Print Version|Feedback
France’s new pro-Macron legislature: The ruling class in office
பிரான்சின் புதிய மக்ரோன்-ஆதரவு நாடாளுமன்றம்: LREM சமூக, அரசியல் உயரடுக்கை மாற்றியமைக்கிறது
By Francis Dubois
20 June 2017
பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களில் இமானுவல் மக்ரோனின் வெற்றி மற்றும், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் (PS) வரலாற்று தோல்விகளுக்குப் பின்னர், ஊடகங்கள், சோசலிஸ்ட் கட்சியில் இருந்து மக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்போம் (LREM) இயக்கத்திற்கு மிகப்பெரும் நகர்வு நடந்து வருவதாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த கதையாடலில், சோசலிஸ்ட் கட்சியைச் சுற்றியுள்ள "பழைய இடது", மக்ரோன் ஆளும், ஒரு புதிய "தொடக்கங்களுக்கான தேசத்திற்கு" (Start-up Nation) வழிவிட்டு கொடுக்கின்றன.
“நான் முழு சோகத்தில் உள்ளேன். எனக்கு 66 வயதாகிறது, என் வாழ்வில் நான் செய்த ஒவ்வொன்றும் நாசமாகிவிட்டதாக, நான் நம்பிய ஒவ்வொன்றும் சுக்குநூறாகி விட்டதாக உணர்கிறேன்,” என்று நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகரும் லீல் நகர முதல்வருமான மார்ட்டின் ஓபிறி நிலைமை குறித்து புலம்பினார்.
லீல் பகுதியின் சமூக மற்றும் தொழில்துறை அழிப்புக்கு சோசலிஸ்ட் கட்சி தான் பெருமளவில் பொறுப்பாகிறது என்ற நிலையில், அப்பெண்மணி அது குறித்து எதுவும் பேசவில்லை, மாறாக இந்த தேர்தல் சோசலிஸ்ட் கட்சிக்கு அல்ல LREM இன் புதிய அரசியல்வாதிகளுக்கே பலனளிக்கும் என்று கூறப்படும் உண்மையைக் குறித்து பேசுகிறார்: “இனி பிரெஞ்சு மக்களிடம் எவ்வாறு பேசுவதென்றே எனக்கு தெரியவில்லை. ஆனால் பாருங்கள் நீங்கள் கையாளுகிறீர்கள்! … வேடிக்கையாகவோ அல்லது நண்பர்கள் என்பதற்காகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்ரோனைச் சுற்றியுள்ள இந்த மிகவும் புதியவர்கள், ஐந்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகளை விட சிறப்பாக இருப்பார்களா? இது என்னை பலவீனப்படுத்துகிறது!” என்றார்.
கடந்த வாரம் பாரீசின் வீவாடெக் நிறுவன கூட்டத்தில் மக்ரோன் வலியுறுத்துகையில், ஒரு இளம் தொழில்நுட்ப நிறுவனத்தைப் போல அதே வழியில், அவரது ஜனாதிபதி பதவிகாலத்தில் பிரான்ஸ் புதிய வாழ்வைப் பெறும் என்றார்: “பிரான்ஸ் புதிய தொழில்களின் ஒரு தேசமாக, புதிய நிறுவனங்களைப் போல சிந்திக்கும், செயல்படும் ஒரு தேசமாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்,” என்றார்.
LREM மற்றும் மக்ரோனையும் ஊக்குவிக்குவிப்பதற்கு ஊடகங்கள் இந்த கற்பனை கலந்த கதையாடலை அடிப்படையாக கொண்டிருந்த நிலையில், இது மக்களிடையே சட்டபூர்வ அவநம்பிக்கை, ஐயங்கள் மற்றும் வெறுப்பைத் தூண்டியதுடன், இது முடி முதல் அடி வரையில் தவறான திசைக்கு இட்டுச் செல்கிறது. தொழிலாள வர்க்கத்தை தாக்கிய சோசலிஸ்ட் கட்சி ஒரு பிற்போக்குத்தனமான கட்சியாகும், பழமைவாத அரசியல்வாதி ஜோன் போல் டுலுவுவா (Jean-Paul Delevoye) ஆல் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட LREM இன் நாடாளுமன்ற வேட்பாளர்கள் அந்த பழைய ஆளும் ஸ்தாபகத்தின் ஓர் உள்ளார்ந்த பாகத்தின் உருவடிவமாக நிரூபணம் ஆனவர்களாவர்.
LREM இன் பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள், கடந்த பல தசாப்தங்களாக சிக்கன திட்டங்கள் மற்றும் போர் கொள்கைகளை மேற்கொண்ட கட்சிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் அண்மித்து பாதிப்பேர், 525 இல் 244 பேர், நகரசபை அலுவலகத்தில் இருந்து அமைச்சர் பதவிகள் அல்லது நாடாளுமன்ற ஆசனங்கள் வரையில் பல்வேறு மட்டங்களில் ஏற்கனவே அரசியல் பதவிகளில் இருந்தவர்கள். நேரடியாக பதவி வகிக்காத அந்த 281 பேரில் பலர், தேர்தல் பிரச்சாரங்களில் அல்லது அரசு-சாரா அமைப்புகளில் (NGOs) பங்கெடுத்து, அதன் மூலமாக ஸ்தாபக கட்சிகளுடன் தொடர்பில் இருந்தவர்களாவர்.
குடியரசை நோக்கி அணிவகுப்போம் இயக்கத்தின் ஸ்தாபகர் மக்ரோன், சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹோலாண்டின் ஜனாதிபதி பதவிகாலத்தில் பொருளாதார அமைச்சராக இருந்தவர் என்பதோடு, சோசலிஸ்ட் கட்சி மற்றும் LREM ஐ இணைக்கும் பிணைப்புகள் எண்ணிக்கையற்று உள்ளன. பாதுகாப்பு அமைச்சர் ஜோன்-ஈர் லு திரியோன் (Jean-Yves Le Drian), லியோன் நகர முதல்வர் ஜெரார் கொலொம் (Gérard Collomb), பாரீஸ் நகர முன்னாள் முதல்வர் பெர்த்ரோன் டுலானொயே (Bertrand Delanoë), ஜாக் அத்தாலி (Jacques Attali), முன்னாள் பிரதம மந்திரிகள் இமானுவல் வால்ஸ் மற்றும் பேர்னார்ட் கசெனேவ், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் செகோலென் ரோயால், ஹோலாண்ட் நிர்வாக ஆலோசகர் பேர்னார் புவனியோன் (Bernard Poignant) மற்றும் ஹோலாண்டும் உள்ளடங்கலாக, உயர்மட்ட சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் ஆரம்பத்திலிருந்தே மக்ரோனை ஆதரித்திருந்தனர்.
சோசலிஸ்ட் கட்சி அரசியல்வாதிகள் அல்லது 1981 க்குப் பிந்தைய எண்ணற்ற அரசாங்கங்களில் சோசலிஸ்ட் கட்சியுடன் அணி சேர்ந்திருந்த கட்சிகளில் இருந்து வந்த அரசியல்வாதிகளை மக்ரோனின் நாடாளுமன்ற குழு பெருமளவில் உள்ளடக்கி உள்ளது. மக்ரோனின் நாடாளுமன்ற வேட்பாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் சோசலிஸ்ட் கட்சி அங்கத்தவர்களாக இருந்தனர். ஒரு டஜன் பேர் தீவிர இடது கட்சியில் இருந்தும், சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட கட்சிகளில் இருந்தும், அல்லது ஜோன்-பியர் செவனுமோவின் குடியரசு மற்றும் மக்கள் இயக்கத்திலிருந்தும் (MRC) வந்திருந்தனர். ஒருவர், Robert Hue, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இன் முன்னாள் பொது செயலாளர் ஆவார்! பல தொகுதிகளில் LREM அது ஆதரித்த சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
தற்போதைய நீதித்துறை அமைச்சர் பிரான்சுவா பேய்ரூ இன் வலதுசாரி ஜனநாயக இயக்கத்தின் (MoDem) எல்லா அங்கத்தவர்களும் உத்தியோகபூர்வமாக போட்டியிடவில்லை என்றாலும், அதன் 79 வேட்பாளர்களை LREM அதன் பட்டியலில் உள்ளடக்கி இருந்தது. சுமார் 70 வேட்பாளர்களின் ஒரு குழு வலதுசாரி ஜனநாயகவாதிகள் மற்றும் சுதந்திரவாதிகளின் ஒன்றியத்திலிருந்து (UDI) வந்திருந்தது, இந்த கூட்டமைப்புக்கு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் கீழ் பல அரசாங்கங்களில் அமைச்சராக இருந்த ஜோன்-லூயி போர்லோ (Jean-Louis Borloo) தலைமை வகித்தார்.
பத்து வேட்பாளர்கள் நேரடியாக சார்க்கோசியின் கட்சியான குடியரசுக் கட்சியிலிருந்து வந்திருந்தனர். ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது நவ-பாசிசவாத மரீன் லு பென் உடன் அணி சேர்ந்திருந்த தீவிரவலது அமைப்பான எழுக பிரான்ஸ் (DLF) கட்சியின் ஒரு முன்னாள் வேட்பாளரும் LREM இன் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் இருந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள LREM நாடாளுமன்ற உறுப்பினர்கள், பழைய நாடாளுமன்றத்தில் இருந்த சோசலிஸ்ட் கட்சி பெரும்பான்மையை விட அதிகமாக பிரான்சின் உழைக்கும் மக்களிடமிருந்து சமூகரீதியில் பிரிந்து நிற்கின்றனர். நடைமுறையளவில் பிரத்யேகமாக மிகவும் தனிச்சலுகை கொண்ட சக்திகளிடம் இருந்து ஈர்க்கப்பட்டுள்ளனர், இவர்கள் செல்வச் செழிப்பான நடுத்தர வர்க்கம் மற்றும் பாதுகாப்புப் படைகளில் உள்ள நிதியியல் பிரபுத்துவத்திற்கு நெருக்கமான அடுக்குகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட சமூக அடித்தளத்தை கொண்ட ஒரு அரசாங்கத்தை நடத்துவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற தேர்தல்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் 57 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்காமை மக்களில் பாரிய பெரும்பான்மையில் இருந்து அவர்கள் தனிமைப்பட்டிருப்பதையே மீண்டும் எடுத்துக்காட்டுகிறது, இந்த உண்மையை LREM க்கு நெருக்கமான ஊடக நிறுவனங்கள் கூட ஒப்புக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளன.
Libération நாளிதழ் குறிப்பிட்டதாவது, “உள்துறை அமைச்சக தரவுகளின்படி, LREM நிறுத்திய வேட்பாளர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் நிர்வாகத்துறையில் இருந்துள்ளார்கள் அல்லது உயர்மட்ட புத்திஜீவித தொழில்வாழ்வில் இருந்துள்ளார்கள் … பிரான்சின் உழைக்கும் மக்களை விட மூன்று மடங்கு பலத்தைக் கொண்டுள்ளனர்,” என்று குறிப்பிட்டது. “தனியார் துறை நிர்வாகத்திலிருந்தும் (18.4 சதவீதத்தினர்), மருத்துவர்கள் (537 இல் 21 பேர்) மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களில் (17) இருந்தும் ஈர்க்கப்பட்ட மிகப்பெரும் சக்திகளைக் கொண்ட கட்சியாக LREM உள்ளது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.
அண்மித்தளவில் மக்ரோன் வேட்பாளர்களில் மூன்றில் ஒருவர், அல்லது 156 பேர், அவர்களின் சொந்த வணிக நிறுவனங்களை நடத்தி வந்தனர் என்ற உண்மை Le Monde பத்திரிகையிடம் இருந்து பின்வரும் கருத்தைக் கொண்டு வந்தது: “பொதுவாக, LREM ஆல் பிரதிநிதித்துவம் செய்யப்படும் 'குடிமக்கள் சமூகம்' (société civile) என்றழைக்கப்படுவது தலைமை செயலதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தனியார்துறை மேலாளர்கள் அல்லது அரசியல் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குபவர்களால் ஆனதாக உள்ளது. அணிவகுத்து செல்லும் இந்த குடியரசு, உயர்மட்ட சமூகம் மற்றும் தொழில்துறையாளர்களின் வகைப்பாடுகளது அணிவகுப்பாக, பல்வேறு மேலாளர்களின், மற்றும் மாகாண முக்கியஸ்தர்களின் அணிவகுப்பாக உள்ளது,” என்று குறிப்பிட்டது.
L’Obs அதன் பங்கிற்கு குறிப்பிடுகையில், "வணிக நிறுவன உடமையாளர்கள், தலைமை செயலதிகாரிகள், புதிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், மற்றும் சிறு வியாபார தலைவர்கள்" என அவர்களே LREM இன் பெரும் பலமாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதுடன், Médiapart இன் கருத்தையும் மேற்கோளிட்டது: “குடியரசை நோக்கி அணிவகுப்போம் இயக்கம் … இமானுவல் மக்ரோனின் பிரதான வாக்காளர் அடித்தளத்தைப் போலவே, செழிப்பாக இருக்கும் அல்லது ஒருவேளை மிகவும் செல்வசெழிப்பாக இருக்கும் மக்களின் உலகமாக உள்ளது,” என்று குறிப்பிட்டிருந்தது.
LREM வேட்பாளர்களின் கல்வி பின்புலங்களும் சமஅளவில் இதையே விளக்கி இருந்தது. Le Monde செய்தியின்படி, அவர்களில் சுமார் 40 சதவீதத்தினர் அரசு நிர்வாகம், தொழில்துறை, வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் முன்னணி நபர்களை உருவாக்கி அளிக்கும் சிறப்பு நுழைவு தேர்வுகளைக் கொண்ட மிகப்பெரும் பள்ளிக்கூடங்களான grandes écoles என்றழைக்கப்படுவதில் இருந்து வந்தவர்களாவர். அரசியல் ஆய்வுகளுக்கான பாரீஸ் பயிலகம் [அல்லது Sciences Po] (50 வேட்பாளர்கள்), தேசிய நிர்வாக பள்ளி (ENA, 10) மற்றும் உயர்மட்ட வர்த்தக பள்ளி (HEC, 9) ஆகியவை இதில் உள்ளடங்கும்.