Print Version|Feedback
Sri Lankan government appeases Buddhist hierarchy
இலங்கை அரசாங்கம் பெளத்த உயர்பீடத்தை சமாதானப்படுத்துகிறது
By K. Ratnayake
11 July 2017
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெள்ளிக்கிழமை நாட்டின் பிரதான பௌத்த மத குருமார்களை கண்டியில் சந்தித்து, அவர்களது சம்மதமின்றி அரசியலமைப்பு மாற்றங்கள் எதுவும் செய்யப்பட மாட்டாது என்று உறுதிபடுத்தினார். அனைத்து பௌத்த குழுக்களினதும் உயர் பீடத்தினர் கடந்த செவ்வாயன்று சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை தூண்டிவிடுவதை இலக்காகக் கொண்ட ஒரு தொகை கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அவர்களது கோரிக்கைகளில் அடங்கியவை: "பலாத்கார காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தம்" மீது பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை சமர்ப்பிப்பதை தாமதித்தல்;” தேர்தல் முறைமை தவிர நாட்டின் அரசியலமைப்பில் புதிய மாற்றங்கள் செய்யக் கூடாது; தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த கலாச்சார மற்றும் தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பது; பெளத்தர்களின் குறைகளை ஆராய்வதற்காக ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களில் இருந்து தோன்றும் ஒரு தீவிர அரசியல் நெருக்கடியின் பின்னணியிலேயே சிறிசேனவின் சந்திப்பு நடைபெற்றது. பெருகிவரும் வெகுஜன எதிர்ப்பை பிளவுபடுத்துவதற்காக வகுப்புவாதத்தை ஊக்குவிக்க அரசாங்கம் வேண்டுமென்றே முயல்கிறது.
பல தசாப்தங்களாக, சிங்கள தேசத்தை பாதுகாப்பதன் பெயரில், முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்கும் கருத்தியல் வழிவகைகளாக, நெருக்கடி காலங்களில் சிங்கள இனவாதம் மற்றும் தமிழர்-விரோத பேரினவாதத்தை ஆளும் வர்க்கங்கள் மீண்டும் மீண்டும் சுரண்டிக் கொண்டிருக்கிறன. பிரதான கருவிகளில் ஒன்று பிற்போக்கு பௌத்த ஸ்தாபனம் ஆகும். இது அரசியலமைப்பில் அரச மதமாக பௌத்தத்தை ஸ்தாபித்ததில் இருந்து கணிசமான சலுகைகளை பெற்றுள்ளது.
சிறிசேன துறவிகள் சந்திப்பதற்கு முன்னர், அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு பலாத்காரமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய மசோதாவை சமர்ப்பிப்பதை தள்ளி வைத்தது. அரச அதிகாரத்துடன் அல்லது ஆதரவுடன் செயல்படும் எந்தவொரு பொது அதிகாரி அல்லது நபரும், யாரையாவது கைது செய்து அல்லது கடத்திச் சென்று அதை அறிவிக்காமல் விடுவது அல்லது அந்த நபரின் இருப்பிடத்தை வெளிப்டுத்தாமல் மறைப்பதும் பலாத்காரமாக காணாமல் ஆக்கும் குற்றமாகும் என இந்த வரைவு செட்டம் அறிவிக்கின்றது..
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, ஆயிரக்கணக்கானவர்கள் இராணுவம், துணைப்படைக் குழுக்கள் மற்றும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது கடத்தப்பட்டுள்ளனர். காணாமற்போனோரில் பலர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
அரசாங்கம் தன்னை ஜனநாயகமானதாக காட்டிக் கொள்ளும் பொருட்டும் காணாமல்போன உறவினர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு பிரச்சாரம் செய்யும் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் மத்தியில் கோபத்தை திசை திருப்பும் முயற்சியாகவும் இந்த சோடிப்பு சட்டத்தை அரசாங்கம் முன்வைக்கின்றது. அதே நேரம், சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களை கொண்டுவருவதை அரசாங்கம் அனுமதிக்காது என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த மசோதாவை எதிர்த்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வென்ற இராணுவத்தை தண்டிக்க முயல்வதாக குற்றம் சாட்டினார். ஆயினும், நிதி அமைச்சர் மங்கள சமரவீர, "இந்த மசோதா எதிர்காலத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தும், கடந்த கால நிகழ்வுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இராஜபக்ஷவும் அவரது பாராளுமன்ற குழுவும், எந்தவொரு யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கும் எதிராக இராணுவ "போர் வீரர்களை" பாதுகாப்பது உள்ளடங்களாக சிங்கள இனவாதத்தை கிளறிவிட்டு, அரசாங்கத்தை கவிழ்க்கவும் ஆட்சியைக் கைப்பற்றவும் முயற்சிக்கின்றது. 2015 ஜனவரி 8 அன்று ஜனாதிபதித் தேர்தலில், இராஜபக்ஷ சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளுக்கு விரோதமாக இருந்த அமெரிக்காவின் ஆதரவுடன் நடந்த ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கை மூலம், அவர் அகற்றப்பட்டார்.
தேர்தலின் போது, சிறிசேன, இராஜபக்ஷவுக்கு ஒரு ஜனநாயக மாற்றீடாக காட்டிக்கொண்டு, சர்வாதிகார நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்தார். அரசியலமைப்பு மாற்றத்தின் பாகமாக நாட்டின் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாகவும் அவர் உறுதியளித்தார். 2016 ஜனவரியில் அரசியலமைப்பு திருத்தம் ஆரம்பிக்கப்பட்டாலும், எந்த ஆவணமும் வெளிவரவில்லை.
கடந்த வெள்ளியன்று நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து, எந்தவொரு புதிய அரசியலமைப்பு வரைவைப் பற்றியும் மகா சங்கத்திடம் அல்லது உயர் பெளத்த குருக்களிடம் ஆலோசிப்பதாக உறுதியளித்து சிறிசேன ட்வீட் செய்தார். அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சியை அல்லது பௌத்தத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள உயர் ஸ்தானத்தையும் அரசாங்கம் மாற்றாது என்று அவர் வலியுறுத்தினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குறிப்பிடத்தக்க அதிகாரப் பகிர்வு எதுவும் இருக்கப் போவதில்லை மற்றும் பௌத்தத்தை அரச மதமாக்கியுள்ள பிரிவில் எந்த திருத்தமும் செய்யப் போவதில்லை.
சிறிசேனவின் கருத்து இராஜபக்ஷ குழுவுக்கு எதிராகவும் இருந்தது. திருகோணமலையில் உரையாற்றிய இராஜபக்ஷ, அதிகாரத்தை பகிரும் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து நாட்டை பிளவுபடுத்த அரசாங்கம் முயல்கின்றது என்று மீண்டும் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினார். பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை உத்தரவாதமளிக்கும் அரசியலமைப்பு பிரிவை நீக்குவதற்கு திட்டமிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பௌத்த ஸ்தாபனத்தை சமாதானப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு, ஆழமடைந்துவரும் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளின் மத்தியிலேயே வந்துள்ளது. ஏற்றுமதிகள் குறைந்து வருகின்றன மற்றும் கடன் அதிகரித்து வருகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அரசாங்க வருமானத்தின் பிரதான மூலமான வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.3 வீதத்தால் குறைந்துள்ளது. ஏப்ரலில் பணவீக்கம் 7.1 சதவீதமாக அதிகரித்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளை சீரழித்தது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மார்ச் மாதத்தில் கொடுக்கவிருந்த அதன் பிணை எடுப்புக் கடனின் கடைசி தவணையை தள்ளிவைத்து, வரிச் சட்டங்களை திருத்தக் கோருகிறது. கடந்த வாரம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் புதிய சட்டங்கள் முன்வைத்தது. இவை உழைக்கும் மக்களின் ஊதியங்களில் தீவிரமாக தாக்கும். தனியார்மயமாக்கல் மற்றும் விலை மானிய வெட்டுக்கள் உட்பட சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட மற்ற சிக்கன நடவடிக்கைகளையும் இது பின்தொடர்கின்றது.
தொழிலாள வர்க்கத்தின் வளரும் எதிர்ப்பைப் பற்றி அரசாங்கம் பீதியடைந்துள்ளது. ஜூன் 25, ஆயிரக்கணக்கான மின்சார ஊழியர்கள் சம்பள உயர்வு கோரிய கொழும்பில் ஊர்வலம் நடத்தினர். ஜூன் 28 அன்று, 22,000 தபால் தொழிலாளர்கள் தனியார்மயமாக்க நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர். ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்னர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நிறுத்தின. கடந்த வாரம் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் கொழும்பில் வேலை கோரி பேரணி நடத்தினர். மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற மாணவர்களின் ஆதரவுடன், ஒரு தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு கோரி ஐந்து மாதங்களாக விரிவுரைகளை புறக்கணித்துள்ளனர்.
முன்னணி சோசலிஸ்ட் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது குழுக்களாலும் சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியாலும் ஆதரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், இந்த போராட்டங்களை கட்டுப்படுத்தி மற்றும் நாசப்படுத்தின. அரசாங்கம் எதிர்ப்புக்களை அடக்குவதை நவ சம சமாஜ கட்சி நேரடியாக பாராட்டியுள்ளது.
அரசாங்கத்தின் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தீவிரமான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உதவுகிறது. ஜூன் 21, அரசாங்கம் சுகாதார அமைச்சை ஆக்கிரமித்திருந்த மாணவர்களின் மீது கலகப் பிரிவு போலீஸ் தாக்குதலுக்கு உத்தரவிட்டது. போலீசார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயப்படுத்தியதுடன், பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த எச்சரிக்கையாக ஆறு ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர்.
பொலிஸ்-அரச நடவடிக்கைகள் எந்த எதிர்ப்பையும் நசுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சூழலை மாசுபடுத்தும் வகையில் அரச அதிகாரிகளால் குப்பைகள் கொட்டப்படுவதை எதிர்க்கும் மக்கள் மீது பாய்வதற்கு படையினரும் பொலிஸ் குழுக்களும் திரட்டப்பட்டுகின்றன.
அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து பிரிவுகளாலும் பிற்போக்கு பேரினவாதம் தூண்டிவிடப்படுவது, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். குவியும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு விரோதமாக எழும் எந்த எதிர்ப்பையும் நசுக்குவதற்கு ஒட்டுமொத்த அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் சர்வாதிகார மற்றும் எதேச்சதிகார வழிமுறைகளை நாடுகின்றன.