Print Version|Feedback
Syria’s alleged gas attack: An imperialist provocation
குற்றஞ்சாட்டப்படும் சிரிய விஷவாயு தாக்குதல்: ஒரு ஏகாதிபத்திய தூண்டல்
Bill Van Auken
6 April 2017
சிரியாவின் வடமேற்கு இட்லிப் மாகாணத்தில் நடந்த இரசாயன தாக்குதலுக்கு ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு விசுவாசமான படைகள் தான் பொறுப்பாகின்றன என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு, ட்ரம்ப் நிர்வாகம் போரால் சீரழிந்த அந்த மத்திய கிழக்கு நாட்டில் ஒரு புதிய அமெரிக்க தலையீட்டைத் தீவிரப்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டு பகிரங்கமாக விடையிறுத்தார்.
வாஷிங்டனின் விருப்பமான அரபு கைப்பாவை ஆட்சியாளர்களில் ஒருவரான ஜோர்டன் நாட்டு அரசர் இரண்டாம் அப்துல்லாஹ் பக்கவாட்டில் நிற்க, வெள்ளை மாளிகையின் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் ட்ரம்ப் பேசுகையில், “அசாத் ஆட்சியின் இந்த கொடூரமான நடவடிக்கைகளைச் சகித்துக் கொள்ள முடியாது,” என்றும், “என்னைப் பொறுத்த வரையில் பல்வேறு வரம்புகளைக் கடந்து விட்டன" என்றும் அறிவித்தார். 2013 இல் இரசாயன ஆயுத தாக்குதல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்காக சிரியா மீது இராணுவரீதியில் தலையிட அச்சுறுத்தியதோடு அதை நடத்த தவறியதற்காக ட்ரம்ப் அவருக்கு முன்பிருந்த பராக் ஒபாமாவைக் குறைகூறியதோடு, “இப்போது எனக்கு பொறுப்பிருக்கிறது,” என்று அறிவித்தார், அத்துடன் “சிரியா மற்றும் அசாத்தை நோக்கிய" அவர் "மனோபாவம் மிகவும் மாறியிருக்கிறது" என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
இதற்கிடையே ஐக்கிய நாடுகளுக்கான வாஷிங்டன் தூதர் நிக்கி ஹேலி (Nikki Haley), சிரியாவிற்கு எதிரான தாக்குதலுக்கு ஒரு மூடிமறைப்பாக சேவையாற்ற கூடிய மேற்கு-ஆதரவிலான ஓர் ஆத்திரமூட்டும் ஐ.நா. தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் கொண்டு ரஷ்யா தடுத்துவிடக்கூடும் என்று எதிர்பார்ப்பதால் அதற்கு முன்னதாகவே ஒருதலையான அமெரிக்க இராணுவ நடவடிக்கை குறித்து இன்னும் அதிக நேரடியான அச்சுறுத்தலை வெளியிட்டார். “ஐக்கிய நாடுகள் கூட்டாக செயல்படுவதற்கான அதன் கடமையிலிருந்து தொடர்ந்து தவறும் போது, அது நாங்கள் எமது சொந்த நடவடிக்கையை எடுக்க நிர்பந்திக்கப்படும் வாழ்க்கை காலமாக ஆகிவிடுகிறது,” என்றார்.
ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டையும் மற்றும் மத்திய கிழக்கின் பெரும்பகுதிகளையும் ஒரு மரண புதைகுழியாக மாற்றி பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், வாஷிங்டன் மீண்டும் ஏகாதிபத்திய தாக்குதலுக்கு குறிப்பிடத்தக்க வகையில் அதேபோன்றவொரு பாசாங்குதனத்தைப் பயன்படுத்தி வருகிறது.
நாஜி மூன்றாம் ரைஹ் தோல்விக்குப் பின்னர் வேறெந்த ஆட்சியை விடவும் அதிகளவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கும் மற்றும் போர் குற்றங்கள் புரிவதற்கும் பொறுப்பான ஓர் அரசாங்கம், முதலை கண்ணீர் மற்றும் போலி தார்மீக ஆத்திரத்துடன், மீண்டுமொருமுறை, "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களை" ஒரு ஒடுக்கப்பட்ட முன்னாள் காலனித்துவ நாடு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டும் வார்த்தைகள், அமெரிக்க மற்றும் உலக மக்கள் மீது ஆதாரமற்ற வாதங்களுடன் குண்டுமழையென வீசப்படுகின்றன.
முடுக்கிவிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தின் பாசாங்குத்தனத்தில், சிரியா தொடர்பான அமெரிக்க கொள்கையை மாற்றும் நோக்கில் மத்திய உளவுத்துறையும் (CIA) மற்றும் மேற்கு கூட்டு இரகசிய சேவைகளும் திட்டமிட்டு செயல்படுத்துகின்ற ஓர் ஏகாதிபத்திய ஆத்திரமூட்டலுக்கான சகல அறிகுறிகளும் உள்ளன.
முதலாவதாக, அதில் உள்நோக்கம் சம்பந்தமான கேள்வி உள்ளது. அதுபோன்றவொரு குற்றத்தில் யாருக்கு ஆதாயம்? தெளிவாக அசாத் ஆட்சிக்குக் கிடையாது, அது, ஆறு ஆண்டுகால இரத்தந்தோய்ந்த ஆட்சி மாற்றத்திற்கான போரில் சிஐஏ மற்றும் வாஷிங்டனின் பிராந்திய கூட்டாளிகளால் ஆயுதமேந்த செய்யப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்களை", ரஷ்யா மற்றும் ஈரான் உதவியோடு, பெரிதும் வென்றடக்கி உள்ளது. அந்த அரசாங்கம் இப்போது அந்நாட்டின் பிரதான நகரங்கள் உட்பட அந்நாட்டின் 80 சதவீதத்தை ஆட்சி செய்து வருகிறது, இஸ்லாமியவாதிகளின் பிடி பெரும்பாலும் இட்லிப் மாகாணத்தின் புறநகர் பகுதிகளுக்குள் குறைக்கப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசுடன் (ISIS) சண்டையிடுவதற்காக அசாத்தை பதவியிலிருந்து நீக்குவதில் ஒருங்குவியும் நிலைப்பாட்டிலிருந்து ட்ரம்ப் நிர்வாகம் கவனத்தை மாற்றிக் கொள்ள சமிக்ஞை செய்திருந்த நிலைமைகளின் கீழ், டமாஸ்கஸ் அதுபோன்றவொரு ஆத்திரமூட்டும் தாக்குதலை ஏன் நடத்தும்?
ஆனால் சிஐஏ ஆதரவிலான "கிளர்ச்சியாளர்கள்" தான் —அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரத்தில் உள்ள அவர்களது ஆதரவாளர்களோடு சேர்ந்து— சிரியா எங்கிலும் அசாத் அரசாங்கம் அதன் ஆட்சியை ஒன்றுதிரட்டுவதைத் தடுப்பதற்கு ஒரு வழிவகையாக அதுபோன்றவொரு ஆத்திரமூட்டலை நடத்துவதில் எல்லா நலன்களையும் கொண்டுள்ளனர். அனைத்திற்கும் மேலாக, ஐக்கிய நாடுகள் சபையின் இரசாயன ஆயுத குறைப்பு முகமையின் விசாரணை உட்பட பல்வேறு விசாரணைகள், சிரிய அல் கொய்தாவுடன் இணைப்பு கொண்ட அல் நுஸ்ரா முன்னணியைச் சேர்ந்த இந்த சக்திகள்தான் குளோரின் மற்றும் சரின் விஷவாயுக்களைப் பயன்படுத்தி இதேபோன்ற தாக்குதல்களை நடத்தி இருப்பதாக தெளிவுபடுத்தி உள்ளன, இத்தகைய விஷவாயுக்களை இவை அவர்களது பிராந்திய ஆதரவாளர்களான சவூதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கியிடம் இருந்து பெற்றுள்ளனர் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் தகைமை அவர்களுக்கு இருப்பதை அவர்களே நிரூபித்துள்ளனர்.
அடுத்தது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் காலகட்டம் குறித்ததாகும். செவ்வாயன்று அதிகாலை நடந்துள்ள குற்றஞ்சாட்டப்படும் இந்த விஷவாயு தாக்குதல், புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த "சிரியா மற்றும் அப்பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கு ஆதரவான மாநாடு" என்பது தொடங்க இருந்ததோடு பொருந்தி உள்ளது, இம்மாநாடு சீரழிக்கப்பட்ட அந்நாட்டை சாத்தியமான அளவிற்கு ஆதாயத்தோடு மறுகட்டுமானம் செய்வதில் ஐரோப்பாவின் தலையீட்டுடன் சேர்ந்து சிரியாவில் "அரசியல் மாற்றத்திற்கான" முன்மொழிவுகளை மீளாய்வு செய்ய இருந்தது. குற்றஞ்சாட்டப்படும் இந்த இரசாயன தாக்குதல் ஆட்சி மாற்றத்திற்கான புதுப்பிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் மற்றும் அசாத்தை வெளியேற்றுவது இனியும் முன்னுரிமையில் இல்லை என்று அறிவுறுத்துவதற்காக ட்ரம்ப் நிர்வாகம் மீது விமர்சனங்களை வைக்கவும் களம் அமைத்துள்ளது.
இதில் ஒருவிதமான வடிவம் உள்ளது. கடந்த முறை வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஒரு மிகப்பெரிய இரசாயன ஆயுத தாக்குதலுக்காக அசாத் ஆட்சியைக் குறைகூறி, அந்த பாசாங்குத்தனத்தின் மீது ஆகஸ்ட் 2013 இல் ஒரு முழு அளவிலான போரை தொடங்குவதற்கு அருகில் சென்றிருந்தன. குற்றஞ்சாட்டப்பட்ட அந்த தாக்குதலைக் குறித்து அதற்கு பின்னர் வெளியான தகவல்கள் துருக்கிய உளவுத்துறையின் உதவியோடு "கிளர்ச்சியாளர்களது" ஓர் ஆத்திரமூட்டல் என்பதை அம்பலப்படுத்தின, அது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத விசாரணையாளர்கள் டமாஸ்கஸிற்கு வந்த அதே நாள் நடந்திருந்தது.
எவ்வாறிருப்பினும் இந்த ஒட்டுமொத்த விவகாரமும் கூறும் அதிகப்படியான அம்சம் என்னவென்றால் இந்த சம்பவம் குறித்த அடிப்படை உண்மைகள் கூட தெரிய வராமல், தீவிர விசாரணைகள் மிக குறைந்தளவே நடந்துள்ள நிலையிலேயே, ஒட்டுமொத்த பெருநிறுவன ஊடகமும் அசாதாரணமான விதத்தில் இராணுவ நடவடிக்கைக்கான ஒரு முழு அளவிலான பிரச்சாரத்தில் ஒருங்கிணைந்துள்ளன. சிரியாவில் நடந்த இந்த குற்றகரமான சம்பவம் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, பிரதான பத்திரிகை ஆசிரியர்களும் கட்டுரையாளர்களும் அத்துடன் தொலைகாட்சி செய்தி விமர்சகர்களும் இதையொரு விவாதப்பொருளாக பெற்று விட்டதாக தெரிகிறது.
நிச்சயமாக அவர்களில் யாருமே பெருமதிப்பார்ந்து அவர்கள் பெற்ற தகவல்களின் ஆதாரங்களில் அமெரிக்க உளவுத்துறை மற்றும் போருக்கு அழுத்தமளிக்கும் இராணுவ அதிகாரிகளோடு சேர்ந்து அல் கொய்தா தொடர்புபட்ட சிரியாவில் உள்ள "நடவடிக்கையாளர்கள்" உள்ளடங்கி இருப்பதை தங்களின் வாசர்களுக்கும் நேயர்களுக்கும் தகவலளிக்க கருதவில்லை.
எப்போதும் போல, அதை முன்னெடுப்பதில் நியூ யோர்க் டைம்ஸ் முன்னணியில் இருந்தது, "சிரியர்கள் மீதான இரசாயன தாக்குதல் உலகின் சீற்றத்தைத் தூண்டியது,” என்ற தலைப்பை அது தாங்கி வந்தது. உளவுத்துறை முகமைகள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் ஊடக ஊடுருவிகளின் உலகத்திற்கு வெளியே, அதுபோன்ற "சீற்றத்திற்கு" அங்கே என்ன ஆதாரம் இருக்கிறது என்பது தெளிவாக இல்லை. அவ்விடயத்தில், இந்த "சீற்றத்தின்" தேர்ந்தெடுக்கப்பட்ட குணாம்சத்திற்கான எந்தவொரு விளக்கமும் அங்கே இருக்கவில்லை.
இந்த தார்மீக கொந்தளிப்பானது, ஒரே நாளில் 1,000 நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்று குவித்த கெய்ரோ கொலைகாரர் ஜெனரல் அப்தெல் பதாஹ் எல்-சிசி க்கு ட்ரம்ப் சிவப்பு கம்பள மரியாதை அளித்து வரவேற்ற அடுத்த நாள் வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவ்விடயத்தில், கடந்த மாதம் மொசூலில் ஒரேயொரு அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதலில் 200 க்கும் அதிகமான ஈராக்கிய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மீதோ அல்லது யேமனைக் கூட விட்டுவிடுவோம், சிரியாவிலேயே கூட பள்ளிக்கூடங்கள், மசூதிகள் மற்றும் வீடுகள் மீது வீசப்பட்ட அமெரிக்க குண்டுகள் மற்றும் ஏவுகணைகளில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இல்லையென்றாலும் நூற்றுக் கணக்கானவர்கள் எரிந்து சாம்பலானது குறித்தோ டைம்ஸ் அதுபோன்ற எந்த "சீற்றத்திலும்" அக்கறை காட்டவில்லை.
அமெரிக்க உளவுத்துறை உடனான நேரடி கூட்டுறவின் விளைபொருளாக அவற்றை முத்திரை குத்தும் கட்டுரைகளில் ஒருசில மூலவரிகள் தென்படுகின்றன. இவ்விடயத்தில், Anne Barnard இருந்தார், இவர் சிரியாவில் அமெரிக்கா முடுக்கிவிட்ட ஆட்சி மாற்றத்திற்கான போரின் ஒட்டுமொத்த போக்கிலும் அதுபோன்ற சேவைகளை வழங்கியவராவார். அவர் வேலைக்கு தோமஸ் ப்ரீட்மனின் வேலைகள் துணை நிற்கின்றன, இவர் ஒரு கால் நூற்றாண்டு போக்கில் ஒவ்வொரு அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டையும் ஆதரித்துள்ளார். இவர் "சிரியாவைப் பிரிக்க" மற்றும் அமெரிக்க இராணுவம் நடைமுறைப்படுத்தும் "பாதுகாக்கப்பட்ட" பிரதேசத்தை உருவாக்க பணிவடக்கத்தோடு முன்மொழிகிறார். “இது சுலபமாகவோ அல்லது அருமையாகவோ இருக்காது,” என்று கூறும் அவர், பனிப்போர் காலத்தில் ஐரோப்பாவில் அமெரிக்கா 400,000 துருப்புகளைக் கொண்டிருந்தது என்பதை மறுநம்பிக்கை அளிக்கும் வகையில் கூறுகிறார்.
சிரியா சம்பவங்கள் குறித்த ஊடக பிரச்சார நடவடிக்கையில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரேமாதிரியாக இருப்பது என்னவென்றால் எல்லா தரப்பிலிருந்தும் குற்றஞ்சாட்டப்படும் இந்த இரசாயன தாக்குதலில், சம அளவில் குற்றகரமாக ஈரான் மற்றும் ரஷ்யா மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது என்பது தான். இந்த தாக்குதல் அசாத்தின் "அவருக்கு உதவுபவர்களின், குறிப்பாக ரஷ்யா மற்றும் ஈரானின் துர்மார்க்கத்தை" எடுத்துரைக்கிறது என்று டைம்ஸ் தலையங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் ஒன்று வலியுறுத்துகையில், “திரு. அசாத் மற்றும் அவருக்கு உதவும் ஈரானிய மற்றும் ரஷ்ய உதவியாளர்களோடு நிற்க வேண்டுமா வேண்டாமா என்பது இப்போது திரு. ட்ரம்ப் தான் முடிவெடுக்க வேண்டும்,” என்கிறது.
நோக்கம் தெளிவாக உள்ளது. சிரியாவில் நடந்த இந்த புதிரான சம்பவங்கள், அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்திற்குள் வெளியுறவு கொள்கை மீது நடந்துவரும் கடுமையான உள்விவாதங்களை மாற்றுவதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப்பட இருக்கின்றன. ஈரான் மற்றும் ரஷ்யா இரண்டினோடும் இராணுவ மோதலுக்கு தடையின்றி ஆயத்தப்படுத்துவதற்கு அழுத்தமளித்து வரும் அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்குள் மேலோங்கிய போக்குடன் ட்ரம்ப் நிர்வாகத்தைப் பொருந்தி இருக்குமாறு செய்வதே உத்தேசமாகும்.
இத்தகைய முயற்சிகள் அவற்றின் விரும்பத்தக்க விளைவைக் கொண்டு வந்துள்ளன, இவற்றை சிரியா குறித்த ட்ரம்பின் கருத்துக்களில் மட்டுமல்ல, மாறாக ட்ரம்பின் பாசிசவாத தலைமை மூலோபாயவாதி ஸ்டீபன் பானன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முக்கியஸ்தர்கள் குழுவிலிருந்து நீக்கப்பட்டிருப்பதிலும் புதனன்று உறுதியான வெளிப்பாட்டைக் கண்டது. ட்ரம்பின் "அமெரிக்காவே முதலில்" வலதுசாரி தேசியவாத வீராவேசத்தின் சித்தாந்த கட்டமைப்பாளரை வெளியேற்றி இருப்பது, பென்டகனுக்காக பேசும் கடமை தவறாத அதிகாரியும் ஜனாதிபதியின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான தளபதி எச். ஆர். மெக்மாஸ்டர் ஆல் கட்டளையிடப்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டன. உள்நாட்டில் கட்டுக்கடங்கா சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளை முகங்கொடுக்கும் ட்ரம்ப், அவருக்கு முன்னர் பதவியில் இருந்தவரைப் போலவே, வெளிநாடுகள் மீதான போரை நோக்கி திருப்புவதாக தெரிகிறது.
சிரியாவில் சிஐஏ ஆத்திரமூட்டல் மற்றும் அதனுடன் சேர்ந்த ஊடக பிரச்சார நடவடிக்கைகளோடு சேர்ந்து, இத்தகைய அபிவிருத்திகளை அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு மரணகதியிலான தீவிர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். மத்தியக் கிழக்கில் ஒரு புதுப்பிக்கப்பட்ட இரத்த ஆற்றுக்குள் மூழ்கடிக்கப்படும் ஆபத்தை மட்டும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கவில்லை, மாறாக உலகின் இரண்டு பிரதான அணுசக்திகள் சம்பந்தப்பட்ட இன்னும் அதிக அபாயகரமான மோதலை முகங்கொடுக்கின்றனர்.