Print Version|Feedback
China appeals to US to back down from war with North Korea
வட கொரியாவுடனான போரிலிருந்து பின்வாங்குமாறு சீனா அமெரிக்காவுக்கு முறையிடுகிறது
By James Cogan
15 April 2017
வட கொரியா மீது ஓர் இராணுவ தாக்குதலைத் தொடுப்பதற்கான அதன் அச்சுறுத்தல்கள் மற்றும் தயாரிப்புகளில் இருந்து பின்வாங்குமாறு ட்ரம்ப் நிர்வாகத்தை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி (Wang Yi) நேற்று கேட்டுக் கொண்டார். அதன் வடக்கு எல்லையில் ஒரு பேரழிவுகரமான போர் குறித்து சீன ஆளும் உயரடுக்குகளுக்குள் நிலவும் கடுமையான மனக்கவலையை பிரதிபலிக்கும் வகையில், அவர் அறிவிக்கையில், “எந்த தருணத்திலும் ஒரு மோதல் வெடிக்கலாமென ஒருவருக்கு உணர்வு ஏற்படுகிறது,” என்றார்.
யி தொடர்ந்து கூறுகையில், “வார்த்தைகளில் ஆகட்டும் அல்லது நடவடிக்கைகளில் ஆகட்டும், ஒருவரையொருவர் தூண்டுவிடுவதை மற்றும் அச்சுறுத்துவதை நிறுத்துமாறும், நிலைமையை திரும்ப பெற முடியாத மற்றும் நிர்வகிக்க முடியாத கட்டத்திற்கு செல்ல விட வேண்டாமென்றும் நாங்கள் எல்லா தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம்,” என்றார்.
ரஷ்ய அரசாங்கமும் அதன் எச்சரிக்கைகளைச் சேர்த்துக் கொண்டது. செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று அறிவிக்கையில், “கொரிய தீபகற்பத்தில் பதட்டங்கள் தீவிரமடைவதை மாஸ்கோ பெரும் கவலையோடு கவனித்து வருகிறது. எல்லா நாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருக்க நாங்கள் அழைப்புவிடுக்கிறோம், மேலும் எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென நாடுகளை நாங்கள் எச்சரிக்கிறோம்,” என்றார்.
வியாழனன்று பெயர் வெளியிடாத "அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள்" NBC செய்திகளுக்குக் கூறுகையில், வெள்ளை மாளிகையும் பென்டகனும் வட கொரியா மற்றொரு அணுஆயுத பரிசோதனை நடத்த இருப்பதாக கருதினால் அமெரிக்கா ஒரு "முன்கூட்டிய தாக்குதலை" நடத்தும் என்று தெரிவித்தனர்.
கிம் யொங்-உன் தலைமையிலான பியொங்யாங் சீனா மற்றும் ரஷ்யாவை ஒட்டிய வட கொரிய எல்லையான Punggye-ri தளத்தில், அதுபோன்றவொரு சோதனையின் இறுதிக்கட்ட தயாரிப்பில் இருப்பதாக காட்டும் செய்திகளும், செயற்கைகோள் படங்களும் அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன. இன்று வட கொரியாவில் "சூரிய தினம்" ஆகும்—அதாவது அந்த ஆட்சியின் முதல் சர்வாதிகாரி Kim Il-sung இன் பிறந்த தினத்தின் உத்தியோகபூர்வ கொண்டாட்டமாகும். அதுபோன்ற கடந்த கால தேசியவாத நிகழ்வுகளில் ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி கருவிகளின் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
அமெரிக்க இராணுவம், வட கிழக்கு ஆசியாவில் தொடர்ந்து அதன் முடிவுகளுக்கேற்ப ஆத்திரமூட்டும் விதத்தில் அதிகாரத்தைக் காட்டி வருகிறது. கார்ல் வின்சன் எனும் விமானந்தாங்கி போர்க்கப்பலும் மற்றும் அதன் போர்ப்படை குழுவும் கொரிய கடல் எல்லைகளுக்குள் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவித்த பின்னர், 18 வது அமெரிக்க விமானப்படை பிரிவு அதன் ஒகினாவா விமானத் தளத்தின் ஓடுபாதையில் டஜன் கணக்கான போர் விமானங்கள், குண்டுவீசிகள் மற்றும் ஹெலிகாப்டர்களை அணிவகுத்து நிறுத்தியதோடு, F-15 போர் விமானங்களையும், ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் தாங்கிய ஏனைய போர் விமானங்களையும் காட்டும் புகைப்படங்களையும் வெளியிட்டது.
நீர்மூழ்கி கப்பல்கள், திட்டமிட்டு தாக்கும் B-1 ரக குண்டுவீசிகள், துப்பாக்கி தாங்கிய ஹெலிகாப்டர்கள் மற்றும் நன்கு ஆயுதம் தரித்த 625,000 பலமான தென் கொரிய இராணுவத்திற்கு ஆதரவாக 37,000 என்று மதிப்பிடத்தக்க அமெரிக்க தரைப்படை துருப்புகள் உட்பட பரந்தளவிலான ஏனைய இராணுவ ஆயுதப்படைகளும் அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்க தளபதிகளது தீர்மானங்களுக்கு இணங்க செலுத்தக்கூடியவை என்று கருதத்தக்க படுபயங்கர பாரிய பேரழிவு ஆயுதங்களில், ஆப்கானிஸ்தானின் வியாழனன்று முதல்முறையாக தலைமறைவு வலையமைப்பு என்று கூறப்பட்டதன் மீது செலுத்தப்பட்ட Massive Ordnance Air Blast (MOAB) எனும் அணுஆயுதமல்லாத குண்டும் உள்ளடங்கி உள்ளது. (பார்க்கவும்: “ஆப்கானிஸ்தான் மீது அணு-சாராத மிகப்பெரும் குண்டை அமெரிக்கா போடுகிறது: மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றம்”)
அமெரிக்க ஊடகங்களும் மற்றும் அதன் கூட்டு ஊடங்களும் அமெரிக்க தாக்குதல்கள் எப்போதும் வேண்டுமானாலும் நிகழக்கூடியவை என்ற உணர்வை பெரிதுபடுத்தி காட்டும் ஒவ்வொரு முயற்சிகளில் மட்டும் ஈடுபட்டு வரவில்லை, மாறாக அவற்றை நியாயப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றன.
வட கொரிய ஆட்சியின் "முட்டாள்தனம்" குறித்து பிரச்சாரம் செய்வதற்கும், வெறும் 25 மில்லியன் மக்கள்தொகை கொண்டதும் கொண்ட வெறுமனே 25 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கொண்டதுமான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய அந்ந நாடு அபாயத்தை முன்னிறுத்துவதாக காட்டுவதற்கும், NBC செய்திக்கு விடையிறுப்பாக வெளியான வட கொரிய இராணுவ கட்டளையகத்தின் போர்வெறியூட்டும் வாய்சவடால் பற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய அறிவிப்புகளோடு சேர்த்து, பியொங்யாங் அறிவிக்கையில், எந்த தாக்குதல் சம்பவத்திலும், தென் கொரியா மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தளங்களும், அத்துடன் சியோலில் உள்ள தென் கொரிய ஜனாதிபதி மாளிகையும் "சின்னாபின்னமாக்கப்படும்" என்று அறிவித்தது.
ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் அரசாங்கம் மீள்ஆயுதமயமாவதற்கான அதன் முனைவை அதிகரிக்கவும் மற்றும் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அந்நாட்டின் பெயரளவிலான "அமைதிவாத" வெளியுறவு கொள்கையை கைவிடவும் இந்நிலைமையை சுரண்டி வருகிறது. அது, கார்ல் வின்சன் போர்ப்படை குழுவுடன் இணைய, போர்க்கப்பல்களை அனுப்பி இருப்பதாக செய்திகள் அறிவிக்கின்றன.
சாத்தியமானளவிற்கு விஷமப் பிரச்சாரத்தை உருவாக்க, அபே இன் தேசிய பாதுகாப்பு கவுன்சில், போர் சம்பவத்தில் தென் கொரியாவிலிருந்து சுமார் 60,000 ஜப்பானியர்களை வெளியேற்றி அழைத்து வரும் பல திட்டங்களை அது பெப்ரவரியில் விவாதித்திருந்ததாகவும், படகுகள் மூலமாக வெள்ளமென ஜப்பானுக்குள் நுழைய முயலும் வட கொரிய அகதிகளுக்கு எவ்வாறு விடையிறுப்பதென பரிசீலித்ததாகவும் ஊடகங்களுக்கு செய்தி கசியவிட்டது. அச்சுறுத்தும் ரீதியில் அச்செய்திகள் குறிப்பிடுகையில், அதுபோன்ற நிராயுதபாணியானவர்களோடு வட கொரிய "உளவாளிகளும் முகவர்களும்" இருப்பார்களென பாதுகாப்பு கவுன்சில் கருதுவதால், “கடுமையான பாதுகாப்பு" அவசியப்படுவதாக குறிப்பிட்டன.
அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் பிரமுகர்கள் கொரிய தீபகற்ப போரின் விளைவுகளைக் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர். லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் 1994 இல் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிரியை நினைவூட்டியது—அப்போது கிளிண்டன் வெள்ளை மாளிகை, வட கொரியா மீது தாக்குதல்களுக்கு உத்தரவிடும் விளிம்பில் இருந்தது. வட கொரிய இராணுவத்தின் பதிலடியில் சியோலில் மட்டுமே ஒரு மில்லியன் படைத்துறைசாரா மக்கள் கொல்லப்படுவார்கள் என்று கணினி பாவனைகள் மதிப்பிட்டதாக அது குறிப்பிட்டது. சுமார் 23 ஆண்டுகள் கழித்து, வட கொரியா குறைந்தபட்சம் ஒருசில அணுஆயுத கருவிகளைக் கொண்டிருக்கும் நிலையில், போருக்கான சாத்தியமான விலை அளவிட முடியாதவாறு இன்னும் அதிகமாக இருக்கும்.
இப்போது மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் உள்ள ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியான கார்ல் பேக்கர் LA Times க்கு கூறுகையில், “எல்லா வாய்ப்புகளும் 'மேசையின்' மீதுள்ளன என்பதை ட்ரம்ப் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.
எவ்வாறிருப்பினும் வாஷிங்டனில் ஆகட்டும் அல்லது வேறெந்த இடத்தில் ஆகட்டும் ஏகாதிபத்திய அதிகார வளாகத்தில் பகுத்தறிவு மேலோங்கும் என்ற நம்பிக்கையில், போர் தடுக்கப்பட போவதில்லை. அது அரசியல் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளால் உந்தப்படவில்லை, மாறாக உலக முதலாளித்துவத்தின் தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆதாயமுள்ள சந்தைகள் மற்றும் இலாபத்திற்கான ஆதாரவளங்கள் மீது மேலாதிக்கம் கொள்வதற்கான தீவிரமடைந்து வரும் போட்டியால் உந்தப்படுகிறது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு பெய்ஜிங்கைக் கீழ்படிய செய்யும் வாஷிங்டனின் கட்டளைகளுக்கு பெய்ஜிங்கை அடிபணிய செய்வதற்காக, அதன் மீது முன்னொருபோதும் இல்லாதளவில் அழுத்தத்தை பிரயோகிப்பதே, வட கொரியாவிற்கு எதிரான போரை நோக்கிய அமெரிக்க ஆயத்தப்பாட்டின் பிரதான நோக்கமாகும். அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் அனுகூலமான பொறுப்பற்ற நிலைப்பாட்டிலிருந்து, சீனாவை பயமுறுத்த வட கொரியா மீது ஒரு நாசகரமான தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் பயன்படுத்தப்படுகிறது என்றால், வர்த்தக உறவுகள் மற்றும் தென் சீனக் கடலில் சீன கடல்எல்லை உரிமைக்கோரல்கள் போன்ற பல வகைப்பட்ட பிரச்சினைகள் மீதும் அதுபோன்ற மோதல் அச்சுறுத்தல்களை தொடுக்க முடியும்.
சீன அரசாங்கமோ ட்ரம்ப் நிர்வாகத்துடன் அனுசரித்து செல்ல பெரும் பிரயத்தனம் செய்து வருகிறது. கடந்த வாரம், அது வட கொரியாவின் நீண்டகால ஒரு சில ஏற்றுமதிகளில் ஒன்றான நிலக்கரியை அதனிடமிருந்து கொள்முதல் செய்வதை நிறுத்துவதாகவும், மற்றும் அந்நாட்டிற்கு செல்லும் ஒரே சர்வதேச விமானத்தையும் இடைநிறுத்துவதாகவும் அறிவித்தது. பொதுவாக சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கண்ணோட்டங்களை எதிரொலிக்கும் People’s Daily மற்றும் Global Times போன்ற அரசுடைமை பத்திரிகைகள், அணு ஆயுத தயாரிப்புகளுக்கான முயற்சிகளைக் கைவிடுமாறு வட கொரியாவை எச்சரித்துள்ளதுடன், அவ்வாறு செய்வதன் மூலமாக, வாஷிங்டனின் போருக்கான சாக்குபோக்குகளை இல்லாமல் செய்ய வலியுறுத்தி உள்ளன. Global Times குறைந்தபட்சம் அதன் ஒரு தலையங்கத்தில், மற்றொரு வட கொரிய அணுஆயுத சோதனையைத் தடுக்க சீனாவே இராணுவரீதியில் தலையீடு செய்யலாம் என்றும் அச்சுறுத்தியது.
“வட கொரியா மீது செல்வாக்கு கொண்டுள்ள வர்த்தக மற்றும் இராணுவ பங்காளியான சீனாவின் உதவியுடன் பியொங்யாங் மீது" அதன் கொள்கை "அழுத்தத்தை அதிகரித்து வருவதாக" ட்ரம்ப் நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, வெளிப்படையாகவே பெய்ஜிங்கிற்கான ஒரு விட்டுக்கொடுப்புடன் நேற்று விடையிறுத்தது. அதேநேரத்தில், போர் உட்பட "சகல வாய்ப்புகளும்" “மேசையில்" உறுதியாக இருக்கின்றன என்ற அதன் வலியுறுத்தல்களில் இருந்து வெள்ளை மாளிகை இன்னும் பின்வாங்கவில்லை.