Print Version|Feedback
US vice president warns North Korea “the sword is ready”
அமெரிக்க துணை ஜனாதிபதி வடகொரியாவிடம் “வாள் தயாராக உள்ளது” என எச்சரிக்கிறார்
By Peter Symonds
20 April 2017
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆசியா ஊடான அவரது சுற்றுப்பயணத்தை தொடருகையில், நேற்று வடகொரியாவிற்கு பயமுறுத்தும் இராணுவ அச்சுறுத்தலை விடுத்துள்ளார். அமெரிக்கா “எப்போதும் சமாதானத்தையே நாடுகிறது” என அபத்தமாக கூறுகின்றபோதும், ட்ரம்பின் கீழ் “கேடயம் பாதுகாப்பளிக்கிறது மற்றும் வாள் தயாராகவுள்ளது” என அறிவித்தார்.
“ஒரு பெரும் மற்றும் செயலூக்கமுடைய அமெரிக்க விடையிறுப்புடன், நாங்கள் எந்தவொரு தாக்குதலையும் தோற்கடிப்போம், மேலும் வழமையான ஆயுதங்களையோ அல்லது அணுஆயுதங்களையோ கொண்ட எந்தவொரு பிரயோகத்தையும் எதிர்கொள்வோம்… அனைத்து வாய்ப்புகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இராணுவ வீரன் தேவையற்று வாளை தாங்கி நிற்கமாட்டான் என்பதற்கு வரலாறு சான்றளிக்கும்” என்று பென்ஸ் எச்சரித்தார்.
அச்சுறுத்தலை அடிகோடிட்டுக்காட்டி, அமெரிக்க அணுஆயுத விமானந்தாங்கி கப்பலான USS ரொனால்ட் ரீகன் அதன் தாய் துறைமுகமான ஜப்பானின் யோகோசுவாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது பற்றி பென்ஸ் பேசினார். அமெரிக்க கடற்படை கப்பலான கார்ல் வின்சனின் தலைமையில் கொரிய தீபகற்பத்தின் கடற்பகுதியை நோக்கி முன்னேறி சென்றுள்ள மற்றொரு விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுவானது அடுத்த வாரத்திற்குள் அங்கு சென்றடையவுள்ளது. வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனின் முந்தைய தவறான அறிக்கைகள் தெரிவித்தபடி கடந்த வாரத்திலேயே அது அதன் வழியில் முன்னேறியிருந்தது.
மில்லியன் கணக்கிலான மக்களின் உயிரிழப்பு நிகழக்கூடும் என்பதை ஒப்புக்கொள்கின்றபோதிலும், வடகொரியா மீதான ஒரு முன்கூட்டிய அமெரிக்க தாக்குதலுக்கு வழி செய்யும் பொருட்டு பியோங்யாங்கிற்கு எதிரான பென்ஸின் புதுப்பிக்கப்பட்ட அச்சுறுத்தல்களை குடியரசு கட்சியின் செனட்டரான லிண்ட்சே கிரஹாம் தனது பகிரங்கமான ஆதரவின் முலமாக இன்னும் அதிகரிக்க செய்தார்.
NBC இன் “Today” நிகழ்ச்சியில் கிரஹாம் பேசுகையில், “இது பயங்கரமானதாக இருக்கும்… இது கொரிய தீபகற்பத்திற்கு படுமோசமான நிலையை உருவாக்கும். சீனாவுக்கும் மோசமானதாக இருக்கும். மேலும் ஜப்பானுக்கும், தென் கொரியாவிற்கும் கூட இது மோசமான நிலையை உருவாக்கும். இதுவே வடகொரியாவின் முடிவாகவும் இருக்கும். ஆனால் அது அமெரிக்காவை தாக்குவது முடியாது, அது அமெரிக்காவிற்கு வரக்கூடிய ஒரேயொரு வழி ஒரு ஏவுகணை ஊடாகவே” என அறிவித்தார்.
ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தை வியாபித்துள்ளதான மனித துயரங்களுக்கான பொறுப்பற்ற தன்மை மற்றும் கொடூரமான அலட்சியம் போன்ற இவற்றையே செனட் ஆயுத சேவை குழுவில் (Senate Armed Services Committee) அமர்ந்திருக்கும் கிரஹாமின் கருத்துக்கள் பிரதிபலித்தன. கொரிய தீபகற்பத்தின் மீதான ஒரு போரானது சீனா, ரஷ்யா போன்ற அணுஆயுதமேந்திய சக்திகளை போருக்கு இட்டுச்செல்லும் வகையில் ஒட்டுமொத்த கிரகத்திற்கும் ஒரு பேரழிவை விளைவிக்கும்.
வடகொரியா அதன் மட்டுப்படுத்தப்பட்ட அணுஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறுத்துவதற்கு வலியுறுத்திய முந்தைய நிர்வாகங்களின் தோல்வி பற்றி கிரஹாம் குறிப்பிடுகையில், “இருபது ஆண்டுகளுக்கு முன்பு, உண்மையில் வடகொரியாவிடம் எந்தவொரு அணுஆயுதமும் இல்லை. ஒவ்வொரு குடியரசுவாதியும், மற்றும் ஒவ்வொரு ஜனநாயகவாதியும் வடகொரியாவை திருகிவிட்டுள்ளனர். அவர்களது தாயகத்தை (அமெரிக்காவை) தாக்க ஒரு ஏவுகணையை பெறுவதற்கு அவர்களே காரணமாக உள்ளனர். (அவர்களை) நிறுத்துவதற்கு இதுவே சரியான நேரம்.” என கடுமையாக பேசினார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இராணுவவாத தர்க்கத்தை கிரஹாம் வெறுமனே இன்னும் வெளிப்படையாக வலியுறுத்துகிறார். Washington Post க்கு நேற்று கருத்து தெரிவிக்கையில் பென்ஸ் பின்வருமாறு அறிவித்தார்: “வடகொரியாவுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டுவந்த பேச்சுவார்த்தைகள் தற்போது மாபெரும் தோல்வியை அடைந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.” வடகொரியாவுடன் பேரம் பேசுவதற்கு அமெரிக்கா முனையவில்லை, அதிலும் இந்த முறை எந்தவொரு நேரடி பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை.
CNN உடனான ஒரு தனிப்பட்ட நேர்காணலில் துணை ஜனாதிபதி, “வடகொரியா அவர்களது அணுஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவருகிறார்கள், மேலும் இறுதியில் அவற்றை இல்லாதொழிக்கிறார்கள் என்பதை மட்டுமே அவர்களிடமிருந்து நாங்கள் கேட்கவேண்டும்” என தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த வாரம் இறுதியில் நிகழ்த்தப்பட்ட வடகொரிய ஏவுகணை சோதனை தோல்விக்கு அமெரிக்க சைபர் நாசவேலை தான் பொறுப்பா என்று கேட்கப்பட்டபோது நேரடியாக விடையிறுக்க பென்ஸ் மறுத்துவிட்டார். “எங்கள் இராணுவத்தின் மின்னணு மற்றும் தொழில்நுட்ப திறன்களைப் பற்றி உண்மையில் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையிலான வடகொரிய ஏவுகணை சோதனைகளின் தோல்விக்கு ஒபாமா நிர்வாகத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு இணைய போர் திட்டம் (a cyber warfare program) தான் பொறுப்பாக இருக்கவேண்டுமென நம்பப்பட்டதாக கடந்த மாதம் New York Times பத்திரிகை தெரிவித்தது. இந்த வாரம் செய்தித்தாளில் வெளிவந்த தொடர் கட்டுரை ஒன்றில், ட்ரம்ப் நிர்வாகம் இந்த திட்டத்தை “உற்சாகத்துடன்” ஏற்றுக்கொண்டதாகவும், மேலும் “ஏவுகணை சோதனைகளுக்கு எதிராக இந்த புதிய வகை ஆயுதங்களை பிரயோகிப்பது பற்றி எந்தவித மனஉறுத்தலையும் கொண்டிருக்கவில்லை எனவும் அறிவித்தது.
ஒரு ஏவுகணை சோதனை குறித்த நாசவேலையானது பதிலடி கொடுக்க அழைப்புவிடுக்கும் ஒரு போர் நடவடிக்கையாகவே உள்ளது. இன்னும் New York Times இன் கருத்துப்படி, ட்ரம்ப் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கைகளை முறையானதாகவே கருதுகிறது, ஏனெனில் ஐ.நா. பாதுகாப்பு குழு வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு தடை விதித்துள்ளது. வடகொரியா மீதான ஐ.நா. வின் தீர்மானங்கள் பொருளாதார தடைகள் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் கூட, இராணுவ சக்தியை பிரயோகிப்பது உட்பட எந்தவொரு நடவடிக்கையையும் நியாயப்படுத்த இந்த தர்க்கத்தை பயன்படுத்தலாம்.
திங்களன்று வடகொரியாவின் Rodong Sinmun செய்தித்தாளில் அமெரிக்க சைபர் நாசவேலை சம்பந்தப்பட்ட அபாயங்கள் குறித்து அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருந்ததானது, ஞாயிறன்று ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததற்கு ஒரு அமெரிக்க “சிறப்பு நடவடிக்கையே” பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டியதுடன், “அமெரிக்காவின் போர் வெறி மற்றும் பொறுப்பற்ற செயல்கள்” குறித்து கண்டனம் செய்தது.
பியோங்யாங்கின் சொந்த இராணுவவாத விடையிறுப்பு வடகொரியாவை “ஒரு போக்கிரி நாடாக” அமெரிக்காவையும், உலகத்தையும் அச்சுறுத்துகின்றதென வழமையாக கண்டனம் செய்யும் அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஊடகங்களினால் தமக்கு சாதகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஏவுகணைகள் பசிபிக் ஊடாக சென்று ஒரு அமெரிக்க நகரத்தை நெருப்பில் மூழ்கடிப்பதை காட்டுகின்ற ஒரு காணொளி காட்சியை இந்த ஆட்சி வெளியிட்டது.
வடகொரியாவுக்கு எதிரான போர் குறித்து தினமும் அமெரிக்கா போர் முரசு கொட்டுவது தொடர்கிறது. அமெரிக்க பிரதிநிதிகள் சபை பேச்சாளரான பால் ரியான் பிரிட்டனில் பேசுகையில் பின்வருமாறு அறிவித்தார்: “உண்மையில் இராணுவ பலத்தை ஈடுபடுத்தவேண்டுமென்று நாங்கள் விரும்பவில்லை, என்றாலும் நாங்கள் அனைத்து வாய்ப்புகளையும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.”
இந்த வாரம் மத்திய கிழக்கில் பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் பேசுகையில், “வடகொரியா அதன் நடத்தையை மாற்றிக்கொள்ளவேண்டும்” என வலியுறுத்தினார். இந்த வாரம் பென்ஸ் இதையே எதிரொலித்ததுடன் அவர், “கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், சிரியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் எங்களது புதிய ஜனாதிபதியின் வலிமையையும், உறுதிப்பாட்டையும் இந்த உலகம் கண்டது. இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆயுத படைகளின் வலிமையையும், உறுதிப்பாட்டையும் வடகொரியா சோதித்து பார்க்க முனைவது நல்லது அல்ல” எனவும் எச்சரித்தார்.
சிரியா மீதான அமெரிக்க நடுத்தர கப்பல் ஏவுகணை தாக்குதல் மற்றும் அமெரிக்கா அதன் பெரும் பாரிய வெடிமருந்து வான் வெடி குண்டு வெடிப்பை (Massive Ordnance Air Blast-MOAB) ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தியது தொடர்பான குறிப்புக்கள், உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வடகொரியாவுடன் போரிட விரும்புகிறதேயொழிய, சமாதானமாக போக விரும்பவில்லை என்பதை மட்டுமே அடிக்கோடிட்டு காட்டுகின்றன. மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, பால்கன் மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட ஒரு கால் நூற்றாண்டு கால இராணுவ தலையீடுகள் மற்றும் போர் ஆக்கிரமிப்புகளுக்கு பின்னர், அமெரிக்கா, பூகோள மேலாதிக்கத்திற்கான அதன் முனைவில், அணுஆயுதமேந்திய சக்திகளுக்கிடையே ஈடுபடுத்துகின்றதான ஒரு போரை தோற்றுவிக்கும் மோதலின் விளிம்பில் உள்ளது.