான பாதுகாப்புவாத நடவடிக்கைகளை மீளப்பலப்படுத்துவதன் மூலமாக சுதந்திர சந்தையை மட்டுப்படுத்துவது, சமூக ஊடகங்களில் "பயங்கரவாத" கருத்துக்கள் என்று கூறப்படுவதைத் திருத்துவதன் மூலமாக இணையத்தை தணிக்கைக்கு உட்படுத்துவது, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய போர்களை நடத்துவது என ட்ரம்பின் நிலைப்பாடுகள் மீது அவர் பகிர்ந்து கொள்ளும் விடயங்களைப் பின்னர் அவர் பட்டியலிட்டார்.
ஈராக்கிய நகரமான மொசூலை முற்றுகையிட்டிருந்த போது அமெரிக்க, பிரெஞ்சு மற்றும் கூட்டுப்படைகள் அங்கே குண்டுவீசியதில் 10,000 பேர் கொல்லப்பட்டு, 700,000 மக்கள் இடம்பெயர்த்தப்பட்டனர் என்ற நிலையிலும், ஈராக்கில் அமெரிக்கா வகித்த பாத்திரத்தை மக்ரோன் பாராட்டினார். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர், வாஷிங்டன் அந்நாட்டின் மீது ஒரு சட்டவிரோத படையெடுப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடங்கியது, மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட அதை அப்போதைய பிரான்சின் வலதுசாரி ஜனாதிபதி ஜாக் சிராக் எதிர்த்தார். மறுபுறம், மக்ரோனோ "சமீபத்திய ஆண்டுகளில்" அமெரிக்க துருப்புகள் ஈராக்கில் என்ன செய்துள்ளனவோ அதற்காக அவர் ட்ரம்புக்கு "நன்றி" தெரிவிக்கிறார்.
ட்ரம்பின் அறிக்கையும், மக்ரோனின் ஜனாதிபதி பதவியினது பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அடிக்கோடிட்டு காட்டியது. தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நிலைமைகளை வெட்டுவதற்கு உத்தரவாணைகள் மூலமாக தொழில் விதிமுறைகளில் மறுதிருத்தம் செய்யும் மக்ரோனின் சர்வாதிகார கொள்கையை, “அதிகாரத்துவத்திற்கு" எதிரான போராட்டமென குறிப்பிட்டு, அதை வரவேற்ற ட்ரம்ப், மாலியில் இப்போது ஆக்கிரமித்துள்ள பிரெஞ்சு துருப்புகளின் பலத்தையும் பாராட்டினார்.
ட்ரம்புக்கு அழைப்புவிடுத்திருப்பதானது, மக்ரோனின் வெளியுறவு கொள்கையில் ஒரு மாற்றத்தைக் குறிப்பதுடன், இது நேட்டோ கூட்டணியில் உள்ள பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான உறவுகளில் ஆழ்ந்த ஸ்திரமின்மையை எடுத்துக்காட்டுகிறது. 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்புக்கு பிந்தைய ஒரு கால் நூற்றாண்டு ஏகாதிபத்திய போர்கள் மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், சோவியத் ஒன்றியத்திற்கு ஒரு பொது எதிர்ப்பாக ஸ்தாபிக்கப்பட்ட நேட்டோ ஆழ்ந்த எதிர்விரோதங்களால் கிழிந்து வருகிறது, இது எல்லா விதத்திலும் பகிரங்க மோதலாக, அல்லது போராக கூட வெடிக்க அச்சுறுத்துகிறது.
வசந்தகாலத்தில் அவரது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்ரோன் ஜேர்மனிக்கு நெருக்கமாக நகர்ந்ததன் மூலமாக பிரிட்டன் வெளியேற்றத்திற்கும் மற்றும் ட்ரம்ப் தேர்வானதற்கும் எதிர்வினையாற்றினார். அவர் தேர்வாகி ஒரு வாரத்தில், ஜனாதிபதியாக பிரான்சுக்கு வெளியே அவரது முதல் பயணமாக, சான்சிலர் அங்கேலா மேர்க்கலைச் சந்தித்து, பாரம்பரிய பிரான்கோ-ஜேர்மன் அச்சை ஐரோப்பிய ஒன்றியத்தின் "செயல் இயந்திரமாக" (motor) மீட்டுயிர்பிக்க முயற்சிக்க பேர்லினுக்கு பயணம் மேற்கொண்டார். ஜேர்மனியைக் குற்றஞ்சாட்டி, அமெரிக்காவிற்கான அதன் ஏற்றுமதிகளை முடக்குவதன் மூலமாக அதை வர்த்தக போர் கொண்டும் கூட அச்சுறுத்திய ட்ரம்ப் உடனான மேர்க்கெலின் மோதலில், அப்போது மக்ரோன் அப்பெண்மணியுடன் அணிசேர்வதாக தெரிந்தது.
ஆனால் ஜூலை 7-8 இல் ஹம்பேர்க் ஜி20 நாடுகள் உச்சிமாநாட்டுக்கு வெறும் ஒருசில நாட்களுக்குப் பின்னர், ஜேர்மனிக்கு எதிரான ஒரு போர் நூற்றாண்டை மக்ரோனுடன் கொண்டாடுவதற்காக ட்ரம்ப் மீண்டும் இவ்வாரம் ஐரோப்பா வந்துள்ளார். நேற்று, ட்ரம்ப் மற்றும் மக்ரோன் இருவருமே ஜேர்மனி குறித்து அசாதாரணமான மவுனத்தைக் கடைபிடித்தனர். அன்றைய காலை மக்ரோன் அப்போதுதான் பாரீஸில் நடந்திருந்த பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் கவுன்சில் அமைச்சர்களின் ஒரு கூட்டு கூட்டத்திலிருந்து வந்திருந்தார் என்பதிலும், அதன் பின்னர் மேர்க்கெலும் மக்ரோனும் பல பிரதான நடவடிக்கைகளை அறிவிக்க மற்றொரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இருந்தார்கள் என்பதிலும் ஒன்றுமே தெரியாதது போல மவுனமாக இருந்தனர்.
1945 இல் நாஜிக்களின் தோல்விக்குப் பின்னர் ஜேர்மனி அது ஏற்றிருந்த இராணுவ கட்டுப்பாட்டு கொள்கையை கைவிட்டு, ஓர் மீள்இராணுவமயப்பட்ட ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தியாக எழுச்சி பெற முயல்கின்ற நிலையில், பாரீஸூம் பேர்லினும் பல்வேறு இராணுவ உடன்படிக்கைகளை கையெழுத்திட்டு வருகின்றன. அனேகமாக மிக முக்கியமாக, அவை போர் விமானங்களை உருவாக்கி, உற்பத்தி செய்வதில் ஒத்துழைக்கவும் உடன்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் யூரோ மண்டலத்திற்கான ஒரு வரவு-செலவு திட்டத்தையும் மற்றும் ஐரோப்பிய நிதி அமைச்சர் பதவியையும் உருவாக்க தான் பரிசீலிப்பார் என்றும் மேர்க்கெல் அறிவித்தார்.
இந்த பொறுப்பேற்காத அறிக்கை, பாரீசில் இருந்து வந்த அழுத்தத்திற்கு ஒரு எதிர்வினையாக இருந்தது. ஜேர்மனியின் Funke பத்திரிகை கூட்டமைப்பின் நாளிதழ்கள் மற்றும் Ouest France ஆகியவற்றுடன் மக்ரோன் பேசுகையில், 2009 இல், அண்மித்து ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வெடித்த கிரேக்க கடன் நெருக்கடிக்குப் பின்னர் யூரோ மண்டலம் எங்கிலும் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து வரும் பேர்லின் கட்டளையை அவர் கூர்மையாக தாக்கி இருந்தார்.
அவர் கூறினார், யூரோ மண்டலம் "சிறப்பாக செயல்படவில்லை ஏனென்றால் அது வேற்றுமைகளை ஊட்டமிட்டு வளர்த்துள்ளது. கடன்பட்டவர்கள் இன்னும் அதிகமாக கடன்பட்டனர். போட்டியில் ஈடுபட்டவர்கள் இன்னும் அதிகமாக போட்டியில் சிக்கிக் கொண்டனர்,” என்றார். “யூரோ மண்டலத்தின் செயல்பிறழ்ச்சிகளில் இருந்து ஜேர்மனி ஆதாயமடைந்து வருகிறது. இதுவொரு ஆரோக்கியமான நிலைமை அல்ல, ஏனென்றால் இது நீடிக்காது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
வரிப் பணத்தை யூரோ மண்டல நாடுகளுக்கு இடையே பங்கிட்டு கொள்ளும் ஒரு யூரோ மண்டல அரசாங்கத்திற்கு மக்ரோன் அழைப்புவிடுத்தார், இக்கொள்கையை பேர்லின் நீண்டகாலமாக எதிர்த்து வருகிறது: “பிரான்சில், பாரீஸ் பகுதி, அதன் புறநகர் மாவட்டங்களுக்கு மானியங்கள் வழங்காவிட்டால், தேசிய ஒற்றுமை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காது. அதற்காக எங்களுக்கு ஒரு வரவு-செலவு திட்டமும், இந்த வரவு-செலவு திட்டக்கணக்கை எவ்வாறு செலவிடுவது என்பதை முடிவெடுக்கும் ஒரு அரசாங்கமும், மற்றும் கட்டுப்படுத்தும் ஜனநாயக வடிவங்களும் அவசியப்படுகின்றன, இப்போது இவை இல்லை,” என்றார்.
ஐரோப்பாவிற்குள் நிலவும் இந்த ஆழ்ந்த பதட்டங்கள், ட்ரம்புக்கான மக்ரோன் அழைப்பிற்கு அடியில் உள்ளன. ஐரோப்பிய முதலாளித்துவம் அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளைக் கடந்து வர இலாயகற்று உள்ளது, இந்த முரண்பாடுகள்தான் 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை உலக போர்களாக வெடித்தன. சிக்கன நடவடிக்கைகள், தொழில்துறைமயமாக்கல் அழிப்பு, அதிகரித்து வரும் கடன் ஆகியவற்றின் 40 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தை வழிநடத்த முயற்சிக்கும் பிரான்கோ-ஜேர்மன் அச்சில் ஜேர்மனியின் ஒரு முழு பங்காளியாக செயல்பட பிரான்சுக்கு பொருளாதாரப் பலம் இல்லை. பாரீஸ் தன்னை வாஷிங்டன் உடனும் மற்றும் மிகவும் வெளிப்படையாக ஜேர்மன்-எதிர்ப்பு கொள்கையுடனும் அணிசேர்த்துக் கொள்ளுமென சமிக்ஞை காட்டி, பேர்லினை மிரட்ட முயற்சிப்பதன் மூலமாக மக்ரோன் எதிர்வினை காட்டுகிறார்.
பிரெஞ்சு பத்திரிகை Le Monde, பாரீஸ் மற்றும் பேர்லினுக்கு இடையே, குறிப்பாக ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பா மீது அதிகரித்து வரும் இராணுவ கருத்து வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியது. அது எழுதியது, “மாஸ்கோ உடனான உறவுகள் தேசிய நலன்களால் வழிநடத்தப்பட்டு நடைமுறைவாதமாக இருக்கும். பேர்லினைப் பொறுத்த வரையில், அவர்கள் எல்லை பாதுகாப்பு மூலோபாயத்திலும் ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பு என்பதிலும் பொதிந்துள்ளார்கள்… அவ்விதத்தில், ஜேர்மனியைப் பொறுத்த வரையில், கிரிமியாவின் [ரஷ்ய] இணைப்புக்குப் பின்னர் லித்துவேனியாவிற்கு மறுஉத்தரவாதம் வழங்கும் ஒரு நேட்டோ கொள்கையின் பெயரில் அந்நாட்டிற்குள் துருப்புகளை அனுப்புவது அதன் முன்னுரிமையாக உள்ளது. ஆனால் பிரான்சைப் பொறுத்த வரையில் அவ்விதமாக இல்லை.”
அவர்களது கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், ட்ரம்பும் மக்ரோனும் அவர்களின் முந்தைய மோதல்களை மென்மையாக்க முயன்றார்கள். பாரீஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கைகளுக்கான அவர் எதிர்ப்பை ட்ரம்ப் வரவிருக்கும் ஆண்டுகளில் கடுமையை குறைக்துக் கொள்வார் என்று அவ்விருவரும் அறிவுறுத்தியதுடன், பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின்னர் ஈபிள் கோபுரத்தில் அவர்களின் இரவு உணவு விருந்து "நண்பர்களுக்கு" இடையிலான சந்திப்பாக இருக்குமென வலியுறுத்தினர்.
ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான ஆட்சி மாற்ற போர் மீது பாரீஸின் முந்தைய சிரிய கொள்கையைக் கைவிடவும் மக்ரோன் உறுதியளித்தார். மத்திய கிழக்கில் மாஸ்கோவுடனான கூட்டுறவு ஓர் "அவசியத் தேவை" என்று அழைப்புவிடுத்து, அவர் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் உண்மையில் சிரியா மீதான பிரெஞ்சு கோட்பாட்டை மாற்றியுள்ளோம்... நாங்கள் ஒரு முக்கிய நோக்கத்தைக் கொண்டுள்ளோம்: அதாவது பயங்கரவாத குழுக்களின் அரசியல் உணர்ச்சிகள் என்னவாக இருந்தாலும், எல்லா பயங்கரவாத குழுக்களையும் வேரூடன் களைவது... சிரியாவில் பிரெஞ்சு தலையிடுவதற்கு முன்நிபந்தனையாக அசாத்தை நீக்க வேண்டுமென்று நாங்கள் கோரப் போவதில்லை,” என்றார்.
அதேவேளையில் ஹம்பேர்க்கில் ஜி20 உச்சிமாநாட்டுக்கு சற்று முன்னதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேர்லினில் மேர்க்கெலைச் சந்தித்து வந்திருந்தார், ஜி உடன் அவர் "பலனளிக்கும்" விவாதம் நடத்தி இருந்தாலும் கூட ஜி அவர் "நண்பர்" கிடையாது என்பதையும் மக்ரோன் சேர்த்துக் கொண்டார்.
ட்ரம்ப் உடனான மக்ரோனின் இணக்கம், அவர் ஜனாதிபதி பதவியின் ஆழ்ந்த பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது. ஒரு இதழாளர் வினவிய போது, மக்ரோன் முஸ்லீம்கள் மீதான ட்ரம்பின் தடையையோ அல்லது புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்க-மெக்சிக்கன் எல்லையைக் கடந்து வருவதைத் தடுக்க ஒரு சுவர் கட்டமைக்கும் அவர் திட்டங்களையோ விமர்சிக்க மறுத்தார்.