Print Version|Feedback
The fight for international socialism in South Asia
மே தினம் 2017: தெற்காசியாவில் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம்
By Wije Dias
2 May 2017
இது இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலரான விஜே டயஸ் ஏப்ரல் 30 இல் நடத்தப்பட்ட 2017 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் வழங்கிய உரையாகும்.
தோழர்களே ஆதரவாளர்களே,
தெற்காசியாவில் அரசியல், சமூக, மற்றும் அரசுகளுக்கு இடையிலான உறவுகளும், ஒன்றோடொன்று இணைந்த இரு நிகழ்வுப் போக்குகளால் வியத்தகு முறையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
முதலாவதாக, இன்னுமொரு ஏகாதிபத்தியப் போரை நோக்கிய உந்துதலால் பூகோள-அரசியல் பதட்டங்களின் சுழற்சியில் இப்பிராந்தியம் சிக்கிக்கொண்டுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் இதற்கு முக்கிய பொறுப்பாளியாகும். 2001ல், "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில், அது ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அதன் மூலம் அது மத்திய ஆசியாவின் பரந்த எண்ணெய் இருப்புக்களுக்கு அருகேயும் ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற பிரதான மூலோபாய விரோதிகளாக அது கருதும் அரசுகளுக்கு சமீபமாகவும் ஒரு இராணுவ மூலோபாய தள கட்டமைப்பை ஸ்தாபித்துக்கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, வாஷிங்டனானது ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் நிர்வாகங்களின் கீழ், புது டில்லிக்கு பல்வேறு மூலோபாய சலுகைகளை வழங்குவதன் மூலம், இந்திய முதலாளித்துவத்தின் சொந்த பிற்போக்கு வல்லரசு அபிலாஷைகளை கையாண்டு அதை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டது.
இரண்டாவதாக, வர்க்கப் போராட்டம் கூர்மையடைகின்றது. பொருளாதார தாராளமயமாக்கல் என்று அழைக்கப்படுவதன் மூலம் தெற்காசிய மக்களை வறுமை மற்றும் சீரழிவில் இருந்து மீட்கலாம் என்ற வாதம், முற்றிலும் பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா தற்போது 101 பில்லியனர்களைக் கொண்டிருக்கன்றது. இது உலக நாடுகளில் நான்காவது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். இந்த நிலையில், மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினர் நாள் ஒன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். எப்போதும் ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மையும் பொருளாதார பாதுகாப்பின்மையும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பிற்கு எண்ணெய் வார்க்கின்றன. கடந்த செப்டம்பரில் 150 மில்லியன் இந்திய தொழிலாளர்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் பங்குபற்றினர். வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக எதிர்ப்பு அலைகளால் ஆட்டங்கண்டுள்ள இலங்கை அரசாங்கம், போர் குற்றவாளியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக மறுநியமனம் செய்து, அதிகாரிகளின் வார்த்தைகளில் "நாட்டின் ஒழுக்கத்தை பேணுவதற்காக" அவருக்கு சிறப்பு அதிகாரங்களைக் கொடுத்து ஆயுதபாணியாக்க முயல்வதாக தெரியவருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியாக பில்லியனரான டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டமை, ஒரு பிறழ்ச்சி அல்ல, மாறாக, ஆளும் உயரடுக்குக்குள்ளான ஒரு கடும் பிற்போக்கு போக்கின் அறிகுறியாகும். ட்ரம்ப், ஈவிரக்கமற்ற தன்மையுடன், உலகம் பூராவும் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடுவதானது இந்து சமுத்திரம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பூகோள-அரசியல் பதட்டங்களை உக்கிரமாக்கியுள்ளது. கிழக்கு சீனக் கடலுக்கு அமெரிக்க ஆர்மடா போர்க்கப்பல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை, வெறுமனே வட கொரியாவை இலக்கு வைப்பதற்காக மட்டுமல்ல, சீனாவை ஆக்கிரோஷமான அடிமைப்படுத்துவதற்கும் ஆனதாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த மூலோபாய திருப்பத்திற்கான அடித்தளம், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் அவரது "ஆசியாவில் முன்நிலை" என்ற கொள்கையுடன் ஸ்தாபிக்கப்பட்டது. சீனாவிற்கு எதிரான அமெரிக்க தாக்குதல், ஒட்டு மொத்த தெற்காசியாவினதும் மற்றும் குறிப்பாக கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிற்கு இடையேயான இந்திய பெருங்கடலின் போக்குவரத்து பாதைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை, மற்றும் இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவத்தை உயர்த்தியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியாக முன்னெடுக்க உறுதிபூண்டுள்ள, ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஆரம்பித்த, வாஷிங்டனின் இந்தியா உடனான "உலகளாவிய மூலோபாய கூட்டை" விரிவாக்கும் கொள்கையானது இந்திய முதலாளித்துவ வர்க்கத்தால் இரு கைகளையும் திறந்து வரவேற்கப்பட்டது. இந்திய முதலாளித்துவமானது தொழிலாளர்-விரோத சந்தை-சார்பு சீர்திருத்தங்களை தீவிரப்படுத்தவும் உலக அரங்கில் அதன் வல்லரசு அபிலாஷைகளை இன்னும் ஆக்கிரோஷமாக வலியுறுத்தவும், 2014ல் நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து பேரினவாத பா.ஜ.க. பக்கம் திரும்பியது.
இந்தியா இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரதான போலீஸ்காரராகிவிட்டது. 2015 ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற ஒபாமா, அந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கையில் வாஷிங்டனின் ஆட்சி மாற்ற நடவடிக்கையில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தமைக்காக மோடியை பகிரங்கமாக பாராட்டியதில் இது அம்பலத்துக்கு வந்தது. இந்த நடவடிக்கையின் மூலம் பெய்ஜிங் உடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்ட ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை, பாரம்பரிய அமெரிக்க-சார்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன், மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தைக் கொண்டு பதிலீடு செய்யப்பட்டது.
கடந்த இரு ஆண்டுகளில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் இந்தியா ஒரு உண்மையான "முன்நிலை அரசாக" மாற்றப்பட்டதுடன், இந்திய-அமெரிக்க உறவுகள் ஒரு பண்பு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்டில், அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படுவதற்கு இந்தியா அதன் விமானத் தளங்கள் மற்றும் துறைமுகங்களை திறந்துவிட்டதுடன், பிப்ரவரியில், 7 ஆவது கப்பற்படையின் கப்பல்கள், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் திட்டங்களின் மையத்தில் உள்ள ஆயுதக் கப்பல்கள், இந்திய துறைமுகமொன்றில் திருத்தப்பட உள்ளன. வாஷிங்டனின் ஒரு பிரதான பாதுகாப்பு பங்காளி என்ற இந்தியாவின் தகுதியைக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகவும் நம்பகமான நட்பு நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க ஆயுத கருவிகளுக்கான அணுகல் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. வாஷிங்டனின் முக்கிய ஆசிய நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு மூலோபாய உறவுகளையும் இந்தியா மேலும் பலப்படுத்தியுள்ளது. அண்மையில் மலபார் கடற்படை பயிற்சிகளின் போது, இந்த உறவுகளுடன் சேர்ந்து நடத்திய கூட்டு இராணுவப் பயிற்சிகள், பெருமளவில் இலங்கையையும் இணைத்துக்கொள்ளும் வகையில் விரிவாக்கப்பட்டு வருகின்றன.
சீனா மற்றும் வரலாற்று ரீதியில் இந்தியாவின் கடும் போட்டியாளரான பாக்கிஸ்தானும், தங்களின் சொந்த நீண்டகால மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், புது டெல்லி உடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "மூலோபாய நலன்களுக்கு" பதிலிறுத்துள்ளன.
பாக்கிஸ்தானின் பிற்போக்கு முதலாளித்துவ உயரடுக்கு, பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான ஒரு துணை ஆட்சியாக சேவை செய்துள்ளது. இது தொடர வேண்டும் என்பதே அதன் பிடிவாதமான விருப்பமாகும், ஆனால் இந்தியாவை அமெரிக்கா தழுவிக்கொண்டமை, இஸ்லாமாபாத் பலமுறையும் எச்சரிக்கை செய்துள்ளது போல், தெற்காசியாவின் அதிகார சமநிலையை மாற்றி, இந்திய பகைமையை ஊக்குவித்துள்ளது.
இந்த அபிவிருத்திகளில் இருந்து எழும் தீவிர அபாயங்கள், கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட்டன. அணுவாயுதத்தை கொண்டுள்ள இரு நாடுகளான இந்தியாவும் பாக்கிஸ்தானும், போரின் விளிம்பை எட்டின. அமெரிக்காவின் மறைமுக ஆதரவுடன், இந்தியா பாகிஸ்தானுக்குள் "சேதப்படுத்தும் தாக்குதலை" முன்னெடுத்தது, பின்னர் பாக்கிஸ்தானுடனான இந்தியாவின் "மூலோபாய தடை" சகாப்தம் முடிந்துவிட்டது என்று பகிரங்கமாக பெருமைபட்டுக் கொண்டது. எல்லை மோதல்கள் அதிகரித்ததால், தெற்காசியா பல வாரங்கள் போரின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருந்தது.
அமெரிக்க மூலோபாயவாதிகள், முழு இந்திய பெருங்கடல் மற்றும் ஆசிய நிலப்பகுதி மீது அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க இந்தியா மற்றும் இலங்கை இன்றியமையாதவை என்று கருதுகின்றனர். இரண்டாம் உலகப் போரின்போது, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில், பிரித்தானிய ஏகாதிபத்திய போர் இயந்திரத்தின் தலைமையிடமாக இலங்கை மலையக நகரமான கண்டி இருந்தது என்பதை ஒருவர் மறந்துவிட முடியாது. மாற்றப்பட வேண்டியவற்றை மாற்றி அமெரிக்க ஏகாதிபத்தியமானது பிரிட்டிஷ் காலனித்துவ மூலோபாயத்தை புதுப்பிக்க முயல்கிறது. பிரிட்டிஷ் காலனத்துவ காலத்தில், பிரிட்டிஷ் இந்திய இராணுவமானது காலனித்துவ இந்தியாவின் மக்களை அடிமைப்படுத்தியது மட்டுமல்லாமல், பர்மாவை கைப்பற்றவும், பாக்ஸர் கலகத்தை ஒடுக்குவதற்கும், இரண்டு உலகப் போர்களின் போதும் உலகம் முழுதும் யுத்தங்களை நடத்தவும் பயன்படுத்தப்பட்டது.
இந்த ஆரவாரங்களின் பின்னணியில், ட்ரம்பின் "அமெரிக்கா முதல்" என்ற கொள்கையானது, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை, வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ளவர்களின் வறுமை மட்டத்திற்கு சீரழிப்பதை இலக்காகக் கொண்ட சமூக எதிர்-புரட்சிக்கான கொள்கையும் இருக்கின்றது. தெற்காசியாவில் உள்ள பிற்போக்கு முதலாளித்துவ அரசாங்கங்கள், உலகம் முழுவதிலும் உள்ளவை போலவே, இவ்வாறு தொழிலாளர்களின் சமூக நிலைமைகளை மேலும் சீரழிவுக்குள் தள்ளுகின்றன. தேசியவாதத்தையும் பேரினவாதத்தையும் கிளறிவிடுவதன் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த சமூக பேரழிவுடன், தொழிலாள வர்க்கம் போராடிப் பெற்ற அனைத்து ஜனநாயக உரிமைகளும் ஈவிரக்கமற்ற தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
இலங்கையில், நாட்டை இராணுவ-பொலிஸ் அரசாக மாற்றுவதற்கான தயாரிப்புக்கள் முன்னேறியுள்ளன. தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான மிருகத்தனமான முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட இராணுவம், புதிய ஆட் சேர்ப்புகள் மற்றும் மிலேச்ச உபகரணங்களுடன் விரிவுபடுத்தப்படுகிறது. எந்தவொரு முந்தைய ஆட்சியையும் விஞ்சும் விதத்தில் ஒரு எதேச்சதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதற்காக, அரசியலமைப்பு மற்றும் சட்ட மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில், கொத்தடிமை சுரண்டலை எதிர்த்த மாருதி சுசுகி தொழிலாளர்கள், இரக்கமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். சோடிக்கப்பட்ட வழக்கில் அவர்களது தலைவர்கள் மீது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில், இந்திய ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அடக்குமுறை மற்றும் பாக்கிஸ்தானுக்கு எதிரான போர் கூச்சலுடன் நசுக்கப்பட்டு வருகின்றது.
இப்பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், தொழிலாள வர்க்க போராட்டங்களின் புதிய அலை மற்றும் பரந்த கிராமப்புற அமைதியின்மை பரவுவதன் மத்தியில் அடக்குமுறைச் சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டு வருவதோடு அரசு எந்திரங்கள் பலப்படுத்தப்படுகின்றன.
தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலுக்கு எதிரான முக்கிய தடையாக இருப்பது, வெளிப்படையாக இடது கட்சிகளும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களும் அவற்றின் போலி-இடது கூட்டாளிகளுமே ஆகும். முதலாளித்துவ வர்க்கம் மோடியின் பக்கம் திரும்பியதற்கும் வர்க்கப் போராட்டம் தீவிரமடைவதற்கும் பிரதிபலித்த இந்தியாவில் ஸ்ராலினிசக் கட்சிகள், தொழிலாள வர்க்கத்தை இந்திய அரசியல் ஸ்தாபகத்துடனும் அரசுடனும் கட்டிப்போடும் தங்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன. இலங்கையில், அமெரிக்க-சதியிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையின் விளைவாக சிறிசேன அதிகாரத்திற்கு வந்ததை "ஜனநாயகப் புரட்சி" எனப் பாராட்டிய நவ சமசமாஜக் கட்சியின் தலைவர், இப்போது சர்வதேச நாணய நிதியம் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்துவதை பகிரங்கமாக ஆதரிக்கின்றார்.
ஏகாதிபத்திய போர் அச்சுறுத்தல் மற்றும் வெகுஜன வேலையின்மை தொடக்கம், சாதி ஒடுக்குமுறை மற்றும் வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய-அரசு கட்டமைப்பு வரை, தெற்காசிய தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் எந்தவொரு எரியும் ஜனநாயக மற்றும் சமூக பிரச்சனைகளும், ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை, புதிய வெகுஜன தொழிலாள வர்க்க கட்சிகளைக் கட்டியெழுப்பாமல் தீர்க்க முடியாது.
தெற்காசியாவில் உள்ள தொழிலாளர்கள், தங்களை நடப்பில் இல்லாத "முற்போக்கு" முதலாளித்துவத்துடன் கட்டிப்போட முனையும் ஸ்ராலினிச மற்றும் போலி-இடது சக்திகளுக்கு எதிராக, தங்களது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்ய வேண்டும். அதன் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தம் பின்னால் ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை அணிதிரட்டிக்கொண்டு, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில், அச்சுறுத்தும் முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக அமெரிக்கா, சீனா மற்றும் உலகத் தொழிலாளர் சக்தியுடன் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.