Print Version|Feedback
War clouds over South Asia
தெற்காசியாவின் மீது போர் மேகங்கள்
Keith Jones
27 May 2017
மேற்கத்திய ஊடகங்கள் தங்கள் கவனம் மொத்தத்தையும் ட்ரம்ப்பின் மத்திய கிழக்கு விஜயத்தின் - அதனை அவர் ஈரானை மிரட்டுவதற்காக பயன்படுத்திக் கொண்டார்- மீதும், நேட்டோ உச்சிமாநாட்டின் -அங்கே அவர் ஜேர்மனியின் மீது தாக்கினார்- மீதும் குவித்திருக்கும் நிலையில், தெற்காசியாவின் அணுஆயுத வல்லமை கொண்ட இரண்டு போட்டி நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசம் என்பதில் இருந்து படுமோசம் என்ற நிலைக்குச் சென்றிருக்கிறது.
இந்த வாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து தம்பட்டம் அடித்துக் கொண்டன. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் “தண்டிக்கும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களில்” பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னணி நிலைகளை, தான் அழித்து விட்டிருந்ததாகக் கூறியதற்கு ஆதரவான காணொளியை செவ்வாயன்று இந்திய இராணுவம் வெளியிட்டது. பாகிஸ்தான் இந்த கூற்றை மறுத்ததோடு, இந்தியாவையும் பாகிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தனது சொந்த ஆட்டிலறி குண்டுவீச்சைக் கொண்டு அதனினும் பெரிய சேதத்தை விளைவித்திருந்ததாக காட்டுகின்ற தனது சொந்த காணொளியை வெளியிட்டது.
வெள்ளிக்கிழமையன்று, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஊடுருவிய இரண்டு பாகிஸ்தான் வீரர்களை தனது இராணுவம் கொன்று விட்டதாய் இந்தியா கூறியது. அப்படியொரு எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று இஸ்லாமாபாத் மறுத்தது.
இந்த கூற்றுகள் எதிர்கூற்றுகளின் மோதலுக்கு மத்தியில், இரண்டு நாடுகளுமே மேலும் மேலும் ஒரு போர் முனைப்பில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. “மிகக் குறுகியகால அறிவிப்பின்” கீழ் நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்கும்படி 12,000 இந்திய விமானப் படை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி இந்திய இராணுவ உயர் தலைமையிடம் இருந்தான ஒரு கடிதத்திற்கான பதிலிறுப்பாக பாகிஸ்தான் தனது முன்னிலை வான் தளங்கள் அத்தனையையும் “செயல்பாட்டு நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது”.
பாகிஸ்தான் தினசரியான டெய்லி டைம்ஸ் நேற்று “விஸ்வரூபம் எடுக்கும் அணுஆயுதப் போர்?” என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியிட்டது. பாகிஸ்தானிடம் மரபுவழிப் படைவலிமை குறைவாக இருக்கின்ற காரணத்தால் பாகிஸ்தானின் இருதயத்தானமான இஸ்லாமாபாத்தின் மீது ஒரு பாரிய மின்னல்வேகத் தாக்குதலை தொடுக்க இந்தியாவை அழைக்கின்ற தாட்சண்யமற்ற தொடக்க (Cold Start) இராணுவ மூலோபாயத்தை இந்தியா அமல்படுத்துமானால், அப்போது “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது” என்ற ஒரேயொரு தெரிவு மட்டுமே “காட்சியளிப்பதாய் இருக்கும்” என்று அது எச்சரித்தது. இந்தியாவின் படையெடுப்பு தந்திரோபாய அணுஆயுதங்களைக் கொண்டு எதிர்கொள்ளப்படும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் தொடர்ச்சியாக சூளுரைத்து வந்திருக்கிறார்.
வடக்கு அண்டைநாடான சீனாவுடனான இந்தியாவின் உறவுகளும் மோசமாகவே இருக்கின்றன. இரண்டு நாடுகளுமே தமக்கிடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இராணுவப் படைகளையும் உள்கட்டமைப்பையும் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றன என்பதோடு தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் ஆதாரவளங்கள், சந்தைகள் மற்றும் புவியரசியல் செல்வாக்கிற்கான அதிகரித்துச் செல்லும் கடுமையானதொரு மூலோபாயப் போட்டியில் இரண்டும் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவின் ஆளும் உயரடுக்கு அதன் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு, சீனா இராணுவ மற்றும் பொருளாதார ஆதரவளிப்பதை கடுமையாக எதிர்க்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவின் எழுச்சியை மட்டுப்படுத்துவதற்கும், தேவைப்பட்டால், இராணுவரீதியாக அதனை முறியடிப்பதற்குமான தனது முயற்சிக்காய் இந்தியாவை பட்டைதீட்டுவதில் முனைப்புடன் இருக்கிறது என்ற முழுவிழிப்புடன் இருக்கும் சீனா, நீண்டகாலமாகவே இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கே முனைந்து வந்திருக்கிறது. ஜப்பானிய அடாவடித்தனங்களாகவும் ஆத்திரமூட்டல்களாகவும் அது கருதிய விடயங்களில் அது பதிலடி கொடுத்த அதேநேரத்தில், இந்தியாவுடனான கருத்துவேறுபாடுகளை அது தணித்தே காட்டி வந்திருக்கிறது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் கீழான இந்தியா, தன்னை முன்னிலும் முழுமையாக சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-மூலோபாயத் தாக்குதலுக்குள் ஒருங்கிணைத்துக் கொண்டுவிட்டிருக்கும் நிலையில், பெய்ஜிங்கினுடைய அணுகுமுறை ஒரு திட்டவட்டமான மாற்றத்தை அடைந்திருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில், இந்தியாவும் சீனாவும் அடுத்தடுத்த தூதரக அளவிலான வாய்ச்சண்டைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றன, மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் இரண்டு நாடுகளும் இராணுவ மிரட்டல்களை பகிரங்கமாக பரிமாறிக் கொள்ளவும் தொடங்கியிருக்கின்றன. இந்தியா சமீபத்தில் 5,500-8,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய -சீனாவின் எந்த மக்கள்தொகை மிக்க மையத்தையும் குறிவைத்து அணுமுனை ஏவுகணைகளை செலுத்தும் திறன் கொண்டிருக்கும்- “அக்னி V" பெருவெடி ஏவுகணை சோதனை செய்ததற்கு சீனா கோபத்துடன் எதிர்வினையாற்றியது. சென்ற ஜனவரியில் இந்திய இராணுவத்தின் தலைவராக ஆன ஜெனரல் பிபின் ராவத் ஒரேநேரத்தில் சீனா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் எதிரான ஒரு “இரு-முனை போருக்கும்” இந்தியா தயாராக இருப்பதாக பெருமையடித்துக் கொண்டார்.
சீனா-இந்தியா மற்றும் இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள் பலதசாப்தங்கள் வரலாறு கொண்டவையாகும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியமானது, அதன் பொருளாதார வீழ்ச்சியின் பின்விளைவுகளில் இருந்து தப்பிப்பதற்கான முனைப்பிலும் யூரோசியா மீது மூர்க்கத்தனம் மற்றும் போரின் மூலமாக தனது மேலாதிக்கத்தை திட்டவட்டம் செய்வதற்காகவும் தெற்காசியாவில் புவியரசியல் பதட்டங்களின் வளர்ச்சிக்கு எரியூட்டி வந்திருக்கிறது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, மத்திய கிழக்கில் ஆட்சிகளை-மாற்றுவதற்கும் ஆப்கானிஸ்தானில் ஒரு மூலோபாய பிரசன்னத் தளத்தை உருவாக்குவதற்கும் அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று சொல்லப்பட்டதை பயன்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில், பென்டகனும் சிஐஏ யும் இந்தியாவை ஒரு “மூலோபாய பரிசு” என்று ஏற்கனவே ஊக்குவித்துக் கொண்டிருந்தன. அதன் மிகப்பெரும் இராணுவம், அதிகரிக்கும் பொருளாதார வலிமை மற்றும் உலகின் மிக முக்கியமான வர்த்தக கடல்வழித் தடமான இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு அனுகூலப் புள்ளியாக சேவைசெய்யும் ஆற்றல்வளம் ஆகியவற்றின் காரணத்தில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் அமெரிக்க சக்திக்கு வலுவூட்டுவதற்கான ஒரு தனித்துவமான இடத்தில் இந்தியா அமைந்திருந்ததாக அவை கூறின.
அப்போதிருந்தே இந்தியாவை சீனாவுக்கு எதிரான தன் இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் ஒரு “முன்னிலை” அரசாக மாற்றுவதற்கான முயற்சியில் எந்தவொரு சிறு வாய்ப்பையும் கூட அமெரிக்கா தவறவிட்டதில்லை. ஜனநாயகக் கட்சி நிர்வாகமென்றாலும் குடியரசுக் கட்சி நிர்வாகமென்றாலும் ஒரேபோல, இந்தியா மீது மூலோபாய அனுகூலங்களை பொழிந்தே வந்திருக்கின்றன. “இந்திய-அமெரிக்க உலக மூலோபாய கூட்டை” வலுப்படுத்துவதற்கு புஷ் நிர்வாகம் உலக அணு வர்த்தகத்தில் இந்தியாவிற்கு ஒரு தனி இடம் தேடிக் கொடுத்தது. ஒபாமாவின் கீழ், இந்தியா ஒரு “முக்கிய பாதுகாப்பு கூட்டாளி”யாக அறிவிக்கப்பட்டு, அமெரிக்கா அதன் நெருங்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே தரக் கூடிய முன்னேறிய ஆயுதங்களுக்கான அணுகல் அதற்கு வழங்கப்பட்டது.
இந்திய-அமெரிக்கக் கூட்டணியானது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “பயங்கரவாத சமநிலை”யை புரட்டிப் போட்டிருக்கிறது. பனிப் போரின் காலத்தில், அமெரிக்காவின் பிரதான பிராந்தியக் கூட்டாளியாக பாகிஸ்தான் இருந்தது. ஆனால் கடந்த தசாப்தத்தின் காலத்தில், அது ஒரு ’ஏழை உறவுப்பையனாக’ குறைக்கப்பட்டு விட்டது.
மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் கீழ், இந்தியா, தனது அதிகரித்துச் செல்லும் மூலோபாய அனுகூலத்தையும் சீன-எதிர்ப்புக் கூட்டணியை விஸ்தரிக்க அமெரிக்கா கொண்டிருக்கும் விருப்பத்தையும் பாகிஸ்தானை நோக்கி ஒரு வம்பிழுப்பான கொள்கையைப் பின்பற்றுவதற்கு அனுகூலமாக்கிக் கொள்ள முனைந்து வருகிறது. சென்ற செப்டம்பரில், இந்தியாவின் விசேடப் படைகள் ஒரு சட்டவிரோத எல்லை-கடந்த தாக்குதலை நடத்துவதற்கு உத்தரவிட்டதன் பின்னர், மோடி, பாகிஸ்தான் விடயத்தில் இந்தியா “மூலோபாயரீதியாக ஒதுங்கியிருந்த” காலம் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார்.
இந்திய-அமெரிக்க கூட்டணியானது சீனாவுக்கு ஒரு அதிகரித்த திட்டவட்டமான அச்சுறுத்தலாகவும் ஆகியிருக்கிறது. இராஜதந்திரரீதியாகவும் இராணுவரீதியாகவும் இந்தியாவை முன்னெப்போதினும் முழுமையாக சீனாவுக்கு எதிரான அமெரிக்க முனைப்பின் பின்னால் மோடி நிறுத்தியிருக்கிறார். தென்சீனக் கடலில் இந்தியா இப்போது அமெரிக்க நிலைப்பாட்டையே ஒப்பிக்கிறது; அமெரிக்காவின் பிரதான பிராந்தியக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு மூலோபாய உறவுகளை அது மிகப்பெருமளவில் விஸ்தரித்திருக்கிறது; பென்டகன் அதன் போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பவும் பழுதுபார்க்கவும் தனது வான் தளங்களையும் துறைமுகங்களையும் முழுமையாகத் திறந்து விட்டிருக்கிறது. சீனக் கப்பல் மற்றும் நீர்மூழ்கிகளது நடமாட்டங்களை அமெரிக்க மற்றும் இந்திய இராணுவங்கள் பகிர்ந்து கொள்வதாக அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவரான அட்மிரல் ஹாரி ஹாரிஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்திய-அமெரிக்க கூட்டணியின் மூலம் ஒரு பொதுவான அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கும் பாகிஸ்தானும் சீனாவும் தமக்கு இடையிலான நீண்டகால இராணுவ-மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தச் சென்றுள்ளன. 50 பில்லியன் டாலர் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்; இது மேற்கு சீனாவை அரேபியக் கடல் துறைமுகமான குவடார் உடன் இணைக்கும், அதன்மூலம் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்சீனக் கடலின் பல சந்திப்புமுனைகளை கைப்பற்றுவதன் மூலம் சீனாவின் மீது ஒரு பொருளாதார முற்றுகையைத் திணிக்கும் பென்டகனின் மூலோபாயத்தை பகுதியாக சமாளிப்பதற்கான ஒரு வழிவகையை இது சீனாவுக்கு வழங்கும்.
இவ்வாறாக தெற்காசியா அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி கொண்டிருக்கும் இந்தியா மற்றும் சீனா ஆதரிக்கும் பாகிஸ்தான் இடையில் மேலும் மேலும் அதிகமாய் புவியரசியல் ரீதியாக துருவப்படுவதாக ஆகிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சீனாவுக்கும் இடையிலான மோதலுடன் இந்திய-பாகிஸ்தான் மற்றும் சீன-இந்திய மோதல்களும் ஒன்றுகலப்பதானது அணுஆயுத சக்திகளுக்கு இடையில் ஏற்கனவே வெடிப்புடன் இருக்கும் மோதல்களுக்கு மேலும் வெடிமருந்து சேர்ப்பதாக இருக்கிறது.
கடந்த காலத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்களைத் தணிப்பதற்கு அமெரிக்கா தலையீடு செய்து வந்திருந்தது, ஆனால் அவ்வாறு செய்வதற்கான அதன் திறனும் விருப்பமும் மேலும் மேலும் அதிகமாய் சந்தேகத்திற்குரியதாக ஆகி வருகிறது.
தனது சீனாவுக்கு எதிரான கூட்டணியை சங்கடப்படுத்தக் கூடாது என்ற கவலையில், சென்ற செப்டம்பரில் பாகிஸ்தானுக்குள் சென்று இந்தியா நடத்திய “அதிநுட்பமான இராணுவ தாக்குதல்களை" அமெரிக்கா முதலில் ஓசையில்லாமலும் பின் வெளிப்படையாகவும் ஆதரித்தது. தவிரவும், இந்திய-அமெரிக்க கூட்டு பெருகிச் செல்வதற்கு எதிரான ஒரு “காப்பீடு கொள்கை”யாக தலிபானின் பிரிவுகளுடன் பாகிஸ்தான் உறவுகளைப் பராமரிப்பது குறித்தும், சீனாவுடன் பாகிஸ்தானின் உறவுகள் விரிந்து செல்வதைக் குறித்தும் அமெரிக்க ஸ்தாபகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு விரோதம் பெருகிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கு சொந்த நாட்டில் ஏராளமான புவியரசியல் நெருக்கடிகளுக்கும் பெருகும் சமூகப் பதட்டங்களுக்கும் முகம்கொடுக்கிறது. கால்நூற்றாண்டு காலப் போர் மற்றும் பல தசாப்தகால சமூகப் பிற்போக்குத்தனம் ஆகியவற்றின் விளைபொருளான ட்ரம்ப் நிர்வாகம், அதன் பொறுப்பற்ற தனம், வன்முறை மற்றும் வரலாற்று முன்னோக்கின்மை ஆகியவற்றுக்கு சிகரம் வைத்தாற் போல இருக்கிறது. தெற்காசியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் வெடிப்பான மற்றும் இடைத்தொடர்புடைய மோதல்களைக் குறித்தும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கீழ்-மட்டத்திலான சண்டை எப்படி அமெரிக்கா உள்ளிட பெரும் சக்திகள் பங்கேற்கக் கூடிய ஒரு போராக உருமாறக் கூடும் என்பது குறித்தும் ட்ரம்ப்புக்கும் அவரது உதவியாளர்களுக்கும் தெரிந்தேனும் இருக்குமா என்பதும் கூட உண்மையில் கேள்விக்குறியே.
உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைப்பானது உலகெங்கிலும் மோதல்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது என்பதும், ஜேர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட மற்ற ஏகாதிபத்திய சக்திகளை தங்களது சொந்த நலன்களை மூர்க்கமாகத் திட்டவட்டம் செய்ய தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாததாகும்.
இந்த ஏகாதிபத்திய கொள்ளிவைப்புப் பேர்வழிகள் சென்ற நூற்றாண்டின் உலகப் போர்களை எல்லாம் சிறிதாக்கிவிடுமளவுக்கான ஒரு பற்றவைப்புக்குள் உலகைச் சிக்க வைப்பதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால், சர்வதேச தொழிலாள வர்க்கமானது சோசலிசப் புரட்சி என்ற முதலாளித்துவ நெருக்கடிக்கான அதன் சொந்தத் தீர்வை செயலுறுத்துவதற்காய் அணிதிரட்டப்பட்டாக வேண்டும். முதலாளித்துவத்தின் அத்தனை போட்டிக் கன்னைகளுக்கும் அவற்றின் தேசியவாத மற்றும் பேரினவாத விண்ணப்பங்களுக்கும் எதிராக தொழிலாள-வர்க்கத்தின் தலைமையிலான ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே தொழிலாள வர்க்கம், அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில், ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டப்படுவதன் கூர்முனையாக அமையும்.