ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron speaks to assembled houses of French parliament in Versailles

மக்ரோன் வேர்சாயில் கூடிய பிரெஞ்சு நாடாளுமன்ற சபைகள் முன் உரையாற்றுகிறார்

By Alex Lantier
4 July 2017

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், திங்களன்று, அவர் அரசாங்க கொள்கைகள் குறித்து ஒரு விரிவான உரை வழங்குவதற்காக பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் ஒன்றாக அழைப்புவிடுத்தார். மக்ரோன், பிரான்சில் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது அவர் தயாரிப்பு செய்துவரும் வரலாற்று தாக்குதல்களுக்கு இணக்கமாக, ஆபிரிக்காவில் இராணுவ தீவிரப்பாட்டுக்கும் மற்றும் பிரெஞ்சு அரசாங்கத்தின் அடிப்படை அமைப்புகளின் பரந்தளவிலான மாற்றங்களுக்கும் அழைப்புவிடுத்தார்.

வேர்சாய் அரச மாளிகையின் கூட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றுவதென மக்ரோன் எடுத்த தீர்மானம், பெரிதும் வழமைக்கு மாறானது. வேர்சாயில் உரை வழங்குவதற்கான இதுபோன்ற முந்தைய இரண்டு சந்தர்ப்ப சூழல், ஓர் உடனடி நெருக்கடி வெடித்த வேளையாக  இருந்தது.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், 2009 இல், நிக்கோலா சார்க்கோசி உரையாற்றினார். பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, 2015 இல், பிரான்சுவா ஹோலாண்ட் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை அவர் அரசாங்கம் தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்த அதுபோன்றவொரு கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார், அது ஓர் அவசரகால நெருக்கடி நிலையைத் திணிப்பதில் போய் முடிந்தது.

இம்முறை, ஆபிரிக்காவில் நவ-காலனித்துவ போர்களைத் தீவிரப்படுத்தும், அவசரகால நெருக்கடி நிலையை சட்டமாக்கும், உத்தரவாணைகளைக் கொண்டு சமூக வெட்டுக்களைத் திணிக்கும் மற்றும் பிரெஞ்சு அரசை அடிப்படையிலேயே மறுகட்டுமானம் செய்யும் அவர் அரசாங்கத்தின் முனைவை விவாதித்து ஓர் உரையை வழங்குவதற்காக மக்ரோன் நாடாளுமன்றத்தை கூட்ட நிர்பந்திக்கப்பட்டார். இந்த உரை, தேசிய நாடாளுமன்றத்திற்கு மரபுரீதியில் வழங்கப்படும் அரசு உரையை, இது இன்று பிரதம மந்திரி எட்வார்டு பிலிப் வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதன் முக்கியத்துவத்தைக் குறைக்குமென ஊடகங்களில் பரவலாக குறிப்பிடப்பட்டன.

எவ்வாறிருப்பினும் இரண்டு நாடாளுமன்ற சபைகளையும் வேர்சாயில் கூட்டுவதற்கு அழைப்புவிடுப்பதென்ற மக்ரோனின் முடிவு, ஒரு தனிப்பட்ட ஆணவ நடவடிக்கையல்ல. அவர் நடவடிக்கைகள் உலக நிதியியல் அமைப்புமுறையை கீழ் இழுக்க அச்சுறுத்தும் அளவிற்கு ஒரு சந்தை பொறிவு என்றளவிற்கு நீண்டகால விளைவுகளைக் கொண்டுள்ளன என்பதையோ அல்லது பிரெஞ்சு அரசியலைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளை காலவரையின்றி நீக்குவதற்கான ஹோலாண்டின் முடிவையோ அங்கீகரிப்பதாகும்.

அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த பரந்தளவிலான தாக்குதல்கள், பிரான்சில் மிக பிரமாண்டமான எதிர்ப்பை முகங்கொடுக்கின்றன, அதுவும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து—இந்த புள்ளி உலக பத்திரிகைகளில் பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஜேர்மன் பத்திரிகை Süddeutsche Zeitung மக்ரோனின் உரை குறித்த அதன் கட்டுரைக்கு, “மக்ரோன் எதிர்பாரா நிலைமையைக் கட்டுப்படுத்த ஒரு அரசரைப் போல நடந்து கொள்கிறார்: இது நல்ல விதமாக முடியாது,” என்று தலைப்பிட்டது.

அவர் உரையில், அடிப்படையில் மக்ரோன் அவர் அரசாங்கத்திதற்கும் மற்றும் அதன் சமூக-எதிர்ப்பு திட்டநிரலுக்கும் இருக்கும் ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பை ஒப்புக் கொண்டார். "அவருக்கு மக்களால் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை" அவர் விவாதிக்க இருப்பதாக அறிவித்த பின்னர், அவர் குறிப்பிடுகையில், “அன்னியப்பட்டுள்ள சக்திகள் மிகவும் பலமாக உள்ளன: அவலநிலையின் காரணமாக, வறுமையின் காரணமாக, உழைப்பாளர்களின் புதிய பிரிவுகள் அன்னியப்பட்டுள்ளன,” என்றார்.

பல பிரெஞ்சுவாசிகள் "அவர்களின் சமூக தோற்றுவாய்களில், அவர்களின் நிலைமைகளில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கதியின் போக்கில் தங்களைத்தாங்களே கைதிகளாக உணர்கிறார்கள்,” என்ற உண்மையைக் கொண்டுள்ள, பிரெஞ்சு சமூகத்தின் "ஏற்றுக்கொள்ளும் திறனை இழந்துவிட்ட அமைப்புமுறைகளை" குறிப்பிட்ட அவர், “அது மதிக்கப்படவில்லை என்று உணர்ந்தால், பிரான்ஸ் கிளர்ச்சிகரமான ஒரு நாடாகிவிடும்,” என்று எச்சரித்தார்.

இருப்பினும் கூட அவர், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக அதுவும் உத்தரவாணைகள் மூலமாக, பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தை திருத்தி எழுதும் மற்றும் அவசரகால நெருக்கடி நிலையை உள்ளடக்கி இருக்கும், பிற்போக்குத்தனமான திட்டநிரலை பாதுகாக்கும் அளவிற்குச் சென்றார். அவரது கொள்கைகளுக்கு எதிரான "தவறான குற்றச்சாட்டுக்களை" அவர் கண்டித்தார்: “தொழில் விதிமுறைகளை தாராளமயமாக்குவது குறித்தா நாம் விவாதித்து கொண்டிருக்கிறோம்? புரூசெல்ஸின் கட்டளைகளுக்கு நாம் கீழ்படிந்து கொண்டிருப்பதாக நமக்கு கூறப்படுகிறது. அவசரகால நெருக்கடி நிலையிலிருந்து தப்பிப்பது குறித்தா நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்? நமது சுதந்திரங்கள் வர்த்தகமாக்கப்பட்டு வருவதாக நமக்கு கூறப்படுகிறது… இவற்றில் எதுவுமே உண்மையில்லை,” என்றார்.

மக்களின் பரந்த உணர்வுகள் அல்ல, மக்ரோனின் உத்தரவாதங்கள் தான் உண்மைக்குப் புறம்பாக உள்ளன. முந்தைய சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் தொழில் சட்டத்தின் நிஜமான திட்டங்களின் அதே வரிசையில், பாரிய வேலைநீக்கங்களுக்கு வசதி செய்தளிக்கும் மற்றும் பெருநிறுவனங்கள் தொழில் விதிமுறைகளை மீறுவதற்கு அனுமதிக்கும் அவரின், பிற்போக்குத்தனமான திட்டங்கள், பேர்லின் மற்றும் புரூசெல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்துடன் நெருக்கமாக கூட்டுறவில் வேலை செய்யப்பட்டது. அதேபோல, தனிநபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கும் மற்றும் போராட்டங்களுக்கு தடைவிதிப்பதற்கும் பொலிஸிற்கு நிரந்தரமாக உரிமை வழங்கியதன் மூலமாக, மக்ரோன் ஒரு பேனா முனையில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்க உத்தேசிக்கிறார்.

பிரான்சின் பாரம்பரிய அரசாங்க கட்சிகள் அனைத்தினாலும் பாதுகாக்கப்படும், மக்ரோனின் வேலைத்திட்டத்திற்கு ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பு, ஜனாதிபதி தேர்தல்களில் மில்லியன் கணக்கான வாக்காளர்கள் வெற்று வாக்குகளை வழங்க தீர்மானித்திலும் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் முன்னொருபோதும் இல்லாத வகையில் 57 சதவீத வாக்காளர்கள் புறக்கணிக்க முடிவெடுத்ததிலும் எடுத்துக்காட்டப்படுகிறது.

மக்ரோன் உரையின் மீதிப்பகுதி, தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்திற்கு முறையீடுகள் செய்ததன் மூலமாக அவரது மக்கள்விரோத திட்டநிரலை சட்டபூர்வமாக்கும் ஒரு முயற்சியாக, அத்துடன் பிரெஞ்சு அரசாங்கத்தின் வெவ்வேறு துறைகளில் நீண்டகால மாற்றங்களைச் செய்வதற்கான வாக்குறுதிகளாக, மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் பேரம்பேசுவதற்கான அழைப்புகளாக இருந்தன.

பிரான்சின் முன்னாள் மேற்கு ஆபிரிக்க காலனி சாம்ராஜ்ஜியத்தில் 5,000 பிரெஞ்சு துருப்புகளை நிரந்தரமாக நிலைநிறுத்துவதற்கான திட்டங்களை ஆபிரிக்க அரசு தலைவர்களுடன் விவாதிப்பதற்கு மாலிக்கு விஜயம் செய்து திரும்பியதும், மக்ரோன் ஆயுத படைகளைப் புகழ்ந்து தள்ளினார்: “பிரான்ஸ் அதன் கூட்டாளிகளுக்கு உண்மையாக இருக்கும். நமது இராணுவங்களை மூலோபாயரீதியிலும் தந்திரோபாயரீதியிலும் நாம் புத்துயிரூட்ட வேண்டியுள்ளது… ஒவ்வொரு இடத்திலும், நமது நலன்களுக்காகவும் மற்றும் பிரச்சினையில் உள்ளவர்களுக்காகவும், நாம் நமது நலன்களை மற்றும் நமது கண்காணிப்பை பாதுகாப்பதற்காக செயல்பட வேண்டும், மேலும் ஆபிரிக்காவில், சாஹெலில், இங்கே நமது ஆயுதப் படைகள் வகிக்கும் பாத்திரத்தை நான் கண்டு கொண்டேன். இதுபோன்ற தலையீடுகள் நீண்டகாலத்திற்கு நடத்தப்பட்டால் மட்டுமே அவை பலனளிக்கும்,” என்றார்.

மக்ரோன் பிரான்சின் வாக்காளர் பட்டியல் முறையில் திருத்தம் செய்து, பிரான்சின் நாடாளுமன்ற மற்றும் நீதித்துறைகளில் பரந்த மாற்றங்கள் செய்யவும் முன்மொழிந்தார். அவர் தேசிய நாடாளுமன்றம் மற்றும் செனட்டின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைப்பதற்கும் மற்றும் தேசிய நாடாளுமன்றம் "விகிதாசார பிரதிநிதித்துவ அளவீடு" வழிவகை மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் அழைப்புவிடுத்தார். அவர் பதவிக்கால வரம்புகள் வரையறுப்பதற்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைக் குற்றமாக்கும் விதிமுறைகளைக் கொண்டுள்ள குடியரசின் நீதித்துறை அதிகாரங்களை மட்டுப்படுத்தவும் அழைப்புவிடுத்தார்.

அனைத்திற்கும் மேலாக, அவர் அரசு மற்றும் வணிக கூட்டமைப்புகளுடன் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அவற்றின் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பிரதான அமைப்பான, பொருளாதார, சமூக மற்றும் சுற்றுசூழல் கவுன்சில் (Conseil économique, social et environnemental - CESE) உடன் அரசியல்ரீதியில் நெருக்கமாக கூட்டுறவைப் பேணவும் சமிக்ஞை செய்தார். இது மக்ரோனின் சமூக தாக்குதல்களுக்கு ஒரு பொய்யான சட்டபூர்வ மூடுமறைப்பை வழங்கும் நோக்கம் கொண்டதாகும். ஆனால் மக்ரோன் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் அவர் கொள்கைகளை பேரம்பேச திட்டமிடுகின்ற நிலையில், அவையோ பாரியளவில் மக்களிடையே மதிப்பிழந்துள்ளன.

“பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சில் (CESE) எதிர்காலத்திற்கான சம்மேளனமாக மாற வேண்டும், அங்கே தேசத்தின் அனைத்து உயிர்வாழும் சக்திகளும் தம்மை வெளிப்படுத்தும்,” என்று அறிவித்தார். “அதற்காக, அதன் தொகுதிகளில் அது பிரதிநிதித்துவம் செய்யும் வழியை மேலிருந்து கீழ் வரையில் நாம் மீளாய்வு செய்தாக வேண்டும், அதேவேளையில் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைத்தாக வேண்டும்,” என்றார்.

அடிப்படை திட்டமிடும் அமைப்பாக CESE மாற்றப்படும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார், அதன் மூலமாக தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு திட்டமிடப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும்: “ஆலோசனை அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவை அனைத்தையும் பட்டியலிடுவதே கூட சாத்தியமில்லாதது. CESE ஐ சீர்திருத்துவதன் மூலமாக, நாம் நமது எல்லா சட்ட வரிகளும் பயன்படுத்தும் ஒரே ஆலோசனை அமைப்பாக அதை ஆக்க முடியும்,” என்றார்.

மக்ரோனின் பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்திற்கான எதிர்ப்பு, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்புக்குப் பின்னால் அணிதிரண்டு, ஒரு சுயாதீனமான அரசியல் இயக்க வடிவத்தை எடுக்க வேண்டும் என்று பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste) வெளியிட்ட எச்சரிக்கைகளை இந்த உரை உறுதிப்படுத்துகிறது.

சோசலிஸ்ட் கட்சியின் தேர்தல் தோல்விக்குப் பின்னர், தொழிற்சங்கங்களும் மற்றும் ஜோன் லூக் மெலென்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் (La France insoumise - LFI) போன்ற அதன் பின்னால் உள்ள அரசியல் போக்குகளும் மக்ரோனின் சீர்திருத்தங்களை பேரம்பேசி நிறைவேற்றுவதற்காக ஒரு போலி-இடது மூடுமறைப்பை வழங்க வேலை செய்து வருகின்ற ஒரு நிலைமையை தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்றனர்.

அடிபணியா பிரான்ஸ் (LFI) மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) நிர்வாகிகள் வேர்சாயில் மக்ரோனின் உரையை புறக்கணித்தனர், மெலொன்சோன் அவரே கூட மக்ரோனின் கருத்துக்களை விமர்சித்தார்.

“வேர்சாயில் அங்கே உண்மைகளின் ஓயாத கனமழை இருந்தது: பொய்யான மினுமினுப்பு, அதிகமாக பயன்படுத்தப்பட்ட போனபார்ட்டிசம், ஐரோப்பிய ஆதரவு உணர்வின் உளறல்கள், பயங்கரமான சலிப்பு,” இருந்ததாக மெலொன்சோன் பேஸ்புக்கில் எழுதினார். “அதற்கு அப்பாற்பட்டு, அங்கே நிறைய முக்கியமற்ற தெளிவற்ற கருத்துக்களும், அழகுணர்ச்சியின் பட்டியல்களும் மற்றும் மூர்க்கமான கலப்படமற்ற சமூக தாக்குதல்களை முன்நிறுத்திக் காட்டுவதற்கான தேனொழுகும் வழிமுறைகளும்… ஒட்டுமொத்தமாக, அது பைத்தியக்காரத்தனமானதைப் போலவே பழைய பாணியிலான சுதந்திர சந்தை வறட்டுவாதத்துடன், வர்த்தக சம்மேளன அறிக்கையின் மட்டத்தில் இருந்தது.”

ஆனால் தேசிய நாடாளுமன்றத்தில் மக்ரோன் ஒரு பெரும்பான்மையை வென்றதன் அடிப்படையில் அவருக்கான எதிர்ப்புக்கு தலைமை கொடுப்பதற்கான மெலோன்சோனின் பொருத்தமற்ற மூலோபாயம் முற்றிலுமாக தோல்வி அடைந்ததைப் போலவே, மெலொன்சோனின் விமர்சனங்கள் முற்றிலும் திராணியற்றவை ஆகும். இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில் மக்ரோன் மற்றும் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென் இருவரையுமே எதிர்த்து அவர் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு அழைப்புவிடுக்க மறுத்த பின்னர், மெலொன்சோனின் ஆதரவு வேகமாக குறைந்தது. நாடாளுமன்றத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய பிரதிநிதிகளுடன், மெலொன்சோன் மக்ரோன் உடனான தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சூழ்ச்சி சதிகளை ஆதரித்துக் கொண்டே அதேவேளையில் வார்த்தைஜால கண்டனங்களை வழங்கும் நிலைமையில் மட்டுமே உள்ளார்.

மக்ரோனின் பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பானது, இந்த கொடுமையான மற்றும் திவாலான அரசியல் ஒழுங்கமைப்பு சூழலுக்கு வெளியே தொழிலாளர்களின் போராட்டம் விரிவடைந்தால் மட்டுமே வெளிப்பாட்டைக் காணும்.