Print Version|Feedback
Hundreds of migrants drown in Mediterranean
மத்திய தரைக்கடலில் மூழ்கி நூற்றுக் கணக்கான புலம்பெயர்வோர் உயிரிழந்தனர்
By Bill Van Auken
9 May 2017
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு UNHCR இன் தகவல்படி, கடந்த வாரயிறுதியில் மத்தியத் தரைக் கடலைக் கடக்க முயன்று 200 க்கும் அதிகமான புலம்பெயர்வோர் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. சட்ட விரோதமாக நாடு கடத்துபவர்களால் இரப்பர் படகுகளில் ஏற்றப்பட்டிருந்த இவர்கள், அந்த இரப்பர் படகு காற்று போய் சுருங்கி மூழ்கியதில் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
லிபிய கடல் ரோந்து படையால் காப்பாற்றப்பட்டு உயிர்பிழைத்தவர்களில் ஏழு பேர், அந்த படகில் கூட்டமாக ஏற்றப்பட்ட 170 பேரில் அவர்கள் மட்டுமே மிஞ்சி இருப்பதாக தெரிவித்தனர். சனிக்கிழமை குறைந்தபட்சம் 120 புலம்பெயர்ந்தோரை ஏற்றி வந்த மற்றொரு படகு மூழ்கியதில், இன்னும் 60 பேர் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென நம்பப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் சிலரின் சடலங்கள் லிபிய தலைநகர் திரிபோலியின் மேற்கு கரையோரம் கரை ஒதுங்கியது. திரிபோலியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் மேற்கில் உள்ள ஜாவியாவின் Red Crescent அமைப்பினது செய்தி தொடர்பாளர் மொஹநத் க்ரிம்மா கூறுகையில், அங்கே கடற்கரையோரங்களில் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
“அந்த எல்லா சடலங்களும் பெண்களுடையது, அதில் ஒரு வயதுக்கு குறைந்த ஒரு பெண் குழந்தையின் ஒரு சடலமும் உள்ளது,” என்றார்.
இந்த சமீபத்திய துயரங்களுக்கு முன்னரே கூட, UNHCR அறிவிக்கையில், இந்தாண்டு இது வரையில் வட ஆபிரிக்காவிலிருந்து தெற்கு இத்தாலிக்கு சட்டவிரோதமாக எல்லைக் கடந்து வரும் முயற்சியில் 1,150 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்திருந்தது.
இந்தாண்டு இதுவரையில் 43,000க்கும் அதிகமான புலம்பெயர்வோர் இத்தாலியை வந்தடைந்துள்ளனர், இது 2016 இன் இதே ஆண்டை விட 30 சதவீதம் அதிகமென ஞாயிறன்று ஐக்கிய நாடுகள் முகமை அறிவித்தது. UNHCR தலைவர் Filippo Grandi கூறுகையில், இந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் எல்லைக் கடந்து வர முயற்சிக்கும் ஒவ்வொரு 35 பேரில் ஒருவர் உயிரிழப்பதாக தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை ஐயத்திற்கிடமின்றி இன்னும் அதிகமாக இருக்கும்.
உயிரைப்பணயம் வைத்து எல்லைக் கடந்து வர முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்திருப்பதானது, வெப்பமான சூழல் தொடங்கி இருப்பதுடன் பிணைந்துள்ளது. எவ்வாறிருப்பினும், ஐரோப்பா எங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்கள் பின்பற்றி வரும் வலதுசாரி புலம்பெயர்வோர் விரோத கொள்கைகளும் இதில் மிகப்பெரும் பாத்திரம் வகிக்கின்றன.
புலம்பெயர்வோர் உயிரைப் பணயம் வைத்து எல்லை கடக்கும் இடங்களில் உலகின் வேறெந்த இடத்தை விடவும் வட ஆபிரிக்காவிலிருந்து இத்தாலிக்கு செல்லும் கடல் வழியே மிகவும் அபாயகரமானதாக உள்ளது, இது மத்திய தரைக்கடலை எண்ணிக்கையின்றி ஆயிரக் கணக்கானவர்களுக்கான கடல் கல்லறையாக மாற்றியுள்ள போதினும், ஐரோப்பாவை அடைய முயல்பவர்களுக்கு அந்த வழி மட்டுமே தோற்றப்பாட்டாளவில் ஒரே சாத்தியக்கூறாக உள்ளது, இவர்களில் பலர் ஏகாதிபத்தியம் அவர்களது நாடுகள் மீது திணித்த கொடூரங்களில் இருந்து தப்பிப்பதற்காக மட்டும் முயலவில்லை, மாறாக ஐரோப்பாவில் ஏற்கனவே தங்கியுள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதற்காகவும் அங்கே வர முயற்சிக்கின்றனர். ஐரோப்பாவை அடைய முயலும் அகதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இப்போது லிபியாவிலிருந்து தொடங்குகின்றனர். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இவர்களில் 5,000 க்கும் அதிகமானவர்கள் கடந்த ஆண்டு மத்திய தரைக்கடலில் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் பால்கன் பாதை என்றழைக்கப்படுவதை ஒட்டிய அதன் வெளி எல்லைகளை முறுக்கிய கம்பிச் சுருள் வேலிகளைக் கொண்டு மூடியும், அகதிகளை அடைத்து வைக்க தடுப்புக்காவல் முகாம்களை அமைத்தும், பாரிய வெளியேற்றங்களை நடத்தியும், ஒரு "படையரண் ஐரோப்பாவை" உருவாக்க வேலை செய்து வருகிறது. அது அகதிகளைப் பாரியளவில் வெளியேற்றுவதற்கு உதவவும் மற்றும் துருக்கியில் இருந்து ஐரோப்பாவிற்கு வரும் ஏனையவர்களை தடுக்கவும், 6 பில்லியன் யூரோ மற்றும் அங்காராவிற்கான அரசியல் சலுகைகளுக்கு பிரதியீடாக துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனது சர்வாதிகார ஆட்சியுடன் ஒரு வெட்கக்கேடான உடன்பாட்டையும் எட்டியுள்ளது.
இப்போது, ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களது ஆதரவுடன் இத்தாலி, திரிப்போலியில் ஜனாதிபதி ஃபயெஜ் அல்-சராஜ் தலைமையில் உள்ள மேற்கு ஆதரவிலான லிபியாவின் தேசிய நல்லிணக்க அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதன் மூலமாக இதேபோன்ற ஏற்பாடுகளைச் செய்ய முயன்று வருகிறது. இந்த ஸ்திரமற்ற ஆட்சி, லிபிய தலைவர் மௌம்மர் கடாபியை ஆட்சியிலிருந்து கவிழ்த்து படுகொலை செய்வதில் போய் முடிந்த ஆட்சி மாற்றத்திற்கான 2011 அமெரிக்க-நேட்டோ போருக்குப் பின்னர் இருந்து போட்டி ஆயுதக்குழுக்களது வன்முறை மேலோங்கியுள்ளதும் மற்றும் உள்நாட்டு போரில் சிக்கியுள்ளதுமான அந்நாட்டின் ஒரு பிரிவினர் மீது மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
லிபிய கடல்பகுதிகளில் இருந்து அகதிகள் ஒருபோதும் வராதிருக்க அவர்களைக் கொண்டு வரும் படகுகளை நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள லிபிய கடல் ரோந்து படைக்கு, வரவிருக்கும் வாரங்களில், குறைந்தபட்சம் 10 ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள், நான்கு சக்கர வாகனங்கள், தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் ஏனையவற்றை இத்தாலி வழங்க உள்ளது.
புலம்பெயர்ந்தவர்களை வேட்டையாடி திரும்பி செல்ல செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த இழிவான வேலையை செய்ய முடுக்கி விடப்பட்டுள்ள லிபிய கடல் ரோந்துப்படை, அதன் காட்டுமிராண்டித்தனம் மற்றும் ஊழல்களுக்கு இழிவார்ந்து பெயர்போனதாகும். அது ஆழக்கடல்களில் புலம்பெயர்ந்தவர்களை சுட்டு வீழ்த்தி, படகுகளை மூழ்கடித்து, அகதிகளுக்கு உதவ முயன்ற மனிதாபிமான குழுக்களைத் தாக்கி உள்ளதுடன், சட்டவிரோதமாக நாடு கடத்துபவர்களுடன் கூட்டு சேர்ந்து இலாபம் கண்டுள்ளது.
லிபியாவிலிருந்து அகதிகள் புறப்படுவதை தடுப்பதற்காக, இத்தாலியும் ஐரோப்பிய ஒன்றியமும் நரக நிலைமைகள் என்று மட்டுமே விவரிக்கக்கூடிய நிலைமைகளுக்கு அவர்களை உட்படுத்துகின்றன. அகதிகள் அந்த அரசாங்கத்தாலும் அத்துடன் ஆயுதக்குழுக்கள் மற்றும் குற்றகரமான கைக்கூலி கும்பல்களாலும் நடத்தப்படும் தடுப்புக்காவல் முகாம்களின் ஒரு வலையமைப்பிற்குள் அடைக்கப்பட்டு, அங்கே அவர்கள் திட்டமிட்டு பலவந்தப்படுத்தப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள் மற்றும் விசாரணையின்றி கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களைக் கடத்தி வந்தவர்கள் கோரும் பணத்தைக் கொடுக்க தவறுபவர்கள் பெரும்பாலும் கொல்லப்படுகிறார்கள் அல்லது பட்டினியில் சாக விடப்படுகிறார்கள். ஏனையவர்கள் திரிப்போலியில் வாகன தரிப்பு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நவீன-கால அடிமை சந்தைகளில் —பெண்களை பாலியியல் அடிமைகளாகவும் மற்றும் ஆண்களை உடலுழைப்பு அடிமைகளாகவும்— விற்கப்படுகிறார்கள்.
இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இப்போது புலம்பெயர்பவர்களை லிபியாவல் அடைத்து வைக்க விரும்புகின்ற நிலையில், அங்கே நிலவும் நிலைமைகளில் இருந்து தப்பிக்க முயலும் பெரும்பிரயத்தன நடவடிக்கைகளினாலேயே, பெரும்பாலும், உயிரைப் பணயம் வைத்து மத்தியத்தரை கடலைக் கடக்க முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
துணை-சஹாரா ஆபிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் மற்றும் ஒடுக்குமுறையில் இருந்து தப்பித்து வரும் அகதிகளுக்கு எதிராக நேரடியான ஆயுத வன்முறை அச்சுறுத்தலை முன்னிறுத்தியோ, அல்லது, மிக குறைந்தபட்சமாக, அவர்களை சஹாரா பாலைவனத்திற்குள்ளும் மற்றும் அவர்கள் வாழ்க்கை உடனடி அச்சுறுத்தலில் இருக்கும் நாடுகளுக்குள்ளும் திருப்பி அனுப்பியோ, நைஜர் மற்றும் சாட் ஒட்டியுள்ள தனது எல்லைகளை மூடுவதற்கு, இத்தாலி தெற்கு லிபியாவில் உள்ள பழங்குடியினர் குழுக்களுடன் ஓர் உடன்பாட்டையும் எட்டியுள்ளது.
இத்தாலிய உள்துறை அமைச்சர் Marco Minniti அவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மனிதாபிமான சிலுவை போராக சித்தரித்தார். “இத்தாலியில் வந்திறங்குபவர்கள் சட்டவிரோத மனித கடத்தல்காரர்களின் வன்முறையான கரங்களில் இருந்து வந்தடைகின்றனர்,” என்றவர் தெரிவித்தார். “இந்த தலைவிதியிலிருந்து அவர்களை காப்பாற்ற நாங்கள் அனைத்தும் செய்து வருகிறோம்,” என்றார். இந்த பாசாங்குத்தனம் மூச்சடைக்க வைக்கிறது. மத்திய தரைக்கடலுக்குள் அவர்களை அனுப்புவதன் மூலம் இலாபமீட்ட முடிந்துள்ள இந்த "சட்டவிரோத மனித கடத்தல்காரர்களின் வன்முறையான கரங்களில்" நாதியிழந்த இந்த அகதிகளுக்கு என்ன தலைவிதியை தீர்மானிக்கலாமென அவர் எதிர்பார்க்கிறார் என்பதற்கு Minniti எந்த குறிப்பும் வழங்கவில்லை.
இதற்கிடையே இத்தாலிய நாடாளுமன்றம், நிராகரிக்கப்பட்ட தஞ்சம் கோருபவர்களின் மேல்விசாரணைகளை கூர்மையாக குறைக்கும் சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ள அதேவேளையில் அந்த அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக பட்டியலிடப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக 16 தடுப்புக் காவல் மையங்களை திறக்கவும் தயாரிப்பு செய்து வருகிறது.
சிரியா, லிபியா, யேமன், ஈராக், சோமாலியா மற்றும் ஏனைய இடங்களில் அமெரிக்க ஆதரவிலான போர் கொடூரங்களில் இருந்தும், துணை-சஹாரா ஆபிரிக்கா எங்கிலும் ஏகாதிபத்தியம் திணித்த பயங்கரமான ஒடுக்குமுறை மற்றும் ஏழ்மையாலும், ஐரோப்பாவிற்கு தப்பி வருபவர்களின் எண்ணிக்கையானது, உலகெங்கிலும் இத்தகைய நிலைமைகளால் உருவாகி உள்ள 65.3 மில்லியன் அகதிகளில் ஒரு சிறிய எண்ணிக்கை தான். இருப்பினும் அவர்களை வெளியிலேயே நிறுத்துவதும், அவர்களை ஒடுக்கி நாட்டை விட்டு வெளியேற்றுவதும், அமெரிக்காவில் போலவே ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலின் குவிமையமாக மாறியுள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம், மெக்சிக்கன் எல்லையில் சுவர் எழுப்புவதற்கும் மற்றும் புலம்பெயர்வோருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் மற்றும் மிரட்டும் ஒரு பிரச்சாரத்தில் எல்லை ரோந்துப்படை மற்றும் ICE முகவர்களைப் பயன்படுத்த முறையிட்டுள்ளது.
அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும், உலகெங்கிலும், அரசாங்கங்கள் மற்றும் வலதுசாரி அரசியல் இயக்கங்களானது, முதலாளித்துவ அமைப்பு முறை உருவாக்கி உள்ள இந்த பாரிய வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கை தரங்கள் மற்றும் சமூக நெருக்கடிக்கு புலம்பெயர்ந்தவர்களை பலிக்கடா ஆக்க முயன்று வருகின்றன.