Print Version|Feedback
On the eve of the second round of the French legislative elections
இரண்டாம் சுற்று பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னர்
By Alex Lantier
17 June 2017
நாளை நடக்கவுள்ள இரண்டாம் சுற்று பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்கள், ஐயத்திற்கிடமின்றி அண்மித்து அரை நூற்றாண்டாக பிரான்சில் "இடது" என்று கூறப்பட்டு வந்ததன் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ ஜனநாயகம் என இரண்டினதும் ஒரு வரலாற்று பொறிவைக் குறிக்கும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அவரது குடியரசை நோக்கி அணிவகுப்போம் இயக்கத்திற்கு (LREM) பெரும் பெரும்பான்மை கிடைக்க முயன்று வருகிறார். சோசலிஸ்ட் கட்சி (PS) பொறிந்து வரும் நிலையில் அதிலுள்ள சக்திகளை பெற்றுள்ள LREM, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் கண்டிராத மட்டத்திலான பிரெஞ்சு சமூகத்தின் ஒரு வன்முறையான மறுசீரமைப்புக்கு ஒரு வாகனமாக செயல்பட நோக்கம் கொண்டுள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தல்கள் ஒரு திடுக்கிடவைக்கும் முரண்பாட்டைக் கொண்டுள்ளன: மக்ரோனின் கொள்கைகள் ஆழ்ந்த எதிர்ப்பை முகங்கொடுக்கின்ற அதேவேளையில், 577 ஆசன சட்டமன்றத்தில் சாத்தியமான வகையில் 400 க்கும் அதிகமான ஆசனங்களுடன் LREM பெரும் பெரும்பான்மை பெற முடியுமென நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. இது ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற சக்திகள் மக்ரோனுக்கு எதிராக ஒரு முன்னோக்கை வழங்குவதற்கான பொறுப்புகளை கைத்துறந்ததன் விளைவாகும். அதற்கு பதிலாக அவர்கள் இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல்களின் போது, மக்ரோனுக்கு வாக்களிப்பது நவ-பாசிசவாத மரீன் லு பென்னுக்கு எதிராக தீமை குறைந்த ஒருவருக்கு வாக்களிப்பதாகும் என்று அவர்கள் "புரிந்து கொண்டதை" தெளிவுபடுத்தி இருந்தனர்.
பிரெஞ்சு மக்களின் பரந்த அடுக்குகள் வாக்களிப்பதற்கு ஏற்ற எவரும் இல்லை என்பதைக் கண்ட நிலைமைகளின் கீழ், ஒரு வாரத்திற்கு முன்னர்தான் முதல் சுற்று சட்டமன்ற தேர்தல்களில் சாதனையளவிற்கு 51 சதவீத வாக்காளர்கள் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர். இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்க வாக்காளர்களிடையே இந்த புறக்கணிப்பு அதிகபட்சமாக இருந்தது. இது, மதிப்பிழந்த முந்தைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை தீவிரப்படுத்துவதாக இருந்த, மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிந்தைய அவர் கொள்கைகளை வாக்காளர்கள் நிராகரித்ததன் தீர்ப்புரையாக இருந்தது.
நாளைய தேர்தல்களில் வெவ்வேறு கட்சிகளுக்கு என்ன வாக்கு விகிதாசாரங்கள் கிடைத்தாலும், ஒரு ஜனநாயக சட்டபூர்வத்தன்மை மறைப்பும் கூட இல்லாமல் மக்ரோனும் தேசிய சட்டமன்றமும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்வார்கள். முதல் சுற்று ஜனாதிபதி தேர்தலில் மக்ரோன் வெறும் ஒரு கால்வாசி வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார், LREM கடந்த ஞாயிறன்று நடந்த முதல் சுற்று சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்த வாக்காளர்களில் வெறும் 15 சதவீதத்தினரின் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.
மக்ரோனின் மூலோபாயம் தெளிவாக உள்ளது: அவருக்கு இடதின் பக்கத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு இல்லாதிருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு, ஒரு ஒப்புதல் முத்திரை குத்தும் நாடாளுமன்றத்தின் மூலமாக தனது நடவடிக்கைகளுக்கு அழுத்தமளித்து, வெடித்தெழ உள்ள சமூக போராட்டங்களை தாக்குவதற்கு பொலிஸை அனுப்புவதற்கு அவசரகால நிலையைப் பயன்படுத்தி, எதிர்க்கும் மக்களின் மீது இத்தகைய கொள்கைகளை பலவந்தமாக திணிக்க அவர் நோக்கம் கொண்டுள்ளார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste PES), தீமை குறைந்த ஒருவராக மக்ரோனுக்கு தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டுமென்ற கூற்றுகளை நிராகரித்து, மக்ரோன் மற்றும் நவ-பாசிசவாத லு பென்னுக்கு இடையிலான இரண்டாம் சுற்று தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு பிரச்சாரம் செய்தது. இந்த கொள்கை, தேர்தல்களுக்குப் பின்னர் தவிர்க்கவியலாமல் எழ உள்ள போராட்டங்களின் போது தொழிலாளர்களுக்கு அரசியல்ரீதியில் ஒரு சுயாதீனமான வர்க்க திசைவழியை வழங்க நோக்கம் கொண்டது என்று அது விளங்கப்படுத்தியது.
அனைத்திற்கும் மேலாக, புறக்கணிப்பிற்கான அழைப்பானது, சோசலிஸ்ட் கட்சி மற்றும் மெலோன்சோன், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA), மற்றும் அதுபோன்ற திவாலான போலி-இடது சக்திகளுக்கு எதிராக பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக ICFI ஐ மற்றும் பிரான்சில் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதுடன் கைகோர்த்து செல்லவேண்டும் என்பதையும் PES வலியுறுத்தியது. மே 7 ஜனாதிபதி தேர்தல்களில் மக்ரோன் ஜெயித்ததற்கு பிந்தைய இந்த ஆறு வார கால நாட்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) கொள்கையின் சரியான தன்மையை ஊர்ஜிதப்படுத்தி இருப்பதுடன், லு பென் முன்னிறுத்திய அச்சுறுத்தலுக்கு மக்ரோன் ஒரு ஜனநாயக மாற்றீடு என்ற வாதங்களின் மோசடியான தன்மையை தீர்க்கமாக அம்பலப்படுத்தி உள்ளது.
மக்ரோனின் அரசாங்கம், அவசரகால நிலைமையின் கீழ் பாதுகாப்பு சக்திகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை —அதாவது, நிரந்தர அவசரகால நிலையின் கீழ் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்குவதை— அது சட்டமாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. பின்னர் அந்த அரசாங்கம், மக்ரோன் அவர் விருப்பப்படி பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தைத் திருத்தி எழுத அனுமதிக்கும் விதத்தில் நாடாளுமன்றம் ஒரு செயல்பாடுகளைச் செயல்படுத்தும் சட்டத்தை (Enabling Act) நிறைவேற்றக் கோரி கோரிக்கை விடுக்கும். அதேநேரத்தில் அது இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்குள் இன்னும் அதிக ஆதாரவளங்களை தொடர்ந்து பாய்ச்சும்.
சுருக்கமாக கூறுவதானால், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பிரெஞ்சு முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்க நிர்பந்திக்கப்பட்ட சகல சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான விட்டுக்கொடுப்புகளையும் நிராகரிப்பதும், அழிப்பதும் மற்றும் பிரான்சில் நாஜிசத்துடன் இணைந்து இயங்குவதுமே மக்ரோன் அரசாங்கத்தின் நோக்கமாகும். இது, முதலாளித்துவ நெருக்கடி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்க நிலைமையில் ஏற்பட்டுள்ள பொறிவு ஆகியவற்றுடன் பிணைந்த வகையில் உலகளாவிய அரசியலிலும் வர்க்க உறவுகளிலும் ஏற்பட்டுள்ள ஒரு பாரிய திடீர் மாற்றத்தின் விளைவாகும்.
டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் மதிப்பிழந்து வருவதைப் பயன்படுத்தி ஜேர்மன் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தை உலக மேலாதிக்க சக்தியாக ஸ்தாபிக்கும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் உள்ள பேர்லினுடன் மக்ரோன் ஒரு கூட்டணி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க எதிர்ப்புக்கு இடையிலும் ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு அழைப்புவிடுக்க மக்ரோன் வேர்சாயில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைச் சந்தித்த போது, பிரெஞ்சு ஊடகங்கள் அதை ஒரு "ஐரோப்பிய தருணம்" என்று ஏகமனதாக புகழ்ந்து, உற்சாகத்துடன் பிரதிபலிப்பைக் காட்டியது. அதுபோன்ற அபிலாஷைகளை அடைய தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து பாரியளவில் இராணுவ செலவினங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும், மேலும் மக்ரோன் கட்டாய இராணுவச் சேவையைத் திரும்ப கொண்டு வர முன்மொழிந்துள்ளார்.
மக்ரோனின் நிகழ்ச்சி நிரலுக்கு பாராளுமன்ற மட்டத்திலான எதிர்ப்பு காட்டுவதற்கு அழைப்பு விடுக்கும் செல்வசெழிப்பான குட்டி-முதலாளித்துவ "இடது" சக்திகளிடம் தொழிலாளர்களுக்கு வழங்க எதுவும் இல்லை. வியாழனன்று மார்சைய்யில் ஒரு பிரச்சார உரையில், மெலோன்சோன் கூறுகையில், ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுவதைப் போல, சட்டமன்ற தேர்தலில் மக்ரோன் ஒரு பாரிய பெரும்பான்மை பெற்றால், ஆளும் உயரடுக்கிற்குள் எந்தவித எதிர்கட்சியின் குறுக்கீடும் இல்லாமல் முன்செல்ல அவருக்கு முழு அதிகாரம் கிடைத்துவிடும் என்ற பத்திரிகைகளின் கவலைகளையே எதிரொலித்தார்.
இதுவொரு முட்டுச்சந்து: அவசரகால நிலை, தொழிலாளர் சட்டம் திருத்தம் மற்றும் இராணுவத்தை கட்டியெழுப்புதல் என மக்ரோனின் அடிப்படை திட்டநிரலை LREM, PS, பிரான்சில் உள்ள ஏனைய பிரதான முதலாளித்துவ அரசியல் உருவடிவங்கள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் ஆளும் உயரடுக்களும் பகிர்ந்து கொள்கின்றன. நாளைய தேர்தலில் LREM இன் போட்டியாளர்கள் அதிக ஆசனங்களை ஜெயித்தாலும் கூட, மெலோன்சோனின் வேட்பாளர்கள் இன்னமும் அவர்கள் தாக்குப்பிடித்து நிற்கும் ஒருசில டஜன் தொகுதிகளில் முன்னேறினாலும் கூட, இந்த சம்பவங்களின் அடிப்படை போக்கை மாற்றப் போவதில்லை.
மக்ரோன் அரசாங்கத்திற்கும் மக்கள் தொகையினருக்கும் இடையே, அனைத்திற்கும் மேலாக அரசாங்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே, ஒரு வெடிப்பார்ந்த மோதல் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதை தொழிற்சங்கங்களிடமோ, புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி மற்றும் அதைப் போன்ற ஏனைய போலி இடது சக்திகளிடமோ விட முடியாது. அவை ஏற்கனவே சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான கடந்த ஆண்டு போராட்டங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களது எண்ணற்ற தோல்விகளுக்கு தலைமைதாங்கி உள்ளதுடன், சிரியா, லிபியா மற்றும் அதற்கு அப்பாலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் போர் முனைவையும் அவை ஆதரித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆதரிக்கப்பட்ட மக்ரோன் அரசாங்கத்துடன் விரைவிலேயே ஒரு கடுமையான அரசியல் போராட்டமாக வெடிக்க உள்ள ஒரு போராட்டத்தை நடத்த தொழிலாளர்களுக்கு அவசரமாக ஒரு புதிய புரட்சிகர தலைமை அவசியப்படுகிறது.
அக்டோபர் புரட்சியின் ஒரு நூறு ஆண்டுகளுகளின் வேளையில், பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES), மட்டுமே 1917 இல் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் போல்ஷிவிக் கட்சியினது விட்டுக்கொடுப்பற்ற சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) பாதுகாக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச மரபின் பிரதிநிதியாக தன்னைத்தானே முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. மக்ரோனின் ஜனாதிபதி காலப்பகுதி குறித்த அதன் பகுப்பாய்வுடன் உடன்படும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் PES ஐ ஆதரிக்குமாறும், அதன் வேலைத்திட்டத்தை படித்து, பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முன்னணி படையாக அதை கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணையுமாறும் அது அழைப்புவிடுக்கிறது.