Print Version|Feedback
Trump suggests talks while preparing for war with North Korea
வட கொரியாவுடன் போருக்கான தயாரிப்புகளை முன்னெடுக்கும் அதே வேளையில் ட்ரம்ப் பேச்சுவார்த்தைகளுக்கும் அறிவுறுத்துகிறார்
By Peter Symonds
2 May 2017
வட கொரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வருகின்ற அதே வேளையில், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஐ சந்திக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார். “அவருடனான எனது சந்திப்பு சரியானதாக இருக்குமானால், நான் அதை செய்வதில் முழுமையாக பெருமை கொள்வேன்” என்று Bloomberg News செய்தி ஊடகத்திற்கு அவர் தெரிவித்தார்.
ட்ரம்ப், வட கொரிய தலைவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுக்காட்டியதுடன், “பெரும்பாலான அரசியல்வாதிகள் ஒருபோதும் அவ்வாறு சொல்லமாட்டார்கள், ஆனால் சரியான சூழ்நிலையில் நான் அவரை சந்திக்கவேண்டுமென்று சொல்கிறேன்” என்றும் கூறினார்.
பேச்சுவார்த்தைகளுக்கான அமெரிக்க நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள், அல்லது யுத்தத்திற்கான வாய்ப்பை எதிர்கொள்ளுங்கள் என்ற வகையில் பேச்சுவார்த்தைகளுக்கான இந்த வாய்ப்பு திறம்பட ஒரு இறுதி எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தின் கடற்கரை பகுதிகளில் அமெரிக்க கடற்படையானது ஒரு விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுவையும், ஒரு ஆணுஆயுத நீர்மூழ்கி கப்பலையும் நிலைநிறுத்தியுள்ளதுடன், தென் கொரிய மற்றும் ஜப்பானிய போர்க் கப்பல்களுடன் அவைகளை கூட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபடுத்தியுள்ளது.
கிம் ஜோங்-உன் உடனான சந்திப்பினால் அவர் “மதிக்கப்படுவார்” என்ற ட்ரம்பின் அறிவிப்பானது, “மனித உரிமைகள்” மீது வாஷிங்டன் காட்டுகின்ற உயர்ந்த பாசாங்குதனத்தையும் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. வட கொரியாவில் அல்லது எந்த நாட்டிலானாலும் சரி, அமெரிக்காவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு பொருந்துவதை கருத்தில்கொண்டே மனித உரிமை மீறல்கள் குறித்த அதன் கண்டனங்கள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும்.
வட கொரியாவுடனான ஒரு “பெரிய, பெரிய முக்கிய யுத்தத்திற்கான” திட்டவட்டமான ஒரு வாய்ப்பு இருந்ததாக ட்ரம்ப் கடந்த வியாழனன்று எச்சரித்த அதே சமயத்தில், “இந்த பிரச்சனைகளுக்கு இராஜதந்திர ரீதியாக தீர்வு காண்பதற்கே நாங்கள் முற்படுவோம், ஆனாலும் அது மிகவும் கடினமானது” என்று தெரிவித்தார்.
கடந்த வெள்ளியன்று ஐ.நா. பாதுகாப்பு குழு அமைச்சர்களின் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு செயலரான றெக்ஸ் ரில்லர்சன் பேசுகையில், எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் ஏற்றதான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். “மோதலுக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கே அமெரிக்கா முன்னுரிமையளிப்பதாக” அறிவித்த பின்னர் அவர், “நாங்கள் பேச்சுவார்த்தைகளை கருத்தில் கொள்வதற்கு முன்பாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை நோக்கிய தனது சட்டவிரோத ஆயுத திட்டங்களுடனான அச்சுறுத்தலை குறைக்க வட கொரியா உறுதியான நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்கவேண்டும்” எனவும் தெரிவித்தார்.
வட கொரியா அதன் அணுசக்தி வசதிகளையும், ஆயுதங்களையும் கைவிடவேண்டும் என்பது போன்ற அர்த்தத்தில், அது “அணுஆயுத ஒழிப்பை” மேற்கொள்ளவேண்டுமென ரில்லர்சன் வலியுறுத்தினார். மேலும், “பாதுகாப்பு குழுவின் தீர்மானங்களுக்கு இணக்கமாக செயல்படுவதிலும், அவர்களது கடந்த கால வாக்குறுதிகளின் பேரில் அவர்களது அணுஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதிலும், ஒரு நல்ல விசுவாசத்துடனான உறுதிப்பாட்டை அவர்கள் காட்டும் பட்சத்தில் தான் வட கொரியா உடனான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் ஈடுபடுவோம்” என்றும் தெரிவித்தார்.
ட்ரம்ப் “சரியான சூழ்நிலையில்” கிம் ஐ சந்திக்கவேண்டுமென வலியுறுத்திய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலரான சீன் ஸ்பைசரால் அதே செய்தி அறிவிக்கப்பட்டது. வட கொரியா அதன் “ஆத்திரமூட்டும் நடத்தைகளை” உடனடியாக நிறுத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் “அதன் நடத்தை தொடர்பாகவும், நல்ல நம்பிக்கைக்கான அறிகுறிகளை காட்டுவதற்கும் நிறைய நிலைமைகள் உருவாகுமென்றே நான் நினைக்கிறேன். ஆனால் தற்போது அத்தகைய நிலைமைகள் அங்கில்லை என்பது தெளிவாகவுள்ளது” என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், இராணுவ நடவடிக்கைக்கான அச்சுறுத்தல் எப்பொழுதும் பின்னணியில் இருக்கத்தான் செய்கிறது. கடந்த வாரம் ஐ.நா.வில் பேசும்போது, “அனைத்து வாய்ப்புக்களும்” தயாராக இருந்ததாக ரில்லர்சன் மீண்டும் வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வு காணப்படவில்லையானால் “பேரழிவுகரமான விளைவுகள்” உருவாகுமெனவும் எச்சரித்தார். ஐ.நா. உறுப்பினர்கள் வட கொரியா மீது பொருளாதாரத்தை முடக்கும் தடைகளை சுமத்தவும், அதனுடனான இராஜதந்திர உறவுகளை குறைக்கவும் அவர் அழுத்தம் கொடுத்ததுடன், “தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கை மூலம்” அவர்கள் பதிலடி கொடுப்பார்கள் எனவும் எச்சரித்தார்.
அவர் கிம் ஜோங்-உன்னுக்கு பேசுவதற்கு வாய்ப்பினை வழங்கியுள்ளபோதும், வட கொரிய தலைவர்களின் சமீபத்திய அறிக்கைகள் “மிகவும் எரியூட்டக் கூடியதாகவும்” “கொடூரமானதாகவும்” இருந்தன என்று ட்ரம்ப் தெரிவித்தார். எனினும், இராணுவ நடவடிக்கை தொடர்பான அவரது திட்டங்களைப் பற்றியோ, வட கொரியாவிற்கு ஒரு “சிவப்புக் கோட்டை” போட்டுவைத்திருப்பது பற்றியோ அவர் பேசப் போவதில்லை என்றும் அறிவித்தார். “நான் இதுபற்றி பேச விரும்பவில்லை. அவர் மிகுந்த அச்சுறுத்தலானவராக இருக்கிறார், அதுவும் உலகத்திற்கே ஒரு பெரிய அச்சுறுத்தலாக அவர் இருக்கிறார் என்பதை மட்டும் தான் என்னால் கூறமுடியும்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
கடந்த மாதம் சிரியா மீதான தனது கடல்மூல ஏவுகணை தாக்குதல்களை குறிப்பிட்டு வட கொரியாவை தாக்குவதற்கான அவரது விருப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி அடிக்கோடிட்டுக்காட்டினார். ஜனாதிபதி ஒபாமா சிரிய அரசாங்கத்திற்கு “சிவப்புக் கோடுகளை” அமைத்தாரே தவிர அவற்றை செயல்படுத்தவில்லையென விமர்சித்த பின்னர், “உண்மையில் சிரியாவில் (ஒபாமாவின்) சிவப்புக் கோடுகளை அவருக்காக நான் பூர்த்தி செய்துவிட்டேன்” எனறு ட்ரம்ப் தெரிவித்தார்.
வட கொரியா மீது நேரடியாகவோ, அல்லது அதன் நட்பு நாடான சீனாவின் மூலமாகவோ அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுப்பதற்காக ட்ரம்ப் நிர்வாகம் ஒரு ஒருங்கிணைந்த இராஜதந்திர தாக்குதலை முன்னெடுக்கிறது. வாஷிங்டன் விஜயத்திற்கு அழைப்புவிடுக்கும் பொருட்டு தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தலைவர்களுடன் ட்ரம்ப் பேசியுள்ளார். இந்த வாரம் பிற்பகுதியில் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவிருக்கிறார்.
வட கொரிய சொத்துக்களை முடக்கப்போவதாகவும், மேலும் அதன் இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி எடுப்பதைத் தடை செய்யப்போவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவும் வட கொரிய பயணத்திற்கு தடை விதித்துள்ளதாகவும், வட கொரிய கொடியுடன் கூடிய கப்பல்களை விசாரணை செய்துவருவதாகவும், மேலும் பியோங்யாங்கிற்கு எதிராக “நிதி நடவடிக்கைகளை” எடுத்துவருவதாகவும் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வெளியுறவு விவகார குழுவின் தலைவரான காங்கிரஸ்காரர் எட் ராய்ஸ், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு பாட்டரியான முனைய அதிஉயர பகுதி பாதுகாப்பினை (Terminal High Altitude Area Defene-THAAD) ஸ்தாபிப்பதற்காக தென் கொரியா 1 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையினை வழங்கவேண்டுமென ட்ரம்ப் சென்ற வார இறுதி வரையிலும் அறிவுறுத்தியதற்காக கடிந்துகொண்டார். “எங்களுடைய நட்பு நாடுகளுடன் நாங்கள் நிற்க வேண்டும். தற்போது எந்தவொரு நம்பிக்கைக்கும் வழியில்லை” என்று ராய்ஸ் Washington Post பத்திரிகைக்கு தெரிவித்தார்.
அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளின் ஒரு பகுதியான THAAD ஸ்தாபிதம் சீனாவிற்கும் அத்துடன் வட கொரியாவிற்கும் எதிராக போர் தயாரிப்புகளின் மையமாக இருப்பதானது தென் கொரியாவில் பரந்த எதிர்ப்பை தூண்டியதுடன் அரசியல் நெருக்கடிக்குள்ளும் தள்ளியுள்ளது. அந்த நாடு, முன்னாள் ஜனாதிபதி பார்க் குன்-ஹை இன் பதவி நீக்கத்தை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல்களின் மத்தியில் உள்ளது. முன்னணியிலுள்ள தலைவரும், ஜனநாயகவாதியுமான மூன் ஜே-இன் ஒரு THAAD எதிர்ப்பாளராக தன்னைக் காட்டியுள்ளார்.
தென் கொரியாவிலுள்ள எதிர்ப்பிற்கு இன்னும் தீயூட்டுவதிலிருந்து ட்ரம்ப்பின் கருத்துக்களைத் தடுக்கும் ஒரு முயற்சியில், THAAD அமைப்பு குறித்து “ஏதேனும் மறு பரிசீலனை செய்யபடும்வரை” அதற்கான தொகையை அமெரிக்கா வழங்குமென தேசிய பாதுகாப்பு ஆலோசகரான H.R.McMaster ஞாயிறன்று அறிவிக்க முனைந்தார்.
Washington Post பத்திரிகைக்கு அவர் தெரிவித்த கருத்துக்களில், வட கொரியா மீது மட்டுமல்லாமல், பியோயாங்குடன் வர்த்தகம் செய்யும் வங்கிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் எதிராகவும் புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கு இன்றைய சட்டங்கள் குறித்த விவாதங்களை தொடங்குவதற்காகத் தான் ட்ரம்ப் நிர்வாகத்தை காங்கிரசுடன் மிகநெருக்கமாக பணியாற்ற ராய்ஸ் வலியுறுத்தினார். அது பயங்கரவாதத்தின் அரசு ஆதரவாளர்கள் தொடர்பாக அரசு துறைகளின் பட்டியலை வட கொரியா மீண்டும் அளிக்க அழுத்தம் கொடுப்பதுடன், கூடுதல் அபராதங்களுக்கும் அனுமதியளிக்கிறது.
ஐ.நா.வின் முன்னாள் அமெரிக்க தூதுவரான ஜோன் போல்டன் USA Today செய்தி ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில், போருக்கான அமெரிக்க தயாரிப்புகளின் பிரதான இலக்கு பெரும்பாலும் வட கொரியாவின் மீதானதாக அதிகம் இல்லாமல், சீனாவின் மீதானதாகவுள்ளது. வட கொரியா எண்ணெய் அல்லது கணிசமான இயற்கை வளங்களை கொண்டிருக்கவில்லை, மேலும், அதன் அணுஆயுதத் திட்டங்கள் குறித்து தொடர்ச்சியான கண்டனங்களை மீறி இருந்தாலும், அமெரிக்காவுக்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க வகையிலான எந்தவித அச்சுறுத்தலையும் அது விடுக்கவுமில்லை. ஆனால் அது மூலோபாய ரீதியாக அமைந்து, சீனாவுடனும், ரஷ்யாவுடனும் எல்லைகளை பகிர்ந்துகொண்டு, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அமெரிக்க தளங்களுக்கு எதிராக தாக்குதலின் வேகத்தை குறைக்கும் ஒரு இடைத்தடையாக செயல்பட்டுவருகிறது.
தேசிய செயலருக்கான ட்ரம்ப்பின் சுருக்கப்பட்டியலில் இருந்த போல்டன், வட கொரியாவை அணுஆயுத ஒழிப்புக்கு நிர்பந்திக்கும் முயற்சிகளை நிராகரித்ததுடன், தென் கொரிய ஆதரவின் கீழ் கொரியாக்களை சமாதானமாக மறுஒழுங்கு செய்வதை சீனா ஏற்றுக்கொள்ளவேண்டுமென அதன் மீது அழுத்தம் கொடுக்க ஆலோசனையும் அளித்தார். “ஆட்சியின் சரிவு, பெருமளவு அகதிகள் வெளியேற்றம் மற்றும் யாலு ஆற்றின் (சீனாவின் எல்லை பகுதி) ஊடாக பறக்கும் அமெரிக்க கொடிகள்” என்ற வகையில் பெய்ஜிங்கிற்கு மோசமான விளைவுகளைக் கொண்டதான முன்கூட்டிய அமெரிக்கத் தாக்குதலுக்கு ஒரு மாற்றீடாக அது இருந்தது.
ட்ரம்ப் நிர்வாகம் அதைப் பற்றிக் கூறாதபோதும், ஏனைய பொருளாதார மற்றும் மூலோபாய முனைகளில் மோதல்களுக்குத் தயாராகின்ற நிலையில், வட கொரியாவை ஒழிக்கவும், சீனாவை பலவீனப்படுத்தவும் அது ஏதாவதொரு வழியைத் தேட முனைந்துவருகிறது. “சீனா அதனை எளிதான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ செய்யமுடியும். அது அவர்களது விருப்பம். இருந்தாலும் அவகாசம் குறைந்துகொண்டே வருகிறது” என்பதாக போல்டன் இதைக் கொடூரமான வகையில் முன்வைக்கிறார்.