Print Version|Feedback
Amid threat of US-Russia clash in Syria
NATO warplane buzzes jet carrying Russian defense minister over Baltic Sea
சிரியாவில் அமெரிக்க-ரஷ்ய மோதல் அச்சுறுத்தலுக்கு இடையே
நேட்டோ போர்விமானம் பால்டிக் கடல் மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சென்ற விமானத்தைச் சுற்றி ரீங்காரமிட்டு பறந்தது
By Barry Grey
22 June 2017
நேரடி மோதல் அளவிற்கு சிரியாவில் ரஷ்ய படைகளுடனான பதட்டங்களை அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ரஷ்யாவின் மேற்கு எல்லைக்கு அருகில் அதன் பொறுப்பற்ற அடாவடித்தனம் ஐரோப்பாவில் அவ்விரு அணுஆயுத சக்திகளுக்கு இடையிலும் ஓர் இராணுவ மோதல் அபாயத்தை அதிகரித்து வருகிறது.
புதனன்று ஒரு நேட்டோ F-16 போர்விமானம் சர்வதேச வான்வழி தடத்தில் பால்டிக் கடல் மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சென்று கொண்டிருந்த அந்நாட்டின் விமானத்தைச் சுற்றி ரீங்காரமிட்டு பறந்தது. வெறும் மூன்று நாட்களுக்கு முன்னர் தான், ஓர் அமெரிக்க போர்விமானம் சிரியாவில் ஓர் அரசு விமானத்தை சுட்டுவீழ்த்தியது, இது 2011 ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க போர் தொடங்கியதற்கு பின்னர் நடந்துள்ள இதுபோன்ற முதல் தாக்குதலாகும். சிரிய ஆட்சியை மாஸ்கோ இராணுவப் படைகள் ஆதரித்து வருகின்ற நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கை இனிமுதல் ரஷ்யாவின் மேற்கு பகுதி மீது பறக்கும் அமெரிக்க விமானத்தை அது இலக்கில் வைக்கும் என்று மாஸ்கோவை அறிவிக்க தூண்டியது. சிரியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்க மற்றும் ரஷ்ய விமானங்களுக்கு இடையே மோதல்களைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்ற "மோதல் நிறுத்தப்பட்ட" எல்லை கோட்டை ரஷ்யா இனி மதிக்காது என்றும் அது தெரிவித்தது.
நேற்றைய சம்பவத்தில், அமெரிக்க-மேலாதிக்கத்திலான இராணுவ கூட்டணியின் ஒரு போர்விமானம், பால்டிக் கடல் மீது லித்துவேனியா மற்றும் போலாந்துக்கு இடையே ரஷ்யாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளதும், பாதுகாப்பு அமைச்சர் Sergey Shoigu ரஷ்ய இராணுவ அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிட்டிருந்ததுமான கலினின்கிராடுக்கு பறந்து கொண்டிருந்த ரஷ்ய விமானத்தை நெருங்கியது. ஒரு Su-27 பாதுகாப்பு போர்விமானம் நேட்டோ விமானத்தின் வழியில் குறுக்கிட்டு, அதன் ஆயுதங்களைக் காட்ட அதன் இறக்கைகளை சாய்த்துக்கொண்டபோதுதான், ஊடுருவிய நேட்டோ விமானம் விலகி பறந்து சென்றது.
நேட்டோவின் இந்த அதிக ஆத்திரமூட்டும் நகர்வானது, பால்டிக் பிரதேசத்தில் குறிப்பாக ரஷ்யாவின் மேற்கு விளிம்போரத்தில் உள்ள புற-இராணுவச் சாவடியான கலினின்கிராடு சுற்றுவட்டாரத்தில் அமெரிக்கா-நேட்டோ மற்றும் ரஷ்ய போர்விமானங்களுக்கு இடையே அதிகரித்துவரும் அடிக்கடி எதிர்கொள்ளல்களின் சமீபத்திய எடுத்துக்காட்டு மட்டுமே ஆகும். திங்களன்று, ரஷ்ய எல்லை நோக்கி பறந்து கொண்டிருந்த ஒரு அமெரிக்க RC-135 உளவு விமானம் ஒரு திருப்பம் எடுத்தது, இடைமறிக்கும் நடவடிக்கையில் இறக்கிவிடப்பட்டுள்ள ஒரு பால்டிக் போர்விமானமான Su-27 நோக்கிய ஒரு "ஆத்திரமூட்டும் திருப்பமாக" இதை மாஸ்கோ குறிப்பிட்டிருந்தது.
புதனன்று நேட்டோ வெளியிட்ட ஓர் அறிக்கையில், Shoigu சென்ற விமானம் சம்பந்தப்பட்ட சம்பவத்தை ஒப்புக்கொண்டதுடன், அது பொது வான்வெளியில் நடந்த உண்மையையும் ஒப்புக் கொண்டது. இருப்பினும் வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக, அந்த மேற்கு கூட்டணி, அது உரிய விதத்தில் நடந்து கொண்டதாக தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இதே விதத்தில் செயல்பட அதற்கு சுதந்திரம் இருப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டது.
கலினின்கிராடில் Shoigu தரையிறங்கியதற்குப் பின்னர், “சில நாடுகள் புவிசார் அரசியல் இலக்குகளை அடைவதற்கு ஒரு கருவியாக இராணுவ பலத்தைப் பயன்படுத்த முனைந்து வருகின்றன,” என்று கூறி, உலகளாவிய பாதுகாப்பிற்கு இடர் உண்டாக்குவதற்காக மேற்கை குற்றஞ்சாட்டினார்.
நேட்டோ மற்றும் ரஷ்ய போர்விமானங்களுக்கு இடையே அபாயகரமான எதிர்கொள்ளல்கள், குறிப்பாக பால்டிக் பிரதேசத்தில் நடைமுறையளவில் அன்றாடம் நடக்கும் நடைமுறைகளாக ஆகியுள்ளன. 2014 பெப்ரவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்தை தூக்கியெறிந்து, கியேவில் ஒரு வெறிபிடித்த ரஷ்ய-விரோத, அதிதீவிர வலது ஆட்சியை நிறுவிய அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் ரஷ்யாவின் மேற்கு எல்லையை ஒட்டி தொடங்கப்பட்ட அமெரிக்க-நேட்டோ அத்துமீறல்களின் விளைவாக, அந்த ஒட்டுமொத்த பகுதியும் ஓர் ஆயுத முகாமாக மாற்றப்பட்டுள்ளது.
பால்டிக் கடல் மீது கூட்டுப்படையின் வான்வெளியை (allied airspace) அணுகிய 32 ரஷ்ய இராணுவ விமானங்களை கடந்த வாரம் நேட்டோ இடைமறித்ததாக திங்களன்று லித்துவேனியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. நேட்டோ மற்றும் கூட்டுப்படையின் அதிவிரைவு விமானங்கள், ஜூன் 12 மற்றும் 18 க்கு இடையே, ரஷ்ய போர்விமானங்கள் மற்றும் குண்டுவீசும் அதிவிரைவு விமானங்களை ஒன்பது முறை சுற்றி வளைத்து விரட்டி அடித்தன என்றும் அது குறிப்பிட்டது.
இத்தகைய சம்பவங்களில் ஏதேனும் ஒன்று, வேண்டுமென்றே நோக்கம் கொண்டோ அல்லது தற்செயலாகவோ, குண்டுவீச்சு தாக்குதலில் அல்லது மோதலில் போய் முடிந்தால், அது ஒட்டுமொத்த உலகையே சாம்பலாக்கிவிடும் அச்சுறுத்தலுடன், அந்த அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு முழு அளவிலான போரை விரைவிலேயே தூண்டிவிடும்.
எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் மேலாதிக்கம் கொள்வதற்கும் மற்றும் உலகளாவிய ஆதிக்கத்திற்கு வாஷிங்டனின் மிகப்பெரிய போட்டியாளராக உள்ள சீனாவை கையாள்வதற்கு அது இன்றியமையாததாக காணும் யுரேஷியா கண்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்குமான அதன் உந்துதலுக்கு மாஸ்கோ ஒரு தடையாக இருப்பதை நீக்கும் அதன் மூலோபாயத்தின் பாகமாக, வாஷிங்டன் ரஷ்யாவுடனான மோதலை முன்னெடுத்து வருகிறது.
கிழக்கு ஐரோப்பா மற்றும் பால்டிக் மீதான வான்வெளியில் நேட்டோ-ரஷ்ய எதிர்கொள்ளல்களின் இந்த தற்போதைய கண்மூடித்தனம், நேட்டோவின் கிழக்கு பக்கவாட்டில் நடத்தப்பட்டு வரும் பல தொடர்ச்சியான பரந்த போர் சாகசங்கள் மற்றும் இராணுவ பயிற்சிகளுக்கு இடையே வருகிறது. இவற்றில் எல்லாம், போர்விமானங்கள், டாங்கிகள், கப்பல்கள் மற்றும் நடைமுறையளவில் சகல போர் பரிவாரங்களுடன் சேர்ந்து, இராணுவக் கூட்டணியின் உள்ளேயும் வெளியேயும் உள்ள நாடுகளின் பத்தாயிரக் கணக்கான துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஜூன் மாதத்தின் பெரும்பாகத்தில், அமெரிக்க இராணுவம் பால்டிக் பிரதேசத்தில் அங்கே உள்ள அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து போர் தாக்குதல் (Saber Strike) என்றழைக்கப்படும் அதன் வருடாந்தர தொடர்ச்சியான கோடைக்கால போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது.
இம்மாத தொடக்கத்தில், போலந்து மற்றும் ஜேர்மனியில் நேட்டோ அதன் வருடாந்தர BALTOPS (பால்டிக் நடவடிக்கை) பயிற்சியை நடத்தியது, பெல்ஜியம், டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, லாட்வியா, நெதர்லாந்து, நோர்வே, போலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளடங்கலாக 14 நாடுகளின் 6,000 துருப்புகள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. சுமார் 50 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்களும், B-1 மற்றும் B-52 குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 50 க்கும் அதிகமான போர்விமானங்களும் இதற்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
பால்டிக் கடலில் போலாந்தின் Ustka இல் கடற்கரையையே புரட்டிப்போட்ட ஒரு பயிற்சியைக் குறித்து அங்கிருந்தே ஒரு புகைப்பட செய்தியறிக்கையை ரூபேர்ட் முர்டோச்சின் Sun சிற்றிதழ் வழங்கியது, அதில் அப்பத்திரிகை ஆர்வத்துடன் எழுதுகையில், “சிப்பாய்களும் வாகனங்களும் கடற்கரையில் ஈடுபட்டிருந்த நிலையில், விமானங்கள் படையின் பயங்கர காட்சியை காட்டுவதில் தலைக்கு மேல் ரீங்காரமிட்டு பறந்தன,” என்று குறிப்பிட்டது. “நாங்கள் பயிற்சி செய்ய விரும்புகிறோம் மற்றும் கடலிலும் கடலில் இருந்தும் பலத்தைக் காட்டுவதை மற்றும் கடல் மீதான கட்டுப்பாட்டை வழங்குவதற்கான ஆற்றலை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்,” என்று அமெரிக்க கடற்படை அட்மிரல் கிறிஸ்டோபர் கிராடி கூறியதை அக்கட்டுரை மேற்கோளிட்டது.
“Noble Jump 17” என்று குறிப்பிடப்பட்ட ரஷ்யாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்ட மற்றொரு பயிற்சி, இம்மாதம் ருமேனியாவின் சிர்சுவில் நடத்தப்பட்டது. நேட்டோவின் அதிவிரைவு தயார்நிலை கூட்டு நடவடிக்கை படையை பரிசோதிக்க வடிவமைக்கப்பட்ட அது, இங்கிலாந்து, அமெரிக்கா, ருமேனியா, நெதர்லாந்து, அல்பேனியா, ஸ்பெயின், போலாந்து மற்றும் நோர்வே இல் இருந்து துருப்புக்களை உள்ளெடுத்து இருந்தது.
முடிவில்லாமல் தொடர்ச்சியான போர் சாகசங்கள் மற்றும் இராணுவ பயிற்சிகளுக்குக் கூடுதலாக, 20 ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்தான நேட்டோ-ரஷ்ய ஸ்தாபக சட்டத்தை மீறி, 6,000 சிப்பாய்களைக் கொண்ட மொத்தம் நான்கு போர் குழுக்கள், நடைமுறையளவில் நிரந்தர நிலைநிறுத்தலாக, பால்டிக் நாடுகள் மற்றும் போலாந்தில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. இதற்கும் கூடுதலாக, 10,000 பேர் கொண்ட பிரத்யேக பலமான படைப்பிரிவு ஒன்றும் ருமானியாவில் நிறுவப்பட்டு வருகிறது மற்றும் 10,000 துருப்புகளை உள்ளடக்க உள்ள ஒரு டாங்கி படைப்பிரிவும் போலாந்தில் அமெரிக்காவினால் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய சக்திகளின் அட்டூழியங்களுக்கு ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஆட்சியிடம் எந்த நம்பகமான அல்லது முற்போக்கான பதிலும் இல்லை. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கரங்களில் 1991 சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, அரசு சொத்துக்களைச் சூறையாடியதன் மூலமாக அதன் ஆரம்ப செல்வவளங்களைக் குவித்துக் கொண்டிருந்த முதலாளித்துவ செல்வந்த தட்டை அவர் ஆட்சி பிரதிநிதித்துவம் செய்கிறது. அது மேற்கத்திய அத்துமீறல்களுக்கு ஒரு பாதுகாப்பு விடையிறுப்பு எடுக்கப்படுவதாக அதன் சொந்த இராணுவ சாகசங்களையும் அத்துடன் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளுடனான ஓர் உடன்பாட்டிற்கு முறையீடுகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது—இது ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான சகல முயற்சிகளுக்கும் எதிராக தீவிர ரஷ்ய தேசியவாதத்தின் அடிப்படையில் ஒரு பிற்போக்குத்தனமான கலவையாக உள்ளது.
சென்ற ஆண்டு இறுதியில், அமெரிக்க-நேட்டோ ஆத்திரமூட்டல்களுக்கான விடையிறுப்பில், ரஷ்யா கலினின்கிராடில் அணுஆயுதமேந்தும் ஆற்றல் கொண்ட பெருந்தொலைவுக்குப் பாயும் ஏவுகணைகளை நிலைநிறுத்தியது. இந்த வாரயிறுதியில், அதன் எல்லையோரங்களில் தற்போதைய நேட்டோ ஆயத்தப்படுத்தல்களுக்கு இடையே, அது பால்டிக் கடலில் சீன கடற்படை கப்பல்களுடன் இரண்டு திட்டமிடப்பட்ட இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜேர்மனியின் ஹம்பேர்க்கில் ஜி20 உச்சிமாநாட்டிற்கு வருகையில் அவரது போலாந்திற்கான விஜயத்தைப் பின்தொடர்ந்து, படைகளது இரண்டாவது சாகசக் காட்சி ஜூலை இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.
Shoigu இன் விமானத்திற்கு நேட்டோ அச்சுறுத்தல் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, செவ்வாயன்று, ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோவைச் சந்தித்தார். அவ்விரு தலைவர்களும் கூட்டாக மேடையில் தோன்றுவதற்கு ஒரு மணி நேரங்களுக்கு முன்னதாக, அமெரிக்க நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் அறிவிக்கையில் உக்ரேனில் அதன் குற்றகரமான அத்துமீறல்களுக்காக ரஷ்யா மீது வாஷிங்டன் புதிய தடையாணைகளை விதிப்பதாக அறிவித்தார்.
இந்த நடவடிக்கையில் முந்தைய கடுமையான நடவடிக்கையில் இலக்கில் வைக்கப்பட்ட பட்டியலில் இருந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் மேலும் 38 பேர் சேர்க்கப்பட்டனர், இது மொத்த எண்ணிக்கையை 160 தனிநபர்கள் மற்றும் 400 நிறுனங்களாக கொண்டு வந்துள்ளது. புதிதாக தடைவிதிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்பதுடன், அவர்கள் அமெரிக்க பிரஜைகள் மற்றும் நிறுவனங்களுடன் வணிகம் செய்யவோ அல்லது அமெரிக்காவில் இருந்து நிதி திரட்டவோ தடுக்கப்படுவார்கள். இந்த 38 பேர் கொண்ட பட்டியலில் இரண்டு கீழ்மட்ட ரஷ்ய அரசு அதிகாரிகள் மற்றும் புட்டினுக்கு நெருக்கமான பல தனிநபர்களும் உள்ளடங்குவர்.
ட்ரம்ப் பொறோஷென்கோ உடனான அவர் சந்திப்பைக் குறைத்துக்காட்டி, உக்ரேனில் ரஷ்யாவின் பாத்திரம் குறித்து ஒன்றும் கூறவில்லை என்றாலும், அந்த அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தின் தலைவருக்கு பென்டகனில் ஒரு கதாநாயகனின் வரவேற்பு வழங்கப்பட்டதுடன், பாதுகாப்பு செயலர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி ஜேம்ஸ் மாட்டிஸ் அமெரிக்காவின் முழு ஆதரவை சூளுரைத்து, உக்ரேனிய "இறையாண்மைக்கும்" மற்றும் "சர்வதேச விதிமுறைகளுக்கும்" மற்றும் "சர்வதேச ஒழுங்குமுறைக்குமான" அச்சுறுத்தல்களை கண்டனம் செய்தனர். பென்டகன் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் கிழக்கு உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளுடன் சண்டையிட கியேவ் அரசாங்கத்திற்கு அமெரிக்கா அபாயகரமான ஆயுதங்களை வினியோகிக்கும் சாத்தியக்கூறை அது இன்னும் கைவிடவில்லை என்று தெரிவித்தார்.
புதிய தடையாணைகளுக்கு விடையிறுப்பாக, ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் Sergey Ryabkov புதனன்று கூறுகையில், அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலர் தோமஸ் ஷேனன் ஜூனியர் உடன் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் சந்திப்பு இரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கிரெம்ளின் பத்திரிகைத்துறை செயலர் டிமிட்ரி பெஸ்கொவ் கூறுகையில், அமெரிக்கா ரஷ்யா மீது தொடர்ந்து புதிய தடையாணைகளைக் கொண்டு வந்தால், மாஸ்கோ "விடயங்களைப் பரஸ்பரமாக்கியும்" மற்றும் அமெரிக்கா மீது தடையாணைகளை கொண்டு வந்தும் விடையிறுக்கும் என்றார். “சாத்தியமான தடையாணைகளின் நீண்ட பட்டியல்" ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.