Print Version|Feedback
May Day 2017: Lessons of history and the fight for socialism
மே தினம் 2017: வரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்துக்கான போராட்டமும்
David North
1 May 2017
பின்வரும் உரை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஏப்ரல் 30 அன்று நடந்த 2017 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை தொடங்கி வைத்து வழங்கியதாகும்.
உலகெங்கிலும் உள்ள எமது அங்கத்தவர்கள், வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பாகவும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் சார்பாகவும் எமது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான இந்த வரலாற்றுப்பெரும் தினத்தை ஒரு இணையவழிப் பேரணியுடன் கொண்டாடுகிறது. இந்தப் பேரணிகளில் முதலாவது, 1914 ஆகஸ்டில் முதலாம் உலகப்போர் வெடித்ததன் நூறாவது ஆண்டுதினத்தை ஒட்டியும், 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதன் எழுபத்தியைந்தாவது ஆண்டையொட்டியும் 2014 இல் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டின் மே தினமும் 1917 ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டு என்ற ஒரு மகத்தான சமயத்தில் தான் வந்துசேர்ந்திருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, ரஷ்யா முழுமையிலும் மே தினம் கொண்டாடப்பட்ட சமயத்தில் ரோமனோவ் வம்சம் தூக்கியெறியப்பட்டு வெறும் எட்டு வாரங்களே ஆகியிருந்தன. போர் மீதான வெறுப்பானது, பிப்ரவரி புரட்சியின் வெடிப்பில் ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. ஆனால் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்துக்கோ, ஜார் முதலாவதாய் போருக்குச் செல்ல காரணமாய் இருந்திருந்த பிராந்திய வெற்றிகளை சாதிக்காமல் அதை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணமிருக்கவில்லை. மே தின சமயத்திற்கெல்லாம், இரண்டாம் நிக்கோலஸ் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு விட்டிருந்தார், ஆனால் ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்கின் நலன்கள் இன்னும் திருப்தி கண்டிருக்கவில்லை. முதலாளித்துவ இடைக்கால அரசாங்கமானது போரைத் தொடர்வதற்கு தீர்மானத்துடன் இருந்தது.
தொழிலாளர்களினதும் சிப்பாய்களினதும் பிரதிநிதிகளது சோவியத்தை சேர்ந்த சீர்திருத்தவாத தலைவர்களான மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிஸ்ட்-புரட்சிகரவாதிகள் இடைக்கால அரசாங்கத்தை ஆதரித்து நின்றதோடு போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர கோரிக்கை வைக்க மறுத்தனர். ஏகாதிபத்திய போருக்கு, ஜனநாயகத்திற்கான ஒரு போரென்று பெயரொட்டுவதற்காக ஜார் தூக்கிவீசப்பட்டதை அவர்கள் சாக்காகப் பயன்படுத்தினர். முதலாளித்துவ வர்க்கத்தை பொறுத்தவரை, போரைத் தொடர்வதென்பது அவசியமானதாகக் கருதப்பட்டது, அது கான்ஸ்டாண்டிநோபிளின் கட்டுப்பாட்டை பெறுவதற்காக மட்டுமல்ல. பரந்த மக்களை நோக்குநிலை பிறழச் செய்து அவர்கள் முதலாளித்துவ அரசுக்கு கீழ்ப்படிந்த நிலையில் இருப்பதை தொடர்ந்து பராமரிப்பதும் அதன் நோக்கமாய் இருந்தது. “இவ்வாறாக எதிரியை மழுங்கடிக்க செய்வதற்கான ஒரு போர், புரட்சியை மழுங்கடிக்க செய்வதற்கான ஒரு போராக மாற்றப்பட்டது” என்று பின்னாளில் ட்ரொட்ஸ்கி எழுதினார்.
நாடுகடத்தப்பட்டிருந்த லெனின் ஏப்ரல் ஆரம்பத்தில் ரஷ்யாவிற்கு திரும்பிய பின்னர்தான் இக்கட்சி தனது சமரசமற்ற போர்-எதிர்ப்பு நிலைப்பாட்டை கையிலெடுத்த போதிலும் போல்ஷிவிக் கட்சி மட்டுமே போரை எதிர்த்த ஒரே கட்சியாக இருந்தது. போல்ஷிவிக் கட்சி தனது நிலைப்பாட்டை, இடைக்கால அரசாங்கத்தை ஆதரிக்கும் நிலையில் இருந்து முதலாளித்துவ அரசை புரட்சிகரமாக தூக்கிவீசிவிட்டு சோவியத்துகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதை ஆதரிக்கும் நிலைக்கு மாற்றுவதற்கு கட்சிக்குள்ளாக லெனின் கிட்டத்தட்ட மூன்று வார காலம் தீவிரமான அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.
விளைகள் தவிர்க்கமுடியாதவையாக பெரும்பாலும் தோற்றமளிக்கும் ஒரு வரலாற்று பின்நோக்கிய பார்வையில், போல்ஷிவிக் கட்சியின் கொள்கையை மாற்றுவதற்கு லெனினுக்கு அவசியமாக இருந்த அரசியல் போராட்டத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட ஒருவர் தலைப்படலாம். ஆனால் இந்த போராட்டம் வெற்றிடத்தில் நடந்திருக்கவில்லை என்பதை ஒருவர் கட்டாயம் புரிந்திருக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் பலரது “தற்காப்புவாத” நிலைப்பாடு —அதாவது, புதிதாக அவிழ்த்து விடப்பட்டிருந்த ஜனநாயகப் பதாகையின் கீழ் போரைத் தொடர்வதற்கு ஆதரவளிப்பது— ஒரு கணிசமான மட்டத்திற்கு, புரட்சியின் முதல் நாட்கள் மற்றும் வாரங்களில் பரந்த மக்கள் வெளிப்படுத்திய குழப்பமான தேசப்பற்று மனோநிலைகளுக்கு தகவமைத்துக் கொண்டதாக இருந்தது.
“புரட்சிகர தற்காப்புவாத”த்தை கைவிடுவதானது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து கட்சியைத் தனிமைப்படுத்தி விடும் என்று போல்ஷிவிக் தலைவர்களது ஒரு பிரிவினர் வாதிட்டனர். அது ஒரு “பிரச்சாரகர்களது குழுவாக” சுருங்கி விடும் என்று அவர்கள் எச்சரித்தனர். லெனின் இந்த வாதத்தை திட்டவட்டமாக நிராகரித்தார். அவர் எழுதினார்:
சர்வதேசவாதிகளுக்கு தாங்கள் பரந்த மக்களுடன் “தொடர்ந்து இருக்க விரும்புவதை” காட்டிலும், அதாவது அவற்றுடன் அடித்துச்செல்லப்படுவதை காட்டிலும், “பரந்த மக்கள்” நச்சுக்கலப்பை தங்களால் எதிர்த்து நிற்க முடியும் என்று காட்டுவது இந்தத் தருணத்தில் கூடுதல் பொருத்தமானதாய் இருக்கவில்லையா? ஐரோப்பாவின் மூர்க்கமான நாடுகள் அத்தனையிலும் பேரினவாதிகள் தாங்கள் “பரந்த மக்களின் பக்கம் தொடர்ந்து இருக்கவிரும்புவதாக” கூறி எவ்வாறு தங்களை நியாயப்படுத்திக் கொள்ள முயன்றார்கள் என்பதை நாம் கண்டிருக்கவில்லையா? பரந்த மக்கள் நச்சுக்கலப்புக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் ஒரு சிறுபான்மையாக இருக்கமுடியாதா? திருப்புமுனையின் தற்போதைய பார்வையில் இருந்து, தற்காப்புவாத மற்றும் குட்டி-முதலாளித்துவ “பரந்த மக்கள்” நச்சுக்கலப்பில் இருந்து, பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை விடுவித்துக் கொள்வது பிரச்சாரவாதிகளின் வேலை இல்லையா? பரந்த மக்களுக்குள் இருக்கின்ற வர்க்க வித்தியாசங்களை பொருட்படுத்தாமல், பாட்டாளி வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கமல்லாதோரையும் இவ்வாறு ஒன்றுகலப்பதுதான் தற்காப்புவாத தொற்றுநோய்க்கான நிபந்தனைகளில் ஒன்றை உருவாக்கித் தருகிறது. ஒரு பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டுக்கு அறிவுறுத்துகின்ற “பிரச்சாரவாதிகளின் ஒரு குழு” குறித்து அலட்சியத்துடன் பேசுவதென்பது மிகவும் பொருத்தமானதாக தெரியவில்லை.
அப்போதும் சரி இப்போதும் சரி, தமது காட்டிக்கொடுப்புகளை எல்லாம், பரந்த மக்களது நடப்பு நனவு மட்டத்திற்கேற்ப அத்தியாவசியமான வளைந்துகொடுப்புகள் என்று நியாயப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அனைத்து சந்தர்ப்பவாதிகளது அரசியலில் இருந்து, எத்தனை ஆழ்ந்த பேதம் கொண்டதாக லெனினின் கோட்பாடுமிக்க அரசியல் இருந்தது.
லெனினால் நோக்குநிலைமாற்றம் பெற்ற போல்ஷிவிக்குகள் பேரினவாத “நச்சாகுதலுக்கு” எதிராகப் போராடினர். மே தினத்தின் போதும் கூட, இந்த மனோநிலை குறைந்து விட்டிருக்கவில்லை. இன்றளவுக்கு அன்றும் கழிசடையானதாய் இருந்த நியூயோர்க் டைம்ஸில், பெட்ரோகிராடில் நடந்த மே தினப் பேரணிகள் குறித்து வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று பின்வரும் தலைப்பைக் கொண்டிருந்தது: “ரஷ்ய மக்கள்கூட்டங்கள் லெனினைப் பார்த்து ஊளையிட்டுச் சிரிக்கின்றன”. டைம்ஸ் பத்திரிகையாளர் திருப்தியுடன் எழுதினார்: “தீவிரமயப்பட்ட சோசலிசக் கிளர்ச்சியாளரான லெனினின் சீடர்களால் ஆற்றப்பட்ட உரைகள் ’போதும்! உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்துங்கள்’ என்ற கூக்குரல்களைக் கொண்டு வரவேற்கப் பெற்றன.”
இன்னுமொரு கட்டுரை, கிட்டத்தட்ட ரஷ்யாவின் அத்தனை சோசலிஸ்ட் தலைவர்களுமே போரை ஆதரிப்பதாக அமெரிக்காவின் வாசகர்களுக்கு உறுதியூட்டியதுடன் பின்வரும் தகவலுடன் நிறைவடைந்தது: “இப்போது விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அறிக்கைகள், ரஸ்புட்டினுக்கு நேர்ந்த கதியை லெனின் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அப்பட்டமாக அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன.” ஆனால் ஆறு மாதங்களுக்குள்ளாக, போல்ஷிவிக்குகள், தொழிலாள வர்க்கத்தின் ஆதரவுடன் இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசினர். அக்டோபர் புரட்சியானது முதலாம் உலகப் போரின் முடிவு ஆரம்பமாகியதைக் குறித்து நின்றது.
1917 இன் அரசியல் படிப்பினைகளை திறனாய்வு செய்வது முற்றிலும் பொருத்தமானது, என்றாலும் வெறுமனே ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டு என்பதால் மட்டுமல்ல. ஏகாதிப்பத்திய போர் தயாரிப்புகளுக்கு எதிரான போராட்டம் தான் முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தின் ஈட்டிமுனையாக இருக்கிறது. ஒரு அணுஆயுதப் பேரழிவின் அபாயமானது இன்றளவுக்குப் பெரிதாய் முன்னொருபோதும் இருந்ததில்லை.
முந்தைய மூன்று இணையவழி மேதினப் பேரணிகளில், புவி-அரசியல் மற்றும் ஏகாபத்தியங்களுக்கு இடையிலான பதட்டங்களின் இடைவிடாத வளர்ச்சிக்கு உடனடிக் கவனத்தை அனைத்துலகக் குழு கோரியிருந்தது. ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், போருக்கு எதிரான ஒரு பாரிய தொழிலாள வர்க்க இயக்கம் இல்லையென்றால், ஆளும் உயரடுக்குகள் மனிதகுலத்தை ஒரு பேரழிவுக்குள் அமிழ்த்தி விடுவார்கள் என்று நாங்கள் எச்சரித்திருக்கிறோம்.
அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களில் பலருக்கும் கூட —உலக சோசலிச வலைத் தளத்தின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிலும் என்பதை சொல்லவும் அவசியமில்லை— இந்த எச்சரிக்கைகள் மிகைப்படுத்தலாகவோ அல்லது திடுக்கிடச் செய்வதாகவோ கூட தெரியக் கூடும். ஆனால், கடந்த பல மாதங்களின் நிகழ்வுகளின் வெளிச்சத்தில் பார்த்தால், அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகள் இன்னுமா மிகைப்படுத்தலாக தெரிகின்றன?
ஏகாதிபத்திய புவி-அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் ஒரு பேரழிவுகரமான போரின் சாத்தியத்தை அங்கீகரிக்க நிர்ப்பந்தம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்தின் முன்னணி வெளியீடான வெளியுறவு விவகாரங்கள் (Foreign Affairs) நடப்பு இதழில், “நிகழ்காலம் அழிவில் இருக்கிறதா?” (“Present at the Destruction?” ) என்ற மொத்தத் தலைப்பின் கீழ் வரிசையாய் நிறைய கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரைகளின் தொனி, அமெரிக்காவின் முன்னிலை வெளியுறவுக் கொள்கை சிறப்புநிபுணர்களில் ஒருவரான ஜி. ஜான் எல்கென்பெரி எழுதிய ஒரு கட்டுரையில் அமையப் பெற்றிருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்ற கொள்கைகளைக் கணக்கெடுத்து அவர் எழுதுகிறார்: “புராதன மற்றும் நவீன சகாப்தங்கள் எங்கிலும், வல்லரசுகளால் கட்டியெழுப்பப்பட்ட ஒழுங்குகள் வந்திருக்கின்றன போயிருக்கின்றன, ஆனால் பொதுவாக அவை படுகொலையில் முடிந்திருந்தனவே அன்றி தற்கொலையில் அல்ல.” இந்த தற்கொலை என்ன வடிவத்தை எடுக்கப் போகிறது? வெளியுறவு விவகாரங்கள் இதழின் இரண்டாவது கட்டுரை, வெளியுறவு விவகார கவுன்சிலில் மூத்த ஆய்வறிஞராக இருக்கும் பிலிப் கார்டனால் “போரில் ட்ரம்ப்பின் ஒரு பார்வை” என்ற தலைப்பை தாங்கியிருக்கிறது. அவரது கட்டுரையில் மோதல்கள் கைமீறிப் போய் ஈரான் அல்லது வட கொரியா, ரஷ்யா அல்லது சீனா உடனான போருக்கு இட்டுச் செல்லத்தக்க பல்வேறு புவியரசியல் காட்சிகள் சுருக்கமாய் கோடிட்டுக் காட்டப்படுகின்றன.
ஒப்பீட்டு மூலோபாயம் (Comparative Strategy) என்ற அறிஞர்களுக்கான சுற்றிதழ் ஒன்று 2016 இன் பிற்பகுதியில் “அணுஅபாயங்களை மறுகருத்தாக்கத்திற்கு உட்படுத்தல்: திட்டமிட்ட அணுப் பயன்பாட்டை மீண்டும் கொண்டுவருதல்” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. இதன் ஆசிரியர்கள் —இருவருமே வாஷிங்டன் டிசியில் இருக்கும் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்— ஒரு அணு ஆயுதப் போர் என்பது அநேகமாக ஒரு அரசியல் தப்புக்கணக்கின் விளைவாகவோ அல்லது விபத்தாகவோ தான் நடைபெறும் என்பதான பரவலான அனுமானிப்புக்கு எதிராய் வாதிடுகின்றனர். தலைவர்கள் அணு ஆயுதங்களை “இராஜதந்திரக் கலையின் கருவிகளாக”க் கருதி பயன்படுத்தப் பரிசீலிப்பதற்கு விருப்பம் கொள்கின்ற நிலை பெருகுவதில் இருந்து தான் அத்தகையதொரு போருக்கான பிரதான அபாயம் தோன்றுவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். திட்டமிட்ட அணுஆயுதப் பயன்பாடு என்பதை “ஒரு அணு ஆயுதத்தை அல்லது ஆயுதங்களை ஒரு எதிரி இலக்குக்கு எதிராய் திட்டமிட்டு வெடிக்கச் செய்வது, அல்லது எதிராளி ஒருவருக்கு எதிராக அணு ஆயுத வெடிப்பை இறுதிவிளைவாகக் கொண்டுவரக் கூடிய அணுஆயுத அச்சுறுத்தல் மற்றும் தீவிரப்படுத்தலின் ஒரு திட்டமிட்ட நிகழ்முறையில் ஈடுபடுவது” என்று அதன் ஆசிரியர்கள் வரையறை செய்கின்றனர்.
அணு ஆயுதப் போரின் திட்டமிட்ட பயன்பாட்டுக்கு இட்டுச் செல்லத்தக்க ஐந்து நன்கறிந்த இராணுவ மூலோபாயங்களை இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது: 1) ஒரு அணுஆயுதமற்ற எதிரிக்கு எதிரான அணுஆயுதப் பயன்பாடு, இதில் “ஒரு அணுவல்லமை பெற்ற அரசானது மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் தூண்டலை பெறக் கூடும்”; 2) “ஒரு எதிராளியின் அத்தனை அணு ஆயுதங்களையும் ஒரே தாக்குதலில் அழித்து விட்டு, எதிராளியை பதிலடி கொடுக்க வழியின்றி ஆக்குவதை” நோக்கமாகக் கொண்ட அற்புதமான முதல் தாக்குதல்; 3) பயன்படுத்துங்கள் இல்லையேல் அவற்றைத் தொலைத்து விடுவீர்கள் (Use ‘em or lose ‘em), அணுஆயுத வல்லமை பெற்ற இரண்டு நாடுகள் சம்பந்தமான ஒரு மோதலில் பயன்படுத்தத்தக்க ஒரு மூலோபாயம், இதில் ஒரு நாடு அதன் சொந்த ஆயுதக்கிடங்கு துடைத்தழிக்கப்படுவதற்கு முன்பாக ஒரு அணுஆயுதத் தாக்குதலை தொடுப்பதற்கு முடிவுசெய்கிறது; 4) அணுஆயுத விளிம்புநிலை, இதில் எதிராளி பின்வாங்கி விடுவார் என்ற நம்பிக்கையில் போர் அபாயம் திட்டமிட்டு அதிகரிக்கப்படுகிறது. ஆயினும் இந்த மோதல் போருக்கு இட்டுச் செல்லக் கூடும் என்ற புரிதலுடனேயே இந்த மூலோபாயம் பின்பற்றப்படுகிறது; மற்றும் 5) ஆரம்பித்த ஒரு அணு ஆயுதப் போர் தொடங்கப்பட்டு விட்டதன் பின்னர், அது ஒரு முழு-வீச்சிலான மற்றும் வரம்புகடந்த வெப்ப-அணுசக்தி பரிவர்த்தனையாக தீவிரமாகாமல் மட்டுப்படுத்தப்பட்டு விடமுடியும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஒரு அணுஆயுதப் போர் மூலோபாயம்.
இந்த மூலோபாயத்தை வகுத்த கிறுக்கர்கள் யார்? இந்த மூலோபாயங்களில் எதனையும் பரிசீலிக்க விரும்புவதே கிறுக்குத்தனத்தின் ஒரு அடையாளம் தான். அணு ஆயுதங்களின் பயன்பாடு கணக்கிட முடியாத அளவுக்கான பின்விளைவுகளைக் கொண்டிருக்கும். ஆளும் வர்க்கங்கள் போரில் இறங்கா வண்ணம் இந்த உண்மையால் தடுத்துவிட முடியுமா? இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த வரலாறுமே —இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முதல் 17 வருடங்களது அனுபவத்தைச் சொல்லவும் வேண்டியதில்லை— அத்தகையதொரு நம்பிக்கையான அனுமானத்திற்கு எதிராகவே வாதிடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மூலோபாயமானது யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே அல்லாது, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்கான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது. இரண்டு வாரங்கள் முன்பாகத் தான், அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது 21,600 பவுண்டு எடைகொண்ட பாரிய வெடிமருந்து வான் வெடிப்பு குண்டை (MOAB) வீசியது.
கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்கு முன்பாக 1945 ஆகஸ்டில் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி மீது அணுகுண்டுகளை வீசியதற்கு பிந்தைய காலத்தில் அமெரிக்காவால் ஒரு இராணுவ நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரும் குண்டு இதுவே. இந்த சம்பவம் உலகச் செய்திகளில் பல வாரங்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் என்று தான் எவரொருவரும் அனுமானித்திருப்பார்கள். ஆனால் அதெல்லாம் வெகுதூரம். இந்த குண்டின் பயன்பாடு வழக்கமான செய்திகளுக்கு மேலான முக்கியத்துவத்தை குறைவாகவே பெற்றதோடு துரிதகதியில் செய்திகளில் இருந்து மறைந்தும் போனது.
மூன்று நாட்களுக்கு முன்பாகத் தான், டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்: “வட கொரியாவுடன் ஒரு பெரிய, முக்கிய மோதலில் சென்று முடிவடையும் சாத்தியம் இருக்கவே செய்கிறது. நிச்சயமாய்.” ஏதோ வரும் வாரத்தில் கோல்ஃப் விளையாடத் திட்டமிடுவதைக் கூறித்து விவாதிப்பதைப் போல, ட்ரம்ப் இதனை அத்தனை சாதாரணமான விதத்தில் கூறினார். ஊடகங்களோ, துல்லியமாய் அவர் கூறுவது என்ன, ஒரு போரின் விளைபயன் என்னவாய் இருக்கும், எத்தனை பேர் கொல்லப்படுவார்கள், காயப்படுவார்கள், ஊனப்படுவார்கள், அத்தகையதொரு போரின் சூழலியல் பின்விளைவுகள் என்னவாய் இருக்கும் இவற்றையெல்லாம் விளக்குவதற்கு கோராமல், வெறுமனே அவரது கருத்துகளைச் செய்திகளாக வெளியிட்டன.
வட கொரியாவுடன் ஒரு “பெரிய, முக்கிய மோதலின்” —அதாவது, ஒரு அணுஆயுதப் போரின்— உண்மையான அபாயம் “நிச்சயமாக” இருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி கூறுவதற்கு ஊடகங்கள் தரும் இந்த உணர்ச்சியற்ற பதிலிறுப்பில் இருந்து ஒருவர் என்ன புரிந்து கொள்ள முடியும்? ஏகாதிபத்திய தர்க்கத்தை குருட்டுத்தனமாகவும் கேள்வியற்றும் ஏற்றுக் கொள்வதையே இது பிரதிபலிக்கிறது. ஊடகங்களும் முதலாளித்துவ அரசின் —அமெரிக்காவை மட்டுமல்ல, பெரிய முதலாளித்துவ அரசுகள் அத்தனையையுமே நான் குறிப்பிடுகிறேன்— அரசியல் மேற்கட்டமைப்பின் எஞ்சிய அனைவருமே தங்கள் பொய்களைக் கொண்டும் மற்றும் தமது மவுனங்களைக் கொண்டும் போருக்கே தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆளும் உயரடுக்குகள் போருக்கு தயாரிப்பு செய்கின்ற நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட்டாக வேண்டும். போரின் காரணங்களை புரிந்து கொள்வதென்பது போருக்கு எதிரான போராட்டத்தின் அத்தியாவசியமான அடித்தளமாய் இருக்கிறது. 1917 இல் லெனின் விளக்கியவாறாக, போர் என்பது உலக முதலாளித்துவம் மற்றும் “அதன் பில்லியன் கணக்கான இழைகள் மற்றும் தொடர்புகளது” அபிவிருத்தியின் விளைபொருளாகும். “மூலதனத்தின் அதிகாரத்தை தூக்கிவீசிவிட்டு அரசு அதிகாரத்தை பிறிதொரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றாமல்” போர் தடுத்து நிறுத்தப்பட முடியாது என்றார் அவர்.
ஆகவே, போருக்கு எதிரான போராட்டமானது, புரட்சிகர தலைமையின் நெருக்கடியை தீர்ப்பது என்ற இந்த வரலாற்று சகாப்தத்தின் அடிப்படையான அரசியல் பிரச்சினையை, அதன் கூர்மையான வடிவத்தில் முன்நிறுத்துகிறது. முதலாளித்துவ நெருக்கடியின் மிக முன்னேறிய நிலைக்கும் தொழிலாள வர்க்கத்தின் அகநிலை நனவுக்கும் இடையிலான முரண்பாடு முன்னொருபோதும் இத்தனை பெரியதாக இருந்ததில்லை. ஆனால் அதே முரண்பாடு தான் அரசியல் நனவிலான ஒரு தீவிரமான மற்றும் துரிதமான அபிவிருத்திக்கு உந்துசக்தியை வழங்குகிறது.
முதலாளித்துவம் பாதாளத்தை நோக்கி பாய்ந்து செல்கின்ற நிலையில், அது உலகின் அனைத்து பகுதிகளிலும் தொழிலாள வர்க்கத்தின் —பில்லியன் கணக்கிலான மனிதர்களின்— அரசியல் தீவிரப்படலுக்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சமூக நனவு சமூக இருப்பிற்குப் பின்தங்கி இருக்கிறது என்பது உண்மையே, ஆனால் அதற்காக பரந்த மக்களுக்கு எதனையும், குறைந்தபட்சம் ஒரு மேம்பட்ட வருங்காலத்திற்கான நம்பிக்கையைக் கூட, வழங்க முடியாத இப்போதைய சமூக அமைப்புமுறையின் திவால்நிலைக்கு தொழிலாள வர்க்கம் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமாகி விடாது. முன்னேற்றம் என்ற சிந்தனை முதலாளித்துவ சிந்தனையில் இருந்து காணாமல் போய் விட்டது. இந்த கோளத்தின் வாழ்க்கை நிலைமைகள் இப்போதிருப்பதை விடவும் இன்னும் இருபது ஆண்டுகழித்து மேம்பட்டிருக்கும் என்பதான ஆருடங்களை இப்போதும் யாராவது எங்கேனும் கேட்க முடிகிறதா என்ன? உலகளாவிய ஒரு கருத்துக்கணிப்பு எடுத்து, அதில் எல்லோரிடமும் அவர்கள் அடுத்த ஐம்பதாண்டுகளில் எது சாத்தியமாகும் என்று கருதுகிறார்கள் —வறுமை ஒழிக்கப்படுவதா அல்லது ஒரு இராணுவ மற்றும்/அல்லது சூழலியல் பேரழிவின் மூலமாக கோளம் அழிக்கப்படுவதா— என்று கேட்கப்பட்டால், பெருவாரியானோரின் பதில் என்னவாக இருக்கும் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்க முடியுமா?
ஆம், தொழிலாள வர்க்கத்தில் அரசியல் தலைமையின் ஒரு நெருக்கடி அங்கே இருக்கவே செய்கிறது. ஆனால் அது தீர்க்கப்படக் கூடிய ஒரு நெருக்கடியே ஆகும், ஏனென்றால் தொழிலாள வர்க்கமானது சமூகத்தை சோசலிசரீதியாக மறுகட்டுமானம் செய்வதற்கு புறநிலையாக நிலவும் சாத்தியத்தின் உருவடிவாகத் திகழக்கூடிய ஒரு புரட்சிகர சக்தியாகும்.
இந்த அடித்தளத்தின் மீதே அனைத்துலகக் குழுவானது, ட்ரொட்ஸ்கி 1938 இல் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தபோது முன்வைத்திருந்த வரலாற்றுக் கடமையை முன்னெடுப்பதற்காக போராடுகிறது.
இந்த உலக கட்சியைக் கட்டியெழுப்புவதில் அனைத்துலகக் குழு முகம்கொடுக்கின்ற சவால்களின் தீவிரம் குறித்து நாங்கள் குறைமதிப்பீடு செய்யவில்லை. ஆனால் வேறெந்தக் கட்சியாலும் இந்தப் பணியை செய்ய முடியாது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதாகவோ அல்லது ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவோ உலகில் வேறெந்தவொரு அமைப்பும், எந்த அளவிலான முக்கியத்துவத்துடனும், கூற இயலாது.
“போலி-இடதுகள்” என்ற எங்களது வார்த்தைப் பிரயோகம் கன்னைமோதலால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு மிகையான பயன்பாடு அல்ல. மார்க்சிசம், ட்ரொட்ஸ்கிசம், அல்லது சோசலிசத்துக்கான புரட்சிகர போராட்டத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தின் அமைப்புகளுக்கான ஒரு துல்லியமான வரையறையாகும் இது. சிப்ராஸ், இக்லெஸியாஸ், மெலோன்சோன் அல்லது சாண்டர்ஸ் போன்ற தேசியவாத அரைவேக்காடுகளுக்கு பின்னால் அனைத்துலகக் குழு வால்போல் ஒட்டிக்கொண்டு நிற்பதில்லை. இத்தகைய ஆளுமைகளின் தலைமையிலான அல்லது அவற்றுடன் தொடர்புடைய அரசியல் அமைப்புகள், ட்ரொட்ஸ்கியிடம் இருந்து வார்த்தைகளை வாங்கிக் கூறுவதானால், “முழுக்க முழுக்க இற்றுப் போனவையாகும்.”
அகந்தைக்குள் மூழ்காமல், அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளுக்கு, ரஷ்ய புரட்சியின் இந்த நூறாவது ஆண்டில், வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்கு முழு உரிமைகளும் உள்ளது. அனைத்துலகக் குழுவின் குரலான உலக சோசலிச வலைத் தளத்தின் செல்வாக்கு துரிதமாக வளர்ந்து வருகிறது. எங்களது வாசகர் எண்ணிக்கை பெருகும்போது, எங்களது அமைப்புகளின் உருவளவும் விரியும். தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய தீவிரப்படலானது அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகள் ஸ்தாபிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளோம். உலகின் பல பகுதிகளில் இருந்தவாறாக எங்களை செவிமடுத்துக் கொண்டிருப்போர் இந்த இன்றியமையாத முன்முயற்சியை கையிலெடுத்து தாங்கள் வாழும் நாடுகளில் புதிய பிரிவுகளை ஸ்தாபிக்கவிருப்பவர்களில் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, பெட்ரோகிராட்டுக்கு திரும்பும் சமயத்தில், லெனின் எழுதினார்:” நாங்கள் இந்த உலகத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகப் புறப்பட்டிருக்கிறோம்”, உண்மையில், அதைத் தான் போல்ஷிவிக்குகள் செய்து காட்டினார்கள். உலகை ஒரு சோசலிச அடித்தளத்தின் மேல், அதாவது வறுமை, சுரண்டல், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் போர் இல்லாத ஒரு உலகத்தை மீளக்கட்டியெழுப்புவதே நான்காம் அகிலத்தின் இலட்சியமாகும். இந்தப் போராட்டத்தில் எங்களுடன் கரம் கோர்க்க வேண்டும் என்று உலகின் அத்தனை பகுதிகளிலும் இருந்து இந்தப் பேரணியில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.