Print Version|Feedback
Why Emmanuel Macron is no lesser evil compared to Marine Le Pen
மரின் லு பென்னுடன் ஒப்பிடுகையில் ஏன் இமானுவேல் மக்ரோன் சற்றும் குறைந்த தீமை கொண்டவரல்ல?
By Johannes Stern
4 May 2017
கீழ்வரும் கருத்துக்கள் பாரிஸில் மே தினத்தன்று நடந்த சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES) இன் முதலாவது பொதுக் கூட்டத்தில் ICFI இன் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) இன் ஒரு முன்னணி உறுப்பினரான ஜொஹானஸ் ஸ்டேர்ன் வழங்கியதாகும்.
இன்றைய நாளின் சர்வதேசப் பேச்சாளராக, முதலில் நான் உங்களுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான SGP சார்பாகவும், ஒட்டுமொத்த அனைத்துலகக் குழுவின் சார்பாகவும் உவப்பான சர்வதேச வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இத்தகையதொரு முக்கியமான அரசியல் கட்டத்தில், பாரிஸில் PES இன் முதல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதையும் பேசுவதையும் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன்.
PES மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர முன்னோக்குடன் தேர்தலில் தலையீடு செய்கின்ற ஒரேயொரு கட்சியாகும். தோழர் அலெக்ஸ் லான்ரியேர் விளக்கியதைப் போல, ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கான நமது அழைப்பு, நாடாளுமன்றக் கணக்கீடுகளது அடிப்படையில் செய்யப்பட்டதல்ல, மாறாக வர்க்கப் போராட்ட இயங்குமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டதாகும்.
அடுத்து வரக் கூடிய பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையில் ஒரு கடுமையான மோதல் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. தொழிலாளர்களும் இளைஞர்களும், தமது நலன்களுக்கு ஆழமான குரோதம் கொண்ட நவ-பாசிச மரின் லு பென் மற்றும் வங்கியாளர் இமானுவல் மக்ரோன் ஆகிய இரண்டு வலது-சாரி வேட்பாளர்களுக்கு தாங்கள் முகம்கொடுத்து நிற்பதை புரிந்து கொண்டுள்ளனர். வாக்காளர்களில் 69 சதவீதம் பேர் இரண்டாம் சுற்றிலான வேட்பாளர் தெரிவில் அதிருப்தி, அல்லது பெரும் அதிருப்தி கொண்டுள்ளனர் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
ஒரு விடயத்தை நான் முக்கியமாக விளக்கிக் கூற விரும்புகிறேன்: லு பென்னுடன் ஒப்பிடுகையில் மக்ரோனை குறைந்த தீமையாக சித்தரிக்க முனைந்து, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அவருக்கு வாக்களிக்க வலியுறுத்துகின்ற முதலாளித்துவ வர்க்கம், தாராளவாதிகள் மற்றும் போலி-இடதுகளது ஒட்டுமொத்தமான முகாமுடன் நாங்கள் ஏன் கைகோர்க்கவில்லை? எங்களது பதில் மிகத் தெளிவானது: மிக எளிமையாய் சொல்வதென்றால், மக்ரோன் குறைந்த தீமை கிடையாது. அவர் சிக்கன நடவடிக்கை மற்றும் போரின் வேட்பாளர் ஆகும்! லு பென்னைப் போலவே, இவரும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மரண அபாயத்தை முன்நிறுத்துகிறார்.
சிக்கன நடவடிக்கை குறித்த பிரச்சினையில், நியூயோர்க் டைம்ஸில் வந்த ஒரு சமீபத்திய கட்டுரையை மேற்கோளிட நான் விரும்புகிறேன். “மக்ரோன் எவ்வாறு பிரெஞ்சு பொருளாதாரத்தை திருத்தம் செய்ய இருக்கிறார்” என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரை சர்வதேச நிதி உயரடுக்கு தமது வேட்பாளர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை சுருங்க விவரித்தது.
“மாற்றத்திற்கான நேரம் மிக அவசரமாகியிருக்கிறது என்பது தெளிவு. [...] கடந்த தசாப்தத்தில், அரசின் செலவினம் இன்னும் அதிகரித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 51 சதவீதமாக இருந்ததில் இருந்து 57 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இது உலகின் வேறு எந்த நாட்டை விடவும் அதிகம் என்பதோடு, முன்னேறிய நாடுகளது சராசரியை விட 18 சதவீத புள்ளிகள் அதிகமாகும். அரசு செலவினங்கள் எந்தளவுக்கு மிதமிஞ்சிப் போயிருக்கிறது என்பதைக் கூறுவது கடினம் என்றாலும், பிரான்ஸ் குறிப்பாக சமநிலை குலைந்திருக்கிறது என்பது நிச்சயம், இந்தப் போக்கு இனியும் ’தாக்குப்பிடிக்க முடியாது’ என்று திரு. மக்ரோன் கூறுவது சரியே. அதேபோல அரசு சம்பளத் தொகையளவும் வீங்கிப்போயிருக்கிறது, திரு.மக்ரோன் 120,000 பொதுத் துறை வேலைகளை வெட்டியும், ஓய்வூதிய அமைப்புமுறையை நேர்படுத்தியும், அரசு செலவினத்தை மீண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதத்திற்கு இறக்கிக் கொண்டுவருவதன் மூலமும் பொருளாதாரத்தை மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவர நோக்கம் கொண்டிருக்கிறார்.”
போர் விடயத்தில், மக்ரோன் அவர் வாய்மொழியாகவே என்ன சொல்கிறார் என்று கேட்போம். பாரிஸில் ஆறு வாரங்களுக்கு முன்பாய் ஒரு பொதுக் கூட்டத்தில் அவர் கூறினார்: “போர் என்பது மீண்டும் அரசியலின் ஒரு சாத்தியமானதொரு விளைவாக உருவாகும் சர்வதேச உறவுகளது ஒரு சகாப்தத்திற்குள் நாம் நுழைந்திருக்கிறோம்.” அதே கூட்டத்தில் கட்டாய இராணுவ சேவையை திரும்பவும் கொண்டுவருவதற்கு அவர் வாக்குறுதியளித்ததோடு இராணுவ நடவடிக்கைகளை “சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற, மற்றும் நிறைவேற்றுகின்ற” சுயாதீனமான திறன்களை பிரான்ஸ் கட்டிக்காக்க வேண்டும் என்றும் கோரினார்.
இவையே ஒட்டுமொத்த சர்வதேச ஆளும் உயரடுக்கும் மக்ரோனை ஆதரிப்பதற்கான காரணங்கள் ஆகும். அவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய இராணுவவாதத்திற்கும் வக்காலத்து வாங்குபவராய் இருப்பதால், குறிப்பாக ஜேர்மனி, ஒரு உலக சக்தியாக ஆவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை இராணுவமயமாக்குகின்ற மற்றும் மேலாதிக்கம் செலுத்துகின்ற அதன் அதிகாரவேட்கை திட்டத்தில் அவரை ஒரு கூட்டாளியாக பார்க்கிறது.
”நாம், குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இணைந்து, ஐரோப்பாவை உலகின் தனித்துவமான ஒரு பாத்திரமாக ஆக்கினால் தான் நமக்கு செல்வாக்கு இருக்கும்” என்று ஜேர்மன் ஜனாதிபதியும் முன்னாள் சமூக ஜனநாயகவாதியும், வெளியுறவு அமைச்சருமான ஃபிராங்க் ஸ்ரைன்மைர், தேர்தலின் முதல் சுற்றுக்கு ஒரு சில நாட்கள் முன்பாக, Sud Quest உடனான ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் மூர்க்கமான “முதலில் அமெரிக்கா” கொள்கைகளை குறிப்பிட்டு தொடர்ந்து பேசிய ஸ்ரைன்மையர், “அமெரிக்காவின் புதிய நோக்குநிலையைக் கொண்டு பார்க்கையில், ஒரு ஐக்கியப்பட்ட ஐரோப்பா இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது” என்றார். “பிரான்சில் தேசியவாத மற்றும் ஜனரஞ்சகக் கட்சிகள் விரும்புவதைப் போல” ஐரோப்பா ஒன்றுபடுவது தோற்குமானால், “நாம் ஆட்டக்காரர்களாக இருக்க மாட்டோம் மாறாக மற்ற சக்திகளின் பகடைக்காய்களாய் இருப்போம்” என்று அவர் எச்சரித்தார்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஜேர்மனி மற்ற -அமெரிக்கா உள்ளிட்ட- பெரும் சக்திகளுடன் மோதலுக்குத் தயாரிப்பு செய்கின்ற அதேவேளையில் லு பென்னுக்கான அதன் எதிர்ப்பு முழுக்க முழுக்க புவி-மூலோபாயக் கணக்குகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. லு பென்னின் அதி வலது-சாரி மற்றும் வெளிநாட்டினர் வெறுப்பு நிலைப்பாடுகள், அல்லது தேசிய முன்னணியின் பாசிச மூலங்கள் தொடர்பான கவலைகளுக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை.
உண்மையில், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய இராணுவவாதம் மீண்டும் ஆயுதபாணியாகின்ற நிலையில், ஆளும் உயரடுக்குகள் அவையாகவே அதீத வலது-சாரி மற்றும் பாசிசக் கொள்கைகளை அதிகமான அளவில் உயிர்ப்பூட்டிக் கொண்டும் அமல்படுத்திக் கொண்டும் இருக்கின்றன. எலிசே மாளிகைக்கு லு பென்னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை, PS அரசாங்கத்தினால் ஒரு அவசரகால நிலை சட்டம் திணிக்கப்பட்டமை, மற்றும் குடியுரிமை பறிக்கும் ஒரு சட்டத்தை அரசியல்சட்டத்திற்குள் கொண்டுவருவதற்கான அதன் திட்டம் ஆகியவை குறித்து அலெக்ஸ் ஏற்கனவே குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியமும், ஐரோப்பாவை ஒன்றுபடுத்துவதற்கும் சமூக நீதி மற்றும் அமைதியைக் கொண்டுவருவதற்குமான ஒரு வழிமுறையாக இல்லை, மாறாக தேசியவாதம், வெளிநாட்டினர் வெறுப்பு, சமூக எதிர்ப்புரட்சி, சட்டம் ஒழுங்கு கொள்கைகள் மற்றும் போர் ஆகியவற்றின் ஒரு விளைநிலமாகவே இருக்கிறது. புரூசெல்ஸில் இருந்தும் பேர்லினில் இருந்தும் உத்தரவிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் கிரீஸ் போன்ற ஒட்டுமொத்த நாடுகளையும் அழித்து மில்லியன் கணக்கான மக்களை வறுமைக்குள் தள்ளியிருக்கின்றன. ஐரோப்பிய கோட்டையின் மிருகத்தனமான புலம்பெயர்வோர்-விரோதக் கொள்கைகள் மத்திய தரைக்கடலை ஒரு பிரம்மாண்ட சவக்கிடங்காக மாற்றியிருக்கின்றன, இங்கு சமீபத்திய ஆண்டுகளில் 25,000 பேருக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி இறந்திருக்கின்றனர். ஐரோப்பா முழுமையிலும் அகதிகளுக்கான கைது மையங்களும் முகாம்களும் இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக நாஜிக்களால் அமைக்கப்பட்ட சித்திரவதை முகாம்களின் சித்திரங்களை நினைவுக்குக் கொண்டுவருகின்றன.
பிரான்சில் போலவே, ஜேர்மனியில் Pegida மற்றும் AfD போன்ற அதி-வலது மற்றும் பாசிச சக்திகளின் எழுச்சியானது ஒட்டுமொத்த ஆளும் ஸ்தாபகமும் வலது நோக்கி வெகுதூரம் நகர்ந்திருப்பதன் ஒரு வெளிப்பாடாய் இருக்கிறது. ஜேர்மனியில் இது, வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சியிலும், இன்னும் மேலே போய் நாஜிக்களின் குற்றங்களை குறைத்துக் காண்பிக்கவும், ஹிட்லருக்கு மறுவாழ்வு அளிப்பதற்குமான முயற்சியிலும் மிகக் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டிருக்கிறது.
ஒரு ஜேர்மன் பேராசிரியர் சமீபத்தில் கூறிய மேற்கோளைப் பாருங்கள்: “நான் ஹிட்லரை ஸ்ராலினுடன் ஒப்பிட்டிருக்கிறேன். ஸ்ராலின் ஒரு மனநோய் கொண்டவராய் இருந்தார், ஹிட்லர் அவ்வாறில்லை. ஸ்ரானுக்கு வன்முறை சந்தோசமளிப்பதாக இருந்தது, ஹிட்லருக்கு அவ்வாறு இருக்கவில்லை. தான் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது ஹிட்லருக்கு தெரிந்திருந்தது. தனது செயல்களின் குருதிகொட்டும் பின்விளைவுகளைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு அலுவலக ஊழியரை போல் அவர் இருந்தார்.”
ஏற்கனவே 2014 இல் இதே மனிதர் ஜேர்மனியின் மிகவும் பரவலாய் வாசிக்கப்படும் வார இதழான Der Spiegel இடம் கூறினார்: “ஹிட்லர் ஒரு மனவெறி கொண்டவரல்ல. அவர் தீயவரும் அல்ல. யூதர்களை ஒழிப்பது குறித்து தனது மேசையில் பேசுவதற்கு அவர் விரும்பியதில்லை.”
நாஜி தலைவர் மற்றும் வரலாற்றில் மாபெரும் கூட்டப் படுகொலைகாரராக இருந்தவரைக் குறித்த இந்த அரக்கத்தனமான வார்த்தைகள் வலது-சாரி அதி தீவிரவாத அல்லது நவ-பாசிச வட்டாரங்களில் பிரதானமாக செயலூக்கத்துடன் இயங்கி வந்த ஒரு மனிதரிடம் இருந்து வந்தவையல்ல. இரண்டு சந்தர்ப்பங்களிலுமே வசனத்தை உதிர்த்தவர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி, பேர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத் துறையின் தலைவராக இருப்பவர். ஜேர்மன் இராணுவத்துடனும் ஜேர்மன் அரசாங்கத்துடனும் இவருக்கு நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன என்பதோடு, இடது கட்சியின் முன்னணி அரசியல்வாதிகளால் ஒரு பெரும் புத்திஜீவியாகக் கருதப்பட்டு பேச அழைக்கப்படுபவர், பாதுகாக்கப்படுபவரும் கூட.
இப்போது ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் சமூக-ஜனநாயகக் கட்சி தலைவராய் இருக்கும் சபீன குன்ஸ்ட் (Sabine Kunst), பல்கலைக்கழக வளாகத்தில் பாபரோவ்ஸ்கியின் கூற்றுகளுக்கு IYSSE செய்யும் எந்த விமர்சனத்தையும் ஒடுக்குவதற்கு முனைகிறார், பேர்லினில் உள்ள SPD-பசுமைக் கட்சி-இடது கட்சி கூட்டணி அரசாங்கத்தின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. IYSSE, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் SGP இன் இளைஞர் மற்றும் மாணவர் இயக்கமாகும், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் மிகவும் அச்சுறுத்தும் அபிவிருத்திகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது; ஹம்போல்ட்டில் மட்டுமல்லாது, ஜேர்மனி முழுவதுமான பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மத்தியிலும் நாடெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் ஆதரவை வென்றிருக்கிறது.
ஜேர்மனியில் வரலாற்றை திருத்துவதானது, ஜேர்மனி இராணுவவாதத்திற்கு திரும்புவதுடன் நேரடியாக தொடர்புபட்டிருக்கிறது என்பதை IYSSEம் SGPம் விளக்கியிருக்கின்றன. இராணுவவாதத்திற்கும் போருக்குமான பரந்த குரோதத்தை வெல்வதற்கு ஒரு புதிய வரலாற்றுச் சித்தரிப்பு ஜேர்மன் முதலாளித்துவத்திற்கு அவசியமாய் இருக்கிறது என்பதை நாங்கள் விளக்கியிருக்கிறோம். புதிய குற்றங்களுக்கும் போர்களுக்கும் தயாரிப்பு செய்வதற்காக இரண்டு உலகப் போர்களில் ஜேர்மன் இராணுவவாதம் இழைத்த குற்றங்களை நினைவில் இருந்து அழிப்பது அவர்களுக்கு அவசியமானதாய் இருக்கிறது.
2014 மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் ஜனாதிபதி ஜோஅஹிம் கவுக் உம் ஜேர்மன் அரசாங்கமும் “இராணுவ ஒதுங்கியிருப்பு முடிவுக்கு வந்ததாக” அறிவித்ததன் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த வெளியுறவுக் கொள்கையின் தொலைகாலத் தாக்கங்கள் இப்போது தெளிவாகி வருகின்றன. சென்ற ஆண்டின் இறுதியில், பாதுகாப்புத் துறைக்கான நிதிஒதுக்கீடு கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கப்பட இருப்பதாகவும் இராணுவம் பாரிய அளவில் மறுஆயுதபாணியாக்கப்பட இருப்பதாகவும் ஜேர்மன் அரசாங்கம் அறிவித்தது. இராணுவம், கடற்படை மற்றும் வான்படையை கணிசமாகக் கட்டியெழுப்புவதற்கு பாதுகாப்புத் துறை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
இதனிடையே, ஊடக வல்லுநர்களும் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர்களும் நாஜிக்கள் பெருமைப்படத்தக்க விதமான அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஜேர்மன் ஜனாதிபதி ஸ்ரைன்மையர், நிதி அமைச்சர் ஷொய்பிள, பாதுகாப்பு அமைச்சர் வொன் டெர் லையன், இவர்களுடன் பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சியைச் சேர்ந்த முன்னணி அரசியல்வாதிகள் ஆகியோரது பங்களிப்புகளையும் கொண்ட “ஜேர்மனியின் புதிய வெளியுறவுக் கொள்கை” என்னும் தலைப்பிலான ஒரு முக்கிய வெளியுறவுக் கொள்கை வெளியீடானது, ஜேர்மனியில், “தார்மீகரீதியாக சுத்தமாக இருக்க நரம்பு துடிப்பதென்பது” கிட்டத்தட்ட ஒவ்வொரு உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கை விவாதத்திலும் விரவி விட்டிருப்பதாக புகாரிடுகிறது.
“யார் போருக்குச் சென்றாலும், போரில் பங்குபெறாதவர்கள் மற்றும் அப்பாவிகள் உள்ளிட்ட மனிதர்களின் மரணத்திற்குப் பொறுப்பாக வேண்டியிருப்பது இயல்பானதே” என்று அந்த வெளியீடு அறிவிக்கிறது. குறிப்பாக “புதிய மூலோபாய நிச்சயமற்ற நிலையின் காலங்களில்” இராணுவத்தை உயர்த்த அவசியமாக இருக்கிறது என்றால், “அதற்குக் காரணம் சமூகங்கள் அத்தகையதொரு கடுமையான சோதனைகளைக் கோருகின்றன என்பதால் மட்டுமல்ல, அது தான் இறுதியில் வெளியுறவுக் கொள்கையின் மிகக் கடினமான, மிக சவாலான, மற்றும் சந்தேகத்திற்கிடமில்லாமல் முடிசூடும் ஒழுங்காக இருக்கிறது என்பதால் தான்.”
வரவிருக்கும் ஆண்டுகளில் ஜேர்மனி “அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் கூடுதலாய் நிறைய பொறுப்பெடுக்க வேண்டி இருக்கும்” என்பதோடு “நாடு அதன் மோசமான கொடுங்கனவுகளிலும் கூட சிந்தித்துப் பார்த்திருக்க முடியாத” அளவுக்கான “வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை பிரச்சினைகளுக்கு அது முகம்கொடுக்கும்” என்ற இந்த வெளியீட்டின் நிறைவுப்பகுதி ஒரு மிரட்டலாகவே கருத்தில் கொள்ளப்பட இயலும்.
இத்துடன், நான் ஆரம்பத்தில் கூறிய கருத்துக்களுக்கு திரும்பலாம் என்று நினைக்கிறேன். தொழிலாள வர்க்கத்திற்கு இரண்டாம் சுற்றில் “குறைந்த தீமை”யான வேட்பாளர் யாரும் இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காகவே இந்த அபிவிருத்திகளை நான் குறிப்பிட்டேன். மக்ரோனின் கொள்கைகள் பேர்லினில் மிக மூர்க்கத்துடன் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற போர் மற்றும் இராணுவவாதத்திற்கான அதே பிற்போக்குத்தனமான ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளே ஆகும்.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முன்பு போலவே, அத்தனை முக்கிய முதலாளித்துவ அரசுகளும் போருக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. மூன்று நாட்களுக்கு முன்பாகத் தான், டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்: “வட கொரியாவுடன் ஒரு பெரும், முக்கிய மோதலில் சென்று நாம் முடிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிச்சயமாக.” ”வட கொரியாவுடன் ஒரு பெரும் மோதல்” என்பது ரஷ்யா மற்றும் சீனாவுடனும் கூடவான ஒரு “அணுஆயுதப் போராக” மாறி மனிதகுலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாகக் கூடும் என்ற உண்மையைக் குறித்து, அமெரிக்காவின் இந்த அரை-பாசிச பில்லியனராய் இருந்து ஜனாதிபதியானவர் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
“ஆளும் உயரடுக்கினர் போருக்கு தயாரிப்பு செய்கின்ற நிலையில், அதனைத் தடுப்பதற்கு தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட்டாக வேண்டும்” என்று நேற்று ICFI நடத்திய சர்வதேச இணையவழி மேதினப் பேரணியில் தனது உரையின் போது தோழர் டேவிட் நோர்த் வலியுறுத்தியிருந்தார்.
“போரின் காரணங்களைப் புரிந்து கொள்வதென்பது போருக்கு எதிரான போராட்டத்திற்கு அத்தியாவசியமான அடித்தளமாகும். 1917 இல் லெனின் விளக்கியதைப் போல, போர் என்பது ‘பில்லியன் கணக்கான இழைகளாலும் தொடர்புகளாலும் இணைக்கப்பட்டிருக்கின்ற’ உலக முதலாளித்துவத்தின் அபிவிருத்தியின் விளைபொருளாகும். மூலதனத்தின் சக்தியை தூக்கிவீசி விட்டு அரசு அதிகாரத்தை இன்னொரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றாமல் அது தடுத்து நிறுத்தப்பட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
“ஆகவே, போருக்கு எதிரான போராட்டமானது, புரட்சிகரத் தலைமைக்கான நெருக்கடியைத் தீர்ப்பது என்ற இந்த வரலாற்று சகாப்தத்தின் அடிப்படையான அரசியல் பிரச்சினையை, அதன் கூர்மையான வடிவத்தில் முன்நிறுத்துகிறது. முதலாளித்துவ நெருக்கடியின் மிக முன்னேறிய நிலைக்கும் தொழிலாள வர்க்கத்தின் அகநிலை நனவுக்கும் இடையிலான முரண்பாடு முன்னொருபோதும் இத்தனை பெரியதாக இருந்ததில்லை. ஆனால் அதே முரண்பாடுதான், அரசியல் நனவிலான ஒரு தீவிரமான மற்றும் துரிதமான அபிவிருத்திக்கு உந்துசக்தியையும் வழங்குகிறது.”
1938 இல் இங்கே பாரிஸில் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்ட சமயத்தில், ட்ரொட்ஸ்கி விளக்கியவாறாக, தொழிலாள வர்க்கத்தில் அரசியல் தலைமையின் நெருக்கடியை தீர்ப்பதே தீர்க்கமான பணியாகும். இதுவே சென்ற ஆகஸ்டில் PES ஸ்தாபிக்கப்பட்டதன், மற்றும் ஜனாதிபதித் தேர்தல் இறுதிச் சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு அது விடுத்திருக்கும் அழைப்பின் முக்கியத்துவமாகும். PES இன் ஸ்தாபக ஆவணத்தையும் மற்றும் அதன் தேர்தல் வேலைத்திட்டத்தையும் படிக்க வேண்டும், பிரான்சில் ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்ற ஒரே அமைப்பைக் கட்டியெழுப்ப உதவ வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன்.
மேலதிக வாசிப்புகளுக்கு:
பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்!
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் அறிக்கை [PDF]