ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Britain’s crisis election and the tasks facing the working class

பிரிட்டனின் நெருக்கடி தேர்தலும், தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் பணிகளும்

Chris Marsden
7 June 2017

வேறு எது மாதிரியும் அல்லாத ஒரு தேர்தல் பிரச்சாரம் முடிந்து, பிரிட்டன் நாளை தேர்தலைச் சந்திக்கிறது. பழமைவாத கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமென அனுமானிக்கப்பட்ட நிலையிலிருந்து, ஒரு சில வாரகால இடைவெளியில், ஒரு சிறிய பெரும்பான்மை அல்லது ஒரு தொங்கு பாராளுமன்றம் அல்லது தொழிற்கட்சியின் வெற்றியே கூட ஏற்படலாமென ஊகிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இரண்டு கோரமான பயங்கரவாத தாக்குதல்கள் டஜன் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்துள்ளதுடன், இன்னும் பலரை ஊனமாக்கி உள்ளன. இரகசிய அவசர நடவடிக்கைகளின் கீழ் முக்கிய மூலோபாய இடங்களுக்கு இராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி தெரேசா மே யாருக்காக சேவையாற்றுகிறாரோ அந்த நிதியியல் செல்வந்த தட்டும் இராணுவ-உளவுத்துறை எந்திரமும் இரண்டாண்டுகளில் அடுத்த தேர்தல் வருவதற்குள் மிகப்பெரிய அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்பு இருக்கலாம் என்ற நிலையில், அதுவரை காத்திருக்க முடியாதென அவை முடிவெடுத்ததால், தெரேசா மே முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்புவிடுத்தார். அவற்றால் இரண்டு மாதங்கள் கூட காத்திருக்க முடியாதளவிற்கு நிலைமை மாற்றமடைந்துள்ளது.

நடைமுறையளவில் உள்ள நாடாளுமன்ற சர்வாதிகாரத்தைப் பாதுகாக்கவும், அதிகரித்த சிக்கன நடவடிக்கைகளுக்கான மற்றும் சிரியாவிலும் ஏனைய இடங்களிலும் இராணுவ தலையீட்டுக்கான திட்டநிரலைத் திணிப்பதற்கும், ஜெர்மி கோர்பினுக்கு எதிரான ஒரு மூர்க்கமான ஊடக பிரச்சாரத்தையும் மற்றும் தொழிற் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்களையும் பயன்படுத்தலாமென மே நம்பியிருந்தார். ஆனால் அதற்கு மாறாக, கோர்பின் மற்றும் சிக்கனத் திட்டத்தை நிறுத்துவதற்கான அவர் வாக்குறுதிகளுக்கு ஆதரவாக அணிதிரண்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து, டோரிக்கள் மீதும் மற்றும் அவர்களுக்காக நிற்கும் அனைவர் மீதும் பெரும் வெறுப்பை தேர்தல் பிரச்சாரம் கண்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான மே இன் ஏமாற்றத்தில் முடிந்த முயற்சியானது, அவர் முகத்திற்கு முன்னாலேயே சிதறிப் போனது. MI5 உளவுத்துறையும் பொலிஸூம் மான்செஸ்டர் குண்டுதாரி சல்மான் அபேடி மற்றும் இலண்டன் கொலைகாரர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இருவரை அறிந்திருந்தனர் என்று அதிகளவில் வெளியான ஆதாரங்கள், லிபியா, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்காவுடன் சேர்ந்து பிரிட்டன் தொடுத்த போர்களில் பினாமி சக்திகளாக பயன்படுத்துவதற்காக எண்ணற்ற இஸ்லாமியவாதிகள் அவற்றின் பாதுகாக்கப்பட்ட உடைமைகளாக இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக உள்ளன.

"கடினமான பிரிட்டன் வெளியேற்றம்" என்ற அச்சுறுத்தல்கள் மீது மே அவர் எதிர்காலத்தை பணயம் வைத்திருந்த நிலையில், அந்த அச்சுறுத்தல்களோ வேறுவிதமாக பெருவணிகங்கள் மற்றும் இலண்டன் நகரின் பெரும்பான்மை பிரிவுகளை அன்னியப்படுத்தி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்குப் பிந்தைய அதனுடான வர்த்தகம் 40 சதவீதம் அளவிற்கும், அன்னிய முதலீடு 20 சதவீத அளவிற்கும் வீழ்ச்சி அடையக்கூடும் என்ற மதிப்பீடுகள் நிதியியல் பேரழிவுக்கான எச்சரிக்கையாக உள்ளன.

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விருப்பத்திற்கெதிராக ட்ரம்ப் நிர்வாகத்தை சார்ந்திருப்பதற்கான அவர் திட்டம் எதிர்விளைவை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதற்குப் பிந்தைய பிரிட்டனையும் இனியும் கூட்டாளிகளாக நம்ப முடியாது என்று அறிவித்ததே, ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" அச்சுறுத்தல்களுக்கு ஜேர்மனியின் அங்கேலா மேர்க்கெலின் விடையிறுப்பாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே அதிகரித்து வரும் உலகளாவிய பதட்டங்களின் முன்னால், அதன் சொந்த செல்வாக்கை விரிவாக்குவதற்காக அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார பலத்தின் மீது தங்கியுள்ள பிரிட்டனின் ஒட்டுமொத்த வெளியுறவு கொள்கை மூலோபாயமும் பொறிந்து போயுள்ளது.

எவ்வாறிருப்பினும், மே இன் சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போர் கொள்கைகளுக்கு கோர்பின் தலைமையிலான தொழிற் கட்சி அரசாங்கம் எந்த நிஜமான மாற்றீட்டையும் வழங்கவில்லை என்பதே பட்டவர்த்தனமான உண்மையாக உள்ளது.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் டோரிக்களின் தோல்வியை விரும்புவதால், தேசிய மருத்துவ சேவைப் பாதுகாப்பு (NHS), குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல் மற்றும் புதிய வீடுகள் கட்டித் தருவதாக கோர்பின் கூறிய வாக்குறுதிகளை அவர் மதிப்பார் என்ற நம்பிக்கையில், அவர் கட்சிக்குள் பிளேயரைட்களின் முன்னால் அவர் தொடர்ந்து பின்வாங்குவதையும் தொழிலாளர்கள் மன்னிக்க தயாராக இருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இராணுவ திட்டநிரலை ஏற்றுக்கொண்டு, குறைந்தபட்ச சமூக சீர்திருத்தங்களை சரிசெய்வதற்கான அவரது தேர்தல் அறிக்கையின் முயற்சிகள் வட்டத்தை சதுரமாக்குவதாகும்.

20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியுடன் சம்பந்தப்பட்ட பாசிசம் மற்றும் போரின் சகல கொடூரங்களையும் மீண்டும் உருவாக்கி வருகின்ற உலக முதலாளித்துவம், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அதன் ஆழ்ந்த நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கையில், பிரிட்டன் பொருளாதாரரீதியிலும், அரசியல்ரீதியிலும் மற்றும் சமூகரீதியிலும் நிலைகுலைந்து வருகிறது. வர்த்தக போர் மற்றும் இராணுவ மோதல் நிலைமைகளின் கீழ் பிரிட்டனின் "உலகளாவிய போட்டித்தன்மையை" உறுதிப்படுத்துவதற்கான முயற்சியானது, வேலைகள், கூலிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் அழிப்பைத் தீவிரப்படுத்த கோருகிறது.

இது தொழிலாள வர்க்கத்திற்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளியை ஒரு சமூக வெடிப்பு புள்ளிக்கு ஆழப்படுத்தி வருகிறது. “ஒரு சிலருக்கு அல்ல பலருக்கும் … நியாயமாக" என்ற கோர்பின் முறையீட்டை கொண்டு இணங்குவிக்க முடியாதளவிற்கு, செல்வந்த தட்டிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான நலன்களின் மோதல் கூர்மையாக உள்ளது. “வணிகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பங்காண்மையில்" அரசாங்கம் "இயங்குவதன் மூலமாக" “தேசப்பற்றுவாத தொழில்துறை" வடிவத்தை உருவாக்குவதற்கான தொழிற் கட்சியின் தேசியவாத கொள்கையின் அர்த்தம் என்னவென்றால், தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை விலையாக கொடுக்கச் செய்து மே பின்பற்றிய வர்த்தக போர் திட்டநிரலுக்கே அவர்களை அடிபணிய செய்வதாகும்.

தொழிற் கட்சியை இடதை நோக்கி நகர்த்தும் இலட்சியத்துடன் நூறாயிரக் கணக்கானவர்களை அக்கட்சிக்குள் பெருக்கெடுத்து, கட்சி தலைவராக கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏறத்தாழ இப்போது இரண்டாண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கோர்பின் தன்னை மேலும் மேலும் வலதுக்கு நகர்த்தியுள்ளார்.

அவரை நீக்க வேண்டுமென கோரிய வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்க அவர் எதிர்த்தமை, சிரியாவில் இராணுவ நடவடிக்கை மீது சுதந்திர வாக்கெடுப்புக்கு உடன்பட்டமை மற்றும் முப்படையிலும் அணுஆயுதங்களைப் புதுப்பிப்பதற்கு உடன்பட்டமை, பின்னர் இந்த பின்வாங்கல்களை அவர் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கியமை என இவையனைத்தும் அவர் தலைமையின் கீழ் ஒரு தொழிற் கட்சி அரசாங்கம் வகிக்கக்கூடிய நிஜமான பாத்திரத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

மான்செஸ்டர் மற்றும் இலண்டன் பயங்கரவாத தாக்குதல்களுக்கு கோர்பின் எவ்வாறு விடையிறுத்தார் என்பதிலிருந்து ஒரு கூர்மையான எச்சரிக்கை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

நேட்டோ மீதான கோர்பினின் முந்தைய விமர்சன அறிக்கைகளின் அடிப்படையிலும் மற்றும் அணுஆயுதங்களை பயன்படுத்த அவர் உத்தரவிடுவார் என்பதை அவர் ஆணித்தரமாக கூற மறுக்கிறார் என்பதன் அடிப்படையிலும் அவரை தேசிய பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தலாகவும், பயங்கரவாதம் மீது அவர் மென்மையாக இருக்கிறார் என்பதாகவும் சித்தரிப்பதற்கான பழமைவாதிகளின் முயற்சிகளை அவர்கள் மீளவலியுறுத்துவதன் மூலமாக, இத்தேர்தலை ஜெயிக்க அவர்கள் அத்தாக்குதல்களைப் பயன்படுத்த முனைந்து வருகின்றனர். அவர்கள் ஜூன் 8 க்குப் பின்னர் கூர்மையாக அரசு ஒடுக்குமுறைக்குத் திரும்ப தயாரிப்பு செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் வாழும் இடங்கள் "தீவிரவாதத்திற்கான" “பாதுகாப்பு இடங்களாக" இல்லாமல் இருப்பதற்காக, இணைய தணிக்கை மற்றும் பொலிஸ் நடவடிக்கை உள்ளடங்கலாக "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கான" மே இன் நான்கு-அம்ச மூலோபாயமானது, இப்போதிருக்கும் வேலைநிறுத்த உரிமையை அதிகமாக மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளோடு சேர்ந்து, அரசியல் அதிருப்தி மீதான ஒடுக்குமுறைக்கும் பயன்படுத்தப்படும். அதன் சர்வாதிகார கருப்பொருள் அவரது அறிக்கையால் எடுத்துக்காட்டப்பட்டது: “அதை செய்ய மனித உரிமைகள் சட்டங்கள் நம்மை தடுக்கிறதென்றால், அதை செய்வதற்காக அத்தகைய சட்டங்களையே நாங்கள் மாற்றுவோம்,” என்றார்.

ஈராக் மற்றும் சிரியாவில் இராணுவ தலையீட்டை அதிகரிப்பதற்கான அவர் வாக்குறுதிகளை மீளவலியுறுத்த, அவர் இலண்டன் தாக்குதல்கள் மீதான அவர் உரையைப் பயன்படுத்தினார்.

இவை அனைத்தின் மீதும் கோர்பின் வாய்மூடி மௌனியாக உள்ளார். பயங்கரவாத தாக்குதல்கள், மத்திய கிழக்கில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான தலையீடுகளின் பின்விளைவு என்பதை விளங்கப்படுத்துவதற்கு பதிலாக, அவர் பொலிஸ் எண்ணிக்கையைக் குறைத்ததற்காக மே ஐ கண்டிப்பதை தேர்ந்தெடுக்கிறார், அதேவேளையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் "என்ன தேவைப்பட்டாலும்" அதை செய்ய அவரே தயாராக இருப்பதாகவும் அறிவிக்கிறார்.

இவ்விதத்தில், அவர் சமூக மாற்றத்திற்கான ஒரு வேட்பாளராக அல்ல, மாறாக சட்டம் ஒழுங்கிற்கான ஒரு வேட்பாளராக அவரை நிலைநிறுத்திக் கொள்கிறார். ஆளும் உயரடுக்கு அவர் அரசாங்கத்திற்காக பயப்பட வேண்டியதில்லை என்ற அவரின் வாக்குறுதியானது, அவரின் "இடது" வாய்சவடால், தொழிற்கட்சி பதவியேற்கும் வரை கூட அல்ல, வெறுமனே ஒரு தேர்தல் பிரச்சாரம் வரை மட்டுமே உயிர்பிழைத்துள்ளது என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

பிரிட்டனின் போலி இடது குழுக்கள், தனிநபராக கோர்பின் மீதான ஜனரஞ்சக பிரமைகளைச் சாதகமாக்கி, எல்லா விதத்திலும் தொழிற் கட்சி மீதான தொழிலாளர்களின் ஆழ்ந்த அவநம்பிக்கையை கடந்து செல்ல முயற்சிக்கின்றன. சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) எழுதுகிறது, “தொழிற் கட்சியைத் தொடர்ந்து வலது நோக்கி நகர்த்த முயற்சிப்பவர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை. என்றாலும், தொழிற் கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களிப்பது மட்டுமே கோர்பினுக்கான ஆதரவைக் காட்டுவதற்கு ஒரே வழியாக உள்ளது.” சோசலிஸ்ட் கட்சியோ, தொழிற் கட்சி மீதான எல்லா குறிப்புகளையும் உதறிவிட்டு, சர்வசாதாரணமாக "கோர்பின் தலைமையிலான அரசாங்கத்திற்கு" அழைப்புவிடுக்கிறது.

ஒரு புதிய தலைவரை அமர்த்துவதன் மூலமாக தொழிற் கட்சியை மாற்றிவிட முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) வலியுறுத்தலை சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. தொழிற் கட்சியானது டோனி பிளேயர் மற்றும் கோர்டன் பிரௌனின் கீழ் என்னவாக இருந்ததோ அதே கட்சியாக தான் இன்றும் இருக்கிறது.

ஜூன் 8 தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம், உலகெங்கிலுமான அதன் சகோதர சகோதரிகளைப் போலவே, சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்குள் இறங்குவதற்கு எதிராகவும் மற்றும் முன்பினும் அதிகமாக அதிகரித்துவரும் போர் அபாயத்திற்கு எதிராகவும் ஒரு வாழ்வா சாவா போராட்டத்தை முகங்கொடுக்கிறது. ஒரு புதிய, புரட்சிகர சர்வதேசவாத சோசலிச முன்னோக்கை ஏற்பது மட்டுமே முன்னிருக்கும் ஒரே வழியாகும். சோசலிச சமத்துவக் கட்சியில் (SEP) இணைந்து, தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமையைக் கட்டமைப்பதே மிகவும் முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னால் இருக்கும் பணியாக உள்ளது.