Print Version|Feedback
නාවික හමුදාව ඉවත්කරන ලෙස ඉල්ලා ඉරනතීවූ වැසියන් උද්ඝෝෂනය කරයි
வட இலங்கையில் இரணைதீவு மக்கள் கடற்படையை வெளியேறக் கோரி போராடுகின்றனர்
By Vimal Rasenthiran
5 June 2017
இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரியில் கடற்படை ஆக்கிரமித்துள்ள இரணைதீவு கிராமத்தை மீளக்குடியமர விடுவிக்குமாறு கோரி, இரணைதீவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த மே 29 அன்று கிளிநொச்சியில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அவர்கள் மாவட்டச் செயலகத்துக்கு சென்று மகஜர் ஒன்றை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர்
கடந்த மாத ஆரம்பத்தில் இருந்தே அந்த கிராம மக்கள் இரணைமாதா நகர் கடற்கரையோரம் கொட்டகை அமைத்து, பெண்கள் முதியவர்கள் மற்றும் சிறுவர்களுமாக அமர்ந்து சத்தியாகிரக போரட்டத்தை தொடர்கின்றனர்.
“எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும்” “இரணைதீவில் நிரந்தரமாக குடியமர்ந்து தொழிற்செய்யும் உரிமை வேண்டும்” “தீவை ஆக்கிரமித்துள்ள கடற்படை முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்” உள்ளடங்களான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். 396 குடும்பங்கள் இங்கு மீளக்குடியமர காத்திருக்கின்றன.
இரணைதீவு மக்களின் போராட்டம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்தக் கோரி வடக்கு-கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் அண்மையதாகும். இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு மற்றும் கொக்கிளாய் போன்ற பகுதிகளிலும், கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் மன்னாரில் முசலி மற்றும் யாழ்ப்பாணத்தில் வலிவடக்கு பகுதியிலும் மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
இந்தப்பகுதிகளில் உள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்த போதிலும், அந்தக்காணிகளை நிரந்தரமாக அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த காணிகளில் இராணுவ முகாம்களை நிரந்தரமாக பலப்படுத்துவதில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இரணைதீவு மக்களின் போராட்டத்தை நசுக்கும் நோக்கில், அவர்களை புகைப்படம் எடுப்பது, அவர்களது வீடுகளுக்குச் சென்று விசாரிப்பது போன்ற நடவடிக்கைகளால் கடற்படை, இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்களை விடுத்துவருகின்றனர்.
யுத்தம் உக்கிரமடைந்த நிலையில் 1992ல் இரணைதீவில் வாழ்ந்த 225 குடும்பங்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வெளியேறத் தள்ளப்பட்டன. அவர்கள் தீவிற்கு வடக்கில் 12 கிலோமீட்டர் தூரத்தில் முழங்காவிலில் கடற்கரையோரம் காடுகளை அழித்து தற்காலிகமாக குடியேறினர். இது பின்னர் இரணைதீவு இரணைமாதா நகர் என்னும் குடியிருப்பாகியது. அங்கு மலசலகூட வசதி மற்றும் குடிநீர் வசதி கூட இருக்கவில்லை.
எனினும், கடற்றொழிலில் ஈடுபட இவர்கள் இரணைதீவிற்கே செல்லவேண்டி இருந்ததால் அவர்களால் தீவிலுள்ள தமது வீடுகளையும் சொத்துக்களையும் மற்றும் கால்நடைகளையும் பராமரிக்க முடிந்தது. இப்போது அந்த வாய்ப்பும் அபகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கடந்த பெப்பிரவரி மாதம் கேள்வி எழுப்பிய போது, பதில் அளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரணைதீவை கைவிட முடியாது எனக் குறிப்பிட்டார். “இந்த தீவு மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடற்படை அங்கு ராடார் தளம் ஒன்றை பராமரித்து வருகின்றது. இலங்கை கடலுக்குள் வரும் இந்திய மீனவப் படகுகளை தடுக்கவும், போதைப் பொருள் கடத்தல்களை தடுக்கவும் கடற்படைக்கு இந்த தீவு அவசியம்,” என அறிவித்தார்.
அங்கு எவரும் குடியிருக்கவில்லை, அவர்கள் அனைவரும் அரசாங்கத்தால் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கூறிய விக்கிரமசிங்க, மீன்பிடி நடவடிக்கைகளை செய்வதற்கும், அங்குள்ள சுமார் 10 ஏக்கர் தென்னந் தோப்பில் அதன் உரிமையாளர்கள் அறுவடை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார். ஆனால், போராட்டக்காரர்கள் விளக்கும் விடயங்கள் விக்கிரமசிங்கவின் கருத்து முற்றிலும் ஒரு மூடி மறைப்பு என்பதை அம்பலப்படுத்துகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்தோணி, 67, “இரணைதீவில் 80 வீதமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, எஞ்சியுள்ள சில வீடுகளிலும் சுமார் 6 ஏக்கர் காணியிலும் கடற்படையினர் நிலைகொண்டுள்ளனர்” என்று உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்த்தார். “தற்போது தீவில் நிலைகொண்டுள்ள கடற்படை எமது வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கின்றது. இரணைதீவின் தெற்குப் பகுதியான சிறிய தீவில் தங்கியிருந்து கடற்றொழில் செய்ய அனுமதித்த கடற்படையினர், கடந்த ஆண்டு ஏப்பிரல் தொடக்கம் தீவின் எந்தப்பகுதிலும் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட அனுமதிக்க மறுக்கின்றனர். கடற்படை எமது தீவை ஆக்கிரமித்து வைத்திருக்கும் வரை நாங்கள் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது. எனவே அவர்கள் எமது தீவை விட்டு வெளியேறுவது எங்களுக்கு அவசியமானது” என்றார்.
தீவு தமக்கு தனியான கிராமசேவையாளர் பிரிவாக இருந்தது எனவும், பிரதேச வைத்தியசாலை, க.பொ.த சாதாரண தரம் வரையான பாடசாலை, குடிநீர் மற்றும் இதர வசதிகளுடன் வாழ்ந்ததாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டார்கள். தீவிற்கான போக்குவரத்துக்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது, தமது சொந்த முயற்சியினால் பாய்மர படகுகளை இயக்கி வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். நானூறு வருடங்களுக்கு முன்பிருந்து இரணதீவில் பல பரம்பரைகள் உருவாகியுள்ளது.
கடந்த 2013 முதலாகவே இரணைதீவு மக்கள் தமது சொந்த இடத்தில் குடியேற பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், அதன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் மற்றும் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள், மற்றும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரிடமும் கோரிக்கை வைத்துள்ளார்கள். இறுதியாக கடந்த மார்ச் மாதம் பூனகரி பிரதேச செயலகத்தினூடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பியுள்ளனர். எனினும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையிலேயே இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுமே சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு “போராட்டத்தை உடன் நிறுத்துமாறு” அழுத்தம் கொடுத்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துவரும் தமிழ் கூட்டமைப்பு பீதியடைந்ததுடன் மக்களை சாந்தப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது. எஸ். சிறிதரன் போராட்டத்தில் 4வது நாள் கலந்துகொண்டு, “உங்களது பிச்சனையை நான் பாராளுமன்றத்தில் பேசுகின்றேன்” என்றார். இதன் விளைவாக ஏப்பிரல் 20 அன்று இரணைதீவை பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன வரவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.
இதே போல், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த ஜனவரி 23 அன்று தீவிரமான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த போதும், கூட்டமைப்பு அதை நிறுத்த இவ்வாறே செயற்பட்டது. உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலமை கவலைக்கிடமாக இருந்ததோடு இந்தப் போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாக வளர்ச்சியடைவதையிட்டு பீதியடைந்த தமிழ் கூட்டமைப்பு, நான்காவது நாள், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ருவான் விஜேவர்த்தனாவை வவுனியாவில் இறக்கி, போராட்டத்திற்கு முடிவுகட்டியது. “அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பிப்பிரவரி 9 அன்று ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்வதாக” தெரிவித்து ருவான் விஜேவர்தன போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர்.
கடந்த 2006ல் இருந்து 2009 மே மாதம் பத்தாயிரக் கணக்கான உயிர் பலியுடன் போர் முடியும் வரை, இந்த மக்கள் இடம்பெயர்ந்து கடைசி தாக்குதல்கள் நடந்த முள்ளிவாய்க்காலுக்கே சென்றிருந்தனர். போர் முடிந்த பின்னர் வவுனியாவில் “நலன்புரி” நிலையம் என்று சொல்லப்படுகின்ற முட்கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்ட இராணுவம் நடத்திய தடுப்பு முகாம்களில், இலட்சக்கணக்கான மக்களோடு அடைத்து வைக்கப்பட்டிருந்த இரணைதீவு மக்கள், பின்னர் மீள் குடியேற்றம் என்ற பெயரில் இரணைமாதாநகரில் குவிக்கப்பட்டனர்.
“இந்த துன்பத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை” என அவர்கள் கூறினர். 35ற்கும் மேற்பட்ட இரணைதீவுவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர். 10ற்கும் மேற்பட்ட யுத்த விதவைகள் இருப்பதோடு இன்னும் 60 குடும்பங்களை பெண்கள் பராமரிப்பதாக கூறப்படுகின்றது.
ஜோன் கென்னடி, 47, “கடற்படை எமது தீவை ஆக்கிரமித்து இருப்பதனால் எமது உயிர்வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியுள்ளது,” என்றார். “நாங்கள் எங்களிடம் கடலுணவு கொள்வனவு செய்யும் வியாபாரிகளிடம் கடன் வாங்கியே தொழிற் செய்கின்றோம். தீவிலிருந்து கடற்றொழில் செய்யும் போது எமக்கு 500 ரூபா தான் செலவாகும். தற்போது 2000 ரூபாவுக்கும் அதிகமாக செலவாவதுடன் வருமானம் மிகவும் சொற்பமாக உள்ளது. இந்த நிலையில் வரும் வருமானத்தில் உயிர் வாழ்வதா அல்லது கடன் கொடுப்பதா? அல்லது எமது பிள்ளைகளின் கல்விச்செலவை ஈடுசெய்வதா? எதுவுமே முடியாது. தற்போது நாம் கடன்காரனாக மாறியுள்ளோம். அதனால் கடற்படை தீவிலிருந்து வெளியேறி நாம் மீளக்குடியமரும் வரை போராட்டம் தொடரும்” என அவர் தெரிவித்தார்.
இந்த குடும்பங்கள் தீவுக்குள் அனுமதிக்கப்படாததால் பெண்கள் ஈட்டிய வருமானம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. முடியப்பு மரியசெயசீலி என்ற குடும்பப் பெண், “தற்போது அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்குள் கணவரின் வருமானத்திற்குள் மட்டும் குடும்பம் நடத்த முடியாது. தீவில் நாங்கள் அதிகாலையில் கடலட்டை, நண்டு பிடிப்பது மற்றும் கருவாட்டு வாடி போன்றவற்றின் மூலம் வருமானம் ஈட்டினோம். இப்போது அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.” என்றார்.