Print Version|Feedback
French right splits as sections back neo-fascist Le Pen
பிரெஞ்சு வலதின் சில பிரிவுகள் நவ-பாசிசவாத லு பென்னை ஆதரிக்கின்ற நிலையில், அது பிளவுபடுகிறது
By Kumaran Ira
1 May 2017
இவ்வாரயிறுதியில் சிறிய வலதுசாரி கட்சியான எழுக பிரான்ஸ் (Arise France – DLF) இன் தலைவர் நிக்கோலா டுபோன்-எய்னியோன் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் நவ-பாசிசவாத தேசிய முன்னணியின் (FN) மரீன் லு பென்னை உத்தியோகபூர்வமாக ஆதரித்தார்.
மரீன் லு பென் கூறுகையில் அவர் ஜனாதிபதியாக தேர்வானால் டுபோன்-எய்னியோனை பிரதம மந்திரியாக பெயரிடுவதாக தெரிவித்தார். “நாங்கள் மக்களிடையே கூட்டாக, இன்னும் அதிகமாக, பிரச்சாரம் செய்து மே 7 ஞாயிறன்று கூட்டாக வெற்றி பெறுவோம்,” என்று தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்தார்.
அவர்களின் கூட்டணிக்கு அடித்தளம் அமைக்கும் ஆறு அம்ச "அரசாங்க உடன்பாடு" ஒன்றை அவ்விரு தலைவர்களும் வெளியிட்டனர். “கூட்டணி அரசாங்கத்திற்கான இந்த ஒப்பந்தம் பிளவுகளையும் ஐயுறவுகளை கடந்திருக்கவும் மற்றும் இந்த ‘அமைப்புமுறைக்கும்’ மற்றும் இமானுவல் மாக்ரோனுக்கு உயிர்பிழைப்புக்கான சாதனங்களை வழங்கி அவ்விதத்தில் தேசிய நலன்களைப் பாதிக்கும்,” என்று அதில் கையெழுத்திட்ட இருவரும் குறிப்பிட்டனர்.
தேசிய முன்னணிக்கும் ஒரு வலதுசாரி கட்சிக்கும் இடையே தேசிய மற்றும் ஜனாதிபதி பதவி மட்டத்திலான ஒரு கூட்டணி என்பது முன்னொருபோதும் நடந்திராதது என்பதுடன், முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்ட சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் குடியரசுக் கட்சி (LR) அமைத்திருந்த இருகட்சி ஆட்சிமுறையின் பொறிவைக் குறிக்கிறது. ஹென்றி கேய்னோ, லோரன்ட் வோக்கியே மற்றும் தியரி மரியானி உட்பட ஏற்கனவே பல LR தலைவர்கள் தேசிய முன்னணிக்கு எதிராக மாக்ரோனுக்கு வாக்களிக்க அழைப்புவிடுக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
பெரும்பாலான சோசலிஸ்ட் கட்சி மற்றும் வலதுசாரி அரசியல்வாதிகள் லு பென்னைத் தடுக்க பிற்போக்குத்தனமான சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் பொருளாதார அமைச்சராக இருந்த மாக்ரோனுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்து வருகின்ற நிலையில், டுபோன்-எய்னியோன் தேசிய முன்னணியை ஆதரிப்பதென்ற அவர் முடிவை நியாயப்படுத்தினார். “இமானுவல் மாக்ரோன் —அதாவது [சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி] பிரான்சுவா ஹோலாண்டின் இளவல்— தேர்வானால், நாடே முறுக்கிப் பிழியப்படும்,” என்றார். “நான் ஒரு வரலாற்று தேர்வை செய்துள்ளேன், பிரெஞ்சு மக்களுக்கு நான் கூறுவது இது தான்: ஆம், மாக்ரோனை தோற்கடிக்க நான் அனைத்தும் செய்வேன். நான் தேசிய முன்னணிக்கு பின்னால் செல்லவில்லை, அதை கடந்தும் சென்றுள்ளேன். நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். எனது அரசியல் வரலாறில் இது மிகவும் அருமையான தருணமாகும்,” என்றார்.
பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் அதிகரித்த பிரிவுகள் நவ-பாசிச கொள்கைக்குப் பின்னால் அணிதிரள்வது, இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல்களை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கான பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste - PES) அழைப்பு சரியானதே என்பதை எடுத்துக்காட்டுகிறது. நவ-பாசிசவாதிகளின் வளர்ச்சியை தடுக்க அரசியல் ஸ்தாபகத்திடம் கெஞ்சிக்கேட்கும் மூலோபாயம் தவறானது என்பதுடன், அழிவுகளை மட்டுமே உண்டாக்கும்.
ஒருசமயம் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம், (LCR) என்றிருந்த புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA), Workers Struggle (LO) மற்றும் ஒருசமயம் தொழிலாளர் கட்சி (PT) என்றிருந்த சுதந்திர ஜனநாயக தொழிலாளர் கட்சி (POID) போன்ற போலி-இடது கட்சிகள் 2002 இல் இந்த மூலோபாயத்தை பயன்படுத்தின. அவை தேசிய முன்னணி வேட்பாளர் ஜோன்-மரி லு பென்னை தடுக்க, சோசலிஸ்ட் கட்சி வலதுசாரி வேட்பாளர் ஜாக் சிராக்கை ஆமோதித்ததும் அதனுடன் தம்மை அணிசேர்த்துக் கொண்டன. இந்நடவடிக்கை நவ-பாசிசவாதிகளின் வளர்ச்சியை தடுக்குமென அவை கூறின.
உண்மையில் இந்நடவடிக்கை பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்திற்குள் சிராக் மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரே எதிர்ப்பாக வலதுசாரி தன்னை காட்டிக்கொள்வதற்கு அனுமதித்தது. கடந்த 15 ஆண்டுகளாக பழமைவாதிகளும் பின்னர் சோசலிஸ்ட் கட்சியும் அதிகரித்தளவில் வலதுசாரி கொள்கைகளில் இருந்து அதிகரித்தளவில் வேறுபாடில்லாத கொள்கைகளையே பின்பற்றின — அதுவும் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், சோசலிஸ்ட் கட்சி அவசரகால நிலையை திணித்ததுடன், பல முறை மரீன் லு பென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பேசியிருந்தார். இப்போது வலதின் ஒரு பிரிவு பட்டவர்த்தனமாக, சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசு கட்சியின் பாரம்பரிய இருகட்சி ஆட்சிமுறை மதிப்பிழப்பிலிருந்து இலாபமடைந்து ஒரு பிரதான சக்தியாக மாறியுள்ள லு பென்னை ஆதரிக்க தாவுகிறது.
டுபோன்-எய்னியோனின் இப்போதைய கொள்கையை போலவே, அது மாதிரியான கசப்பான அனுபவங்கள், சிக்கனக் கொள்கை மற்றும் போருக்கு ஆதரவான மாக்ரோனுக்கு வாக்களிப்பது தேசிய முன்னணியின் வளர்ச்சியைத் தடுக்கும் என்ற வாதங்களை அம்பலப்படுத்துகின்றன. மாக்ரோன் அதீத பிற்போக்குத்தனமான கொள்கையை செயல்படுத்துவார் என்பது மட்டுமல்ல, ஆனால் ஆளும் உயரடுக்கின் முன்பினும் அதிக பிரிவுகள் வலதுசாரி மற்றும் அதன் வெகுஜனவாத வாய்சவுடால்களுக்கு பின்னால் அணிதிரண்டு வருகின்றன.
பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) தேர்தலைச் செயலூக்கத்துடன் புறக்கணிப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட அழைப்புவிடுக்கிறது. மாக்ரோன் மற்றும் லு பென் இருவருமே தொழிலாளர்களுக்கு ஈவிரக்கமற்ற எதிரிகளாவர். பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி, “மாக்ரோனும் வேண்டாம், லு பென்னும் வேண்டாம்! பிரெஞ்சு தேர்தலின் ஒரு செயலூக்கமான புறக்கணிப்பிற்காக!” என்ற அதன் அறிக்கையில் எழுதியவாறு, “மாக்ரோன் மற்றும் லு பென் இருவருக்கும் எதிராக இடதிலிருந்து தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதே … முக்கிய பிரச்சினையாகும்.”
தேசிய முன்னணியை ஆதரிக்கும் பிரெஞ்சு ஆளும் வர்க்க பிரிவுகளுக்கும் மற்றும் மாக்ரோனை ஆதரிக்கும் அத்தகையவர்களுக்கும் இடையிலான வித்தியாசங்கள் பெரிதும் தந்திரோபாயரீதியில், பிரதானமாக வெளியுறவு கொள்கை சம்பந்தமாக உள்ளது. ஆளும் வர்க்கத்தில் பெரும்பான்மையினர் மாக்ரோனை ஆதரிக்கின்றனர் என்றாலும், ஒரு குறிப்பிடத்தக்க பிரிவு தேசிய முன்னணியை ஆதரிக்கிறது. இந்த பிளவு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் ஆழ்ந்த நெருக்கடிக்கு குறைவாக ஒன்றையும் பிரதிபலிக்கவில்லை: தேசிய முன்னணி ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கத்திற்கு எதிராக ட்ரம்ப் மற்றும் ரஷ்யாவுடனான ஒரு கூட்டணியை விரும்புகிறது, மேலும் அது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரெஞ்சு வெளியேறுவதற்கும் (Frexit) அத்துடன் யூரோவிலிருந்து வெளியேறி பிரெஞ்சு பிராங்க் நாணயத்திற்கு திரும்புவதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கும் முன்மொழிந்துள்ளது.
எவ்வாறிருந்த போதினும் பிரெஞ்சு மக்களின் நிறைய பிரிவுகள் தேசிய முன்னணியை இன்னமும் பீதியோடு தான் பார்க்கிறார்கள். ஆகவே லு பென் மற்றும் டுபோன்-எய்னியோன், அவர்களின் ஆவணத்தில், தேசிய முன்னணியின் தேசியவாத அல்லது வெளிநாட்டவர் விரோத கொள்கைகளில், குறிப்பாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த மற்றும் மக்கள் வெறுக்கும் விடயங்களில், சில திருத்தங்களைச் செய்துள்ளனர்.
ஆகவே இந்த உடன்பாட்டை எட்டுவதற்காக, வெளிநாட்டு குழந்தைகள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டுமென்ற லு பென்னின் கொள்கையை கைவிட, டுபோன்-எய்னியோன் லு பென்னை நிர்பந்தித்ததாக அவர்கள் கூறிக் கொள்கின்றனர். "தேசிய எல்லைக்குள் சட்டபூர்வமாக வரும் வெளிநாட்டவர்களுக்கு இலவச பொது சேவைகள் கிடைப்பது" போன்றவை சம்பந்தமான கொள்கை மாற்றங்கள் "பள்ளிக்கூடங்களை பாதிக்காது" என்று அது குறிப்பிடுகிறது.
லு பென் அவரது ஐரோப்பிய-விரோத தேசியவாதத்தில் சற்றே மிதமாகி உள்ளார் என்பதையும் அவர்கள் சூசகமாக தெரிவித்தனர். டுபோன்-எய்னியோன் கூறுகையில், “நான் ஐரோப்பாவிற்கோ அல்லது மரீன் லு பென்னுக்கோ எதிரானவர் கிடையாது. நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இருக்கிறோம். சகல உடன்படிக்கைகளையும் மறுபேரம்பேசல்களுக்கு உட்படுத்தும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம். மரீன் லு பென்னுக்கு வாக்களிப்பதன் மூலமாக, பிரெஞ்சு மக்கள், ஐரோப்பா தொடர்பாக ஒரு வெற்று காசோலை வழங்க மாட்டார்கள். பொதுவான ஐரோப்பிய செலாவணியிலிருந்து விலகி மாற்றமடைந்து செல்வது திறமையாக பூர்த்தி செய்யப்படும்,” என்றார்.
லு பென் சுட்டிக் காட்டுகையில், யூரோ சம்பந்தமான அவர் கொள்கையை அபிவிருத்தி செய்ய அவருக்கு 18 மாதங்கள் ஆகுமென்றும், யூரோவிற்கு இப்போதும் அவர் விரோதமாக தான் இருக்கிறார் என்றாலும் அதை விட ஏனைய கொள்கை பிரச்சினைகள் முன்னுரிமையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
“யூரோ மடிந்துவிட்டது,” அவர் இவ்வாரயிறுதியில் Le Parisien க்கு தெரிவித்தார். தேசிய முன்னணியின் கீழ், பிரதான பெருநிறுவனங்களால் சர்வதேச வர்த்தகத்திற்காக தொடர்ந்து பொது நாணயம் பயன்படுத்தப்படும், ஆனால் பிரான்சிற்குள் அன்றாட பரிவர்த்தனைகளுக்கு பிராங்க் பயன்படுத்தப்படும் என்றவர் விளக்கமளித்தார்.
வாக்காளர்களை தேசிய முன்னணிக்கு வாக்களிக்கலாமா என யோசிக்க செய்ய ஏதோவிதத்தில் மறுஉத்தரவாதங்கள் வழங்குவதற்கான இத்தகைய முயற்சிகள் மோசடியானதும் பிற்போக்குத்தனமானதும் ஆகும். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வர்க்க பதட்டங்கள் பெருகி வருகின்றன. ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் வலதை நோக்கி மிகவும் தீவிரமாக வேகமாக நகர்ந்து வருகின்றன என்பதை ஹோலாண்டின் ஜனாதிபதி ஆட்சிக்காலம் எடுத்துக்காட்டியது. தேசிய முன்னணி தேர்ந்தெடுக்கப்பட்டால், அது, 2012 இல் சோசலிஸ்ட் கட்சியைப் போலவே, ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் என்ன கூறப்பட்டதோ அதை விட அதிகமாக இன்னும் தீவிரமாக வலதை நோக்கிய கொள்கைகளைச் செயல்படுத்த அது முனையும்.