Print Version|Feedback
No to war and nationalism! Build the PES!
Parti de l’égalité socialiste statement on the French presidential election
19 April 2017
போரும் தேசியவாதமும் வேண்டாம்!
சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்!
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் அறிக்கை
ஏப்ரல் 23 மற்றும் மே7 ஆகிய தினங்களில் இரு சுற்றுகளாய் நடைபெறவிருக்கும் 2017 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் சர்வதேச முக்கியத்துவம் கொண்ட பிரச்சினைகளை எழுப்புகிறது. ஆத்திரமூட்டல் இல்லாத நிலையிலும் அமெரிக்கா சிரியா மீது ஏப்ரல் 7 அன்று நடத்திய தாக்குதலை பின்தொடர்கின்ற போர் நிழலின் கீழும், அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டணி சிரியா, ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கு எதிராக மிரட்டல்கள் விடுப்பதற்கு மத்தியிலும், இத்தேர்தல் நடைபெறுகிறது. பிரான்சே கூட ஒரு அவசரகால சட்ட நிலையின் கீழ் தான் இருக்கிறது என்பதுடன், ஜனாதிபதி பதவிக்கான முன்னிலை வேட்பாளர்கள் யூரோவில் இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் பிரான்ஸ் வெளியேறுவதற்கும் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
அரசியல் ஸ்தாபகத்திற்கும், குடியரசுக் கட்சி (LR), சோசலிஸ்ட் கட்சி (PS) ஆகிய பாரம்பரிய அரசாங்க கட்சிகளுக்கும் எதிரான பாரியளவிலான மக்கள் கோபம் இந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகிறது. 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்கு சிறிது காலத்திற்குப் பின்னர் 1971 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதலாகவே பிரெஞ்சு “இடதின்” மேலாதிக்க சக்தியாக இருந்து வந்திருக்கும் PS, அதன் சிக்கன நடவடிக்கை மற்றும் போர் கொள்கைகளின் மூலம் மதிப்பிழந்து சீரழிந்து கொண்டிருக்கிறது.
சர்வதேச அளவில் ஸ்தாபக அரசியலின் ஒரு பொறிவு நடந்தேறிக் கொண்டிருக்கிறது. பிரிட்டனில் சென்ற ஜூனில், ஒரு சிறு பெரும்பான்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு வாக்களிக்கப்பட்டது. அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பை மட்டுமல்லாது குடியரசுக் கட்சியின் மிகப்பெரும் பிரிவுகளது எதிர்ப்பையும் மீறி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்வானார். பதவியில் அமர்ந்தது முதலாக, அவர் “முதலில் அமெரிக்கா” என்ற ஒரு தேசியவாத மற்றும் இராணுவவாத வேலைத்திட்டத்தை பின்பற்றி வருகிறார்.
பிரான்சில் இந்த நெருக்கடியானது, நாஜி ஆக்கிரமிப்பின் போது பிரான்ஸை ஆட்சி செய்த பாசிச ஒத்துழைப்புவாத சக்திகளின் வழிவந்த நவ-பாசிச தேசிய முன்னணியைச் சேர்ந்த மரின் லு பென் ஜனாதிபதியாக ஆகக் கூடிய சாத்தியம் என்ற குறிப்பான நச்சு வடிவத்தை எடுத்திருக்கிறது. இத்தகையதொரு பின்விளைவுக்கு சாத்தியத்தை கொடுத்தமைக்கு PS மட்டுமல்லாது, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO) போன்ற நீண்ட காலத்திற்கு முன்பாகவே ட்ரொட்ஸ்கிசத்துடனான தமது வரலாற்றுத் தொடர்புகளை முறித்துக் கொண்ட போலி-இடது அமைப்புகளின் ஒரு ஒட்டுமொத்த அடுக்கும் கூட பொறுப்பானவை ஆகும். இந்த அமைப்புகள் புரட்சிகர மார்க்சிசத்தின் அத்தனை கோட்பாடுகளையும் கைவிட்டு, நிதி மூலதனத்தின் ஒரு பிற்போக்குத்தனமான கட்சியான PS ஐ நோக்கி பல தசாப்தங்களாய் நோக்குநிலை அமைத்துக் கொண்டிருந்தன.
PSக்கான எதிர்ப்பு, ஒரு உண்மையான இடது-சாரி தன்மையையும் எந்த செயல்திறன் மிக்க அரசியல் வெளிப்பாட்டையும் காணவியலாத இந்தச் சூழலில், லு பென் தன்னை ஒரு ஜனரஞ்சகவாதியாகவும் ஆளும் ஸ்தாபகத்திற்கான பிரதான சவாலளிப்பவராகவும் காட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையும், இதனுடன் கைகோர்த்து வெடிப்பான சர்வதேச நெருக்கடியுமாய் சேர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தில் எண்ணற்ற மாற்றங்களையும் நெருக்கடிகளையும் உருவாக்கியிருக்கின்றன.
முதலில், முந்தைய தேர்தல்களில் போலவே சோசலிஸ்ட் கட்சி (PS) இன் நெருக்கடி தனக்கு ஆதாயமாய் அமையும் என்று குடியரசுக் கட்சி (LR) எதிர்பார்த்தது. ஆனால் ஜனவரியில், LR இன் வேட்பாளரான பிரான்சுவா பிய்யோன் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கொண்டு மோசமாக சேதப்படுத்தப்பட்டார், இக்குற்றச்சாட்டுகள் அமெரிக்காவுக்கு எதிராய் ஜேர்மனி மற்றும் ரஷ்யாவுடனான ஒரு கூட்டணிக்கு அவர் ஆலோசனை அளித்த சிறிது காலத்தில் மேலே வந்திருந்தது. இது லு பென்னுக்கும் PS இன் ஆதரவுபெற்ற En Marche! இயக்கத்தின் இமானுவேல் மக்ரோனுக்கும் இடையிலான போட்டியை அமைத்தது. சிரியா மீது அமெரிக்கா ஆத்திரமூட்டலில்லாத மற்றும் சட்டவிரோதமான தாக்குதலை நடத்தியதன் பின்னர், பெருகும் போர் எதிர்ப்பு மனோநிலையின் அடிப்படையில், குறிப்பாக இளைஞர்களிடையே, ஜோன் லூக் மெலோன்சோன் (அடிபணியா பிரான்ஸ் இயக்கம், முன்னதாக இடது முன்னணி) கருத்துக்கணிப்புகளில் மேலுயர்ந்து வருகிறார்.
தேர்தல் இப்போது மிக நெருங்கி விட்டது. முன்கண்டிராத ஒரு சூழ்நிலையாக, மெலோன்சோன், மக்ரோன், லு பென் மற்றும் பிய்யோன் ஆகிய நான்கு வேட்பாளர்களும் புள்ளிவிபரரீதியாய் இணையான நிலையில் இருக்கின்றனர், இவர்கள் அனைவருமே இறுதிச்சுறுக்கு தகுதிபெறும் நிலை சிந்திக்கத்தக்கதாகவே இருக்கிறது.
முடிவு என்னவாக இருந்தாலும், இந்த ஜனாதிபதித் தேர்தல் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க போவதில்லை. பிரான்ஸ் ஆழமாய் துருவப்படுத்தப்படுகிறது என்பதோடு வர்க்கப் பதட்டங்கள் கொதிநிலையில் இருக்கின்றன. வர்க்கப் போராட்டம் என்பதை தங்கள் வாழ்வின் அன்றாட யதார்த்தமாக காண்பதாய் பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கூறியிருக்கின்றனர், இது 1968 இல் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மே-ஜூன் பொதுவேலைநிறுத்தத்தில் இணைந்ததற்கு சற்று முன்னர் இருந்ததை விடவும் 20 வீதம் அதிகமானதாகும். ஒரு ஆழமான சர்வதேச நெருக்கடி மற்றும் போரின் உடனடி அபாயம் ஆகியவற்றின் மத்தியில் கடுமையான அரசியல் கொந்தளிப்புகளும் வர்க்கப் போராட்டங்களும் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவாக சென்ற ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Parti de l’égalité socialiste (சோசலிச சமத்துவக் கட்சி - PES), தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சர்வதேசியவாத, சோசலிச மற்றும் புரட்சிகர மாற்றீட்டை வழங்குவதற்காக இத்தேர்தலில் தலையீடு செய்கிறது. PES எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கவில்லை. அது மிகவிரிந்த சமூகப் போராட்டங்களையும் போர் மற்றும் தேசியவாதத்திற்கான எதிர்ப்பையும் ஊக்குவிக்கிறது. வேட்பாளர்கள் வகிக்கின்ற பாத்திரங்களையும், பிரான்சில் PES ஐயும் சர்வதேச அளவில் ICFI ஐயும் தொழிலாள வர்க்கத்தின் நிஜமான ட்ரொட்ஸ்கிச முன்னணிப்படையாக கட்டியெழுப்புவதற்கான அவசியத்தையும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் விளக்குவதே இந்த தேர்தலில் PES இன் மையமான பொறுப்பாக உள்ளது.
PS மதிப்பிழந்து போதலும் FN மேலெழுந்து வருதலும்
கிரீசின் பாசோக் (Pasok) முதல் ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) வரையிலும் ஐரோப்பாவெங்கிலும் இதேபோன்ற தொழிலாள வர்க்க-விரோத சமூக ஜனநாயகக் கட்சிகளின் பாதைவழியில் PSம் உருக்குலைந்து வருவதில், பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது பிரான்சின் ஜனாதிபதியாக இருக்கும் பிரான்சுவா ஹாலண்ட், இதற்கு முன்னர் எந்த பிரெஞ்சு ஜனாதிபதியாலும் எடுக்கப்படாத ஒரு முடிவாக, இரண்டாவது முறையாக போட்டியிடுவதில்லை என்ற ஒரு முடிவை எடுக்கும் மட்டத்திற்கு, மிகவும் வெறுக்கப்பட்டவராக இருக்கிறார்.
ஹாலண்டின் பதவிக்காலம் என்பது, ஸ்தாபிக்கப்பட்டது முதலாகவே இற்றுப்போன ஒரு கட்சியாக இருந்த ஒன்றின் இறுதி விளைபொருளே ஆகும். ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியானது (PCF) 1968 பொது வேலைநிறுத்தத்தின் போது அதிகாரத்தை கைப்பற்ற மறுத்ததன் மூலமாக தன்னைத்தானே மதிப்பிழக்கச் செய்து கொண்டதன் பின்னர், PS 1971 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இது ஒரு சோசலிச அமைப்பாக இருக்கவில்லை, மாறாக மிகப் பிற்போக்குத்தனமான சமூக சக்திகளது ஒரு கருவியாக மட்டுமே இருந்தது. சமூக ஜனநாயகக் கட்சியினர், சமூக கத்தோலிக்குகள், முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள், முன்னாள் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் முன்னாள் நிர்வாகிகள் ஆகியோரது ஒரு தளர்வான கூட்டணியாக இருந்த இது, முன்னாள்-விச்சி முன்னணி அரசியல்வாதியான பிரான்சுவா மித்திரோனுக்கு ஒரு தேர்தல் வாகனமாய் செயல்பட்டது. 1981 இல், மித்திரோன் பிரான்சின் முதல் PS ஜனாதிபதியாக ஆனார்.
ஆரம்பத்தில் இருந்தே, எண்ணற்ற புரட்சிகரக் கட்சிகளாக சொல்லிக் கொள்பவை சுற்றிச் சுழல்வதற்கான ஒரு அச்சாக PS ஆனது. 1972 இல் PCF, PS உடன் பொது வேலைத்திட்டத்தில் (Programme commun) கையெழுத்திட்டமையானது, பிரான்சிலுள்ள சோவியத் ஒன்றியத்தின் அரசியல் அங்கத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வதன் மூலமாக PS இன் சோசலிச நடிப்புகளை ஊக்குவிக்கக் கூடியதாய் இருந்தது. மித்திரோனின் PS-PCF அரசாங்கமானது, 1982 இல் ஒரு “சிக்கன நடவடிக்கை திருப்பத்தை” அறிவித்து, வாக்குறுதியளித்த சமூக சீர்திருத்தங்களை, அதிகாரத்திற்கு வந்த பின்னர் துரிதமாக மறுதலித்ததை அடுத்தும், அதன்பின் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதை PCF ஆதரித்ததை அடுத்தும், PCF அழிக்கப்பட்டது.
பிரான்சில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து எழுந்த அத்தனை அமைப்புகளுமே ICFI ஆல் பாதுகாக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய முன்னோக்கினை மறுதலித்தன. பதிலாக, அவை PS இடம் சரணாகதியடைந்தன.
பிரான்சில் ICFI இன் முன்னாள் பிரெஞ்சு பிரிவாக இருந்த OCI (சர்வதேசியவாத கம்யூனிஸ்ட் அமைப்பு, இன்று POID, அல்லது சுயாதீனமான ஜனநாயகத் தொழிலாளர் கட்சி) 1971 ஆம் ஆண்டில் PS-PCF கூட்டணி ஒரு தொழிலாளர்’ அரசாங்கத்தை உருவாக்கும் எனக் கூறி ஒரு போலியான, தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் ICFI இல் இருந்து உடைவு கண்டது. இந்தக் கூட்டணி தான், PSக்குள் வேலை செய்துகொண்டிருந்த OCI இன் ஒரு அங்கத்தவராய் இருந்து, மித்திரோனின் தலைமை உதவியாளராக ஆகி, பின் 1997-2002 இல் பிரான்சின் பிரதமராகவும் ஆன லியோனல் ஜோஸ்பனின் அரசியல்வாழ்க்கைக்கு மேடையமைத்து கொடுத்தது.
அரசு-சாரா அமைப்புகள், Freemasonry, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் கல்விச்சாலைகளது சமூக ஜனநாயகப் பிரிவுகள் ஆகியவற்றின் ஒரு விரிந்த வலைப்பின்னலின் மூலமாக PS நடுத்தர வர்க்கங்களில் செல்வாக்கை அபிவிருத்தி செய்தது. இது 1980களில் SOS-Racism NGO மூலமாக புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கழகத்துடனும் (NPA இன் முன்னோடியான LCR) மாணவர் சங்கங்கள் மூலமாக OCI உடனும் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டது.
OCI/POID, LCR/NPA மற்றும் LO ஆகியவை, தத்தமது அமைப்புகளுக்குள்ளாக அவை PSக்கு எதிரான கன்னைப் போராட்டங்களை நடத்தின, PS இன் பெரு-வணிகக் கொள்கைகளுடன் பிரெஞ்சு நடுத்தர வர்க்கம் கொண்டிருந்த அதிருப்தியை வெளிப்படுத்தின என்றபோதும், அவை தொழிலாள வர்க்கத்திற்காகப் பேசவில்லை. எந்தவொரு சமயத்திலும் அவை PSக்கு தீவிர சவாலளிப்பவையாக தங்களை முன்நிறுத்தவும் இல்லை அல்லது PSக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜனக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு முனையவும் இல்லை. இவை அனைத்துமே அரசு மற்றும் அதன் அரசியல் சுற்றுவட்டச் சூழலில் செயல்பட்டதன் மூலமாக, ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதன் இடத்தில் PS ஐ திறம்படக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தன.
2002 ஜனாதிபதித் தேர்தல் நெருக்கடி ஒரு தீர்மானகரமான அனுபவமாகும். முதல் சுற்றில் ஜோஸ்பன் வெளியேற்றப்பட்டு விட்டபோது, பழமைவாத ஜாக் சிராக்கிற்கும் FN இன் ஜோன் மேரி லு பென்னுக்கும் இடையில் இறுதிச்சுற்று மோதல் எழுந்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. LCR, LO, மற்றும் தொழிலாளர் கட்சி (PT, முன்னாள் OCI) ஆகியவை மொத்தமாய் சேர்ந்து தேர்தலின் முதல் சுற்றில் 3 மில்லியன் வாக்குகளை வென்றிருந்தன. அதேநேரத்தில், ஈராக் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா திட்டமிட்டதற்கு எதிராய் சர்வதேச அளவில் போரெதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன. ஆயினும் இந்த சந்தர்ப்பத்தை கொண்டு எதுவொன்றை முன்னெடுப்பதற்கும் LCR, LO மற்றும் PTக்கு இயலவுமில்லை, அவற்றுக்கு விருப்பமுமில்லை.
இந்த மூன்று கட்சிகளுக்கும் ICFI விடுத்த ஒரு பகிரங்க கடிதத்தில், இறுதிச்சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆலோசனை வைத்திருந்தது. இந்த அமைப்புகளுடன் தனக்கிருக்கும் அரசியல் பேதங்கள் எதனையும் மறைக்காத அதேநேரத்தில், ICFI, ஒரு செயலூக்கமான புறக்கணிப்பானது, போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் மூலமாக, சிராக் தயாரிப்பு செய்து கொண்டிருந்த போர்கள் மற்றும் சமூகத் தாக்குதல்களை எதிர்த்து போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தை மிகச்சிறந்த வகையில் தயாரிப்பு செய்யும் என்று விளக்கியது. ஆயினும், இதற்கு பதிலளிக்கவும் கூட இந்த மூன்று கட்சிகளும் அலட்டிக் கொள்ளவில்லை. நவ-பாசிசம் அதிகாரத்திற்கு வராமல் தடுக்கவும் பிரான்சில் ஜனநாயக ஆட்சியைப் பாதுகாக்கவும் என்ற பேரில் சிராக்கிற்கு வாக்களிப்பதற்கான PS இன் பிரச்சாரத்தின் பின்னால் அவை தங்களை அணிநிறுத்திக் கொண்டன.
லு பென்னுக்கு எதிராக அணிதிரண்ட மில்லியன் கணக்கான மக்கள் பேரணி, அணிவகுப்பதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் சிரமப்பட வேண்டாம் என்பது தான் அம்மக்களுக்கு இதன்மூலம் இந்தக் கட்சிகள் சொல்லிய செய்தியாய் இருந்தது. தேர்தல் நடக்கவும் சிராக் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் வெறுமனே அவை அனுமதித்தன. FN முன்நிறுத்திய எதேச்சாதிகாரம் மற்றும் பாசிசம் ஆகியவற்றின் அபாயத்தை தோற்கடிப்பதாகச் சொல்லி PS ஆல் ஆதரிக்கப்பட்ட ஒரு வலது-சாரி வேட்பாளரை ஆதரிப்பதான இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டதன் மூலமாக, இந்த அத்தனை மூன்று கட்சிகளுமே, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஒரு மாற்றை முன்நிறுத்தும் எந்த நோக்கமும் தங்களுக்கு இல்லை என்பதை தெளிவாக்கி விட்டன. அதற்குப் பதிலாக, அவை இன்னும் பகிரங்கமாய் ஏகாதிபத்திய-ஆதரவு மற்றும் போர்-ஆதரவுக் கொள்கைகளைப் பின்பற்றின.
21 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடி தீவிரப்பட்டுச் சென்றதன் மத்தியில், இவற்றின் பிற்போக்குத்தனமான பாத்திரம், FNக்கு ஒரு பாதையை திறந்து விட்டது. ஏதோ சிலசமயங்களில் வலது-சாரி எதிர்ப்பு-வாக்குகளை ஈர்க்கத்தக்க நிலை கொண்ட ஒரு சிறிய கட்சியாக இருந்ததில் இருந்து அதிகாரத்திற்கு போட்டியிடக் கூடிய ஒரு சக்தியாக அது உருமாற்றப்பட்டது.
நேட்டோ கூட்டணிக்குள் தீவிரப்பட்டுச் சென்ற பிளவுகளும் 2008 நிதி நெருக்கடிக்குப் பிந்தைய காலத்தில் ஒரு ஆழமான சிக்கன நடவடிக்கைக் கொள்கையை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் திரும்பியதும் லு பென்னுக்கு ஒரு வழி திறந்தது போலானது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் PS ஆல் திணிக்கப்பட்ட பொருளாதாரரீதியான தற்கொலைக்கு ஒப்பான சிக்கன நடவடிக்கை கொள்கைகளை ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து கண்டனம் செய்ய அவரால் முடிந்தது. போலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனி மேலாதிக்கம் செலுத்துவதற்கு எதிராகவும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தில் பெருகிய எதிர்ப்பு மனோநிலைக்கும் லு பென் விண்ணப்பம் செய்ய முடிந்தது.
இந்த தசாப்தத்தில், PS மற்றும் NPA ஆகியவை ஆதரித்த சிரியா மற்றும் உக்ரேனிலான நேட்டோவின் பினாமிப் போர்களையும் கூட, ஜேர்மனிக்கு எதிராய் ரஷ்யாவை பிரான்சின் ஒரு கூட்டாளியாக வைத்துக் கொள்வது என்ற ஒரு ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே FN எதிர்த்தது. FN மாலியில் பிரான்சின் போரை ஊக்கத்துடன் ஆதரித்திருந்த ஒரு போர்-ஆதரவுக் கட்சியாகும். அவ்வாறிருந்தநிலையிலும் கூட PS மற்றும் அதன் “இடது” கூட்டாளிகளை விடவும் -இவை ஒரு முக்கிய அணுஆயுத சக்தியாக இருக்கின்ற ரஷ்யாவுடன் ஒரு நேரடியான மோதலில் பிரான்சும் மற்ற நேட்டோ சக்திகளும் பகிரங்கமாக பங்குபெறுவதாய் இருக்கின்ற ஒரு போர் உந்துதலை ஆதரித்து நின்றன- மூர்க்கத்தனம் குறைந்த ஒன்றாய் அது தன்னைக் காட்டிக் கொள்ள முடிந்தது.
இறுதியாய், ஹாலண்ட் தனது ஆழமான அவப்பெயர் பெற்ற PS அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையாக FN மீது நம்பிக்கை வைக்கும் நிலைக்கு வந்தார். 2015 இல் பாரிஸில் இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னரும் மரின் லு பென்னை சந்தித்துப் பேசுவதற்கு அவரை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்த இவர், அதன்பின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்திவைக்கும் ஒரு அவசரகால நிலையையும் திணித்தார். அதன்பின் PS, தேசியக் குடியுரிமை பறிப்புக் கோட்பாட்டை -நாஜி ஆக்கிரமிப்பின் போது பிரெஞ்சு எதிர்ப்புப் படைத் தலைவர்களை சட்டவிரோதமாக்குவதற்கும் யூதர்களை மரண முகாம்களுக்கு திருப்பியனுப்புவதற்கும் இதுவே சட்ட அடிப்படையாக இருந்தது- பிரெஞ்சு அரசியல்சட்டத்தில் பொறிப்பதற்கும் கூட ஆலோசனை வைத்தது. இவ்வாறாய் இடதுசாரி அரசியலின் பாரம்பரியங்களை தெளிவான வகையில் மறுதலித்ததன் மூலமாக, PS, பிரதான அரசியல் நீரோட்டத்தின் ஒரு பகுதியாக FNக்கு அங்கீகாரம் ஏற்படுத்த முனைந்தது.
பிரான்சின் ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்கும் திட்டங்கள் என்ன?
FN இன் ஏற்றம் என்பது மொத்தமாய் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் சீரழிவின் ஒரேயொரு குறிப்பான நச்சு வெளிப்பாடு மட்டுமேயாகும். பிரெஞ்சு முதலாளித்துவம் அரசியல்ரீதியாக திவாலடைந்துள்ளது, அதனிடம் கொடுப்பதற்கு எதுவுமில்லை. 2017 ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள், வெளியுறவுக் கொள்கை நோக்குநிலையில் கடுமையான தந்திரோபாய கருத்துவேறுபாடுகளையும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மோதல்களையும் கொண்டிருந்தாலும் கூட இராணுவவாதம் மற்றும் போலிஸ் அரசின் ஆட்சி ஆகியவற்றுக்கான ஆதரவில் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். மிகப்பெரும் செலவு செய்து -பல தசாப்த காலப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்திருந்த சமூக உரிமைகளின் மீது அதிரடியான தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலமாக மட்டுமே இது சாதிக்கப்பட இயலும்- இராணுவத்தையும் மற்றும் போலிஸையும் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் ஆதரவளிக்கின்றனர்.
மரின் லு பென்: இவர் பிரெஞ்சு பாசிசத்தின் பாரம்பரியங்களில் வேரூன்றிய ஒரு அதி-வலது, ஜனரஞ்சகவாத பிரச்சாரத்திற்கு தலைமை கொடுத்திருக்கிறார், நெதர்லாந்தின் கீர்ட் வில்டர்ஸ் மற்றும் ஜேர்மனிக்கான மாற்று (AfD) போன்ற அதி-வலது சக்திகளுடன் கைகோர்க்கின்றார், ட்ரம்ப்பை புகழ்ந்து பேசுகின்றார். ஐரோப்பாவில் ஜேர்மனியின் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்பதற்கு ட்ரம்ப் மற்றும் ரஷ்யாவுடன் கூட்டணி வைக்க முயல வேண்டும் என்று ஆளும் வர்க்கத்திற்குள் முயற்சி செய்கின்ற அடுக்குகளுக்காக அவர் பேசுகிறார். மேர்க்கெலுடனான பேச்சுவார்த்தைக்கு “இல்லை” (Nein) என்ற ஒரே வார்த்தை தான் அவசியமாயிருப்பதாக அவர் ஒருமுறை அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறுகின்ற ஃபிரெக்ஸிட் (Frexit) மற்றும் பிராங்குக்குத் திரும்புவது ஆகியவற்றுக்கு ஆலோசனை வைத்த இவர், வங்கிகளிடம் இருந்தான அழுத்தத்தை அடுத்து சமீப வாரங்களில் பின்வாங்கி இந்த யோசனைகளை கருத்துவாக்கெடுப்புப் பட்டியலில் தான் வைக்கவிருப்பதாகக் கூறிவருகிறார்.
அவரது கட்சி, 1972 இல் FN ஐ உருவாக்கிய பிரெஞ்சு மக்கள் கட்சி (PPF) போன்ற நாஜி-ஒத்துழைப்புவாத சக்திகளது வம்சாவளிகள் மற்றும் சென்ற தசாப்த காலத்தில் PS இல் இருந்து உடைந்து, குறிப்பாக ஜோன் பியர் செவெனுமோவை சுற்றிலும், உருவாகியிருந்த புதிய வரவுகள் ஆகியவற்றின் இடையிலான ஒரு கூட்டணியாக இருக்கிறது. தனது கட்சி மீதான “சாத்தான் தோற்றத்தை அகற்றி” (de-demonize) விட்டு அதிகாரத்தை கைப்பற்றுகின்ற ஒரு நடைமுறைவாதக் கொள்கையின் அடிப்படையில், இவர் FN இன் பாரம்பரியமான யூத-விரோத நிலைப்பாடுகளையும், யூதப்படுகொலை என்பதையே மறுத்த தனது தந்தையின் நிலைப்பாட்டையும் எதிர்த்தார். தனது தடையில்லா வாணிப வாய்வீச்சையும் கைவிட்டு விட்டிருக்கும் இவர், மக்களை “பாதுகாக்க”விருப்பதாய் கூறிக் கொள்கிறார், இஸ்லாம் மீது தாக்குவது ஒரு பாரிய போலிஸ் கட்டியெழுப்பலுக்கு அழைப்பு விடுவது ஆகியவற்றுடன் ஓய்வூதிய வயதைக் குறைப்பது போன்ற சமூகக் கொள்கைகளுக்கான அழைப்பையும் இவர் விடுக்கிறார்.
PS மற்றும் அதன் அரசியல் சுற்றுவட்டத்தில் இருப்பவர்களினதும் பிற்போக்குத்தனமான பாத்திரத்தின் காரணத்தால் மட்டுமே லு பென் தொழிலாள வர்க்கத்தில் ஒரு வாக்கு வங்கியை நிறுவ முடிந்திருக்கிறது. PS மற்றும் LR மீதான அவரது தாக்குதல்கள், PS மீதான பிரமைவிலகியிருப்போர் மத்தியில் ஒரு பரந்த செவிமடுப்பை வென்றிருக்கிறது. அவரது சட்டம் ஒழுங்கு மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத வாய்வீச்சுக்கள் PS இன் வாய்வீச்சுக்களில் இருந்து பெரும்பாலும் பிரித்தறியமுடியாத அளவுக்காய் இருக்கிறது. இராணுவ செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீதமாக உயர்த்துவதற்கு அவர் வாக்குறுதியளித்திருக்கிறார். அவரது ஜனரஞ்சகவாதம் ஒரு பிற்போக்குத்தனமான மோசடியாகும். ஒரு வரலாற்று ரீதியாக முதலாளித்துவ வீழ்ச்சியினதும் போர் நெருக்கடியினதும் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற FN இன் பாசிச வேலைத்திட்டமானது, தொழிலாள வர்க்கத்துடன் மிக வன்முறையான மோதலுக்குள் அதனைத் தவிர்க்கவியலாமல் கொண்டு செல்லும்.
பிரான்சுவா ஃபிய்யோன்: முதலாளித்துவ வர்க்கத்தில் ரஷ்யாவுடன் தொடர்புகள் கொண்டுள்ள மற்றும் ரஷ்யா, சீனாவுக்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான போரை எதிர்க்கின்ற ஐரோப்பிய ஒன்றிய-ஆதரவு அடுக்குகளுக்காக இவர் பேசுகிறார். 2013 இல் சிரியாவுக்கு எதிராக வான் தாக்குதல்களைத் தொடக்க ஹாலண்ட் அமெரிக்காவை நெருக்கியதை கடுமையாக விமர்சனம் செய்த இவர், ரஷ்யா சென்று அங்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்ததோடு, அங்கு ஹாலண்டின் கொள்கையைக் கண்டனம் செய்யும் ஒரு பகிரங்க அறிக்கையையும் விடுத்தார்.
ஃபிய்யோன் தேர்வானால், அவர் நிச்சயமாக அதிவலதுடன் நெருக்கமாய் தொடர்புகொண்ட ஒரு வன்முறையான அதி-வலது அரசாங்கத்திற்கே தலைமை தாங்குவார். இவர் சிக்கன நடவடிக்கைகளுக்கும் பாரிய வேலை வெட்டுக்களுக்கும் ஆலோசனையளிப்பதோடு FN இன் வாக்கு வங்கிக்கு தேசியவாத, சட்டம் ஒழுங்கு மற்றும் வாழ்க்கைபாணி விண்ணப்பங்களை முன்வைக்கிறார். ஆரம்பத்தில் அவர் பிரான்சில் பொதுச் சுகாதார பராமரிப்பையே ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு ஆலோசனை வைத்தார் என்பது மட்டுமல்ல, தனது பிரச்சாரத்தின் பல முக்கியமான சந்தர்ப்பங்களில் ஓர்பால்விருப்ப திருமணங்களுக்கு எதிரான Manif pour Tous (Protest for Everyone) இயக்கத்துடன் தொடர்புடைய அதி-வலது கிறிஸ்தவக் கூறுகளை நம்பியிருந்தார். இவரும் கூட இராணுவச் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கு திட்டமிடுகிறார்.
இமானுவேல் மக்ரோன்: முன்னாளில் Rothschild வங்கியாளராகவும், PS இன் பொருளாதார அமைச்சராகவும் இருந்திருக்கும் இவர், ஜேர்மனியின் விருப்பமான வேட்பாளராவார். இவர் அங்கு பலமுறை தொடர்ந்து சென்று வந்திருக்கிறார், மேர்கெலுடன் தனிப்பட்ட முறையில் ஒருமுறை சந்தித்து வந்திருப்பதும் இதில் அடங்கும். ரஷ்யாவுடன் கடுமையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கின்ற இவர், ட்ரம்ப்பையும் விமர்சனம் செய்திருக்கிறார், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து வேலைசெய்கின்ற ஜேர்மனி மற்றும் நேட்டோ கூட்டணியிலுள்ள கன்னைகளின் பின்னால் இவர் தன்னை நிறுத்திக் கொள்கிறார்.
மக்ரோனின் மூர்க்கத்தனமான இராணுவக் கொள்கையானது, ஜேர்மனி-தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவவாதக் கொள்கைகளுக்கு எந்த மாற்றீட்டையும் வழங்கவில்லை என்பதை தெளிவாக்குவதாக இருக்கிறது. கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கும் பாதுகாப்புச் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீதத்திற்கு உயர்த்துவதற்கும் இவர் அழைப்பு விடுத்திருக்கிறார். பாதுகாப்பு ஸ்தாபகத்தில் இருக்கும், அவசரகாலநிலை அமலாக்கத்திலும் ஹாலண்டின் நீதித்துறை கடந்த கொலை நடவடிக்கைகளிலும் முக்கிய பாத்திரம் வகித்தவர்களின் ஆதரவும் இவருக்குக் கிட்டியிருக்கிறது. இவர்களில் PS இன் பாதுகாப்பு அமைச்சரான ஜோன்-ஈவ் லு திரியோன் உம் ஒருவராவார்.
மக்ரோனுக்கு பின்னால், பிரான்சின் பழைய அரசியல் ஸ்தாபகத்தில் இருந்த பிரதான சக்திகள் தங்களை மறுசுழற்சி செய்ய முனைந்து வருகின்றன. அவரது En marche! (On the March) இயக்கம், PS ஐ விட்டு விலகி சோசலிசத்தைப் பற்றிப் பேசாத ஒரு இயக்கத்தில் இணைவதற்கு முனைகின்ற PS அரசியல்வாதிகளுக்கு ஒரு சாத்தியமான தப்பிக்கும் வழியாக கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. PS தலைமையின் பெரும்பகுதி, PS வேட்பாளரான பெனுவா அமோனுக்கு ஆதரவளிக்காமல் மக்ரோனையே ஆதரிக்கின்றன. குடியரசுக் கட்சியில் (LR) ஃபிய்யோன் அதிவலதுக்கு மிக நெருங்கி நிற்பதாகக் கருதுகின்ற அலென் ஜூப்பேயை சுற்றிய பிரிவுகளில் இருந்தும் மக்ரோனுக்கு ஆதரவு கிட்டுகிறது.
பெனுவா அமோன்: PS இன் முதனிலைத் தேர்தலில் இவரை எதிர்த்து நின்ற முன்னாள் பிரதமர் மானுவல் வால்ஸுக்கு எதிராக வாக்காளர்கள் அணிதிரட்டப்பட்டதை அடுத்து இவர் PS இன் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார். வேலைவாய்ப்பில் இருந்து சுயாதீனமாய், அனைவருக்குமே ஒட்டுமொத்தமாய் குறைந்தபட்ச வருவாய் ஒன்றுக்கு இவர் ஆலோசனை வைத்ததன் காரணத்தால் ஊடகங்களாலும் கல்வியாளர்களின் ஒரு அடுக்கினாலும் இவர் ஊக்குவிக்கப்பட்டார். அமெரிக்க-ஆதரவான, இராணுவவாத மற்றும் சட்டம்-ஒழுங்கு வேலைத்திட்டம் ஒன்றைக் கொண்டிருக்கும் இவர் இராணுவச் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்காய் உயர்த்துவதற்கும் போலிஸ் அதிகாரங்களை உயர்த்துவதற்கும் ஆலோசனை வைக்கிறார். ஏனைய வேட்பாளர்களது ரஷ்ய-ஆதரவு வசனங்களின் மீது இவர் தாக்குதல் நடத்துகிறார்.
தொழிலாளர் அமைச்சரான மரியம் எல் கொம்ரி போன்ற ஹாலண்டின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுடன் மிக நெருங்கிய தொடர்புடைய PS நிர்வாகிகளுடன் அமோன் முறித்துக் கொள்ளப் போவதில்லை என்பது தெளிவான பின்னர் அவரது பிரசாரம் துரிதமாய் பின்னடைவைக் கண்டது. மேலும் அவரது அனைவருக்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மக்கள் ஆதரவைப் பெறாததாய் நிரூபணமானது. தொழில்நுட்பங்களது மாற்றத்தின் காரணத்தால், தொழிலாளர்களின் மிகப்பெரும் அடுக்குகள் இனி ஒருபோதும் நிரந்தர வேலையை எதிர்பார்க்க முடியாது என்ற ஒரு அவநம்பிக்கையான கருத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பரிதாபகரமான வகையில் மாதந்தோறும் ஒரு சில நூறு யூரோக்களை அது அளித்திருக்கும்.
மெலோன்சோனும் பிரெஞ்சு தேசியவாதத்தின் முட்டுச்சந்தும்
இப்போதைக்கு ஜோன் லூக் மெலோன்சோன் மட்டுமே லு பென், ஃபிய்யோன் மற்றும் மக்ரோன் ஆகியோரது வலது-சாரிக் கொள்கைகளுக்கான மாற்றாக வாக்காளர்களின் கணிசமான பிரிவினரால் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டங்களில் அவருக்கு ஆதரவு உயர்ந்திருக்கிறது என்றால், இளைஞர்களின் கணிசமான அடுக்குகள் போர் மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத வெறுப்புக்கு எதிரான அவரது சமீபத்திய வசனங்களை ஆதரிக்கின்றனர் என்பதும் ஊதிய அதிகரிப்புகள், மாணவர் நிதி உதவி மற்றும் ஓய்வூதிய வயதை குறைப்பது ஆகிய அவரது தேர்தல் வேலைத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் சமூகக் கோரிக்கைகளுக்கு ஏற்பை வெளிப்படுத்துகின்றனர் என்பதும் அதற்கு பெருமளவு காரணமாகும். போர் எதிர்ப்பு வாய்வீச்சை நோக்கி அவர் திரும்பியமையானது, அவரது சிரிசா கூட்டாளிகள் கிரேக்க தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆழமான சிக்கன நடவடிக்கைகளை திணிக்கத் தொடங்கியதன் பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்ட மெலோன்சோனின் “இரண்டாம் திட்ட” (Plan B) மூலோபாயம் என்றழைக்கப்படுவதுடன் பிணைந்ததாகும்.
பெரும் ஊதிய அதிகரிப்புகள், ஓய்வூதிய வயதைக் குறைப்பது, இலவசக் கல்வி மற்றும் மாணவர்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை PES ஆதரிக்கிறது. இத்தகைய கோரிக்கைகளுக்கு ஆதரவான பரந்த சமூகப் போராட்டத்தையும் அது ஊக்குவிக்கிறது. ஆயினும், மெலோன்சோன் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொழிலாளர்கள் அவருக்கு எதிரான கடுமையானதொரு போராட்டத்திற்கு தயாரித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையையும் தருகிறது.
நீண்டகாலம் PS அரசியல்வாதியாக இருந்து வந்திருக்கும் மெலோன்சோன் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பொறி வைக்கிறார் — முதலில் OCI யிலும் பின் 1976 தொடங்கி PS இலும் என ஒரு நீண்ட அரசியல் வாழ்க்கையில், இது அவர் வளர்த்திருக்கின்ற ஒரு தனிக்கலையாகும். அவர் அதிகாரத்துக்கு வந்தால், சிரிசாவுக்கு சளைக்காத, தொழிலாள வர்க்கத்தின் ஒரு தீர்க்கமான எதிரியாக அவர் நிரூபணமாவது நிச்சயம்.
மெலோன்சோன் தனது வேலைத்திட்டத்தில் இருக்கும் கோரிக்கைகளுக்காக போராடுவார் என்பதான பிரமைகளை விரட்டுவதற்கு அவரது செயல்வரலாற்றை சுருக்கமாய் ஆய்வுசெய்தாலே போதுமானது. சிறிதுகாலம் OCI அங்கத்தவராக இருந்தபின்னர் 1976 இல் PS இல் இணைந்து PS இன் ஒரு செனட்டராக இவர் ஆனார். 2008 இல் தான் இவர், PCF மற்றும் NPA இல் இருந்து உடைந்து வந்தவைகளுடன் சேர்ந்து இடது முன்னணியை உருவாக்கும் பொருட்டு PS இல் இருந்து விலகினார். PS இல் இருந்த சமயத்தில், ஈராக்கிற்கு எதிரான 1991 வளைகுடாப் போரையும் யூரோவின் வெளியீட்டையும் எதிர்ப்பதாகக் கூறி மித்திரோனின் கொள்கைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் எழுந்திருந்த எதிர்ப்பை அணைப்பதில் மித்திரோனுடன் நெருக்கமாகச் சேர்ந்து வேலைசெய்த இவர், சந்தர்ப்பம் பார்த்து மித்திரோன் கூறியவுடன் தனது எதிர்ப்பைக் கீழேபோட்டு விட்டார்.
லியோனல் ஜோஸ்பனின் 1997-2002 மக்கள்வெறுத்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்திருந்த அவர், 2011 இல் லிபியாவில் நேட்டோவின் போரை ஆதரித்தார். தேசிய சட்டமன்றத்தில் 2015 இல் அவசரகாலநிலை திணிப்புக்கு ஆதரவாக இடது முன்னணி வாக்களித்தது.
இன்று மெலோன்சோன் முன்வைக்கின்ற வேலைத்திட்டங்களும் கோரிக்கைகளும் மிகவும் வெறுமையான வாய்ச்சவடால்களே ஆகும். அவருடையது ஒரு முதலாளித்துவ வேலைத்திட்டமாகும். ஒரு சோசலிசக் கொள்கையானது ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட நடவடிக்கையை அவசியமாகக் கோருகிறது. சர்வதேச மூலதனப் பாய்வைச் சார்ந்திருப்பதும், 35 ஆண்டுகளுக்கு முன்பாக மித்திரோன் PS இன் “சிக்கன நடவடிக்கைத் திருப்ப”த்தை செய்தபோது அளித்த விட்டுக்கொடுப்புகளைக் கூட அளிக்கமுடியாத அதனினும் மோசமான நிலையில் இருப்பதுமான பிரெஞ்சு முதலாளித்துவத்தால் எந்த உருப்படியான சீர்திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட முடியாது.
மெலோன்சோனின் “இரண்டாம் திட்ட”த்தில் உருவடிவம் பெறுகின்ற அவரது வெளியுறவுக் கொள்கையானது பிற்போக்குத்தனமானதும் தேசியவாதரீதியானதும் ஆகும். அவரது ”இரண்டாம் திட்டம்” பிரான்சின் ஒரு பிரெஞ்சு முதலாளித்துவ அரசாங்கம் ஜேர்மனியுடன் மோதுவதற்கும் யூரோவை விட்டு விலகுவதற்கும் விருப்பத்துடன் இருந்தாக வேண்டும் என்ற முதற்கோளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. தான் தேர்வானால் ஜேர்மனி மீது வைக்கவிருக்கும் கோரிக்கைகள் என்னவாயிருக்கும் என்பது குறித்து Le Parisien உடன் விவாதிக்கையில் மெலோன்சோன் கூறினார்: “ஜேர்மனிக்கு முடியாது என்று சொல்ல எந்த வழியுமில்லை. ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், போலந்து என வரிசையாய் பல நாடுகளுக்கு போதும்போதும் என்றாகி விட்டது. ஜேர்மனி நகர விரும்பவில்லை என்றால், ஐரோப்பிய ஒன்றியம் அவர்களிடம் [மேலே பட்டியலிடப்பட்ட நாடுகளிடம்] இருந்து விலகுவது தான் இரண்டாம் திட்டம் என்று நான் கூறியிருக்கிறேன்.”
கிரீசிலும் பிறவெங்கிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கையால் குறிவைக்கப்படுகின்ற தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாளர்களை அணிதிரட்டுகின்ற ஒரு சர்வதேச மூலோபாயத்தை மெலோன்சோன் அபிவிருத்தி செய்யவில்லை. அதேபோல ஒரு இராணுவவாத எதிர்ப்பு மூலோபாயத்தையும் அவர் ஆலோசனைவைக்கவில்லை. ஐரோப்பாவுக்குள்ளாக இராணுவ அணிவரிசையில் ஒரு மாற்றத்திற்கு கோடிட்டுக் காட்டுகின்ற அவர், அதேநேரத்தில் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கும் போருக்குத் தயாரிப்பு செய்வதற்கும் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மெலோன்சோனின் வாய்வீச்சானது சமூக வாய்ச்சவடால், ஜனரஞ்சகவாதம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றின் ஒரு அபாயகரமான கலவையாகும். ஹாலண்டின் கீழ் மெலோன்சோன் வெகுதூரம் வலது நோக்கி நகர்ந்திருக்கிறார். அவரது மக்களின் சகாப்தம் (L'ère du peuple) புத்தகத்தில் குறிப்பிட்டவாறு, இடது, சோசலிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான பாத்திரம் ஆகியவை அனைத்தும் காலாவதியாகி விட்டன என்ற முன்னோக்கின் அடிப்படையில் இடது முன்னணியின் வேட்பாளராக பொதுவில் போட்டியிடுவதைத் தவிர்க்கும் பொருட்டே அடிபணியா பிரான்ஸ் (France insoumise) என்னும் இயக்கத்தை அவர் உருவாக்கினார். LR இன் அரசியல் ஆலோசகரான பாட்ரிக் புய்ஸோன் மற்றும் பத்திரிகையாளரான எரிக் செமோர் போன்ற அதி-வலது, தேசியவாத பிரபலங்களுடன் அவர் கொண்டிருக்கும் நட்புறவு ஊரறிந்த விடயமாகும்.
மெலோன்சோனுக்கு வரலாற்றில் முன்னோடி ஒருவரைக் காண வேண்டுமென்றால், 1920கள் மற்றும் 1930களில் பெல்ஜியத்தின் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவராய் இருந்த ஹென்றி டு மான் போன்ற மனிதர்களைத் தான் ஒருவர் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கும். பெருமந்த நிலையின் சமயத்தில், முதலாளித்துவத்தின் கீழான திட்டமிடலுக்கு அழைப்புவிடுத்த ஒரு தேசியவாதியான டு மான், மார்க்சிசத்தை எதிர்த்ததோடு மிகவும் பிற்போக்கான வழிகளில் அதனை அபிவிருத்தி செய்தார். இத்தாலியின் பாசிச சர்வாதிகாரியான பெனிட்டோ முசோலினி உள்ளிட்ட பல்தரப்பான வலது-சாரி ஆளுமைகளுடன் அவர் தொடர்புகொண்டார். இறுதியாக, 1940 இல் பெல்ஜியம் மீதான நாஜிக்களது படையெடுப்பின் போதான தீர்மானகரமான நெருக்கடியின் சமயத்தில், அவர் தனது சொந்தக் கட்சியை கலைத்து விட்டு ஒரு நாஜி-ஒத்துழைப்புவாத ஆட்சியை நிறுவ ஆதரவாக தீவிரமான நெருக்குதலளித்தார்.
புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் திவால்நிலை
சோசலிஸ்ட் கட்சி மற்றும் மெலோன்சோன் குறித்து இடது-சாரி விமர்சனத்தை தேடும் தொழிலாளர்களுக்கு, சோசலிச சமத்துவக் கட்சியானது NPA, LO மற்றும் POID போன்ற கட்சிகள் தொடர்பாக மிகக் கவனமான எச்சரிக்கைகளை விடுக்கிறது. இவை PS இன் நீண்ட கால கூட்டாளிகளாக இருப்பவை என்பதோடு, ட்ரொட்ஸ்கிசத்திற்கு கடும் எதிர்ப்பு காட்டி வருபவையும் ஆகும். மெலோன்சோனை விட எந்த விதத்திலும் இவை போருக்கோ அல்லது சிக்கன நடவடிக்கைக்கோ எதிர்ப்பு காட்டுவதில்லை.
ICFI 1953 இல் ஸ்தாபிக்கப்பட்ட சமயத்தில் எந்த நடுத்தர வர்க்க சக்திகளிடமிருந்து முறித்துக் கொண்டதோ அந்த சக்திகளின் வழிவந்ததே NPA என்பதோடு, இது பின்னர் 1968க்குப் பிந்தைய குட்டி-முதலாளித்துவ மாணவர் இயக்கத்தின் பிரிவுகளில் ஒரு சமூக அடித்தளத்தைக் கண்டெடுத்தது. இது வசதியான நடுத்தர வர்க்கத்தின் ஏகாதிபத்திய-ஆதரவு அடுக்குகளுக்காகப் பேசுகிறது. 2009 இல், 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு ஒரு சில மாதங்களின் பின்னர், LCR (Ligue communiste révolutionnaire) புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியாக (NPA) மாற்றப்பட்டமையானது, LCR ட்ரொட்ஸ்கிசத்துடன் எஞ்சியிருந்த எந்த அடையாள ஒட்டுதலையும் முறித்துக் கொண்டிருந்தது என்பதையும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கின்ற நிலையில் அது வலது நோக்கிய பெரியதொரு நகர்வுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்தது என்பதையும் அரசியல் உயரடுக்குக்கு தெளிவாக சமிக்கை செய்யும் ஒரு நோக்கம் கொண்டதாய் இருந்தது.
NPA க்கான தனது ஸ்தாபக வேலைத்திட்டத்தில் LCR பின்வருமாறு எழுதியது: “NPA ட்ரொட்ஸ்கிசத்துடன் எந்தவொரு தனிச்சிறப்பான உறவையும் கொண்டிருக்கப்போவதில்லை, மாறாக கடந்த இரண்டு நூற்றாண்டுகளின் போது, அமைப்புமுறையுடன் முழுமூச்சாக மோதிவந்திருக்கிறவர்களது தொடர்ச்சிக்கே உரிமைகோருகிறது. NPA ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகக் கட்சியாகும். உலகமயமாக்கல்-எதிர்ப்பு இடதுகளிடம் இருந்து, அரசியல் சூழலியல் இயக்கத்திடம் இருந்து, PS மற்றும் PCF இல் இருந்து வந்த தோழர்களிடம் இருந்து, அராஜகவாத இயக்கத்திடம் இருந்து, புரட்சிகர இடதிடம் இருந்து என சமூக இயக்கத்தின் பல்வேறு பாகங்களிடம் இருந்தான தோழர்களது பங்கேற்பு அவசியமாகும். அடையாளப்படுத்திக் கொள்வதாக இல்லாமல், தன்னை மேலதிகமாய் இன்னும் திறப்பதன் மூலமாக NPA வென்றெடுப்பதற்கு அத்தனையும் இருக்கிறது.”
அதற்குப் பின்வந்த NPA இன் பாத்திரத்தை உலக சோசலிச வலைத் தளத்தில் PES மிகவிரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறது. மெலோன்சோனுடன் சேர்ந்து, NPA உம் 2012 இறுதிச் சுற்றில் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தது. கடந்த ஆறு ஆண்டுகளில், லிபியா, சிரியா, மற்றும் உக்ரேனிலான பெரும்பாலும் ரஷ்யாவைக் குறிவைத்தான நேட்டோவின் தலையீடுகளை ஊக்குவிப்பதில் NPA ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறது. இது கிரீசில் சிக்கன நடவடிக்கை சார்பு சிரிசா அரசாங்கத்தை ஆதரித்தது. போர் முனைப்புத் தான் 2017 தேர்தலில் NPA இன் தலையீட்டின் இருதயத்தானமாக இருந்து வந்துள்ளது. மெலோன்சோனின் “ஜனரஞ்சகவாதம்” மீதான அதன் தாக்குதல்கள் -மெலோன்சோனின் ரஷ்ய-ஆதரவு நிலைப்பாடுகள் தொடர்பாக ஊடகங்கள் அவர்மீது தாக்குதல் நடத்திய நிலையில் இது வந்திருந்தது- வலதின் பக்கமிருந்து வந்திருந்தன என்பதோடு, NPA ஆதரவளிக்கின்ற ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போர் முனைப்பின் மீது மெலோன்சோன் விமர்சனங்கள் வைப்பது குறித்த கோபத்தை பிரதிபலிப்பதாகவும் அமைந்திருந்தது.
சிரியா மீது ட்ரம்ப் தாக்குதல் நடத்தியதற்குப் பின்னர், NPA இன் ஜனாதிபதி வேட்பாளரான பிலிப் புட்டு சிஐஏ இன் பரப்புரையில் இருந்து கிட்டத்தட்ட பிரித்தறியமுடியாத வார்த்தைகளைக் கொண்டு, போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக் கொள்கின்ற ஒரு அறிக்கையை விடுத்தார். சிரியாவிலான போரின் எதிர்ப்பாளர்களை ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் ஆட்சியைப் பாதுகாப்பவர்களாகக் கூறி அவதூறு செய்த அந்த அறிக்கை, ”அமெரிக்க இராணுவத் தாக்குதல்களின் எந்த ஆதரவோ அல்லது அவற்றின் மீது நம்பிக்கையோ இல்லாத அதேவேளையில், எல் ஆசாத் மற்றும் அவரது விசுவாசிகளுடன் ஒரு ‘உருப்படியான’ அமைதிக்கு ஆலோசனையளிப்பதற்காக அந்த சர்வாதிகாரியால் கொல்லப்பட்ட்ட நூறாயிரக்கணக்கான மரணங்களுக்கும் மில்லியன் கணக்கில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கும் தமது கண்களை மூடிக் கொள்கின்ற பிரெஞ்சு அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களில் நாங்கள் சேருவதாய் இல்லை” என்று அறிவித்தது.
2017 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமானது, 2002 ஜனாதிபதித் தேர்தல் நெருக்கடிக்குப் பிந்தைய LCR/NPA இன் ஒட்டுமொத்தமான அரசியல் பரிணாம வளர்ச்சியின் மீதுமான ஒரு குற்றப்பத்திரிகையாகும். FN அதிகாரத்துக்கு வந்தால் நடந்து விடுமோ என்று பரந்த மக்கள் பயந்து கொண்டிருந்த எதேச்சாதிகார ஆட்சி, போர் மற்றும் ஆழமான சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான முனைப்பை தடுத்து நிறுத்துவதற்கு LCR இன் PS ”தோழர்கள்” உள்ளிட்ட பாரம்பரியமான முதலாளித்துவக் கட்சிகளை நம்பியிருக்க தொழிலாளர்களுக்கு LCR கூறியது. ஆனால் PS தான் ஒரு நிரந்தர அவசரகால நிலையைத் திணித்தது, ஒரேயடியான சமூக வெட்டுகளை நடத்தியது, வரிசையாய் போர்களை நடத்தியது. அத்துடன் இடதின் திசையில் இருந்து போருக்கு வருகின்ற எதிர்ப்பைத் தடுப்பதற்கு அது NPA ஐ சார்ந்திருந்தது.
தொழிலாள வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டமானது NPA, LO அல்லது POID ஆகியவற்றுடனான ஒரு கூட்டணியின் மூலமாக நடக்கப் போவது கிடையாது, மாறாக அவற்றுக்கு எதிரான கடுமையான போராட்டத்திலேயே நடந்தேறும்.
சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்!
பிரான்சின் அரசியல் ஸ்தாபகம் மதிப்பிழந்து விட்டிருப்பதென்பது, போர் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவை மறுஎழுச்சி கண்ட நிலைமைகளின் கீழ், பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு பரந்த அரசியல் நோக்குநிலைமாற்றத்திற்குள் சென்று கொண்டிருப்பதன் ஒரு ஆரம்ப கட்டமாகும். புரட்சிகர மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு திரும்புவதை தவிர்த்த வேறு எந்தவொரு வழியும் அங்கே இல்லை. அக்டோபர் புரட்சியின் இந்த நூறாவது ஆண்டில், 100 ஆண்டுகளுக்கு முன்பாக போல்ஷிவிக் கட்சி நடத்திய சமரசமற்ற போராட்டத்தையும் அது கொண்டிருந்த சர்வதேச முன்னோக்கையும் அத்துடன் ரஷ்ய தொழிலாள வர்க்கம் நடத்திய தீரமிகு போராட்டங்களையும் பரந்த மக்கள் நினைவுகூருகின்றதொரு நேரத்தில், PES ஆல் முன்னெடுக்கப்படுகின்ற முன்னோக்கு இதுவாகும்.
PS சோசலிஸ்டாகவும் LCR ட்ரொட்ஸ்கிஸ்டாகவும் தவறாக அடையாளம் காணப்பட்ட சமயத்தின் போது தொழிலாளர்கள் கண்ட தோல்விகளும் காட்டிக் கொடுப்புகளும் உண்மையான ட்ரொட்ஸ்கிசத்தின் கோணத்தில் இருந்து மட்டுமே விளங்கப்படவும் தலைகீழாக்கப்படவும் முடியும் என்பதை PES வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தின் மீதான ICFI இன் சமரசமற்ற பாதுகாப்பு மற்றும் பிரான்சில் PCF அல்லது PS உடனான கூட்டணிகளுக்காக ட்ரொட்ஸ்கிசத்தைக் கைவிட பல்வேறு அமைப்புகளையும் இட்டுச்சென்ற குட்டி-முதலாளித்துவ அழுத்தங்களுக்கு அதன் எதிர்ப்பு, ஆகியவற்றின் சர்வதேச தொடர்ச்சியையே PES தனது போராட்டத்திற்கான அடித்தளமாகக் கொண்டுள்ளது.
ICFI இன் பிரெஞ்சு பிரிவாக சென்ற வசந்தகாலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட PES தனது சொந்த வேட்பாளரை நிறுத்தும் ஒரு நிலையில் இல்லை. எனினும், முதலாளித்துவத்தின் நெருக்கடி துரிதமாய் தீவிரப்படுவதன் மத்தியில் எங்களது முன்னோக்கு அதிகமான ஆதரவைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். PES இல் இணைவதற்கும், அதனைக் கட்டியெழுப்புவதற்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச சிந்தனையுள்ள புத்திஜீவிகளுக்கு நாங்கள் விண்ணப்பிக்கிறோம்.
ஏகாதிபத்தியப் போர் மற்றும் தேசியவாதத்தின் அத்தனை வடிவங்களையும் PES எதிர்க்கின்றது. பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஜேர்மனியின் Sozialistische Gleichheitspartei ஆகிய ஐரோப்பாவிலிருக்கும் தன் சகோதரக் கட்சிகளுடன் இணைந்து, இது ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்ற முன்னோக்கினை முன்னெடுக்கிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தையும் சரி, மெலோன்சோன் மற்றும் லு பென் போன்று ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு தேசியவாத அடிப்படையில் எதிர்க்கின்றவர்களது கொள்கைகளையும் சரி இரண்டையுமே எதிர்க்கிறது. போர் நெருக்கடியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை முனைப்பும் நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் மூலமாக தீர்க்கப்பட முடியாது, மாறாக ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவும் தொழிலாள வர்க்கத்தின் மூலமாக முதலாளித்துவ வர்க்கம் தூக்கிவீசப்படுவதன் மூலமாகவும், ஐரோப்பாவெங்கிலும் சோசலிசக் கொள்கைகளை பின்பற்றுகின்ற தொழிலாளர்’ அரசுகளது ஒரு கூட்டமைப்பு கட்டியெழுப்பப்படுவதன் மூலமாகவும் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரானதொரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சர்வதேசிய தலைமையாக ICFI ஐ கட்டியெழுப்புவதற்காக PES முற்படுகிறது. போருக்கு எதிரான ICFI இன் அறிக்கையின் வழியில், அது பின்வருமாறு வலியுறுத்துகிறது:
• போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், மக்களின் அத்தனை முற்போக்குக் கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி முன்நிற்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும்.
• புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவ எதிர்ப்புத்தனமானதாகவும் சோசலிசத் தன்மையுடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டுவதற்கும் இராணுவவாதம் மற்றும் போருக்கான அடிப்படைக் காரணமாய் திகழும் பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குமான போராட்டத்தின் வழியல்லாமல் போருக்கு எதிரான எந்தவொரு பொறுப்புணர்வு வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.
• ஆகவே, இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து, முழுமையாகவும் குழப்பத்திற்கு இடம்தராத வகையிலும், சுயாதீனமானதாகவும் அவற்றுக்கு குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.
• எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசரீதியானதாக, தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் அணிதிரட்டுவதாக இருந்தாக வேண்டும்.