Print Version|Feedback
Divisions erupt in neo-fascist National Front during French legislative election
பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தலின் போது நவ-பாசிசவாத தேசிய முன்னணியில் பிளவுகள் வெளிப்படுகின்றன
By Francis Dubois
16 June 2017
ஞாயிறன்று நடந்த முதல் சுற்று பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய முன்னணி (FN) 14 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பெற்றிருந்த நிலையில், மே 7 இல் நடந்த இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் மரீன் லு பென்னின் தோல்வியை அடுத்து அக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த உள்கட்சி பதட்டங்கள் வெளிப்பட தொடங்கியுள்ளன. குறிப்பாக இவ்வாரம், தேசிய முன்னணி பொதுச் செயலர் நிக்கோலா பே மற்றும் அக்கட்சியின் துணை தலைவர் புளோரியான் பிலிப்போவிற்கு இடையே கடுமையான கருத்து பரிமாற்றங்கள் இருந்தன.
சோசலிஸ்ட் கட்சியின் (PS) முன்னாள் தலைவர் ஜோன் பியர் செவனுமோ இன் தேசியவாத இயக்கத்திலிருந்து வந்த பிலிப்போ, தேசிய முன்னணியை "அரக்கத்தனமான சித்தரிப்பதை இல்லாதொழிக்கும்" மூலோபாயத்தின் வடிவமைப்பாளர் ஆவார். தேசிய முன்னணி அதன் பாசிசவாத தோற்றுவாய்களுடன் உடைத்துக் கொண்டு விட்டது என்று வாக்காளர்களை நம்ப வைப்பதே இந்த மூலோபாயத்தின் நோக்கமாகும். நாடாளுமன்ற தேர்தல்களில் தேசிய முன்னணியின் பிரச்சாரத்திற்கு நிக்கோலா பே பொறுப்பேற்றிருந்த நிலையில், பிலிப்போ ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தினார்.
பே திங்களன்று Le Parisien பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில், “கட்சியில் சிலர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தாமல் கருத்து முரண்பட்டு குரல் எழுப்புவதற்காக வருத்தம் தெரிவிப்பதாக" கூறி, பிலிப்போவை தாக்கினார். நாடாளுமன்ற தேர்தல்களின் முதல் சுற்றில் அவர் தொகுதியில் வெளியேற்றப்பட்ட பே ஐ குறி வைத்த ஒரு பதிலுடன் பிலிப்போ பதிலுரைத்தார்: “எனது தொகுதியில் நான் முதலிடத்தில் வந்தேன், இதுபோன்றவற்றால் எல்லாம் இலக்கு வைக்கப்படுவதாக நான் உணரவில்லை. ஆனால் நாடாளுமன்ற பிரசாரத்தை ஒழுங்கமைத்தவர்கள் உட்பட ஒவ்வொருவருக்கும் இதில் சிறிது பொறுப்பு உள்ளது,” என்றார்.
வலதுசாரி தேசியவாத நிக்கோலா டுபோன்-எய்னியோனுடன் FN அமைத்துக் கொண்ட ஜனாதிபதி தேர்தல் கூட்டு, அல்லது தொலைக்காட்சி விவாதங்களில் மரீன் லு பென்னின் நடவடிக்கைகள் போன்ற பல்வேறு அடித்தளங்களில் FN தலைவர்களிடையே தேர்தல்களுக்குப் பின்னர் பகிரங்கமாக சர்ச்சை வெடித்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ மீதான FN இன் நிலைப்பாடுதான் மோதலின் பிரதான அம்சமாக உள்ளது.
வங்கிகளது அழுத்தத்தின் கீழ், யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் வெளியேறும் நிலைப்பாட்டிலிருந்து யூரோ-சார்பான நிலைப்பாட்டுக்கு மாறும் இந்த முக்கிய பிரச்சினைகளில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் தேசிய முன்னணி அதன் நிலைப்பாட்டை மாற்றியது. இது தேசிய முன்னணி தலைமைக்குள் கடுமையான மோதல்களைத் தூண்டின. மே மாத மத்தியில், தேசிய முன்னணியின் பிரதான பொருளாதார நிபுணர் Bernard Monot பிரிட்டிஷ் டெலிகிராப் பத்திரிகை உடனான ஒரு பேட்டியில் இறுதியில் அறிவிக்கையில், தேசிய முன்னணியில் "இனி பிரான்ஸ் வெளியேறும் (Frexit) விடயம் இருக்காது" என்றார்.
மே 7 இன் இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல்களுக்கு சற்று பின்னர், பிலிப்போ கூறுகையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவிலிருந்து வெளியேறும் அதன் கொள்கையை தேசிய முன்னணி கைவிட்டால் அதிலிருந்து வெளியேறுவதாக அச்சுறுத்தினார். ஒரு வாரத்திற்குப் பின்னர், அவர் தேசிய முன்னணிக்குள்ளேயே "நாட்டுப்பற்றாளர்கள்" (The Patriots) என்ற அவரின் சொந்த இயக்கத்தை உருவாக்க முடிவெடுத்தார்.
தேசிய முன்னணியில் கணிசமானளவிற்கு செல்வாக்கு கொண்டுள்ள Béziers நகர முதல்வர் Robert Ménard செவ்வாயன்று பிலிப்போவை விமர்சித்து கூறுகையில், யூரோவிலிருந்து வெளியேறுவதை அவர் ஆதரித்தமை தான் "ஜனாதிபதி தேர்தல்களில் தோல்விக்கும்" முதல் சுற்று நாடாளுமன்ற தேர்தல் "முடிவுகளுக்கும் காரணம்" என்றார். அவர் "யூரோவிலிருந்து வெளியேறுவது மீதும், பொருளாதார கொள்கை மீதும் விவாதித்து தீர்க்கமாக முடிவெடுக்க" அழைப்புவிடுத்தார்.
பிரெஞ்சு வெளியேறுவது மீதான வங்கிகளது எதிர்ப்பை தேசிய முன்னணியின் ஒரு பெரும்பான்மைக்கு சுட்டிக்காட்ட வங்கிகள் குறுக்கிட்ட பின்னர், அவர்கள் அதிகமாக ஐரோப்பிய ஒன்றிய சார்பு கொள்கையை ஏற்க முடிவெடுத்துள்ளனர் என்றால், இக்கொள்கை மாற்றத்திற்கு அனைத்திற்கும் மேலாக மக்ரோன் ஊக்குவிக்கும் ஜேர்மன்-சார்பான பிரெஞ்சு ஏகாதிபத்திய நோக்குநிலை திருப்பமும் ஒரு காரணமாக இருக்கிறது. சமீபத்திய நாட்களில் பிலிப்போ மீதான மிகவும் உரத்த விமர்சனங்கள் இந்த தொனியின் பாதுகாவலர்களிடம் இருந்து வந்தது. அவர்கள் பிரெஞ்சு நவ-பாசிசத்தை ஐரோப்பிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கும் முனைவுக்குள் ஒருங்கிணைக்க முயன்று வருகிறார்கள், அனைத்திற்கும் மேலாக ஐரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்தவும் மற்றும் அமெரிக்காவுடன் முன்பினும் அதிக பகிரங்கமாக மோதலுக்குள் நுழையவும் விருப்பம் கொண்டுள்ள ஜேர்மனியின் மீள்இராணுவமயமாக்கலுக்குள் ஒருங்கிணைக்க முயல்கின்றனர்.
பிரதானமாக ஜேர்மனிக்கு எதிராக (இதற்காக அதன் பலவீனமான நாணயத்திற்கு தான் நன்றி கூற வேண்டும்), பிரெஞ்சு தொழில்துறையின் ஏற்றுமதியை "அதிகரிப்பதன் மூலம்" பிரெஞ்சு தொழில்துறையின் போட்டித்தன்மையை மீள நிறுவ பிரெஞ்சு பிராங்க் நாணயத்திற்கு திரும்புவதே சிறப்பு என்று நம்பும் தேசிய முன்னணியின் ஒரு பிரிவுக்காக பிலிப்போவின் கொள்கை பேசுகிறது. பிரான்சில் தொழிலாளர் கூலிகளின் நிஜமான மதிப்பைக் குறைப்பது என்பதும் இதன் அர்த்தமாகும். நவம்பர் 2016 இல், அப்போதும் கூட மரீன் லு பென் இந்த கொள்கையை ஆதரித்திருந்தார், அப்போது அவர் ட்ரம்ப் தேர்வானதற்குப் பின்னர் உடனடியாக "புத்திசாலித்தனமான பாதுகாப்புவாதம்" என்றும் "பொருளாதார தேசப்பற்றுவாதம்" என்றும் புகழ்ந்து, அவரை பாராட்டினார்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேசிய முன்னணியின் ஸ்தாபகர் ஜோன் மரி லு பென்னின் பேத்தியும் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன மரியோன் மரிஷால் லு பென் பிலிப்போவின் மிக முக்கிய விமர்சகர்களில் ஒருவராக இருந்தார். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அவர் தற்காலிகமாக அரசியல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, தேர்வான அவர் பதவியையும் துறந்து, நாடாளுமன்ற தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்நேரத்தில் பத்திரிகை செய்திகள் குறிப்பிடுகையில், உத்தியோகபூர்வ காரணங்களுக்கு பின்னால் அவரது அத்தை மரீன் லு பென் உடன் ஒரு மோதலில் இறங்க அவர் விரும்பவில்லை என்பதாக தெரிவித்தன.
அதன் தேர்தல் பின்னடைவுகள் மற்றும் அது நெருக்கடிக்குள் சிக்கி உள்ளது என்பதற்காக, தேசிய முன்னணி தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பெரும் அபாயத்தை முன்னிறுத்தாது என்றாகாது. ஆளும் வர்க்கத்திற்கு அதன் சேவைகள் அவசியப்படுகிறதோ இல்லையோ, இக்கட்சி பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. அது முன்பினும் அதிகமாக அரசியல் அமைப்புமுறை மற்றும் அரசுக்குள் ஆழமாக ஒருங்கிணைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக அது அதன் செல்வாக்கை தொடர்ந்து வளர்த்து வந்துள்ளதுடன், அனைத்திற்கும் மேலாக சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் போலி-இடது கூட்டாளிகளின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் மீதான கோபத்தைச் சாதமாக்கிக் கொண்டுள்ளது.
நிலைமை மாறும் போது, ஏதோவொரு காரணத்திற்காக, ஏகாதிபத்திய முதலாளித்துவம் அதை நோக்கி திரும்பும் என்பது அதன் தலைவர்களுக்குத் தெரியும். ஊடகங்களும் ஆளும் உயரடுக்கும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையினது பொறிவை மூடிமறைக்க மக்ரோன் மற்றும் அவரது குடியரசை நோக்கி முன்னேறுவோம் இயக்கத்தை பெருமைப்படுத்திக் கொண்டிருக்கையில், மக்ரோனும் அவர் இயக்கமும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் குமிழி தொழிலாள வர்க்கத்துடனான தீவிரமான முதல் அரசியல் மோதலிலேயே வெடித்துச் சிதறும் அச்சுறுத்தலில் உள்ளது.
மெலோன்சோன் போன்ற பிரமுகர்கள் வெகுஜனவாதம் மற்றும் தேசியவாதத்தை ஊக்குவிப்பதன் மூலமாக முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒரு சுயாதீனமான போராட்டத்தைத் தொடர்ந்து முடக்கி வரும் வரையில், தேசிய முன்னணி போன்ற கட்சிகள் "சாமானிய மக்களின்" தேசியவாத பாதுகாவலர்களாக முன்னிறுத்திக் கொள்ள முடியும்.
ஊடகங்களில் கூறப்படும் லு பென் குடும்பத்திற்குள் உள்ளே நடக்கும் உள்மோதல்கள் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை ஆகும். யூத இனப்படுகொலையை மறுத்தும் குறைத்துக் காட்டியும் அவர் தந்தை கூறிய கருத்துக்களை மரீன் லு பென் ஒருபோதும் உத்தியோகப்பூர்வமாக மறுத்ததில்லை, மாறாக அவற்றை வெளியிடுவதற்கு அரசியல்ரீதியில் இது தக்க சமயமில்லை என்று மட்டுமே கருதினார். “பிரான்சின் அரசியல் கட்சிகளிலேயே தேசிய முன்னணி முடியரசுக்கு மிகவும் ஆதரவானது,” என்ற தேசிய முடியாட்சிவாத வலதுசாரி Action française குழுவிற்கு மரியோன் மரிஷால் லு பென் விஜயம் செய்தததையோ அல்லது கருக்கலைப்பை எதிர்க்கும் கத்தோலிக்க இயக்கத்தை வளர்த்ததையோ தேசிய முன்னணி தலைமை கண்டிக்கவில்லை.
பிரான்சின் நாஜி ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்ததில் இருந்து வழிவழியாக வந்த ஒரு தீவிர வலது, நாடாளுமன்ற எதிர்ப்பு கட்சியான தேசிய முன்னணி தொழிலாள வர்க்கத்திற்கு வன்முறையானரீதியில் விரோதமானது. அதன் "குடியரசு" மீதான சத்திய பிரகடனங்கள் எல்லாம், சோசலிஸ்ட் கட்சி அவசரகால நிலையைத் திணித்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழித்து, மரீன் லு பென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு வரவேற்றதன் மூலமாக தேசிய முன்னணியை உத்தியோகபூர்வ அரசியலுக்குள் ஒருங்கிணைத்து கொண்டிருந்த சமயத்தில், அதற்கு வசதி செய்வதற்காக இருந்தன.
பிரான்சிலும் சர்வதேச அளவிலும் நடந்து வரும் வேகமான அரசியல் மாற்றங்களுக்கு இடையே, ஒரு மூலோபாயத்தை திட்டமிடுவதில் தேசிய முன்னணிக்கு இப்போது ஏதேனும் சிரமம் இருந்தாலும் கூட, அதன் முன்னுரிமைகளில் ஒரு அதீத-பிற்போக்குத்தன திட்டநிரல் உள்ளடங்கி உள்ளது, அதன் இரண்டு தூண்களாக இருப்பவை ஒன்று வெளிநாடுகளில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தைப் பாதுகாப்பதும் மற்றது உள்நாட்டில் ஒடுக்குமுறையும் ஆகும். இந்த அடிப்படைக் கொள்கைகள்தான் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ நாணயத்திற்குள் தங்கியிருப்பதற்கு முற்றிலும் பொருத்தமாக உள்ளன.