Print Version|Feedback
German Social Democrats, Left Party back Merkel’s anti-US stance
ஜேர்மன் சமூக ஜனநாயவாதிகளும், இடது கட்சியும் மேர்க்கெலின் அமெரிக்க-எதிர்ப்பு நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர்
By Peter Schwarz
30 May 2017
ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் அமெரிக்க-எதிர்ப்பு நிலைப்பாடு சகல ஸ்தாபக அரசியல் கட்சிகளாலும் பெரும்பாலான ஊடகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவை, ஜேர்மனியின் ஒரு சுதந்திர வல்லரசு கொள்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக நேட்டோ மற்றும் ஜி7 கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூர்க்கத்தனமான நடவடிக்கை மீதிருக்கும் கோபத்தைச் சுரண்டி வருகின்றன.
ஞாயிறன்று முனீச்சின் ஒரு பீர் கூடாரத்தில் நடந்த பவேரிய கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (CSU) ஒரு கூட்டத்தில், மேர்க்கெல் அமெரிக்கா உடனான கூட்டணி மீது கேள்வி எழுப்பினார், 70 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டாட்சி குடியரசு நிறுவப்பட்டதற்குப் பின்னர் இருந்து அது ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் ஆதாரக்கல்லாக இருந்ததாகும். “நாம் மற்றவர்களை முழுமையாக சார்ந்திருந்த காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டன,” என்றார். இதிலிருந்து அவர் எட்டிய தீர்மானம், “ஐரோப்பியர்களாகிய நாம் நிஜமாகவே நமது இலக்கை நமது சொந்த கரங்களில் எடுக்க வேண்டும்,” மற்றும் "நமது எதிர்காலத்திற்காக போராட வேண்டும்,” என்றார்.
மேர்க்கெலின் சமூக ஜனநாயக (SPD) கூட்டணி பங்காளி இந்த நிலைப்பாட்டிற்கு அதன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. செப்டம்பரில் நடக்கவுள்ள கூட்டாட்சி தேர்தலில் மேர்க்கெலை பிரதியீடு செய்து சான்சிலர் ஆவாரென எதிர்பார்க்கப்படும் மார்டின் சூல்ஸ் ட்வீட்டரில் குறிப்பிடுகையில், “ஒரு பலமான ஐரோப்பாவே டொனால்ட் ட்ரம்புக்கான சிறந்த பதில்,” என்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் கூறுகையில், அமெரிக்கா ஒரு முக்கிய தேசத்தை இழந்து வருகிறது. ட்ரம்ப் இன் கீழ், அமெரிக்கா இனி "மேற்கத்திய சமூக மதிப்பில்" ஒரு பாத்திரம் வகிக்க முடியாதென அறிவித்தார். ஜி7 உச்சிமாநாடு "உலகளாவிய அதிகார உறவுகள் மாறுவதற்கான ஒரு சமிக்ஞை" என்று கூறிய அவர், தொடர்ந்து கூறுகையில், “மேற்கு ஒரு விதத்தில் சுருங்கி வருகிறது,” என்றார்.
இடது கட்சி, மேர்க்கெல் மற்றும் SPD ஐ மிஞ்ச முயன்றது. அக்கட்சியின் பெண்தலைவர் Katja Kipping, ட்ரம்ப் உடன் ஒரு கடுமையான அணுகுமுறையைக் கையாள Bild பத்திரிகையில் அழைப்புவிடுத்தார். “அமெரிக்காவிற்கு ஆமாம்-சாமி போடுவதை" ஜேர்மனி நிறுத்திக் கொள்ள வேண்டுமென அப்பெண்மணி எழுதினார். “அவர் ஒரு குழந்தைத்தனமான சுயபோகி" என்பது தான் அமெரிக்க ஜனாதிபதியைக் குறித்து அவரால் கூற முடிந்த நேசமான விடயமாக இருந்தது. ட்ரம்புக்கு விடையிறுப்பாக ஐரோப்பா நெருக்கமாக ஒருங்கிணைய வேண்டும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
மேர்க்கெல் சர்வதேச ஆதரவும் பெற்றார். ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் இன்னும் அதிக ஐரோப்பிய சுதந்திரத்திற்கும் மற்றும் முடிவெடுக்கும் தன்மைக்கும் அழுத்தமளித்ததார். இந்த ஆணைக்குழு ஏற்கனவே இது சம்பந்தமான யோசனைகளை முன்வைத்திருப்பதாக அவர் செய்தி தொடர்பாளர் Margaritis Schinas தெரிவித்தார். “துல்லியமாக இது, ஐரோப்பா அதன் தலைவிதியை அதுவே தீர்மானிப்பதை உறுதிப்படுத்துவதாகும்,” என்றார்.
ஜனாதிபதி இமானுவல் மக்ரோனைச் சார்ந்துள்ள பிரெஞ்சு பத்திரிகை Le Monde, “ஒருவர் மேர்க்கெலின் முறையீட்டை ஆதரிக்க வேண்டும்,” என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டது. பிரிட்டன் வெளியேறுவது மற்றும் அமெரிக்கர்களின் பின்வாங்கல் ஆகியவை ஐரோப்பிய சமநிலையை சீரழித்துள்ளதாக அது குறிப்பிட்டது. ஆனால் ஜேர்மனி மட்டுமே அக்கண்டத்தின் ஒரே அதிகாரமாக ஆவதை விரும்பவில்லை.
“அங்கேலா மேர்க்கெல் 'ஐரோப்பியர்களாகிய நாம்' என்று கூறுகையில், அவர் பிரான்ஸை நோக்கிய ஒரு முறையீடைக் கொண்டுள்ளார், அமெரிக்கர்களும் பிரிட்டிஷூம் துரும்பாக மறைந்து போனால் இதுவே அவரின் ஒரே புகலிடமாக உள்ளது,” என்று அப்பத்திரிகை அறிவித்தது. மக்ரோன் இந்த முறையீட்டுக்கு சாதகமாக விடையிறுக்க வேண்டும், கோலிச ஆதிக்கத்திற்குள் காலங்கடத்தக் கூடாது என்றது குறிப்பிட்டது.
எவ்வாறிருப்பினும் மேர்க்கெலின் உரையை பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் கூர்மையாக தாக்கியது. “இந்த வெளியுறவு விவகாரங்களுக்காக ஜனாதிபதி ட்ரம்பைக் குறைகூறுவது எளிதானதும், பொருத்தமானதும் தான்,” என்று எழுதிய கட்டுரையாளர் கீடியன் ராஹ்மன், “ஆனால் திருமதி மேர்க்கெல் அவரது எச்சரிக்கையான சொல்லாடல்களுக்கு இடையிலும், அட்லாண்டிக் கூட்டணியை ஒரு நிரந்தர முறிவுக்குள் கொண்டு செல்லும் ஓர் அபாயகரமான பிளவை அதிகரிக்க அச்சுறுத்தும் அறிக்கை விடுத்து, பொறுப்பற்ற விதத்திலும் நடந்துள்ளார்,” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடன் மட்டுமின்றி, மாறாக பிரிட்டன் உடனும் மேர்க்கெல் வேண்டுமென்றே பிளவை ஆழப்படுத்தி வருவதாக பைனான்சியல் டைம்ஸ் மேர்க்கெலைக் குற்றஞ்சாட்டியது. ராஹ்மன் தொடர்ந்து குறிப்பிடுகையில், “திருவாளர் மேர்க்கெலின் அரசாங்கம் இந்த இப்போதைய மோதல் உணர்வோடு பிரிட்டன் வெளியேறுவதன் மீதான பேரம்பேசல்களை நடத்தினால் —ஒரு வர்த்தக உடன்படிக்கையை விவாதிப்பதற்கு முன்னரே கூட, பெரும் முன்தொகைக்கு இங்கிலாந்து உறுதியளிக்க வேண்டுமெனக் கோரி— அவர் சுயதேவைக்கான தீர்க்கதரிசனத்துடன், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே காலத்திற்கும் நீடிக்கும் விரோதங்களை உருவாக்கும் அபாயத்தை முன்னெடுக்கிறார்,” என்றார்.
Frankfurter Allgemeine Zeitung (FAZ) இல் வெளியான ஒரு கட்டுரை, இவையெல்லாம் ஜேர்மன் அரசாங்கத்தின் திட்டங்கள் என்று குறிப்பிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதையும் மற்றும் அமெரிக்காவுடனான பிளவையும் அது, ஜேர்மன் மேலாதிக்கத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தை ஓர் இராணுவ மற்றும் அரசியல் கூட்டணியை மீளஒழுங்கமைப்பதற்கான மற்றும் புதிய, சுதந்திரமான வல்லரசு கொள்கையைத் தொடங்குவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக பார்க்கிறது.
“ஐரோப்பாவிற்கான ஓர் இரகசிய திட்டம்" என்ற தலைப்பின் கீழ் Frankfurter Allgemeine Zeitung எழுதுகையில், ட்ரம்ப் உடனான பிளவுக்குப் பின்னர் மேர்க்கெல், “பல்வேறு முகப்புகளை" கொண்ட "திட்டம் எண் 2: ஐரோப்பா,” ஐ செயல்படுத்துகிறார். அகதிகள் பிரச்சினை அதிமுக்கியமாக இருந்தது: “சான்சிலர் அலுவலகம், மத்திய தரைக்கடலில் விமானத்தை நிறுத்துவதை ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்திற்கு அதிஅவசியமானதாக பார்க்கிறது.”
அப்பத்திரிகை கண்டறிந்த இரண்டாவது புள்ளி, “பாதுகாப்பு". மேர்க்கெல் "நிறைய பணம் செலவிடவும்" மற்றும் "படைகளுக்கு இடையிலான கூட்டுறவு தடையின்றி தொடரவும்" விரும்புகிறார். பிரிட்டனால் விடாப்பிடியாக எதிர்க்கப்பட்ட ஓர் "ஐரோப்பிய படையின்" கருத்துரு, இந்த காரணத்திற்காக இதுவரையில் கவனமாக தவிர்க்கப்பட்டு வந்தது என்பதையும் அப்பத்திரிகை சேர்த்துக் கொண்டது.
நேட்டோவில் உள்ள சிறிய அங்கத்துவ நாடுகளது இராணுவ தகைமைகளை பலப்படுத்தவும் மற்றும் ஓர் ஐரோப்பிய படை பலத்தை உருவாக்குவதற்கான நடைமுறை மைல்கற்களை ஸ்தாபிக்கவும் அவற்றை ஒரு பிடிப்பாக கொண்டு ஜேர்மன் படை அதன் சேவைகளை வழங்கி வந்ததாக FAZ எழுதியது. நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகியவற்றுடன் ஏற்கனவே கூட்டு படைப்பிரிவுகள் உள்ளன என்பதுடன், ரோமானியா மற்றும் செக் குடியரசு ஆகியவற்றுடனும் உடன்படிக்கைகள் உள்ளன.
“பொருளாதார மற்றும் செலாவணி ஒன்றியம்" என்பதை FAZ மூன்றாவது புள்ளியாக குறிப்பிட்டது. இந்த விடயத்தில், யூரோ மண்டலத்திற்கான பொருளாதார அரசுமுறை மற்றும் கூட்டு பத்திரங்களை (யூரோ பத்திரங்கள்) உருவாக்குவதன் மீது ஜேர்மன் அரசாங்கம் மக்ரோனுடன் உடன்பட தயாராக இருந்தது, ஆனால், கூட்டு பத்திரங்களைப் பொறுத்த வரையில், “கட்டமைப்பு சீர்திருத்தங்களை" ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் மட்டும் —அதாவது சமூக நல திட்டங்கள் மற்றும் வேலையிட நிலைமைகள் மீதான கூடுதல் தாக்குதல்களின் அடிப்படையில்— அதை செய்ய தயாராக இருந்தது. ஜேர்மனிக்கான ஒரு விட்டுக்கொடுப்பாக, ஐரோப்பிய மத்திய வங்கி தலைவராக மரியோ திராஹியை அடுத்து ஜென்ஸ் வைட்மானை நியமிக்க விவாதிக்கப்பட்டு வருவதாக அப்பத்திரிகை அறிவித்தது.
Spiegel Online பத்திரிகை FAZ ஐ விட இன்னும் அதிகமாக சென்று, புதிய புவிசார்மூலோபாய கூட்டணிகளுக்கான சாத்தியக்கூறுகளை உயர்த்தியது. பொருளாதாரம் மற்றும் அரசியல் இதழியல் பேராசிரியரான கட்டுரையாளர் ஹென்றிக் முல்லெர், அமெரிக்காவிற்கு எதிராக ஓர் ஐரோப்பிய-சீன மூலோபாய பங்காண்மைக்கு முறையிட்டார்.
அவர் எழுதினார், ட்ரம்ப் வார்த்தைகளால் சீறுவது, "அமெரிக்கா இனியும் சார்ந்திருக்கக்கூடிய பங்காளியாக இல்லை" என்பதையே காட்டுகிறது. தலைவராக இருக்கும் அமெரிக்காவின் பாரம்பரிய பாத்திரத்திலிருந்து ட்ரம்ப் பின்வாங்கியமை, ஒரு நிலைகுலைக்கும் தாக்கத்தைக் கொண்டிருந்தது. இதன் ஒரு விளைவாக, பூகோள பொருளாதார கொள்கை குழப்பத்திற்குள்ளானது. “ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய ஏனைய இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களும் சர்வதேச பிரச்சினைகளை தீர்க்க புதிய பங்காளிகளை எதிர்நோக்கி வருகின்றன.”
உலகளாவிய வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்ற கொள்கையே “தீவிர ஐரோப்பிய-சீன கூட்டுறவுக்கான" மிக முக்கிய பகுதிகளாகும் என்று முல்லெர் எழுதினார். “மேற்கின் முன்னணி சக்தியான" அமெரிக்கா, ஒரு சமயம் "போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பூகோளமயப்பட்ட பொருளாதார அமைப்புகளை" —சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்புக்கு முன்பிருந்த அமைப்பான வரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்குமான பொது உடன்பாடு (GATT) ஆகியவற்றை—ஆதரித்திருந்தது. இப்போது "ஐரோப்பா மற்றும் சீனாவே பூகோள நெறிமுறை வெற்றிடத்தைக் கூட்டாக நிரப்ப" வேண்டும் என்றார்.
தட்பவெப்ப மாற்ற கொள்கை மீதான கூட்டுறவை முல்லெர் பரிந்துரைப்பது, “சுற்றுச்சூழல் பற்றுகோள்" காரணமாக அல்ல, “தூய பொருளாதார நலன்களில்" இருந்தாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக உற்பத்தித்திறனின் வேகமான வளர்ச்சி, பாரிய போட்டித்திறன்மிக்க எதிர்கால இலாபங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதற்கு நீண்டகால முதலீடுகள் அவசியமாகும், ட்ரம்ப் பின்பற்றி வரும் கொள்கை மாற்றங்களும் தாறுமாறான போக்குகளும் இந்த கணக்கீட்டின் அடித்தளத்தை அழித்துவிடக்கூடுமென முல்லெர் அறிவிக்கிறார்.
ஜேர்மன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் இரண்டுமே அவற்றின் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை விரிவாக்க தீவிரமாக முனைந்து வருகின்றன. பூகோளம் எங்கிலும் வர்த்தக உடன்படிக்கைகளை முடிவு செய்ய ஐரோப்பிய ஒன்றியம், ட்ரம்பின் பாதுகாப்புவாதத்தைச் சுரண்டி வருகிறது. இப்போது 20நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, பல அரசு அமைச்சர்களுடன் இன்று பேர்லின் விஜயம் செய்வார். சீன பிரதம மந்திரி லு கெக்கியாங் கலந்து கொள்ளும் ஐரோப்பிய ஒன்றிய-சீன உச்சி மாநாடு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புரூசெல்ஸில் நடக்க உள்ளது.
பிரதான சக்திகளுக்கு இடையிலான மோதலும், புதிய கூட்டணிகள் உருவாவதும் 1890 மற்றும் 1914 க்கு இடையிலான காலகட்டத்தை நினைவூட்டுகின்றன, அப்போது பொருளாதார மற்றும் அரசியல் போட்டிகளின் விளைவாக 1914 முதலாம் உலக போருக்குள் பிரதான சக்திகளை உள்ளிழுத்த அணிகள் இவ்வாறு தான் உருவாயின. அதன் ஆரம்ப காலங்களைப் போலவே, பூகோளமயப்பட்ட முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் முரண்பாடுகள் மனிதயினத்தை பேரழிவுகளுக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் மட்டுமே இதை தடுக்க முடியும்.