Print Version|Feedback
Sri Lanka: New anti-terror measures lay foundations for police state
இலங்கை: புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பொலிஸ் அரசிற்கு அடித்தளம் அமைக்கின்றன
By Nanda Wickremasinghe
31 October 2016
இலங்கை அமைச்சரவை, அக்டோபர் நடுப்பகுதியில் புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கான "கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்புக்கு" ஒப்புதல் வழங்கியது.
முழுமைப்படுத்துவதற்காக ஒரு அனைத்துக் கட்சி பாராளுமன்ற தேசிய பாதுகாப்பு குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சட்ட மூலமானது பொதுவாக சாதாரண அரசியல் செயல்பாடாக கருதப்படும் நடைமுறைகளையும் பயங்கரவாத நடவடிக்கைக்குள் உள்ளடக்கி பயங்கரவாத தடைச் சட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது நீண்ட விளைவுகளைத் தரும் தாக்குதலை தொடுப்பதாகும்.
அவரது 2015 ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனநாயக உரிமைகளின் காவலனாக காட்டிக்கொண்ட மைத்திரிபால சிறிசேன வழங்கிய பல வாக்குறுதிகளில், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை அதிகாரபூர்வமாக நீக்குவதும் அடங்கும்.
எவ்வாறெனினும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பதிலீடு செய்யும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது, அரசாங்கத்துக்கு இன்னும் பரந்த அதிகாரங்களை அளிப்பதோடு போலீஸ் அரசுக்கான அடித்தளங்களை பலப்படுத்துகிறது. புதிய சட்டத்தின் உண்மையான இலக்கு, தொழிலாளர் வர்க்கமே - குறிப்பாக சோசலிஸ்டுகளே ஆகும்.
இந்த சட்டம் பின்வரும் நடவடிக்கைகளை பயங்கரவாத குற்றங்களாக வரையறுக்கிறது:
* இலங்கையின் அல்லது இறைமை கொண்ட வேறு எந்தவொரு தேசத்தின் ஐக்கியத்தை, பிராந்திய ஒருமைப்பாட்டை, பாதுகாப்பை அல்லது இறைமையை அச்சுறுத்தும், தாக்கும் மாற்றும் அல்லது மோசமாக பாதிக்கும் நடவடிக்கை.
* இலங்கையின் அல்லது இறைமை கொண்ட வேறு எந்தவொரு தேசத்தினதும் அராசாங்கத்தை, அதன் கொள்கை தீர்மானத்தை கைவிடுமாறு, திருத்துமாறு அல்லது மாற்றுமாறு சட்டவிரோதமாக அல்லது சட்டத்துக்கு முரணாக நிர்ப்பந்திப்பது, அல்லது இலங்கையின் இறைமை அல்லது வேறு எந்த இறையாண்மை கொண்ட நாட்டின் அரசாங்கத்தின் பாதுகாப்பு, தேசியக் பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு சம்பந்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையையும் செய்யுமாறு அல்லது புறக்கணிக்குமாறு நிர்ப்பந்திப்பந்திக்கும் செயற்பாடு.
* இலங்கை அல்லது வேறு எந்த இறையாண்மை கொண்ட நாட்டு அரசாங்கத்தில் சட்டவிரோதமாக மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கை.
* கருத்தியல் ஆதிக்கத்தை சாதிப்பதை நோக்கிய எந்தவொரு வன்முறையான அதிதீவிரவாத நடவடிக்கையை மேற்கொள்வது.
இந்த அதிரடியான வரையறைகளின் கீழ், கிட்டத்தட்ட எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் சட்டவிரோதமாக்கப்பட முடியும்.
"இலங்கையின் அல்லது இறைமை கொண்ட வேறு எந்தவொரு தேசத்தினதும் அராசாங்கத்தை அதன் கொள்கைகளை மாற்றுமாறு நெருக்குவது" சட்டவிரோதமானது என அறிவிப்பதன் அர்த்தம், தொழிலாள வர்க்கம், ஏழைகள், மாணவர்கள் அல்லது மக்களின் வேறு எந்தப் பிரிவினராலும் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து அரசியல் அல்லது தொழில்துறை நடவடிக்கை, போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் தடுக்க முடியும் என்பதாகும்.
"எந்தவொரு நபர் மீதும் வன்முறையை மேற்கொள்ள அச்சுறுத்துவது அல்லது வன்முறையை தூண்டிவிடுவது, கொலை செய்ய முயற்சிப்பது, கடுமையாக காயப்படுத்துவது, பிழையாக தடுத்துவைத்து மிரட்டுவது; அரச அல்லது தனியார் சொத்தை முழுமையாக அல்லது பகுதியாக அழிப்பது; இலங்கை அல்லது வேறு எந்த ஒரு இறையாண்மை தேசத்தின் சுற்றாடலுக்கு தீவிர சேதத்தை ஏற்படுத்துவது -அத்தியாவசிய சேவைகள் அல்லது விநியோகங்களுக்கு தடை ஏற்படுத்துவது அல்லது சேதம் விளைவிப்பதும் சேர்க்கப்படலாம்,” ஆகியவை பயங்கரவாதம் பற்றிய ஏனைய வரையறைகளில் அடங்குகின்றன.
அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பது, அத்தகைய அமைப்புகளில் உறுப்பினர்களாக அல்லது தலைவர்களாக இருப்பது மற்றும் பயங்கரவாதம் பற்றிய தகவல்களை வழங்க மறுப்பதும் இப்போது குற்றமாகும். ஒரு நபர் பயங்கரவாத குற்றம் ஒன்றை செய்ய சதி செய்கின்றார் என்பதை “தெரிந்து வைத்திருப்பது” அல்லது “நம்புவதற்கான காரணங்களைக் கொண்டிருந்தும்” பொலிசுக்கு அறிவிக்காமையும் ஒரு குற்றமாகும்.
குறிப்பிடத்தக்க வகையில், “பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடும், தயார் செய்யும், உதவி செய்யும், அல்லது முயற்சிக்கும் ஒரு மனிதருக்கு தகவல்களை வழங்குவதன் பேரில், எந்தவொரு ‘அந்தரங்க தகவல்களையும்’ திரட்டும் நோக்கில், சட்டவிரோத, சட்டத்துக்கு உட்படாத அல்லது அதிகாரபூர்வமற்ற நடவடிக்கையில் சுயாதீனமாக ஈடுபடும் எந்தவொரு நபரையும் உள்ளடக்கும் வகையில் இந்த "உளவு" பார்ப்புகள் விரிவாக்கப்பட்டுள்ளன. "அரசியல் அம்பலப்படுத்தல்கள் அல்லது புலனாய்வு இதழியலில் ஈடுபட்டுள்ளவர்களும் இலக்காகக் கூடும்.
எதிர்ப்பு நடவடிக்கையொன்றால் "பெருமளவில் தொலைநோக்குடைய விளைவுடன்" மரணம் ஒன்று சம்பவித்து, ஒரு உயர் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டால், இந்தச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை முன்மொழியப்படுகின்றது. இது வேண்டுமென்றே ஒரு கொலையைச் செய்தமைக்கு அப்பால், மரண தண்டனையை விரிவாக்குகின்றது. "பயங்கரவாதத்தின்" மீதானன பிற தண்டனைகளில் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, பெரும் அபராதம் மற்றும் சொத்து பறிமுதல் செய்தலும் அடங்கும்.
புதிய சட்டமானது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 48 மணி நேரத்துக்கு அல்லது ஒரு நீதிபதியின் முன் நிறுத்தப்படும் வரை சந்தேக நபருக்கு சட்ட ஆலோசனை பெற உரிமை கிடையாது என்றும் கூறுகிறது. இது தற்போதைய உரிமைகளை மாற்றுவதுடன் ஒப்புதல் வாக்குமூலங்களை சேகரிக்க சித்திரவதையை பயன்படுத்தும் நிலைமைகளை உருவாக்குகிறது. இலங்கை பொலிஸ் ஏற்கனவே இவற்றில் பேர்போனதாகும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள், பொலிஸ் சித்திரவதை மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை பயன்படுத்தி தண்டிக்கப்பட்டுள்ளனர்.
முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், "பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ்ப்படாத பதவியில் உள்ள ஒரு பொலிஸ் அதிகாரிக்கு, ஒரு நபர் தானாகவே அல்லது கேள்விகளுக்கு பதிலாக கூறும் கருத்துக்கள்” கைது செய்யப்பட்டவருக்கு எதிராக "ஏற்றுக்கொள்ளக்கூடியதாக" இருக்கும்.
பொலிஸ் மற்றும் ஆயுதப் படையினருக்கு கைது செய்யவும், தடுத்து வைக்கவும், விசாரணை செய்யவும் பரந்த அதிகாரங்கள் வழங்கப்படும். இதை நியாயப்படுத்துவதற்காக, ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் ஒரு "சந்தேக" நபரை கைது செய்தால், அவனோ அல்லது அவளோ பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், என இந்த சட்டம் கூறுகின்றது. சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை போலீஸ், ஆயுதப் படைகள் இரண்டும் நடத்த முடியும்.
பயங்கரவாத சட்டங்களின் கீழ் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள், துணை பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் கீழ், நீதவான் முன் முற்படுத்தப்படாமல் ஆறு மாதங்களுக்கு தடுத்து வைக்கப்பட முடியும். இந்த "பயங்கரவாத-எதிர்ப்பு" பொதி, இலங்கை குடிமக்களால் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அரசாங்கத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களையும் உள்ளடக்கியதாகும்.
இலங்கை பொலிஸ் மா அதிபர், ஒரு சிறப்பு பயங்கரவாத தடுப்பு பிரிவை ஸ்தாபிக்கவுள்ளார். இது பயங்கரவாதத்தை தடுப்பதிலும் விசாரணை செய்வதிலும் ஈடுபடும்.
இலங்கையின் திட்டமிட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் சிக்கன தாக்குதல்களுக்கு விரோதமாக பெருகிவரும் வெகுஜன எதிர்ப்புக்கு பதிலிறுப்பாகவும் மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் தயாரிப்புக்களுக்கு அது ஆதரவு வழங்குவதனதும் வழியிலேயே வந்துள்ளன.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத போரின் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்தும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் ஒடுக்குவதற்குமான நடவடிக்கைகளின் இணைந்த பகுதியாக, இலங்கை ஆளும் வர்க்கமும் அதன் அரசாங்கமும் எதேச்சதிகார ஆட்சி வடிவத்தின் அடிப்படைகளை நிறுவ, புதிய ஜனநாயக-விரோத சட்டங்களை இயற்றி வருகின்றன. இது சர்வதேச ரீதியாக தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதன் பகுதியாகும்.