Print Version|Feedback
Germany: Joschka Fischer supports Merkel’s call for an independent foreign policy
ஜேர்மனி: ஒரு சுதந்திர வெளியுறவு கொள்கைக்கான மேர்க்கெலின் அழைப்பை ஜோஸ்கா பிஷ்ஷர் ஆதரிக்கிறார்
By Peter Schwarz
10 June 2017
பசுமை கட்சியின் வெளியுறவு கொள்கை இருக்காது அதற்கு பதிலாக ஜேர்மன் வெளியுறவு கொள்கையே இருக்கும் என்ற கருத்துக்களோடு 1996 இல் ஜோஸ்கா பிஷ்ஷர் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றதற்கு பின்னர் இருந்து, அவர் ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களின் ஒரு நம்பகமான தூணாக மதிக்கப்படுகிறார். ஜேர்மன் ஆயுத படையின் (Bundeswehr) முதல் வெளிநாட்டு இராணுவ தலையீடாக யூகோஸ்லாவியாவில் தலையிட்டதற்கும், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மடலைன் அல்பிரைட் (Madeleine Albright) உடன் நெருக்கமான நட்புறவை அபிவிருத்தி செய்ததற்கும் இந்த பசுமை கட்சி அரசியல்வாதி தான் பொறுப்பாவார், இப்போதும் இவர் மடலைன் அல்பிரைட் உடன் கொள்கை ஆலோசனைக்கான ஒரு கூட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவரது கணிசமான செல்வவளத்தை அதிகரிப்பதற்காக Süddeutsche Zeitung பத்திரிகையில் பிஷ்ஷர் எழுதி வரும் கட்டுரைகள், இவ்விதத்தில் எப்போதும் ஆர்வத்திற்குரியதாக உள்ளன. அவர் ஏதாவது புதிதாக கூறுகிறார் என்பதற்காக அல்ல, மாறாக ஏனென்றால் ஆளும் வட்டங்களுக்குள் வெளியுறவு கொள்கை கருத்தொற்றுமை மீதிருக்கும் சர்ச்சைகளை அவர் வெளிப்படுத்துவதுடன், அதை தெளிவாகவும் முன்கொண்டு வருகிறார்.
அவரது சமீபத்திய கட்டுரையான “ட்ரூடெரிங்கின் உத்வேகம்" (The Spirit of Trudering) என்பதில், முனீச் புறநகர் ட்ரூடெரிங்கின் பீர் கூடாரமொன்றில் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் வழங்கிய உரையை பிஷ்ஷர் பாராட்டுகிறார். அப்பெண்மணி கூறுகையில், “நாம் மற்றவர்களைச் முழுமையாக சார்ந்திருக்கும் காலம், ஒரு விதத்தில், முடிந்துவிட்டது, ஆகவே ஐரோப்பியர்களாகிய நாம் உண்மையிலேயே நம் விதியை நமது சொந்த கரங்களில் எடுக்க வேண்டும்,” என்றார்.
பிஷ்ஷர் எல்லையற்ற உத்வேகத்தில் உள்ளார். “புனித ஆத்மாவினால் மேர்க்கெல் ஈர்க்கப்பட்டிருப்பாரோ", அல்லது ஒருவேளை "அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் கூடுதலான நேரம்" இருந்ததனால் இருக்குமோ?
மேர்க்கெலின் பீர் கூடார உரை பொதுவாக வெளியுறவு கொள்கையின் ஒரு திருப்புமுனைக்கு முன்னறிவிப்பாக—அதாவது அதன் இலட்சியங்களைச் சுதந்திரமாகவும் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராகவும் பின்தொடரும் வகையில், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய வல்லரசு கொள்கைக்கு ஆதரவாக அமெரிக்காவுடனான அரசியல் மற்றும் இராணுவ கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு முன்னறிவிப்பாக—புரிந்து கொள்ளப்பட்டது.
இவ்விதத்தில் தான் பிஷ்ஷரும் அந்த உரைக்கு பொருள்விளக்கம் அளிக்கிறார். ட்ரூடெரிங் உரையானது, “ஜேர்மனி ஒரு மூலோபாய மறுஅணிசேர்க்கையைப் பின்பற்றி, அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான கூட்டணியில் இருந்து விலகுவதை" அர்த்தப்படுத்துகிறது என்பதை அவர் மறுக்கிறார், ஆனால் பின்னர் பின்வரும் வாக்கியங்களில் துல்லியமாக இதை மட்டுமே உறுதிப்படுத்துகிறார்.
சான்சிலர் "அட்லாண்டிக்கிற்கு இடையிலான கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்கு" உட்படுத்தவில்லை என்று எழுதும் அவர், “அதற்கு பதிலாக அவர் ஒரு பலமான ஐரோப்பாவிற்கு அழைப்புவிடுப்பதாக,” கூறுகிறார். “சர்வதேச ஒழுங்கமைப்பில் அதன் தலைமையிடத்தை அமெரிக்கா தியாகம் செய்கிறதென்றால்,” வேறெந்த முன்னணி சக்தியும் அந்த இடத்தை ஏற்க முடியாது. அதற்கு பதிலாக, அது "குழப்பங்கள் நிறைந்த, ஒரு அதிகார வெற்றிடத்தை" உருவாக்குகிறது. இது, ஐரோப்பியர்களை "அவர்களின் நலன்களைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து வருவதற்கு" நிர்பந்திக்கும். “... ஆகவே மேர்க்கெலின் உரை முதலும் முக்கியமுமாக ஐரோப்பாவைப் பலப்படுத்துவது குறித்ததாகும்,” என்றார்.
பிஷ்ஷரின் கருத்துப்படி, பிரெஞ்சு ஜனாதிபதியாக இமானுவல் மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, “யூரோ மண்டலத்தை ஸ்திரப்படுத்த, பொருளாதார வளர்ச்சியை மீளமைக்க, ஒரு கூட்டு எல்லை படை மற்றும் அகதிகள் தொடர்பான ஒரு புதிய கொள்கையுடன் ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பலப்படுத்த", வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெளிநாடுகளிலும் மற்றும் உள்நாட்டிலும் அரசு நடவடிக்கையை ஆயுதமயப்படுத்த மேர்க்கெலுக்கு ஒரு பங்காளி கிடைத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் கூறுவது அனைத்துமே தவறில்லையென பிஷ்ஷர் நிறைவு செய்கிறார். “ஜேர்மனி, பொதுவாக ஐரோப்பா, அதன் சொந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கும்.” “நாம் அத்திட்டத்தைச் செயல்படுத்துகையில், உலகெங்கிலும் உள்ள பேராவல் கொண்ட ஜனநாயகவாதிகள் மற்றும் சர்வாதிகாரிகளின் அச்சுறுத்தும் கற்பனை பூதங்கள் நம் மீது பொறாமை கொள்ளும் வகையில், நாம் தாராளவாத மதிப்புகளை உறுதியாக பற்றியிருக்க வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
அமெரிக்காவுடன் தவிர்க்கவியலாமல் மோதலுக்குள் இட்டுச் செல்லும் ஒரு சுதந்திர ஐரோப்பிய வெளியுறவு கொள்கையைப் பிஷ்ஷர் இப்போது அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார், இதை அவர் மறுக்க முயன்றாலும் கூட இதை தான் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜேர்மன் வெளியுறவு கொள்கையில் மிகவும் நிலையான அட்லாண்டிசிசவாதிகளில் ஒருவராக பிஷ்ஷர் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளார். சமூக ஜனநாயக்கட்சி-பசுமை கட்சியின் கூட்டராங்கம் 2005 இல் குறைந்தபட்சம் முன்கூட்டியே தோல்வியடைந்தற்கு, வெளியுறவு மந்திரியாக பிஷ்ஷர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடன் நெருக்கமான அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவுகளைக் கொண்டிருந்த சான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடரின் (SPD) நோக்குநிலை உடன் உடன்படாமல் இருந்து மட்டும் காரணமல்ல.
மேர்க்கெலும், முன்னர் உறுதியாக அமெரிக்க-சார்பு போக்கையே ஆதரித்து வந்தார். 2003 இல், CDU தலைவராக, அப்பெண்மணி ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஈராக்கிய போரையும் கூட ஆதரித்தார், இதை வெளியுறவுத்துறை அமைச்சராக பிஷ்ஷர் நிராகரித்திருந்தார். இவ்விருவருமே இப்போது பலமாக அதிக ஆக்ரோஷமான ஐரோப்பிய வெளியுறவு கொள்கையை ஆதரிக்கிறார்கள் என்பது இதுவொரு அடிப்படையான அபிவிருத்தி என்பதையும், இதற்கு ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" கொள்கை வெறுமனே சந்தர்ப்பத்தை மட்டுமே வழங்கி உள்ளது என்பதையுமே எடுத்துக்காட்டுகிறது.
மேர்க்கெலும் பிஷ்ஷரும் அவர்களின் கொள்கைகளில் கூறுகின்றவாறு, இது "தாராளவாத மதிப்புகள்" குறித்ததோ, காலநிலை பாதுகாப்பு குறித்ததோ அல்லது ஏனைய முக்கிய விடயங்கள் பற்றியதோ கிடையாது, மாறாக அப்பட்டமாக பொருளாதார மற்றும் அதிகார-அரசியல் நலன்கள் சம்பந்தப்பட்டதாகும்.
ட்ரம்புடன் மேர்க்கெல் மோதலில் இறங்கிய நேட்டோ மற்றும் ஜி7 உச்சி மாநாடுகளுக்கும் மற்றும் ட்ரூடெரிங்கில் அவர் உரைக்கும் இடையே, மேர்க்கெல் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் சீனப் பிரதம மந்திரி லி கெக்கியாங்கைச் சந்தித்ததுடன், அவர்களுடன் அவர் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் கூட்டுறவுக்கு உடன்பாடு தெரிவித்தார்.
பிஷ்ஷரின் கருத்துரை பிரசுரமான போது, மேர்க்கெல், 18 மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றதற்குப் பின்னர் இருந்து 1.5 மில்லியன் ஆர்ஜென்டீனியர்களை வறுமைக்குள் தள்ளியுள்ள ஒரு செல்வந்த தொழில்முனைவரான ஆர்ஜென்டீனிய ஜனாதிபதி மவ்ரீசியோ மாக்ரி உடன் Buenos Aires இல் பேசிக் கொண்டிருந்தார். ட்ரம்பின் பாதுகாப்புவாத வர்த்தக கொள்கையில் இருந்து தப்பிப்பதற்கு தென் அமெரிக்காவுக்கு அவசரமாக புதிய வர்த்தக பங்காளிகள் அவசியப்படுகின்ற நிலையில், ஒரு செய்தி குறிப்பிட்டதைப் போல, “இந்த பங்காளிகளைச் சீனாவில் மட்டும் காண வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக" அவர் வியாபார பிரதிநிதிகளின் ஒரு மிகப்பெரும் பரிவாரத்துடன் பயணம் செய்திருந்தார்.
ஆர்ஜென்டினாவில் இருந்து, மெக்சிகோவிற்கு சென்ற மேர்க்கெல், அங்கே அதே காரணத்திற்காக ஜனாதிபதி Enrique Peña Nieto ஐ சந்தித்தார். இது ட்ரம்ப்-எதிர்ப்பு பயணம் என்றாகாது என்பதாக பேர்லினில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் "டொனால்ட் ட்ரம்பின் நீண்ட நிழல் சந்தேகத்திற்கிடமின்றி அவருடன் இருந்தது,” என்று Süddeutsche Zeitung எழுதியது.
ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகைக்கும் மற்றும் அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்குமான நிஜமான காரணம், முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழ்ந்த உலகளாவிய நெருக்கடியாகும். முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களுக்கு முன்னறிவிப்பாக இருந்தவற்றைப் போலவே, சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் செல்வாக்கிற்கான சண்டை மீண்டுமொருமுறை மோதல்களுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.
முன்னாள் அராஜகவாதியும் வீதி சண்டையாளருமான பிஷ்ஷர், தங்களின் அமைதிவாதத்தை நீண்டகாலத்திற்கு முன்னரே கைத்துறந்துவிட்ட செல்வசெழிப்பான நடுத்தர வர்க்கங்களின் பிரிவுகளுக்காக பேசுகிறார் மற்றும் இப்போது உத்வேகத்துடன் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை ஆதரித்து வருகிறார்.
1999 இல், யூகோஸ்லாவியாவை சீரழித்து பால்கன்களை பொருளாதாரரீதியில் நாசமாக்கிய போரை, அவர் "அவுஸ்விட்ச்"—அதாவது நாஜிக்களின் குற்றங்கள் தான் கொசொவோ மக்களின் படுகொலை என்று கூறப்பட்டதைத் தடுக்க ஜேர்மனியைப் பொறுப்பேற்க செய்தது என்ற நயவஞ்சக வாதத்தைக் கொண்டு நியாயப்படுத்தினார். இதில், கொசொவோ UCK போராளிகள் குழுக்களுடன் அவர் நெருக்கமாக வேலை செய்த நிலையில், அது தனது பங்கிற்கு படுகொலைகள் புரிந்ததுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளுடன் நெருக்கமாக தொடர்புபட்டிருந்தது. இப்போதோ அவர் ஜேர்மன் இராணுவவாதத்தின் அதிக தீவிரப்படலை "தாராளவாத மதிப்புகளை" காட்டி நியாயப்படுத்த முயன்று வருகிறார்.