Print Version|Feedback
இலங்கை: வடக்கில் மீண்டும் யுத்தகாலத் தேடுதல்கள்
By Subash Somachandran and S. Ahilan
3 June 2017
மே 19ம் திகதி, யுத்தப் பேரழிவுகளுக்குட்பட்ட வடக்கின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி எல்லையில் அமைந்துள்ள பளைப் பிரதேசத்தினை, இலங்கைப் பொலிஸ், புலனாய்வுப்பிரிவினர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தினை, கொழும்பு மற்றும் கண்டியை இணைக்கும் பிரதான வீதியான ஏ9 வீதியின் அருகாமையில் அமைந்துள்ள, கச்சார்வெளி, வேம்பொடுகேணி மற்றும் முகமாலை உட்பட சில கிராமங்கள் இந்த தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த இராணுவ–பொலிஸ் நடவடிக்கையின்போது, சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை என நூற்றுக்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். எவரும் கைது செய்யப்படாவிட்டாலும், படையினரின் விசாரணை காரணமாக மக்கள் பயமுறுத்தலுக்கு உள்ளகியுள்ளனர்.
பளைக்கு அருகாமையில் அமைந்துள்ள கச்சார்வெளிப் பிரதேசத்தில், மே 19 விடியற் காலை ஏ9 வீதியினால் ரோந்து சென்ற பொலிஸ் வாகனத்தின் மீது அடையாளம் தெரியா நபர் ஒருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாலேயே இவ்வாறான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதற்கான உடனடிக் காரணமாக கூறப்பட்டது.
உடனடியாக அதிகாலையிலேயே இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அந்தப் பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்தார்கள். விசேடமாக, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், பல புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களைக் கூட பாடசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒரு பிரகடனப்படுத்தாத ஊரடங்குச் சட்டம் அந்தப் பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டது.
மக்கள், இந்தச் சூட்டுச் சம்பவம் சம்பந்தமாக மறுநாள் பத்திரிகையில் வெளியான பொலிசாரால் வழங்கப்பட்ட செய்திகள் மற்றும் போட்டோக்கள் மூலமாகவே அறிந்து கொண்டார்கள். இந்தப் பிரதேசத்தில் இருந்து சிலர் பொலிசாரைத் தாக்குவதற்கு முயற்சி செய்தார்கள் என்று கூறிக்கொண்டு, அரசாங்கம் இந்த சம்பவம் சம்பந்தமாக விசாரிப்பதற்கு பொலிஸ் குழுவை நியமித்துள்ளது. பொலிசாரோ அல்லது இராணுவத்தினரோ எதையும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் இந்தப் பிரதேசம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
பொலிஸ் வாகனத்தின் மீதான தாக்குதல் என்ற கூற்று மிகவும் சந்தேகத்துக்குரியது. எங்களுடன் உரையாடியவர்கள், இத்தகைய சம்பவம் நடந்திருந்தால் அது ஒரு அரங்கேற்றப்பட்ட சம்பவமாக இருக்கும் என மக்கள் நியாயபூர்வமாக சிந்திக்கின்றார்கள்.
தங்கள் பிரதேசங்களில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், வேலைவாய்ப்புக் கோரியும், யுத்தக் குற்றங்களை விசாரிக் கோரியும் மற்றும் தங்கள் நிலங்களை இராணுவம் விடுவிக்க வேண்டுமெனக் கோரியும் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வடக்கு மக்களை நேரடியாக மிரட்டுவதாகவே அரசாங்கப் படைகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்த நடவடிக்கை, பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை ஒத்ததாக உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இன்னும் இராணுவ ஆட்சி நடைமுறையில் இருப்பதையே, பாதுகாப்புப் படைகளின் இந்த தலையீடு மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டுகின்றது. “இரணுவம் முகாம்களுக்குள்ளேயே இருக்கின்றது”, அது நிர்வாக வேலைகளில் தலையீடு செய்வதில்லை என்ற அரசாங்கத்தின் கூற்றுக்களுக்கு எதிர்மாறாகவே இந்த நடவடிக்கை உள்ளது.
மக்கள் மத்தியில் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற உணர்வு வளர்ந்து வரும் சூழலில், இராணுவம் தனது ஆக்கிரமிப்பினைத் தொடர்வதற்கான தனது சொந்த நடவடிக்கைகளை வைத்திருக்கின்றது என்பதைக் காட்டும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
ஏப்ரல் மாதத்தில், இராணுவத்தினால் பிடித்து வைக்கப்பட்ட நிலத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னாள் புலிகள் அமைப்பின் போராளிகள், அந்த நிலங்களை வடக்கு மாகாண சபையிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து கிளிநொச்சியில் ஒரு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தார்கள். இந்தமாதிரியான ஆர்ப்பாட்டங்கள் இராணுவத்தின் தலையீடு இன்றி ஒழுங்கமைக்கப்பட்டிருக்க முடியாது. இந்த முன்னாள் புலிகள் அமைப்பின் போராளிகள் தற்பொழுது இராணுவத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நிலங்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தும் மக்களின் எழுச்சிக்கு நேரடியாக எதிரானதாகும். வடக்கில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வேலையற்றபட்டதாரிகள் கடந்த சில மாதங்களாக போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
வடக்கில் பொலிசாரும் தங்களின் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். மே மாதம் 26ம் திகதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊர்காவற்றுறையில் ஒரு விபத்து நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்களில் 14 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உண்மையில் அரசாங்கம், நாட்டின் தெற்குப் பிரதேசத்தின் மறு பக்கமாக வடக்கு மற்றும் கிழக்கிலும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஏற்படும் அமைதியின்மை, அதன் ஆட்சிக்கு ஆபத்தானது என்பதையிட்டு விழிப்புடன் இருக்கின்றது. மானிய வெட்டுக்கள், தனியார்மயப்படுத்தல், நிலப்பிரச்சினை, சம்பளக் கோரிக்கை மற்றும் இலவசக் கல்வி மீதான தாக்குதல் என்பவற்றுக்கு எதிராக, நாட்டில் உள்ள தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் மாணவர்கள் ஏறத்தாழ தினமும் எதிர்ப்பு நடவடிக்கைகயில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அரசாங்கம், எந்தவொரு அமைதியின்மையையும் நசுக்கும் இலக்கில், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றப்போவதில்லை என்பதை வலியுறுத்துகின்றது. அது ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கவும் முயற்சிப்பதுடன் தெற்கில் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதேச்சதிகாரத்துக்கு நகரவும் முயற்சிக்கின்றது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன, ஆட்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் மற்றும் பிரிவினைவாதிகளின் சுவரொட்டிகள் காணப்படுகின்றன, போன்ற செய்திகள் சிலநேரங்களில் வெளிவருகின்றமை “புலிப் பயங்கரவாதம்” மீண்டும் தலைதூக்குகின்றது என்னும் பொய் பிரச்சாரங்கள் பரவுவதற்கு பன்படுத்தப்படுகின்றன. இராணுவம், அரசாங்கம் மற்றும் இனவாதக் குழுக்கள் தமிழர் விரோத இனவாத பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக, இத்தைகய பொய் பிரச்சாரங்களை உடனடியாகவே பற்றிப் பிடித்துக் கொள்கின்றன. அரசாங்கமும் ஆளும் தட்டுக்களும் தொழிலாளர் வர்க்கத்தினைப் பிரிப்பதற்காக இவற்றினை பயன்படுத்துகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) மற்றும் மற்றைய தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தினதும் இராணுவத்தின் நகர்வுகளதும் சிறந்த ஒத்துழைப்பாளர்களாக இருக்கின்றார்கள். இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து வெளியேற வேண்டும் என கோரவில்லை என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, அவர்களை முகாம்களுக்குள் வைத்திருக்குமாறு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. தொழிலாளர்கள் மற்றும் வறிவர்கள் மத்தியில் அபிவிருத்தியடைந்து வரும் அமைதியின்மை பற்றிய பீதியில் இருக்கும் கூட்டமைப்புக்கு, அந்த மக்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்துவதற்காக இந்தப் படைகளை வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
மே 18ம் திகதி, முள்ளிவாய்க்காலில் ஒரு நினைவு தினக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த இடத்திலேயே இலங்கை இராணுவம் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று, புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் போராளிகளையும் முற்றாக அழித்தது “யுத்த வெற்றியை” அறிவித்தது. இந்த நிகழ்வில் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இராணுவத்தினை வெளியேறுமாறு கோரி வடக்கு மக்கள் வீதிக்கு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை” எனப் புலம்பினார்.
மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக அவர் இந்தக் கருத்தினைக் கூறவில்லை மாறாக, வரவிருக்கும் அபாயம் சம்பந்தமாக அரசாங்கத்தினை எச்சரித்தார். நவீன தொழில் நுட்பங்களை உபயோகித்துக் கொண்டு, எங்கிருந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். அதாவது “ஒரு அறையில் கம்பியூட்டர் முன்னால் அமர்ந்துகொண்டு சந்தேகத்துக்கிடமான தகவல்களைத் திரட்ட முடியும்”, என அவர் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கினார். துருப்புக்கள் எந்நேரமும் வீதியில் தேவையில்லை என அவர் கூறுகின்றார்.
தமிழ் கூட்டமைப்பும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கொழும்பில் உள்ள அமெரிக்க சார்பு அரசாங்கத்தின் நலன்களுக்கு சேவையாற்றுகின்றார்கள். அமெரிக்க புவியரசியல் நலன்களை ஆதரிப்பதன் பாகமாக சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கு உதவி புரிந்த கூட்டமைப்பு, அந்த ஆட்சியைப் பாதுகாத்து வருகின்றது. இதன் மூலம் அது தனக்கு சலுகைகளை எதிர்பார்த்து இலங்கை அரசாங்கத்தினையும் மற்றும் அமெரிக்க நலனையும் பேணி வருகின்றது.
அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதக் குழுக்கள் எவையும் இந்தப் பிரதேசத்தில் இல்லை என பளைப் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவித்தார்கள். “இந்த தாக்குதல் பொலிஸ் அல்லது இராணுவத்தினாலேயே ஒழுங்கமைக்கப்பட்டிக்க முடியும் என நாங்கள் நினைக்கின்றோம்” என பலர் தெரிவித்தனர். “யுத்தம் முடிந்து விட்டது என நாங்கள் நினைத்தோம், ஆனால் நாங்கள் மீண்டுமொருமுறை இராணுவ ஒடுக்கு முறைக்கு முகம் கொடுத்தோம்” என ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்குப் பின்னர், இரவானதும் மக்கள் நடமாடுவதைத் தவிர்த்து பீதியில் இருக்கின்றார்கள். இரவு 7 மணிக்குப் பின்னர் அவர்கள் வெளியில் செல்வதில்லை. இரவு வேளைகளில், இராணுவம் மற்றும் பொலிசும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்வண்டியில் ரோந்து செல்கின்றனர். அதேவேளை, சிவில் உடைதரித்த இராணுவ உளவாளிகள் இந்தப் பிரதேசத்தினை கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் பிரதேசத்தில் மக்கள் தினக் கூலி உழைப்பாளர்களாகவோ அல்லது சுயதொழில் செய்பவர்களாகவோ இருக்கின்றார்கள். அவர்கள் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து தப்பித்துச் சென்று அகதிகளாக வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னர், 2010ல் இந்த மக்கள் தமது சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்ந்தார்கள். அவர்களுக்கு நிரந்தரத் தொழிலோ அல்லது வருமானமோ கிடையாது. அங்கு பொருத்தமான பாடசாலைகள் கிடையாது, பொலிஸ் மற்றும் இராணுவத்தினது நடவடிக்கைகள் அவர்களுடைய நிலமைகளை மேலும் பரிதாபகரமானதாக ஆக்கியுள்ளது.