Print Version|Feedback
US squanders billions on new aircraft carrier
அமெரிக்கா புதிய விமானந்தாங்கி போர்க்கப்பலுக்காக பில்லியன் கணக்கில் வீணடிக்கிறது
Andre Damon
25 July 2017
பொதுச்சொத்துக்களின் இன்னுமொரு பாரிய விரயமாக, அமெரிக்கா, சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்பில் சனிக்கிழமையன்று அந்நாட்டின் 11 வது மிகப்பெரிய USS ஜெரால்ட் ஃபோர்ட் போர்க்கப்பலை (USS Gerald Ford) படையில் இணைத்தது.
F-35c போர்விமானங்களுக்குரிய அதன் விமானப்பிரிவுடன் சேர்ந்து இக்கப்பலின் நிகர விலை மதிப்பு, 30 பில்லியன் டாலர் என்பது, ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீட்டின்படி ஏறத்தாழ உலக பட்டினியைத் தீர்ப்பதற்கான ஓராண்டு செலவுக்கு சமமாகும்.
படையில் அக்கப்பல் இணைக்கப்படுவதை பார்ப்பதற்காக அங்கே கூடியிருந்த பாதுகாப்புத்துறை ஒப்பந்த செயலதிகாரிகளில் பலர், ஐயத்திற்கிடமின்றி, அவர்களின் சொந்த விமானங்களையும், கிளப் உறுப்பினர் அந்தஸ்தையும் கொண்டிருப்பார்கள், இவற்றிற்கான தொகை இந்த பிரமாண்ட கொடூரத்திற்காக செலவிடப்பட்ட சுமார் 3 பில்லியன் டாலருக்கும் மேலதிகமாக வரவு-செலவு திட்டத்திலிருந்து செலுத்தப்பட்டிருக்கும். இத்திட்டத்தை முன்நகர்த்தியதற்காக, அதற்குப் பின்னர் எத்தனை அரசியல்வாதிகளுக்கு தனியார் துறையில் ஏழு-இலக்க சம்பளத்தில் வேலை கிடைத்ததோ? யாருக்கும் தெரியாது.
அமெரிக்க இராணுவ செலவினங்களை ஆண்டுக்கு 54 பில்லியன் டாலர் அதிகரிப்பது மற்றும் 75 கப்பல்கள் அளவிற்கு கப்பற்படையின் அளவை விரிவாக்குவதற்கான அவர் திட்டங்களை ட்ரம்ப் அறிவிப்பதற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டு வந்த அமெரிக்க கடற்படையின் ஒரு மிகப்பெரிய விரிவாக்கத்தின் பாகமாக ஜெரால்ட் ஃபோர்ட் வந்துள்ளது. வரவிருக்கும் தசாப்தத்தில், அமெரிக்க இராணுவம் ஒரு ஜோடி விமானந்தாங்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்த மட்டும் திட்டமிடவில்லை, மாறாக தொலைதூர ஏவுகணை நீர்மூழ்கிக்கப்பல்கள், சிறுபோர்க்கப்பல்கள், போர்விமானங்கள், தொலைதூர குண்டுவீசிகள் மற்றும் அணுகுண்டு ஏவுகணைகளின் புதிய ரகங்களையும் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது.
ஒபாமா மற்றும் ட்ரம்ப் இருவரின் கீழும் இராணுவ செலவுகளின் விரிவாக்கத்திற்கு, ஊடகங்களின் தரப்பிலிருந்து, உற்சாகமான ஒப்புதலோ அல்லது மவுனமோ கிடைத்துள்ளது.
சுமார் மூன்றில் இருந்து நான்காண்டுகளுக்கு இந்த விமானந்தாங்கி போர்க்கப்பல் செயல்படும் காலத்திலேயே கூட, இது நிர்மூலமாக்கப்படலாம். ஐக்கிய இராஜ்ஜியம் அதன் மிகப்பெரிய விமாந்தாங்கி போர்க்கப்பலான HMS குவின் எலிசபெத்தை படையில் இணைத்த போது, ராயல் யுனெடெட் சேவைகள் பயிலகம் குறிப்பிடுகையில், ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய நாடுகளால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இப்போதைய தலைமுறை போர்க்கப்பல்-எதிர்ப்பு கடற்படை ஏவுகணைகளுக்கு எதிராக இந்த மிகப்பெரிய கப்பல் பெரிதும் பாதுகாப்பற்றது என்று குறிப்பிட்டது.
“அரை மில்லியனை பவுண்டை (விட) குறைந்த விலையிலான ஏவுகணைகளில் ஒன்று 3 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமாக விலை கொண்ட ஒரு பிரிட்டிஷ் விமானந்தாங்கி போர்க்கப்பலை குறைந்தபட்சமாவது சேதப்படுத்தக்கூடியதாகும்,” என்றது குறிப்பிட்டது.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அச்செய்தி குறித்து நகைச்சுவையாக கருத்துரைக்கையில், பிரிட்டிஷ் விமானந்தாங்கி போர்க்கப்பல் "ஒரு மிகச் சுலபமான கடல் இலக்கு தான்" என்று குறிப்பிட்டது. இதே ஏளனம் ஜெரால்ட் ஃபோர்டுக்கும் பொருந்தும். சுமார் 4,300 கப்பல் சிப்பந்திகள், விமான ஓட்டிகள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட இந்த எஃகு எந்திரம், கலினின்கிராட், சிரியா அல்லது, அதே போல, சீனா இவற்றின் 400 மைல் கடல்எல்லைக்குள் இறங்கினால், சில நிமிடங்களுக்குள் மூழ்கடிக்கப்படலாம்.
இவ்வாறு இருக்கின்ற போதினும் அமெரிக்கா இதுபோன்ற பதினொரு டைனோசர்களைக் கொண்டுள்ளது, அத்துடன் ஏனைய நாடுகளது விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் அளவிற்கு எட்டு மிகப்பெரிய ஹெலிகாப்டர் தாங்கி போர்க்கப்பல்களையும் கொண்டுள்ளது, உலக போர்க்கப்பல்களில் ஏற்றத்தக்க சுமையளவில் அமெரிக்கா மூன்று கால்பகுதிகளைக் கொண்டுள்ளது.
சனிக்கிழமை அதை படையில் இணைக்கும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உளறல்களோடு குழப்பமான உரை ஒன்றை வழங்கினார், முழுக்க முழுக்க பயங்கர அச்சுறுத்தல்களைக் கொண்டிருந்த அதில், அவர் அமெரிக்கா கோரப்பற்களுடன் தன்னை ஆயுதமயமாக்கி வருவதன் மீது ஒரு சித்திரத்தை வழங்கினார். “அமெரிக்காவின் பலம் யாருக்கும் சளைத்ததில்லை, நாம் ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய நாடாக, தலைச்சிறந்த நாடாக மற்றும் பலமாக மாறிக் கொண்டிருக்கிறோம்,” என்ற "உலகிற்கான ஒரு சேதி தான்" இந்த கப்பல் என்றார்.
"அமெரிக்கா முன்னேறி வந்து கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள், இதனால் நமது எதிரிகள் அச்சத்தில் நடுங்குவார்கள்,” என்றவர் அறிவித்தார். யார் இந்த எதிரிகள் என்பது ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை (இவர்கள் கலாஸ்னிகோவ் ஏந்திய இஸ்லாமியவாதிகள் கிடையாது என்பதை ஒருவர் அனுமானிக்கலாம்).
“ஒரு சண்டை ஏற்பட்டால், அதில் எப்போதும் நாம் தான் வெல்வோம், வெல்வோம், வெல்வோம் என்ற இந்த விதத்தில் தான் அச்சண்டை முடிவுறும் என்பதையும் இக்கப்பல் உறுதிப்படுத்துகிறது. நாம் ஒருபோதும் தோற்கமாட்டோம். நாம் வெல்வோம்,” என்பதையும் ட்ரம்ப் சேர்த்துக் கொண்டார்.
இராணுவத்தின் மீதான படைத்துறைசாரா ஆட்சியின் கோட்பாட்டை தெளிவாக மீறிய அவர், அரசாங்கத்திடம் இராணுவ செலவினங்களை விரிவாக்க கோருமாறு அந்நிகழ்வில் கூடியிருந்த கப்பல் சிப்பந்திகள் மற்றும் அதிகாரிகளுக்கு முறையிட்டார்.
மொத்தத்தில் அந்த முன்னாள் ரியல் எஸ்டேட் ஊகவணிகர் தொகுத்துரைக்கையில், “சண்டை என்று வந்துவிட்டால், நமக்கு நியாயமான சண்டை வேண்டியதில்லை. அதற்கு எதிர்விதமானதே நமக்கு வேண்டும். நமக்கு வேண்டியது வெற்றி, நாம் முழு வெற்றி பெறுவோம்,” என்றார்.
அவர் உரையில், பாசிசவாத சிந்தனை கொண்ட அவரது ஆலோசகர்களான ஸ்டீபன் பானன் மற்றும் ஸ்டீபன் மில்லரின் செல்வாக்கு இருந்ததை எடுத்துக்காட்டும் வகையில், அதில் “ஜனநாயகம்" என்ற வார்த்தையோ அல்லது மரபார்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த கூறப்படும் "தற்காப்பு" கொள்கையையோ கூட குறிப்பிடப்படவில்லை. மொத்தத்தில் அப்பட்டமான இராணுவ பலம், அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் தான் இருந்தன.
ட்ரம்ப் மற்றும் அமெரிக்க இராணுவ/உளவுத்துறை எந்திரத்தின் கூறுபாடுகளுக்கு இடையே கணிசமான கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், வரலாற்று பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக வன்முறையில் நம்பிக்கை வைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, இராணுவ அதிகாரத்தை விரிவாக்குவதன் மூலமாக உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்தை பேணுவதற்கு முனையும், அமெரிக்க கொள்கை வட்டாரங்களில் மேலோங்கியுள்ள சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.
அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வரலாற்று வீழ்ச்சியை நிறைய துப்பாக்கிகள், நிறைய போர்க்கப்பல்கள், நிறைய போர்கள் மற்றும் நிறைய படுகொலைகளைக் கொண்டு ஈடு செய்துவிடலாம் என்ற சிந்தனையின் ஸ்தூலமான உருவடிவம் தான் USS ஜெரால்ட் ஃபோர்ட் போர்க்கப்பல்.
“அமெரிக்க நூற்றாண்டு" என்பது அமெரிக்க விமானப்படை பலத்தின் பெரும் மேன்மையால் குணாம்சப்படுகிறது. உண்மையில் 1991 க்குப் பின்னர் இருந்து அமெரிக்கா தொடர்ந்து போரில் இருந்துள்ளது என்ற போதும், கடந்த ஆறு தசாப்தங்களாக ஒரேயொரு அமெரிக்க சிப்பாய் கூட எதிரி விமானத்தால் தாக்கப்பட்டதில்லை.
ஆனாலும், ரஷ்யா, சீனா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் கூட அதிகரித்தளவில் கூர்மையான மோதலுக்கு அமெரிக்கா நகர்ந்து வருகின்ற நிலையில், F-22, F-35 மற்றும் B-2 போன்ற "கண்டறியவிலா இரகசிய" போர்விமானங்கள் மற்றும் விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் உட்பட அதன் அதிநவீன ஆயுத அமைப்புமுறைகள், ரஷ்யா, சீனா அல்லது ஈரான் போன்ற சற்றே சிறிய பிராந்திய சக்தி உடனான ஒரு சுட்டுவீழ்த்தும் போர் சம்பவத்தில் கணிசமான இழப்புகளைச் சந்திக்கும் என்பது அதிகரித்தளவில் தெளிவாகி கொண்டிருக்கிறது.
இந்த யதார்த்தத்தை உணர்ந்து தளபதி மார்க் A. மில்லி குறிப்பிடுகையில், அமெரிக்கா மோதல்களுக்கான தயாரிப்பில் இறங்க வேண்டியுள்ளது, அவ்விதமான மோதல்களின் "வன்முறை அளவுகள்… மிகப்பெரியளவில் இருக்கும் என்பதோடு, அது, உலகம், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பார்த்திராத அளவுகளுக்கு இருக்கக்கூடும்,” என்றார்.
உலகெங்கிலும் மூச்சடைக்கும் அளவிலான அதன் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பரந்தளவிலான அமெரிக்க ஆயுத செலவினங்கள் இருந்தாலும், அமெரிக்க இராணுவ, பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மேலாதிக்க காலகட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பது அதிகரித்தளவில் மறுப்பதற்கில்லை.
இதுதான் கடந்த மாதம் அமெரிக்க இராணுவ போர் கல்லூரி வெளியிட்ட ஓர் ஆய்வின் தீர்மானமாக இருந்தது. அமெரிக்க அரசியல் மேலாதிக்கம் "வெறுமனே மங்கி கொண்டிருக்கவில்லை,” மாறாக "பொறிந்து போய் கொண்டிருக்கிறது,” என்றது வலியுறுத்தியது.
“இரண்டாம் உலக போரில் இருந்து முதலில் உருவான" ஒழுங்கமைப்பு, “சோவியத் ஒன்றியத்தின் பொறிவுடன் ஒரு துருவமுனைப்பட்ட அமைப்புமுறையாக மாற்றமடைந்தது" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டு செல்கிறது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “பனிப்போருக்கு பிந்தைய 17 ஆண்டு காலத்தின் போது … அமெரிக்க அதிகாரம் இன்றியமையாத விதத்தில் சவாலுக்கிடமின்றி ஒரு ஈடிணையற்ற காலமாக இருந்தது,” ஆனால் "நாம் ஒரு புதிய சகாப்தத்திற்குள் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.”
சீனா மற்றும் ரஷ்யா போன்ற "திருத்தல்வாத" சக்திகளின் எழுச்சியால், “அது—கடந்த காலத்தைப் போல—இனியும் பரந்தரீதியில் நீடித்த மற்றும் நிரந்தர உள்நாட்டு இராணுவ மேலாதிக்கத்தை தன்னியல்பாக உருவாக்க முடியாது,” என்றளவிற்கு அமெரிக்கா மிகவும் பலவீனமடைந்துள்ளது.
இந்த நிலைப்பாடு, விரைவில் வெளிவரவிருக்கும் ஒரு நூலில் வரலாற்றாளர் Alfred W. McCoy அறிவிக்கும் ஒரு மதிப்பீட்டுடன் பொருந்துகிறது: “உலகளாவிய அமெரிக்க அதிகாரம் என்று வருகையில், அனேகமாக 2020 வாக்கில் எதிர்மறை போக்குகள் துரிதமாக தீவிரமடைந்து, 2030 க்கு முன்னதாக ஒரு ஆபத்தான திரட்சியை எட்டக்கூடும் என்பதையே கிடைக்கும் அனைத்து பொருளாதார, கல்விசார், தொழில்நுட்ப தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இரண்டாம் உலக போரின் தொடக்கத்தில் வெற்றி ஆரவாரத்துடன் பிரகடனப்படுத்தப்பட்ட அமெரிக்க நூற்றாண்டு, ஏற்கனவே கிழிந்து கந்தலாகி, யார் மீதாவது பழி சுமத்துவதைத் தவிர, 2025 வாக்கில் மங்கி போய், 2030 வாக்கில் முடிந்துவிடும்,” என்றார்.
ஆனால் அமெரிக்காவின் ஒப்பீட்டளவிலான வீழ்ச்சியோ, ஏதோவிதத்தில், அமெரிக்க இராணுவ கவலைகளில் கடைசியானது தான். அமெரிக்க மேலாதிக்க உலக ஒழுங்கமைப்பின் பொறிவுக்குப் பின்னர், “[ச]கல நாடுகளும் மற்றும் பாரம்பரிய அரசியல் அதிகார வடிவங்களும் அதிகரித்த அழுத்தத்தின் கீழ் உள்ளன,” என்று இராணுவ போர் கல்லூரி அறிக்கை குறிப்பிடுகிறது. “பனிப்போருக்குப் பிந்தைய உலகளாவிய அமைப்புமுறையின் உடைவானது, நடைமுறையளவில் அனைத்து நாடுகளது அரசியல், சமூக மற்றும் பொருளாதார நூலிழையில் ஏற்பட்டுள்ள உள்ளார்ந்த வீழ்ச்சிகளோடு சேர்ந்துள்ளது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.
“அரசாங்கங்களுக்கும் மற்றும் ஆட்சி செலுத்துவதற்கான அடிப்படை உரிமை மீதான அவற்றின் நிர்வாகமுறைக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி" குறித்து எச்சரித்த இதற்கு முந்தைய அறிக்கை ஒன்றை அது மேற்கோளிட்டது. “இன்று, அனைத்து நாடுகளும் அவற்றின் அதிகாரம், செல்வாக்கு, அது எட்டக்கூடிய தூரம் மற்றும் பொதுவான ஈர்ப்பு ஆகியவற்றில் ஒரு செங்குத்தான வீழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன,” அதேவேளையில் "எண்ணற்ற அரசியல் அணிசேர்க்கை அல்லது விசுவாசத்தின் மாற்றீட்டு ஆதாரங்கள்" மக்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.
“தேசிய போட்டியாளர்களால் மட்டுமின்றி, மாறாக "அவை அடித்தளத்தில் கொண்டுள்ள பலவீனமான மற்றும் அமைதி குலைந்த சமூக ஒழுங்கமைப்பினாலும்" “அச்சுறுத்தப்பட்டு, புதைமணலில் நின்று கொண்டு அனைத்து நாடுகளும் போட்டி நலன்கள் மீது ஒன்றோடொன்று சண்டையிட்டு வருகின்றன" என்றது நிறைவு செய்கிறது. இவ்விடயத்தில், புதைமணல் என்பது போர், சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவத்தின் மீதே கூட மக்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பிற்கான உவமையாகும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, ஒரேநேரத்தில் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் இப்போது அதன் நேட்டோ கூட்டாளிகளுடனும் கூட ஒவ்வொரு இடத்திலும் விளாசப்படுகிறது. ட்ரம்ப் அவரது விமானந்தாங்கி போர்க்கப்பலை படையில் இணைத்த அதே வாரயிறுதியில், பிரதிநிதிகள் சபை ஒரு சட்டமசோதா மீது ஓர் உடன்பாட்டை எட்டியது, அது ரஷ்யாவுடன் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய நிறுவனங்களுக்கு தடைவிதிக்கிறது, இந்நகர்வு, கசியவிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய துண்டறிக்கையின்படி, “ஒருசில நாட்களுக்குள்" ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பதில் நடவடிக்கைகளைக் கொண்டு வரும்.
இவையனைத்தும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையை வழங்குகின்றன: பொருளாதார தேக்கநிலை, புவிசார்அரசியல் வீழ்ச்சி மற்றும் உள்நாட்டில் சட்டபூர்வத்தன்மையின் நெருக்கடியை முகங்கொடுத்துள்ள அமெரிக்க ஆளும் உயரடுக்கு, போர் எந்தளவிற்கு இரத்தக்களரியாக மற்றும் பேரழிவாக இருந்தாலும், அது அதைத்தான் அதன் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக பார்க்கிறது. போருக்கு எதிராக ஒரு புதிய சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதற்கு அப்பாற்பட்டு, இம்முறை அமெரிக்காவினால் தூண்டிவிடப்படும் மற்றொரு மிகப்பெரிய உலக இராணுவ மோதல் வெடிப்பதை எதுவும் தடுத்துவிடப் போவதில்லை.