Print Version|Feedback
Over 200 killed in Sri Lankan floods, now cyclone hits Bangladesh
இலங்கை வெள்ளத்தில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், இப்போது சூறாவளி பங்களாதேஷை தாக்குகிறது
By Rohantha De Silva
2 June 2017
தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் இலங்கையில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய பிறகு, கிழக்கு இந்தியா பகுதியிலும் மற்றும் பங்களாதேஷிலும் செவ்வாய்க்கிழமை மோரா சூறாவளி தாக்கியுள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரத்தின் படி, 203 பேர் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர், 96 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், 600,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. சுமார் 1,500 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. 7,000 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன.
பல பகுதிகளை வெள்ளம் காரணமாக இன்னமும் அணுக முடியாமல் உள்ளது. மரண அச்சுறுத்தலுடன் 50 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தை அண்டிய பிரதேசத்தில் அகலவத்தையிலும் ரத்தினபுரி மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் வெள்ள நீரில் நடந்து செல்கின்றனர்
தப்பிப்பிழைத்தவர்கள் தங்கியிருக்கும் தற்காலிகமாக முகாம்களில் அடிப்படை சுகாதார மற்றும் ஆரோக்கிய வசதிகள் இல்லாததால் டெங்கு காய்ச்சல், காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுவலியும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை ஆயிரக்கணக்கானவர்கள் எதிர்கொள்கின்றனர். சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் இதுவரை நிலைமையை சமாளிக்க ஒரு உறுதியான திட்டத்தை முன்வைக்கவில்லை.
சிறுவர் பாதுகாப்பின் இலங்கை தலைவர் கிறிஸ் மிக்வீவர், நெரிசலான சூழ்நிலை காரணமாக நீரில் இருந்து தோன்றும் நோய்களே கவலைக்குரியனவாக இருக்கின்றன எனக் கூறினார். அரசாங்க மதிப்பீடுகளின்படி, பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைக்கவில்லை. ஏற்கனவே வெள்ளப்பெருக்குக்கு முன்னர் தொற்று விகிதங்களில் அதிகமாக இருந்த டெங்கு காய்ச்சல், கொசுக்கள் புதிய இனப்பெருக்க வசதிகளைப் பெறும்பட்சத்தில் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழு சமூகங்களும் வெள்ளத்தால் மூழ்கிப் போயின. அவர்களது வீடுகள் அழிக்கப்பட்டதால் உயிர் பிழைத்த பலர் வெளியே தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
"இந்த சமூகங்களுக்குள் நுழைந்து பார்ப்பது இப்போது மிக உயர்ந்தளவு முன்னுரிமை கொடுக்கவேண்டியதாக உள்ளது. அப்போதுதான் தேவைகளை சரியாகக் கண்டுபிடித்து தீர்க்க முடியும்," என்று மெக்ஐவர் கூறினார். கடந்த வார வெள்ளமானது தென்மேற்கு பருவமழையின் தொடக்கமாக இருந்ததால், வரவிருக்கும் நாட்களில் பேரழிவு மோசமாகிவிடும், என்றும் அவர் எச்சரித்தார்.
"சிறப்பு வைத்திய நிபனர், எச். ஜயந்தன், “விரல்களின் அடியைப் பாதிக்கும் பங்கசுக்கள் ஏற்கனவே வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பியவர்கள் மத்தியில் தோன்றியுள்ளதுடன் ஏனைய தோல் நோய்களும் பாதித்துள்ளன" என்று கூறினார். உயிர் பிழைத்த முதியவர்கள், "சுவாசக்குழாய் நோய்த்தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் மற்றவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்."
சுனில் வித்தானகே
விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் நீரில் மூழ்கியுள்ளது உள்ளது. களுத்துறை மாவட்டத்தில் உள்ள அக்குருகலவிடவில் வாழும் ஆசிரியரும் பகுதி நேர விவசாயியுமான சுனில் வித்தானகே, உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்ததாவது: “எமது வாழ்நாளில் இதுபோன்ற வெள்ளங்களை நாம் இதுவரை பார்த்ததில்லை. இந்த பகுதியில் மட்டும் சுமார் 200 ஏக்கர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.” முந்தைய வறட்சி காரணமாக, உள்ள நிலத்தில் எட்டில் ஒரு பகுதி நிலத்தில் ஒரு பகுதியில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது, என வித்தானகே விளக்கினார்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள மொல்காவா, பாரகொட, பஹியங்கல, நிக்கஹா ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இப்பகுதியில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் கடற்படை மீட்புப் படகு சனிக்கிழமை பிற்பகல் வரை அந்த பகுதிக்கு சென்றிக்கவில்லை. பின்னர் திங்கட்கிழமையே இரண்டு மருத்துவர்கள் குழு அங்கு சென்றிருந்தது. சில பகுதிகளுக்கு இன்னும் நெருங்க முடியாதுள்ளன.
அங்கு சென்றிருந்த ஒரு உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம், அது ஒரு வறுமைக் கோட்டுக்கு கீழ்ப்பட்ட கிராமப்புற பகுதி என மக்கள் குறிப்பிட்டிருந்தனர். சுமார் 400 ரூபாய் (2.60 அமெரிக்க டாலர்) தினசரி ஊதியத்திற்கு பல குடியிருப்பாளர்கள் பெருந்தோட்டங்களில் வேலை செய்கின்றனர். மற்றவர்கள் சிறு விவசாயிகளாக இருந்து வாழ்க்கையை சமாளிக்கின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு முன்பே போக்குவரத்து மிகவும் கடினமாக இருந்தது. பஸ்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயணிக்கின்றன. எட்டு மைல் தூரத்திற்கு அப்பால் புளத்சிங்களவில் உள்ள வசதிகள் மிகக் குறைவான, ஊழியர்கள் பற்றாக்குறையான ஒரு மருத்துவமனையே உள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி மறுகட்டமைப்பது என்பதையிட்டு எந்த சிந்தனையும் இன்றி உள்ளனர். அவர்களுக்கு எந்தவொரு அரசாங்க உதவியும் கிடைக்கவில்லை அல்லது மிகக் குறைவாகவே கிடைத்தையிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய நெல் வயல்
ஒரு கிராமவாசி நிருபர்களிடம் கூறியதாவது: "எனது வீடு வெள்ளத்தால் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. எனக்கு ஒரு பண்ணை இருந்தது ஆனால் இப்போது மீண்டும் அதை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இன்னொரு வெள்ளம் வரும் என்று நாங்கள் பயப்படுகிறோம், இனி இங்கே இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கிறோம். ஆனால் போவதற்கு இடமும் இல்லை. அனைத்து அரசாங்கங்க அதிகாரிகளும் இந்த பேரழிவுகளுக்கு பொறுப்பாளிகள்.
"குக்குலே கங்கா திட்டம் [நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழி மின்சாரம் திட்டம்] ஆரம்பித்தபோது அதை நாங்கள் எதிர்த்தோம். ஏனெனில், அதனால் உருவாகக்கூடிய சேதம் பற்றி எமக்குத் தெரியும். நிரம்பி வழியும் அனைகளை மக்கள் வாழாத பகுதிக்கு திருப்புதவற்கான திட்டமே அது என நாம் கேள்விப்பட்டோம். ஆனால் அரசாங்கம் அதற்கு நிதி ஒதுக்கால் எளிதான வழிமுறைகளை தேர்ந்தெடுத்துள்ளது."
வருடாந்த வெள்ள அழிவுகளை தடுக்கும் அல்லது எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதை கொழும்பு அலட்சியம் செய்வதாலும் போதியளவிலான நிவாரணம் இல்லாமையாலும் அரசாங்க எதிர்ப்பு உணர்வு கூர்மையடைந்து வருகின்றது.
திங்கட்கிழமை இரத்தினபுரி மாவட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் தொலைக்காட்சியில் தோன்றிய சிறிசேன, அமைச்சரவையானது இந்த ஆண்டு அரசாங்க அமைச்சர்களுக்கு ஆடம்பர வாகனங்களை வாங்காமல் இருக்க முடிவு செய்துள்ளது என வஞ்சத்தனமாக அறிவித்தார். இதை ஒரு பெரிய தியாகத்தைப் பிரதிபலிப்பது போல் காட்டப்பட்டது.
வெள்ளம் நிறைந்த அவளது அறையில் ஒரு குழந்தை
அமெரிக்காவின் பூகோள மூலோபாயக் கொள்கைகளுக்கு இணங்க, இந்தியா கொழும்புடன் தனது உறவை வலுப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது. அது நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ 300 கடற்படை வீரர்களுடன் மூன்று கடற்படைக் கப்பல்களை அனுப்பியுள்ளது. பல்வேறு மருத்துவ அணிகள் மற்றும் காற்றூ ஊதப்பட்ட படகுகளுடன், உலர் உணவுகள் மற்றும் போர்வைகள் இந்த நிவாரண பொருட்களில் அடங்கும். சீன அரசு 2.2 மில்லியன் அமெரிக்க டாலர்பகளை வெள்ள நிவாரண உதவித் திட்டமாக அறிவித்துள்ளதுடன், பாக்கிஸ்தான் நிவாரண பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அடங்கிய கப்பலை அனுப்பியுள்ளது.
சிறிசேனவை ஜனாதிபதி ஆக்குவதில் முக்கிய பங்கை வகித்த வாஷிங்டன், ஒரு அற்பத் தொகையை வழங்கியுள்ளது. அமெரிக்க தூதர் அதல் கேசாப், தனது அரசாங்கம் 15 மில்லியன் ரூபாய்களை (அமெரிக்க $ 98,000) அளிப்பதாக அறிவித்தார்.
செவ்வாய் அன்று, மோரா சூறாவளி பங்களாதேஷை தாக்கியது, இலட்சக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டதுடன் குறைந்தபட்சம் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
பங்களாதேஷ் வானியலாளர் திணைக்களத்தின் கருத்துப்படி, காக்ஸ்ஸின் பஜார் மற்றும் சிட்டகாங் நகரின் மீன்பிடி துறைமுகத்திற்கும் இடையே மணிக்கு 117 கிலோமீட்டர் வேகத்தில் காற்று தாக்கியது. இந்த பகுதிகளும், மற்ற கடலோர மாவட்டங்களும் நான்கு முதல் ஐந்து அடி உயரத்துக்கு வீசிய அலையினால் "மூழ்கடிக்கப்படக்கூடும்" என்று அது எச்சரித்துள்ளது.
இந்த இடங்களில் உள்ள மக்கள் முகாம்களுக்கும், பள்ளிகளுக்கும் அரசாங்க அலுவலகங்களுக்கும் இடம் பெயர்ந்தனர். மீன்பிடி படகுகள் துறைகளை விட்டு வெளியேறக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளுக்கு விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
காக்ஸின் பஜார் தலைமை நிர்வாகி முகம்மது அலி ஹுசைன் கூறுகையில், 17,500 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன, 35,000 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன.
பௌத்த மேலாதிக்கவாதிகளின் இனவாத தாக்குதல்களில் இருந்து தப்பிக்க பர்மாவை விட்டு வெளியேறிய அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் புயலின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டனர். சூறாவளி தாக்கியபோது சுமார் 350,000 ரோஹிங்கியர்கள் இழிநிலையிலான முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
உயிரிழப்புக்கள் பற்றிய தகவல்கள் இல்லாவிட்டாலும், "தகரம், மூங்கில் மற்றும் பிளாஸ்டிக்காலும் தயாரிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து கூடாரங்களும் கவிழ்ந்து போனதாக" என்று அகதிகளின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.