Print Version|Feedback
After Hamburg protests, German government plans crackdown on left-wing views
ஹம்பேர்க் போராட்டங்களுக்குப் பின்னர், ஜேர்மன் அரசாங்கம் இடதுசாரி கண்ணோட்டங்களை ஒடுக்க திட்டமிடுகிறது
Andre Damon
11 July 2017
வாரயிறுதியில் ஹம்பேர்க் நகரில் பத்தாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பின்னர், ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம், அரசியல் எதிர்ப்பாளர்களைக் குற்றகரமாக்கவும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தவும் அதன் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த இராணுவ-பொலிஸ் நடவடிக்கை ஒன்றில், பெரிதும் அமைதியாக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் சுமார் 20,000 பொலிஸார் அணிதிரட்டப்பட்டனர். ஹம்பேர்க் நகரம் மீது ஹெலிகாப்டர்களும் போர் விமானங்களும் பறந்த நிலையில், கனரக ஆயுதமேந்திய பொலிஸ், பயமுறுத்தும் ரீதியிலான இயந்திர துப்பாக்கிகள் மற்றும் சிறியவகை தானியங்கி துப்பாக்கிகளுடன், நூற்றுக் கணக்கானவர்களைக் கைது செய்தனர், குறுந்தடிகளைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்ததுடன், நீர் பீய்ச்சிகளைக் கொண்டு அவர்கள் மீது நீரைப் பாய்ச்சி, கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் மிளகுப்பொடி தெளிப்பான்களையும் பிரயோகித்தனர்.
இந்த பாரிய பொலிஸ் ஒடுக்குமுறைக்கு ஒரு பலவீனமான சாக்குபோக்காக, குட்டி-முதலாளித்துவ அராஜகவாதிகளின் ஒரு சிறிய குழுவால் நடத்தப்பட்ட நாசவேலை சம்பவங்கள் பயன்படுத்தப்பட்டன. ஜேர்மன் பொலிஸால் அராஜகவாத குழுக்கள் பரந்தளவில் உள்நுழைக்கப்பட்டதற்கு இடையே, அதற்கு முன்னரே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பொலிஸ் முகமை தூண்டுதல்தாரிகளது நடவடிக்கைகளும் இந்த குழப்பங்களில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நிறைவடைந்தவுடன், ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதற்கான அதன் நடவடிக்கையை அதிகரித்துள்ளது. Bild பத்திரிகை உடனான ஒரு பேட்டியில், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், போராட்டக்காரர்களை "கடுமையான சமூக-எதிர்ப்பு குற்றவாளிகள்" என்றும், அவர்கள் "ஹம்பேர்க்கில் கொலை முயற்சி உட்பட தீவிர குற்றங்களை புரிந்திருக்கிறார்கள்" என்றும் குறிப்பிட்டு, ஐரோப்பா எங்கிலும் "இடதுசாரி தீவிரவாதிகளை" குறித்த ஒரு தகவல் களஞ்சித்தை உருவாக்க அழைப்புவிடுத்தார்.
“முட்டாள்தனமான வன்முறையை, கொலை முயற்சியையும் கூட, ஊக்குவிக்கின்ற அரசியல் தீவிரவாதத்தின் எந்தவொரு வடிவமும் ஒரு சமூக பிற்போக்குத்தனம் இல்லாமல் நீடித்திருக்காது என்று நான் நம்புவேன்,” என்று அறிவித்து, இடதுசாரி "தீவிரவாதிகளை" இலக்கில் வைக்க மாஸ் "இடதுகளுக்கு எதிரான ராக் இசை நிகழ்ச்சி" (Rock Against the Left) ஒன்றுக்கு அழைப்புவிடுக்குமளவிற்கு சென்றார்.
“இடதுகளுக்கு எதிரான ராக் இசை நிகழ்ச்சி" எனும் இந்த முழக்கம், முன்னதாக “Freikorps” மற்றும் "Sturmfront” போன்ற நவ-நாஜி ராக் பாடல் குழுவுடன் தொடர்புடையதாகும். ஜேர்மனியின் அந்த தீவிர வலது பத்திரிகை, மாஸ் இன் இந்த முன்மொழிவை மனதார வரவேற்றது. ஹம்பேர்க் சம்பவங்களுக்கு விடையிறுப்பதில், இடதுகளுக்கு எதிராக அணிதிரட்டுவதற்கு வலதுசாரி இசை நிகழ்ச்சிகளுக்கு அழைப்புவிடுத்த நாஜி-தொடர்புடைய ஜேர்மன்-இத்தாலிய ராக் பாடல் குழுவான Frei Wild இன் அறிக்கை ஒன்றை “புதிய வலது" Junge Freiheit பத்திரிகை மேற்கோளிட்டது.
சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) நாடாளுமன்றவாதி Armin Schuster, இடதுசாரி அரசியல் குழுக்கள் பயன்படுத்தும் சமூக இடங்களை அடைக்குமாறு அழைப்புவிடுத்தார். “இடதுசாரிகள் மையமாக கொண்டுள்ள ஹம்பேர்க்கில் உள்ள ரோட் ஃபுளோரா (Rote Flora) மற்றும் பேர்லினில் உள்ள ரிகெர் ஸ்ராஸ் (Rigaer Strasse) போன்ற இடங்களைப் படிப்படியாக அடைக்க வேண்டும்,” என்றவர் அறிவித்தார். “அரபு சிறுகுழுக்களுக்கு ஆகட்டும், இஸ்லாமியர்கள் அல்லது நவ-நாஜிக்களுக்கு ஆகட்டும், இடதுசாரி தீவிர போக்குடையோர்களுக்கும் சரி, சட்டதிட்டமில்லா இடங்கள் கிடையாது" என்பதில் ஜேர்மனி சகிப்புத்தன்மை கொண்டிருக்கக்கூடாது என்றவர் தெரிவித்தார்.
CDU உள்துறை அமைச்சர் தோமஸ் டு மஸியர் அவர் பங்கிற்கு அறிவிக்கையில், “வன்முறையைப் பிரயோகிப்பதற்கு இடதுசாரி காட்சிகளின் தயார்நிலையை நமக்கு எடுத்துக்காட்டியதில் ஜி20 உச்சிமாநாட்டைச் சுற்றி நடந்த சம்பவங்கள் ஒரு திருப்புமுனையாகும்,” என்றார்.
ஜி20 க்கு முன்னதாக கடுமையான எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக, இடதுசாரி அரசியல் கண்ணோட்டம் கொண்ட "நூற்றுக் கணக்கானவர்கள்" ஜேர்மனி எல்லைகளில் இருந்து சமீபத்திய நாட்களில் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் பெருமை பீற்றி கொண்டார். எல்லைக் கட்டுப்பாடுகள் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியதாக கூறி, CDU இன் ஏனைய அங்கத்தவர்கள், இந்த தற்காலிக நடவடிக்கைகளை நிரந்தரமாக்க அழைப்புவிடுத்தனர்.
பொலிஸ் நடவடிக்கைகளுக்கு "விமர்சனங்களை அல்ல, பாராட்டு பத்திரங்களை" வழங்க வேண்டுமென கூறி, ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் உடன் ஐரோப்பிய அதிகாரிகளும் போராட்டக்காரர்கள் மீதான இந்த ஒடுக்குமுறையை ஆதரித்தனர். பொலிஸ் விடையிறுப்பு "ஹம்பேர்கில் அதன் சிறப்பை" பிரதிநிதித்துவம் செய்தது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
அரசியல் எதிர்ப்பு மீதான பரந்த தாக்குதல், செப்டம்பரில் நடக்கவுள்ள கூட்டாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக நடந்துள்ளது, இதில் இரண்டு முன்னணி கட்சிகள், CDU மற்றும் SPD, சட்டம்-ஒழுங்கு விஷமப்பிரச்சாரம், வெளிநாட்டவர் மீதான வெறுப்பு மற்றும் அகதிகள் மீது துவேசத்தைத் தூண்டிவிட்டு வலதிலிருந்து ஒன்றையொன்று விஞ்சி நிற்க முயன்று வருகின்றன.
வேறொன்றும் இருக்கிறதென்றால், அது பெயரளவிற்கு "இடது" சமூக ஜனநாயகவாதிகள் எடுத்துள்ள மிகவும் தீவிர நிலைப்பாடாகும். பல தொடர்ச்சியான கடும் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர், பரந்தளவில் வெறுக்கப்படும் இந்த அமைப்பு சமூக சீர்திருத்த கட்சியாக அதன் நம்பகத்தன்மை இழப்பை பிரதிபலிக்கும் வகையில், SPD, முன்னதாக தீவிர வலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் (AfD) பக்கம் ஈர்க்கப்பட்டிருந்த பாசிசவாத கூறுபாடுகளுக்கு அழைப்புவிடுக்க முனைந்து வருகிறது.
ஊடகங்களின் ஆதரவுடன், இவ்விரு கட்சிகளும் வல்லரசு ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு ஜேர்மனி புத்துயிரூட்டுவதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள செய்வதற்காக அவர்களை அச்சுறுத்த, கடந்த 2013 பெடரல் தேர்தலுக்குப் பின்னர் இருந்து சூழ்ச்சி செய்து வந்துள்ளன. இது ஒரு பாரிய மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் அந்நாட்டின் இராணுவ மற்றும் உளவுத்துறை சக்திகளின் விரிவாக்கம் ஆகியவற்றுடன், ஜேர்மன் ஏகாதிபத்திய குற்றங்களைப் பூசிமொழுகும் முயற்சியின் பாகமாக "ஹிட்லர் வக்கிரமானவர் இல்லை" என்று இழிவாக அறிவித்த ஹம்போல்ட் பல்கலைக்கழக கல்வியாளர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி போன்ற பாசிசவாத புத்திஜீவிய பிரமுகர்களை ஊக்குவித்தமையையும் உள்ளடக்கி உள்ளது.
ஜேர்மனியில் இடதுசாரி அரசியல் கண்ணோட்டங்கள் மீதான தாக்குதல், ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவு மற்றும் ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் பாகமாக நடக்கிறது. நவம்பர் 2015 க்குப் பின்னர் இருந்து, பிரான்ஸ் அவசரகால நிலையின் கீழ் இருந்து வருகிறது, இது, ஹோலாண்ட் அரசாங்கத்தின் கீழ், கடுமையான எல் கொம்ரி தொழிலாளர் சட்டத்தின் எதிர்ப்பாளர்களை எதேச்சதிகாரமாக காலவரம்பின்றி வீட்டுக்காவலில் வைக்க பயன்படுத்தப்பட்டது.
இடதுசாரி அரசியல் அமைப்புகளுக்கு எதிரான நகர்வுகள், இராணுவவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மை மீதான பரந்த மக்கள் எதிர்ப்பை முன்னதாகவே முறியடிக்கும் மற்றும் மிரட்டும் ஒரு முயற்சியை உள்ளடக்கி உள்ளது. “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது” என்றும், “வங்கிகளும் பணமும் உலகை ஆள்கிறது" என்றும் பெரும் பெரும்பான்மை இளைஞர்கள் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இந்த மக்கள் எதிர்ப்பை எடுத்துக்காட்டி இருந்தது. கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள், ஒரு "மிகப் பெரியளவிலான எழுச்சியில்" இணைவோம் என்று கூறியிருந்தனர்.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) மட்டுமே போர், சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்ப்பதில் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வரவிருக்கும் கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடும் ஒரே அரசியல் கட்சியாகும். அது, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் ஆபத்துக்களைக் குறித்து அதற்கு எச்சரித்து, வரவிருக்கும் போராட்டங்களுக்கு அதை தயாரிப்பு செய்கிறது.