Print Version|Feedback
New Anti-capitalist Party (NPA) election meeting in Paris: The dead end of the pseudo-left
புதிய-முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் பாரிஸ் கூட்டம்: போலி-இடதுகளின் முட்டுச் சந்து
By Alex Lantier
9 June 2017
பெரும் அரசியல் நெருக்கடிகள், பல்வேறு அரசியல் போக்குகளின் வர்க்கத் தன்மையையும் நோக்குநிலையையும் தாட்சண்யமின்றி வெளிப்படுத்துகின்றன.
டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வு, பிரெக்ஸிட் மற்றும் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் நிலைகுலைவு ஆகியவற்றைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் பிளவு பெருகிச் செல்வதைக் காண்பதான இப்போதைய சூழ்நிலையானது புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் (NPA) குட்டி-முதலாளித்துவ நோக்குநிலையை துரிதமாக அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு, பிரான்சின் தொழிலாளர்களது தீவிரத்தன்மை பெருகிச் செல்வதிலும் அரசியல் ஸ்தாபகத்தின் மீதான அவர்களது பிரமைவிலகலிலும் அதிர்ச்சி அடைந்திருப்பதோடு, கோபமும் கொள்கிறது.
முன்னாளில் 1968 மே-ஜூன் மாணவர் ஆர்ப்பாட்டங்களில் தலைமை வகித்தவரும், சர்வதேச பப்லோவாத, ட்ரொட்ஸ்கிச-விரோத இயக்கமான NPA க்கு நீண்ட காலம் தலைவராக இருந்தவருமான அலென் கிறிவின் பங்கேற்க பாரிஸின் புறநகர்ப் பகுதியான வில்ஜுயிஃப் (Villejuif) இல் செவ்வாய்கிழமையன்று நடந்த பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தலுக்கான NPA இன் தேர்தல் கூட்டத்தில் இது காணக் கூடியதாக இருந்தது. கடுப்புடன் வசைபாடும் உரை ஒன்றை வழங்கிய கிறிவின், அதில் தொழிற்சங்கங்களையும் NPA ஐயும் ஆதரிக்காததற்காக தொழிலாளர்களை சிறுமைப்படுத்தி பேசியதோடு வெகுஜனங்களிடையே அதி வலது நோக்கிய ஒரு பரந்த நகர்வு இருப்பதாகவும் கூறிக் கொண்டார்.
கிறிவின் வகித்திருக்கும் பாத்திரம், அவரது கருத்துக்களுக்கு குறிப்பாய் முக்கியத்துவம் சேர்ப்பதாய் இருக்கிறது. அவர் பிரான்சில் நன்கறிந்த ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டு 1960களது மாணவர் தீவிரப்படல் இயக்கத்தின் பகுதியாக வளர்ந்த NPA இன் நடுத்தர-வர்க்க பப்லோவாதக் கூட்டாளிகள் அனைவருக்குமான மூத்த செய்தித்தொடர்பாளராக இருப்பவராவார். ”இடது” என்ற பேரில் கையளிக்கப்பட்டு வந்திருப்பதில் இந்த கூறுகள் நீண்டகாலமாக ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்திருக்கின்றன. அவை பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி (PS), மற்றும் பிரேசில் தொழிலாளர் கட்சி, இத்தாலியில் Rifondazione Comunista மற்றும் ஸ்பெயினில் Podemos போன்ற அரசாங்கக் கட்சிகள் கட்டப்படுவதில் உதவியதோடு மட்டுமல்லாமல், ஜேர்மனியின் இடது கட்சியுடனும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்புடனும் (ISO) நெருக்கமாக வேலை செய்து வந்திருப்பவையுமாகும்.
இந்த சக்திகளுக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (Parti de l’égalité socialiste -PES) இடையில் பிரித்து நிற்கும் பிளவு முன்னெப்போதினும் தெளிவுபட ஆகியிருக்கிறது. ICFI தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகரப் போராட்டங்களின் மறுஎழுச்சியை எதிர்நோக்கியிருக்கிறது, ட்ரொட்ஸ்கிச முன்னணிப்படையாக தன்னை கட்டியெழுப்புவதற்காக போராடுகிறது. பல தசாப்தங்களுக்கு முன்பாகவே உத்தியோகபூர்வ அரசியலுக்குள் கலந்து விட்டிருந்தவர்களும் தங்களது வேலைகளுக்கு அடித்தளமாக பின்நவீனத்துவ மற்றும் மார்க்சிச-விரோத கல்விச்சாலை அறிஞர்களை கொண்டவர்களுமான பப்லோவாதிகள், ஆளும் வர்க்கத்திற்கு முட்டுக் கொடுக்கின்றனர், வெகுஜனங்களின் மீது பரிகாசத்தை இறைக்கின்றனர், அத்துடன் முதலாளித்துவத்துக்கான சர்வதேச எதிர்ப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்காது என்று வலியுறுத்துகின்றனர்.
”அத்தனை நாடுகளிலுமே எங்கெங்கிலும் பெருவாரியான மக்களிடையே ஒரு குழப்பம் நிலவுகிறது” என்றார் வில்ஜுயிஃப் (Villejuif) இல் கிறிவின், “பல நாடுகளில் இடதுகள் அதிகாரத்தில் இருந்தபோது வலது-சாரிக் கொள்கைகளை முன்னெடுத்ததால் இருக்கலாம், அல்லது வலதுகள் அதிகாரத்தில் இருந்தபோது அவை வலது-சாரிக் கொள்கைகளை முன்னெடுத்ததால் இருக்கலாம். விளைவு ஒருவருக்கும் ஒன்றும் புரியமுடியாத நிலையாக இருக்கிறது, புரிபடாத நிலை. தேர்தலை எடுத்துக் கொள்ளுங்கள், எதையும் கணிப்பது சாத்தியமில்லை என்றிருக்கிறது ... ஏனென்றால் மக்கள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை, மாறாக மற்றவர்களுக்கு எதிராக மட்டும் தான் வாக்களிக்கிறார்கள்.”
பிரான்சில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், நவ-பாசிச தேசிய முன்னணியின் மரின் லு பென், அடிபணியா பிரான்ஸ் (FI) இயக்கத்தின் ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் NPA இன் வேட்பாளரான பிலிப் புட்டு ஆகியோருக்கு எதிராக இமானுவல் மக்ரோன் களமிறங்கியதையே கிறிவின் அங்கு குறிப்பிட்டார். அவர் சொன்னார், “நாம் அதை சமீபத்தில் பிரான்சில் கண்டோம், மக்கள் மக்ரோனுக்கோ அல்லது மெலோன்சோனுக்கோ வாக்களிக்கவில்லை. மக்கள் புட்டுவுக்கும் வாக்களிக்கவில்லை, அது வெளிப்பட்ட விடயம் தான். ’நீங்கள் நல்லவர்கள் தான், ஆனால் நம்பத்தக்கவர்கள் இல்லை’ என்று நம்மிடம் அவர்கள் சொல்கிறார்கள்.”
இதனால் ஆதாயமடைவது முதலாளித்துவத்தின் எதிர்ப்பாளர்கள் அல்ல, மாறாக நவ-பாசிஸ்டுகளும் அரசியல் வலதுகளும் தான் என்று கிறிவின் வலியுறுத்தினார்: “யார் ஆதாயம் அடைகிறார்கள்? அமெரிக்காவில் ட்ரம்ப் போன்ற கிறுக்கர்கள், இங்கிலாந்தில் பிரெக்ஸிட் ஆதரவாளர்களைப் போன்ற தேசியவாதிகள், பிரான்சில் தேசிய முன்னணி போன்ற பாசிச தேசியவாதிகள், கிரீசில் கோல்டன் டோன் போன்ற முழுமுதலான நாஜிக்கள். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் முதலாளித்துவத்தின் நெருக்கடியால் ஆதாயமடைவது யார்? முதலாளித்துவ-எதிர்ப்பாளர்கள் அல்ல, நாங்களல்ல.”
எண்ணிப்பார்க்கத்தக்க எதிர்காலத்திற்கு —சோசலிசப் புரட்சியை விடுங்கள், அதை அவர் குறிப்பிடவும் கூட இல்லை— முதலாளித்துவத்திற்கான சர்வதேச எதிர்ப்பிற்கு எந்த முன்னோக்கும் இல்லை என்று கிறிவின் வெளிப்படையாக சேர்த்துக் கொண்டார்.
அவர் கூறினார்: “சில முடிவுகள் இங்கே கிடைத்திருக்கின்றன. ஒன்று, துரதிர்ஷ்டவசமாய், சர்வதேசவாதிகளாக இருப்பது நல்லதல்ல என்பதாக இருக்கும் ஒரு சகாப்தத்தில் நாங்கள் மட்டுமே அத்தகைய ஒரே சர்வதேசவாதிகளாக இருக்கிறோம். இரண்டாவது, தற்காலிகமாகத் தான் என்று நான் நம்புகிறேன், நாம் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற ஒரு காலகட்டத்தில் போர்க்குணமிக்கவர்களாகவும் முதலாளித்துவ-விரோதிகளாகவும் இருக்கிறோம், அதை மறுப்பதில் பயனில்லை. மூன்றாவதாய், பிரம்மாண்டமான முன்னேற்றம் கண்ட ஒரு ஜனாதிபதி வேட்பாளர் நம்மிடம் இருந்தார் -பிலிப் புட்டு- ஆனால் மக்களோ நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டோம், உங்களிடம் நம்பகத்தன்மை இல்லை என்று கூறிவிட்டார்கள்.”
கிறிவின் விரக்தியைத் தவிர வேறெதனையும் வழங்கவில்லை. பராக் ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சி, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் PS அரசாங்கம் எல்லாம் மதிப்பிழந்ததை பின்தொடர்ந்து ட்ரம்ப்பின் தேர்வும், பிரெக்ஸிட்டும், NPA மீதான நம்பிக்கையிழப்பும் வந்திருப்பதால், சூழ்நிலை அவநம்பிக்கை தருவதாய் இருப்பதான முடிவுக்கு கிறிவின் வருகிறார், அத்துடன் உலக மக்களில் பெருவாரியானோர் “அறியாமையில்” இருப்பதாகக் கூறி ஆணவத்துடன் நிராகரிக்கிறார். இது அடிமுதல் தலை வரை பொய்யாகும்.
தேசியவாதம் மற்றும் போரின் ஒரு வேலைத்திட்டத்தில் ட்ரம்ப் தேர்வானமை, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கை மதிப்பிழந்து போனமை, அத்துடன் இப்போது ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவில் இருந்து சுயாதீனப்பட்ட ஒரு இராணுவக் கொள்கைக்கு அழைப்பு விடுத்திருப்பது இவை அனைத்துமே புரட்சிகரமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்ற உலக முதலாளித்துவத்தின் பிரம்மாண்டமான நெருக்கடியின் அறிகுறிகளாகும். இரண்டாம் உலகப் போர் மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்சி செய்தமை ஆகியவற்றின் பின் தோன்றியிருந்த சர்வதேச முதலாளித்துவ ஒழுங்கு உருக்குலைந்து கொண்டிருக்கிறது. பிரான்சில் வர்க்கப் போராட்டத்தை நீண்டகாலமாய் ஒடுக்கி வந்திருந்த பல்வேறு சக்திகளும் —தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் PS இன் ஒட்டுமொத்த அரசியல் சுற்றுவட்டங்கள்— தங்களது செல்வாக்கை இழந்து கொண்டிருக்கின்றன.
ICFI இன் முன்னோக்கு ஊர்ஜிதப்பட்டிருக்கிறது: லியோன் ட்ரொட்ஸ்கி முன்பே எச்சரித்திருந்ததான, சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பானது, சோசலிசப் புரட்சியின் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கவில்லை. முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத முரண்பாடுகள் மீண்டும் ஒரு புரட்சிகர நெருக்கடிக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. ஏற்கனவே 2011 இல், எகிப்து மற்றும் துனிசியாவில் தொழிலாளர்களது பாரிய எழுச்சிகள் இரண்டு சர்வாதிகாரிகளைக் கவிழ்த்தது.
சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பல தசாப்த காலத்திற்குப் பின்னர், அரசியல்ரீதியான விரக்தியும் சமூக கோபமும் பெருகிச் செல்வதானது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் நெருங்கி வரும் புரட்சிகர நெருக்கடிகளுக்கான அறிகுறிகளாய் உள்ளன. “சோலிசத்தை” கொண்டுவருவதற்கு தான் விரும்புவதாக கூறிய பேர்னி சாண்டர்ஸுக்கு மில்லியன் கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து கிட்டிய ஆதரவு, பிரான்சில் PS இன் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாரிய போராட்டங்கள், மற்றும் ஐரோப்பாவில் போருக்கும் கட்டாய இராணுவ சேவைக்குமான ஆழமான எதிர்ப்பு ஆகியவை அனைத்தும் பெருகிச் செல்லும் எதிர்ப்பின் அடையாளங்களாகும். 2008 பொறிவுக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்னர், சோசலிசப் புரட்சிக்கான சமூக மற்றும் பொருளாதார முன்நிபந்தனைகள் பூர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த வெடிப்பான நிலைமையில் வலதுகள் எவ்வாறு ஆதாயமடைய முடிந்தது என்பதை கிறிவின் விளக்க முடியவில்லை, அதற்கு அவர் முயற்சியும் செய்யவில்லை. எல்லாவற்றுக்கும் மேல், NPA இன் சொந்தப் பாத்திரம் குறித்தும் அவர் வாயேதும் திறக்கவில்லை. அவரது கருத்த்துக்கள், ட்ரொட்ஸ்கி 1940 இல் படுகொலை செய்யப்படுவதற்கு சிறிதுகாலம் முன்னர், ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் பாசிசம் வெற்றி பெற்றதற்கு, தொழிலாள வர்க்கத்தை குறைகூறியவர்களுக்கு அளித்த பதிலை நினைவுக்குக் கொண்டுவந்தது.
“ஸ்பெயினின் பரந்த மக்களது தோல்விக்கான பொறுப்பை, அவர்களது புரட்சிகர இயக்கத்தை முடக்கிய அல்லது மொத்தமாய் நசுக்கிய கட்சிகள் மீது சுமத்தப்படாமல் உழைக்கும் பரந்த மக்களின் மீது சுமத்தப்படுகிறது என்பதில்தான் வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் அடங்கியிருக்கிறது” என்று எழுதிய ட்ரொட்ஸ்கி மேலும் கூறினார்: “தோல்விகளை பிரபஞ்சவியல் அபிவிருத்திகளது சங்கிலியின் ஒரு அத்தியாவசியமான இணைப்பாகச் சொல்லி சமாதானமடைய முனையும் இந்த கையாலாகாத மெய்யியலானது, தோல்விக்கு ஒழுங்கமைத்த வேலைத்திட்டங்கள், கட்சிகள், ஆளுமைகள் போன்ற ஸ்தூலமான காரணிகளது பிரச்சினையை முன்வைக்க முற்றிலும் திறனற்றதாக இருக்கிறது அல்லது முன்வைக்க மறுக்கிறது. விதிவசவாதம் மற்றும் சரணாகதியின் இந்த மெய்யியலானது புரட்சிகர நடவடிக்கைக்கான தத்துவத்தில் மார்க்சிசத்திற்கு நேரெதிரானதாய் அமைந்திருக்கிறது.”
NPA இன் பாத்திரம் ஒரு புரட்சிகரக் கொள்கையை முன்னெடுப்பதாக இல்லை, மாறாக போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை முடக்குகின்ற குட்டி-முதலாளித்துவக் கொள்கைகளை முன்னெடுப்பதாய் உள்ளது. உலக சூழ்நிலை குறித்த தனது விரக்தியான அவதானிப்பை நியாயப்படுத்துவதற்காக, கிறிவின் தனது சொந்த அமைப்பின் எதிர்-புரட்சிகர பாத்திரம் குறித்து ஓசையின்றி கடந்து செல்ல நிர்ப்பந்தம் பெற்றிருந்தார்.
தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் மிகப்பெரும் அபாயங்களில் போரும் தேசியவாதமும் இடம்பெற்றிருக்கின்றன என்பதில் சந்தேகமேயில்லை. இஸ்லாமிக் ஸ்டேட் (ISIS) ஆயுததாரிகளது பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது வசைபாடும் தொனியில் குறிப்பிட்ட கிறிவின் கூறினார்: “அரபு மக்களில், மத அடிப்படைவாதம் வலுப் பெற்றுக் கொண்டிருக்கிறது, மேற்கத்திய மக்களிடையே மரின் லு பென்னின் கட்சி போன்ற அமைப்புகள் ... பிரெக்ஸிட்டை செய்தவர்கள் போன்றவர்கள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், நாம் வலுப் பெறவில்லை. ஆகவே, யார் இன்று தேசியவாதத்தை வளர அனுமதிக்கிறார்கள்? என்ற கேள்விக்கு நாம் முகம்கொடுத்தாக வேண்டும். அபிவிருத்தியடைந்து வரும் போருக்கு மக்ரோன், ஹாலண்ட், ட்ரம்ப் அனைவருமே கூட்டாக பொறுப்பானவர்கள் என்பதை நாம் அங்கு காண்போம்.”
கிறிவினின் ஆவேசம் கீழ்த்தரமான கபடவேடமாகும். ISIS பயங்கரவாத தாக்குதல்களுக்கான பொறுப்பு, லிபியா மற்றும் சிரியாவிலான நேட்டோ போர்களை —இதில் இருந்துதான் ISIS எழுந்தது— ஊக்குவித்த சக்திகளுக்கு, அதாவது பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ சக்திகளது ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்கு மட்டுமல்லாது பப்லோவாதிகள் மற்றும் அவர்களது “இடது” சகசிந்தனையாளர்களுக்கும் உரியதாகும். வலது-சாரி இஸ்லாமியவாத சக்திகளால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற எதிர்ப்புப் படைகளை ஆயுதபாணியாக்குகின்ற விதமான ஏகாதிபத்திய தலையீட்டை, குறிப்பாக NPA, உரத்த மற்றும் உற்சாகமான குரலில் கோரியது.
2003 இல் ஈராக் மீது அமெரிக்கா சட்டவிரோதமாக படையெடுத்த சமயத்தில், அமெரிக்காவிலும், படையெடுப்பில் பங்குபெற்ற ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் போருக்கு எதிராய் திரண்டனர். அதற்கு ஒரு தசாப்தத்திற்கு பிந்தைய காலத்தில், பப்லோவாதிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை, மாறாக சிஐஏ உடன் சேர்ந்து வேலை செய்து கொண்டு, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு கோரிக்கை வைத்தனர். NPA இன் செய்தித்தொடர்பாளரான ஒலிவியே பெசன்ஸநோ, பிரான்ஸ் “கிளர்ச்சி” படைகளுக்கு ஆயுதமளிக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் கோரிக்கை வைத்தார் என்றால், பேராசிரியர் ஜில்பேர் அஷ்கார் லிபிய நகரான பெங்காசியில் எதிர்ப்பு படைகளைக் காப்பாற்றுவதற்கு நேட்டோ குண்டுவீச வேண்டும் என்று கோரியதோடு அதன்பின் சிரியாவில் போரைத் திட்டமிடுவதற்கு சிஐஏ உடன் தொடர்புடைய சிரிய தேசிய கவுன்சில் உடன் சந்தித்துப் பேசினார்.
லிபியா மற்றும் சிரியாவிலான போர்களுக்கு ஆட்களையும் ஆயுதங்களையும் கொண்டுவந்த சிஐஏ-ஆதரவு இஸ்லாமிய வலைப்பின்னல்கள், ISIS மற்றும் அதுபோன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு தோற்றமளித்தது மட்டுமல்ல. NPA இடம் இருந்து அவை தொடர்ந்தும் ஆதரவு பெற்ற அதேவேளையில் —இந்த பிற்போக்கான சக்திகளை ஜனநாயகத்திற்கான புரட்சிகரப் போராளிகளாகக் காட்டி போருக்கான எதிர்ப்பை ஒடுக்குவதற்கு அது உதவியது— ஐரோப்பாவெங்கிலும் தொடர்ச்சியான பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி ஐரோப்பாவில் அதி-வலது சக்திகளை வலுப்படுத்துவதற்கும் இந்த இஸ்லாமியவாதிகள் உதவினர்.
தாக்குதல் நடத்தியவர்கள் —சார்லி ஹெப்டோவை தாக்கிய குவாச்சி சகோதரர்கள், பாரிஸில் 2015 நவம்பரில் நடந்த தாக்குதல்களுக்குத் தலைமை கொடுத்த ISIS க்கு முகநூலில் ஆளெடுக்கும் பொறுப்பு கொண்டிருந்த அப்தெல்ஹமீட் அபாவூத், புரூசெல்ஸில் 2016 மார்ச் 22 அன்று நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தலைமை கொடுத்திருந்த பக்ராவி சகோதரர்கள், அல்லது மான்செஸ்டர் அரினாவில் குண்டுவைத்த சல்மான் அபேடி— அனைவருமே ஐரோப்பிய உளவுத் துறையால் நன்கறியப்பட்டிருந்த மற்றும் அவர்களால் நெருக்கமாகப் பின்தொடரப்பட்டவர்களாக இருந்தனர். நேட்டோ கொள்கையின் கருவிகளாக அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டதால், உளவுத்துறை பாதுகாப்பின் கீழேயே இருந்தபடி அவர்களால் இந்தத் தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்ய முடிந்தது. ஆனால் இந்த புவிஅரசியல் யதார்த்தம் பரந்த மக்களின் முன்னால் மறைக்கப்பட்டதாய் இருந்தது.
இந்த தாக்குதல்களில் ஏகாதிபத்தியத்திற்கு இருக்கும் பொறுப்பை மறைப்பதில், ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்துடன் NPA உம் கைகோர்த்துக் கொண்டது. ஆளும் வர்க்கம் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த பொதுமக்களின் அச்சத்தை சுரண்டிக் கொள்ளவும், பழியை போரின் மீது போடாமல் முஸ்லீம்களின் மீது போடவும், போலிஸ் அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு கோரவும் இது அனுமதித்தது. பிரான்சில், தனிமனிதர்களைக் கைதுசெய்யவும், தேடுதல் வேட்டைகளையும் பறிமுதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் தனிமனிதர்களை எந்த நீதிமன்ற நிகழ்முறைக்கும் அப்பாற்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கவும் அனுமதிக்கும் ஒரு அவசரகால நிலையை PS திணித்தது, அதை சட்டத்தின் மூலம் நிரந்தரமாக்குவதற்கு இப்போது மக்ரோன் நோக்கம் கொண்டிருக்கிறார்.
உத்தேசமாய், பிரான்சின் தேசிய முன்னணி போன்ற அதி-வலது சக்திகள் தான் இந்தக் கொள்கைகளால் மிகப்பெரும் அரசியல் ஆதாயமடைந்தவர்கள் எனலாம், அவற்றின் வளர்ச்சிக்கு கணிசமான அரசியல் பொறுப்பை NPA கொண்டுள்ளது.
கிறிவின் ஒரு சர்வதேசியவாதியாகவும் முதலாளித்துவ எதிர்ப்பாளராகவும் காட்டிக் கொள்கின்ற போதிலும், NPA ஏகாதிபத்திய-ஆதரவு கொள்கைகளை பின்பற்றுகின்ற ஒரு உயர்-நடுத்தர வர்க்கக் கட்சியே ஆகும். பிரான்சில் PS இன் உருக்குலைவுக்கும், சர்வதேச அளவில் ஆளும் உயரடுக்கின் பரந்த மதிப்பிழப்பிற்கும், அது விரக்தியான மற்றும் வெறித்தனமான பதிலிறுப்பைக் காட்டுவதானது, NPA உம் உருக்குலைந்து செல்லும் அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது என்ற உண்மையை பிரதிபலிப்பதாய் அமைந்திருக்கிறது.
செவ்வாயன்று இரவு பிரெஞ்சு நிலைமைகளுக்கு திரும்பிய கிறிவின், PS மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (PCF) உள்ளிட்ட அதன் கூட்டாளிகளது நெருக்கடி குறித்த ஒரு சுருக்கமான கணக்கெடுப்பை வெளியிட்டார். “PCF ஒரு முழுமையான குழப்பத்தில் சிக்கியிருக்கிறது, அது எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதே அதற்குத் தெரியவில்லை, அதன் உறுப்பினர்களுக்கும் தெரியவில்லை. பசுமைக் கட்சி முழுமையாக பிளவுபட்டுக் கிடக்கிறது” என்ற அவர் தொடர்ந்தும் கூறினார்: “PS ஐ பொறுத்தவரை, நாம் அதனைச் சொல்லவும் வேண்டாம், அவர்கள் அது ஒரு இடது கட்சி என்று சொல்கிறார்கள் ஆனால் நாம் அதனைச் சொல்லவும் வேண்டாம். PS க்குள் இருக்கும் ஒவ்வொரு கன்னையுமே தனது சொந்தக் கட்சியை உருவாக்க வேலைசெய்து கொண்டிருக்கிறது என்பது மோசமான விடயமாகும்.”
PS ஐ நோக்கிய குரோதத்தை கிறிவின் தவிர்க்கவில்லை —வரலாற்றுரீதியாய் 1971 இல் PS இன் ஸ்தாபிதத்தின்போது ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட பல்தரப்பான குட்டி-முதலாளித்துவ போக்குகளிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பில் வேரூன்றிய ஒரு மனோபாவமாகும் இது. பப்லோவாதிகள் 1953 இல் ICFI இல் இருந்து முறித்துக் கொண்டதற்குப் பின்னர், பியர் லம்பேர் இன் OCI (Organisation communiste internationaliste) 1971 இல் PS ஐ கட்ட உதவுவதில் பப்லோவாதிகளுடன் கரம் கோர்ப்பதற்காக ICFI உடனும் ட்ரொட்ஸ்கிசத்துடனும் முறித்துக் கொண்டது. PSக்கும் PCFக்கும் இடையிலான இடதுகளின் ஐக்கியம் (Union de la Gauche) ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை உருவாக்கி விட முடியும் என்ற ஒரு போலியான முன்னோக்கில் OCI தனக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டது. அதன் விளைவாய், PS இல் பெருமளவுக்கு முன்னாள் பப்லோவாதிகளும் OCI அங்கத்தவர்களும் நிரம்பியிருக்கின்றனர்.
சோசலிஸ்ட் கட்சியை பல அரசியல் போக்குகளும் ஒன்றுதிரண்டு வந்து உள்விளையாட்டு விளையாடக் கூடிய ஒரு இடமாக கிறிவின் கிண்டலாய் குறிப்பிட்டார். PS க்குள்ளான இப்போதைய கன்னை மோதல்களைக் குறிப்பிட்ட கிறிவின், கட்சியின் முதல் செயலரான ஜோன் கிறிஸ்தோப் கம்படெலிஸ் —இவர் லம்பேர்வாதிகளில் இருந்து வந்தவர்— “இதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அவர்கள் எல்லோரும் லம்பேர்வாதிகளில் இருந்தோ அல்லது எங்களிடம் இருந்தோ வருகிறார்கள், ஆகவே அது அனைவரும் சந்திக்கும் இடமாக இருப்பதை காட்டுகிறது” என்றார். ஹாலண்டின் ஜனாதிபதிக் காலம் குறித்த எந்த நன்மைதீமை பட்டியலையும் அவர் முன்வைக்கவில்லை, அத்துடன் ஹாலண்டிற்கு அடுத்து வந்திருப்பவரும் அவரது முன்னாள் ஆலோசகருமான மக்ரோன் தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்கின்ற அபாயங்கள் குறித்தும் எதுவொன்றும் கூறவில்லை.
இது வரலாறு மற்றும் PS இன் வர்க்கப் பாத்திரம் குறித்த அபாயகரமான பொய்மைப்படுத்தலாகும். இது ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து ஓடிய குட்டி-முதலாளித்துவ ஓடுகாலிகளின் ஒரு பிரிவு, அத்துடன் சமூக கத்தோலிக்கர்கள், முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள், மற்றும் முன்னாள் நாஜி ஒத்துழைப்புவாதிகள் —இவர்களில் மிகப் பிரபலமானவர் என்றால் கட்சியின் முதல் தலைவரும் கட்சியைச் சேர்ந்த முதல் பிரெஞ்சு ஜனாதிபதியுமான பிரான்சுவா மித்திரோன்—ஆகியோரது ஒரு அடுக்கு ஆகியவற்றில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். சோசலிஸ்ட் கட்சி அதன் தொடக்கம் முதலாகவே, நிதி மூலதனத்தின் ஒரு பிற்போக்குத்தனமான கட்சியாக, நிதிப் பிரபுத்துவத்துடன் நெருக்கமான பிணைப்பு கொண்டதாக, பெருமளவில் கல்விச்சாலை அறிஞர்களில் இருந்தும் அரசு எந்திரத்தில் இருந்தும் ஆளெடுத்துக் கொள்ளப்பட்டதாக இருந்திருந்தது.
PS க்கு ஒரு ”இடது” மறைப்பை வழங்கிய பப்லோவாத மற்றும் லம்பேர்வாத கூறுகள் அதன்மூலம் உருவாக்கி விட்டிருந்த ஒரு அழிவுகரமான இராட்சச ஜந்து தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நச்சுத்தனமாய் திரும்பி, ஒவ்வொரு முறை அது அதிகாரத்திற்கு வந்தபோதும் சிக்கன நடவடிக்கை மற்றும் போர்க் கொள்கைகளை முன்னெடுத்தது. 2012-17 இல், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் கீழ் PS பிரெஞ்சு அரசியலை வலது நோக்கி வெகுதூரம் கொண்டுசென்றது. அவசரகால நிலை மற்றும், தொழிலாளர் நீதிமன்றங்களையும் பிரான்சின் தொழிலாளர் சட்டத்தையும் பயனற்றதாக்கக் கூடிய ஒரு தொழிலாளர் சட்டம் ஆகியவற்றை கொண்டுவந்ததன் மூலமும், அதேநேரத்தில் FN தலைவரான மரின் லு பென்னை மீண்டும் மீண்டும் எலிசே மாளிகைக்கு அழைத்து பேசியதன் மூலமும், ஹாலண்ட், தனக்கு அடுத்து வந்த மக்ரோன் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்புவதற்கு மேடை அமைத்துக் கொடுத்தார்.
அவசரகால நிலையின் கீழ் ஆர்ப்பாட்டங்களை தன்னிச்சையாக தடை செய்வதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்வதற்கும் அதிகாரங்களை பற்றிக்கொண்ட மக்ரோன், பிரான்சில் உத்தரவுகள் மூலமாக ஒரேயடியான சமூக வெட்டுகளைத் திணிப்பதற்கும், பாரிய எதிர்ப்புக்கு முகம்கொடுக்கும் நிலையிலும் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கும் நோக்கம் கொண்டிருக்கிறார். பழைய அரசியல் ஒழுங்கு நிலைகுலைகின்றதாலும், தொழிலாள வர்க்கத்துடன் ஒரு முழுவீச்சிலான மோதலை எதிர்பார்த்திருப்பதாலும், பிரான்சில் பெயரைத் தவிர்த்து மற்ற அனைத்திலும் ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கு மக்ரோன் முனைந்து கொண்டிருக்கிறார்.
Villejuif இல் கிறிவினின் கருத்துக்களை ஒரு எச்சரிக்கையாக எடுக்க வேண்டும். இந்த திட்டநிரலுக்கான புரட்சிகர எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் நோக்கம் NPA க்கு இருக்கவில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்தின் பாதையில் PS உடன் ஒன்றுகலந்து விட்டிருக்கின்ற, அத்துடன் அதன் கொள்கைகள் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து பெரும்பாலும் தனிப்படுத்தப்பட்டதாக இருக்கின்ற பிரான்சில் உள்ள சலுகைகொண்ட சமூக அடுக்குகளுக்காக அது பேசுகிறது. பல தசாப்தங்களாய் அது, ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு பதிலாக PS ஐ ஊக்குவிப்பதற்கும் அதனுடன் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குமே முனைந்து வந்திருக்கிறது.
உண்மையில், பப்லோவாதிகள் 2009 இல் தங்களது இயக்கத்தை மீள்ஸ்தாபிதம் செய்த சமயத்தில், அது PS அங்கத்தவர்களை எடுக்கவும் அதனுடன் உறவுகளை அபிவிருத்தி செய்யவும் எதிர்நோக்கியிருப்பதாக வெளிப்படையாக வலியுறுத்தியது. NPA இன் ஸ்தாபக காங்கிரஸ் அரசியல் மேடை பின்வருமாறு தெரிவித்தது: “NPA ட்ரொட்ஸ்கிசத்துடன் பிரத்தியேகமான உறவு எதற்கும் உரிமைகோரவில்லை, மாறாக கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அமைப்புமுறையுடன் அத்தனை வழிகளிலும் மோதி வந்திருக்கக் கூடியவர்களின் தொடர்ச்சிக்கு உரிமைகோருகிறது. NPA ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகக் கட்சி. உலகமயமாக்கல்-எதிர்ப்பு இடதுகளைச் சேர்ந்த, அரசியல் சூழலியலைச் சேர்ந்த, PS மற்றும் PCF இல் இருந்தான, அராஜகவாதத்தில் இருந்தான, புரட்சிகர இடதில் இருந்தான என சமூக இயக்கத்தின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த தோழர்களின் பங்கேற்பு இருந்து வந்திருக்கிறது. மழுங்கிப் போனதாய் ஆகிவிடாமல், தன்னை இன்னும் அதிகமாய் திறந்து விடுவதன் மூலமாக NPA வெல்வதற்கு அத்தனையும் இருக்கிறது.”
மறுபக்கத்தில், சோசலிச சமத்துவக் கட்சியோ (The Parti de l’égalité socialiste -PES) தொழிலாளர்கள் NPA உடனும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும் வெறுப்பு கண்டிருப்பது என்பதே பிரான்சிலும் சர்வதேச அளவிலும் வரவிருக்கும் புரட்சிகரப் போராட்டங்களுக்கான அறிகுறிகளே என்று விளக்குகிறது. தொழிலாளர்கள் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுவதற்கும் போர் முனைப்பை எதிர்ப்பதற்கும் ஒரு வழியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆயினும், கிறிவினது விவரிப்புகளும் கூட தெளிவாக்குவதைப் போல, NPA இன் தேர்தல் வேலைத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் குறைந்தபட்ச சமூக கோரிக்கைகளும் கூட PS மற்றும் மக்ரோனுக்கு எதிரான ஒரு தீர்மானகரமான போராட்டம் இன்றி வெல்லப்பட முடியும் என தொழிலாளர்கள் இனியும் நம்புவதாய் இல்லை. NPA உடன் ஒரு முறிவு மற்றும் அதற்கும் எதிரான போராட்டம் என்பதே இதன் அர்த்தமாகும்.
கிறிவினது கூட்டத்தின் நிறைவுப் பகுதியானது, NPA அதன் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திலும் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் காணும் சிக்கல்களுக்கு, அர்ப்பணிக்கப்பட்டதாய் இருந்தது. “இந்த தேர்தலில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், அபத்தமாய் இருக்கிறது. நம்பும்படியாக இல்லை. நீங்கள் சொல்லும் ஆலோசனை ஒவ்வொன்றும் உண்மையிலேயே நல்ல விடயம் தான், ஆனால் இப்போதைய சூழ்நிலையில் அது நம்பும்படியாக இல்லை” என்று தொழிலாளர்கள் புட்டுவிடம் சொல்வதாய் கிறிவின் புகாரிட்டார்.
NPA இன் கொள்கைகள் மீது தொழிலாள வர்க்கம் உதாசீனம் காட்டுவதை NPA நன்கறிந்து வைத்திருக்கிறது, ஆழமாய் கவலை கொண்டிருக்கிறது. போர்தோ அருகே உள்ள Blanquefort இல் இருக்கும் ஃபோர்ட் தொழிற்சாலையில் CGT இன் பிரதிநிதியாக இருக்கும் புட்டு, “ஃபோர்ட் தொழிலாளர்களை இந்தப் போராட்டத்திற்கும் அந்தப் போராட்டத்திற்குமாய், இன்னும் சொன்னால் ஆலை மூடப்படும் அச்சுறுத்தல் முன்நிறுத்தப்படும் ஃபோர்டில் நடக்கும் போராட்டத்திற்கும் கூட, ஐக்கியப்படச் செய்வதில் உண்மையிலேயே பெரும்பாடு பட்டு விட்டார்” என்று கிறிவின் கூறினார்.
கிறிவின் பேசியதற்குப் பின்னர், உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர் ஒருவர் அவரிடம், தொழிலாளர்கள் ஏன் NPA ஐ நம்பக்கூடியதாக பார்க்கவில்லை என்று அவரால் விளக்க முடியுமா என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு கிறிவின் பதிலளிக்காமல், வேறு இரண்டு NPA உறுப்பினர்களை பதிலளிக்கச் செய்தார். NPA ஆல் ஆதரிக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டங்கள், 2008 நெருக்கடிக்குப் பின்னர் பிரான்சில் அலைஅலையாய் நிகழ்ந்த ஆலை மூடல்களையும் வேலைவாய்ப்பின்மையில் நிகழ்ந்த ஒரு மலைக்க வைக்கும் அதிகரிப்பையும் தடுத்து நிறுத்தத் தவறின என்ற உண்மையை அவர்கள் இருவரும் சுட்டிக்காட்டினர்.
“2008 முதலாக அலை அலையான பாரிய வேலைக்குறைப்புகள் நடந்தேறின, சில சமயங்களில் காண்டினெண்டலில் (Clairoix இல் உள்ள வாகன பாகங்கள் ஆலை) போல வன்முறையான எதிர்ப்பும் கூட இருந்தது, ஆயினும் இந்த அத்தனை போராட்டங்களுமே சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மூடப்படுவதில் தான் சென்றுமுடிந்தன” என்றார் ஒருவர்.
வேலைநிறுத்தத்தின் சமயத்தில், தொழிற்சாலை பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தது என்பதை, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறுவதன் மூலமாக, ஆலை மூடல்களைக் காட்டி அத்தொழிலாளர்களை சமாதானம் செய்ய முயற்சித்ததை இன்னொரு NPA உறுப்பினர் எடுத்துரைத்தார். “தற்காப்புப் போராட்டங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிகின்றன தான், ஆனாலும் போராட்டம் எப்படி நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து, விளைவுகள் ஒரேவிதமாய் இருப்பதில்லை. போராட்டம் குறித்து தொழிலாளர்கள் சந்தோசப்பட்டால், அவர்கள் முழுமூச்சாக ஈடுபடும்போது, என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர், பிரச்சினைகளைப் பார்த்தார்கள், நடக்கும் சம்பவங்களில் தாங்கள் பாத்திரங்கள் என்பதை உணர்ந்தனர், நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதால் இப்போதும் அது தோல்வி தானே என்பது உண்மை தான், என்றாலும் இதுவும் அதுவும் ஒன்றல்ல.”
வங்கிகளை மீட்பதற்காக ட்ரில்லியன் கணக்கில் யூரோக்களை இறைத்ததற்கு பின்னர், இத்தகைய பதில்களை கூறுவதானது தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு NPA இடம் எதுவொன்றுமில்லை, அது பாட்டாளி வர்க்கத்திற்கு குரோதமான சக்திகளது ஒரு கருவி என்பதையே எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது. தொழிலாள வர்க்கத்திற்கும் நிதிப் பிரபுத்துவத்திற்கும் இடையிலான ஒரு புரட்சிகர மோதல் கிட்ட நெருங்க நெருங்க, NPA மேலதிகமாய் வலது நோக்கி நகர்கிறது, சர்வதேசியவாதத்தையும் முதலாளித்துவத்திற்கான எதிர்ப்பையும் கற்பனாவாதம் என்றும் “நம்பிக்கையூட்ட இயலாதது” என்றும் கூறி நிராகரிக்கிறது.
வரவிருக்கும் போராட்டங்களில், தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமாய் இருக்கப் போவது ஒரு தொழிற்சங்கமோ அல்லது PS இன் ஒரு அரசியல் கூட்டாளியோ அன்று, மாறாக ஒரு சர்வதேச சோசலிசப் புரட்சிக்காகப் போராடுகின்ற ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியின் தலைமையே ஆகும். மக்ரோன் மற்றும் ஐரோப்பாவெங்கிலுமான ஏகாதிபத்திய அரசாங்கங்களின் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாளர்களுக்கு வேறெந்த வழியும் தென்படப் போவதில்லை. அந்த கட்சி, ஊழலடைந்ததாகவும் ஆளும் உயரடுக்கின் ஒரு வேண்டாவெறுப்பான கருவியாகவும் இருக்கின்ற NPA அல்ல, மாறாக பிரான்சில் PES உம் உலகெங்கிலும் ICFI இன் பிரிவுகளும் ஆகும்.