Print Version|Feedback
French legislative elections expose Mélenchon’s political bankruptcy
பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல் மெலோன்சோனின் அரசியல் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது
By Alex Lantier
14 June 2017
நாடாளுமன்ற தேர்தலின் முதலாம் சுற்றில் 51 சதவீத வாக்குப்பதிவின்மையும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கட்சியான குடியரசை நோக்கி முன்னேறுவோம் (LREM) கட்சி எழுச்சி கண்டிருப்பதும், புதிய ஜனாதிபதியின் திட்டநிரலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஒரு மூலோபாயத்தை வழங்குவதாக ஜோன்-லூக் மெலோன்சோன் கூறுவதை தவிடுபொடியாக்கியிருக்கின்றன.
அவரது ஒட்டுமொத்த மூலோபாயமுமே, சோசலிஸ்ட் கட்சியின் (PS) அவரது முந்தைய வரலாற்று கூட்டாளிகளிடம் இருந்து சுயாதீனப்பட்டு அரசியல்ரீதியாக தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்கு அணிதிரட்டாது, ஒரு முழுமையான நாடாளுமன்ற கண்ணோட்டத்தில் சிக்கன நடவடிக்கையையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவ பெருக்கத்தையும் எதிர்க்கின்ற முயற்சியை சுற்றியதாய் இருந்தது. ஆறாவது குடியரசுக்கான அவரது அழைப்பு இப்போதைய ஐந்தாவது குடியரசுக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கான ஒரு அழைப்பை குறித்திருக்கவில்லை. முதலில் வாக்காளர்கள் தன்னை எலிசே’ ஜனாதிபதி மாளிகையில் அமர்த்த வேண்டும் என்று கோரினார், ஜனாதிபதித் தேர்தலில் தோற்றபின்னர், பிரதமர் இல்லமான மத்தினியோனில் அமர்த்தக் கோரினார்.
வாக்காளர்களின் தீர்ப்பு மெலோன்சோனை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. 577 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்ற அவையில் அவரது அடிபணியா பிரான்ஸ் இயக்கத்திற்கு (La France insoumise - LFI) அவரை மத்தினியோன் அனுப்புகின்ற அளவுக்கு எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை, PS இன் உடைவிற்கு மத்தியில் LREM ஆதிக்கம் செலுத்தவிருக்கும் அந்த அவையில் அதற்கு கையாலாகாத சிறுபான்மை எண்ணிக்கையே கிடைக்கவிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றுக்குப் பின்னர் தனது வலைப்பதிவில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “இன்னும் ஏராளமான தேர்தல் மாவட்டங்களில் அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் வேட்பாளர்கள் இருக்கின்றார்கள்” என்ற திருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த சூழ்நிலையானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) நிலைப்பாட்டை சரியென நிரூபணம் செய்கின்றது. தொழிலாளர்களது போராட்டங்கள் உத்தியோகபூர்வமாக அனுமதிபெற்ற பாதைகளுக்கு வெளியில், ஒரு புரட்சிகர மற்றும் சர்வதேசிய சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே முன்செல்ல முடியும் என்று PES விளக்கியது. மக்ரோனுக்கும் நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென்னுக்கும் இடையிலான ஜனாதிபதித் தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு அழைப்புவிடுத்து அது ஒரு சுயாதீனமான முன்னோக்கை வழங்கியது.
மெலோன்சோன் தனது அறிக்கையில், மக்ரோனுக்கான ஒரு நாடாளுமன்ற எதிர்ப்பில் அவர் கிளப்பிய நம்பிக்கைகள் வெறும் பிரமைகளாக நிரூபணமாகியிருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. அவரது தோல்விக்கு பரந்த மக்களின் மீது பழிபோட முயலும் அதேநேரத்தில், பல தோல்விகளுக்கு ஏற்கனவே பொறுப்பாக இருக்கின்ற ஆளும் உயரடுக்குடன் நெருக்கமாகப் பிணைந்த கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை அடித்தளமாகக்கொண்டு போராட தொழிலாளர்களை தள்ளுகின்ற, அவர் உட்பட, PS இன் அரசியல் சுற்றுவட்டத்திற்கு ஊக்குவிக்கிறார்.
முதலில் அவர் ‘LFI இன் வெற்றி எண்ணிக்கை அதிகமாயில்லை என்றால், காரணம் பலர் அதற்கு வாக்களிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்’ என்று நீட்டி முழக்கி அவர் வகித்த பாத்திரத்தை மறைப்பதற்கு பார்க்கிறார். அவர் தெரிவித்தார்: “தொழிலாளர் சட்டத்தை அழிப்பதற்கும் பொது உரிமைகளையும் இல்லாதொழிப்பதற்கும் அதேபோல, ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தில் இருக்கின்ற பணம்படைத்தவர்களுக்கு தரகர் வேலை பார்ப்பதற்கும், சுற்றுசூழல் பொறுப்பின்மை போன்ற இந்த அத்தனை விடயங்களுக்கும் - இந்த நாட்டில், அழுத்திச் சொல்கிறேன் பெரும்பான்மை இல்லை என்பதையே இந்த பரந்த வாக்குப்பதிவின்மை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும் வேறேதேனும் வேறொரு வழியில் செய்யப்பட முடியும் என்றும் நமது நாடு நம்பவில்லை.”
“LFI முற்றிலும் ஒரு புதுமையான அரசியல் இயக்கமாகும், வழக்கமான அரசியல் சூதாட்டங்கள், சேர்க்கைகள், பேரங்கள் இல்லாமல் மற்ற அனைவரிடம் இருந்து தனித்துவமான வேட்பாளர்களை முன்நிறுத்துகிறது; முற்றிலும் புதிய வேட்பாளர்களது ஒரு வரிசையை முன்வரிசையில் கொண்டுள்ளது. அதன் அந்தஸ்தான நிலை ஊர்ஜிதப்படுத்தப்பட்டதன் மூலமாக அது கவுரவிக்கப்பட்டிருக்கிறது” என்று திட்டவட்டம் செய்வதன் மூலமாக பிரெஞ்சு மக்களை “சமாதானப்படுத்த” முயலுவதாக அவர் கூறுகிறார்.
பரந்த மக்கள் LFI ஐ ஏன் நம்பவில்லை, அதில் மெலோன்சோனின் கொள்கைகளே கூட வகித்த பாத்திரம் என்ன? என்ற பட்டவர்த்தனமான கேள்வியை மெலோன்சோன் கேட்கவில்லை. உண்மையில், இளைஞர்களும் தொழிலாளர்களும் பெருவாரியாக வாக்களிப்பை புறக்கணித்ததானது மெலோன்சோன் மீது மட்டுமல்லாது, பிரான்சுவா ஹாலண்டின் ஜனாதிபதி காலத்துக்கும் PS இன் உருக்குலைவுக்கும் முன்பாக பிரான்சில் “அதி இடது” எனக் கூறி பல தசாப்தங்களாக தங்களை காட்டிக் கொண்ட ஒட்டுமொத்த குட்டி முதலாளித்துவ அரசியல் சூழல் மீதும் வழங்கிய கடுமையான ஆனால் அசைக்கமுடியாத தீர்ப்பாகும்.
சிரியா மீதான ட்ரம்ப்பின் ஏவுகணைத் தாக்குதல்களையும் மத்திய தரைக்கடலில் அகதிகள் தொகையாக நீரில் மூழ்கியதையும் விமர்சனம் செய்து மெலோன்சோன் ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட 20 சதவீத வாக்குகளை பெற்றார். ஆனால் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிரம்பிய பகுதிகளில் மெலோன்சோனுக்கு பரந்தளவிலான வாக்குகளை துரிதமாய் வென்று தந்த இந்த அறிக்கைகள் மக்ரோனுக்கு ஒரு நேரடி சவால் விடுப்பதை தவிர்க்கும் மெலோன்சோனின் முயற்சிகளுக்கு துரிதமாய் வழிவிடச் செய்தன.
தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கும் மக்ரோனுக்கு எதிராய் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கும் PES அழைப்பு விடக் காரணமாய் இருந்த அப்போது நிலவிய சக்திவாய்ந்த, புறநிலை அரசியல் அடிப்படையை நிகழ்வுகள் விளங்கப்படுத்தியுள்ளன. பெரும்பாலும் இணையவழியாக கட்சிக்குள் எடுக்கப்பட்டிருந்தவர்களான LFI இன் மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் ஒரு ஆன்லைன் வாக்கெடுப்பில் மக்ரோனுக்கு ஆதரவளிப்பதற்கு எதிராக வாக்களித்தனர். ஜனாதிபதித் தேர்தல் இறுதிச் சுற்றில், இரண்டு வேட்பாளர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு அறிக்கையாக 4 மில்லியன் வாக்காளர்கள் வெற்று வாக்குகளை அல்லது செல்லாத வாக்குகளை அளித்தனர், இந்த மனோநிலை நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் வாக்களிக்காதவர்களின் பெருவாரியானோரின் மீது தாக்கம் செலுத்தியிருந்தது என்று கூறலாம்.
மக்ரோனை வெளிப்படையாக ஆதரிக்காத அதேநேரத்தில் அவர் மீது முடிந்த அளவுக்கு பிரமைகளை பரப்பி போராட்டத்தை முடக்குவதும், அதே நேரத்தில் வலது நோக்கி துரிதமாக நகர்வதும் மெலோன்சோனின் பாத்திரமாய் இருந்தது. LFI இன் அங்கத்தவர்கள் வாக்களித்தும் கூட, ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு அவர் முதலில் மறுத்தார். LFI ஒரு இயக்கமே தவிர, இடது-சாரி அரசியல் கட்சி அல்ல, ஆகவே மக்ரோனுக்கு ஆதரவு காட்டிய அதன் சிறுபான்மை எண்ணிக்கையினர் மீது ஒரு அரசியல் நிலைப்பாட்டை திணிக்கவியலாது என்ற விபரத்தை ஒரு சாக்காக அவர் மேற்கோள் காட்டினார்.
LFI மே 13 அன்று அதன் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கிய போது, மக்ரோனின் பிரதமராக ஆவதற்கு முன்வந்த மெலோன்சோன் அப்போது தான், “மக்களின் சந்தோசம் எதில் இருக்கிறது என்பதை அறிந்த ஒரு புத்திசாலி மனிதர்” மெலோன்சோன் இவ்வாறு தன்னையே அடக்கமாக விவரித்துக் கொள்கிறார் மக்ரோனின் கொள்கைகளை பட்டைதீட்ட முடியும் என்று அவர் கூறினார். 1997-2002 இல் வலது-சாரி ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் PS பிரதமர் லியோனல் ஜோஸ்பனின் கூட்டணி அரசாங்கத்தை மாதிரியாகக் காட்டினார், அந்த அரசாங்கம் ஆழமான மக்கள் வெறுப்பைச் சம்பாதித்ததாக நிரூபணம் ஆனதாகும்.
ஆச்சரியப்பட ஏதுமின்றி, இந்தக் கொள்கைகள் LFI இன் வெகுஜன ஆதரவில் ஒரு நிலைகுலைவை உருவாக்கியது. ஜூன் ஆரம்பத்தில், Le Parisien செய்தித்தாளிடம் பேசிய மெலோன்சோன், மக்ரோன் முன்மொழிந்திருக்கும் “பொது வாழ்க்கையை அறவழிப்படுத்துவதன் மீதான சட்டம்” குறித்து விவாதிப்பதற்காக மக்ரோனின் நீதி அமைச்சரான பிரான்சுவா பேய்ரூவை சந்தித்ததாக தெரிவித்தார். சமூக அமைதியின்மை குறித்த தனது அச்சங்கள் குறித்தும் பேசிய அவர், பிரான்ஸ் ஒரு “வெடிக் கிடங்காய்” இருப்பதாக எச்சரித்தார். மக்ரோனுக்கு எதிராய் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு-சாரா அமைப்புகள் உள்ள ஒரு “புதிய மக்கள் முன்னணி”யை உருவாக்குவதே அவர் முன்வைத்த தீர்வாக இருந்தது.
அதாவது, மெலோன்சோன் கூறுவதன் படி, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி போன்ற PS உடன் இணைந்த கட்சிகள், பல்வேறு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், மற்றும் அவர்களது NGO கூட்டாளிகள் போன்றவற்றின் ஒரு அரசியல் கூட்டணியில் UF தலைமை வகிப்பவராக சேவையாற்றும். இது உண்மையில் ஒரு “முற்றிலும் புதிய” இயக்கம் கிடையாது, மாறாக PS இன் சுற்றுவட்டத்தில் இருக்கின்ற சக்திகளது பழைய கூட்டுச்சேர்க்கைகளையும் சூழ்ச்சிகளையும் ஒரு புதிய போர்வையில் தொழிலாளர்களை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான முயற்சியாகும்.
வாக்குப்பதிவின்மையும் LREM இன் எழுச்சியும், பரந்த மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இத்தகைய சக்திகளின் மீது எந்த நம்பிக்கையும் இனியும் இல்லை என்பதற்கான பல அறிகுறிகளாகும். சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைத்ததன் பிந்தைய கால் நூற்றாண்டு காலம், மற்றும் PS 1982 இல் அதன் “சிக்கன நடவடிக்கைத் திருப்ப”த்தை தொடக்கியதற்கு பிந்தைய 35 ஆண்டு காலம் (இச்சமயத்தில் இந்த அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீதான முன்னினும் பெரிய தாக்குதல்களை எதிர்ப்பதற்குத் தவறின) ஆகியவற்றின் விளைபொருளாய் அது இருந்தது.
சிக்கன நடவடிக்கைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்களுக்கு பரந்த மக்களின் ஆதரவு இருந்தபோதும், ஆலை மூடல்களுக்கு அல்லது ஓய்வூதியங்கள் மற்றும் தொழிலாளர் சட்ட பாதுகாப்புகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தும் தோல்வி கண்டதன் பின்னர், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவர்களது அரசியல் கூட்டாளிகளின் நம்பகத்தன்மை உருக்குலைந்து போனது. ஹாலண்டின் ஜனாதிபதி பதவிக் காலத்திற்குப் பிந்தைய மதிப்பிழப்பும் நாடாளுமன்றத் தேர்தலில் PS இப்போது காணும் உருச்சிதைவும் பரந்த மக்களின் அவநம்பிக்கையை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் பாரிய தொழிலாளர்கள் மத்தியில் வெடிப்பான சமூக கோபம் நிலவுவது வரவிருக்கும் புரட்சிகரப் போராட்டங்களுக்கான ஒரு அறிகுறியாகும்.
இந்த நிலைமைகளின் கீழ், மெலோன்சோன் வழங்குவதற்கு எதுவொன்றும் இல்லாதிருக்கிறது என்பதோடு, ஜனாதிபதி தேர்தலில் போலவே, ஞாயிறன்றான நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்றுக்கு எந்த தெளிவான வாக்களிப்பு வழிகாட்டல்களும் அவரால் வழங்க முடியாதிருக்கிறது. அவர் கூறினார், “இரண்டாம் சுற்றில் ஜனாதிபதியின் கட்சிக்கு முழு அதிகாரங்களையும் கொடுக்காதீர்கள், கொடுக்கவும் அனுமதிக்காதீர்கள் - LREM ஐ சேர்ந்தவர்கள் நேரடியாக அழைப்பு விடுத்திருந்தாலும் சரி, அல்லது மற்ற கட்சி இணைப்புகளை (PS, குடியரசுக் கட்சி) காட்டுபவர்களானாலும் சரி, அனைவருமே திடீரென்று தேர்தல் முடிந்த மறுநாள், முகாம் மாறுவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.”
ஆயினும் அதன்பின் உடனடியாக, ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் மக்ரோனுக்கு வாக்களிப்பதை நியாயப்படுத்துவதற்கு ஊடகங்கள் வைத்த வாதங்களை மறுபடியும் கூறுகிறார்: “தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும் கூட வர அனுமதியாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் அதுதான் எங்களை மிகவும் புண்படுத்தக் கூடியதாகும்...மக்களைப் பிரித்தாளுவது, உங்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தவிருக்கும் மனிதர்களைத் தேர்ந்தெடுக்க உங்களை இட்டுச் செல்கிற தற்காலிக அணிவரிசைகளுக்கு சாதகம் காட்டுவது ஆகிய நோக்கங்களுக்கு மட்டுமே தேசிய முன்னணி சேவை செய்கிறது.”
FN ஐ தேர்ந்தெடுக்காத அதே சமயத்தில் முழு அதிகாரங்களைக் கொடுக்காத விதத்தில் LREM, LR மற்றும் PS ஐ தோற்கடிப்பதற்கு மெலோன்சோன் விடுத்திருக்கும் அழைப்பு, அவர் முன்வைத்த மற்ற ஆலோசனைகளைப் போலவே திவாலானதும் நடைமுறை சாத்தியமற்றதும் ஆகும். ஒரு சில டசன் தேர்தல் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் வெளியேற்றப்பட்டிருக்கும் LFIக்கு பாரிய வாக்களிப்பு அவசியமாயிருக்கும். ஆயினும், மெலோன்சோனின் இலக்கு ஒரு வெற்றிகரமான தேர்தல் மூலோபாயத்தை வகுப்பது அல்ல, மாறாக, மக்ரோனை FNக்கு எதிரான ஒரு ஜனநாயக மாற்றைப் போல சித்தரிக்கின்ற மோசடியை தொடர்வதேயாகும்.
தனது பிரச்சார வாக்குறுதிகளை அமல்படுத்துவதற்கான மக்ரோனின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள், அவர் லு பென்னுக்கு சளைத்த தீமை அல்ல என்ற PES இன் எச்சரிக்கைகளை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. அவர் அவசரநிலையை சட்டமாக்கி பிரான்சில் நிரந்தரமான ஒரு போலிஸ் அரசை உருவாக்க இருக்கிறார் என்பதோடு, பிரான்சின் தொழிலாளர் சட்டத்தை உத்தரவுகளின் மூலமாகவே அவர் திருத்தியெழுத அனுமதிக்கின்ற வகையிலான ஒரு சட்டத்தையும் திணிக்க இருக்கிறார். PS அதன் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்தை நிறைவேற்றியபோது செய்த அதேவிதத்தில் சமூக எதிர்ப்பை ஒடுக்குவதற்கும், ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியம் இராணுவமயமாக்கப்படுகின்ற உள்ளடக்கத்தில் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு அனுமதிக்கும் வகையில் பாதுகாப்புச் செலவினத்தில் ஒரு விரிந்த அதிகரிப்புக்கு நிதியாதாரம் திரட்டுவதற்கும் இவ்வாறாக ஆயுதபாணியாக அவர் திட்டமிட்டு வருகிறார்.
இந்த பிற்போக்குத்தனமான கொள்கைகள் இம்மியளவும் ஜனநாயக அங்கீகாரம் பெற்றவை அல்ல: மக்களின் மிகப்பெருவாரியானோர் இவற்றுக்கு எதிராய் நிற்கின்றனர். தொழிலாளர்களுக்கும் மக்ரோனுக்கும் இடையில் எழுந்து கொண்டிருக்கும் முன்கண்டிராத அளவான மோதலில், தொழிலாள வர்க்கமானது தொழிலாளர்கள் ஏற்கனவே நம்பிக்கை இழந்து விட்டதான பழைய சமூக அணிதிரட்டல் வடிவங்களுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. PES மற்றும் ICFI ஆகிய பிரான்ஸ் மற்றும் உலகெங்கிற்குமான அதன் சொந்த புரட்சிகரக் கட்சி அதற்குத் தேவை.
மெலோன்சோனின் திவால்நிலை கதியே அவரது மக்களின் சகாப்தம் என்னும் பிரச்சார புத்தகத்தில் கடைவிரிக்கப்பட்ட மார்க்சிச-விரோத ஜனரஞ்சகவாதத்திற்கும் ஆகும். சோசலிசம் மற்றும் தொழிலாள வர்க்கம் ஆகியவற்றின் சகாப்தம் முடிந்து போனதென்றும், ஒருவர் உண்மையான இடதுக்கும் போலி இடதுக்கும் (அதாவது PS) இடையில் வித்தியாசப்படுத்திப் பார்க்கக் கூடாது என்றும், அவரது குடிமக்கள் புரட்சி லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக் கட்சி தலைமையில் நடந்ததைப் போன்ற “பழைய” சர்வதேச சோசலிசப் புரட்சி அல்ல என்றும் அதில் அவர் அறிவிக்கிறார். தன்னை பிரான்சின் “இடதாக” காட்டிக் கொண்டதில் மேலாதிக்க சக்தியாக PS இருந்த ஒரு சகாப்தத்தில் ஆதிக்கம் செலுத்திய பின்நவீனத்துவத் தத்துவங்களையே அவர் முழுக்க தனக்கு அடித்தளமாய்க் கொள்கிறார்.
இந்த ஆண்டில் PS இன் வரலாற்றுப் பெரும் மதிப்பிழப்பு மற்றும் உருக்குலைவு, மற்றும் “குடிமக்கள் புரட்சி”யை தொடங்கப் போவதாகச் கூறிய மெலோன்சோனது சூழ்ச்சி வேலைகளது திவால்நிலை ஆகியவை, ஒரு புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கமும் மற்றும் மார்க்சிசமும் வெடிப்புடன் மறுஎழுச்சி காண்பது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் பல அறிகுறிகளாகும்.