Print Version|Feedback
South Korean presidential candidates line up behind US war drive
தென்கொரிய ஜனாதிபதி வேட்பாளர்கள் அமெரிக்க போர் உந்துதலுக்கு பின்னால் அணிசேர்கின்றனர்
By Ben McGrath
12 April 2017
கிழக்கு ஆசியாவில் ஒரு இராணுவ மோதல் அபாயம் அதிகரித்துவருவதன் மத்தியில் பழமைவாத ஜனாதிபதி பார்க் குன்-ஹை இன் மீதான பதவி விலகல் விசாரணையினால் தூண்டப்பட்ட மே 9 தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நோக்கி தென்கொரியா சென்று கொண்டிருக்கிறது.
எவ்வாறாயினும், இந்த பிராந்தியத்தை பீடித்துள்ள நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான விடையிறுப்பையோ அல்லது, ஒரு போர் எதிர்ப்பு நிலைப்பாட்டையோ எந்தவொரு வேட்பாளரும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சிரியா மீதான வாஷிங்டனின் சமீபத்திய தாக்குதலுக்கான அவர்களது ஆதரவானது, வட கொரியாவுக்கு எதிரான இதேபோன்றதொரு தாக்குதலையும் அவர்கள் எதிர்க்க மாட்டார்கள் என்பதற்கான தெளிவான ஒரு அறிகுறியாகவே உள்ளது.
சிரியா மீதான தாக்குதலுக்கு தென் கொரிய அரசாங்கம் ஆதரவளித்தது, எனினும் “எந்தவொரு சூழ்நிலையிலும் இரசாயன ஆயுதங்களின் பயன்பாட்டையும், பெருக்கத்தையும் ஒருபோதும் மன்னிக்க முடியாது, மேலும் அவ்வாறு அதை செய்ய சர்வதேச சமூகம் ஒன்றாக இணைந்து செயலாற்றவேண்டும்” எனவும் கூறுகிறது. இந்த நிலைப்பாட்டினை எந்தவொரு முக்கிய வேட்பாளரும் எதிர்க்கவில்லை.
கடந்த சனியன்று, எதிர்கட்சியான கொரிய ஜனநாயகக் கட்சியை (Democratic Party of Korea-DPK) சேர்ந்த மூன் ஜே-இன் என்பவர் வட கொரியா மீதான இதுபோன்ற ஒரு தாக்குதலுக்கான சாத்தியம் இருப்பதை மறுக்கவில்லை. மாறாக, அவர் “அமெரிக்கா எந்தவகையான நடவடிக்கையை எடுப்பதானாலும் கொரியாவுடன் முன் ஆலோசனை செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்” என அமெரிக்காவிற்கு அழைப்புவிடுத்தார். ஒரு முற்போக்குவாத கட்சியாக காட்டிக்கொள்ளும் DPK, வடகொரியாவுடனான போரை எதிர்க்காமலிருப்பதுடன், இந்த மோதலில் சியோல் ஒரு முனைப்புடன் பங்காற்ற அது பற்றி தனக்கு அறிவிக்க விரும்புகிறது.
வாஷிங்டன் வகுத்திருந்த கோட்டிற்கு இசைவான வகையில் ஜனநாயகக் கட்சியினரின் பிரச்சாரமும் வட கொரியாவை குற்றம்சாட்டியது. ஏப்ரல் 5 அன்று செய்தி தொடர்பாளர் பார்க் க்வாங்-ஆன் பின்வருமாறு கூறினார், “வட கொரியாவின் ஆத்திரமூட்டும் செயல்கள் மீது வேட்பாளர் மூன் பலமுறை கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டதுடன், கிம் ஜோங்-உன் அரசாங்கம் அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணை அபிவிருத்தியை கைவிடவில்லை என்றால், அதற்கு எதிர்காலம் இருக்காது எனவும் வலியுறுத்தியுள்ளார்.”
தென் கொரியாவில் அமெரிக்கா ஒரு முனைய அதி உயர பகுதி பாதுகாப்பு (Terminal High Altitude Area Defense-THAAD) ஏவுகணை எதிர்ப்பு பாட்டரியை பயன்படுத்துவதானது சீனாவுடன் கடுமையாக பதட்டங்களை அதிகரித்துள்ளதுடன் இந்த பிராந்தியத்தில் போர் உந்துதலுக்கான சமிக்ஞையாகவும் உள்ளது. மூன் இந்த பிரச்சனையை சுற்றிசுற்றி வருவதுடன், அடுத்த நிர்வாகம் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்வரை இந்த முடிவு ஒத்திவைக்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார்.
ஜனநாயகக் கட்சியிலிருந்து பிரிந்து வந்தவரும் மக்கள் கட்சியை சேர்ந்தவருமான ஆன் கேல்-சூ என்பவர் THAAD ஐ எதிர்ப்பதாக முன்னர் கூறிவந்தபோதும், இப்போது மிகவும் வெளிப்படையாக அதனை பாதுகாத்துள்ளார். கடந்த ஞாயிறன்று, “இப்போது இந்த பயன்பாடு நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், தேர்வு செய்யப்படும் பட்சத்தில், ஒரு ஜனாதிபதி வேட்பாளராக அதனை எதிர்ப்பதும் மற்றும் அதனை இரத்து செய்ய உறுதியளிப்பதும் ஒரு பொறுப்பான அணுகுமுறையாக இருக்காது” என்று அவர் தெரிவித்தார். அதே போல் அவர் அமெரிக்கா உடனான ஒரு நெருக்கமான கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததுடன், “மேலும் அடிப்படையில், THAAD விவகாரத்தில் நாம் அமெரிக்காவுடன் முரண்பாடு கொண்டு, கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலையில், வடகொரியாவின் அணுஆயுத பிரச்சனைகள் குறித்த நெருக்கடியான சர்ச்சைகளை நாம் தீர்க்க முடியாது” எனவும் தெரிவித்தார்.
ஆரம்பகால “Kill Chain” இன் நிறைவு மற்றும் கொரிய வான்வழி மற்றும் ஏவுகணை பாதுகாப்பு (Korea Air and Missile Defense-KAMD) உட்பட, அதேபோன்ற, உள்ளூரிலேயே கட்டமைக்கப்பட்ட அணுஆயுத அபிவிருத்திக்கு அவருடைய தலைமை பணியாற்றவுள்ளதாக கடந்த வாரம் ஆன் தனது பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
உள்வரும் கண்டம்தாவும் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தும் திறன்கொண்டதாக கூறப்படுகின்ற KAMD, THAAD இனை ஒத்ததாக உள்ளபோதும், இந்த “Kill Chain” என்பது வடகொரிய இராணுவ நிலைகள் மீது முன்கூட்டிய தாக்குதல்களை முன்னெடுப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு முறையாகும். கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டபடி, கொரிய பாரிய தண்டிக்கும் மற்றும் பதிலடி திட்டமாக (Korea Massive Punishment and Retaliation Plan) இடம்பெறும் மூன்றாவது மூலோபாயத்தின் கீழ் ஏவுகணைகளின் குண்டுவீச்சு தாக்குதலினால் பியோங்யாங் முழுமையாக அழிக்கப்படும்.
தேர்தல் கருத்து கணிப்பில் ஒருமுறை மூன் எளிதாக முன்னணியில் இருந்த போதும், ஆன் இன்னும் ஆதரவை பெற்றார். Gallup Korea இன் கடந்த வார தேர்தல் கருத்துகணிப்பின்படி, முந்தைய வாரத்திலிருந்து ஆனை விட 16 புள்ளிகள் அதிகரிப்பு இருந்தபோதும், ஆனை காட்டிலும் மூன்று சதவிகித புள்ளிகளுடன் மட்டுமே மூன் முன்னணியில் நிற்கின்றார். ஆன் தன்னை ஒரு அரசியலுக்கு வெளியிலிருந்து வந்தவராக சித்தரித்துகொண்டும், பழமைவாத அரசாங்கத்தின் மீது மெல்லிய விமர்சனங்களை செய்தும், 2011 இல் முன்னணிக்கு வந்த ஒரு பன்முக கோடீஸ்வரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். 2012 இல் மூன் மற்றும் பார்க் குன்-ஹை க்கு எதிராக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார், ஆனால் மூனுக்கு ஆதரவாக பின்னர் விட்டுவெளியேறினார்.
2013 இல், தேசிய சட்டசபையில் ஆன் ஒரு இடத்தை வெற்றிகொண்டதை தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து ஜனநாயகத்திற்கான புதிய அரசியல் கூட்டணியை (New Politics Alliance for Democracy) உருவாக்கினார். இருப்பினும், உட்பூசலினால் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து ஆன் கூட்டணியை விட்டு விலகி பிப்ரவரி 2016 இல் மக்கள் கட்சியை (People’s Party) அமைத்தார். அசௌகரியமாக ஒரு போலியான முற்போக்கான திரையை கொண்ட ஒட்டு மொத்த ஜனநாயகவாதிகளின் வணிக சார்பு உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஏராளமான உயர்மட்ட ஜனநாயகவாதிகளை அவருடன் இணைத்துக்கொண்டார்.
DPK க்கு நெருக்கமான மற்றொரு வேட்பாளராக நீதிக்கட்சியிலிருந்து சிம் சாங்-ஜியோங் என்பவர் இருக்கிறார். சிம் மற்றும் அவரது கட்சியினரும் வழமையாக ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு இடதுசார்புடைய மூடுதிரையை வழங்குகின்றனர். மேலும் குறிப்பாக தொழிற்சங்கங்களின் கொரிய கூட்டமைப்பு (Korean Confederation of Trade Unions-KCTU) உட்பட தொழிற்சங்கங்களுடன் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளனர். மூனுக்கு ஆதரவாக விட்டுவிலகுவதற்கு முன்னர், 2012 இல் ஜனாதிபதி பதவியினை அடைய அவரும் முனைந்திருக்கிறார். தேர்தல் கருத்து கணிப்பில் 3 சதவிகித வாக்குகளுடன் மற்ற வேட்பாளர்களிலிருந்து பின்தங்கியுள்ள நிலையில், இந்த முறை அவர் இழக்க போவதில்லை அல்லது கூட்டணி எதையும் அமைக்க போவதில்லை என சமீபத்தில் கூறிக்கொண்டார்.
கொரிய சுதந்திரக் கட்சி (Liberty Korea Party-LKP) மற்றும் Bareun கட்சி போன்ற பழமைவாத கட்சிகளிலிருந்து வந்த வேட்பாளர்களான ஹாங் ஜுன்-ப்யோ மற்றும் யூ சியூங்-மின் இருவரும் ஆதரவு திரட்டுவதில் தோல்வியுற்றனர், அத்துடன் அவர்களது வேட்பாளர் அந்தஸ்தும் ஒற்றை இலக்கத்திற்குள் சிக்கிப்போனது. Bareun கட்சி ஜனவரியில் ஆளும் கொரிய சுதந்திரக் கட்சியிலிருந்து (முன்னர் செனூரிக் கட்சி) பிரிந்துவந்து, ஜனாதி பார்க் மீதான கண்டனதீர்மானத்திற்கும், அவரது பதவிநீக்கத்திற்கும் ஆதரவளிக்கிறது. வேட்பாளர் தேர்விற்கு முதல்கட்டத்தில், மூன் மற்றும் DPK க்கு எதிராக அனைத்து கட்சிகளின் ஒரே, ஒன்றுபட்ட வேட்பாளரை நிறுத்துவது பற்றி பேசப்பட்டது, ஆனால் இதுபோன்ற ஒரு கூட்டணி பற்றிய விவாதம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஆனுடன் எந்தவொரு கூட்டணி அமைக்கும் ஆலோசனையையும் ஹாங் கண்டனம் செய்ததுடன், யுவும், Bareun கட்சியும் LKP க்கு “திரும்பிவர” கோருகிறார். யு இன் பிரச்சாரம் இதை நிராகரித்துள்ளது, எனினும் தற்போதுள்ள ஊழல் அவதூறை பற்றி குறிப்பிடுகையில், அதில் அவர் சட்டவிரோதமாக நிதியினை பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், ஹாங் ஒரு “தகுதியற்ற வேட்பாளர்” என அழைக்கிறார். இப்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
ஹாங் அவரது மோசமான வாக்கு எண்ணிக்கையினை உயர்த்திக்கொள்ளும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற போன்ற போலி தோற்றத்தை பிரதிபலிக்க முயற்சித்து வருகிறார் என்ற ஊகங்களைப் போன்றே அவரும், அவரது அரசியல் எதிரிகளையும், விமர்சகர்களையும் நோக்கி அதிகரித்துவரும் ஆக்கிரோஷதாரியாக மாறுகிறார்.
ஹாங் மற்றும் LKP க்கு ஒரு தெளிவான மற்றும் நேர்மையான ஒரு மாற்றாக Bareun கட்சி தன்னை சித்தரித்தரிக்கும்போதும், ஊழல் நிறைந்த அரசியல்வாதி யார் என்று கண்டறிய தென்கொரியாவில் ஒருவர் அதிக முயற்சியெடுக்க வேண்டியதில்லை. தேர்தல் கருத்துகணிப்பு வாக்குகளின் போதிருந்த அரசியல் வேறுபாடுகளை மூடிமறைக்க இந்த ஊழல் விவகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பெருநிறுவன ஊழல்களை ஒழிக்கப்போவதாக வாக்குறுதிகளை வழங்கி மூன் காலத்தை ஓட்டுகிறார். இருப்பினும், அரசு நடத்தும் ஒரு நிறுவனத்தில் தனது மகனுக்காக ஒரு பணியிடத்தை உறுதி செய்ய அவரது அரசியல் செல்வாக்கை அவர் பயன்படுத்தியது, அத்துடன் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுற்றியிருக்கும் விடையிறுக்கப்படாத கேள்விகள் 2009 இல் முன்னாள் ஜனாதிபதி நோஹ் மூ-ஹ்யுன் இன் தற்கொலைக்கு வழிவகுத்தது என்பதுபோன்ற குற்றச்சாட்டுக்களுக்கு அவர் முகம்கொடுக்கிறார். நோஹ் இன் தலைமை பணியாளராக மூன் பணியாற்றினார்.
ஜனாதிபதி பார்க் ஊழல் நிறைந்தவராக இருந்ததனால் அவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்படவில்லை. வாஷிங்டனுக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் அவரது முயற்சிகள் அவரது கட்சிக்குள் ஒரு அரசியல் விரிசலை ஆழப்படுத்தும் தூண்டுதலாகவே இருந்தன. யு மற்றும் கிம் ம்யு-சியோங் போன்ற அரசியல்வாதிகள், மற்றொரு பழமைவாத முக்கியஸ்தர்களாக, கூடுதலானதொரு அமெரிக்க பாதையை பார்க் கும் அவரது அரசாங்கமும் பின்பற்றாமல் இருப்பதை விமர்சித்தனர். எந்த கட்டத்திலும் பார்க்கை பாதுக்காக்க முயற்சி எதையும் மேற்கொள்ளாமல் வாஷிங்டன் அவரது பதவிநீக்கத்திற்கே மறைமுகமாக ஆதரவளித்தது.
ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தின் அபிவிருத்தி குறித்து அச்சமடைகின்ற போதும், தென்கொரியாவின் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும், பழமைவாத மற்றும் “ஜனநாயக” கட்சிகள் எதுவானாலும், வடகொரியாவிற்கு எதிராக ட்ரம்ப் போர் அச்சுறுத்தல்களை விடுக்கிறார் என்பதை அறிந்தும் அமெரிக்க கூட்டணிக்கு கடமைப்பட்டுள்ளனர்.