Print Version|Feedback
Germany turns to Asia
ஜேர்மனி ஆசியாவை நோக்கி திரும்புகிறது
By Johannes Stern
1 June 2017
அமெரிக்கா இனியும் ஒரு நம்பகமான கூட்டாளி கிடையாது மற்றும் விடயங்களை ஐரோப்பா அதன் சொந்த கரங்களில் எடுக்க வேண்டியுள்ளது என்று ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிறன்று பவேரிய பீர் கூடாரம் ஒன்றில் வழங்கிய உரையில் அறிவித்து, கடந்த வாரம் நேட்டோ மற்றும் ஜி7 நாடுகளது உச்சிமாநாட்டில் வெளிப்பட்ட அட்லாண்டிக் கடந்த நாடுகளின் உறவுகளில் ஏற்பட்டுள்ள வரலாற்று நெருக்கடியை வெளிப்படையான வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். இந்த நோக்குநிலையின் ஒரு அம்சத்தை, ஆசியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் பேர்லினின் திட்டமிட்ட விரிவாக்கத்தில் பார்க்கலாம்.
புதனன்று மாலை பேர்லின் வந்தடைந்த சீன பிரதம மந்திரி லி கெக்கியாங், சான்சிலர் அலுவலகத்திற்கு வெளியே இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அந்த வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மேர்க்கெல் மற்றும் பல அமைச்சர்களுடன் "வெளியுறவு மற்றும் பொருளாதார கொள்கை பிரச்சினைகள் குறித்த" ஆரம்ப விவாதங்கள் நடந்தன. வெளியுறவு அமைச்சர் சிக்மார் காப்ரியேல், நிதி அமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள மற்றும் பொருளாதார அமைச்சர் பிறிகிட்ட ஷிப்பிரஸ் ஆகியோரும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜேர்மன் அரசு வலைத் தள தகவல்களின்படி, “தனிப்பட்ட விவாதங்களுக்காக" மேர்க்கெல் மற்றும் லி இன்று மீண்டும் சந்திப்பார்கள். பல இருதரப்பு உடன்படிக்கைகள் கையெழுத்தாகும், ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் ஆரம்பத்தில் நடக்கவுள்ள ஹம்பேர்க் ஜி20 உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொள்வாரென எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதும் மேர்க்கெல்-லி இடையே விவாதிக்கப்பட உள்ள பிரச்சினைகளில் உள்ளது.
சீனாவுடனான ஜேர்மனியின் பொருளாதார உறவுகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் உள்ள வேறெந்த நாட்டையும் விட அதிகளவில் பரந்துள்ளன. 2011 இல் இருந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே வழமையான அரச மட்டத்திலான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை முந்தி, 170 பில்லியன் யூரோ மொத்த வர்த்தகத்துடன் சீனா தான் ஜேர்மனியின் மிக முக்கிய வர்த்தக பங்காளியாக இருந்தது.
கூட்டுறவு இப்போது ஆழமாக்கப்பட உள்ளது. பேர்லினுக்கு லி கெக்கியாங் வருவதற்கு முன்னதாக ஜேர்மன் வங்கி (Deutsche Bank) அறிவிக்கையில், அடுத்த ஐந்தாண்டுகளில் சீன அபிவிருத்தி வங்கியுடன் சேர்ந்து கூட்டாக 3 பில்லியன் யூரோவுடன் “புதிய பட்டுச்சாலை" முனைவின் பாகமாக, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்க அது உத்தேசிப்பதாக தெரிவித்தது. சீன அரசின் "ஒரே இணைப்பு, ஒரே பாதை" மூலோபாயம் வரலாற்றுரீதியில் மத்திய காலகட்டத்தின் பட்டுச்சாலையை அடிப்படையாக கொண்டுள்ளது. அது சீனாவின் பிரதான பொருளாதார மையங்களை ஜேர்மனியுடன் இணைக்க துறைமுகங்கள், இரயில்வே மற்றும் சாலைகளை தொடர்ச்சியாக இணைத்து கட்டமைக்கும் திட்டங்களை உள்ளடக்கி உள்ளது.
இவ்வார தொடக்கத்தில், ஜேர்மன் அரசாங்கம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியாவுடன் பல பில்லியன் யூரோ வளர்ச்சி திட்டங்களுக்கு உடன்பட்டது. இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியும் மற்றும் மேர்க்கெலும் நான்காவது ஜேர்மன்-இந்திய அரசு ஆலோசனையின் கட்டமைப்பிற்குள் இந்தியாவுக்கு "ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் யூரோ" மதிப்பு அபிவிருத்திக்கான முதலீட்டினை செயல்படுத்த உடன்பட்டனர்.
இந்தியாவின் உள்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கான அதன் பிரதான தேவையைக் குறித்து மோடி பேசினார். ஏனைய விடயங்களோடு, “சாலைகள், இரயில்வே, படைத்துறைசாரா விமானப் போக்குவரத்து மற்றும் நவீன தொலைதொடர்பு தொழில்நுட்பம்" ஆகியவையும் அங்கே அவசியப்படுகின்றன. இந்த துறைகளில் அனைத்திலும் ஜேர்மன் பொருளாதார நிபுணத்துவத்துடன் இந்தியா இலாபமடைய விரும்புவதாகவும் அவர் சேர்த்துக் கொண்டார். “நாம் ஒருவருக்கேற்ற ஒருவராக உருவாக்கப்பட்டிருப்பதை போலுள்ளது,” என்று இந்திய பிரதம மந்திரி குறிப்பிட்டார்.
சுமார் 17 பில்லியன் யூரோ மொத்த வர்த்தகத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஏற்கனவே ஜேர்மனி தான் இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக பங்காளியாக உள்ளது. ஆனால் ஏற்றுமதி சார்ந்த ஜேர்மன் பொருளாதாரம் வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் அதிகமானதை எதிர்பார்க்கிறது. “இந்தியாவின் 'இந்தியாவில் தயாரியுங்கள்' திட்டமும் மற்றும் இந்திய அரசாங்கத்தின் எண்ணற்ற பொருளாதார சீர்திருத்தங்களும் முதலீட்டிற்கான புதிய தூண்டுதல்களை உருவாக்கி உள்ளதாக" மத்திய-ரக வியாபாரங்களின் கூட்டமைப்பு தலைவர் மரியோ ஓஹோவென் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
மோடி மற்றும் மேர்க்கெலுடன் சேர்ந்து, அந்தந்த துறைசார் அமைச்சர்களும் விவாதங்களில் பங்கெடுத்திருந்தனர். ஜேர்மன் தரப்பில், வெளியுறவு, பொருளாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி அமைச்சகங்கள் பிரதிநிதித்துவம் செய்தன. ஜேர்மன் அரசு தகவல்களின்படி, இருதரப்பு பிரச்சினைகளுடன் சேர்ந்து, “உலகளாவிய ஒழுங்கமைப்பை உருவாக்குவதும்" கவனத்தின் மையத்தில் இருந்தது.
மோடி மற்றும் லி உடனான சந்திப்புகள் சில காலத்திற்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தன. இவை அட்லாண்ட்டிக் கடந்த நாடுகளது உறவுகளில் அதிகரித்து வரும் பிளவுடன் பிணைந்த ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஒரு பரந்த மறுநோக்குநிலையின் பாகமாகும். டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர் உடனடியாக, காப்ரியேல் அறிவிக்கையில், "அமெரிக்கா உருவாக்கும் வெற்றிடத்தை பயன்படுத்த" ஜேர்மன் மற்றும் ஐரோப்பாவின் ஆசியாவிற்கான மூலோபாயம் அபிவிருத்தி செய்யப்படுமென அறிவித்திருந்தார்.
காப்ரியேல் பின்னர் மார்ச் 24 அன்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ஜேர்மனியின் "ஆசியாவை நோக்கிய கொள்கை" மற்றும் "புதிய ஆசிய மற்றும் பசிபிக் துறையின் ஸ்தாபகத்தை" உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அவர் வெளியுறவுத்துறை அமைச்சக பத்திரிகை குறிப்பில் தெரிவித்தார்: “சர்வதேச அரசியலின் பல பகுதிகளில், நாம் இப்போது நெருக்கடிகளையும், கொந்தளிப்பு மற்றும் புதிய இயக்கவியலையும் அனுபவித்து வருகிறோம். உலகம் புதிதாக அளவிடப்பட வேண்டுமென எவரும் உணர்கின்றனர் — ஆனால் ஒவ்வொருவரும் அவரவரின் சொந்த அளவுகோலை பயன்படுத்துகின்றனர். ஒரு விடயம் தெளிவாகிறது: ஆசியாவில் எழுச்சிபெற்று வரும் நாடுகள் உலகின் இந்த புதிய அளவீட்டில் ஒரு முக்கிய இடத்தை பெறும்.”
காப்ரியேல் தகவலின்படி, "ஆசியாவுடன் உறவுகளை ஆழப்படுத்தவும் மற்றும் 4 பில்லியன் மக்களுடன் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளின் இந்த பகுதிக்கு நீதி கிடைக்குமாறு செய்வதற்காக இன்னும் அதிகமாக அவற்றை மூலோபாயரீதியில் ஒழுங்கமைக்கவும்" ஜேர்மனிக்கு அவசியமாகிறது. “ஆகவே சிறந்த ஒருங்கிணைப்புக்கும் மற்றும் இன்னும் கூடுதலாக நமது பிராந்திய போட்டித்தன்மையை அபிவிருத்தி செய்யவும் முதல்முறையாக வெளியுறவு அமைச்சகத்தில் ஆசிய துறையை உருவாக்க முடிவெடுத்ததாக" அவர் தெரிவித்தார். “வெளியுறவு அமைச்சகத்தின் நமது குழு சேர்க்கையை மாற்றுவதன் மூலமாக, ஆசியாவின் அதிகரித்து வரும் பலத்திற்கு நீதி கிடைக்குமாறு செய்ய இதுவே நமக்கு உகந்த நேரமாகும்" என்றார்.
அதே நாள் மாலை, ஹம்பேர்க்கில் ஜேர்மன் ஆசிய-பசிபிக் வணிக அமைப்பின் 97 ஆம் வருடாந்தர கூட்டத்திற்கு அளித்த வேலைதிட்டம் சம்பந்தமான ஓர் உரையில் காப்ரியேல் அறிவித்தார்: “இங்கே உள்நாட்டில் நமது எதிர்காலத்திற்கு, ஆசியா ஒரு முக்கிய பகுதியாகும். ஏனென்றால் நமது உலகளாவிய சவால்களை தீர்ப்பதற்கான பாதைகளை இனியும் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் பழைய கட்டமைப்புகளால் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியாது. மாறாக, நமது உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதற்கான பாதைகள் ஆசியா வழியாக செல்கின்றன.”
இது, "சூரியனில் ஓரிடம்" என்ற ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பழைய மந்திரத்தை நினைவூட்டும் விதத்தில் வெறுமனே காப்ரியேலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் மட்டுமல்ல. ஜேர்மன் ஆசிய-பசிபிக் வணிக அமைப்பின் முதல் வருடாந்தர இரவு விருந்து, “சாத்தியமானளவிற்கு அதிகபட்ச வழமையான கூட்டத்தில் ஜேர்மன் நலன்களை விவாதிக்கும்" என்ற அறிவிக்கப்பட்ட இலக்குடன் 1901 இல் தொடங்கியது. ஜேர்மனியின் கடைசி கெய்சர் இரண்டாம் வில்ஹெமின் சகோதரரான பிரஷ்ய இளவரசர் ஹென்றிச் தான் அந்த முதல் நிகழ்வின் விருந்தினராக இருந்தார்.
இன்று ஜேர்மன் ஏகாதிபத்தியம் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பின்பற்றியதை விட இன்னும் அதிகமாக திட்டமிட்டரீதியிலும் ஆக்ரோஷமாகவும் ஆசியாவில் அதன் புவிசார் அரசியல் அபிலாஷைகளை பின்தொடர்கிறது. ஜேர்மன் கொள்கையின் புதிய உலகளாவிய நோக்குநிலை குறித்து இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள ஜேர்மனியின் 40 தூதர்களுக்கு தகவளிக்க, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏப்ரல் 5 மற்றும் 6 இல், இலங்கை தலைநகர் கொழும்பில் ஓர் அசாதாரண பிராந்திய மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.
வெளியுறவுத்துறை செயலர் மார்குஸ் எடேரர் அவரது முதல் உரையில், ஜேர்மன் வல்லரசு கொள்கையின் நிஜமான தொனியில், அறிவித்தார், “இந்திய பெருங்கடலின் கடற்கரையில் என்னவொரு அருமையான ஒன்றுகூடல்! இன்றைய அரங்கத்திற்கு இதைவிட பொருத்தமான பின்னணியை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது… முதல்முறையாக ஐந்து கண்டங்களின் ஜேர்மன் தூதர்கள், பாரம்பரியமாக ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு பிரதேசத்தை, இந்திய பெருங்கடலை, குறித்து விவாதிக்க இங்கே சந்தித்திருக்கிறார்கள்.”
பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களோடு சேர்ந்து, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கனவே உலகின் மிகவும் கடுமையான போட்டியில் சிக்கியுள்ள அப்பிராந்தியத்தின் மீது பாதுகாப்பு கொள்கை மற்றும் இராணுவ நலன்களையும் பகிரங்கமாக விவாதித்து வருகின்றன. ட்ரம்புக்கு முன்பிருந்த பராக் ஒபாமாவின் கீழ், அமெரிக்கா சீனாவை பொருளாதாரரீதியில் தனிமைப்படுத்தி, இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் நோக்கில், அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" அறிவித்தது. அமெரிக்க அரசாங்கம் ஈரான், வட கொரியா மற்றும் சீனாவுடன் நேரடியான இராணுவ மோதலுக்கு முன்பினும் அதிக வெளிப்படையாக தயாரிப்பு செய்து வருகிறது.
இந்த வெடிப்பார்ந்த பிராந்தியத்தில் தலையீடு செய்வதும் மற்றும் இராணுவ வழிவகைகள் உள்ளடங்கலாக அதன் புவிசார்மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதுமே ஜேர்மனியின் நோக்கமாகும்.
எடேரர் கொழும்பில் பின்வருமாறு குறிப்பிட்டார், “ஐரோப்பா இனியும் பாதுகாப்புத்துறையில் 'முடங்கி இருக்காது': ஈரானுடன் ஒரு அணுஆயுத உடன்படிக்கை எட்டுவதில் நாம் தீவிரமாக உள்ளோம்; நாம் சோமாலியாவை ஸ்திரப்படுத்த உதவுவோம் (இங்கே ஐரோப்பிய ஒன்றியம் AMISOM க்கு ஒரு பிரதான உதவியாளராக உள்ளது); யேமனில் நாம் பிரத்யேக மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவோம்.” அவர் தொடர்ந்து கூறுகையில், “கடற்பிரதேச பாதுகாப்பை பொறுத்த வரையில், ஐரோப்பிய ஒன்றியம் 'அட்லாண்டா' நடவடிக்கை மூலமாக வெற்றிகரமாக சோமாலியா கடற்கரைகளில் கடற்கொள்ளையை தடுத்துள்ளது… இருப்பினும் அங்கே இன்னும் நிறைய செய்ய வாய்ப்பிருப்பதாக நான் நம்புகிறேன். நாம் அப்பிரதேசத்தின் பங்காளிகளுடன் நமது பாதுகாப்பு கூட்டுறவை இன்னும் அதிகரிக்க வேண்டும். சான்றாக, கூட்டு இராணுவ ஒத்திகைகளில் நாம் நிறைய முதலீடு செய்யலாமா?”
ஜேர்மன் கடற்படை இந்திய பெருங்கடலில் கட்டுப்பாட்டை எடுக்கும் ஒரு நிலைமைக்கோ அல்லது பலமான ஆயுதமேந்திய அமெரிக்காவை கையாள்வதற்கோ நெருக்கமாக கூட இல்லை என்ற நிலையில், இதுபோன்ற அறிக்கைகள் அபத்தமாக இருந்தாலும், இவை வெறுமனே வெற்று வார்த்தைகள் இல்லை. கடற்பிரதேச திட்டநிரல் மீது தீர்மான அறிக்கை கையெழுத்திடுவதற்கு தயாரிப்பு செய்யும் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையிலான விவாதங்களுக்காக, வெளியுறவுத்துறை அமைச்சர் காப்ரியேல் நேற்று இந்தோனேஷியாவின் கடற்பிரதேச விவகாரங்கள் ஒருங்கிணைப்பிற்கான அமைச்சர் லூகூட் பின்ஸார் பான்ட்ஜைதான் இனை சந்தித்தார்.
ஜேர்மனியின் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை ஆளும் வர்க்கத்தின் எல்லா பிரிவுகளும் வரவேற்கவில்லை. Westdeutsche Allgemeine Zeitung பத்திரிகையில் வெளியான ஒரு கருத்துரை, “வாஷிங்டனின் நேசம் கைவிடப்பட்டிருப்பதை எதிர்கொண்டிருக்கும் ஐரோப்பா,” “சுய-அதிகார பெருக்கத்திற்காக" “ஆசியாவை இப்போது அரவணைக்கலாம்" என்ற நம்பிக்கையை வெளியிட்டது. “ஓர் ஆசிய முன்னோக்கில் இருந்து தற்போது நெருக்கடியின் ஒரு சித்திரமாக" ஐரோப்பா பார்க்கப்படுகிறது. “புது டெல்லியில் இருந்து பெய்ஜிங் மற்றும் ஜகார்தா வரையில், ஆசியாவின் சாத்தியமான பங்காளிகளை சுலபமாக கையாள முடியாது,” என்பதையும் அந்த கருத்துரை சேர்த்துக் கொண்டது. சான்றாக, “அதன் யோசனைகளை எதிர்க்கும் எவரொருவரையும்" அதனால் "தண்டிக்க முடியுமென" சீனா நினைக்கிறது, இதற்காக “அதன் பொருளாதார பலத்திற்கு தான் நன்றி கூற வேண்டும்.”