Print Version|Feedback
Socialist Equality Party stands candidates in German election: Against militarism and war! For socialism!
ஜேர்மன் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறது: இராணுவவாதம் மற்றும் போரை எதிர்ப்போம்! சோசலிசத்திற்காக போராடுவோம்!
By Sozialistische Gleichheitspartei (Socialist Equality Party of Germany)
5 June 2017
செப்டம்பர் 24 அன்று நடைபெறவிருக்கும் கூட்டாட்சி நாடாளுமன்றத் தேர்தலில் (Bundestag) ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (The Sozialistische Gleichheitspartei - SGP) பங்கேற்கிறது.பேர்லின் மற்றும் வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்களில் ஒரு தேர்தல் பட்டியலில் வேட்பாளர்களை நிறுத்துவதுடன் பிராங்பேர்ட் மற்றும் லைப்ஸிக் ஆகிய தொகுதிகளிலும் நேரடி வேட்பாளர்களை நிறுத்துகிறோம்.
போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரானதும், உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களது நலன்களை வெளிப்படுத்துகிறதுமான ஒரு சோசலிச வேலைத்திட்டமே எங்களது தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக இருக்கும். தொழிலாள வர்க்கமானது ஒரு சுயாதீனமான சக்தியாக அரசியல் அபிவிருத்திகளில் தலையீடு செய்வதற்கான அடிப்படையை SGP இன் தேர்தல் வேலைத்திட்டம் வழங்கும்.
வரலாற்றில் முதலாளித்துவ சமூகத்தின் மிக ஆழமான சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஒரு உலகப்போரின் அபாயமானது முன்னொருபோதும் இருந்திராத அளவுக்கு இன்று விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. மத்திய கிழக்கு, பால்கன்கள் மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 25 ஆண்டுகால தொடர்ச்சியான போர்களுக்குப் பின்னர், அமெரிக்காவானது சீனா மற்றும் ரஷ்யா ஆகிய அணு ஆயுத சக்திகளுடனான ஒரு நேரடி இராணுவ மோதலுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. ஜேர்மனியும் மற்ற ஐரோப்பிய சக்திகளும் புவியரசியல் மோதல்களின் வளர்ச்சிக்கு தமது சொந்த இராணுவ தகமையை அதிகரிப்பதன் மூலமாக பதிலிறுப்பு செய்து கொண்டிருக்கின்றன.
கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) / கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகிய கட்சிகளிடையேயான இப்போதைய கூட்டாட்சி அரசாங்கமானது, இராணுவ நிதிநிலை ஒதுக்கீட்டை இப்போதைய 35 பில்லியன் யூரோக்கள் என்பதில் இருந்து 2024க்குள்ளாக குறைந்தபட்சம் 60 பில்லியன் யூரோக்களாய் அதிகரிப்பதற்கும், அதேசமயத்தில் கல்வி மற்றும் பிற சமூகத் தேவைகளுக்கான செலவினத்தை மேலும் குறைப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது. மக்களின் ஒரு மிகப்பெரும் பகுதி போதாத வருமானத்தோடு போராடிக் கொண்டிருக்கும் நிலைமைகளின் கீழ் இது நடக்கிறது. தொழிலாளர்களில் 40 சதவீதம் பேர் பாதுகாப்பற்ற வேலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர், 2.5 மில்லியன் குழந்தைகள் உள்ளிட மொத்த மக்கள்தொகையில் 16 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்.
இந்த அரசியல்பாதையை அத்தனை அரசியல் கட்சிகளுமே ஆதரிக்கின்றன. இராணுவவாதம், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் வாழ்க்கைத் தரங்களின் மீதான தாக்குதல்கள் இவற்றைத் தவிர்த்து கொடுப்பதற்கு அவற்றிடம் வேறெதுவும் இல்லை. பழமைவாத CDU/CSU முதலாக இடது கட்சி வரையிலும், கூட்டாட்சி மற்றும் மாநில நிதிநிலை ஒதுக்கீடுகளில் அவை சமூக வெட்டுகளையே அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்துமே மக்களுக்கு எதிராக சதிசெய்வதோடு, இராணுவ செலவினத்தை பாரிய அளவில் அதிகப்படுத்துகின்ற, சமூகநல உதவிகளையும் ஊதியங்களையும் வெட்டுகின்ற மற்றும் ஒரு போலிஸ் அரசுக்கு நிகரான ஒன்றை ஸ்தாபிக்கின்றதொரு அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கு இந்த நாடாளுமன்ற தேர்தலை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.
SGP மட்டுமே ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கின்ற ஒரேயொரு கட்சியாகும். “இடது-சாரி”யாக தங்களை அழைத்துக் கொள்ளும் மற்ற கட்சிகள் அனைத்துமே தொழிலாள வர்க்கத்தை கைகழுவி விட்டுவிட்டன. வங்கிகளையும் பெருநிறுவனங்களையும், ஜேர்மன் இராணுவப் படைகள் (Bundeswehr) மற்றும் உளவு சேவைகளையும் அவை பாதுகாக்கின்றன. மார்க்ஸின் மூலதனம் வெளியாகி 150 ஆண்டுகளுக்கு பின்னர், முதலாளித்துவம் மறுபடியும் தன் உண்மையான முகத்தை காண்பித்துக் கொண்டிருக்கிறது. இது, சமூக சமத்துவமின்மைக்கும், போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்லக் கூடியதொரு அமைப்புமுறை என முதலாளித்துவ அமைப்புமுறையைக் குறித்து மாபெரும் மார்க்சிஸ்டுகள் எழுதிய ஒவ்வொன்றுமே மீண்டும் ஊர்ஜிதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆயினும், முதலாளித்துவத்தின் நெருக்கடியானது அதனை வெல்வதற்கான முன்நிபந்தனைகளையும் சேர்த்தே உருவாக்குகிறது. ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை விவாதிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச முன்னோக்கிற்காகப் போராடுவதற்கும் SGP இந்தத் தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்தும்.
SGP இன் தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக பின்வரும் கோரிக்கைகள் அமைந்துள்ளன:
போரும் இராணுவவாதமும் வேண்டாம்! மூர்க்கத்தனமான வல்லரசு அரசியலுக்கு ஜேர்மனி மீண்டும் திரும்புவதை தடுத்து நிறுத்துவோம்!
தனது பொருளாதாரரீதியான வீழ்ச்சியை, வர்த்தகப் போர் மற்றும் இராணுவ மூர்க்கத்தனத்தை கொண்டு ஈடுகட்ட முனைகின்ற அமெரிக்காவில் தான் போர் அபாயத்தின் குவிமையம் அமைந்திருக்கிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாகவே, அமெரிக்கா தனது தயக்கங்கள் அத்தனையையும் தூக்கிப் போட்டு விட்டிருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் மூலமாக, அமெரிக்க வரலாற்றின் மிகவும் வலது-சாரி ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் நுழைந்திருக்கிறார். அந்நாட்டு ஆளும் வர்க்கத்தின் மிருகத்தனம் மற்றும் குற்றவியல்தனத்தின் உருவடிவமாய் அவர் திகழ்கிறார்.
ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தியாக தன்னைத் தானே நியமனம் செய்து கொண்டதன் மூலம் பதிலிறுப்பு செய்திருக்கிறது. நாஜி ஆட்சி தோற்கடிக்கப்பட்டு ஏழு தசாப்தங்களுக்குப் பின்னர், மீண்டும் அது இராணுவ வழிமுறைகளின் மூலமாக தனது உலகளாவிய புவி-மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை சாதித்துக் கொள்ள முனைந்து கொண்டிருக்கிறது.
2014 வாக்கிலேயே, அப்போது ஜேர்மனியின் ஜனாதிபதியாக இருந்த ஜோஅஹிம் கௌக் மற்றும் அவருக்கு அடுத்து வந்த பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) இருவரும், ஜேர்மனி உலகின் நெருக்கடிகள் மற்றும் கொந்தளிப்பான இடங்களில் இருந்து ஒதுங்கியிருக்க முடியாத அளவுக்கு ”மிகவும் பெரிதானது மற்றும் மிகவும் முக்கியமானது” என்று அறிவித்தனர். இப்போது ஜேர்மன் ஆளும் வர்க்கமானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியதையும் ஜனாதிபதி ட்ரம்ப்புடன் அதிகரித்துச் செல்லும் மோதல்களையும் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்காவில் இருந்து சுயாதீனமாகவும், அவசியப்பட்டால், அதற்கு எதிராகவும் செயல்படுகின்ற வகையில், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய இராணுவத்தை வலுப்படுத்த முனைகிறது.
முனீச்சில் அத்தனை இடங்களையும் சேர்ந்த பீர் கூடாரம் ஒன்றில் -இது ஹிட்லர் ஆதரித்த பின்புல முறை- சான்சலர் அங்கேலா மேர்க்கெல், “ஐரோப்பியர்களாகிய நாம்” நமது “தலைவிதியை நமது சொந்தக் கைகளில் எடுத்தாக வேண்டும்” என்றும் “நமது எதிர்காலத்திற்காக நாமே போராட வேண்டும்” என்றும் அறிவித்தார்.
”மேற்கத்திய விழுமியங்களை” பாதுகாப்பது மற்றும் காலநிலை பாதுகாப்பு ஆகியவை குறித்த வெற்றுச் சொற்றொடர்களைக் கொண்டு, இந்த அழைப்பின் மீது முலாம் பூசுவதற்கு அவர் செய்திருக்கும் முயற்சிகளைக் கொண்டு யாரும் குழம்பி விடக் கூடாது. அப்பட்டமான ஏகாதிபத்திய நலன்களை “விழுமியங்கள்” மற்றும் “கலாச்சாரம்” ஆகியவை குறித்த சொற்றொடர்களைக் கொண்டு அலங்கரிப்பதற்கு ஜேர்மனி ஒரு நீண்ட பெரும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 1914 இல் ஜேர்மனி, உலகப் போரை ”ரஷ்ய காட்டுமிராண்டித்தன”த்திற்கு எதிரான ஒரு போராட்டம் என்று கூறி நியாயப்படுத்தியது, முன்னணி கலாச்சார மற்றும் விஞ்ஞான ஆளுமைகள் 93 பேர் அனைத்து “கலாச்சாரத்தின் உலகத்திற்கு” விடுத்திருந்த ஒரு அறிக்கை பெல்ஜியத்தை சூறையாடிய ஜேர்மனியை பாதுகாத்தது. இருபத்தியைந்து வருடங்களுக்குப் பின்னர், ஜேர்மனியின் பீரங்கிகளாலும் விமானங்களாலும் ஐரோப்பா சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது.
போரும் இராணுவவாதமும் ஒரு தப்பவியலாத தர்க்கத்தைப் பின்பற்றுகின்றன. ஜேர்மன் இராணுவவாதத்தின் உண்மையான முக்கியத்துவம் வலது-சாரி வரலாற்றாசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியால் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது. பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான போராட்டம் குறித்துப் பேசிய அவர் கூறினார்: “பயங்கரவாதிகள் செய்வதைப் போல பணயக் கைதிகளை பிடித்து வைக்கக் கூடாது, கிராமங்களை எரிக்கக் கூடாது, மனிதர்களைத் தூக்கிலிடக் கூடாது, அச்சத்தையும் பீதியையும் பரப்பக் கூடாது என்றால், ஒருவர் இதுபோன்ற விடயங்களைச் செய்யத் தயாரில்லை என்றால், அத்தகைய போரில் அவர் ஒருபோதும் வெல்லவே முடியாது, மொத்தமாய் அவர் ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது.”
கடந்த நூற்றாண்டில், ஐரோப்பாவை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவரவும் ஒரு உலக சக்தியாக ஆகவும் ஜேர்மன் ஏகாதிபத்தியம் செய்த இரண்டு முயற்சிகளும் பேரழிவுகளில்தான் முடிந்தன. மறு-ஐக்கியப்பட்ட ஜேர்மனி, கடந்த காலத்தின் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு விட்டது என்றும், அது இப்போது “அமைதி” மற்றும் “ஸ்திரத்தன்மை”க்காக பேசிக் கொண்டிருக்கிறது என்றுமாய் ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதிலும் கூட, தொழிலாள வர்க்கம் தலையிடாது போனால், உலக சக்தியாவதற்கான ஜேர்மனியின் மூன்றாவது ஒரு முயற்சியும் மறுபடியும் போருக்கும் பாரிய படுகொலைகளுக்குமே இட்டுச் செல்லும்.
ஜேர்மன் இராணுவம் ஏற்கனவே 18 வெளிநாட்டு மோதல்களில் செயலூக்கத்துடன் பங்குபெற்றுள்ளது. அது ரஷ்ய எல்லையில் போரிடும் துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளது; ஆப்கானிஸ்தானிலும் சிரியாவிலும் போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதன் அணிகளுள் வலது-சாரி பயங்கரவாத வலைப்பின்னல்கள் இயங்குகின்றன என்பதோடு ஹிட்லரின் இராணுவத்தின் (Wehrmacht) இன் பாரம்பரியங்களையும் அது வளர்த்தெடுக்கிறது, இதற்கு அவற்றின் மேலதிகாரிகளது பாதுகாப்பு கிடைக்கின்றது.
மார்க்சிஸ்டுகளாக, நாம் புறநிலை சமூக அபிவிருத்திகள் குறித்த ஒரு புரிதலைக் கொண்டே இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறோம். மூன்றாம் உலகப் போர் அபாயத்துக்கான காரணம், உற்பத்தியின் சர்வதேச தன்மைக்கும் தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையே உள்ள மோதலை முதலாளித்துவத்தால் தீர்க்க முடியாத முரண்பாடுகளிலேயே தங்கியுள்ளது.
- தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேசிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை ஸ்தாபிப்பதும் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்காக போராடுவதுமே இந்த அபாயகரமான அபிவிருத்தியை தடுத்து நிறுத்துவதற்கான ஒரேயொரு வழியாகும்.
வறுமைக்கும் சுரண்டலுக்கும் முடிவுகட்டுவோம்! சமூக சமத்துவத்தை உருவாக்குவோம்!
SGP முதலாளித்துவ அமைப்புமுறையை நிராகரிக்கிறது. ஒரு சிறிய, பெரும்-செல்வந்த உயர் வர்க்கம் ஆடம்பரத்தில் கொழிக்கிறதும் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துகிறதுமான அதேநேரத்தில், மக்களின் மிகப் பெரும்பான்மையினரோ இல்லாமையில் வாழ்வதோடு, அரசியல் முடிவெடுத்தல் நிகழ்ச்சிப்போக்கில் இருந்து பெரும்பாலும் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாய் உள்ளனர்.
ஒவ்வொரு நாட்டிலுமே ஆளும் வர்க்கமானது, தனது செல்வத்தையும் சர்வதேச அந்தஸ்தையும் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கம் மேலும் மேலும் அதிகமான “தியாகங்களை” செய்ய வேண்டும் என்று கோருகிறது. இதன் விளைவே பாரிய வேலைவாய்ப்பின்மையும், வறுமையும் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் அழிப்பும் ஆகும். ஒரு ஒட்டுமொத்த இளம் தலைமுறைக்கும் வருங்காலம் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பரந்த ஆதாரவளங்கள் இராணுவ செலவினத்திற்காக அர்ப்பணிக்கப்படுகின்ற வேளையில், இன்றியமையாத உள்கட்டமைப்பு சிதைவுகள், வறுமைப் பெருக்கம் மற்றும் சிக்கலான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவை உதாசீனம் செய்யப்படுகின்றன.
ஜேர்மனி ஏற்கனவே உலகின் மிக சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாய் இருக்கிறது. Oxfam ஆய்வு ஒன்றின்படி, 36 ஜேர்மன் பில்லியனர்கள் வறுமைப்பட்ட மக்கள்தொகையின் பாதிப்பேர் கொண்டிருக்கும் அளவான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர். Paritätischer Wohlfahrtsverband இன் சமீபத்திய அறிக்கையின் படி, 2015 இல் ஜேர்மனியில் வறுமையால் 15.7 சதவீதம் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர், இது ஒரு புதிய உச்சமாகும். ஜேர்மனியின் தொழிலாளர்களில் ஐந்தில் ஒருவர் அற்பத்தொகையான மணிக்கு 10 யூரோக்களுக்கும் குறைவான ஊதியத்திற்கு வேலை செய்கிறார்.
- பெருவணிகங்களது இலாப நலன்களைக் காட்டிலும் அநேக மக்களது தேவைகளே மேலமைகின்றதான ஒரு சமூகத்திற்காக SGP போராடுகிறது. பெரும்-செல்வந்தர்களும், வங்கிகளும், மற்றும் பெருநிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவை மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அவ்வழியில் மட்டுமே சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். கண்ணியமான ஊதியமளிக்கும் வேலை, முதல்-தர கல்வி, கட்டுப்படியாகும் வீட்டுவசதி, பாதுகாப்பான ஓய்வூதியம், வயதானவர்களுக்கு உயர்தரமான வசதிகள் மற்றும் கலாச்சார வசதிகள் கிடைப்பது ஆகியவற்றுக்கான உரிமைகளும் இதில் அடங்குபவை.
ஜனநாயக உரிமைகளையும் புகலிட உரிமையையும் பாதுகாப்போம்! அரசு அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதும் கண்காணிப்பதும் வேண்டாம்!
சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி மற்றும் இராணுவவாதம் திரும்புதல் ஆகியவற்றுடன் கைகோர்த்து அரசு கண்காணிப்பு மற்றும் ஒடுக்குமுறை எந்திரத்தின் ஒரு பாரிய வளர்ச்சியும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது. போலிஸ் மற்றும் உளவு சேவைகளை விரிவுபடுத்துவது, தகவல்பரிவர்த்தனைகளது கண்காணிப்பை அதிகப்படுத்துவது மற்றும் இணையத் தணிக்கையை விரிவுபடுத்துவது ஆகியவற்றுக்கென புதுப்புதுச் சட்டங்கள் நிறைவேறாத மாதங்களே அபூர்வம் என்றாகி விட்டது. யதார்த்தத்தில் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்வதாக இருக்கின்ற “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதாய் அழைக்கப்படுகின்ற ஒன்று, அகதிகள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதற்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்குமான ஒரு சாக்காக சேவைசெய்கிறது. இராணுவவாதத்திற்கான எதிர்ப்பு மற்றும் சமூகப் போராட்டங்களது பிற வடிவங்களை அச்சுறுத்துவதும் ஒடுக்குவதுமே அரசு எந்திரத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதன் நோக்கமாய் இருக்கிறது.
சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதம் குறித்த கோபம் மிகப் பிரம்மாண்டமானதாய் இருக்கிறது என்பதை ஆளும் வர்க்கம் நன்கறியும். பகிரங்கமான வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கும் என்று அது அஞ்சுகிறது. “என்ன தலைமுறை” (“Generation What?”) என்ற சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வின் படி, ஜேர்மனியில் இளைஞர்களில் 86 சதவீதம் பேர் சமத்துவமின்மை பெருகிக் கொண்டிருப்பதாய் நம்புகின்றனர். இப்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறையில் வெறும் 1 சதவீத பேருக்கு மட்டுமே முழுமையான நம்பிக்கை இருக்கிறது, 71 சதவீதம் பேருக்கு அந்த நம்பிக்கையே இல்லை. அதிகாரம் பெற்றிருப்பவர்களுக்கு எதிராய் உடனடி எதிர்காலத்தில் ஒரு கிளர்ச்சி வருமாயின் அதில் பங்கேற்க நாற்பத்தியிரண்டு சதவீதம் பேர் தயாராய் இருக்கிறார்கள்.
- அத்தனை இரகசிய சேவைகளும் கண்காணிப்பு எந்திரமும் கலைக்கப்பட வேண்டும் என்று SGP அழைப்பு விடுக்கிறது. நாங்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் புகலிடத்திற்கான உரிமையும் பாதுகாக்கிறோம், எந்த வடிவத்திலான தேசியவாதம் மற்றும் வெளிநாட்டினர்வெறுப்பையும் நாங்கள் நிராகரிக்கிறோம். அகதிகள் மீதான தாக்குதல்கள் தொழிலாளர்கள் அனைவருக்கும் எதிராய் ஏவப்படுவதாகும். ஆகவே தான் முதலாளித்துவத்திற்கு எதிராக ஜேர்மனியில் வாழுகின்ற அத்தனை பேரும் பங்குபெறும் ஒரு பொதுவான போராட்டம் அவசியமாய் இருக்கிறது.
தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்தக் கட்சி வேண்டும்!
உத்தியோகபூர்வ அரசியல் உழைக்கும் மக்களிடையே பெருவாரியாய் நிராகரிக்கப்படுகின்ற போதிலும் கூட, இந்த எதிர்ப்பானது ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் ஸ்தாபனங்கள் இடையே எந்தவிதமான அரசியல் வெளிப்பாட்டையும் காண இயலுவதில்லை.
SPD மிகச்சரியான விதத்தில் வெறுக்கப்படுகிறது. மூலத்தில் தொழிலாளர்களால் ஸ்தாபிக்கப்பட்ட இந்தக் கட்சி, இன்று அவர்களது மிகப் பெரும் எதிரியாக நிற்கிறது. SPD சான்சலரான ஹெகார்ட் ஷ்ரோடரின் 2010 திட்டநிரலும் அவரது ஹார்ட்ஸ் நல உதவித் திட்டமும் மற்றும் தொழிலாளர் “சீர்திருத்தங்களும்” மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கக் குடும்பங்களை துயரத்தில் மூழ்கடித்திருக்கிறது. SPD, இப்போதைய பாரிய கூட்டணி அரசாங்கத்தின் பகுதியாக, CDU நிதி அமைச்சர் வொல்ஃப்காங் ஷௌய்பிள உடன் சேர்ந்து கொண்டு கிரேக்கத்தில் சின்னாபின்னமாக்கும் சிக்கன நடவடிக்கைகளை திணித்திருக்கிறது. SPD இன்று “சீர்திருத்தங்கள்” என்று பேசும்போது, சமூக மேம்பாடுகள் என்பதல்ல அதன் அர்த்தம், மாறாக சமூக வெட்டுகள், அரசு அதிகாரங்களின் அதிகரிப்பு மற்றும் இராணுவவாதம் ஆகியவையாகும். தேர்தல் பிரச்சாரத்தில், SPD இன் முன்னணி வேட்பாளரான மார்ட்டின் சூல்ஸ், சான்சலர் மேர்க்கெலை வலதின் பக்கமிருந்து தாக்குகிறார். ஐரோப்பிய பாதுகாப்புக் கொள்கை ஒன்றும் ஜேர்மனியின் மேலாதிக்கம் கொண்ட ஐரோப்பிய இராணுவம் ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும் என அவர் தீவிரமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்.
இதேபோன்றதொரு கொள்கையே, எப்போதும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் ஒரு கட்சியாகவே இருந்து வந்திருக்கும் பசுமைக் கட்சியினராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அவர்கள் இப்போது போரின் மிகத் தீவிரமான ஆலோசகர்களாக ஆகியிருப்பதோடு தொழிலாள வர்க்கத்தை நோக்கி ஆணவத்தையும் அலட்சியத்தையும் மட்டுமே வெளிப்படுத்துகின்றனர். 1999 இல் பசுமைக் கட்சியின் வெளியுறவு அமைச்சரான ஜோஸ்கா பிஷ்ஷர் “மீண்டும் ஒருபோதும் அவுஸ்விட்ச் (Auschwitz) தோன்றக் கூடாது” என்ற சுலோகத்தைக் கொண்டு கொசோவோ போரைப் பாதுகாத்தது முதலாகவே, இந்த முன்னாள் அமைதிவாதிகள், அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த சமயத்திலும் கூட, ஜேர்மனியின் ஒவ்வொரு போர் முயற்சிக்கும் ஆதரவளித்து வந்திருக்கின்றனர்.
18 ஆண்டுகளுக்கு முன்பாக பசுமைக் கட்சி வகித்த அதேபோன்றதொரு பாத்திரத்தை வகிப்பதற்கே இடதுகட்சியும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. SPD மற்றும் பசுமைக் கட்சியுடன் “சிவப்பு-சிவப்பு-பச்சை’ என்று சொல்லப்படுவதான ஒரு கூட்டணிக்கு அது முனைவதோடு பகிரங்கமாய் ஒரு போர் ஆதரவுக் கட்சியாக மேலும் மேலும் ஆகிக் கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்கதாக, கட்சியின் முன்னணி வேட்பாளரான டீட்மார் பார்ட்ஷ், முதன்முதலாய் 2015 ஏப்ரலில் ஜேர்மன் இராணுவத்தை வெளிநாடுகளில் நிலைநிறுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்த இடது கட்சி நாடாளுமன்றப் பிரதிநிதிகள் ஐந்து பேரில் ஒருவராய் இருந்தார். கட்சியின் இரண்டாவது முன்னிலை வேட்பாளரான ஸாரா வாகன்கினெக்ட், சென்ற கோடையில் ZDF ஒளிபரப்பில் கூறுகையில், “சந்தேகமே வேண்டாம், நாங்கள் அரசாங்கத்தில் இணைந்து விட்டால் ஜேர்மனி நேட்டோவில் இருந்து விலகாது” என்றார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இடது கட்சி அது அரசியல் அதிகாரம் செலுத்துகின்ற மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளில் சமூக வெட்டுகளைத் திணிப்பதற்கு எத்தனை தயாரிப்புடன் இருக்கிறதோ அத்தனைஅளவுக்கு ஜேர்மன் இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும் தயாரிப்புடன் இருக்கிறது.
SPDயும், இடது கட்சியும், மற்றும் பசுமைக் கட்சியும் தமது வலது-சாரிக் கொள்கைகளின் மூலமாக அதி-வலது ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சியின் வளர்ச்சிக்கு வழிவகுத்திருக்கின்றன. ஸ்தாபகமான “இடது” கட்சிகளில் எதுவும் ஒரு சோசலிச முன்னோக்கைக் கொண்டு ஆளும் வர்க்கத்தை எதிர்க்கவில்லை என்ற காரணத்தினால் மட்டுமே இந்த வலது-சாரி தீவிரவாதக் கட்சி ஒரு எதிர்க்கட்சி சக்தியாக தன்னைக் காட்டிக் கொள்ள முடிகிறது. பிரதான கட்சிகளது சமூக-விரோதக் கொள்கைகள் மீதான கோபத்தையும் ஏமாற்றத்தையும், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தை மேலும் வலது நோக்கித் தள்ளுவதற்காய் AfD சுரண்டிக் கொள்கிறது. இதேபோன்றதொரு நிகழ்முறையை பிரான்சில் மரின் லு பென், நெதர்லாந்தில் கீர்ட் வில்டர்ஸ் மற்றும் ஆஸ்திரியாவில் ஹைய்ன்ஸ்-கிறிஸ்டியான் ஸ்ட்றாக ஆகியோர் விடயத்திலும் காணலாம்.
- ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் அதி வலது கட்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கும் அரசியல் நிகழ்வுகளில் சுயாதீனமாக தலையீடு செய்வதற்கும், தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்தக் கட்சி அவசியமாக உள்ளது. சரியாய் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், சமூகத்தை சோசலிசக் கோட்பாடுகளுக்கேற்ப மறுஒழுங்கு செய்வதும் சாத்தியமே என்பதை ரஷ்ய தொழிலாளர்கள் எடுத்துக்காட்டினர். பின்னர் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச சீரழிவுக்குள் சென்றதானது, 1917 அக்டோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தை ஒருபோதும் மாற்றி விடப்போவதில்லை.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக! சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்!
சோசலிச சமத்துவக் கட்சியை (Sozialistische Gleichheitspartei) கட்டியெழுப்புவதே வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதற்கும் ஒரு சோசலிச முன்னோக்கை நனவாக்குவதற்குமான முன்நிபந்தனையாக இருக்கிறது. எங்களது வலிமை நாங்கள் உருவடிவம் அளிக்கும் வரலாற்று பாரம்பரியத்தையும் நாங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற கோட்பாடுகளையும் அடித்தளமாய் கொண்டதாகும்.
ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக மார்க்சிசத்தையும் சோசலிச சர்வதேசியவாதத்தையும் பாதுகாத்த லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான இடது எதிர்ப்பாளர்களின் பாரம்பரியத்தில் நாங்கள் நிற்கிறோம். மிகக் கடுமையான நிலைமைகளின் கீழும் முதலாளித்துவத்திற்கு எதிராகப் போராடிய, முதலாம் உலகப் போரின் தேசியவாத வெறிக்கூச்சலுக்கு மத்தியிலும் சர்வதேசியவாதத்தை பாதுகாத்த லெனின், ட்ரொட்ஸ்கி, ரோசா லுக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் ஆகியோரே நாங்கள் முன்னுதாரணமாய் கொள்ளும் புரட்சியாளர்கள்.
முந்தைய கிழக்கு ஜேர்மனியும் (ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு -DDR) சோவியத் ஒன்றியமும் கலைக்கப்பட்டு இப்போது 25 ஆண்டுகளைக் கடந்து விட்டது. தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒடுக்கி சோசலிசத்தின் உண்மையான தன்மை குறித்து பிரம்மாண்டமான குழப்பத்தை உருவாக்கிய ஸ்ராலினிசத்தின் பாத்திரத்தின் இறுதிவிளைவுகளாய் அவை அமைந்திருந்தன. நாசகரமான சமூக மற்றும் அரசியல் பின்விளைவுகளுடன் முதலாளித்துவத்தை மறுஅறிமுகம் செய்யும் முன்முயற்சியையும் ஸ்ராலினிச அதிகாரத்துவமே எடுத்தது. இந்த ஸ்ராலினிச பாரம்பரியத்திலேயே இடது கட்சி நின்று கொண்டிருக்கிறது.
SGPயும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுமே முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடிக்கான ஒரு சோசலிச பதிலிறுப்புக்காக இன்று உலகெங்கிலும் போராடி வருகின்ற ஒரே அமைப்புகளாகும்.
- ·ஏகாதிபத்தியக் கூட்டணிகள் மற்றும் இராணுவ கைகோர்ப்புகள் அத்தனையையும் நாங்கள் நிராகரிக்கிறோம். நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட நாங்கள் போராடுகிறோம். ஜேர்மன் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கமே எங்களது கூட்டாளிகளாகும்.
- ஜேர்மனி இராணுவவாதத்திற்கு திரும்புவதையும், வறுமை அதிகரிப்பதையும், வலது-சாரிகளது எழுச்சியையும் ஏற்றுக்கொள்ள விரும்பாத அனைவரையும் SGPயையும் அதன் தேர்தல் பிரச்சாரத்தையும் ஆதரிப்பதற்கு நாங்கள் அழைக்கிறோம். நாங்கள் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதை உறுதிசெய்யும் வகையில் கையொப்பமிட்டு இந்தத் தேர்தலில் எங்களது பங்கேற்பை ஆதரியுங்கள். நண்பர்கள், சகாக்கள் மற்றும் பரிச்சயமானவர்களிடம் இந்த தேர்தல் அறிக்கையை பகிர்ந்து கொள்ளுங்கள், விவாதியுங்கள். உங்கள் பகுதியில் தேர்தல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள், எங்களுக்கு தேர்தல் நிதியளியுங்கள், செப்டம்பர் 24 அன்று SGPக்கு வாக்களியுங்கள். SGPக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான வாக்காகும்.
- நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின், தினசரி இணைய வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தை வாசியுங்கள், கற்றுக் கொள்ளுங்கள்! SGP இன் ஒரு உறுப்பினராகுங்கள்! ஒரு புதிய பரந்த சோசலிச கட்சியைக் கட்டியெழுப்புவதில் செயலூக்கத்துடன் பங்குபெறுவதற்கு இதுவே மிக உகந்த சமயமாகும்!