ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Senator McCain solicits support in Australia for Trump’s removal

ட்ரம்ப் அகற்றப்படுவதற்கு செனட்டர் மெக்கெயின் ஆஸ்திரேலியாவில் ஆதரவு தேடுகிறார்

Andre Damon and David North
1 June 2017

“கடல் விளிம்பில், அரசியல் நின்றுவிடுகிறது” [அதாவது வெளியுறவு விவகாரங்களில் கட்சிபேதமின்றி ஐக்கியப்படவேண்டும்] என்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மிக அடிப்படையான விதிக்கான ஒரு சொல்வழக்காக இருக்கிறது.

1947 இல் பனிப் போரின் தொடக்கத்தில் குடியரசுக் கட்சியின் செனட்டரான ஆர்தர் எச்.வாண்டன்பேர்க் மூலம் உருவாக்கப்பட்டதான இந்த சொற்பிரயோகம், வெளியுறவுக் கொள்கை குறித்து உள்நாட்டில் என்ன பிரச்சினைகள் இருந்தாலும், அமெரிக்க அரசியல் ஆளும் ஸ்தாபகம் உலகத்திற்கு முன்னால் வைக்கின்ற ஐக்கிய முன்னணிக்கு அவை கீழ்ப்படியச் செய்யப்பட்டாக வேண்டும் என்ற கருத்தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவின் எந்த ஒரு அரசியல் தலைவரும் எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசின் தலைவரைக் கண்டனம் செய்யவே கூடாது.

இந்த கோட்பாட்டை செவ்வாய்கிழமையன்று அரிசோனா செனட்டர் ஜோன் மெக்கெயின் உடைத்தெறிந்தார். ஆஸ்திரேலியாவில் இரண்டு முன்னாள் பிரதமர்கள் உள்ளிட உயர்நிலை அரசு மற்றும் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய மெக்கெயின் டொனால்ட் ட்ரம்ப் மீது ஒரு உலுக்கும் குற்றப்பத்திரிகையை வாசித்ததோடு அவரது நிர்வாகத்தை மறுதலிக்க ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அழைப்பும் கூட விடுத்தார்.

“ஜனாதிபதி ட்ரம்ப்பின் நடவடிக்கைகளும் அறிக்கைகளும் அமெரிக்காவின் நண்பர்களை அமைதியிழக்கச் செய்திருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன்” என்றார் அவர். “பல அமெரிக்கர்களையும் கூட இவை அமைதியிழக்கச் செய்திருக்கின்றன. உலகில் அமெரிக்கா என்ன மாதிரியான ஒரு பாத்திரத்தை ஆற்ற வேண்டும் என்பது குறித்து எனது நாட்டில் உண்மையானதொரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், இந்த விவாதம் எத்தகைய வடிவத்தை எடுக்கும் என்பது எனக்குத் தெரியாது."

“நான் என்ன நம்புகிறேன் என்றால், நான் மிகைப்படுத்திக் கூறுவதாக நான் நினைக்கவில்லை, உலகத்தின் எதிர்காலம் ஒரு பாரிய அளவிற்கு, அமெரிக்காவில் இந்த விவாதம் எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.”

ஒருகணம் இதில் கலந்துகொண்டவர்களை தலைகீழாய் மாற்றி வைக்கப்படுவதாய் கற்பனை செய்து பாருங்கள். ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் ஒரு உயர்நிலை அதிகாரி அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்க அதிகாரிகள் முன்பாக ஆஸ்திரேலிய பிரதமரை கண்டனம் செய்கிறார் என்றால், அவர் தனது சொந்த அரசாங்கத்தின் தலைவரை அகற்றுவதற்கு ஆதரவு தேடுவதாகத் தானே முறையாய் பொருள்கொள்ளப்படும்.

ஒரு மூத்த செனட்டராய், குடியரசுக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளராய், சக்திவாய்ந்த செனட் இராணுவப் படை குழுவின் தலைவராய், ஒரு அட்மிரலின் மகனாய் அத்துடன் அவரே முன்னாள் இராணுவ அதிகாரியாக இராணுவத்துடன் எண்ணற்ற தனிப்பட்ட தொடர்புகள் கொண்டவராய், மெக்கெயின் அமெரிக்க அரசியலின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராய் பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் தொடர்ந்தார்: “ஜனாதிபதி ட்ரம்ப்பின் கீழ் அமெரிக்கா எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது குறித்து உங்களில் பலருக்கும் நிறைய கேள்விகள் இருக்கும் என்பதை நான் அறிவேன். வெளிப்படையாக சொன்னால், பல அமெரிக்கர்களுக்கும் அந்த கேள்விகள் இருக்கின்றன... ஆயினும் ஜிம் மாட்டிஸ், எச்.ஆர்.மெக்மாஸ்டர், ஜோன் கெல்லி, மைக் போம்பியோ, டான் கோட்ஸ், ரெக்ஸ் டில்லர்சன் என பல கண்ணியமான, தகமைவாய்ந்த மனிதர்களை அது பெற்றிருக்கிறது, அவர்கள் உங்கள் ஆதரவுக்கு தகுதியானவர்கள், அது தேவைப்படுபவர்கள்.”

ஜோன் மெக்கெயின் குறிப்பிட்ட இந்த மனிதர்களில் சிஐஏ இயக்குநர் மைக் போம்பியோ, தேசிய உளவு முகமை இயக்குநர் டான் கோட்ஸ் மற்றும் எக்ஸான் மொபில் தலைமை நிர்வாக இயக்குநரும் இப்போது வெளியுறவுச் செயலருமான ரெக்ஸ் டிலர்சன் ஆகியோருடன் பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எச்.ஆர்.மக்மாஸ்டர் மற்றும் தாயகப் பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி ஆகிய மூன்று ஜெனரல்களும் இடம்பெற்றுள்ளனர். உதவி ஜனாதிபதி மைக் பென்ஸ் இனை மெக்கெயின் இதில் சேர்த்துக்கொள்ளவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது சொந்தக் கட்சியின் தலைவரை குறித்து மெக்கெயின் வெளிப்படையாக கூறுவதே இதுவென்றால், தனிப்பட்ட முறையில் அவர் எவ்வளவு கூறிக் கொண்டிருப்பார்? அவர் பேச்சை ஆரம்பிக்கையில், முந்தைய பல நாட்களின் சமயத்தில் “பிரதமர் டர்ன்புல் மற்றும் அவரது குழுவினர் அத்துடன் எதிர்க்கட்சி தலைவர்கள்” மற்றும் “ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள், நாடாளுமன்றவாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள்” ஆகியோரை அவர் சந்தித்ததாக குறிப்பிட்டார். அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் படையின் அட்மிரல்கள் மற்றும் தளபதிகளுடனும் அவர் பேசியிருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது.

ஆஸ்திரேலியாவை மெக்கெயின் தேர்ந்தெடுத்தது ஒரு தற்செயலான விடயம் அல்ல. அமெரிக்கா சீனாவுடன் தனது மோதலை தீவிரப்படுத்திக் கொண்டிருப்பதோடு வட கொரியாவுடன் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. ஆசிய/பசிபிக் அரங்கில் கட்டவிழும் மோதலில் ஒரு முக்கியமான மூலோபாய கூட்டாளியாக அது ஆஸ்திரேலியாவை பார்க்கிறது. 1975 இல் பிரதமர் கஃப் விட்லம் (Gough Whitlam) அகற்றப்பட்டது 2010 இல் கெவின் ரூட் அகற்றப்பட்டது உள்ளிட ஆஸ்திரேலிய அரசியலின் ஒவ்வொரு அம்சத்திலுமே அமெரிக்கா ஆழமாக தொடர்புபட்டுள்ளது.

“ஆகவே, அமெரிக்காவின் தீர்ப்பு என்ன என்பதுதான் உண்மையில் கேள்வியாக நிற்கிறது” என்று ஒப்புக் கொண்ட மெக்கெயின், “விமர்சிக்க நிறைய இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன்” என்று ஒப்புக்கொண்டார். அதன்பின் அவர் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பக்கமாய் நின்று கொண்டார்.

“அமெரிக்கா பின்வாங்கிக் கொண்டாலும் கூட பசிபிக் கடந்த கூட்டு [TPP] விடயத்தில் முன்செல்வது தொடர்பாக ஆஸ்திரேலியா இப்போது ஜப்பான் மற்றும் மற்ற நாடுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். அதை நான் உறுதியாக ஆதரிக்கவும் செய்கிறேன்” என்றார் அவர். “ஆகவே அதைத் தொடர்ந்து செய்யுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்துவேன். வருங்காலத்தில் ஏதோவொரு நாள், மாறுபட்ட சூழ்நிலைகளின் கீழ், அமெரிக்கா உங்களுடன் இணைவதற்கு தீர்மானிக்கும் என்று நான் நம்புகிறேன்.”

வெறுமனே ஒரு தற்செயலாக நிராகரிக்கப்பட முடியாத விதமாய், அடுத்தநாளே நியூயோர்க் டைம்ஸில் வெளியான ஒரு தலையங்கம் கிட்டத்தட்ட இதேபோன்றதொரு மொழியை பயன்படுத்தியிருந்தது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பொறிவு குறித்து புலம்பியிருந்த டைம்ஸ், ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெலும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான அரசியல் பரந்ததரப்பை தொடக்கி சில நாட்களே ஆகியிருந்த நிலையில் அவர்களை பாராட்டியது.

ைம்ஸ் திகிலூட்டும் விதமாக நிறைவுசெய்தது, “குறைந்தபட்சம் அமெரிக்கத் தலைமையின் தேவைக்கு திருவாளர் ட்ரம்ப் விழித்துக் கொள்ளும் வரையோ அல்லது இன்னொரு புத்திசாலித்தனமான ஜனாதிபதியால் அவர் பிரதியீடு செய்யப்படும் வரையோ நேட்டோவை உயிர்ப்புடனும் பொருத்தமானதாகவும் பராமரிப்பது திருமதி.மேர்க்கெல் மற்றும் திரு. மக்ரோனின் கைகளில் சென்று விட்டதாக இப்போதைக்கு தெரிகிறது.”

மெக்கெயினும் டைம்ஸும் யாருக்கு அழைப்புவிடுகின்றார்களோ அவர்களுக்கு இந்த மொழியின் அர்த்தம் நன்கு தெரியும்: அமெரிக்க அரசின் மிக உயர் மட்டத்தில் கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த மட்டத்திற்கான அரசியல் பிரிவினை மிகக் கூர்மையான சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ் தான் எழ முடியும். ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் அமெரிக்காவின் உலகளாவிய அதிகாரம் மற்றும் மேலாதிக்க நலன்களில் இருந்தான ஒரு முழுமையான முறிவுக்கு அச்சுறுத்துகின்றன என்று அமெரிக்க அரசில் இருக்கும் சக்திவாய்ந்த கன்னைகள் நம்புகின்றன. அதேசமயத்தில், அமெரிக்காவிற்குள்ளாக வெடிப்பான சமூக நிலைகள் பெருகிச் செல்வது குறித்தும், இந்த முரண்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கான ஆளும் உயரடுக்கின் திறத்திற்கு அமெரிக்காவின் உலகளாவிய கௌரவம் தரைமட்டமாக வீழ்ச்சி காண்பதன் மூலம் மரணகரமாக குழிபறிக்கப்படுகிறது என்ற உண்மையை குறித்தும் அந்தக் கன்னைகள் கவலை கொண்டிருக்கின்றன.

அமெரிக்க அரசை பிளந்து கொண்டிருக்கும் மோதலானது, சதிகளில் ஈடுபட்டுள்ள அத்துடன் தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அரசியல்சட்டத்தை மீறிய வழிமுறைகளை பயன்படுத்துவதற்கும் தயாராய் இருக்கின்ற இரண்டு பிற்போக்கான கன்னைகளுக்கு இடையிலானதாக இருக்கிறது.

இத்தகையதொரு சூழ்நிலை அரசியல் காட்சியில் தொழிலாள வர்க்கம் உள்ளே வருவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது, ஆளும் உயரடுக்கின் இரண்டு போட்டி வலது-சாரி பிரிவுகளுக்கு இடையிலான இந்தப் போரில் அது வேடிக்கை பார்ப்பவராகவே இருந்து கொண்டிருக்கவும் முடியாது, அவற்றில் ஏதேனும் ஒன்றின் பக்கமாக செல்லவும் முடியாது. மெக்கெயினும் அவருடைய ஒத்துழைப்பாளர்களும் ஏகாதிபத்தியவாதிகளின் பல்வேறு குழுக்களின் மத்தியில் கூட்டணிகளை தேடுவதைப் போல, அமெரிக்க தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கூட்டாளிகளை தேட வேண்டும் என்பதோடு வேலைகளுக்காகவும், போருக்கு முடிவு கட்டுவதற்காகவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தும் தமது சொந்த புரட்சிகர மற்றும் சோசலிச மூலோபாயத்தை பின்பற்றியாக வேண்டும்.