Print Version|Feedback
After Manchester attack, France prolongs state of emergency
மான்செஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸ் அவசரகால நிலையை நீடிக்கிறது
By Francis Dubois
25 May 2017
2015 பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட பிரான்சின் அவசரகால நிலையை நவம்பர் 1 வரை நீட்டிப்பதற்கு, புதன்கிழமையன்று, புதிதாக-தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் நிர்வாகமானது மான்செஸ்டரில் மே 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலை பற்றிக் கொண்டது. எலிசே ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஒரு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குப் பின்னர் பிரதமர் எடுவார்ட் பிலிப் இந்த நடவடிக்கையை அறிவித்தார்.
மே 17 அன்று மக்ரோன் பதவியேற்றது முதலாக, அவரது நிர்வாகம் அவசரகால நிலையை நீட்டிப்பதற்கு ஒரு வழியை எதிர்பார்த்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் போதே, குறிப்பாக முதல் சுற்றுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக Champs-Elysées இல் ஒரு போலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதான ஒரு தாக்குதலுக்குப் பின்னர், இத்தகைய ஒரு நடவடிக்கை விவாதிக்கப்பட்டு வந்திருந்தது. “நீண்டதொரு காலமாக நீக்கப்படாதிருக்கும் ஒரு அவசரகால நிலையில் நாம் இருக்கிறோம்” என்று வலது-சாரி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன் அறிவித்திருந்தார், அதனை மக்ரோனும் மறுக்கவில்லை. இரண்டாம் சுற்றில் மக்ரோனுக்கு வாக்களிக்க அழைப்புவிடும் நிலைக்கு ஃபிய்யோன் சென்றிருந்தார்.
“இப்போதிருக்கும் கூடிய சட்டரீதியான அரசியல்சட்ட வழிவகைகளை வலுப்படுத்துவதற்கான இறுதியான நடவடிக்கைகளை சட்டத்தில் உட்புகுத்துவதற்கான ஒரு மசோதாவை ஆய்வு செய்வதற்கு அவசியமான காலம் வரை இந்த நீடிப்பு வரம்புபட்டதாக இருக்கும்” என்று பிலிப் புதனன்று அறிவித்தார். அதாவது, அவசரகால நிலையும் அது அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைத்திருக்கின்ற நிலையும் இதேவகையான நிரந்தர நடவடிக்கைகளைக் கொண்டு பிரதியிடப்பட இருக்கின்றன, அரசினால் வழக்கமாகவும் நிரந்தரமாகவும் பயன்படுத்தப்படும் வகையில் அவை அரசியல்சட்டத்தில் அல்லது சட்டத்தில் சேர்க்கப்படவும் இருக்கின்றன.
ஜனாதிபதிக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டதாக இருக்கின்ற ஒரு “செயற்படை” உருவாக்கப்படுவதையும் அரசாங்கம் அறிவித்தது, இது தனது முக்கியமான “பாதுகாப்பு” கொள்கைகளில் ஒன்று என்பதை மக்ரோன் தனது பிரச்சாரத்தின் போது மீண்டும் மீண்டும் கூறி வந்திருந்தார். இது நிர்வாகத்திற்குள் இருக்கின்ற நிரந்தரமான ஊழியர் படையின் வகையை ஒத்ததாக, வரையறுக்கப்படாத அளவுடனான அதிகாரங்களைக் கொண்டதாய் இருக்கும்; உளவு சேவைகள், போலிஸ் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் இதில் இடம்பெறுவார்கள்; “பாதுகாப்பு மற்றும் உளவு சேவைகளை ஒருங்கிணைப்பது” தான் இதன் குறிப்பிட்ட பணியாகும்.
அவசரகால நிலையானது, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு, குறிப்பாக முந்தைய சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் தொழிலாளர்-விரோத தொழிலாளர் சட்டத்திற்கு, எதிராக எழுகின்ற சமூக எதிர்ப்பின் மீதே குறிவைத்திருக்கிறது என்பது கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், பெருமளவில் தெளிவாகியிருக்கிறது. அவசரகால நிலையால் போலிசுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பரந்த அதிகாரங்களைக் கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது எதிர்ப்பு, மிருகத்தனமாய் ஒடுக்கப்பட்டு தொழிலாளர் சட்டம் திணிக்கப்பட்டுள்ளது. ஒரு சமூக எதிர்ப்புரட்சிக்கு நிகரான “கட்டமைப்பு” சீர்திருத்தங்களை (“structural” reforms) திணிப்பதற்கு மக்ரோனின் அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது. தொழிலாளர்களிடம் இருந்து பரந்த மற்றும் வலிமையான எதிர்ப்பு வரும் என்பதை அது எதிர்பார்க்கிறது.
தனது அரசாங்கத்தின் பிரதான நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும், தொழிலாளர் சட்டத்தை வலுப்படுத்துவதை மக்ரோன் செவ்வாய்கிழமையன்று அறிவித்தார், வரவிருக்கும் வாரங்களில் உத்தரவு ஆணைகளின் மூலமாக இது திணிக்கப்பட இருக்கிறது. இந்த நடவடிக்கைகள், தனித்தனி நிறுவனங்களின் மட்டத்தில் வேலை ஒப்பந்தங்கள் பற்றி பேரம்பேசுவதன் மூலமாக தொழிலாளர்களை பிளவுபடுத்த வழிவகுத்து, முதலாளிகளுக்கு கூடுதல் சக்தியை வழங்கும்; நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் விச்சி ஆட்சியின் போது பாசிசத்திற்கு எதிராக நடத்தப்பட்டவை உள்ளிட பல தசாப்தகால போராட்டங்களின் மூலமாக ஈட்டப்பட்ட சமூக உரிமைகளுக்கு குழிபறிக்கும். இந்த மாற்றங்களின் செயற்பரப்பெல்லையை தீர்மானிப்பதற்கு தொழிற்சங்கங்கள் விரிவான அதிகாரங்கள் கொண்டிருக்கும்.
மக்கள் அபிப்ராயத்தில் தனக்கு எதிராய் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டதைக் கண்டு மிரட்சி கண்டிருக்கும் ஒரு மிகக் குறுகலான சமூக அடித்தளத்தைக் கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு மக்ரோன் தலைமை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மக்ரோனுக்கு வாக்களித்தவர்களில் ஏராளமானவர்கள், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென் ஆட்சிக்கு வந்து விடுவதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டே அவ்வாறு செய்தனர். பிராந்திய ஒருமைப்பாட்டு அமைச்சரான ரிச்சார்ட் ஃபெர்றான் மேற்கொண்ட நிதி கையாளல்கள் தொடர்பாக நையாண்டி வார இதழான Le Canard enchaîné நேற்று செய்தி வெளியிட்டதற்கு பின்னர், மக்ரோனின் ”பொது வாழ்க்கை தூய்மை” தம்பட்டங்கள் ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.
பிரிட்டனியில் காப்பீட்டுக் கொள்கைகளுக்கான பொது இயக்குநராக, தனது குடும்பத்திற்கு சாதகமான வகையில் ரியல் எஸ்டேட் (நில, மனை சொத்துக்கள்) பரிவர்த்தனைகளை மேற்பார்வை செய்தவரான ஃபெர்றான் இன் நடவடிக்கைகள் “சட்டவிரோதமானவை” அல்ல என்ற செய்தித்தொடர்பாளர்களது அறிவிப்புடன், அரசாங்கம் துரிதமாக தற்காப்பு நிலைக்குள் சென்றது. “வெளியாவதற்கு முன்பே அந்த செய்தியைக் குறித்த ’தவறான புரிதல்’ தோன்றக் கூடும் என்பது குறித்து ஃபெர்றான் கவலைகொண்டிருக்கிறார்” என்று அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கிறிஸ்தோப் காஸ்டனேரை மேற்கோள் காட்டி Le Parisien கூறியது.
மக்ரோன் அரசாங்கம், தனது தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு, பாதுகாப்புப் படைகளையும் தொழிற்சங்கங்களையுமே அடிப்படையாக நம்பியிருக்கிறது. செவ்வாய்கிழமையன்று எலிசே ஜனாதிபதி மாளிகையில் தொழிற்சங்கத் தலைவர்களுடன் அவர் ஒழுங்கமைத்திருந்த கூட்டங்கள் அவர்கள் மீது அவர் நம்பிக்கை வைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டின. அவரது திட்டங்களுக்கு எதிர்ப்பு காட்டப் போவதில்லை என்பதை ஸ்ராலினிச CGT, PS உடன் இணைந்த பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) மற்றும் தொழிலாளர் சக்தி (FO) அனைத்தும் சமிக்கையளித்து விட்டன. மக்ரோன் உத்தரவு ஆணைகள் மூலம் தனது கொள்கைகளைத் திணிப்பதை தொழிற்சங்கங்கள் வாய்மூடி ஏற்றுக் கொண்டு விட்டன.
CGT இன் தலைவரான பிலிப் மார்ட்டினேஸ் மக்ரோனுடனான சந்திப்புக்குப் பின்னர் பின்வருமாறு கூறினார்: “பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை தொடர்பாக அவர் என்னுடன் உடன்படுகிறார் என்று நம்புகிறேன்....அது மிகவும் நல்ல விடயம், ஏனென்றால் அது” PS இன் தொழிலாளர் சட்டம் தொடர்பாக “சென்ற ஆண்டில் மேற்கொண்ட விவாதத்தை தொடர்வதற்கு எங்களை அனுமதிக்கும்.” அவர் மேலும் கூறினார், “வீதிகளில் இறங்குவதா?... பள்ளிகள் திறந்து ஆர்ப்பாட்டங்களுக்கான காலம் தொடங்கும்போது” - அதாவது உத்தரவு ஆணைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு விட்ட பின்னர்- ”நாங்கள் அங்கிருப்போம்”.
“எல்லாமே இமானுவல் மக்ரோன் தனது உத்தரவுகளை எவ்வாறு மேற்கொள்கிறார் என்ற விதத்தைப் பொறுத்திருக்கிறது. எந்த வடிவத்தில் என்றபோதிலும் சட்டமாகல் கட்டத்திற்கு முன்பாக பேச்சுவார்த்தையின் கட்டம் முன்வரும் என்று CFDT நம்புகிறது” என்று CFDT இன் துணை பொதுச் செயலரான வெரோனிக் டெகாக் France Inter வானொலிக்கு தெரிவித்தார்.
FO இன் பொதுச் செயலரான ஜோன்-குளோட் மைய்யி அறிவித்தார்: “இந்தக் கோடையில் பேச்சுவார்த்தைகள் இருக்கும், ஆனால் சில பிரச்சினைகளை மூன்று கூட்டங்களில் தீர்த்து விட முடியாது ... இல்லையேல் எல்லாமே முடங்கி விடும். ஜனாதிபதி ஒரு முடக்கத்தை விரும்புவதாக எனக்குப் படவில்லை”. மைய்யி மேலும் சேர்த்துக் கொண்டார், “முன்அனுமானமாய், அவருக்கு உத்திகளை கையாளுவதற்கு தேவையான கால அவகாசம் உள்ளதாக நான் உணர்ந்தேன்.” உண்மையில் மைய்யி க்கு புதிய அரசாங்கத்துடன் நெருங்கிய உறவுகள் உள்ளது, மைய்யி இன் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஸ்ரெபான் லார்டியை தொழிற்துறை அமைச்சர் மூரியேல் பெனிக்கோ தனது ஒரு ஆலோசகராய் பணியமர்த்தியுள்ளார்.
இவற்றிற்கு கைமாறாக, தொழிற்சங்கங்கள் நேரடியாகவும் வெளிப்படையாகவும் முதலாளிகளால் நிதியாதாரமளிக்கப்பட வழியமைத்துத் தருவது மக்ரோனின் திட்டங்களில் ஒன்றாய் இருக்கிறது. புரட்சி எனும் அவரது புத்தகத்தில் “தொழிலாளர்கள், தொழில்நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற நிதி வளங்களை தாங்கள் விரும்பும் தொழிற்சங்கத்தை நோக்கி நோக்குநிலையமைத்துக் கொள்கிறதான, தெளிவான நிதியாதார பொறிமுறை” குறித்து அவர் பேசுகிறார். தொழிற்சங்கங்கள் அரசால் நேரடியாய் நிதியாதாரமளிக்கப்படுகிறதான விச்சி-சகாப்த நடைமுறைகளை முன்னுதாரணமாய் கொண்டதான, மரின் லு பென்னின் திட்டத்தின் அதே திசையில் தான் அடிப்படையில் இந்த நடவடிக்கையும் பயணிக்கிறது.
தொழிற்சங்க அதிகாரத்துவங்களை உடந்தையாகக் கொண்டு, முதலில் அவசரகால நிலையைக் கொண்டும் அதன்பின் வேலைநிறுத்தம் செய்வதற்கான, ஆர்ப்பாட்டம் செய்வதற்கான, சுதந்திரமான நடமாட்டத்திற்கான, கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகள் உட்பட அடிப்படை அரசியல் அமைப்பு சட்ட உரிமைகள் மீதான தாக்குதல்களைக் கொண்டும் -இணையத்தில் தணிக்கை செய்வதற்கான ஆலோசனைகளும் இதில் அடங்கும்- தொழிலாள வர்க்கத்தின்மீது முன்கண்டிராத தாக்குதல்களுக்கு மக்ரோன் அரசாங்கம் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.