Print Version|Feedback
French armed forces chief of staff resigns in protest over military budget cuts
இராணுவ வரவு-செலவு திட்ட வெட்டுக்களை எதிர்த்து பிரெஞ்சு ஆயுதப்படை தலைமை தளபதி இராஜினாமா செய்கிறார்
By Alex Lantier
20 July 2017
பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கு மீது ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் ஒரு வாரமாக நீண்ட பகிரங்க மோதலுக்குப் பின்னர், பிரெஞ்சு ஆயுதப்படை தலைமை தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே (Pierre de Villiers) நேற்று இராஜினாமா செய்தார். திட்டமிடப்பட்டுள்ள இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு மீதான அவர் "ஆட்சேபணைகளை" வலியுறுத்தியும் மற்றும் மக்ரோனின் கொள்கைகள் தேசிய பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் என்று தாக்கியும் டு வில்லியே ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அவர் எழுதினார், “இப்போதைய சூழலில், பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு மக்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியதாக, மற்றும் நம் நாட்டின் அபிலாஷைகளுக்கு ஒத்துழைப்பாக இருக்கக்கூடியதாக நான் நம்புகின்ற ஒரு விதமான இராணுவத்தை இனியும் என்னால் பேண முடியாதென நம்புகிறேன். இதன் காரணமாகவே நான் முடிவெடுத்துள்ளேன், இவை என் மீது சுமத்தப்பட்டவையாகும், மேலும் இன்று எனது இராஜினாமாவை ஜனாதிபதியிடம் சமர்பித்தேன், அவர் அதை ஏற்றுக் கொண்டார்.”
டு வில்லியே இன் இராஜினாமா, போர் இல்லாத ஒரு காலக்கட்டத்தில் முன்னுதாரணமற்றதாகும். அல்ஜீரிய போர் நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்த போது 1961 இல் தான் கடந்த முறை பிரான்சின் உயர்மட்ட அதிகாரி இராஜினாமா செய்தார், அப்போது அல்ஜீரிய சுதந்திரம் மற்றும் பாரீஸ் அரசாங்கத்தை எதிர்த்த அதிகாரிகள் தலைமையில் ஏப்ரல் 21, 1961 இல் அல்ஜீரியர்களால் முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் தளபதி Jean Olié பதவியை இராஜினாமா செய்தார்.
இராணுவத்துடனான மக்ரோன் உறவில் ஏற்பட்ட இந்த உடைவை விட, மக்ரோன் வலிந்து சென்று இராணுவத்தைச் சாமாதனப்படுத்த முயன்று கொண்டிருக்கிறார் என்பது அனைத்திற்கும் மேலாக மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவர் கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் கொண்டு வருவது குறித்து விவாதித்துடன், பாதுகாப்புத்துறை செலவுகளை 2025 க்குள் பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீதத்திற்கு, ஏறத்தாழ 50 சதவீதம் உயர்த்த சூளுரைத்திருந்தார். ஆனால் ஜூலை 11 இல் பொதுக்கணக்குத்துறை அமைச்சர் Gérald Darmanin ஓராண்டு பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கில் தற்காலிகமாக 850 மில்லியன் யூரோ வெட்டை அறிவித்ததும், டு வில்லியே இந்நகர்வுக்கு எதிராக பகிரங்கமாக கிளர்ந்தெழுந்தார்.
அதற்கடுத்த நாள், மக்ரோனின் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட குடியரசு அணிவகுப்பு கட்சியில் (LRM) முதல்முறையாக பதவியேற்றிருந்த பல சட்டமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்ட தேசிய நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை குழு கூட்டம் ஒன்றில் டு வில்லியே கலந்து கொண்டார். அவர் வரவு-செலவு திட்டத்தை பகிரங்கமாக விமர்சித்ததுடன், குழுவின் கரவொலிகளுடன், “இவ்விதமாக என்னை யாரும் கீழ்தரமாக (f*ck) கையாள்வதை நான் அனுமதிக்கப் போவதில்லை,” என்று நிறைவு செய்தார்.
அக்குழுவின் தலைவரும், முன்னணி LRM அங்கத்தவருமான ஜோன்-ஜாக் பெரிடேய் அவரை ஆதரித்தார்: “ஒரேயொரு சிப்பாய் கூட, போதுமான தளவாடங்கள் இல்லாத காரணத்தினால், உயிரிழந்துவிடக் கூடாது. நமது படைகளுக்கு ஆயுத தளவாடங்கள் அவசியம்,” என்றார்.
ஜூலை 14 பாஸ்டி தின இராணுவ அணிவகுப்புக்கு முன்னதாக, ஜூலை 13 அன்று இராணுவ உயரதிகாரிகளை வரவேற்கையில் மக்ரோன் அவர் உடன்-பணிபுரிபவர்களுக்கு முன்னாலேயே டு வில்லியே ஐ பகிரங்கமாக கடிந்து கொண்டு விடையிறுத்தார். அதிகாரிகளிடையே உரையாற்றுகையில் மக்ரோன் கூறினார்: “பகிரங்கமாக சில விவாதங்களைச் செய்வது கண்ணியமற்றதாக நான் கருதுகிறேன். எனக்கு குறிப்பிட்ட கடமைப்பாடுகள் உள்ளன. நான் உங்கள் தலைவர். நமது சக பிரஜைகளுக்கும் மற்றும் படையினருக்கும் நான் அளித்துள்ள கடமைப்பாடுகளை எவ்வாறு பூர்த்தி செய்வதென எனக்கு தெரியும். ஆகவே இந்த விடயத்தில், எனக்கு எந்த அழுத்தமோ அல்லது கருத்துக்களோ அவசியமில்லை,” என்றார்.
டு வில்லியே, பாஸ்டி தினத்தன்று அவர் பேஸ்புக் பக்கத்தில் ஆத்திரமூட்டும் கடிதம் ஒன்றை பிரசுரித்து விடையிறுத்தார். அவர் எழுதினார், “வழக்கத்திற்கு மாறாக, எனது அடுத்த பதவி குறித்து நான் மவுனமாக இருப்பேன்,” இது அவர் இராஜினாமா செய்யவிருப்பதை உறுதிப்படுத்தியது. அவர் மக்ரோனை பெயரிடாமல் குறிப்பிடுகையில், பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் மற்றும் நாஜிக்களுடனான அதன் கூட்டு-ஒத்துழைப்புக்கும் எதிராக தளபதி Charles Delestraint ஆயுதப்படை எதிர்ப்புக்குள் இறங்குவதற்கு முன்னதாக, பிரான்சை நாஜி வெற்றி கொண்டதன் மீது ஜூலை 1940 இல் Delestraint வழங்கிய உரையை மேற்கோளிட்டார்.
டு வில்லியே எழுதினார், “தோல்வி ஓர் உண்மை தான் என்றாலும் கூட, 'ஓர் அடிபட்ட நாயின் அல்லது அடிமையின் மனநிலையை' நிராகரிக்குமாறு அவர் உரை உறுதியாக முறையிட்டது. பல மாதங்களுக்குப் பின்னர், இந்த வார்த்தைகளின்படி செயல்பட்டு, அவர் இரகசிய இராணுவத்தின் தலைவரானார். கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவர், எதற்காக செயலூக்கத்துடன் உதவினாரோ அந்த இறுதி வெற்றிக்கு மூன்று வாரங்களுக்கும் குறைந்த நாட்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 19, 1945 இல், Dachau உள்ள முகாமில் உயிரிழந்தார்.”
Delestraint ஐ குறித்த இந்த நினைவுகூரல், டு வில்லியே ஐ நாஜி எதிர்ப்பு வட்டத்தில் கொண்டு வந்தாலும் கூட, ஒரு தீர்க்கமான அச்சுறுத்தலையும் உள்ளடக்கி உள்ளது. Delestraint இன் பல்வேறு முதலாளித்துவ-ஆதரவு சக தலைவர்களும், இரண்டாம் உலக போரில் உயிர்பிழைத்த கோலிச எதிர்ப்பு கன்னைகளும், Georges Bidault மற்றும் Jacques Soustelle போன்றவர்களும், இறுதியில் அல்ஜீரிய போரின் போது வலதுசாரி படைகளுடன் அணிசேர்ந்து, 1961 பதவிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்திருந்தனர்.
பிரான்சின் ஜனாதிபதிக்கும் அதன் ஆயுதப்படையின் தலைவருக்கும் இடையே நடந்துவரும் பகிரங்கமான மோதல், ஐரோப்பா எங்கிலும் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் பொறிவை சுட்டிக்காட்டுகிறது. 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததற்குப் பின்னர் கால் நூற்றாண்டாக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அதிகரித்து வரும் இராணுவ ஆக்ரோஷமும், அத்துடன் உள்நாட்டில் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க மோதல்களும் ஒன்று சேர்ந்து, இராணுவத்தின் அரசியல் நிலைப்பாட்டை பரந்தளவில் பலப்படுத்தி உள்ளன. ஐரோப்பிய படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈராக், லிபியா மற்றும் மாலி வரையில் அமெரிக்க தலைமையிலான நவ-காலனித்துவ போர்களில் மட்டும் இணையவில்லை, மாறாக உள்நாட்டு அரசியலிலும் முக்கிய சக்தியாக மேலெழுந்துள்ளன.
ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகள், சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக அதிகரித்து வரும் மக்களின் கிளர்ச்சிகரமான மனோபாவம், ஐரோப்பாவில் இளைஞர்களிடையே நடத்தப்பட்ட இந்தாண்டின் “Generation What” கருத்துக்கணிப்பில் பதிவானது. ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், பிரெஞ்சு இளைஞர்களில் 60 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்கள், அரசியல் அமைப்புமுறைக்கு எதிரான "மிகப் பெரியளவிலான எழுச்சியில்" இணைய விரும்புவதை அது கண்டறிந்தது. புரட்சிக்கு முந்தைய நிலைமைக்குள் ஐரோப்பா நுழைந்து கொண்டிருக்கிறது என்பது முன்பினும் தெளிவாகி வருகின்ற நிலையில், ஆளும் வர்க்கமோ முன்பினும் அதிகமாக இராணுவம் மற்றும் தீவிர வலதின் மீது பலமாக சார்ந்துள்ளது.
2014 இல் அதன் வெளியுறவு கொள்கையின் மீள்இராணுவமயமாக்கம் மற்றும் இராணுவ செலவினங்களில் மிகப்பெரும் தீவிரப்பாட்டை தொடங்கிய ஜேர்மனியில், அதிவலது கல்வியாளர்களும் வரலாற்றாளர்களும் ஹிட்லர் மற்றும் நாஜிக்களுக்கு மறுவாழ்வளிக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரான்சில் அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகள் உட்பட ஜேர்மன் படைக்குள், பரவலாக நவ-நாஜி வலையமைப்பு இருப்பதாக இந்த வசந்தகாலத்தில் கண்டறியப்பட்ட பின்னர், முன்னணி செய்தியிதழ் Der Spiegel, நாஜி அதிகாரிகளை மீண்டும் முன்மாதிரிகளாக ஏற்குமாறு அழைப்புவிடுத்த இராணுவத்துறை வரலாற்றாளர் Sönke Nitzel இன் கட்டுரை ஒன்றை பிரசுரித்தது.
பிரான்சில், அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநீக்கம் செய்த மற்றும் பாதுகாப்பு படைகளது பொலிஸ் நடவடிக்கைகளை நீதித்துறை மேற்பார்வையிடுவதை முடிவுக்கு கொண்டு வந்த அவசரகால நிலையின் கீழ், இராணுவப்படைக்கு 2015 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் உள்நாட்டு ரோந்து வேலை வழங்கப்பட்டது. பின்னர் இந்த அவசரகால நிலை, தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் மீது ஆழ்ந்த வெட்டுக்களை திணிப்பதற்கு மக்ரோன் இப்போது பயன்படுத்த உத்தேசித்திருப்புதம் மற்றும் பரந்தளவிலான மக்கள் மதிப்பிழந்ததுமான தொழிற்சட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாரிய போராட்டங்களை மூர்க்கமாக ஒடுக்குவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது. இவையெல்லாம் மக்ரோன் தயாரித்து கொண்டிருக்கும் பல பில்லியன் யூரோ இராணுவ செலவின அதிகரிப்புக்கு நிதி வழங்க நோக்கம் கொண்டவையாகும்.
மக்ரோன் அவரது பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு ஓர் அரசியல் அடித்தளமாக, இராணுவ மற்றும் பொலிஸ் முகமைகளுக்கும், அத்துடன் அதிவலதிற்கும் ஊட்டமளிக்க முனைந்துள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று இரவு, தோல்வியடைந்த நவ-பாசிசவாத ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு அவர் "குடியரசு வணக்கம்" (Republican salute) செலுத்தினார். இப்போதோ, தொழிலாளர்களுக்கு எதிரான வெட்டுக்கள் முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், ஒரு சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்டத்தை பேணுவதற்காக மக்ரோன் பாதுகாப்புத்துறை செலவின வெட்டுக்களுக்கு அழுத்தமளிக்கின்ற நிலையில், தங்களின் தனியுரிமைகள் மீதான எந்த மட்டுப்படுத்தல்களையும் எதிர்க்கும் அதிகாரிகளின் ஓர் கிளர்ச்சியை அவர் முகங்கொடுத்து வருகிறார்.
டு வில்லியே அவர் பதவியை இராஜினாமா செய்துவிட்டாலும், இது பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்குள் வெடித்து வரும் மோதல்களை தீர்த்துவிடும் என்று நம்புவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை, ஏற்கனவே அவர் எதிர்ப்புக்கு அழைப்புவிடுத்திருந்தார். வெறுமனே வரவு-செலவு திட்ட மோதல்கள் மட்டுமே தீவிரமடைய போவதில்லை, மாறாக டு வில்லியே க்கு வலதுசாரி வட்டாரங்களிலும் பரந்த ஆதரவுள்ளது.
அவர் சகோதரர் பிலிப் டு வில்லியே, Vendée பிராந்தியத்தை மையமாக கொண்ட வலதுசாரி தேசியவாத மற்றும் ஐரோப்பிய ஒன்றிய-எதிர்ப்பு கட்சியான பிரான்ஸ் நோக்கிய அணிவகுப்பு கட்சியின் (Rassemblement pour la France - RPF) தலைவர் என்பதுடன், இந்தாண்டு ஜனாதிபதி தேர்தல்களில் அவர் மரீன் லு பென்னுக்கு அனுதாபங்களைக் காட்டியிருந்தார். பிலிப் டு வில்லியே உத்தியோகபூர்வமாக லு பென்னை ஆதரிக்கவில்லை என்றாலும், பிரான்ஸ் எழுக (Debout la France - DLF) கட்சி தலைவர் நிக்கோலா டுபோன்-எய்னியோன் அதை செய்தார்.
நேற்று டு வில்லியே இராஜினாமா செய்த பின்னர், லு பென் மற்றும் முன்னணி RPF மற்றும் DLF அதிகாரிகள் அனைவரும் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் அவரை பாராட்டினர். லு பென் மக்ரோனை "திமிர் பிடித்தவர்" என்று கண்டித்ததுடன், டு வில்லியே உடனான நெருக்கடியை அவர் கையாளும் முறையானது, “அவர் மனோபாவங்கள் மற்றும் அவர் அரசியல் இரண்டிலும், திரு. மக்ரோனின் மிக தீவிர அத்துமீறல்களையும் மற்றும் முற்றிலும் கவலையளிக்கக் கூடிய வரம்புகளையும் எடுத்துக்காட்டுகிறது, என்றார்.