Print Version|Feedback
பாரிஸ் பொதுக் கூட்டம்
பொதுக் கூட்டம்: மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கி செல்லும் பாதை என்ன?
Parti de l'égalité socialiste, 26 Mai 2017
மே 7 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னர், இமானுவல் மக்ரோனின் உடனடியான நடவடிக்கைகள், அவர் ஜனநாயகத்தை பாதுகாப்பார் என்றும் நவ-பாசிச தேசிய முன்னணியின் எழுச்சியை தடுத்து நிறுத்துவார் என்றதுமான மோசடியான கூற்றுகளை அம்பலப்படுத்தியிருக்கின்றன. “தேசிய ஐக்கியம்” என்ற பேரில் FNக்கும் அதன் தோல்வியடைந்த வேட்பாளரான மரின் லு பென்னுக்கும் உரத்த குரலில் “குடியரசு வணக்கம்” செலுத்தி அவர் ஞாயிறன்று தனது வெற்றி உரையைத் தொடங்கினார்.
மக்ரோனது இடைமருவுகால அணியானது, அவரும் ஒரு அமைச்சராக செயற்பட்டிருந்த, இப்போது வெளிச்செல்லும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் திட்டநிரலை மேலும் விரிவுபடுத்திச் செல்வதாக இருக்கும். இது மக்ரோனது பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலை சுருக்கமாய் விரிவுபடுத்தி காட்டத் தொடங்கியுள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்திவைப்பதாக இருக்கின்ற பிரான்சின் அவசரகால சட்ட நிலையின் கீழ் நிலைநிறுத்தப்பட்ட போலிஸ் நிலைநிறுத்தங்களை அவர் இன்னும் தீவிரப்படுத்த இருக்கிறார். செல்வந்தர்களுக்கு வரிகளை வெட்டுவதற்கும், போலிஸ்காரர்கள் எண்ணிக்கையை 10,000 மும் சிறைப் படுக்கைகளின் எண்ணிக்கையை 15,000 மும் அதிகப்படுத்துவதற்கும், அத்துடன் சிரியா, ஈராக் மற்றும் மாலியில் போர்களை தொடர்வதற்கும் அவர் திட்டமிடுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேல், பாரிய ஆர்ப்பாட்டங்களையும் பெருவாரியான மக்கள் எதிர்ப்பையும் எதிர்கொண்ட நிலையிலும் கூட பலவந்தமாக திணிக்கப்பட்டிருந்ததான PS அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட உத்தரவுகளை ஒருதரப்பாகத் திணித்து ஒப்பந்தங்களை ஒழித்துக் கட்டுவது, வேலை நேரங்களை கூட்டுவது மற்றும் சமூகநல செலவுகளை வெட்டுவது ஆகியவற்றைச் செய்து தொழிலாள வர்க்கத்துடனான ஒரு மோதலுக்கு மக்ரோன் திட்டமிட்டு வருகிறார்.
விச்சி ஆட்சியின் நாஜி ஒத்துழைப்புவாதிகளது வாரிசுகளுக்கு மக்ரோன் வணக்கம் செலுத்தியமையானது, தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான தனது சலுகைகளை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பாசிச பிற்போக்குடன் ஒத்துழைப்பதற்கு எப்போதும் தயாராய் இருக்கின்ற பிரெஞ்சு முதலாளித்துவத்தின் உண்மையான அங்கலட்சணத்தை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது. ஹாலண்ட் தனது அரசாங்கத்திற்கு வெறுப்பு பெருகிவந்ததன் மத்தியிலும் லு பென்னை மீண்டும் மீண்டும் எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து எப்படி FN ஐ வளர்த்தெடுத்தாரோ, அதைப் போலவே மக்ரோனும் தனது பிற்போக்கு திட்டநிரலுக்கான ஒரு அரசியல் அடித்தளமாக அதிவலதுகளை அங்கீகரிக்கவும் ஊக்குவிக்கவும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
மக்ரோன் தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பார்ந்த சமூக எதிர்ப்புக்கு முகம்கொடுக்கிறார். வாக்காளர்களில் பன்னிரண்டு சதவீதம் பேர் இரண்டு வேட்பாளர்களுக்குமான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொருட்டு வெற்று வாக்குகளை அல்லது செல்லாத வாக்குகளை பதிவுசெய்தனர். 18 முதல் 24 வயதானோரில் 34 சதவீதம் பேர், 25 முதல் 34 வயதானோரில் 32 சதவீதம் பேர், வேலைவாய்ப்பற்றோரில் 35 சதவீதம் பேர், மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்களில் 32 சதவீதம் பேர் உள்ளிட மக்கள்தொகையில் பெருவாரியானோர் வாக்களிக்கவில்லை. மக்ரோனுக்கு வாக்களித்தவர்களில், கிட்டத்தட்ட பாதிப் பேர் (43 சதவீதம் பேர்) தாங்கள் லு பென்னுக்கு எதிராக வாக்களித்தோமே தவிர மக்ரோனுக்கு ஆதரவாக அல்ல என்று தெரிவித்தனர், ஜோன் லூக் மெலோன்சோனுக்கு வாக்களித்தவர்களில் 40 சதவீதம் பேர் இரண்டாம் சுற்றில் வாக்களிக்கவில்லை.
இந்த அபிவிருத்திகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) நிலைப்பாட்டை சரியென நிரூபணம் செய்கின்றன. மக்ரோனும் அல்லது சட்டமன்றத்தில் மக்ரோன் ஆதரவாளர்களுடனான பாராளுமன்றக் கூட்டணிகளும் FN இடம் இருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்பதான பிரமைகளுக்கு எதிரான விதத்தில் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு அது அழைப்பு விடுத்திருந்தது.
தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும், இரண்டு வேட்பாளர்களுக்கும் எதிராய் அணிதிரள வேண்டும் என்று PES அழைப்புவிடுத்தது. அது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்தி, அதனை வரவிருக்கும் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதற்காக அவ்வாறு அழைப்பு விடுத்திருந்தது. தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற அரசியல் நெருக்கடியை எந்த தேர்தல் தந்திரத்தைக் கொண்டும் தீர்க்க முடியாது. அதற்கு மாறாய், இந்தப் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்துக்கு அவசியமாக இருக்கின்ற ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக இருக்கவேண்டிய ஒரு மார்க்சிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கினை வழங்குவதே மையமான பிரச்சினையாக இருக்கிறது என்பதை அது வலியுறுத்தியது.
சோசலிச சமத்துவக் கட்சிக்கும் பிரான்சில் இடது-சாரி அரசியலை பிரதிநிதித்துவம் செய்வதாக பல தசாப்தங்களாக கூறி வரும் PS ஐ சுற்றிச்சூழ்ந்திருந்த அமைப்புகளுக்கும் இடையில் ஒரு வர்க்கப் பிளவு பிரித்து நிற்கிறது. PS மற்றும் வலது-சாரி குடியரசுக் கட்சியை மையமாகக் கொண்டு இயங்கிய பிரான்சின் அரசியல் ஸ்தாபகம் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை சிதறடித்து அதனை மக்ரோனுக்கான ஆதரவு என்னும் முட்டுச் சந்துக்குள் செலுத்துவதற்காக இந்தக் குழுக்கள் தொழிற்படுகின்றன.
France insoumise (அடிபணியா பிரான்ஸ்) இயக்கத்தின் ஜோன் லூக் மெலோன்சோன், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற சக்திகள் தொழிலாளர்கள் போராடுவதற்கு அடிப்படையான எந்த ஒரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க மறுத்தன. ஜூன் 11 மற்றும் ஜூன் 18 ஆகிய தேதிகளில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிரான்ஸ் தயாராகின்ற நிலையில், இவை, தொழிலாள வர்க்கத்தை பல்வேறு முதலாளித்துவ-சார்பு பாராளுமன்ற கூட்டுக்களுடன் கட்டிப்போடுவதற்கு முனைந்து வருகின்றன.
இரண்டாவது சுற்றுக்கு முன்பாக, மக்ரோனின் பிரதமராக செயல்பட ஆலோசனை தெரிவித்திருந்த மெலோன்சோன், இப்போது, வாக்காளர்கள் ஒரு “புதிய பாராளுமன்ற பெரும்பான்மை”யை உருவாக்கும் பொருட்டு “சமூக மற்றும் சூழலியல் மனித”த்தின் அடிப்படையில் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடுகின்ற France insoumise இன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோருகிறார். PCF இன் தலைவரான பியர் லோரோன் “ஏப்ரல் 23 அன்று வாக்குசீட்டு பெட்டிகளில் ஒரு புதிய இடது பிறந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு” -அதாவது, மெலோன்சோனின் இயக்கத்தின் அடிப்படையில்- அழைப்பு விடுத்தார்.
NPA, “நமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை ஐக்கியப்பட்டு நின்று பாதுகாப்பதற்கான ஒரு முன்னணி”யைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறது. மக்ரோன் மீது NPA என்னதான் விமர்சனங்களை கொண்டிருந்தாலும், NPA ஆதரிக்கின்ற சிரியப் போரை மக்ரோன் மூர்க்கமாக நடத்துகின்ற மட்டத்திற்கு அவரை ஆதரிப்பதும் கைகோர்த்திருக்கும்.
இத்தகைய முன்மொழிவுகள், தொழிலாள வர்க்கத்தின் மீது PS உடன் தொடர்புடைய அமைப்புகளின் மேலாதிக்கத்தை தொடர்ந்து பராமரிப்பதற்காக செய்யப்படுகின்ற சிடுமூஞ்சித்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளாகும். இவை எந்தவிதத்திலும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்திற்கென ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில்லை என்பதுடன், மக்ரோனுக்கான சமூக எதிர்ப்பை பிரதிநிதித்துவம் செய்வதாக லு பென் மேற்கொள்ளும் ஜனரஞ்சகவாத நடிப்புகளை சவால் செய்வதுமில்லை. சமூகநல சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வேலைகள் மீதான தாக்குதல்களுக்கு பதில்களை கோரிய காரணத்தாலும், அந்தப் பதில்களை வழங்குவதற்கு PS, மெலோன்சோன் மற்றும் NPA கொண்டிருக்கும் திறன் மீது அவர்கள் நம்பிக்கை இழந்திருக்கின்ற காரணத்தாலும் லு பென்னுக்கு வாக்களித்திருக்கும் ஏராளமான தொழிலாளர்களை, சோசலிசப் பதாகைக்கு மீண்டும் வென்றெடுப்பதற்கு எந்தவிதமான மூலோபாயத்தையும் அவர்கள் முன்னெடுப்பதில்லை.
“இடதின்” பக்கம் நிற்பதாக கூறிக் கொள்ளும் ஸ்தாபகக் கட்சிகள் எதனிடமும் உழைக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு எதுவுமே இல்லை. இந்த முட்டுச்சந்தானது, ட்ரொட்ஸ்கிசத்தையும் புரட்சிகர மார்க்சிசத்தையும் நிராகரித்ததன் அடிப்படையில் பிரான்சில் நான்காம் அகிலத்தில் இருந்து முறித்துக் கொண்டு சென்ற கட்சிகளின் திவால்நிலையினது விளைபொருளாகும். 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் 1971 இல் PS ஸ்தாபிக்கப்பட்டது முதலாக அக்கட்சியுடன் இவை கூட்டணி சேர்ந்து வந்திருக்கின்றன என்பதோடு, தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக புரட்சிகரமாக அணிதிரட்டப்படுவதன் அடிப்படையிலான எந்த உண்மையான முற்போக்கு மாற்றீடும் விலக்கிவைக்கப்படுகின்றதான ஒரு அரசியல் கட்டமைப்பையும் உருவாக்கின.
மெலோன்சோனின் பரிணாமவளர்ச்சி இதற்கு ஆகச்சிறந்த ஒரு உதாரணமாகும். இவர் ஆரம்பத்தில், PS ஐ கட்டியெழுப்புவதற்கு உதவும் பொருட்டு, 1971 இல் ICFI இல் இருந்து முறித்துக் கொண்டிருந்த பியர் லம்பேரின் OCI இல் இணைந்தார். 1976 இல் PS இல் இணைந்த மெலோன்சோன், PS இன் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனுக்கு ஒரு முக்கியமான ஆலோசகராக ஆனதோடு, அதன்பின் PS இன் ஒரு செனட்டராகவும் அமைச்சராகவும் ஆனார், அதன்பின் 2008 இல் PS இன் ஒரு கன்னையுடன் பிரிந்து செல்ல முன்னர், PCF உடன் இணைந்து இடது முன்னணியை (Front de gauche) ஸ்தாபகம் செய்தார்.
தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர மார்க்சிச முன்னணி படையை மீண்டும் கட்டியெழுப்புவது என்பதே முன்னிருக்கும் மையமான பிரச்சினையாகும். பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் ஆளும் வர்க்கத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் வெடிப்பான சமூக மோதல்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாய் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதோடு ஒரு புரட்சிகர முன்னோக்கும் வழங்கப்பட வேண்டும்.
ரஷ்ய புரட்சிக்கு ஒரு நூறு ஆண்டுகளின் பின்னர், புரட்சிகரப் பாதைக்கு மீண்டும் திரும்புவதே தொழிலாள வர்க்கத்திற்கு இருக்கின்ற ஒரே முன்நோக்கிய பாதையாகும் என்பதை PES வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படையாக, பிரான்சில் 1917 இல் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷிவிக் கட்சி முன்னெடுத்த சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்திற்கும் ICFI ஆல் பாதுகாக்கப்படுகின்ற ட்ரொட்ஸ்கிசப் பாரம்பரியத்திற்குமான பிரதிநிதியாக சோசலிச சமத்துவக் கட்சி தன்னை முன்நிறுத்துகிறது.
மக்ரோன் குறித்த எங்களது பகுப்பாய்வுடன் உடன்படுகின்ற தொழிலாளர்களும் இளைஞர்களும் PES க்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும், எமது வேலைத்திட்டத்தை படிக்க வேண்டும், பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முன்னணிப்படையாக PES ஐ கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் தோள்சேர வேண்டும்.
உலக போர் அபாயத்திற்கும் சிக்கன நடவடிக்கைக்கும் எதிராக, பிரான்சில் இப் போராட்டத்தை சோசலிச சர்வதேசிய முன்னோக்கின் அடித்தளத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்க, சமூக பிரச்சினைக்கு ஒரு புரட்சிகர விடையை தேடும் தொழிலாளர்கள் இளைஞர்களை இப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இடம்: l’Auberge de jeunesse Yves Robert
20, Esplanade Nathalie Sarraute (Face au 43, rue Pajol)
75018 PARIS
Métro: Marx Dormoy (12), La chapelle (2), Riquet (7) Autobus: 35, 60, 65
காலம் : ஜூன் 4, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 3.00 – 6.00 மணி