Print Version|Feedback
With permanent state of emergency, Macron plans authoritarian rule in France
நிரந்தர அவசரகால நிலையைக் கொண்டு, மக்ரோன் பிரான்சில் சர்வாதிகார ஆட்சிக்கு திட்டமிடுகிறார்
By Kumaran Ira
9 June 2017
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் அவசரகால நிலையை நவம்பர் வரையில் நீடிக்கும் அதன் நோக்கத்தைக் கடந்த வாரம் அறிவித்ததும், அவசரகால நிலையை நிரந்தரமாக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மக்ரோனின் நோக்கத்தை நேற்று பத்திரிகை செய்திகள் உறுதிப்படுத்தின. இது பிரான்சில் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காலவரம்பின்றி இடைநீக்கம் செய்து, பொலிஸ் மீதான நீதிமன்றங்களின் எந்தவொரு கண்காணிப்பையும் நடைமுறையளவில் முடிவுக்குக் கொண்டு வந்து, பிரான்சை ஒரு சர்வாதிகாரத்திற்குள் திருப்புவதற்கான ஆளும் வர்க்கத்தின் முயற்சியைக் குறிக்கிறது.
“பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான போராட்டத்தை பலப்படுத்துவதற்கான" ஒரு சட்டத்திற்கு புதனன்று பாதுகாப்பு கவுன்சிலில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் ஒரு நகல் Le Monde பத்திரிகைக்கு வழங்கப்பட்டு, நேற்று அது அதன் உள்ளடக்கத்தை பிரசுரித்தது: “Le Monde பெற்றுள்ள, அந்த சட்டமசோதாவின்படி, 1955 இல் அல்ஜீரிய போரின் போது உருவாக்கப்பட்ட அவசரகால நிலை சட்டத்தின் —குறிப்பாக காலவரம்பின்றி வீட்டுக்காவலில் வைத்திருத்தல், பொது இடங்களை மூடுதல், மக்கள் போராட்டங்களுக்கு தடைவிதித்தல், மற்றும் பகலிலும் இரவிலும் ஏதேச்சதிகார சோதனைகள் மற்றும் பறிமுதல்கள் என— பல மிகக் கடுமையான செயற்பாடுகள் வெறும் ஒருசில சிறிய மாற்றங்களுடன் அச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.”
நீதித்துறை பலவீனமாக்கப்படும், பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளுக்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்குமென Le Monde விவரித்தது: “இந்த நடவடிக்கைகள் எல்லாம், ஒரு நீதிபதியின் தலையீடு இல்லாமல், உள்துறை அமைச்சகம் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளின் (préfets) உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்படும்.”
“உளவுபார்ப்பு மற்றும் மற்ற தனிப்பட்ட கடமைப்பாடுகள்" என்ற தலைப்பில் உள்ள மற்றொரு செயற்பாடு, “ஒருவரது நடவடிக்கையானது பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு குறிப்பிட்ட அச்சுறுத்தல் ஈர்ப்பை கொண்டதாக நினைக்க செய்ய காரணங்களைக் கொண்டிருந்தால் அவர் மீது" மேற்கொள்ளத்தக்க தண்டனைகளை வரையறுக்கிறது. அச்சட்டத்தை எழுதியதாக கூறப்படும் உள்துறை அமைச்சகம், மக்கள் மீது மின்னணு பிணைப்பு சாதனங்களைப் பிணைப்பதையும் அனுமதிக்கும். அவசரகால நிலையின் கீழ் அதனை பயன்படுத்துவது அரசியலமைப்பிற்கு புறம்பானதென டிசம்பர் 2015 இல் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும், இந்த செயற்பாடு மீண்டும் இச்சட்டத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
அவசரகால நிலையின் வழிவகைகளை நிரந்தரமாக்குவதற்கான மக்ரோனின் முயற்சியானது, அரசியல் பொய்களின் அடிப்படையில் அமைந்த ஒரு சட்டவிரோத முயற்சியாகும். 20 ஆம் நூற்றாண்டில் பாசிச சர்வாதிகாரங்களுடனான தொழிலாள வர்க்கத்தின் கடுமையான அனுபவங்களின் விளைவாக, வேலைநிறுத்தம் மற்றும் போராடுவதற்கான உரிமை உட்பட பிரெஞ்சு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளை சிதைப்பதே அதன் நோக்கமாகும். அத்தகைய உரிமைகள் இல்லாவிடின், ஆயுதமயப்படுத்தப்பட்ட பொலிஸ் பாரிய அரசு அதிகாரங்களுடன் உழைக்கும் மக்களுக்கு எதிராக பொலிஸ் பயங்கரவாதத்தை பயன்படுத்தி வேகமாக ஒரு குற்றகரமான ஆட்சியை உருவாக்கும்.
13 நவம்பர் 2015 பாரீஸ் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட அவசரகால நிலை இதுவரையில் ஒரு தற்காலிக நடவடிக்கை என்று தான் கூறப்பட்டு வந்தது, ஆனால் தொடர்ந்து மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பிரான்சில் இஸ்லாமிய பயங்கரவாத வலையமைப்புகளின் மரணகரமான தாக்குதல் அச்சுறுத்தலை பொலிஸ் கையாள உதவுவதற்கு இது மட்டுமே ஒரே வழி என்ற கூற்றின் அடிப்படையில் ஊடகங்களும் முந்தைய சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கமும் அதை நியாயப்படுத்தியது. இந்த கூற்று ஒரு பிற்போக்குத்தனமான பொய்யாகும்.
இந்த பயங்கரவாத வலையமைப்புகள் பிரான்சின் பாரிய உளவுத்துறை சேவைகளால் நெருக்கமாக கண்காணிக்கப்படுகின்றன என்பதோடு, பிரான்ஸ் மற்றும் ஏனைய நேட்டோ சக்திகளின் வெளியுறவு கொள்கைக்கு இவை கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பிரான்சில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களை ஒழுங்கமைத்தவர்கள் அனைவரும், விதிவிலக்கின்றி, உளவுத்துறை சேவைகளுக்கு நன்கறியப்பட்டவர்களாக இருந்தனர் — மிக முக்கியமாக சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு தலைமை வகித்த குவாச்சி சகோதரர்கள் மற்றும் 13 நவம்பர் 2015 தாக்குதல்களுக்குத் தலைமை வகித்த அப்தெல்ஹமீத் அபாஊட் ஆகியோரும் இதில் உள்ளடங்குவர். இந்த வலையமைப்புகள் அரசு பாதுகாப்பின் கீழ் உளவுத்துறை சொத்துக்களாக செயல்பட்டு வருகின்ற நிலையில், அவர்கள் சுதந்திரமாக பயணிக்கவும் மற்றும் அவர்களது தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சிரியா போருக்காக போராளிகளை நியமிக்கும் இஸ்லாமிய வலையமைப்புகளில் ஆயிரக் கணக்கானவர்கள் பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் செயல்பட்டு வருகின்ற போதினும், வெறும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே அவசரகால நிலையின் கீழ் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிரியாவில் நேட்டோவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் உதவிகள் பெற்று தொடர்ந்து செயல்படுகின்ற நிலையில், முன்பு நினைத்தும் பார்க்க முடியாததாக இருந்த கடுமையான ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை முன்னெடுக்க அவர்கள் ஒரு காரணமாக பயன்படுத்தப்பட்டனர்.
மக்ரோனின் நடவடிக்கைகள், நீதித்துறையைப் பிரதிநிதித்துவம் செய்யும் சட்ட வல்லுனர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நேற்று கடுமையான கண்டனங்களை முகங்கொடுத்தது. “தேசத்தின் பொதுவான சட்டத்திற்குள் அவசரகால நிலையை உட்புகுத்தியது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகும்,” என்று பேராசிரியர் போல் காசியா AFP க்கு தெரிவித்தார். “குறிப்பிட்டளவில் மக்களின் சுதந்திரங்களை அச்சுறுத்தும்" தண்டனைகள் "வெறும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே" திணிக்கப்படலாமென அவர் எச்சரித்தார்.
பிரான்சின் தலைமை நீதிபதிகள் சங்கங்கள் இரண்டுமே அந்த சட்டமசோதாவிற்கு கண்டனம் தெரிவித்தன. நீதிபதிகளின் தொழிற்சங்கம் (USM) அதை "இழிவான செயல்" என்று அழைத்தது, நீதிபதிகளின் சங்கம் (SM) அதை "நீதித்துறையின் உண்மையான அரக்கன்" என்று குறிப்பிட்டது.
பிரான்சில் ஒரு சர்வாதிகாரத்தை கட்டமைப்பதற்கான மக்ரோனின் நகர்வுகளை தொழிலாளர்கள் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த சமூக சிக்கன கொள்கைகளுக்கான அவர் திட்டங்களும், பேர்லினுடன் சேர்ந்து ஒரு செலவு மிகுந்த இராணுவ ஆயத்தப்படுத்தலும், மீண்டும் கட்டாய இராணுவ சேவையைக் கொண்டு வருவதற்குமான அவரின் திட்டங்களும் ஆழமாக மக்கள் மதிப்பிழந்துள்ளன என்பதையும், அவை வேகமாக பாரிய எதிர்ப்பை முகங்கொடுக்கும் என்பதையும் மக்ரோன் நன்கறிவார். அவர் இலக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் அல்ல, மாறாக புரட்சிகர தாக்கங்களோடு மக்ரோன் அரசாங்கத்துடனான ஒரு மோதலை முகங்கொடுக்கும் தொழிலாள வர்க்கமாகும்.
மிக முக்கியமாக ஒரு நிரந்தர அவசரகால நிலைக்கான இந்த சட்டமசோதாவுக்கு மக்ரோன் அரசாங்கம் ஒப்புதல் வழங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, பிரதம மந்திரி எடுவார்ட் பிலிப் பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தின் நெறிமுறைகளை தளர்த்துவதில் அவர் பயன்படுத்த உத்தேசித்துள்ள வெடிப்பார்ந்த செயற்பாடுகளை வெளியிட்டார். சமூக செலவினங்கள் மீதான முழு அதிகாரத்தையும் ஜனாதிபதிக்கு ஒப்படைக்கும் அதிகார சட்டத்திற்கு வாக்களித்த பின்னர், நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளிலுமே ஒரு வாக்கெடுப்பு இல்லாமல், ஜனாதிபதி உத்தரவாணைகள் மூலமாக இந்த செயற்பாடுகள் திணிக்கப்பட உள்ளன.
மிக முக்கியமாக இந்த சர்வாதிகார அமைப்பு முற்றிலும் தொழிலாள வர்க்கத்தை இலக்கில் வைத்துள்ளது. பிரெஞ்சு பெருநிறுவன போட்டித்தன்மையை ஊக்குவிக்கும் பெயரில், தொழிலாளர்களை வேலையில் சேர்க்கும் மற்றும் நீக்கும் பெருநிறுவனங்களின் அதிகாரங்கள் மீதுள்ள இப்போதைய தடைகளை நீக்குவதற்கு அது நோக்கம் கொண்டுள்ளது. அந்த வெட்டுக்கள் "தவிர்க்கவியலாதவை மற்றும் அவசர தேவை" என்று பிலிப் குறிப்பிட்டார். இந்த திட்டமிட்ட வெட்டுக்களில் ஓய்வூதியங்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மை காப்பீடு மீதான புதிய தாக்குதல்களும் உள்ளடங்குமென செய்திகள் குறிப்பிடுகின்றன.
முறையற்ற வேலைநீக்கத்திற்கான இழப்பீடுகளை அகற்றுவதன் மூலம், மற்றும் தொழில்துறை மட்டத்திலான உடன்படிக்கைகள் மற்றும் தேசிய தொழிற்சாலை விதிகளை மீறி நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் ஒப்பந்தங்களை பேரம்பேச அனுமதிப்பதன் மூலம், அச்சட்டமசோதா பாரிய போராட்டங்களுக்கு இடையே கடந்த ஆண்டு தொழில் சட்டங்களில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளையும் மீண்டும் மறுஅறிமுகம் செய்கிறது. இந்த செயற்பாடுகள் இல்லாமலேயே, அச்சட்டத்தை 70 சதவீத மக்கள் எதிர்த்துள்ளனர். இப்போது மக்ரோன் பொது கருத்தை நசுக்கி, மிகவும் மக்கள் மதிப்பிழந்த செயற்பாடுகள் அனைத்தையும் பலவந்தமாக மறுஅறிமுகம் செய்து, தலைமுறை தலைமுறையாக போராடி 20 ஆம் நூற்றாண்டில் வென்ற சமூக உரிமைகளை தாக்க அவற்றை பயன்படுத்துவதற்கு உத்தேசிக்கிறார்.
தொழிற்சங்கங்களுக்கு அரசு மற்றும் முதலாளிமார்கள் சட்டவிரோதமாக நிதியளிப்பதைச் சட்டப்பூர்வ நிதி பரிவர்த்தனையாக செய்து அப்பிரச்சினைக்கு தீர்வளிப்பதன் மூலமாக, தொழிற்சங்கங்களை விலைக்கு வாங்கி அவற்றின் எதிர்ப்பை மட்டுப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிடுகிறது. நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கும், ஆனால் தொழிலாளர்கள் அதை அவர்கள் விரும்பும் தொழிற்சங்கங்களுக்கு வழங்கிவிடும் ஒரு தொகையான "தொழிற்சங்க காசோலை" (union cheque) என்றழைக்கப்படும் ஒன்றை ஏற்படுத்தவும் மக்ரோன் திட்டமிடுகிறார். அப்பணம் பெயரளவிற்கு தொழிலாளர்கள் கரங்கள் மூலமாக பரிவர்த்தனை ஆகும் என்றாலும், அது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வருவதில்லை, மாறாக தொழிற்சங்க கொள்கைக்கு கட்டளையிட விரும்பும் பெருநிறுவன நிர்வாகத்திடம் இருந்து வருகிறது.
இந்த கொள்கைகள், அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் (France insoumise – FI) தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோனின் கொள்கைகள் மீதான ஒரு அரசியல் குற்றப்பத்திரிகையாக உள்ளன. நேற்று அவர் இந்த செயற்பாடுகளை ஒரு "சமூக சதியாக" (social coup d’état) விமர்சித்ததுடன், இச்சட்டம் உழைக்கும் மக்களைப் பொறுத்த வரையில் "19 ஆம் நூற்றாண்டு நிலைமைகளுக்கு திரும்புவதை" குறிப்பதாக குறிப்பிட்டார். மக்ரோனுக்கு எதிராக அவர் இயக்கம் "மட்டுமே ஒரு மனிதாபிமான மற்றும் குடியரசு எதிர்ப்பை முன்னிறுத்துவதாக" சேர்த்துக் கொண்டார்.
உண்மையில் மக்ரோன் அரசாங்கத்தின் திட்டங்கள், மக்ரோன் மீது பிரமைகளை உண்டாக்க மீண்டும் மீண்டும் முயன்ற மெலோன்சோனின் முயற்சிகளை அம்பலப்படுத்துகின்றன. “மக்களின் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்பதை அறிந்துள்ள பயிற்சி பெற்ற புத்திசாலிகளின் கரங்களை" மக்ரோனுக்கு வழங்குவதற்காக அவரின் பிரதம மந்திரியாக சேவையாற்ற முன்வந்த பின்னர், மெலோன்சோன், மக்ரோன் அரசாங்க அமைச்சர்களுடன் அவர்களது சட்டமசோதா மீது விவாதிக்க அவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். பிரான்சில் ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கான கட்டமைப்பிற்கு மக்ரோன் தயாரிப்பு செய்து வருகையில், இத்தகைய வாய்சவடால் பேச்சுக்களுடன் மெலோன்சோன் மக்ரோனுக்கு அரசியல் ஆதரவை வழங்கினார்.