Print Version|Feedback
Manchester’s dead: Victims of British regime-change operations in the Middle East
மான்செஸ்டரில் உயிரிழந்தவர்கள்: மத்திய கிழக்கில் பிரிட்டிஷ் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு பலியானவர்கள்
By Robert Stevens
26 May 2017
மான்செஸ்டரில் திங்களன்று மாலை 22 பேர் கொல்லப்பட்ட பயங்கர தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி சல்மான் அபேடிக்கும் பிரிட்டிஷ் உளவுத்துறை முகமைகளுக்கு இடையே முன்கூட்டியே பரிச்சயம் இருந்ததற்கான அதிக விபரங்கள் வெளிவந்துள்ளன.
அபேடியின் தொடர்புகளும் மற்றும் அவர் பயணங்களும் அத்தாக்குதலுக்கு உகந்த வகையில் இருப்பதால், மத்திய கிழக்கில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவினது குரூரமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட அவற்றினது ஒரு பரந்த செயல்பாட்டு வலையமைப்பின் பாகமாக, அபேடி ஒரு பாதுகாக்கப்பட்ட உடைமையாக இருந்தார் என்பது மட்டுமே இதுவரையில் அவரை குறித்து பெரிதும் ஏற்கத்தக்க ஒரே விளக்கமாக உள்ளது.
இத்தகைய செயல்பாடுகளைக் குறித்த வெளிப்பாடுகள் தான், அந்த குண்டுவீச்சு மீதான இங்கிலாந்து விசாரணைகள் குறித்து வெளியான அமெரிக்க உளவுத் தகவல் கசிவுகள் மீது பிரதம மந்திரி தெரேசா மே சீற்றம் கொள்வதற்கான காரணமாக உள்ளது. இந்த கசிவுகள் வெளியானதற்கான குறிப்பிட்ட காரணங்கள் என்னவாக இருந்தாலும், அவை பிரிட்டிஷ் நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ வாதங்களை, அதாவது அபேடி அதற்கு முன்னர் அறியப்படாத "தனிப்பட்ட தாக்குதல்தாரி" என்பதை முற்றிலுமாக கீழறுக்கின்றன. அதற்கு பதிலாக, ஒரு இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்துக் கொண்டிருந்த போது கொல்லப்பட்டவர்களும் மற்றும் ஊனமாக்கப்பட்டவர்களும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் பிரிட்டனின் ஆட்சி மாற்ற கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது இப்போது தெளிவாகிறது.
அபேடி ஒரு தற்கொலை குண்டுதாரி ஆவதற்கு விவாதித்திருந்தார் என்பது உட்பட அவர் ஓர் ஆபத்தாக கருதப்பட்டார் என்ற எச்சரிக்கை, கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில், பிரிட்டிஷ் உளவுத்துறைக்குக் கிடைத்திருந்து என்பது இப்போது நமக்கு தெரிய வருகிறது.
வியாழனன்று வெளியான புதிய கசிவுகளின்படி, அத்தாக்குதல்களுக்கு முன்னதாக அபேடி பல இடங்களுக்கும் பயணம் செய்திருந்தார், இஸ்தான்புல்லில் இருந்து ஜேர்மனியின் Dusseldorf விமான நிலையம் வழியாக இங்கிலாந்துக்கு பயணம் செய்ததும் இதில் உள்ளடங்கும். பஷர் அல்-அசாத் ஆட்சியைக் கவிழ்க்கும் மேற்கத்திய முயற்சிகளில் இணைய, பல ஆண்டுகளாக, ஐரோப்பிய ஜிஹாதிஸ்டுகள் சிரியாவிற்கான பயண முனையாக துருக்கியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அபேடி சிரியா சென்று அங்கே பயிற்சி பெற்றிருந்ததை பிரெஞ்சு உளவுத்துறை உள்ளடங்கலாக பல ஆதாரங்கள் அவற்றின் அறிக்கைகளில் பகிரங்கமாக தெரிவித்துள்ளன. அபேடி கடந்த ஆண்டு மட்டும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறைந்தபட்ச இரண்டு முறை இஸ்தான்புல்லைக் கடந்து சென்றுள்ளார் என்று ஒரு "துருக்கி அதிகாரி" தெரிவித்ததை பைனான்சியல் டைம்ஸூம் குறிப்பிட்டுள்ளது. அந்த பத்திரிகை அறிவித்தது, “ஏப்ரல் மத்தியில் அவர் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து லிபியா சென்றார், அதேவேளை 2016 மே மாதம் இறுதியில் அவர் மான்செஸ்டரில் இருந்து லிபியாவிற்கு சென்றார், இரண்டு முறையுமே இஸ்தான்புல் அடாடுர்க் விமான நிலையம் வழியாக சென்றிருந்தார்.”
துருக்கியில் இருந்து மான்செஸ்டருக்குச் செல்கையில் அவர் வழியில் குறைந்தபட்சம் இரண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழியாகவாவது அவர் பயணித்திருந்தார். பேர்லின் பத்திரிகை Der Tagesspiegel குறிப்பிடுகையில், இத்தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக மே மாதம் 18 ஆம் தேதி அபேடி டுஸ்செல்டோர்ப் இல் இருந்து மான்செஸ்டருக்கு சென்றதாக குறிப்பிட்டது. அவர் பிராக் வழியாக லிபியாவிலிருந்து ஜேர்மனி வந்தடைந்ததாக கூறிய ஜேர்மன் உளவுத்துறை ஆதாரநபர்களை அப்பத்திரிகை மேற்கோளிட்டது.
கார்டியன் குறிப்பிட்டது, “22 வயதான அந்நபர் குறைந்தபட்சம் இரண்டு முறை ஜேர்மனிக்கு பயணித்திருந்தார், நிதியியல் நகரமான பிராங்க்பேர்ட் க்கு ஒருமுறை சென்றதும் அதில் உள்ளடங்கும்.” அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “டுஸ்செல்டோர்ப் நகரம் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ளது, அங்கே தான் பேர்லின் சந்தையில் கிறிஸ்துமஸ் அன்று தாக்குதல் நடத்திய Anis Amri காலத்தைச் செலவிட்டிருந்தார்,” என்றது.
ஜேர்மன் சஞ்சிகை Focus இன்னும் நிறைய கசிவுகளைக் குறித்து எழுதியது. ஜேர்மன் உளவுத்துறை ஆதாரநபர்களை மேற்கோளிட்டு, அது குறிப்பிடுகையில் அபேடி 2015 இல் பிரிட்டனில் இருந்து பிராங்க்பேர்ட் க்குப் பயணித்திருந்ததாக குறிப்பிட்டது. அபேடி சிரியாவில் துணைஇராணுவ பயற்சி பெறுவதற்கு முன்னரே இந்த பயணம் நடந்திருந்ததாக இங்கிலாந்து பொலிஸ் ஜேர்மனியின் உளவுத்துறை முகமை BKA க்கு கூறி இருந்ததாக Focus சஞ்சிகை குறிப்பிட்டது. அவர் ஜேர்மனியில் கைது செய்யப்படவில்லை, அத்துடன் அவர் எந்த கண்காணிப்பு பட்டியலிலும் கூட வைக்கப்படவில்லை என்று அது குறிப்பிட்டது.
லிபியா, சிரியா, துருக்கி மற்றும் இங்கிலாந்திற்கு அபேடி ஒளிவுமறைவின்றி பயணிக்க முடிந்தது என்ற உண்மை மீது அங்கே எந்த வெளிப்படையான விளக்கமும் கிடையாது. இங்கிலாந்து "எல்லைகள் ஓட்டை உடைசலாக" உள்ளன, அல்லது வெகு குறைவான எல்லை பாதுகாப்புப்படையினரே உள்ளன என்ற அர்த்தமற்ற வாதங்களுக்கும் இங்கே இடமில்லை. எந்தவித குறுக்கீடும் இல்லாமல் அபேடியால் சுங்கத்துறையின் ஊடாக செல்ல முடிந்தது என்பது அவருக்கு எல்லாவிதத்திலும் வழி திறந்து விடப்பட்டிருந்தது என்பதை மட்டுமே அர்த்தப்படுத்துகிறது.
பல தசாப்தங்களாக, அடுத்தடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்கள் அவற்றின் நோக்கங்களை எட்டுவதற்காக தாக்குதல்களை பயன்படுத்த தயாரிப்பு செய்து, ஜிஹாதி குழுக்களுடன் இணைந்து வேலை செய்துள்ளன. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான சளைக்காத தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டு, இங்கிலாந்து அதிகாரிகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கை நோக்கங்களுக்கேற்ப, தேவையான நேரத்தில் இயக்கத்திற்கு கொண்டு வரக்கூடிய இஸ்லாமிய தீவிரவாத கையாட்களுக்கும் குழுக்களுக்கும் புகலிடம் அளித்து வைத்திருந்தனர் என்பதே இதன் அர்த்தமாகும்.
அல்ஜீரியாவின் ஆயுதமேந்திய இஸ்லாமிக் குழு (GIA), லிபிய இஸ்லாமிய போராளிகள் குழு (LIFG), எகிப்திய இஸ்லாமிய ஜிஹாதி மற்றும் அல் கொய்தா போன்ற குழுக்கள் எல்லாம் இலண்டனை மையமாக கொண்டிருந்தன. இத்தகைய அமைப்புகள் சிலவற்றுடனும் மற்றும் அவற்றின் தலைவர்களுடனும், Abu Hamza மற்றும் Abu Qatada ஆகியோருடனான விடயங்கள் மிகவும் நன்கறியப்பட்டிருந்த நிலையில், அவர்களுடன் பாதுகாப்பு சேவைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதுடன், அல் கொய்தா ஐரோப்பாவில் அதன் செயல்பாடுகளுக்கான முக்கிய மையமாக இலண்டனைக் கையாண்டு வந்தது.
அதேபோல, லிபிய தலைவர் கேர்னல் மௌம்மர் கடாபியை எதிர்த்த லிபிய இஸ்லாமியர்களை ஆதரித்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவர்களுடன் நெருக்க வேலை செய்தது. முன்னாள் MI5 உளவாளி David Shayler அம்பலப்படுத்தியதைப் போல, 1996 இல் நடத்தப்பட்ட கடாபியின் படுகொலை முயற்சியில் அதுபோன்றவொரு அமைப்பான லிபிய இஸ்லாமிய போராளிகள் குழு உடன் MI6 ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தது.
பல ஆண்டுகளாக, LIFG அங்கத்தவர்களின் ஒரு குழு சல்மான் அபேடியின் வீட்டிற்கு அருகில் மான்செஸ்டரின் Whalley Range மாவட்டத்தில் செயல்பட்டு வந்தனர். சல்மான் அபேடியின் தந்தையான, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியான ரமடான் அபேடி உம் கூட LIFG இன் ஓர் அங்கத்தவராவார். அவரும், ஓர் அணுஆயுத விஞ்ஞானியான அவர் மனைவி சாமியா ரபாலும், அவர் கடாபி ஆட்சியால் கைது செய்யப்பட்ட பின்னர் 1991 இல் திரிப்போலியிலிருந்து தப்பி சென்றனர். அந்த ஆட்சியின் உள்துறை பாதுகாப்பு சேவை பணியில் இருந்த அவர், நடத்தப்படவிருந்த பொலிஸ் வேட்டைகளைக் குறித்து கடாபி-விரோத இஸ்லாமிய குழுக்களின் அங்கத்தவர்களுக்கு தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்பட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. “ரமடானின் வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் கடாபியை பதவியிலிருந்து கவிழ்ப்பதை சுற்றியே இருந்ததாக தெரிகிறது,” என்று Daily Mail அறிவித்தது.
லிபியாவிலிருந்து தப்பி வந்த பின்னர், ரமடானும் அவர் மனைவியும் ஒரு சில காலம் சவூதி அரேபியாவில் வாழ்ந்தனர். பின்னர் அவ்விருவரும் இங்கிலாந்து சென்று, விண்ணப்பித்ததும், அவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது. முதலில் அவர்கள் இலண்டனில் வசித்தனர், பின்னர் பிரிட்டிஷ் உளவுத்துறை நெருக்கமான உறவுகளைப் பேணிவந்த பல்வேறு கடாபி-எதிர்ப்பு கூறுபாடுகளுக்கான ஒரு மையமாக மாறியிருந்த தெற்கு மான்செஸ்டர் பகுதிக்கு நகர்ந்தனர்.
2011 அக்டோபரில் அமெரிக்க/இங்கிலாந்து ஆதரவிலான "கிளர்ச்சியாளர்கள்" கடாபியை பதவியிலிருந்து வெளியேற்றி அவரை படுகொலை செய்வதில் போய் முடிந்த ஏகாதிபத்திய பினாமி போரில் சண்டையிடுவதற்காக, ரமடான் அந்தாண்டு ஏதோவொரு பகுதியில் லிபியாவிற்குத் திரும்பி இருந்தார். இது எப்போது நடந்ததென்றால் அதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னதாக வெளியிடப்படாத எண்ணிக்கையில் தேசியளவில் பலரைக் கொன்றொழித்த நேட்டோ குண்டுவீச்சு நடவடிக்கைக்குப் பின்னர் நடந்தது. ரமடான், அந்நாட்டைக் கட்டுப்பாட்டில் எடுக்க முண்டியடித்துக் கொண்டிருந்த பல போராளிகள் குழுக்களில் ஒன்றான திரிப்போலியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையின் நிர்வாக மேலாளராக ஆகியிருந்தார்.
அபேடியின் அன்னை சாமியா, அல் கொய்தாவின் மறைந்த ஒரு முன்னாள் தளபதி அபு அனாஸ் அல்-லிபி இன் மனைவியான உம் அப்துல் ரமடானின் ஒரு நெருங்கிய தோழியாவார். 1998 அமெரிக்க தூதரக குண்டுவீச்சில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட அல்-லிபி, "1995 இல் பிரிட்டனில் அரசியல் தஞ்சமடைந்து—மான்செஸ்டரில் ஐந்தாண்டுகள் தங்கியிருந்தார்" என்று Daily Mail குறிப்பிட்டது. “அணுசக்தி பொறியியல் படித்து வந்த அபேடியின் அன்னை உடன் அப்துல் ரமடான் லிபிய தலைநகரில் ஒன்றாக கல்லூரியில் படித்தவராவார். அவ்விருவரும் மான்செஸ்டரில் பல ஆண்டுகள் ஒன்றாக வசித்திருந்ததாக அவர் [ரமடான்] கூறியிருந்தார்,” என்று Mail குறிப்பிட்டது.
அக்டோபர் 2013 இல் திரிப்போலியில் அல்-லிபி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னரே கல்லீரல் புற்றுநோயால் 2015 இல் உயிரிழந்தார். மான்செஸ்டர் குண்டுவீச்சை தொடர்ந்து, ரமடான் அபேடி மற்றும் அவர் இளைய மகன் ஹஷெம் செவ்வாயன்று இரவு திரிபொலியில் கைது செய்யப்பட்டனர்.
சல்மான் அபேடி, 2016 இல் சிரியா மீதான ஒரு டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவரும், இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய அரசுக்கான ஆள்சேர்ப்பவர்களில் முக்கிய ஒருவருமான ரபேல் ஹோஸ்டெ (Raphael Hostey) இன் மிக நெருக்கமான கூட்டாளி என்றும் அறியப்பட்டிருந்தார். ஹோஸ்டெ, Fallowfield மாவட்ட நகரில் அபேடி வீட்டிற்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள Moss Side இல் வளர்ந்தவராவார்.
வெடிகுண்டு தாக்குதல் மீதான ஓர் அறிக்கையில், லிபியாவின் பேடாவில் உள்ள அப்துல்லாஹ் தினி இன் அரசாங்கம் குறிப்பிடுகையில், பிரிட்டிஷ் அரசாங்கம் பயங்கரவாதிகளை வளர்த்தெடுத்து கொண்டிருப்பதைக் குறித்து அது எச்சரித்திருந்ததாக குறிப்பிட்டது. லிபியாவிலிருந்து நாடு கடந்து வந்து இங்கிலாந்தை மையமாக கொண்டவர்கள் உட்பட, இஸ்லாமிய தீவிரவாதிகளால் தினியின் அரசாங்கம் 2013 இல் திரிப்போலியில் இருந்து விரட்டப்பட்டிருந்தது. தினி இன் அரசாங்கம், பிரதமர் மே க்கு முன்னர் இருந்த டேவிட் கேமரூன் "ஒட்டுமொத்த உலகிற்கும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடாக லிபியாவை மாற்றும் ஒரு முயற்சியில், எங்கள் பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்,” என்று அவர் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதன் மீது குற்றஞ்சாட்டி இருந்தது.