Print Version|Feedback
Mélenchon repeats offer to serve as the prime minister of France under Macron
மக்ரோன் கீழ் பிரான்ஸ் பிரதம மந்திரியாக சேவையாற்ற மெலோன்சோன் மீண்டும் முன்மொழிகிறார்
By Kumaran Ira
17 May 2017
சனியன்று ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் (France Insoumise – FI) ஜூன் 11 மற்றும் 18 சட்டமன்ற தேர்தல்களுக்கான அவர் பிரச்சாரத்தை தொடங்கும் விதத்தில் பாரீஸ் புறநகர் பகுதியான வில்ஜுயிஃப் (Villejuif) இல் ஒரு கூட்டம் ஒன்றை நடத்தியது.
ஜனாதிபதி தேர்தல்களில் மெலோன்சோனின் 19.6 சதவீத வாக்குகளை விட கணிசமானளவிற்கு குறைவாக, அடிபணியா பிரான்ஸ் இயக்கம் வெறும் 14 சதவீத வாக்குகளைப் பெறக்கூடுமென காட்டும் பல்வேறு கருத்துக் கணிப்புகளுக்கு இடையே, அந்த இயக்கத்தால் "நாட்டை ஆள முடியுமென" மெலோன்சோன் வலியுறுத்தினார். அதாவது, அவர் ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டு சுற்றுகளுக்கு இடையே கோரிய அதே முன்மொழிவை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மாக்ரோனின் கீழ் பிரதம மந்திரியாக சேவையாற்றுவதற்கான முன்மொழிவை, மீண்டும் கூறி வருகிறார்.
பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் அவர் தன்னைத்தானே போர் மற்றும் சமூக சமத்துவமின்மையின் ஒரு எதிர்ப்பாளனாக காட்டியதன் மூலமாக மெலோன்சோன் ஒரு கணிசமான வாக்குகளை வென்றார். ஆனால் சனிக்கிழமை கூட்டமோ, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உடனான நாடாளுமன்ற உடன்படிக்கைகளுக்கு மெலோன்சோனின் அழைப்புகளுக்கும், சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’ égalité socialiste – PES) அழைப்பான மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களை அரசியல்ரீதியில் அணிதிரட்டி அவர்களை தயாரிப்பு செய்ய ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாம் சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கான அழைப்பிற்கும் இடையிலான வர்க்க இடைவெளியை அப்பட்டமாக எடுத்துக்காட்டியுள்ளது.
பிரதிநிதிகளுடனான ஒரு மணி நேர உரையில், மெலோன்சோன் அறிவிக்கையில், “அடிபணியா பிரான்ஸ் மக்ரோனிச அரசியலை தோற்கடிக்க ஒரு புதிய அரசியல் கூட்டியக்கத்தை (cohabitation) ஒழுங்கமைக்க வாக்காளர்களுக்கு முன்மொழிகிறது. நம்மால் இதை செய்ய முடியும், இது நம் சக்திக்கு உட்பட்டதே, நல்ல காலம் பிறக்கட்டும்!” என்றார். “கூட்டியக்கம்" என்ற சொற்பதம், ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் ஒரு சூழலைக் குறிக்க பயன்படுத்துவதாகும். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டை ஆளும் மற்றும் ஒரு புதிய நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறும் நோக்கத்துடன் நாம் ஒவ்வொரு இடத்திலும் வேட்பாளர்களை நிறுத்தி வருகிறோம்,” என்றார்.
பிரதம மந்திரியாக இருந்து, மக்ரோனின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அவரால் மக்ரோனுக்கு வழிகாட்டி உதவ முடியுமென்பதை அவர் விவரித்தார்: “மக்களின் சந்தோஷத்தை எந்த தரப்பில் காணலாம் என்பதை அறிந்து வைத்துள்ள புத்திசாலி மனிதர்களின் கரங்களை உறுதியாக பிடித்துக் கொள்வதன் மூலமாக இந்த இளைஞர் அவரின் முட்டாள்தனங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
மக்ரோன் மீது மெலோன்சோன் அர்த்தமற்ற பிரமைகளை விதைத்து வருகிறார். ஆழ்ந்த சிக்கன நடவடிக்கை திட்டங்கள் மற்றும் இராணுவவாதத்திற்கான மக்ரோனின் திட்டங்கள் தனிநபர் முட்டாள்தனங்களின் விளைபொருள் அல்ல, மாறாக முதலாளித்துவ நெருக்கடியின் விளைபொருளாகும். சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் ஒரு முன்னாள் அமைச்சரும் மற்றும் ரோத்ஸ்சைல்ட் வங்கியின் நிர்வாகியுமான மக்ரோன், வங்கிகள், இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகள் என ஆளும் வர்க்கத்தின் மிகவும் சக்தி வாய்ந்த பிரிவுகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார். இவ்வாறு இருக்கையிலும், மக்களை எவ்வாறு சந்தோஷமாக வைத்திருப்பது என்று அவருக்கு தெரியும் என்று மெலோன்சோன் ஒவ்வொருவருக்கும் மறுஉத்தரவாதம் வழங்கி, மக்ரோனுக்கு "புத்திசாலித்தனமான" ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒன்றுக்கும் உபயோகமற்ற ஒரு திட்டத்தை முன்மொழிகிறார்.
இந்த கொள்கையானது, முதல் சுற்று ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னர் நேரடியாக மக்ரோனுக்கான மெலோன்சோனின் பின்புல ஆதரவினது தொடர்ச்சியாக உள்ளது. பொலிஸ்-அரசு கொள்கைகள், சிக்கன நடவடிக்கை கொள்கைகள் மற்றும் போரைத் திணிப்பதிலும் மக்ரோன் ஒன்றும் லு பென்னுக்குக் குறைந்தவர் இல்லை என்று எச்சரித்து, பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) மக்ரோன் மற்றும் நவ-பாசிசவாத தேசிய முன்னணி வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு இடையிலான இரண்டாம் சுற்று தேர்தல்களைச் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்தது. தேர்தல்களில் அவரது ஆதரவாளர்கள் அதிகரித்தளவில் வாக்களிப்பதை புறக்கணித்திருந்த போதினும் கூட, இரண்டாம் சுற்றில் வாக்களிப்பதில் அவர் என்ன திட்டமிட்டிருந்தார் என்பதை அவர் கூற மறுத்ததுடன், மக்ரோனுக்கான ஆதரவும் மற்றும் புறக்கணிப்பும் இரண்டுமே அவர் அமைப்பில் இருப்பதாக கூறினார்.
மெலோன்சோன் தனது வாக்காளர்களுக்கான அவரது அரசியல் பொறுப்பை கோழைத்தனமாக கைத்துறந்ததானது, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு அரசியல் பொறியை வடிவமைக்க செய்யப்பட்டதாகும். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் அங்கே வெடிப்பார்ந்த சமூக கோபம் நிலவுகின்றன, வர்க்க போராட்டமானது வாழ்வின் அன்றாட யதார்த்தம் என்று பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கூறுகின்றனர் மற்றும் பிரெஞ்சு இளைஞர்களில் 64 சதவீதத்தினர் கட்டாய இராணுவச் சேவையை எதிர்க்கின்றனர். மெலோன்சோன் இந்த அதிகரித்து வரும் அமைதியின்மைக்கும் மற்றும் ஒரு திவாலான நாடாளுமன்ற முன்னோக்கின் முட்டுச்சந்திற்குள் கொண்டு சென்று கொண்டிருக்கும் மக்ரோன் மீது தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் கோபத்திற்கும் தலைமை கொடுக்க உத்தேசிக்கிறார்.
பிரான்சின் ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தி உள்ள அவசரகால நிலையை மக்ரோன் பேணுவார் என்பதாகவும் மற்றும் ஆழமாக மக்கள் மதிப்பிழந்த சமூக கொள்கைகளைத் திணிக்க அதை பயன்படுத்துவார் என்றும் பரவலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மக்ரோன் பெருநிறுவன வரிகளைக் குறைக்கவும் மற்றும் 70 சதவீத ஜனத்தொகையின் எதிர்ப்பு மற்றும் பாரிய போராட்டங்களின் முகத்திற்கு முன்னால் கடந்த ஆண்டு திணிக்கப்பட்ட தொழிலாளர் சட்டம் வழங்கும் கட்டமைப்பைப் பயன்படுத்தி உத்தரவாணை மூலமாக ஐரோப்பிய ஒன்றிய சிக்கனக் கொள்கைகளை திணிக்கவும் சூளுரைத்துள்ளார்.
இத்தகைய நிலைமைகளின் கீழ், மெலோன்சோனே கூட மக்ரோன் மீது சில விமர்சனங்களை வைக்க நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக உணர்கிறார். நாடாளுமன்றத்தின் வழியில் உத்தரவாணைகள் மூலமாக அவர் கொள்கைகளைக் கொண்டு செல்ல மக்ரோனுக்கு "அவசரகால அதிகாரங்கள்" தேவைப்படுவதாக அவர் குறைகூறினார்: “முதலில் மக்ரோன் உத்தரவாணை ஆட்சியை ஆமோதிக்குமாறு அவர் நிர்வாகிகளிடம் கோருவார், அதாவது அவர்களும் அதை ஆமோதித்து அங்கீகாரம் வழங்குவார்கள்.”
வாக்காளர்கள் தேசிய நாடாளுமன்றத்தில் FI க்கு பெரும்பான்மையை வழங்குவார்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் அவர் வலியுறுத்துகையில், மக்ரோனுக்கு எதிரான ஒரு நாடாளுமன்ற போராட்டம் இன்னமும் நீடித்திருப்பதாக தெரிவித்தார். வாக்காளர்கள் “FI க்கு ஒரு பெரும்பான்மை வழங்கினால், பின்னர் FI இன் வேலைத்திட்டமான பொதுமக்களின் எதிர்காலத்திற்கு பொதுவாக பொருந்தக்கூடிய ஒரு பெரும்பான்மையை நீங்கள் கொண்டிருப்பீர்கள்,” என்றார்.
உண்மையில் FI தேர்தல் வேலைத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருப்பதில் இருந்து ஒரு மிகவும் சிறியளவிலான சமூக விட்டுக்கொடுப்பைக் கூட மக்ரோன் ஜனாதிபதி பதவியின் கீழ் பெறுவது சாத்தியமில்லை. மக்ரோன் வெறுமனே ஆழ்ந்த சிக்கனக் கொள்கைகளுக்கும், அவசரகால நிலைக்கும் மட்டும் பொறுப்பேற்றிருக்கவில்லை, மாறாக மீண்டும் கட்டாய இராணுவச் சேவையைக் கொண்டு வருவது உட்பட பாரியளவில் இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கும் பொறுப்பேற்றுள்ளார், இதை மெலோன்சோனுமே கூட ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆதரித்தார். மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பிரதான நேட்டோ போர்களில் இணைய தயாரிப்பு செய்வதற்காக மக்ரோன் கணக்கு வழக்கின்றி பில்லியன் கணக்கான யூரோவை செலவிட்டவர் என்ற வகையில், அவரின் கீழ் சமூக நிதிவழங்கல் சர்வசாதாரணமாக இல்லாமல் போகும்.
மெலோன்சோன் வேலைத்திட்டத்தின் திவால்நிலைமை ஓர் இன்றியமையாத முரண்பாட்டை அடிக்கோடிடுகிறது. ஊதிய உயர்வுகள், மாணவர்களுக்கான நிதியுதவிகள் மற்றும் ஏனைய பல விட்டுக்கொடுப்புகளை முதலாளித்துவத்தின் கீழ் பெறுவதற்கு அவர் முன்மொழிகிறார், இவை அவர் வேலைத்திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் முதலாளித்துவத்தை புரட்சிகரமானரீதியில் தூக்கியெறிந்து ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிசத்தை கட்டமைக்காமல் இவற்றைப் பெற முடியாது. சமூக கோரிக்கைகளை முன்வைப்பதால் தன்னைத்தானே அவர் தீவிர கொள்கையாளராக முன்நிறுத்தி கொள்கின்ற அதேவேளையில், திவாலான முதலாளித்துவ நாடாளுமன்ற முன்னோக்குடன் தொழிலாள வர்க்கத்தைக் கட்டி போட அவர் பெரும்பிரயத்தனத்துடன் முயன்று வருகிறார்.
இது மெலோன்சோனின் அரசியல் வரலாற்றில், குறிப்பாக ட்ரொட்ஸ்கிசத்துடனான அவரின் விரோதத்தில் வேரூன்றியுள்ளது. அவர் 1971 இல் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்பும் ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) முறித்துக் கொண்ட Organisation communiste internationaliste (சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு - OCI) இல் இணைந்தார். இப்போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவாக PES (பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி) உள்ளது. OCI தன்னை சோசலிஸ்ட் கட்சியினுள்ளும் அதன் அரசியல் சுற்றுவட்டத்திலும் ஆழமாக ஒருங்கிணைத்துள்ளது.
லியோனல் ஜோஸ்பன் OCI இன் ஒரு அங்கத்தவராகவும் அதேவேளை சோசலிஸ்ட் கட்சியின் முன்னணி அங்கத்தவராகவும் செயற்பட்டு, சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் உயர்மட்ட உதவியாளராக ஆகி, பின்னர் பிரான்சின் பிரதம மந்திரியானார். சோசலிஸ்ட் கட்சி, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் பசுமைக் கட்சி ஆகியவற்றின் 1997-2002 பன்முக இடது அரசாங்கத்திற்குத் தலைமை வகித்த ஜோஸ்பன், பழமைவாத ஜனாதிபதி ஜாக் சிராக் உடன் "கூடி இயங்கியது.” மெலோன்சோன், ஜோஸ்பன் அரசாங்கத்தில் ஒரு சோசலிஸ்ட் கட்சி அமைச்சராக இருந்தார், இதன் பிற்போக்குத்தனமான கொள்கைகள் ஆழமாக மக்கள் மதிப்பிழந்திருந்தன.
வில்ஜுயிஃப் (Villejuif) கூட்டத்தில், மெலோன்சோன் சலிப்பூட்டும் விதத்தில் அவருக்கும் மக்ரோனுக்கும் இடையே ஒரு பலனளிக்கும் கூட்டரசாங்கத்தை அமைப்பதன் மூலமாக, ஜோஸ்பனின் வழியை அடியொற்ற FI வாக்காளர்கள் அவரை அனுமதிக்க வேண்டுமென்ற முன்னோக்கை முன்னெடுத்தார். அவர் கூறுகையில், “அதை ஒருவர் என்ன மாதிரியாக விமர்சித்தாலும், ஐந்தாண்டுகளுக்கான லியோனல் ஜோஸ்பனின் கூட்டியக்கமானது பிரெஞ்சு பொருளாதார வாழ்வில் மிகவும் சாதகமான தருணங்களில் ஒன்றாக இருந்தது,” என்றார்.
பன்முக இடது அரசாங்கத்தை நம்பிக்கைக்குரியதாக மெலோன்சோன் குணாம்சப்படுத்துவது, தொழிலாள வர்க்கத்தின் மீதான அவரது விரோதத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. பாரியளவிலான பணி நீக்கங்கள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தியமை உட்பட ஜோஸ்பன் தொடர்ச்சியான சிக்கன நடவடிக்கைகளை நடத்தியதுடன், ஆப்கான் போரிலும் பங்குபற்றினார். இதன் இறுதி விளைவாக 2002 ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றிலேயே ஜோஸ்பன் அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டார், அதேவேளையில் ஜோஸ்பனை போலவே சோசலிஸ்ட் கட்சியும் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டு, ஜோன்-மரி லு பென் மற்றும் சிராக்கிற்கு இடையே இரண்டாம் சுற்றை அமைத்தது.
2017 இல் மக்ரோனுடன் சேர்ந்ததைப் போலவே, மெலோன்சோனும் மற்றும் OCI இன் அரசியல் வழிதோன்றல்களும் 2002 இல் லு பென்னுக்கு எதிராக சிராக்கை ஆதரித்தனர். கடந்த 15 ஆண்டுகளில், அவர்களின் திவாலான கொள்கைகள் தொழிலாளர்களுக்கு பேரழிவுகளை மட்டுமே உருவாக்கி உள்ளன. இவை சிக்கன திட்டங்கள், போர் மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை ஆதரித்து மேற்கொண்டு வலதிற்கு நகர்ந்துள்ள அதேவேளையில், 2002 மற்றும் 2017 க்கு இடையே தேசிய முன்னணி வாக்குகளை இரட்டிப்பாக்கிக் கொண்டு அரசியல் ஸ்தாபகத்தில் ஒரு பிரதான சக்தியாக மாறும் வகையில், கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து முன்னேறுவதற்கும் அனுமதித்துள்ளன.
மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வெடிக்கவிருக்கும் பாரிய போராட்டங்களுக்கு ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்குடன் தொழிலாளர்களை அரசியல்ரீதியில் ஆயுதபாணியாக்கவும் மற்றும் அவர்களுக்கு ஒரு சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டை வழங்கவும் ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாம் சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு PES விடுத்த அழைப்பின் சரியான தன்மையை மீண்டுமொருமுறை மெலோன்சோனின் நிலைப்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன. மெலோன்சோன் போன்ற இந்த சக்திகள், தொழிலாள வர்க்கத்தை முற்றிலும் திவாலாகி உள்ள நாடாளுமன்ற அரசியலின் முட்டுச்சந்திற்குள் சிக்க வைக்க முனைகின்றன. பிரமைகளையும் அரசியல் பொய்களையும் தவிர முன்மொழிவதற்கு அவற்றிடம் வேறொன்றுமில்லை.