Print Version|Feedback
Amid escalating militarism
Poll shows 76 percent of Americans fear a major war
தீவிரப்பட்டு வரும் இராணுவவாதத்தின் மத்தியில்
அமெரிக்கர்களில் 76 சதவீதத்தினர் ஒரு பெரும் போர் அச்சத்தில் இருப்பதை கருத்துக்கணிப்பு காட்டுகின்றது
Bill Van Auken
19 July 2017
அதன் இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் உள்ளடங்கலாக அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தை, பெரும்திரளான அமெரிக்க உழைக்கும் மக்களிடமிருந்து பிரிக்கும் பரந்த இடைவெளியானது, குறிப்பாக போர் அச்சுறுத்தல் மீது கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டு வருகிறது.
அமெரிக்க மக்களில் முழுவதுமாக 76 சதவீதத்தினர், அடுத்த நான்காண்டுகளுக்குள் அந்நாடு ஒரு மிகப்பெரும் போருக்குள் இழுக்கப்படுமென அஞ்சுவதாக செவ்வாயன்று வெளியான NBC கருத்துக்கணிப்பு ஒன்று கண்டறிந்திருந்தது. அதிகரித்து வரும் போர் அபாயம் குறித்து கவலைக் கொண்டுள்ள அமெரிக்கர்களின் பங்கு இந்த பெப்ரவரிக்கு பின்னர் இருந்து 10 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளதாக அத்தகவல் சுட்டிக்காட்டியது.
இந்த அச்சங்களுக்கு ஆழ்ந்த காரணங்கள் உள்ளன. அமெரிக்க தேர்தல்களில் மாஸ்கோ குறுக்கிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களோடு, ட்ரம்ப் முகாமின் கூட்டமென கருதப்படுவதை மையப்படுத்தி, பெப்ரவரிக்குப் பின்னர் இருந்து அமெரிக்க மக்கள் சளைக்காத ரஷ்ய-விரோத விஷமப்பிரச்சாரம் ஒன்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரம், உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணு சக்தியான ரஷ்யாவுடன் அமெரிக்க இராணுவ மோதலைத் தொடரவும் மற்றும் தீவிரப்படுத்தவும் தீர்மானகரமாக இருப்பதே, இந்த அரசியல் மற்றும் ஊடக பிரச்சாரத்திற்கு உந்துசக்தியாக உள்ளது. மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான அதன் முயற்சிக்கு ரஷ்யா ஒரு தடையாக இருப்பதாக பென்டகன் மற்றும் சிஐஏ காண்கின்றன.
இதேபோல பென்டகன் சீனாவிற்கு எதிராகவும் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டுள்ளது. தென் சீனக் கடலில் சீனா உரிமைகோரும் எல்லையில் அமெரிக்க போர்க்கப்பல்களின் அத்துமீறல்கள், இந்திய-சீன எல்லை பிரச்சினையை ஊக்குவிப்பது, ஜப்பான் மற்றும் தாய்வான் இரண்டின் இராணுவ ஆயத்தப்படுத்தலை ஆதரிப்பது ஆகியவை இதில் உள்ளடங்கும்.
இதற்கிடையே ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் மீண்டும் இராணுவ நடவடிக்கையைக் கொண்டு வட கொரியாவையும் அச்சுறுத்துகிறது, மிக சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் செல்லும் தொலைதூர ஏவுகணை என்று கூறப்படுவதை அது சோதனை செய்ததற்கு விடையிறுப்பாகவும் இது நடந்தது.
ஒரு மிகப்பெரும் போர் வெடிக்குமென அஞ்சுபவர்களின் எண்ணிக்கை பெப்ரவரிக்குப் பின்னர் இருந்து கூர்மையாக அதிகரித்திருப்பதானது, ஐயத்திற்கிடமின்றி, இன்னும் பல சம்பவங்களாலும் தூண்டிவிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் சிரியா மீது அமெரிக்க கப்பற்படையின் ஏவுகணை தாக்குதலும், அதன் பின்னர் ஒரு சிரிய போர்விமானத்தை அமெரிக்க போர்விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தியமையும் மற்றும் 1945 இல் ஹிரோஷிமா-நாகசாகி மீதான குண்டுவீச்சுக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய ஆயுதமான MOAB என்றழைக்கப்படும் ஒரு குண்டை ஆப்கானிஸ்தானில் வீசியமையும் இவற்றில் உள்ளடங்கும்.
கோழைத்தனமான பெருநிறுவன ஊடகங்களால் பெரிதும் அமெரிக்க மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டிருந்தாலும், இப்புவியில் அமெரிக்காதான் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க தலைமையிலான மொசூல் முற்றுகையில், கடந்த வாரத்திற்குள், குறைந்தபட்சம் 7,000 பேர் இடிபாடுகளில் புதையுண்டு உயிரிழந்ததுடன் சேர்ந்து, கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில், 2017 இன் முதல் பாதியில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை வெறும் ஆறு மாதங்களில், 1,662 பேரின் படுகொலைகளுடன் சேர்ந்து, 16 ஆண்டுகால அமெரிக்க போரிலேயே ஒரு சாதனை உயரத்தை எட்டியுள்ளது. அமெரிக்க விமானத் தாக்குதல்களின் எண்ணிக்கை, ஒபாமா "கொதித்தெழுந்து" அந்நாட்டிற்குள் 100,000 க்கும் அதிகமான துருப்புகளை அனுப்பியபோது இருந்த மட்டத்தை மீண்டும் எட்டிய நிலையில், கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கொல்லப்பட்டவர்களில் பெண்களின் எண்ணிக்கை 23 சதவீதமும், கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் சவூதி தலைமையில் யேமனுக்கு எதிராக அண்மித்து இனப்படுகொலை மாதிரியான ஆக்ரோஷ போருக்கான அதன் ஆதரவையும் வாஷிங்டன் அதிகரித்துள்ளது. அங்கே யேமனில் பாரிய குண்டுவீச்சுக்கள் 12,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்று, அடிப்படை உள்கட்டமைப்பைச் சிதைத்து, பஞ்சம் மற்றும் பாரியளவில் காலரா தொற்றுநோய்க்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது.
புதிதாக வெளியிடப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு, அமெரிக்காவிற்குள் கட்டவிழ்ந்து வரும் இரண்டு எதிரெதிர் நிகழ்வுபோக்குகளை அம்பலப்படுத்துகிறது. ஒருபுறம், பாரிய பெரும்பான்மை அமெரிக்க மக்களிடையே அதிகரித்தளவில் போர் குறித்த பீதி அதிகரித்து வருவதுடன், அவர்கள் அதை எதிர்க்கின்றனர். மறுபுறம், அமெரிக்க அரசாங்கமும் அதை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் செல்வந்த தன்னலக் குழுக்களும் ஒரு மிகப்பெரும் இராணுவ மோதலைத் தூண்டுவதற்கு முன்பினும் அதிகமாக உறுதி பூண்டுள்ளன.
நடத்தப்பட்டு வரும் அமெரிக்க போர்களுக்கும் மற்றும் புதிய போர்களுக்கான தயாரிப்புக்கும் நிதி ஒதுக்க, NBC கருத்துக்கணிப்பு வெளியாவதற்கு வெறும் நான்கு நாட்களுக்கு முன்னதாக, இருகட்சிகளது அதிகரித்த பெரும்பான்மையோடு அண்மித்து 700 பில்லியன் டாலர் பென்டகன் வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது, இது ட்ரம்ப் வெள்ளை மாளிகை கோரிய தொகையை விட அதிகமாகும்.
“உலக தலைமைக்குப் பிந்தைய உலகின் இடர் மதிப்பீடு" மீது அமெரிக்க இராணுவ போர் கல்லூரியின் மூலோபாய ஆய்வு பயிலகம் தயாரித்து வெளியிட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, தீவிரப்படுத்தப்பட்டு வரும் போர் ஆயத்தப்படல்கள் குறித்து சிந்திப்பவர்களின் கருத்துக்களை வெளிச்சமிடுகிறது. அது "அமெரிக்கா" மற்றும் அதன் இராணுவம் "எதிர்க்கொண்டு வரும்" இரண்டு "பாதகமான யதார்த்தங்களை" மேற்கோளிடுகிறது: “முதலாவதாக, அதிகரித்து வரும் பாதிப்பேற்படுத்தும் மற்றும் அழிவுகரமான நிலைமைகள், சில விடயங்களில், அமெரிக்க இராணுவத்திற்கு அனுகூலமாக கருதப்படுவதன் இழப்பு, இதனால் அதன் பல கடுமையான விளைவாக பாதுகாப்பு சம்பந்தமான சவால்கள். இரண்டாவது, சவாலுக்கிடமற்ற அமெரிக்க தலைமைக்கு அதிகரித்த எதிர்ப்பாக தெரியும் விதத்தில் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் கொந்தளிப்பான மற்றும் நிச்சயமற்ற மாற்றங்கள் குறித்த கவலைகள்.”
"மூலோபாய பிராந்தியங்கள், சந்தைகள் மற்றும் ஆதாரவளங்கள்" மீதான அமெரிக்க அணுகுதலைப் பாதுகாத்து கொள்வதையும், மற்றும் "அமெரிக்க இராணுவ அனுகூலங்கள் மற்றும் வாய்ப்புகளை" விரிவாக்குவதையும், “அமெரிக்க தலைமைக்குப் பிந்தைய” காலகட்டத்தில் வாஷிங்டனின் மூலோபாய நோக்கங்களில் உள்ளடக்குமாறு அமெரிக்க இராணுவ ஆய்வு வரையறுக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தில் ஒப்பீட்டளவிலான வீழ்ச்சியை இராணுவ பலத்தின் வழிவகைகளைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்பதாகும்.
இந்த மூலோபாயம் அமெரிக்க இராணுவ தகைமையை, "ஒன்று தோல்வி அடையக்கூடிய அல்லது கணிசமான இழப்புகளோ அல்லது விலை கொடுக்கும் விளைவுகளுடனோ" பிணைந்த தொடர்ச்சியான 'ஆற்றல் சோதனைகளுக்கு" போதுமான அளவுக்கு உட்படுத்தும் என்று அது குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தயாரிக்கப்படும் போர்கள், இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து பார்த்திராத அளவிற்கு அமெரிக்க இறப்புக்களை ஏற்படுத்தும்.
அந்த ஆவணம், போருக்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் கோபத்தை எதிர்கொள்வதற்கான தேவையையும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறது. அது குறிப்பிடுகிறது, “அதேவேளையில், அமெரிக்க தேசமும், தனிப்பட்ட அமெரிக்க பிரஜைகளும், அமெரிக்க பொது கருத்தும் மற்றும் கருதுகோள்களும் அதிகரித்தளவில் போர்க்களமாக மாறும்.”
இதுவரையில், இந்த சண்டை பெரிதும் ஒருதரப்பிலேயே இருந்துள்ளது. போர் உந்துதல், அதிகரித்தளவில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி இரண்டு கட்சிகளிடம் இருந்தும் ஆதரவைப் பெறுகிறது. மக்களுக்கான ஊடகங்களோ, பென்டகன் மற்றும் சிஐஏ இன் ஒரு பிரச்சார அங்கமாக சுருங்கி போயுள்ளன.
மேலும் ஏகாதிபத்திய போருக்கான ஒரு புதிய அதரவுத்தளம், அதாவது இதற்கு முன்னர் போர்-எதிர்ப்புணர்வை ஜனநாயக கட்சிக்குப் பின்னால் திருப்பிவிட செயல்பட்ட பெயரளவிலான "இடது" அரசியல் அமைப்புகள் மற்றும் பதிப்பகங்களின் ஒரு அடுக்கு, இந்த சண்டையில் அரசியல்ரீதியில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. இன்று இந்த கூறுபாடுகள், அமெரிக்க இராணுவத்தின் குற்றங்களுக்கு எதிரான எந்தவொரு போராட்ட வடிவத்திற்கும் விரோதமாக உள்ளன என்பதோடு, இவை லிபியாவில் இருந்து சிரியா மற்றும் உக்ரேன் வரையில், இவற்றைக் கடந்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு வாய்சவடால் பேசி வக்காலத்துவாங்குபவர்களாக மாறியுள்ளன.
அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி போன்ற இந்த குழுக்கள், கொள்கைபிடிப்போடு ரஷ்யா, சீனா மற்றும் ஈரானை "ஏகாதிபத்தியமாக" குற்றஞ்சாட்டுவதற்கு திரும்பி, வரவிருக்கும் இன்னும் இரத்தந்தோய்ந்த மோதல்களுக்கு வழி வகுக்க உதவி வருகின்றன, அதேவேளையில் அவை "மனிதாபிமான உரிமைகள்" என்ற மதிப்பிழந்த பதாகையின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை நியாயப்படுத்துவதுடன், சிரியாவிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் சிஐஏ இன் ஸ்திரமின்மைப்படுத்தும் நடவடிக்கைகளை "புரட்சிகளாக" கூறி ஆதரிக்கின்றன.
இவற்றின் அரசியல், செல்வசெழிப்பான நடுத்தர வர்க்க பிரிவுகளின் நலன்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்த பிரிவுகளது தனிப்பட்ட செல்வவளம், பங்குகள் மற்றும் நிலம்-மனை விலைகளோடு சேர்ந்து உயர்ந்துள்ளதுடன், உலகளவில் அமெரிக்க இராணுவவாதம் மேலெழுந்திருப்பதை அடித்தளத்தில் கொண்டுள்ளன.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மக்களிடையே போருக்கு எதிராக பரந்தளவில் ஆழமாக வேரூன்றி உள்ள கோபம், இப்போதைய அரசியல் அமைப்புக்குள் வெளிப்பாட்டைக் காண முடியாது. சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் (ICFI), தொழிலாள வர்க்கத்தின் அடித்தளத்தில் சர்வதேச சோசலிச முன்னோக்கால் வழிநடத்தப்படும் ஒரு பாரிய போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக, இந்த உணர்வுக்கு ஒரு நனவுபூர்வமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தை வழங்க போராடி வருகின்றன.