Print Version|Feedback
Following new UN sanctions, North Korea tests more missiles
ஐ.நா.வின் புதிய பொருளாதார தடைகள் தொடரும் நிலையிலும், வட கொரியா மேலும் ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது
By Peter Symonds
8 June 2017
கடந்த வாரம் அமெரிக்காவும், ஐ.நா.வும் மேலதிக பொருளாதார தடைகளை விதித்தமை தொடர்பாக, வட கொரியா தங்கள் மீதான தண்டனை நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும், மற்றொரு சுற்று ஏவுகணை சோதனைகளை நேற்று நடத்தியும் அதற்கு தனது எதிர்வினையை காட்டியுள்ளது.
தென் கொரிய இராணுவத்தை பொறுத்தவரையில், நாட்டின் கிழக்கு கடற்கரையிலிருந்து, பியோங்யாங் “தரையிலிருந்து கப்பலை தாக்கும் ஏவுகணைகளாக இருக்ககூடிய அடையாளம் தெரியாத பன்மடங்கு வெடிபொருட்களை ஏவியதாக அறிவித்தது. சமீபத்திய வாரங்களில், ஒரு முடுக்கிவிடப்பட்ட தொடர் ஏவுகணை சோதனைகளாக சமீபத்திய ஏவுகணை சோதனைகள் இருந்தன.
இந்த ஏவுகணை சோதனைகள் வட கொரிய மக்களை பாதுகாப்பதற்கு மாறாக, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் மற்றும் அதன் நட்பு நாடுகளினதும் இராணுவ விரிவாக்கத்திற்கும் மற்றும் பியோங்யாங்கிற்கு எதிராக மீண்டும் மீண்டும் யுத்த அச்சுறுத்தல்களை விடுப்பதற்கும் ஒரு சாக்குப்போக்காகவும் அமைகின்றது. ஏப்ரல் மாதம் அணுசக்தி வழிகாட்டி ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான USS Michigan இன் மூலமாக வந்த ஒரு துறைமுக அழைப்பை தொடர்ந்து, செவ்வாயன்று, ஒரு அமெரிக்க அணுஆயுத சக்திகொண்ட தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான USS Cheyenne, தென் கொரிய துறைமுகம் பூசனில் நிலைகொண்டுள்ளது. இவ்விரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களுமே Tomahawk கடல்மூல ஏவுகணைகளை ஏவும் திறன் படைத்தவையாகும்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “armada” என்று விவரித்த போர்க்கப்பல்களின் தொகுப்பு ஒன்றை கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க கடற்படை கட்டி எழுப்புகிறது. USS கார்ல் வின்சன் மற்றும் USS ரொனால்ட் ரீகன் போன்ற இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் அவற்றின் அழிப்புக்கப்பல் மற்றும் கடல்மூல ஏவுகணை கப்பல்களின் தாக்குதல் குழுக்களுடன் சேர்ந்து ஏற்கனவே இந்த பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஜப்பானிய கடற்படை கப்பல்களுடன் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு விமானந்தாங்கி கப்பலான, USS நிமிட்ஸூம் அதன் தாக்குதல் குழுவும் இந்த பிராந்தியத்தில் ஒரு முன்னோடியில்லாத அமெரிக்க கடற்படை பிரசன்னத்தை உருவாக்க வழிவகுக்கின்றன.
கடந்த வெள்ளியன்று நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சபையின் தீர்மானத்தில் இணைந்திருந்த கூடுதல் ஐ.நா. பொருளாதாரத் தடைகளை ஒத்துக்கொள்ள செய்வதற்கு சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் அமெரிக்கா இறுதியாக அழுத்தம் கொடுத்தது. கொரியோ வங்கி மற்றும் மூலோபாய ராக்கெட் படை, அத்துடன் 14 தனிநபர்கள் உட்பட, மற்ற நான்கு வட கொரிய நிறுவனங்களுக்கு பொருந்துவதாக, ஒரு உலகளாவிய பயண தடை மற்றும் வெளிநாட்டு சொத்துக்குவிப்பை முடக்குவது போன்ற இந்த புதிய அபராதங்கள் வரம்பிற்குட்பட்ட நோக்கத்துடன் இருந்தன. புதிய நடவடிக்கைகளுக்கு ஒரு பொது பாதுகாப்பு சபையின் வாக்குகளை பெறுவது தேவையில்லை என்றாலும், வட கொரியா மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்த வாக்கெடுப்பிற்கு வாஷிங்டன் வலியுறுத்தியது.
வட கொரிய ஆயுத திட்டங்களை ஆதரிப்பதாக கூறப்பட்ட இரண்டு ரஷ்ய நிறுவனங்களுடன் மூன்று தனிநபர்களும் உட்பட, ஒன்பது தனியார் நிறுவனங்களையும், அரசாங்க நிறுவனங்களையும் கறுப்பு பட்டியலில் சேர்க்க வகைசெய்த, அமெரிக்க கருவூலத்தால் கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட மேலும் ஒருதலைப்பட்சமான அமெரிக்க நடவடிக்கைகளையே ஐ.நா. பொருளாதார தடைகள் பின்பற்றின.
சீனாவின் பொருளாதார செல்வாக்கை சுரண்டுவதற்கு ஏதுவாக, வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கைவிடுமாறு வலியுறுத்த ட்ரம்ப் நிர்வாகம் சீனாவின் மீது பெரும் அழுத்தத்தை கொடுத்தது. வட கொரியாவின் உயர்மட்ட ஏற்றுமதி பொருளாக இருக்கும் வட கொரிய கனிமங்களின் கொள்முதல் அளவிற்கு தடை விதிப்பதாகவும், நிலக்கரி இறக்குமதியை கட்டுப்படுத்துவதாகவும், ஐ.நா.வின் முந்தைய பொருளாதார தடைகள் முடக்கம்தரும் பொருளாதார அபராதங்களை சுமத்தியது. இருப்பினும், பெய்ஜிங், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகத்தை வெட்டுவது போன்ற கூடுதல் நடவடிக்கைகளினால், பியோங்யாங்கில் தூண்டப்படும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை வாஷிங்டன் சுரண்டுமென அஞ்சி அவற்றை நிறைவேற்ற தயங்குகிறது.
ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான நிக்கி ஹாலே பாதுகாப்பு சபையில் பேசுகையில், வட கொரியா அமெரிக்க கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுக்கும் ஒரு மெல்லிய மறைமுகமான அச்சுறுத்தலை மீண்டும் விடுத்தார். ஒரு அமைதியான, இராஜதந்திர தீர்மானத்தை நாடுவதில் பேச்சளவில் கவனம் செலுத்தும் போதும், அவர் பின்வருமாறு எச்சரித்தார்: “இராஜதந்திர மற்றும் நிதியியல் விளைவுகளுக்கு அப்பால், தேவைப்பட்டால் வட கொரிய ஆக்கிரமிப்பை மற்ற வழிகளில் எதிர்க்க அமெரிக்கா இன்னும் தயாராகவுள்ளது.”
ஐ.நா.விற்கான சீன தூதர் லீயு ஜீய், வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கான பெய்ஜிங்கின் அழைப்பு, பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வு காணப்படவேண்டிய “அணுசக்தி பிரச்சினைக்கான சாத்தியத்தின் ஒரு முக்கிய சாளரம்” அங்கு இருப்பதாக மீண்டும் மீண்டும் அறிவிக்கிறார். “அனைத்துக் கட்சிகளும் கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும்” என்று அவர் வலியுறுத்துவதுடன், தென் கொரியாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு பாட்டரியான ஒரு முனைய அதிஉயர பகுதி பாதுகாப்பினை (Terminal High Altitude Area Defence-THAAD) நிறுவுவதை நிறுத்தமாறு அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆசியாவில் அமெரிக்க இராணுவ கட்டியெழுப்பலானது முதன்மையாக வட கொரியா மற்றும் அதன் மட்டுப்படுத்தப்பட்ட அணுஆயுத களங்களை நோக்கமாக கொண்டதில்லை என்பதை பெய்ஜிங் நன்கு அறிந்துள்ளது. சீனாவுடனான அணுஆயுதப் போருக்கான அமெரிக்க இராணுவ திட்டமிடலின் ஒரு பகுதியாகத்தான், ஆசிய பசிபிக்கில் பென்டகனின் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் ஒரு அம்சமாகவே இந்த THAAD அமைப்பு உள்ளது. சீன முக்கிய நிலப்பகுதிகளை ஆழ்ந்து ஆராயவும், எந்தவொரு ஏவுகணை தொடக்கத்துக்கும் மேம்பட்ட திறனுள்ள எச்சரிக்கையை விடுக்கவும் THAAD நிறுவுதலுடன் தொடர்புடைய அதிநவீன X-band ரேடார் தகுதிவாய்ந்ததாக உள்ளது.
குறிப்பாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் புதன்கிழமையன்று சர்ச்சைக்குரிய THAAD செயல்பாட்டின் ஒரு இடைநிறுத்தலுக்கு அழைப்புவிடுத்தார். ஏற்கனவே இருக்கும் இரண்டு THAAD ஏவுகணை எதிர்ப்பு பாட்டரிகள் அப்படியே இருக்கக்கூடும், ஆனால் கூடுதல் நான்கு பாட்டரிகளின் ஸ்தாபிதங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை சார்ந்து இருக்கும், எனவே அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று அவரது அலுவலகம் தெரிவித்தது. தென் கொரியாவின் சமீபத்திய ஜனாதிபதி தேர்தலின் போது, மூன் தன்னை ஒரு எதிர்ப்பாளராக காட்டிக்கொண்டதன் மூலமாக THAAD குறித்த பரவலான எதிர்ப்பைச் சுரண்டினார், ஆனால் உடனடியாக அதனை அகற்றுவதற்கு அழைப்பு விடுப்பதை குறுகிய காலத்திற்குள் நிறுத்திக்கொண்டார். முன்மொழியப்பட்ட இடைநீக்கம் அமெரிக்க யுத்த தயாரிப்புகளுக்கு ஒரு அடியாக இருந்ததோடு, அது வாஷிங்டனில் ஒரு எதிர் வினையை சந்தேகமின்றி தூண்டுவதாகவும் இருக்கும்.
ஞாயிறன்று வட கொரியா ஐ.நா. பொருளாதாரத் தடைகளை கண்டனம் செய்ததுடன், இந்த நடவடிக்கைகள் தொடர்பான சீனாவின் ஆதரவை தாக்குவதன் மூலமாக, அதனுடன் அதிகரிக்கும் வளர்ந்துவரும் உடைவை அடிக்கோடிட்டுக் காட்டியது. வாஷிங்டனும், பெய்ஜிங்கும், பாதுகாப்பு சபையின் மூலமாக, “தங்கள் சொந்த நலன்களை பின்தொடர்வதில் ஒரு உயர்மட்ட மற்றும் தன்னிச்சையான நடவடிக்கையாக, சர்வதேச நீதியை அவமதித்து” ஒரு தீர்மானத்தை “நிறைவேற்றியுள்ளனர்” என்று ஒரு வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் அறிவித்தார். பொருளாதாரத் தடைகள் அதன் அணுஆயுத வலிமையை “ஒரு நிமிடம் கூட” நிறுத்த முடியாது என்று பியோங்யாங் கூறியது.
இரண்டு ரஷ்ய நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான அமெரிக்க கருவூலத்தின் முடிவானது, வட கொரியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவுகளை சீர்கெடுக்கும் விதமாக பியோங்யாங் உடனான கூட்டுக்களை மாஸ்கோ ஊக்குவிக்கக் கூடாது என்ற வகையிலான ஒரு எச்சரிக்கையாகவே அது தோன்றுகிறது. ரஷ்யாவிற்கும், வட கொரியாவிற்கும் இடையிலுள்ள வர்த்தக மற்றும் போக்குவரத்து தொடர்புகளை எடுத்துக்காட்டும் அமெரிக்க ஊடகங்களில் கட்டுரைகள் வெளிப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 73 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக USA Today இந்த வாரம் மதிப்பீடு செய்துள்ளது. ரஷ்ய நிறுவனம் ஒன்று மே மாதம் வட கொரிய துறைமுக நகரமான ரஜினுக்கு புதிய பயணப்படகு பாதை ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் அது தெரிவிக்கிறது. மேலும், இரயில் இணைப்புக்களை மேம்படுத்துவது, மற்றும் வட கொரிய தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை விரிவுபடுத்தும் விதமாக ரஷ்யாவின் மரம் மற்றும் கட்டுமானத் தொழில்களில் அவர்களை மலிவு உழைப்புத் தொழிலாளர்களாக்கும் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்வது போன்றவை தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்தும் அது குறிப்பிடுகிறது. எனினும், கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, சீனாவுடனான வட கொரியாவின் வருடாந்திர வர்த்தகம் 6.6 பில்லியன் டாலராக ($6.6 billion) இருப்பதோடு ஒப்பிடுகையில், ரஷ்யாவுடனான அதன் வருடாந்திர வர்த்தகம் வெறும் 130 மில்லயன் டாலர் ($130 million) மதிப்பிலானதாகவே உள்ளது.
கடந்த வெள்ளியன்று, ஐ.நா.வின் ரஷ்ய துணை தூதர் விளாடிமிர் சஃப்ரோன்கோவ் பேசுகையில், ரஷ்ய நிறுவனங்களுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் “மிகுந்த குழப்பத்துடன், ஆழ்ந்த ஏமாற்றமடைந்தன” என்று கூறினார். மேலும் அவர் பின்வருமாறு தெரிவித்தார்: “எங்களது வேலைகளில் இருதரப்பு முதுகெலும்பாக இருந்து செயலாற்ற முனைவதற்கு பதிலாக, வாஷிங்டன் சரியாக எதிராளியாக செயலாற்றுவதுடன், நட்பற்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.” இது “சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைக்க மிகவும் கடினமானதாக” இருக்கும்.
சமீபத்திய வட கொரிய ஏவுகணை சோதனைகள் கொரிய தீபகற்பத்தை சுற்றியுள்ள பூகோள அரசியல் அழுத்தங்களை மட்டுமே அதிகரிக்கச் செய்வதுடன், இதனால் போர் ஆபத்தும் இருக்கும். அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியை தாக்கும் திறன் கொண்ட ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் பெருவெடி ஏவுகணையை (ICBM) விடுக்கப்போவதாக வட கொரியா உருவாக்கும் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி, ஒரு இராஜதந்திர தீர்வுக்கான நேரம் குறுகியதாகவே உள்ளது என்று ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் (US Missile Defence Agency) தலைவரான துணை அட்மிரல் ஜேம்ஸ் சியரிங், அமெரிக்க மைய ஆயுத சேவை குழுவிற்கு (US House Armed Services Committee) புதன்கிழமையன்று சான்றளித்தபோது அந்த எச்சரிக்கைகள் அடிக்கோடிடப்பட்டன. வட கொரியாவின் சமீபத்திய மாதங்களின் ஏவுகணை சோதனைகள் “பெரும் கவலைக்குரியவையாக” இருந்தன என்று அவர் தெரிவித்தார். மேலும், “ICBM தாங்கிய ஒரு அணுஆயுதத்தினால் அமெரிக்காவின் எல்லையை” பியோங்யாங் ஏற்கனவே அடைந்துள்ளது என்றும் அவரது அமைப்பினால் கருதப்படுகிறது.
வட கொரியா மீதான முன்கூட்டிய இராணுவத் தாக்குதல்களுக்கான போலிக்காரணமாக கண்டுபிடித்தவற்றை ட்ரம்பின் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதையே இந்த ஆதாரமற்ற அனுமானம் துல்லியமாக காட்டுகின்றது.