Print Version|Feedback
Google rigs searches to block access to World Socialist Web Site
உலக சோசலிச வலைத் தள அணுகுதலைத் தடுக்க, கூகுள் அதன் தேடுபொறி முடிவுகளில் மோசடி செய்கிறது
WSWS Editorial Board
28 July 2017
இணைய பெருநிறுவனமான கூகுள், உலக சோசலிச வலைத் தள (WSWS) அணுகுதலை தடுப்பதற்காக, அதன் தேடல் விடைகளில் மோசடி செய்துள்ளதை இத்தளத்தை அணுகிய தரவுகள் மீதான ஓர் ஆய்வு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
“போலி செய்திகளுக்கு" எதிரான போராட்டம் என்ற போர்வையில், ஏப்ரல் மாதம், கூகுள் புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியது, இவை வலைப் பக்கங்கள் மற்றும் வலைத் தளங்களை தரவரிசையில் பின்னுக்கு தள்ளுவதற்காக பெயர் வெளியிடாத "மதிப்பீட்டாளர்களுக்கு" அசாதாரண அதிகாரத்தை வழங்குகிறது. இந்த நெறிமுறைகள், WSWS மற்றும் ஏனைய போர்-எதிர்ப்பு வலைத் தளங்களையும் மற்றும் பிற எதிர்ப்பு தளங்களையும் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களாக, கூகுள் வழியாக WSWS க்கு வரும் பயனர் எண்ணிக்கை ஏறக்குறைய 70 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள், போர் அச்சுறுத்தல், சமூக நிலைமைகள், சமத்துவமின்மை ஆகியவை உள்ளடங்கலாக மற்றும் சோசலிசம் குறித்தும் கூட WSWS வழமையாக எழுதும் பரந்துபட்ட தலைப்புகள் சம்பந்தமான முக்கிய தேடல்களில், உலக சோசலிச வலைத் தளத்திற்கு இட்டுச் செல்லும் வலைப் பக்க லிங்க்குகளின் (impressions) எண்ணிக்கை செங்குத்தாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒரு "வலைப் பக்க லிங்க்" (impression) என்பது தேடல் முடிவுகளில் கூகுள் காட்டும் ஒரு லிங்க்கை குறிக்கும் ஒரு தொழில்நுட்ப சொல்லாகும். “சோசலிசம்" என்ற ஒரு வார்த்தை தேடல், பயனரை WSWS இன் வலைத் தளத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு லிங்க்கைக் காட்டினால், அது ஒரு impression என்று கணக்காகும்.
"தேடல் தரவரிசையில்" WSWS பக்கங்களுக்கு ஒதுக்கப்படும் இடத்தில் மோசடி செய்வதன் மூலம், தேடல் முடிவுகளில் (results) கூகுளால் WSWS இன் தகவல்களை பின்னுக்குத் தள்ள முடியும். இது WSWS வலைப் பக்க லிங்க்குகளின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பதால், இதன் காரணமாக, இது, அத்தளத்தை பார்வையிடுபவர்கள் அல்லது "சொடுக்குபவர்களின்" எண்ணிக்கையை மிகவும் குறைக்கிறது.
கூகுளின் வெப்மாஸ்டர் கருவிகள் சேவையின் தகவல்படி, தேடல் முடிவுகளில் உலக சோசலிச வலைத் தள லிங்க்குகளின் நாளாந்த எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களில் 467,890 இல் இருந்து 138,275 ஆக குறைந்துள்ளது.
கூகுள் அதன் புதிய வலைத் தள தவிர்ப்பு கொள்கைகளை (website exclusion policies) நடைமுறைப்படுத்திய காலகட்டமான, மே மற்றும் ஜூலைக்கு இடையே குறிப்பிட்ட சொற்களின் தேடல் முடிவுகள் சார்ந்த தரவுகளை WSWS ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.
கூகுள் தேடுபொறியில் “போர்" என்பதை உள்ளடக்கிய வார்த்தை தேடல், மே மாதத்தின் போது, WSWS இன் 61,795 வலைப்பக்க லிங்க்குகளைக் (impressions) கொண்டு வந்தன. இதுவே ஜூலையில் WSWS இன் பக்கங்கள் 6,613 ஆக, ஏறத்தாழ 90 சதவீதம், குறைந்தது.
“கொரிய போர்" என்ற வார்த்தையின் தேடல்கள் மே மாதம் 20,392 WSWS பக்கங்களை கொண்டு வந்தன. ஜூலையில் இதே வார்த்தைகளை கொண்ட தேடல்கள் பூஜ்ஜிய WSWS பக்கங்களை கொண்டு வந்தது. “வட கொரிய போர்" என்பதன் தேடல்கள் மே மாதம் 4,626 பக்கங்களை கொண்டு வந்தது. ஜூலையில் அதுவே பூஜ்ஜிய WSWS பக்கமாக உள்ளது. “இந்தியா பாகிஸ்தான் போர்" என்ற வார்த்தை மே மாதம் 4,394 WSWS பக்கங்களை கொண்டு வந்தது. ஜூலையில், இதன் விடைகள், மீண்டும், பூஜ்ஜியமாக இருந்தது. “அணுஆயுத போர் 2017” என்பது மே மாதம் 2,319 பக்கங்களைக் கொண்டு வந்தது, ஜூலையில் இது பூஜ்ஜியமாக உள்ளது.
ஏனைய சில தேடல்களை மேற்கோளிடுவதானால்: “விக்கிலீக்ஸ்" (WikiLeaks) என்பது 6,576 பக்கங்களில் இருந்து பூஜ்ஜியத்திற்கு வீழ்ச்சியடைந்தது, “ஜூலியன் அசான்ஜ்" (Julian Assange) என்பது 3,701 பக்கங்களில் இருந்து பூஜ்ஜியத்திற்கு சரிந்தது, மற்றும் "Laura Poitras” என்ற வார்த்தை தேடல் 4,499 இல் இருந்து பூஜ்ஜியமாக குறைந்தது. சந்தேகத்திற்கிடமான முறையில் 2013 இல் உயிரிழந்த செய்தியாளர், "மைக்கல் ஹாஸ்டிங்ஸ்" (Michael Hastings) என்ற வார்த்தை தேடல் மே மாதம் 33,464 பக்கங்களை உருவாக்கியது, ஆனால் ஜூலையில் அது வெறும் 5,227 பக்கங்களை மட்டுமே கொண்டு வந்தது.
புவிசார் அரசியலுடன் இணைந்தவகையில், உலக சோசலிச வலைத் தளம் பரந்துபட்ட சமூக பிரச்சினைகள் குறித்தும் எழுதுகிறது, அவற்றில் பலவும் தேடல் முடிவுகளில் கடும் சரிவைக் கண்டுள்ளன. மே மாதம் 5,000 க்கு அதிகமான பக்கங்களைக் கொண்டு வந்த “உணவுப்பொருள் முத்திரைகள்” (food stamps), “ஃபோர்ட் வேலைநீக்கங்கள்” (Ford layoffs), “அமேசன் பண்டகசாலை” (Amazon warehouse) மற்றும் "கல்வித்துறை செயலாளர்” (secretary of education) ஆகிய வார்த்தை தேடல்களும் ஜூலையில் பூஜ்ஜிய பக்கங்களையே கொண்டு வந்தன.
“வேலைநிறுத்தம்" (strike) என்ற வார்த்தையை உள்ளடக்கிய தேடல்களில் கிடைக்கும் WSWS கட்டுரை பக்கங்களின் எண்ணிக்கை, மே மற்றும் ஜூலைக்கு இடையே, 19,395 இல் இருந்து 2,964 ஆக சரிந்தது.
கூகுள் தேடுபொறியில் இந்த வார்த்தைகளை தேடும் பலர், ஸ்தாபக அரசியல் மீது விமர்சனபூர்வமாக இருப்பவர்கள் என்பதாலும், சோசலிசவாதிகள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்பதற்கு ஆர்வம் இருப்பதாலுமே அவ்வார்த்தைகளை தேடுகிறார்கள். இருப்பினும் கூகுள் நடவடிக்கைகளின் விளைவாக, அவர்களால் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான ஆவணங்களைப் பெற முடியாமல் போகும்.
ஆனால் சோசலிச அரசியலை நேரடியாக எதிர்நோக்குபவர்களின் நிலை என்ன? மே மாதம், “சோசலிசம்" (socialism) என்ற வார்த்தை தேடல் 31,696 பக்கங்களைக் கொண்டு வந்ததுடன், அந்த அந்த முடிவுகளின் வரிசையில் WSWS 5 வது மற்றும் 6 வது இடத்தில் இருந்தது. ஜூனில், அந்த வார்த்தையானது முதல் 100 தேடல் முடிவுகளில் இருந்தே நீக்கப்பட்டிருந்தது. இவ்விதத்தில் "சோசலிசம்" என்ற வார்த்தை தேடல்கள், மிகப் பரந்தளவில் வாசிக்கப்படும் இணைய வழி சோசலிச பத்திரிகையான உலக சோசலிச வலைத் தளத்தின் ஒரு பக்கத்தையும் கொண்டு வரவில்லை.
சோசலிசவாதிகளாக ஏற்கனவே பொறுப்பேற்றுள்ளவர்கள், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து அதிகம் தெரிந்து கொள்ள விரும்புபவர்களின் நிலை என்ன? இங்கேயும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பிரசுரிக்கப்படும் WSWS, முடக்கப்பட்டுள்ளது. “லியோன் ட்ரொட்ஸ்கி" (Leon Trotsky) என்ற ஒரு வார்த்தை தேடல் மே மாதம் 5,893 பக்கங்களைக் கொண்டு வந்தது, ஜூலையில் அந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாக சரிந்தது.
நமது புள்ளிவிபரங்களுடன், பிரபல உளவியல்வாதியும் கூகுள் விமர்சகருமான ரோபர்ட் எப்ஸ்ரைனை WSWS தொடர்பு கொண்ட போது, “கூகுள் உங்களை தரவரிசையில் பின்னுக்குத் தள்ளியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை,” என்று தீர்மானமாக தெரிவித்தார். “கூகுள் தேடல் முடிவுகள் மூலமாக மக்களுக்கு மோசடி செய்கிறது" என்பதற்கு “உறுதியான ஆதாரம் இருப்பதாக" அவரும் மற்றும் அவர் சக பணியாளர்களும் நடத்திய ஆய்வு எடுத்துக்காட்டுவதாக எப்ஸ்ரைன் தெரிவித்தார்.
பொறியியல் துறைக்கான கூகுளின் துணை தலைவர் பென் கோமெஸ் (Ben Gomes) இன் ஏப்ரல் 25, 2017 வலைப் பதிவு பக்கமும் மற்றும் அதேநேரத்தில் பிரசுரிக்கப்பட்ட இற்றைப்படுத்தப்பட்ட “தேடல் தரவரிசைக்கான வழிகாட்டு நெறிகள்” என்பதும், இந்நடவடிக்கைகளை வழிநடத்தும் கொள்கையை முழுமையாக தெளிவுபடுத்துகின்றன. “எதிர்பார்த்திராத அத்துமீறிய தேடல் முடிவுகள், கட்டுக்கதைகள் மற்றும் சூழ்ச்சி தத்துவங்களை" (இது எந்தவொரு எதிர்ப்பு கருத்தையும் தவிர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் பரந்த தெளிவற்ற மொழியாகும்) தரவரிசையில் கீழிறக்குவது மற்றும் தவிர்ப்பதற்கான அவசியத்தைக் குறித்து அந்த வலைப்பதிவு பக்கம் குறிப்பிடுகிறது.
இந்த மதிப்பீட்டாளரின் வழிகாட்டி நெறிமுறைகள் இன்னும் அதிக விளக்கமாக உள்ளன. “ஒரு தனிநபர், வணிகம், அரசாங்கம், அல்லது அரசியல்ரீதியிலும், நிதி சார்ந்தும் அல்லது வேறுவிதத்தில் சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்பிற்கும் ஆதாயமாக பயனர்களை ஏமாற்றுவதற்காக உண்மையில் துல்லியமற்ற தகவல்களைக்" கொண்டு, தரவரிசையில் "மிகக் கீழே" இருக்கும் தளங்களை நீக்குவதற்கு, பெயர் வெளியிடாத "மதிப்பீட்டாளர்களுக்கு" அறிவுறுத்தப்பட்டுள்ளது. “உண்மையான தகவல் போல, ஆதாரமற்ற சூழ்ச்சி தத்துவங்கள் அல்லது கட்டுக்கதைகளை முன்வைக்கும்" ஒரு வலைத் தளம், தரவரிசையில் "மிகக் கீழான" இடத்திற்கு தள்ளப்படுகிறது.
இதைவிட வெளிப்படையாக பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கும் ஒரு கொள்கையை நெறிப்படுத்துவது சாத்தியமில்லை. அரசாங்கத்திற்கு விமர்சனபூர்வமாக இருக்கும் மற்றும் அதன் பொய்களை அம்பலப்படுத்தும் பல முக்கிய வலைத் தளங்களை முடக்குவதற்கும் அல்லது பட்டியலில் பின்னுக்குத் தள்ளுவதற்கும் கூகுளை அனுமதிக்கும் விதத்தில் இந்த வழிகாட்டி நெறிமுறைகள் எழுதப்பட்டுள்ளன.
எது “உண்மையில் துல்லியமற்ற தகவல்" என்று சரியாக யார் தீர்மானிக்க வேண்டும் அல்லது "ஆதாரமற்ற சூழ்ச்சி தத்துவத்தை" உள்ளடக்கி இருப்பது எது? இது நடைமுறையளவில், கூகுள் மற்றும் அரசில் உள்ள அதன் கூட்டாளிகள், குறிப்பாக ஜனநாயகக் கட்சி, ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களைத் தவிர, ஏனைய சகல கருத்து வெளிப்பாடுகளையும் தடுக்கிறது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளில் சிக்காத, வாசிப்பிற்கு உகந்த ஒரு பிரசுரமோ அல்லது ஆய்விதழோ இருக்க முடியாது.
தேடல் முடிவுகளில் மோசடி செய்து அரசியல் வேட்பாளர்களை, குறிப்பாக ஹிலாரி கிளிண்டனை ஆதரிப்பதில் கூகுள் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளது என்று பல ஆதாரங்கள் ஆவணப்படுத்தி உள்ளன என்ற உண்மையும் இந்த புதிய வழிமுறைகளின் விமர்சனங்களுடன் சேர்ந்துள்ளன. வேகமாக நகர்ந்து, விடயங்களை உடையுங்கள்: பேஸ்புக், கூகுள் மற்றும் அமேசன் ஆகியவை எவ்வாறு கலாச்சாரத்தை ஓரங்கட்டி, ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தின என்று தலைப்பிட்டு சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட ஜொனாதன் டாப்லினின் (Jonathan Taplin) சமீபத்திய நூலில், அவர், கிளிண்டன் பிரச்சாரத்திற்கு நேரடியாக உதவுவதற்காக The Groundwork என்ற நிறுவனத்தை ஸ்தாபிப்பதில், கூகுளின் தாய் நிறுவனம் Alphabet இன் தலைமை செயலதிகாரி Eric Schmidt இன் பாத்திரத்தை ஆவணப்படுத்தி உள்ளார்.
அனைத்திற்கும் மேலாக, கூகுளின் போட்டியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்த அதன் சொந்த பொருள்விற்பனைக்கான ஒப்பீட்டு சேவையை ஊக்குவிப்பதற்காக அதன் தேடல் முடிவுகளில் அது பரந்தவிதத்தில், திட்டமிட்டு மற்றும் குற்றகரமாக மோசடி செய்திருப்பதை இந்தாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய ஆணைக்குழு அம்பலப்படுத்தியது.
“போலி செய்திகளை” எதிர்க்கிறோம் என்ற பெயரில், கூகுள் போலி தேடல் முடிவுகளை வழங்கி கொண்டிருக்கிறது. அது ஒரு தேடுபொறி என்பதில் இருந்து தணிக்கைக்கான ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகள் மீது கூகுளின் அரசியலமைப்பிற்குப் புறம்பான தாக்குதலை உலக சோசலிச வலைத் தளம் தொடர்ந்து அம்பலப்படுத்தும். கூகுள் அதன் நெறிமுறைகளைக் குறித்த முழு விபரங்களை வழங்க வேண்டும் மற்றும் வலைத் தளங்களை "மதிப்பிடுவதற்கு" அதற்கு யார் அதிகாரமளித்தது என்பதை அது கூற வேண்டுமென்றும் நாங்கள் கோருகிறோம். கூகுளின் தேடல்முறை அல்காரிதங்கள் (algorithms) அனைத்தும் பொது களத்தில் வைக்கப்பட வேண்டும்.
முடிவாக கூகுளின் நடவடிக்கையானது, தனியார் கட்டுப்பாட்டில் இருந்து தகவல் பரவுவதல் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதை மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது. சக்தி வாய்ந்த தேடுபொறிகள் கோடீஸ்வர செல்வந்த தன்னலக்குழுக்களின் கட்டுப்பாட்டில் ஏகபோகமாக நடத்தப்படக்கூடாது. அவை உலக உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தப்பட வேண்டும்.
கூகுளின் நடவடிக்கையானது வழமையாக WSWS ஐ அணுகுவதிலிருந்து பத்தாயிரக் கணக்கானவர்களை தடுத்துள்ளது என்பதில் எந்த கேள்வியும் இல்லை. இதுதான் அதன் நோக்கமும் கூட. ஆனால், WSWS வாசகர்களில் மிகவும் கணிசமானவர்கள் தளத்தை நேரடியாகவோ, சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது கூகுள் அளவிற்கு இது வரையில் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாத ஏனைய தேடுபொறிகள் மூலமாகவோ அணுகுகிறார்கள்.
விசுவாசமான மற்றும் மிகப்பெரியளவில் வாசகர் அடித்தளத்தைக் கொண்டுள்ள WSWS ஐ மாதத்திற்கு நூறாயிரக் கணக்கானவர்கள் பார்வையிடுகின்றனர். நாம் கூகுளின் அரசியல் தணிக்கையை எதிர்ப்போம், இதில் உங்களின் ஆதரவு எமக்கு வேண்டும்.
உலக சோசலிச வலைத் தளத்திற்காக போராடுவதில் செயலூக்கத்துடன் ஈடுபடுமாறு நாம் நமது வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். WSWS கட்டுரைகளை வினியோகிக்க உதவுங்கள். நமது கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சக-தொழிலாளர்களுக்கும் நமது கட்டுரைகளை மின்னஞ்சல் செய்யுங்கள். கூகுளின் நடவடிக்கைகளை எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு பரந்தளவில் கொண்டு செல்லுங்கள்.
உலக சோசலிச வலைத் தளத்தின் நாளாந்த கட்டுரைகளைப் பெற நீங்கள், உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்புங்கள். இதில் கூகுள் நடவடிக்கைகளை எதிர்த்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள். இறுதியாக, நாம் அரசாங்கத்துடனும் பரந்த ஆதாரவளங்களுடன் மிக நெருக்கமாக தொடர்பு வைத்துள்ள மிக சக்தி வாய்ந்த பெருநிறுவனங்களில் ஒன்றுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். தணிக்கைக்கு எதிராகவும் மற்றும் பேச்சு சுதந்திரம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் நமது எதிர்தாக்குதலை தொடர்ந்து விரிவாக்க நமக்கு நிதி உதவிகளும் அவசியப்படுகின்றன.